கூரத்தாழ்வானும், இரண்டாம் குலோத்துங்க சோழனும்(கிருமி கண்ட சோழனும்)கூரத்தாழ்வான்வாழ்வில்இது மிகவும்பெரிய,கொடிய, முக்கியமான சம்பவம். இதை ஒரு தனிப்பதிவாகவே இடலாம். அடியேன் படித்தவரையில்/தெரிந்த வரையில் எழுதுகிறேன்.தவறு இருந்தால் மன்னித்து அருளவும். ஏதேனும் செய்தி விடுபட்டு விட்டால், அதைத் தெரிவிக்கவும்.
கி.பி.1070-1116 ல் சோழ தேசத்தை ஆண்ட இரண்டாம் குலோத்துங்க சோழன் சிவ நெறிச் செல்வன். அதே நேரத்தில், மற்ற கடவுள் வழிபாடுகளை அறவே வெறுத்தான்.வைணவத் திருத்தலங்களுக்கு இடையூறு செய்தான்.இது பற்றி உடையவர் பெரிய நம்பிகளிடம் விண்ணப்பிக்க , அவர் உடனே தாம் அதற்கு இரட்சையாக “த்வயம்” அனுசந்தித்துக்கொண்டே திருவரங்கம் திருக்கோயிலைத் திருப்ரதட்சணை வர விரும்புவதாகவும் , அதற்குத் தம்முடன் மிகவும் அடக்கமான , சற்றும் செருக்கற்ற “வ்ரக்தர்” ஒருவரை அனுப்புமாறும் உடையவரிடம் கூறினார்.உடனே உடையவர் கூரத்தாழ்வானைப் பெரிய நம்பிகளுடன் அனுப்பி வைத்தார்.சோழனின் இடையூறுகளும் சற்று குறைந்தன.
ஆனால் மீண்டும் சோழன் துர்ப்புத்தி கொண்டான்.தமக்கு வேண்டியவர்களிடம் ஆலோசனை செய்து எல்லாரிடமும் ஒரு ஓலையில் கையொப்பம் வாங்கினான்.எதற்கு?தமது கொள்கையில் ஒப்புதல் இல்லாதவரை தண்டிப்பதற்காக,வன்முறைப் பேச்சும் செயலும்.என்ன எழுதப்பட்டது?
”சிவாத் பரதரம் நாஸ்தி”என்பதே.என்ன அர்த்தம்? சிவனுக்கு மேலான பொருள் இல்லை என்பதே அது.
எல்லாரிடமும் கை எழுத்து வாங்கியதாக அரசன் பெருமை கொண்ட வேளையிலே மன்னனின் அமைச்சர் நாலூரான் என்னும் வைணவன், அரசே, நீங்கள் எது சொன்னாலும் ஆடு, மாடு போல மண்டையாட்டும் இம்மானிடப்பதர்களிடம் கையொப்பம் வாங்கி என்ன பயன்? வைணவம்என்றாலே அது இராமானுஜரால் தான் வளமும் பெறுமையும் பெற்றது.அவர் சம்மதம் இல்லாவிடில் உமது விருப்பம் நிறைவேறியதாகக் கொள்ள முடையாது என்று கூறுகிறான்.(தமிழனுக்கு தமிழனே எதிரி.கூரத்தாழ்வான் என்னும் மெய்யான வைணவரின் கண் போகக்காரணம்ஒருபொய்யானவைணவரின்துர்போதனை. தமிழகத்தின் முதல் எட்டப்பனோ?)
உடனே அரங்கத்திற்கு ஆள் அனுப்பி, உடையவரை உடனே அழைத்து வர, மன்னன் உத்தரவிட்டான்.இராமானுஜர் கையெழுத்திடா விட்டால், அவ்ரை கொன்று விடவும் முடிவெடுத்தான் அரசன்.கூரத்தாழ்வான் சோழனின் அரசவைக்குப் புறப்படுதல்
அரசனின் ஆட்கள் வந்த நேரம்.எம்பெருமானார்,நீராடச் சென்றிருந்தார். திருமடத்தில் அப்போது இருந்தவர் நடாதூர் ஆழ்வான் என்னும் சீடர்.(இவர் எம்பெருமானாரின் சகோதரியின் புதல்வர்.)அரசனின் ஆட்களிடம் வார்த்தையாடி ,அவர்கள் வந்த காரணத்தை அறிந்தார். அறிந்தவர்,உடனே கூரேசரிடம் மட்டும் கூறினார்.அவரின் சமயோஜித புத்தியைப் பாராட்டிய கூரேசர், அவரை மிகவும் மகிழ்ந்து இளையாழ்வாரின் சகோதரி மகனான அவரை ,”நீரன்றோ ப்ரிய பாகிநேயர்!(பிரியமான மருமகன்) என்று பாராட்டி, நொடிப்பொழுதில் ஒரு முடிவு எடுக்கிறார். கூரேசர் மிகவும் புத்திசாலி.ஒரு நொடியில் அரசனின் தீய எண்ணத்தை உணர்ந்தார்.தாமே எம்பெருமானார் போல் வேடமிட்டு, எம்பெருமானாரின், முக்கோலையும் அவரது காவி உடையையும் தாமே தரித்து, பெரிய நம்பிகள் மற்றும் அத்துழாய் ஆகியவர்களுடன் சோழனின் அவைக்குப் புறப்பட்டு விட்டார்
எம்பெருமானார் வருந்துதல் நீராடித்திரும்பிய உடையவர், நடந்தவைகளை அறிந்து மிகவும் வருந்தினார். தமது குரு, தமது, முதன்மைச் சீடர் இருவரும் ஆபத்தை நோக்கிச் சென்றதை அறிந்து , அனலாய்த்துடித்தார். மற்ற சீடர்கள் அவரைத்தேற்றி, பின் வரும் சமாதானத்தைக் கூறினர்.”அரசவைக்குவந்தது,எம்பெருமானார்அல்ல”என்று தெரிந்தால், அரசன்,கூரத்தாழ்வானை விட்டுவிடுவான் என்பதே அந்த எண்ணம்.
