Thursday, June 26, 2008

மாத்வர்



கி.பி 1238ஆம் ஆண்டு, விளம்பி என்ற பெயருடைய வருடத்தில் 32 லக்ஷணங்களும் கூடிய ஒர் ஆண்-குழந்தை வேதவதி-மத்யகேஹ பட்டர் என்னும் தம்பதியினருக்குப் பிறந்தது. இக்குழந்தைக்கு வாசுதேவன் என்று பெயரிட்டு வளர்த்தனர். குழந்தை சிரிப்பும், விளையாட்டுமாய் வளர்ந்து வந்தான். ஒருநாள் மத்யகேஹ பட்டர் வாங்கியிருந்த கடனை திரும்பக் கேட்டு வந்தான் ஒருவன். அந்த சமயத்தில் மத்யகேஹ பட்டர் ஊரில் இல்லை. கடன்காரனோ கடனை திருப்பி கொடுத்தாலேயொழிய இங்கிருந்து போகமாட்டேன் என்று தொல்லை செய்கிறான். அப்போது 6 வயதே ஆன குழந்தை வாசுதேவன் வேகமாக சமயலறைக்குச் சென்று அங்கிருந்த சில புளியங்கொட்டைகளை தனது சிறுகையில் அள்ளிக் கொண்டுவந்து உனக்கு பணம்தானே வேண்டும் இதோ வாங்கிக் கொள் என்று கடன்காரன் கையில் அளிக்கிறான். புளியங்க்கொட்டைகள் எல்லாம் தங்க காசுகளாக மின்னியதாம். 7 வயதில் குழந்தைக்கு உபநயனம் செய்வித்து குருகுலத்திற்கு அனுப்பினர். குருகுலத்தில் பாடம் பயிலும் சமயத்தில் ஒரு நாள் ஓர் மலைப்பாம்பு வழியில் படுத்திருக்க, வாசுதேவன் தனது காலால் அழுந்தச் செய்தே அந்த பாம்பை கொன்றான்.

இவ்வாறாக ஒருசில அதிசயமான செய்கைகள செய்த வாசுதேவனது கைரேகைகளை பார்த்த ஒரு பெரியவர் திகைப்படைகிறார். பின்னர் அன்னை வேதவதியிடம் "அம்மா உங்கள் திருக்குமரன் ஓர் அவதார புருஷன். முன்பு வாயுகுமாரனாக ராமயண காலத்திலும், பாண்டவர்களில் பீமனாகவும் இருந்தவர் இவர். இப்பிறவியில் சிறந்த ஞானியாக பாரதம் முழுவதும் ஒளிவிசுவார்" என்றார். வாசுதேவனுக்கும் தனது 15ஆம் வயதிலேயே சன்யாசியாகும் எண்ணம் வந்தது. ஆனால் பெற்றோர் பாசம் அவரைக் கட்டுப்படுத்த, ஒருநாள் தன் பெற்றோரிடம், "நான் ஒரே மகனாக இருப்பதால் தானே என்னை சன்யாசம் கொள்ள தடுக்கிறீர்கள்?, உங்களுக்கு இன்னொரு மகன் பிறப்பான் அதன் பின் நான் சன்யாசம் ஏற்கிறேன் என்று கூறுகிறார். அது போலவே வேதவதி-மத்யகேஹ பட்டருக்கு இன்னொரு ஆண் மகவு பிறக்கிறது. அப்போது வாசுதேவன் வயது 16. காஷாயம் தரித்து, இல்லத்தை துறந்து உடுப்பி வந்து அச்சுதப்பிரக்ஞர் என்னும் மகானை குருவாக ஏற்கிறார். அனந்தேஸ்வரர் கோவிலில் சன்யாச தீக்ஷை அளித்து பூரணபிரக்ஞர், ஆனந்த தீர்த்தர் என்ற தீக்ஷா நாமம் பெறுகிறார்.

