Wednesday, February 13, 2008

ஸ்ரீ குரு குண ஸ்தவனம்...குரு ராகவேந்திரர்




ஸ்ரீ ராகவேந்திரரை எல்லோருக்கும் தெரியும். மந்திராலயத்திற்கு போகாத ஆன்மிக சீலர்கள் குறைவே. எல்லாம் சரி, மந்திராலயத்தில் குருராயரின் ஜீவ பிருந்தாவனத்திற்கு அருகில் இன்னொரு பிருந்தாவனம் இருக்கிறதே?, அது யாருடையது?. அவர் பெயர் என்ன?. அவரை மட்டும் எப்படி குருராஜர் தன் பக்கத்தில் இருத்திக் கொண்டார்?. இவற்றை எல்லாம் பார்க்கலாமா?.


மந்திராலயத்தில் ராகவேந்திர ஸ்வாமிகள் ஜீவ பிருந்தாவனத்திற்கு அருகில் (குரு ராஜருக்கு இடது புறம்) இருப்பது ஸ்ரீ வாதீந்திரர் என்னும் யதியின் பிருந்தாவனம். இவர் குருராஜனிலிருந்து 5வது தலைமுறையில் வந்த ஆச்சார்யரது பிருந்தாவனம். இந்த பிருந்தாவனம்தான் முதன் முதலில் குரு ராகவேந்திரருக்காக கட்டப்படது. ஆனால் குருராஜன், இதனை அப்படியே வைத்திருக்கச் சொல்லி தனக்காக வேறு ஒன்று எழுப்ப ஆணையிடுகிறார். அப்போது இந்த பிருந்தாவனத்தை என்ன செய்வது என்று திவான் வெங்கண்ணா கேட்ட பொழுது, அது பற்றி பின்னர் தெரிவிப்பதாக சொல்கிறார் குருராஜன்.


ஆயிற்று, குருராஜன் தன்னால் தேர்வு செய்த கற்பலகைகளை (கற் பலகைகள் அவராலேயே குறிப்பிடப்படுகிறது. அந்த கற்பாறைகளில் ஸ்ரீஇராமன் அமர்ந்து இருந்ததாக அவரே சொல்லியதாக கூறப்படுகிறது) கொண்டு கட்டப்பட பிருந்தாவனத்தில் அமர்ந்து விட்டார். இவ்வாறு பிருந்தாவன பிரவேசம் செய்யும் போது தான் இன்னும் 700 வருடங்கள் ஜீவ சரீரத்துடன் பிருந்தாவனத்துள் வாசம் புரியப் போவதாகவும், அதன் அறிகுறியாக 700 ம்ருத்திகா பிருந்தாவனங்கள் நாடெங்கிலும் தோன்றும் என்றும் அருளியுள்ளார். ஸ்ரீஸ்ரீ ராகவேந்திரர் உத்தரவுப்படி அவருக்குப் பின் ஸ்ரீ யோகீந்திரரும், பின் ஸுரிந்திரர், ஸுமதீந்திரர், உபேந்திரர் என்று குரு பரம்பரையில் நான்கு ஆச்சார்யர்கள், ஆனாலும் குருராஜனுடைய பிருந்தாவனத்தின் இடது பக்கத்தில் இருக்கும் அந்த பிருந்தாவனம் காலியாகவே இருக்கிறது.




ஐந்தாவதாக வருபவர் வாதீந்திரர். இவரே குருராஜன் உத்தரவின்படி குருராஜனுடைய மூல பிருந்தாவனத்திற்கு அருகிலிருக்கும் பிருந்தாவனத்தில் எழுந்தருளுகிறார். 79 ஆண்டுகளுக்கு முன்னால் பிருந்தாவன பிரவேசம் செய்த குருராஜன், வாதீந்திர தீர்த்தரின் சீடர் கனவில் வந்து தனதருகில் இருக்கும் பிருந்தாவனத்தை வாதீந்திரருக்கென உத்தரவிட்டாராம். இவ்வாறாக வாதீந்திரர் குருராஜன் அருகிலேயே அமர்ந்துள்ளார்.



இந்த வாதீந்திரர் குருராயரை வணங்கி எழுதிய நூலே குரு குண ஸ்தவனம். இந்த நூலில் வாதீந்திரர், குருராயரால் எழுதப்பட்ட நூல்களைப் பற்றியும், அவற்றின் சிறப்புக்களைப் பற்றியும் குறிப்பிடுகிறார். இந்த நூல் 38 பாடல்களைக் கொண்டது. இதனை இயற்றிய வாதீந்திரர், ராயரின் ஜீவ பிருந்தாவனத்தின் முன் படித்து, அவருக்கு சமர்பணம் செய்கிறார். அவ்வாறு செய்கையில், திடிரென அவர் கையில் இருக்கும் ஓலைச்சுவடியில் ஒரு புஷ்பம் விழுகிறது. நிமிர்ந்து பார்க்கையில் குருராஜனது பிருந்தாவனம் லேசாக கேட்டதை ஆமோதிப்பது போல ஆடியதாம். இதனை அங்கிருந்த எல்லோரும் பார்த்து அதிசயித்தனராம். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நூலில் இருந்து குரு பக்தி பற்றி சொல்லும் ஒரு ஸ்லோகத்தை இன்று பார்க்கலாம். குரு குண ஸ்தவனத்தின் 12ஆவது ஸ்லோக கருத்து கிழே.