ஆனால்அவ்வாறு நிகழவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக வடமொழியில் எழுதப்பட்ட ஒரு நூலில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகள்
எம்பெருமானார் காலத்தில் வாழ்ந்த கருட வாஹன பண்டிதர் எழுதிய திவ்யஸூரிசரிதம் என்னும் நூலின் 18ம் சர்க்கம் 74வது பாடலில்
சோளஸ்ய ச்ருதிகடு சேஷ்டிதம் யதீந்த்ர:
ச்ருத்வாத ச்ருத விமலாம்பரஸ் ஸ ரங்காத்
ஸ்ரீரங்கிந் அவ தவ தாம தர்சநஞ்ச
இத்யுக்த்வா ப்ராஸ்தித விநிவேச்ய கூரநாதம்
(பொருள்: சோழனுடைய கடினமான செய்கையை எம்பெருமானார் கேள்விப்பட்டு,வெள்ளைத் திருப்பரிவட்டம் சாத்திக் கொண்டு,"அழகிய மணவாளா, உன் கோயிலையும் தர்சநத்தையும் காத்தருள்" என்று ப்ரார்த்தித்து, ஆழ்வானை நிறுத்திவிட்டு, தாம் கோயிலினின்றும் ,புறப்பட்டருளினார்.)
மற்றொரு ச்லோகத்தில்
ஆநைஷீத் ந்ருபஸவிதம் மஹார்ஹ பூர்ணம்
ஸ்ரீரங்காத் ஸஹ யதிவேஷ கூரபர்த்ரா
யதிராஜவேஷம்பூண்டகூரத்தாழ்வானையும்,பெரிய நம்பியையும், சோழனின்சபையில்,ராஜ ஸைன்யம் கொண்டு போய் சேர்த்தது.)
எம்பெருமானார் , நீலகிரி, கொங்கு நாடுகள், கொள்ளே காலம் வழியாக மேல்கோட்டை(திருநாராயணபுரம்) நோக்கி பயணம் செய்தார்.அங்கு இறைச்சேவை செய்து கொண்டிருந்த போது திருவரங்கத்திலிருந்து வந்த ஒரு ஸ்ரீவைஷ்ணவரிடம், இராமானுஜர், திருவரங்கக் கோயில் பற்றியும் கூரத்தாழ்வான் பற்றியும் விசாரிக்கிறார்.
அவ்வன்பர் அளித்த செய்திகள்.
காவியில் வந்த கூரேசரை, மன்னனும் எதிராசர் என நினைத்து, அவரிடம் , “சிவாத் பரதரம் நாஸ்தி(சிவனுக்கு மேலான பொருள் இல்லை) என்ற ஓலையை அளித்து அதில் கையொப்பமிடச் சொன்னான். அப்போது அங்கு வந்த நாலூரான் எனும் வைணவன்(மன்னனின் அமைச்சர்), வந்த மனிதர், யதிவரனார் அல்ல,கூரேசர் எனக் கூறவும் மன்னன் கோபம் கொண்டு தனது வீரர்களைக் கடிந்து, இராமானுஜரைத் தேடிப் பிடித்து வரச் சொன்னான். உடனே நாலூரான் , இவர் இராமானுஜரின் இன்னொரு உரு. இவர் கையெழுத்திட்டால் இராமானுஜரின் கையெழுத்துக்குச் சமம் என்றான். இதற்கிடையே எம்பெருமானார் அரங்கத்தைவிட்டு வெளியேறிய செய்தி அறிந்து, அவ்வீரர்கள் இராமானுஜர் சென்ற வழியில் அவரைபிடிக்கத்தொடர்ந்தனர்.அதனை அறிந்த இராமானுஜர், வழியில் உள்ள மணலைக் கையில் எடுத்து,
“கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப்பெறா
தடவரைத்தோள் சக்ரபாணி !சார்ங்கவிற் சேவகனே!”
என்ற பெரியாழ்வாரின்"சென்னியோங்கு"எனத்தொடங்கும் பாசுரம் ஸேவித்து, அம்மணலைத்தமது சீடர்களிடம் தந்து அவ்வீரர்கள் வரும் வழியில் இடச்சொன்னார். சீடர்களும் அவ்வாறே செய்தனர்.அதன் பலனாக, வீரர்கள் அவர்களைத்தொடர முடியவில்லை.
பின்னர் கூரேசர் அரசனிடம் “நிர்மல பரப்ப்ரம்மம் ஓலையளவில் நிற்குமோ? அனைத்திற்கும் மேலான பரம்பொருளை நாமாக நிர்ணயம் செய்ய முடியுமோ?இவ்வுலகைக் காண, கண்கள் எவ்வளவு முக்கியமோ, அது போல, பரம்பொருளைக் காண, வேதங்களும், சாஸ்திரங்களும் முக்கியம்.அவற்றை அறிந்த பெறியோர்களை வாதத்திற்கு வரச் சொல்லுங்கள்.அதன் மூலம் , அவை யாரைப் பரம்பொருள் எனக் கூறுகின்றன எனத் தெளிவு கொள்ளலாம்,என்று அவர்களுடன் வாதப் பொருது நடாத்தினார்.மோட்சத்தை அளிப்பவர் நாராயணனே.அன்று பாண்டியனின் அவையிலே பெரியாழ்வார், வேதங்கள் விரைந்து கிழியறுத்து, மாலே பரம்பொருள் என பரதத்துவ நிர்ணயம் செய்தார்.ஆதி மூலமே எனும் மாமத யானையை அருள வந்த நாமம் எது? வேதங்களை அசுரன் அபஹரித்த போது, அதை மீட்டவர் மாலே!ஆலிலையின் மேலொரு பாலகனாய் அருள் பாலித்த கண்ணன் , தனது வாயிலே உலகனைத்தும் காட்டினான்.என்பது போன்ற வாதங்களை அளித்து, சோழனின் அறிஞர்களை வாதில் வென்றார்.