தனது 23ஆம் வயதில் கீதைக்கு பாஷ்யம் எழுதி, அதனை வேதவியாசரிடம் சமர்பணம் செய்வதற்காக பத்ரிநாத் சென்று, பின்னர் ப்ரம்ம சூத்திரத்துக்கும் பாஷ்யம் செய்திருக்கிறார். இவர் கன்னடம், சம்ஸ்கிருதம், தமிழ், இந்தி, உருது, தெலுங்கு, வங்காளி போன்ற மொழிகளில் நல்ல தேர்ச்சியுடன் இருந்திருக்கிறார். தசபிரகரணங்கள், உபநிஷத் விளக்கங்கள், ரிக்வேத விளக்கம், அனுவியாக்கியானம் என்று 37 நூல்களை எழுதியிருக்கிறார். இவர் கனவிலேயே உடுப்பி கிருஷ்ணன் விக்ரஹம் தான் இருக்கும் இடம் பற்றிக் கூறி, அதனை மீட்கச் செய்து உடுப்பியில் கோவில் கட்டி எழுந்தருளுகிறார். இன்றும் இவர் ஸ்தாபித்த அஷ்ட மடங்களைச் சார்ந்த சன்யாசிகளே இங்கு பூஜை செய்கின்றனர்.


இறைவனிடம் அழியாத அன்பு கொள்வதும், எல்லாரிடமும், எல்லா ஜீவராசிகளிடமும் அன்பு காட்டுவதும், தனக்குரிய கடமைகளை பணிவுடன் செய்வதும், பக்தி உள்ளத்துடன் வாழ்வதும், வாழ்கையை நல்ல பணிகள் செய்ய அர்பணிப்பதுமே வாழ்வின் தத்துவம் என்று மக்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார். 'மத்வர்' என்று, அதாவது 'யாராலும் வெல்ல முடியாதவர்' என்று அழைக்கத் தொடங்கினர் சிஷ்யர்கள். இவர் அளித்த ப்ரம்ம ஞான தத்துவமே த்வைதம் எனப்படுகிறது. இவரது கூற்றுப்படி பரமாத்மாவும்-ஜீவாத்மாவும் என்றும் ஐக்கியமாகாது. இவரது தத்துவங்களை பின்பற்றியவர்களை மாத்வர் என்று கூறும் வழக்கம் ஏற்பட்டது. இன்றும் மாத்வர்களுக்கு ஹரியும் வாயுவும் ப்ராதான்யம், ஏனென்றால் மாத்வர் ஹரிபக்தியில் சிறந்தவர், அதே சமயத்தில் அவரே வாயுகுமாரன் என்பதால்.


மாத்வர் மற்ற சன்யாசிகள் போல ப்ருந்தாவனப் பிரவேசம் செய்யவில்லை. 1317ஆம் வருஷம் மாக சுக்லபக்ஷ நவமியில் அனந்தேஸ்வரர் கோவிலில் தனது சிஷ்யர்களுக்கு பாடம் நடத்தும் போது திடீரென அவர் மீது புஷ்பங்களால் விருஷ்டி நடந்து அவரை மூடி ஒரு பூங்குன்று உருவாகிறது. இதை அவரிடம் பாடம் கற்ற மாணவர்கள், கோவிலுக்கு வந்தவர்கள் எல்லாம் பார்க்கிறார்கள். பிறகு புஷ்பங்களை விலக்கிப் பார்த்தால் மத்வரை காணவில்லை. இவர் இன்றும் பத்ரிகாஸ்ரமத்தில் வேதவியாசர் அருகில் அமர்ந்து பாடம் கேட்பதாக நம்பிக்கை. மத்வர் வாழ்ந்த வீடு, கல்வி கற்ற இடம், விளையாடிய இடம் நீராடிய குளம், மலைப்பாம்பு இறந்த இடம் எல்லாம் பாஜகம் என்ற கிராமத்தில் கர்னாடகத்தின் தென் பகுதியில் இருக்கிறது.

Thursday, June 19, 2008

ஸ்வயம் ஆச்சாரியர்கள் என்பவர்கள் யார்??? ஒரு சிறிய விளக்கம்!

குருபிரம்மா குரு விஷ்ணோ,
குருதேவோ மஹேஸ்வரஹா,
குரு சாக்ஷாத் பரப்ரும்மம்
குரவே நமஹா!"