குருவே! கர்ம, ஞான மார்க்கங்களை அறியும் விஷயத்தில் நான் திறமையில்லாதவனாக இருக்கிறேன். இந்த உடம்பு நிலையில்லாதது என்பதால், வித்வான்களால் கூறப்படும் மோக்ஷ உபாயத்தையும் (நிவ்ருத்தி கர்மா), பக்தி வகைகளில் ஒன்றான ஸ்ரவணத்தின் மூலம் அடையக் கூடிய கடவுளை நேரடியாக காணும் (அபரோக்ஷ ஞானம் எனப்படும்) வழியினையும் பெறக்கூடிய நிலையில் நான் இல்லை.



ஆனால் குருவே, தங்கள் அருளால், அனுக்ரஹத்தால், இடைவிடாத குருபக்தியால் அப்படிப்பட்ட சுகமான மோக்ஷத்தை யார் வேண்டுமானாலும் அடையக் கூடும். இவ்வாறு சிறப்பு மிகுந்த அருளினை நல்கி, தன்னை வணங்கியவர்களுக்கு நற்புத்தியைக் கொடுத்து, அவர்களின் அறிவினைத் தூண்டுகிற க்ரந்தங்களை தந்தருளிய ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளை என்னாளும் வேண்டுகிறேன்.

8 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

குருபக்தியால் அப்படிப்பட்ட சுகமான மோக்ஷத்தை யார் வேண்டுமானாலும் அடையக் கூடும்

உண்மைதான் மௌளி.மஹான் ராகவேந்திரரை முதல் முறையாக நான் 1978இல் பம்பாயில் வங்கி ஆடிட்டிங் போயிருந்தபோது அறிந்தேன். உடனே மந்திராலயம் செல்ல வேண்டும் என அவா மிகுந்தது. ஆனால் அப்போது 5 மாதம் தொடர்ச்சியாக ஆடிட்டிங்கில் இருந்ததால் சென்னை திரும்ப அழைத்து சென்னையில் வேறு கிளைக்கு ஆர்டர் போட்டு விட்டார்கள். நானும் சென்னை போவதற்கு ரயில் டிக்கெட் எடுத்து விட்டென். நமப முடியாததுதான் ஆனால் உண்மையாக நடந்தது. இரவு கனவில் ஸ்வாமிகள் தரிசன்ம் துங்கபத்ராவில் ஸ்நானம் செய்வது போல். மறுநாள் கடைசிநாளாக ரிபோர்ட் ரெடி செய்வதற்கு சென்று முடித்து எல்லோரிடமும் விடை பெற்றேன். இரவு 10 மணிக்கு வண்டி.
மாலை 3.00 மணிக்கு தலைமை அலுவகத்திலிருந்து ஒரு தந்தி வந்தது.அதில் ஆந்திராவில் அதோனி கிளையில் எதோ தில்லு முல்லு நடந்ததாகவும் அதனால் சென்னைக்கு வராமல் அதோனி சென்று துப்புத்துலாக்கி அறிக்கை அளித்துவிட்டு சென்னை வர வேண்டும் என்று இருந்தது. என்ன ஆச்சர்யம் அதோனியிலிருந்து 30 KM தான் ஸ்வாமிகளுடைய பிருந்தாவனம்
அதோனிக்கு சென்று பின் பிருந்தாவனும் 2 முறை தரிசனம்பெற்றேன்.என்னை அழைத்துச் சென்று தரிசனம் செய்வித்தவர் அந்த கருணாமூர்த்தியான ஸ்வாமிகள்தான்.
என்னஒ பெரும் தவம் நான் செய்தது அறியேன் என்னயும் குரு ஸ்ரீராகவேந்திரர் ஆட்கொண்டது என் சொல்வேன்

குமரன் (Kumaran) said...