அதை ஏற்காத மன்னன் , கூரேசர் புலமையால் வென்றதை ஏற்க முடியாது,யாமே மன்னன்.குடியின் கடமை அரசாணைக்கு அடிபணிவது. எனவே ஆணையை ஏற்று , கையெழுத்திடவும் என்று சீறினான்.உடனே கூரேசர் ஓலையை வாங்கி, அரச ஓலையின் வாசகத்தைக் கேள்வியாக்கி,
அதற்குப் பதில் எழுதுமுகமாக “த்ரோணம் அஸ்தி தத:பரம்” என்று எழுதினார். அதை வாங்கிய மன்னன் தமது அறிஞர்களிடம் அதன் பொருள் கேட்டான். அவர்கள் அதன் பொருளை இவ்வாறு கூறினர்.சிவம் என்பதற்குக் குருணி என்ற பொருள் உண்டு. அதை விட த்ரோணம்(பதக்கு),அளவில் பெரியது. என்ற ஒரு பொருளும், சிவனாரின் தலையில் சூடப்படும் தும்பைப்பூ என்ற பொருளும் உண்டு என்று கூறினர்.அது கேட்டுக் கொதித்த மன்னன், கூரேசரின் கண்களைப் பிடுங்குமாறு ஆணையிட்டான்.
தரிசனத்திற்கு தரிசனம் தந்தவர்உடனே கூரேசர், உன் போல் கொடுங்கோலர்களின் கைபட்டு எமது கண்ணொளியை இழப்பதை விட,யாமே எமது கண்களை எடுத்து விடுகிறோம் என்று தமது கையாலேயே, தனது கண்களைப் பிடுங்கிக் கொண்டார்.தமது விழிகளை இழந்தாலும் எம்பெருமானாரைக் காக்கும் கடமையை நிறைவெற்றினோம் என்று தமது அகக்கண்ணால் மகிழ்ந்தார். இச்சம்பவத்தால்
“தரிசனத்திற்கே தரிசனம் தந்தவர்” என அழைக்கப்பட்டார்.
உடனிருந்த பெரிய நம்பிகளின் கண்களும் பிடுங்கப்பட்டன.உடனே அவர் வேதனை தாளாமல் கதறினார்.அவரின் வேதனையைப் பொறாத அத்துழாய், தங்களுக்கு உதவுவோர் யாரும் இல்லையா என்று வேதயுடன் அதற்றினாள்.மெய்ப்பொருள் விஷயமாக அவர்கட்கிருந்த உறுதியைப் பார்த்த ’நாவல் கொடி அம்மாள்’ எனும் பணிப்பெண் தன் வாளை எறிந்து விட்டு பெரியநம்பிக்கு உதவுகிறாள்.பின்பு ஸ்ரீபராந்தகபுரத்தைச் சேர்ந்த சில ஸ்ரீவைஷ்ணவர்களின் உதவியுடன் ஒரு சுமைப் பல்லக்கின் மூலம் கூரேசரையும் பெரிய நம்பிகளையும் எழுந்தருளப் பண்ணி ஸ்ரீபராந்தகபுரம் வந்து சேர்ந்தனர்.கண் இழந்ததால் உடலில் ஏற்பட்ட தீராத வேதனையால் , பெரிய நம்பிகள் பரமபதிக்கும் நிலை வந்துவிட்டது. அப்போது அவருக்கு வயது 105.(101 என்றும் கூறுவர்.)(1997 ம் வருடம் பெரிய நம்பிகளின் 1000வது வருடம்) அப்போது பெரிய நம்பிகள் கூரேசரின் மீது தலை வைத்தும், அத்துழாய் மீது திருப்பாதங்களை வைத்தும் கண் வளர்த்து, பரமபதிக்கிறார். பின்னர், அங்கிருந்த உத்தமர்கள் உதவியுடன் ஒரு டோலையில் கூரேசர், அரங்கம் வந்தடைந்தார்.

(பெரிய நம்பிகள்)
ஸ்ரீபராந்தகபுரம் எனப்படும் காளையார் கோவில்(பசுபதி கோவில்) என்று வழங்கப்படுகிறது.(தஞ்சை –குடந்தை வழியில், அய்யம்பேட்டையில் இருந்து 2 கி.மீ .தூரத்தில் இவ்விடம் உள்ளது.பின்னர் இங்கு இராமானுஜர், பெரிய நம்பிகளுக்கு ஒரு திருவரசு எழுப்பினார்.
சில நூல்கள், "ஆழ்வான் தன்னிச்சையாகக் காவி வேடம் தரித்து, சோழன் அவைக்கு நீங்கினான் என்றும் , சில நூல்கள் , எம்பெருமானார் உட்பட அனைவரும் கலந்து ஆலோசித்து, கூரேசரை, அவ்வாறு அனுப்பினர் என்றும் கூறுகின்றன.இரு சிந்தனைகளும் சாத்தியமே!
ஆனால் ஆழ்வான் , தாமே சிந்தித்துக் காவியுடை தரித்தார் என்று எண்ணவே வாய்ப்பு அதிகம்) அரங்கனைத் தரிசிக்கத் தடைவிதித்த சோழ வீரர்கள்:திருவரங்கம் திரும்பிய கூரேசர், அரங்கன் ஆலயம் சென்று பெரிய ஸ்ரீபலிபீடத்தருகே நின்று, அரங்கனே! பெரிய நம்பிகளுக்கருளிய பரமபதம் தமக்கு இல்லையா? என்று வேண்ட முனைகிறார்.அப்போது அரசனின் ஆட்கள், “இராமனுஜரின் சம்பந்தம் உள்ளவர்கள் சன்னதிக்குச் செல்லத்தடை விதித்தனர்.ஆனால் ஆத்ம குணம் உள்ளவராதலின் கூரேசர் உள்ளே செல்லலாம் என்று கூறவும், கூரேசர், தமது ஆத்ம குணம் , குருவை அடைவதற்கே வழியாக இருக்க வேண்டும். ஆனால் இங்கோ நமது ஆத்ம குணம் ஆசார்ய சம்பந்தத்தை அறுப்பதாக உள்ளது. எனவே அப்படிப்பட்ட குணம் வேண்டாம். ஆசார்யனே மேல். எமக்கு அரங்கனின் தரிசனம் வேண்டாம் என்று கூறித் திரும்பிவிட்டார். இதை இராமானுஜ வைபவம் -1141ம் பாடலில் வடிவழகிய தாஸர்
“
தடையற ஒருவன் கையைத்தாங்கிட ஏகும்காலை
அடைவிலா மன்னன் ஆட்கள் அரங்கனார் கோயில் காப்போர்
உடையவர் சம்பந்தத்தார் உட்புகத்தாகாதிங்(கு) என்றார்
நடையினின் றாழ்வான் மீண்டான் நான் அவன் அடிமை என்ன”
என்று விளக்குகிறார்அரசனின் ஆட்கள் மூலம் பல விஷ்ணு கோவில்கள் இடிக்கப்பட்டன. திருக்கண்ணபுரக்கோவிலின் நெடுமதில்கள் உடைக்கப்பட்டன.தில்லைத் திருச்சித்திரகூடக் கோவிலின் மூலவரை சக்தி இழக்கச்செய்து கடலில் வீசினர்.இருப்பினும் அங்கிருந்த உற்சவ மூர்த்தியை, சிலர் பாதுகாத்து திருப்பதிக்கு எழுந்தருளச் செய்தனர்.