குருவைப் பற்றி எழுதுவதென்றால் மேலும் மேலும் எழுதலாம், ராகவன் ஸ்வயம் ஆச்சாரியர்கள் பற்றிக் கேட்டிருந்தார். அதற்கு முதலில் குருவுக்கும், ஆச்சாரியருக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளவேண்டும் அல்லவா??

குருவானவர் அனைத்துக்கும் மேலானவர், அவரே பிரம்மா, அவரே விஷ்ணு, அவரே மஹேஸ்வரன், மேலும் அந்தக் குருவே சாக்ஷாத் பரப்ரம்மம் என்று கூறும் மேற்கண்ட ஸ்லோகத்தை அறியாதோர் இருக்க முடியாது. அப்படிப் பட்ட குருவானவர் வயதானவராகவே, சகலமும் கற்று அறிந்தவராகவே இருத்தல் வேண்டும் என்பது இல்லை. வயதிலே சிறியவராய்க் கூட இருக்கலாம், இவர் சிஷ்யர்களுக்கு உபதேசம் செய்தாகவேண்டும் என்பதாய்க் கட்டாயம் ஏதும் இல்லை. தன்னுள்ளே தன்னை அறிந்தவராய் இவர் இருப்பதாலேயே இவரைக் குருவாய் ஏற்றிருப்பார்கள். உபதேசமும் செய்யவேண்டும் என்பதும் இவரிடம் எதிர்பார்க்கவேண்டியது இல்லை. இவரைப் பற்றிய மஹிமை நன்கு தெரிந்தவர்களும், அறிந்தவர்களுமே இவரைக் குருவாக ஏற்பார்கள். அப்படியான குருவானவர் பலரும் இருந்தாலும் ஆதிகுரு என்று அனைவராலும் சொல்லப் படுபவர் தட்சிணாமூர்த்தியே ஆவார். வயதில் மிக இளைஞன் ஆன இவர் வாய் திறந்து ஏதும் பேசவில்லை. தன் கைச் சின்முத்திரை ஒன்றே தன் சீடர்களுக்கு, அதாவது தன்னைக் குருவாய் வரித்தவர்களுக்கு அவர் சொல்லும் ஒரே போதனை! இவரைக் குருவாய் வரித்தவர்களோ, வயது முதிர்ந்த ரிஷிகள். அவர்கள் இவரிடம் பாடம் ஏதும் கேட்கவில்லை, இவரும் சொல்லவில்லை. மெளனமே மொழியாக அனைத்தும் அறியப் பட்டது, உணரப் பட்டது. குருவானவர் இவரே. எனினும் குரு பேசவும் செய்யலாம், அதே சமயம் உபதேசமும் செய்யலாம், அது சீடர்களின் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தே அமையும். நம்முடைய மனத்தின் இருளைப் போக்கி ஆத்ம ஞானத்தை அறியச் செய்பவரே குரு என்று சொல்லவேண்டும்.

ஆனால் ஆச்சாரியர் என்பவர் வேறு. அவர் தாம் அனைத்தும் அறிந்தவராய் இருந்தாலும், வாழ்க்கை நியதிக்கு ஏற்ப, வாழ்க்கையின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு, அதன்படி நல்லொழுக்கங்களைக் கடைப்பிடித்துக் கொண்டு, நல்லுபதேசங்களைச் சீடர்களுக்கு உபதேசித்துக் கொண்டு இருப்பார். தான் சிஷ்யர்களுக்குப் போதிக்கும் அதே வழிமுறைகளைத் தானும் ஏற்கெனவே பின்பற்றி வாழ்ந்து கொண்டிருப்பவரே ஆச்சாரியர் என்பார்கள். சிஷ்யர்களையும் அதே வழிமுறையில் நடக்கச் செய்பவரே ஆச்சாரியர். இந்த முறையில் பார்த்தோமானால் குருவுக்கும், ஆச்சாரியருக்கும் உள்ள வித்தியாசம் புரிந்தாலும், பொதுவாக நாம் அனைவரையும் குரு என்றே அழைக்கின்றோம்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்றும் சொல்லுகின்றோம். நம் உடலைப் பேணிப் பாதுகாத்து, அதற்கு உணவிட்டு, உடை அளித்து, நகை அணிவித்துப் பார்த்து மகிழ்வோர் பெற்றோர். பெற்றோரிடம் இருந்தும் நாம் சிறிதளவாவது ஞானமோ, நற்போதனைகளோ, நல்லொழுக்கமோ கற்றாலும் அவர்களிலும் சிறந்தவர் குருவே, அந்தக் குருவைத் தெய்வம் எனவே சொல்லவேண்டும். அம்மா போடும் சாப்பாடோ ஜீரணம் ஆகிவிடும் தானாகவே, அப்பா வைக்கும் சொத்தையே ஜீரணம் செய்வோம் நாமாகவே, ஆனால் குரு என்னும் ஆச்சாரியர் அளிக்கும் சொத்தோ என்றும் அழிவில்லாமல் நிற்கும், நாம் இன்னொருவருக்கு எவ்வளவு வாரிக் கொடுத்தாலும் குறையாது. அழிவில்லாதது இது ஒன்றே. ஆகவே சீடனுக்குப் புரிகின்றவரையிலும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுப்பவரே உண்மையான ஆச்சாரியரும், குருவும் ஆவார்.