குருராஜரின் திவ்ய பிருந்தாவனத்தை ஒரே ஒரு முறை பள்ளி காலத்தில் தரிசித்தேன் மௌலி. இன்றும் அந்த மந்த்ராலய நதிக்கரையில் நடந்ததை நினைத்தால் புல்லரிக்கிறது. நாங்கள் பள்ளிச் சிறுவர்கள் எல்லாம் நதியில் குளித்துக் கொண்டிருக்கும் போது என் நண்பன் ஒருவனை வெள்ளம் இழுத்துச் செல்லத் தொடங்கியது. எல்லோரும் கத்தத் தொடங்கினார்கள். நான் மந்திராலய கோவில் இருக்கும் திசையை நோக்கி 'ஸ்வாமி ஸ்வாமி' என்று குரலெடுத்துக் கூவத் தொடங்கினேன். மறு நிமிடம் கோவிலின் திசையிலிருந்து ஒருவர் ஓடி வந்தார். ஆற்றில் குதித்து என் நண்பரைக் காப்பாற்றினார். பின்னர் அவர் சென்ற திசை தெரியவில்லை. அந்த நிலையில் இராகவேந்திரரே வந்து காப்பாற்றியதாகத் தான் அப்போது உணர்ந்தேன். இப்போது நினைத்தால் அங்கே எல்லோரும் கூவுவதைக் கேட்டு யாராவது தற்செயலாக வந்து காப்பாற்றியிருக்கலாம்; எல்லோரும் பிழைத்து வந்தவனைக் கவனிக்கும் போது அவர் தன் வழியே சென்றிருக்கலாம் என்று தோன்றினாலும் அன்று அந்த நதிக்கரையில் பெற்ற உணர்வு இன்னும் மாறாமல் தான் இருக்கிறது.

வாதீந்திர யதிகளைப் பற்றி கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் அவரது பிருந்தாவனமும் மந்திராலயத்தில் தான் இருக்கிறது என்பதை இன்று தான் அறிந்தேன்.

சுலோகத்தின் பொருளைத் தந்த நீங்கள் சுலோகத்தையும் தந்திருக்கலாமே மௌலி. கர்ம, ஞான, பக்தி மார்க்கங்கள் கடினமானவை; சரணாகதியென்ற பிரபத்தியே மோக்ஷத்தைத் தரவல்லது என்பது விசிஷ்டாத்வைதக் கருத்து. கர்ம, ஞான மார்க்கங்கள் பக்தியில் கொண்டு வந்துவிடும்; பக்தி ஒன்றே மோக்ஷத்தைக் கொடுக்கும் என்பது த்வைதக் கருத்து. இந்தச் சுலோகம் த்வைதக் கருத்தைச் சொல்கிறது போல் தோன்றுகிறது. மூலத்தைப் படித்தால் இன்னும் தெளிவாகும்.

jeevagv said...

சுலோகம் விசேஷமானதாக உள்ளது, தருவித்தமைக்கு மிக்க நன்றி.
மற்றவற்றையும் படிக்க ஆவல்.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க திராச & குமரன்,

நல்ல அனுபவங்கள்.....நம்பிக்கைகள்.

700 வருடங்கள் பிருந்தாவனத்தில் வாசம் செய்து, அண்டியவர்களுக்கு அருளுவேன் என்று சொல்லியிருக்கிறார். அதில் நீங்கள் இருவரும் அடங்கிருக்கிறீர்கள். மகிழ்ச்சி.

//சுலோகத்தின் பொருளைத் தந்த நீங்கள் சுலோகத்தையும் தந்திருக்கலாமே//

அம்புட்டுத்தானே, தந்துடுவோம்.

குமரன் (Kumaran) said...

//அம்புட்டுத்தானே, தந்துடுவோம்.//

Where is the Slokam Mouli?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

Where is the Slokam Mouli-Anna? :-)

யதீந்திரர் பற்றி இன்று தான் அறிந்து கொண்டேன்! நன்றி!
பதிவு படிக்கும் போது, மகராஜபுரம் பாடும் துங்கா தீர விராஜம் பாட்டு அப்படியே மனசுக்குள் ஓடியது!

மெளலி (மதுரையம்பதி) said...

தாமதத்திற்கு மன்னியுங்கள் குமரன்/கே.ஆர்.எஸ்...

குருகுண ஸ்தவனம் 12ஆம் ஸ்லோகம் மட்டுமே நான் பதிந்தேன். அது கிழே!...

யோகோய கர்மநாமா கவிபிரபொஹிதோ யஸ்ச விஞ்ஞான ஸம்ஞ;
சக்தோ நாஸித்தகாய: தனுமதிரனயோ: தாவதாவர் ஜனேஹம்
யஸ்சோபாயை ருபேய: ஸ்திரபலவிதயே தேசிகஸ்ய ப்ரசாத:
தஸ்மை தஸ்ய ஸ்துவீயாநிசமபி சரிதம் ராகவேந்த்ர வ்ரதீந்தோ:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஸ்திர பல விதயே தேசிகஸ்ய ப்ரசாத//

குருவின் அருளே பிரசாதம்! மகாப் பிராசதம்!
சுலோகத்துக்கு நன்றி அண்ணா!