கூரெசர் திருமாலிருஞ்சோலைக்குச் செல்லுதல்தமது திருமாளிகைக்கேகிய கூரேசர், தமது துணைவியார், புதல்வர் குடும்ப பரிவாரஙகளுடன் திருமாலிருஞ்சோலை சென்றார்.செல்லும் வழியில் 100 ஸ்லோகங்களைக் கொண்ட ஸ்ரீவைகுண்டஸ்த்வம்(பரவாசுதேவனுடைய லீலாவிபூதிகளைப் பற்றியது) எனும் நூலையும் அதிமானுஷஸ்தவம் எனும் நூலையும்(ந்ருஸிம்ஹ, இராம, க்ருஷ்ண அவதாரங்களைப் பற்றியது) எழுதினார்.
இவ்வாறு சோழனின் அவை(வ)ச் செய்திகளை,அந்த வைணவர் மூலம் அறிந்த யதிவரனார் பெருந்துயரடைந்தார்.இருந்தாலும் கூரத்தாழ்வானையாவது திருமேனியுடன் இருக்கப் பெற்றோமே என ஆறுதலடைந்தார்.தமது குருபெரிய நம்பிகளுக்கு “ஞானபுத்திரன் எனும் முறையில்” செய்ய வேண்டிய ”ஸ்ரீசூர்ண பரிபாலாதிகள்” செய்தார்.இதற்கிடையில் திருக்கோட்டியூர் நம்பிகள், திருமாலையாண்டான்,திருவரங்கப்பெருமாளரையர், திருக்கச்சி நம்பிகள் ஆகியோர் பரமபதித்து விட்ட செய்திகளை அறிந்து, பதறி மனம் வருந்தி, அவர்களுக்கும் ஸ்ரீசூர்ண பரிபாலாதிகளைச்செய்து முடித்தார்.
(உடையவர் கர்மானுஷ்டானங்களைக் கைவிடவே இல்லை என்பதற்கு, மீண்டும் மீண்டும் பல சான்றுகள்)
திருமாலிருஞ்சோலையில் கூரேசர்எம்பெருமானார் தமது மடைப்பள்ளிக் கைங்கர்யசீடர்களில் ஒருவரான ’மாருதிச்சிறியண்டானை’ அழைத்து திருமாலிருஞ்சோலை செல்லுமாறும் அங்கு கூரத்தாழ்வானைச் சந்தித்து ஆழ்வானின் உடல் நலத்தையும் , இன்ன பிற விஷேசங்களையும் அறிந்து வருமாறு பணித்தார். திருநாராயணபுரத்தில் எம்பெருமானார் செய்து வந்த திருப்பணிகளை , மாருதிச் சிறியாண்டான் மூலம் அறிந்த கூரேசர் மிகுந்த மகிழ்ச்சி கொண்டார். அப்போது, கூரேசர் நிலையை எண்ணி எம்பெருமானார் அடைந்த வேதனையை , சிறியாண்டான் எடுத்துரைத்தார்.அதன் பின்னர் அவரின் படைப்புகளையும் எடுத்துரைத்தார்.
ஆழ்வான், 132 பாசுரங்கள் அடங்கிய “ஸ்ரீ ஸுந்தர பாஹுஸ்தவம்” எனும் வடமொழி க்ரந்தத்தை அருளினார்.அதில் 129-132 வது பாசுரங்களில்
“விஞ்ஞாபனம்வநகிரீஸ்வர!ஸத்யரூபாம்
அங்கீகுருஷ்வ கருணார்ணவ! மாமகீநாம்!
ஸ்ரீரங்கதாமநி யதாபுர மேஹதோஹம்
ராமானுஜார்ய வசக:பரிவர்த்திஷீய!!”
ஸ்ரீரங்க ஸ்ரியமனந்வஹம் ப்ருகுணயந்
த்வத்பக்த போக்தாம் குரு
காருண்யாம்ருதவாரிதே வ்ருஷபதே ஹேசத்ய சங்கல்பந!
ஸ்ரீமத் ஸுந்தர யோக்யதாவிரஹிதான் உத்ஸார்ய ஸத்வத்ஸல!
க்ஷாம்யந் ஸாதுஜனை:க்ருதாம்ஸ்து நிகிலாநேவாபசராந்க்ஷணாத்!
தத்போக்யாமநிசம் குருஷ்வ பகவந் ஸ்ரீரங்கநாமச்ரியம்!
அழகிய காட்டுப் பகுதியில் எழுந்தருளியிருக்கும் இறைவனே!சுந்தரனே!எமது விண்ணப்பம்.திருவரங்கத்தில் உள்ள அரசுப்பூண்டுகள் ஒழிந்து, புனித இடமாக வேண்டும்.எம்பெருமானாரின் திருவடி நிழலிலே தாம் வாழ வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். அழகர் அதை அங்கீகரித்தருளினார்.(அழகர் கோயில் பற்றிய ஆராய்ச்சிக்கட்டுரை எழுதிய பரமசிவன் என்னும் ஆராய்ச்சியாளர், கூரத்தாழ்வார், பற்றிய எந்தச் செய்தியையும் குறிப்பிடவில்லை.)