அதிலும் சில ஆச்சாரியர்கள் அனைத்தையும் கடந்தவர்களாக, ஆத்ம ஞானம் பெற்றவராக, தம்முள் தம்மை உணர்ந்தவராக இருந்தாலும் வெளியில் பார்க்கும்போது அது தெரியாமல் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இவர்களைக் குரு எனச் சொல்லலாம். அப்படிப் பட்ட குருக்களிடம் சிஷ்யர்கள் தாங்களாகவே விருப்பத்தின் பேரில் வந்து இணைவார்கள். இந்தக் குரு எதையும் போதிக்காவிட்டாலும் இவரின் அருள் இருந்தாலே போதும் என நினைத்தும் சேர்ந்து கொள்வார்கள். இவர்களையே நாம் "ஸ்வயம் ஆச்சாரியர்கள்" என்று அழைக்கின்றோம். இப்படி குருவாகவும், ஆச்சாரியர்களாகவும் திகழ்ந்தவர்கள், நம் சநாதன தர்மத்தில் பலர் இருந்தாலும், பெரும்புகழ் பெற்றுக் குறிப்பிட்டுச் சொல்லும்படி இருந்தவர் மூவர் ஆவார்.
அவர்களில் ஆதிகுரு என்றும், காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பாதயாத்திரையாகவே சென்று தம் கொள்கையான அத்வைதத்தைப் பரப்பியவரும் ஒரு ஆச்சார்யன் எவ்வாறு நடக்கவேண்டுமோ அவ்வாறே நடந்து காட்டியவரும், தனது நான்கு முக்கிய சீடர்கள் மூலம் தனது குரு பரம்பரையை உருவாக்கியவரும் ஆன "ஆதிசங்கரர்" என்பவரே முதல் ஆச்சாரியரும், குருவும் ஆவார். இவரிடம் சிஷ்யர்கள் உபதேசம் பெறச் சேர்ந்தாலும் இவர் குருதான், தம்மில் தம்மை உணர்ந்தவரே, வேதவித்து, ஞானி, சாட்சாத அந்தப் பரப்ரும்ம சொரூபன் ஆன ஈசனின் அம்சம் என்றும் சொல்லப் படுவார். அதே சமயம் "ஸ்வயம் ஆச்சாரியர்" ஆகவும் ஆனார் என்றும் சொல்லப் படுவார். ஒரே சமயம் ஒரு ஞானகுருவாகவும், சிஷ்யர்களுக்குப் போதிக்கும் ஆச்சாரியனாகவும் திகழ்ந்தவர்களில் இவர் முதன்மையானவர்.
அடுத்து வருபவர் "ராமானுஜாச்சாரியார்" இவரின் "விசிஷ்டாத்வைதம்" வழிமுறைகளை இவரும் ஒரு குருவாகவும், அதே சமயம் ஆச்சாரியராகவும் இருந்து உபதேசித்திருக்கின்றார். 74 சீடப் பரம்பரையை இவர் பெற்றிருப்பதாய்ச் சொன்னாலும் வைஷ்ணவ குருபரம்பரையானது இவரிடம் இருந்து பிரிந்து பல்வேறு வழிமுறைகளில் சென்று விட்டதாயும் சில வைஷ்ணவர்களின் திடமான எண்ணம். எனினும் இவரும் ஒரு ஸ்வயம் ஆச்சாரியரே ஆவார். இவரும் தம் சிஷ்யர்களுக்குத் தம் வாழ்க்கையின் மூலமும், தன் ஞானத்தின் மூலமும் பல்வேறு போதனைகளைச் செய்தார். வைணவ பரம்பரையின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவரும் ஆவார்.