பின்னர்,சிறியாண்டான் அழகர் கோயிலில் இருந்து புறப்படும்பொழுது, அருளாளப்பெருமாள் எம்பெருமானாரின் சீடர் அம்மங்கி அம்மாள் என்பவர் “சோழ மன்னன் கழுத்தில் புழு வந்து இறந்தான்” என்ற செய்தியைக்கேட்டு அதை மாருதியாண்டானிடம் கூறினார்.இருவரும் அதைஉறுதிப்படுத்த, கங்கை கொண்ட சோழபுரம் சென்றனர்.(கி.பி.1116 ம் ஆண்டு).பின்னர் அங்கிருந்து, திருநாராயணபுரம் சென்று எம்பெருமானார்க்கு அச்செய்தியைத் தெரிவித்தனர்.அதற்கு மகிழ்ச்சிப் பரிசாக, “சிறியாண்டான்” “த்வய உபதேசம் பெற்றார்.பின்னர் அவரை அடைந்த நடாதூர் ஆழ்வான், “கிருமி கண்ட சோழனின் மறைவையும் அவனது மகன் விக்ரம சோழன் பதவியேற்ற பின், தமது தந்தையின் செயலுக்காக வருந்தியதையும் எடுத்துரைத்தார். எம்பெருமானார், அவரையும் குளிர நோக்கி “த்வய” மந்திரத்தை உபதேசித்தருளினார்.எம்பெருமானார், முதலியாண்டானைக் கொண்டு 1117 ம் ஆண்டு சித்திரை மாதம் வளர் பிறை த்ரயோதசி திதி சனிக்கிழமை , ஹஸ்த நட்சத்திரத்தில் ஒரே முஹூர்த்தத்தில் கீர்த்தி நாராயணன்,ஸ்ரீமன்நாராயணன், வீர நாராயணன், விஜய நராயணன்,கேசவ நாராயணன் என்ற 5 நாராயணர்களின் கோவில்களிலும் விக்கிரகப் ப்ரதிஷ்டை செய்தார்.அதனால்,முதலியாண்டானுக்கு“பஞ்சநாராயண, ப்ரதிஷ்டாபனாசார்யர்” என்ற பெயர் வந்தது.
எம்பெருமானாரும் கூரேசரும் அரங்கம் வருதல்எம்பெருமானார் அரங்கம் நோக்கிக் கிளம்பிய செய்தி கேட்டு ஆழ்வானும், மாலிஞ்சோலை அழகரிடம் விடை பெற்றுத், திருவரங்கம் விரைந்தார்.அரங்கத்தில் எம்பெருமானார் பெரிய நம்பிகள் திருமாளிகையடைந்து, அத்துழாய்க்கு ஆறுதல் கூறி, பின் கூரேசரின் இல்லம் நோக்கிச் செல்லும் போது, கூரேசரே எம்பெருமானாரை எதிர் கொண்டு வணங்க, எம்பெருமானாரும் கூரேசரின் நலன் விசாரித்து, அவரின் கண் போனதை எண்ணி மிகவும் கலங்கினார்.
இதற்கிடையில் புதிதாக சோழ அரசை ஏற்ற விக்கிரம சோழன்,(1116-1134 வரை சோழ தேசத்தை ஆண்ட அரசன்) தனது தந்தை கிருமி கண்ட சோழனின் அவச்செயலுக்கு மன்னிப்பு வேண்டி, திருவரங்கக் கோயிலை யதிவரனார், முன்பு போலவே,சிறப்பாக நடத்த வேண்டும் என்று கூறி, கோயில் பொறுப்பை ஒப்படைத்தான்.தனது தந்தை செய்த தவறுக்குப் பரிஹாரமாகத் திருச்சித்திர கூடத்தில் மீண்டும் கோவிந்த ராஜனுக்குத் திருக்கோவில் அமைக்க உதவினான்.எம்பெருமானார், அங்கு சித்திரகூடத்தெம்பெருமானை மீண்டும் ப்ரதிஷ்டை செய்து, வழிபாடு உற்சவங்கள் செய்து மகிழ்ந்தார்.
(விக்கிரம சோழன் தன் தந்தை செய்த தவற்றுக்கு வருந்தி, ப்ராயச்சித்தமாக செய்த செயல்கள், செய்திகளாக அதிகம் வரவில்லை.அதாவது, தந்தை செய்த அட்டூழியங்கள் பெரிய செய்திகளாக மக்களை அடைந்தன. மகன் செய்த நிவர்த்தி அவ்வளவு அடையவில்லையோ?)
மற்றோர் நாள் கூரேசர் இயற்றிய 3 நூல்களையும் அவரே கூறக்கேட்டு இன்புற்ற எம்பெருமானார்,அவரது கண் மீண்டும் பெற கச்சி வரதனைக் குறித்து வேண்டி, ஒரு க்ரந்தம் எழுதுமாறு வற்புறுத்தினார்.முதலில் மறுத்த கூரேசர், பின்னர் எம்பெருமானாரின் ஆணைப்படி, வரதராஜஸ்தவம் எனும் அற்புத நூலை எழுதுகிறார்.அதில் ஒரு ஸ்லோகத்தில்
“நீலமேகநிபம் அங்ஜந புஞ்ஜஸ்யாமகுந்தளம் அநந்தசயம்த்வாம்
அப்ஜபாணிபதம் அம்புஜநேத்ரம் நேத்ரஸாத் குரு கரீச ஸதா மே” என்று, எப்போதும் அவனைச் சேவித்துக் களித்திருப்பதற்கான அகக் கண் வேண்டும் எனும் ஒரு பாடலையும் பாடுகிறார். அன்றிரவு கனவில் வந்த வரதன் அக்கோரிக்கையை அங்கீகரித்தான்.அதனால் அகமகிழ்ந்த கூரத்தாழ்வான், மறுநாள் எழுந்து நித்ய கர்மானுஷ்டாங்களை முடித்து, மிகுதிப்பாடல்களையும் எழுதி முடித்து,எம்பெருமானாரிடம் பாடிக்காண்பிக்கிறார். அது கேட்டு மகிழ்ந்த எம்பெருமானார், ஆழ்வானிடம் , உடனே கச்சி நகர் சென்று வரதனிடம் இதைப் ப்ரார்த்திப்போம் என்று கூறுகிரார்.எம்பெருமானாரின் வற்புறுத்தலுக்கிணங்க இருவரும் அரங்கம் நீங்கி, காஞ்சி நோக்கிப் புறப்பட்டனர்.
காஞ்சிக்குச் சென்று திரும்பிய எம்பெருமானாரும் , கூரத்தாழ்வானும்உடையவர் நியமனப்படி, பேரருளாளன் சன்னிதி முன்பு கூரத்தாழ்வான் , தாம் இயற்றிய வரதராஜஸ்தவத்தை விண்ணப்பிக்கிறார்.அப்போது எம்பெருமானார், ப்ராகார வலம் வரச்செல்கிறார்.அச்சமயம், கூரேசரின் ஸ்தவம் நிறைவு பெறுகிறது. அதனால் மகிழ்ந்த வரதன் , எம்பெருமானார் வருமுன்னே, அர்ச்சகமுகமாக ஆழ்வானிடம் , வேண்டுவது என்ன என வினவ, ஆழ்வான் , எம்பெருமானார் நியமனப்படி வேண்டாமல்,” யாம் பெற்ற பேறு, நாலூரானும் பெறவேண்டும் என்று வேண்டி நின்றார்.அவ்வாறே அளிப்பதாக வரம் அளித்து, உமக்கும் நாலூரானுக்கு மட்டுமல்ல உம்மோடு தொடர்பு பெற்ற அனைவர்க்கும் மோட்சம் அளிப்போம். அத்தோடு அரங்கனின் நியமனப்படி உமக்கு, “எம்மையும், எம்பெருமானாரையும் மட்டும் காணும் திவ்ய கண்களைத் தந்தோம் என்று வரதன் வரம் தந்து அருளினான்.
கூரேசருக்குத் தெரியும் ,நாலூரானுக்கு நரகம் உறுதி என்று.பெரிய நம்பிகள், எம்பெருமானார்,கூரேசர் மற்றும் வைணவத்திற்கே தீங்குரைத்த சிறு மதியாளனாக இருந்தாலும் ஒரு வைணவன் நரகம் புகல் ஆகாது என்ற கருணையினால், கூரேசர், த்ரோஹியான நாலூரானுக்கும் இரங்கினார்.தம்முடைய ப்ரார்த்தனை தான் அவனைக் காக்கும் என நாலூரானுக்கும் சேர்த்து வேண்டினார்.இதையே வடிவழகிய தாஸர் தமது இராமானுஜ வைபவம் எனும் நூலில் 1138 ம் பாடலில்
“நான் பெற்ற பெருஞ்செல்வம் நாலூரான் பெறும் வரம் வேண்டும்-இந்த
ஊன் பெற்றுக்கிடைத்த பலம் அடியேனுக்குறுதி நின்னைத்
தான் பெற்றேன் இனிப்பேறு வேறுண்டோ தனிமுதலே
தேன் பெற்ற துழாய் மாலை வேண்டி விரும்பி அணிபவனே திருமாலே”என்று குறிப்பிடுகிறார்
செய்தி அறிந்து ஓடி வந்த எம்பெருமானார், தாம் நியமித்தபடி வேண்டாமல் வேறுவிதமாக வேண்டிய ஆழ்வான் மீது வருத்தம் கொண்டார்.இருப்பினும் , இடர் விளைத்த நாலூரானுக்கும் இரக்கம் காட்டிய கூரேசர் காட்டிய அளவற்ற கருணையை எண்ணி வியந்தார்.கூரேசர் உடனே வரதன் அருளிய அகக் கண்பற்றியும் கூறி, பேரருளாளனையும் எம்பெருமானாரையும் மட்டும் காணும் கண்கள் தாம் பெற்றதாகவும் , அத்ற்கு ஆதாரமாக, வரதனின் அன்றைய திவ்ய அலங்காரங்களையும், எம்பெருமானாரின் தேகக் குறிப்புகளையும் கூரேசர் கூறினார்.
மேலும் கூரேசரின் தொடர்பு பெற்ற எல்லார்க்கும் மோட்சம் உண்டு என்று வரதன் அருளியபடியால், எம்பெருமானார்க்குத் திருக்கோட்டியூர் நம்பிகள் மூலம் முன்பு கிடைத்த சாபம் நீங்கியதால் எம்பெருமானார் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்.
பின்னர் எம்பெருமானார், அக்கோயிலில் ஆழ்வார்களைப் ப்ரதிஷ்டை செய்து, கூரேசருடன் அரங்கம் திரும்பினார்.அரங்கம் வந்த பின்னர், கூரேசர் ”ஸ்ரீஸ்தவம்” எனும் நூலை எழுதினார்.அவர் அருளிய 5 நூல்களும் “பஞ்சஸ்தவங்கள்” எனப்புகழ் பெற்றன.அவை வேதமாதாவின் திருமாங்கல்யம் எனவும் போற்றப்பட்டன.இவை தவிர கூரேசர் ’ ‘அபிகமனஸாரம்,புருஷ ஸூக்த பாஷ்யம்,ஸாரிக ஸாரம் என்னும் நூல்களையும் அருளினார்.
அரங்கத்தில் கூரேசரைச் சந்தித்தோர் ,”போலி வைணவன் , நாலூரான் செய்கை உமக்கும் வைணவத்துக்குமே பேரிழப்பு.எனவே அவனுக்கு ஏன் கரிவரதனின் கருணை கிட்டச் செய்தீர் என்று கேட்க அவர் “அப்படிபட்ட பாவிகளுக்குத்தான் இரங்க வேண்டும்.மீனுக்கு நீர் வார்த்து என்ன பயன் என்றார். அவரது கருணையை எண்ணி அனைவரும் வியந்தனர்.
பிள்ளைப்பிள்ளையாழ்வனுக்குரைத்த அறிவுரைகூரேசரின் சீடர்கள் பலரிலே பிள்ளைப்பிள்ளையாழ்வானும் ஒருவர்.அவர் தமது முக்குறும்பாலே(கல்வி செல்வம் குலம்)சிறிது கர்வத்துடன், பிற பாகவதர்களை நன்கு நடத்தவில்லை.தமது கல்வி குலம் செல்வம் மற்றும் பக்திச்செருக்கால் பிறரை நிந்தித்தார் இதறிந்த கூரேசர் ஒரு நல்ல நாளில் அவரிடம் ஒரு யாசகம் கேட்டார். அதற்கு, பிள்ளைப்பிள்ளையாழ்வான் “எமது செல்வம் பொன் பொருள் எல்லாம் உம்முடையது”என்று சொன்னார். ஆனால் கூரேசர் , தாம் கேட்டது, “முக்குரும்பாலே வரும் அஹங்காரத்தால் வரும் செறிவை அழித்து, பிறரை வருத்தாமல், பாகவத அபசாரப்படாமல் இருப்பேன் எனும் சத்தியம் செய்து , அதைத் தமக்கு அளிக்கச் சொன்னார். பிள்ளையாழ்வான் இவ்வாறு உறுதிகொடுத்தார். ஆயினும் பின்னோர் நாள், பழைய எண்ண வெளிப்பாடாக , ஒரு பாகவதரை , அபசாரப்படுத்திவிட்டார்.