அடுத்து வருபவர் மாத்வாசாரியார். இவரின் "த்வைதம்" தத்துவத்தால் வைணவத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரே இன்று மாத்வர்கள் என அழைக்கப் படுகின்றார்கள். இவர் எட்டுமடங்களை ஸ்தாபித்ததாயும் அதன் மூலம் தன் தத்துவங்களை உலகு அறியச் செய்ததாகவும் சொல்லுவார்கள். இவரும் ஒரு ஆச்சாரியராகவும், குருவாகவும் இருந்தே தன் கருத்துக்களைப் பரப்பி வந்திருக்கின்றார். இவரும் ஒரு ஸ்வயம் ஆச்சாரியரே ஆவார். இவர்கள் தவிர, சிருங்கேரி மடப் பீடாதிபதி ஆன வித்யாரண்யர், ஸ்ரீகிருஷ்ண சைதன்யர், மற்றும் வைணவப் பரம்பரையில் வந்த வல்லபாச்சாரியார் போன்றோரையும் சொல்லுவதுண்டு. வல்லபாச்சாரியாரின் தத்துவம் "சுத்த அத்வைதம் " என்று அழைக்கப் படுவதாயும் அறிகின்றோம். இவரின் கோட்பாடுகளின் படி திருமணம் செய்துகொண்டு, இல்லற வழியில் இருப்பவர்களே பீடாதிபதிகளாக இருக்கலாம்.


டிஸ்கி: "தெய்வத்தின் குரல்" ஆறாம் பாகமும், சென்ற வார துக்ளக்கில் வந்த "இந்து மகா சமுத்திரம்" இரண்டின் அடிப்படையும் கொண்டு எழுதி உள்ளேன். ஏற்கெனவே இதைப் பற்றிப் படித்துக் கொண்டிருந்த நேரமும், ராகவன் கேட்டதும் சரியாக இருக்கவே உடனேயே எழுதிவிட்டேன். நன்றி ராகவனுக்கு.

Wednesday, June 4, 2008

போலி குருக்களை அடையாளம் காண முடியுமா?

இராமகிருஷ்ண பரமஹம்சர் பெயரில் உள்ளது போலவே பரமகுரு! அவர் சீடர் விவேகானந்தர் பரமசிஷ்யன்!
அந்தப் பரமகுரு-பரமசிஷ்யன் இருவருக்குமிடையே ஆன உறவும் உரையாடலும் மிகவும் புகழ் வாய்ந்தது!
என்றோ இராமானுசருக்கும் அனந்தாழ்வானுக்கும் இடையே நடந்த அதே உரையாடல், அன்று கங்கைக் கரையில் இராமகிருஷ்ணருக்கும் விவேகானந்தருக்கும் இடையேயும் நடக்கிறது! அந்த உரையாடல், இன்றும் நமக்கு வழிகாட்டுகிறது!

குரு என்றால் என்ன?
கு சப்தஸ் அந்தகாரஸ்ய! ரு சப்தஸ் தன்னிரோதஹ!
அந்தகாரம் என்னும் இருளை நீக்குபவரே குரு!
குருவின் ஒரு மெல்லிய பார்வை பட்டாலே போதும்! சின்ன ஒளிக் கீற்று, அறை முழுதும் இருட்டை நீக்குவது போல், குருவின் பார்வை நம் அகங்கார அந்தகாரத்தை அடியோடு அழித்து விடும்!