(பிற இறைஅடியார்களை நிந்தித்தல்,பெரிய பாவம்) அது மனதில் உறுத்த, ஆசார்யனுக்கு அளித்த வாக்கை மீறிவிட்டோம் என மனம் வருந்தி தமது வீட்டிலேயே இருந்துவிட்டார். பிள்ளைப்பிள்ளை வராததால் வருத்தம் கொண்ட கூரேசர் , பிள்ளையின் திருமாளிகை சென்றார்.அப்போது அவரைக் கண்ட , பிள்ளைப்பிள்ளை, தாம் செய்த சத்திய மீறல் குறித்து அழுதார். இவ்வளவு அனுதாபப்பட்டதாலே, பிள்ளைப்பிள்ளையாழ்வானின் பிழை பொருத்த கூரேசர், நாவினாலும் , செயலாலும் பிள்ளைசெய்த தவறைக் கழித்தார்.
நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில் ஆழ்வான், திளைத்திருந்த வைபவங்கள்கூரேசர் , அமுதனை, திருத்திப் பணிகொண்டு அவருக்கு உரிய ஞானம் பெறச் செய்தார். பின்னர் எம்பெருமானாரின் கருணையால் ஆட்கொள்ளப் பட்டு , அவருடைய நெருங்கிய சீடராகும் வாய்ப்பு, பெற்றார். அந்தக் கருணையின் வெளிப்பாடாக,
”ப்ரபந்த காயத்ரி”(வேத மந்திரங்களுள் சிறந்தது எனப்போற்றப்படுவது காயத்ரி மந்திரம்).எனப்படும் இராமனுஜ நூற்றந்தாதியை, அமுதன் எழுதினார். இராமானுஜரால் ஆட்கொள்ளப்பட்ட பின், அமுதன் என அழைக்கப்பட்ட பூசலர் கோன் அமுதன், “திருவரங்கத்தமுதனார்” என்று அழைக்கப்பட்டார். இத்தகைய திருவரஙகத்தமுதனார்,தமதுநூற்றந்தாதியில்,கூரத்தாழ்வாரைப் போற்றும்போது
“மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பாம் குழியைக்கடக்கும் , கூரத்தாழ்வான் சரண் கூடியபின்”என்று பெருமையாகச் சொல்கிறார்.
நாவால் சொல்ல அடங்காத பெருமை உடையவர், மற்றும் கல்வி குலம் , செல்வம் ஆகிய முக்குணங்களைத் துறந்து, சரணாகதி ஒன்றே, மெய் என்று வாழ்ந்தவர் கூரேசர் என்று அமுதனார் கூரேசரைப்புகழ்கிறார்.
திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழிக்கு, கூரேசர் ஒரு சிறப்பான முகப்புப் பாடல்(தனியன்)எழுதியுள்ளார்.
“நெஞ்சுக்கிருள் கடி தீபம் அடங்கா நெடும்பிறவி
நஞ்சுக்கு நல்ல வமுதம் தமிழ் நன்னூல் துறைகள்
அஞ்சுகிலக்கியம் ஆரண சாரம், பரசமயப்
பஞ்சுக் கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.”
மேலும் குருபரம்பரையிலே ஒரு முகப்புப் பாடலும் எழுதினார்.
யோநித்யம் அச்சுத பாதம்புஜ யுக்ம ருக்ம
வ்யாமோஹத:ததி தராணி த்ருணாய மேநே!
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ
ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரப்த்யே //”
ஒரு சமயம் கூரேசரது வாயால் திருவாய்மொழி விளக்கம் கேட்க,இராமானுஜர், விரும்பினார்.ஆனால் ஒரு பெரிய மஹானும், முக்கோல் பிடித்த முனியும் ஆன உடையவரின் முன் , தாம் எப்படி உரை ஆற்றுவது என்று தவித்தார்.அதனை அறிந்த பிற சீடர்கள், கூரேசரைத்தேற்றும் விதமாக,
“மஹான்கள் கேட்க, குறைந்த அறிவுடையோரும் விளக்கம் கூறுவது, வழக்கம் தான்” என்று கூரேசரை ஆற்றுப்படுத்தி, திருவாய்மொழி விளக்கம் கூற வைத்தனர்.
அதன்படி “உயர்வற உயர் நலம் உடையவன்” எனும் முதல் பாசுர விளக்கம் கொடுக்கும் போது, பிற சமய வாதிகள் பரப்ரம்மத்திற்குக் குணம் இல்லை என்று கூறுவர்.அதை மறுக்கும் விதமாக,”உயர்வற உயர் நலம்”எனும் குணம் உடையவன் என்று கூறியது என்னே! என்று , மோஹித்து மூர்ச்சையாகி விழுந்து விட்டார்.இதை அறிந்த உடையவர் அங்கு வந்து கூரேசரை , சுய நினைவு தெளிவிக்கிறார். அப்போது “திருவாய்மொழி அருளும்போது பகவத் குணத்தில் 6 மாதம் மோஹித்துக் கிடந்த நம்மாழ்வாரை நாம் சேவிக்க இயலாத குறை நீங்கிற்று” என்று மகிழ்ச்சி கொண்டார். இதன் பின் கூரத்தாழ்வானுக்கு , நம்மாழ்வாருக்கு ஒப்ப “ஆழ்வான்” என்ற சிறப்புத் திருநாமம் அமைந்தது.