குருவிடம் சேர எனக்கு என்ன லட்சணம் தேவை?
சிஷ்ய லட்சணம் என்று ஒன்னுமே கிடையாது! குருவுக்குத் தான் லட்சணம் சொல்லி இருக்காங்க!
பாங்கு அல்லன் ஆகிலும் பயன் அல்லன் ஆகிலும் அந்தச் சிஷ்யனைத் திருத்திப் பணி கொள்பவனே குரு!
பயன் அன்று ஆகிலும் பாங்கு அலர் ஆகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்று ஆர்ப் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன்றன் மொய் கழற்கு அன்பையே


நல்ல குருவை நான் எப்படி அடையாளம் கண்டு கொண்டு, அவரிடம் சீடனாய்ப் போய்ச் சேர முடியும்?
நல்ல குருவை அடையாளம் காணும் அளவுக்கு உனக்கு ஞானம் இருக்கா? இருந்தால், நீ ஏன் குருவைத் தேடுகிறாய்? அதான் ஞானம் பெற்று விட்டாயே!
ஞானம் இல்லாததால் ஞானம் தேடுவோன், ஞானியை மட்டும் எந்த ஞானத்தால் அறிந்து கொள்வான்?

ஞானம் வேண்டித் தாகமாய் இரு! குரு தானே வருவார்! When the Student is Ready, the Teacher Arrives!
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

போலி குருமார்கள்....அதான் கொஞ்சம் பயமாய் இருக்கு? என்ன செய்ய?
அவர்களை உருவாக்குவதே நீங்கள் தானே!
ஞானம் வேண்டித் தாகமாய் இருந்தால், எதற்கு போலி வேண்டுகோள்களை வைத்துக் கொண்டு, போலி குருமார்களைத் தேடி ஓடுகிறீர்கள்?
அதான் சொன்னேன்! ஞானம் வேண்டித் தாகமாய் இரு! குரு தானே வருவார்!

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டு ஆட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழி விழு மாறே

போலிகளை எப்படி அடையாளம் காண்பது?
சான்றோர்களை அடையாளம் காண்பது தான் அரிது! போலிகளை வெகு எளிதில் கண்டு கொள்ளாலாமே!
தங்களைக் குரு என்று கூறிக் கொள்ளும் போலி குருமார்கள், முக்கியமாக அடக்கமின்றி இருப்பார்கள்!

மந்திரங்களிலும், தந்திரங்களிலும் ஆற்றல் படைத்தவர்களாக அவர்கள் இருக்கலாம்!
ஆனால் இறை உணர்வு இல்லாதவர்களாக இருப்பார்கள்! மெய்ப்பொருளை ஆய்ந்து இருக்க மாட்டார்கள்!
வேதங்களின் உண்மைகளை உணர்ந்து சிக்கலின்றி பிறருக்கு உணர்த்தும் வல்லமை அவர்களுக்கு அருளப் பெற்றிருக்காது!!

இறைவன் திருநாமத்துக்கு உருகாத உள்ளத்தை எளிதில் கண்டு விடலாம்! காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க அவர்களால் முடியாது! அது ஒன்றே அவர்களைக் காட்டிக் கொடுத்துவிடும்!

உன்னால் அவர்கள் நாடகத்தைக் காண முடியவில்லை என்றால், உன் தேடல் குருவை நோக்கி அல்ல! வேறு ஏதோ தன்னலமான ஒன்றை நோக்கி! அவ்வளவு தான்!


பணியுமாம் என்றும் பெருமை! சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து!


சொல்லிலும் செயலிலும் ஏன்.... ஒவ்வொரு அசைவிலும் பணிவை மட்டுமே கண்ட மகாகுருவைக் கலியுகத்தில் காண்பது கடினமா என்ன?
அவரைத் தரிசித்த மாத்திரத்தில், அந்தப் பணிவு நமக்கு வந்து ஒட்டிக் கொள்ளாதா என்ன, ஒரு சிறு விநாடியாவது! கீழே தரிசியுங்கள்! குரு தரிசனம், பாப விமோசனம்!



குரு புங்கவ புங்கவ கேதனதே
சமதா மயதம் நஹி கோ பி சுதி
சரணாகத வத்சல தத்வ நிதே
பவ சங்கர தேசிக மே சரணம்!