சிறுமாமனிசர்:முற்காலத்தில், குழந்தைகளின் மிகச்சிறிய வயது முதலே பாசுரங்களைச் சொல்லித் தருவர் அல்லது அவர்கள் கேட்கும்படி பண்ணுடன் பாடுவர். ஒரு முறை திருவாய்மொழியின் ஒரு பாசுரத்தை, பராசர பட்டர் கேட்கும்படி கூரேசர் பாட, அதில் கையாளப்பட்ட ஒரு வார்த்தையின் கட்டமைப்பின் மீதே சந்தேகம் வந்தது பட்டருக்கு.
உறுமோ பாவியேனுக்கு என்று நம்மாழ்வார் வழங்கும் பாசுரத்தில், (8ம் பத்து-10ம் திருவாய்மொழி-3ம் பாடல்,8-10-3) “சிறுமாமனிசராய் என்னையாண்டார் இங்கேதிரியவே” என்னும் சொல்லில் “சிறுமானிசர்” எனும் பதம் முரண்பாடான இரு கருத்துக்களைக் கொண்டுள்ளது. ஒன்றுக்கொன்று எதிர்மறையான சிறுமை, பெறுமை எனும் இரண்டு குணங்கள் எப்படி ஓரிடத்தில் சேர முடியும் என்று தம் தந்தையிடத்தில் பராசரர் வினவுகிறார்.இதன் விளக்கத்தை, வேண்டிய வேதங்களைக் கொண்டு தான் விளக்க முடியும். ஆனால் பட்டருக்கோ உபநயனம்(பூணூல் தரித்தல்) ஆகவில்லை.7 வயதிற்குள் பூணூல் அணிவித்தல் வேதவிதி.ஆனால் பட்டருக்கு இன்னும் 7 வயது நிரம்பவில்லை. சாத்திர விதிமுறைகளில்(பூணூல் அணிவிக்குமுன்னால் வேத சாத்திரங்களை கற்பிக்கக் கூடாது.) வழுவாத நம்பிக்கை கொண்டவர் கூரேசர்.
இந்த வயதிற்குள் இப்படிப்பட்ட ஒருஆற்றல் மிக்க சொல்லின் நிர்ணயத்தையே கேள்விக்கணை தொடுத்தார் பட்டர்.(ஆண்டாளைப் போல பிஞ்சிலே பழுத்தாரோ?)எனவே பூணூல் அணியாத தம் குழந்தை பட்டருக்கு, வேதங்களை மேற்கோள் காட்டாமல் இயல்பு வாழ்க்கை மூலம் விளக்குகிறார் கூரேசர்.எம்பெருமானாரின் முக்கியச் சீடர்களில் ஒருவர் அருளாளப்பெருமாள் எம்பெருமானார்(முன்பு யஞ்க்ய மூர்த்தி).உறுவில் சிறுத்தவர்.ஆயின், வைணவ ஞானத்தில் பெறியவர்.மேலும் முதலியாண்டான் , எம்பார் போன்றவர்கள், உலகத்தார் வாழ்வது போல் உணவு உண்டு, வாழ்ந்தாலும்,(சிறுமைக்குணம்) எம்பெருமானிடம் ஈடுபாடு கொள்ளும்போது, நித்ய ஸூரிகளாயிருக்கிறார்கள். (பெருமைக் குணம்). இதன் மூலம் சிறுமை, பெறுமை எனும் குணங்களை நம்மாழ்வார் ஒரே சொல்லில் கையாண்டது சரியே என கூரேசர் விளக்கினார்.
கூரேசரே பட்டருக்கு ஞான விளக்கம் அருளுதல்பட்டரின் குருவாகத் திகழ்ந்தவர் எம்பார்.ஆயினும் தமது இல்லத்தில் இருக்கும்போது,தமது மகனுக்கு(பட்டருக்கு)த்திருவாய்மொழி விளக்கம் அருளுவது கூரேசரின் விளக்கம்.அப்போது, ஒரு பாசுரத்திற்கு விளக்கம் சொல்லாமல், “உனது குருவாகிய எம்பாரிடம் உபதேசம் கொள்” என்று கூறிவிட்டார். என்ன பாசுரம் அது?என்ன அர்த்தம்? “எண்பெருக்கநலத்து, ஒண் பொருளீறில, வன்புகழ் நாரணன் தின் கழல் சேரே”(1-2-10).இது திருமந்திர அர்த்தத்தை விவரிக்கிற பாசுரம்.எனவே குருவிடம் தான் இதற்கு அர்த்தமும், உபதேசமும் பெற வேண்டும் என்ற எண்ணத்தால், குருவிடம் தெரிந்து கொள் என்கிறார்.
உடனே பட்டர், தமது குருவை நோக்கி விரைய முயல்கிறார். அப்போது கூரேசருக்கு, வேறொரு திருவாய்மொழிப்பாடல் நினைவுக்கு வருகிறது.”மின்னின் நிலையில மன்னுயிராக்கைகள்”.அதாவது, இந்த நொடியில்,யார் உயிரோடிருப்பார், இருக்க மாட்டார் எனத்தெரியாது.எனவே கால தாமதம் கூடாது என்றெண்ணி, தமது மகனான பட்டரைத் தடுத்து நிறுத்தி, தாமே திருமந்திர அர்த்தத்தைச் சொல்லி இப்பாடலிம் பொருளையும் சொல்லி உபதேசிக்கிறார்.இதன் காரணமாக தமது தந்தை கூரேசரும் தமக்கு ஒருகுரு என்பதை ஒரு பாடலில் பட்டர் விளக்குகிறார்.
ஸகஸ்ரநாம உரை அருளிச்செய்ததில், குரு வணக்கம் எனும் முதல் பாடலில்
“வந்தே கோவிந்த தாதௌ” என்று அருளும்போது கோவிந்த பட்டராகிய எம்பாரையும் எமது தந்தையையும் தொழுகின்றேன் என்று சொல்கிறார்.இதன் மூலம் கூரேசர், தமது மகன் பட்டருக்கு ஒரு குருவாகவும் விளங்கியது தெரிகிறது.
தலைவி, தலைவனைத் தலையால் வணங்கலாமா? வணங்கலாம்5ம்பத்து, 3ஆம் திருவாழ்மொழியில்,(மாசறு சோதி), நம்மாழ்வார், தம்மை நாயகியாக பாவனைசெய்து பேசுகிறார்.இத்திருவாய்மொழியை அர்த்தத்தோடு உபதேசிக்கும்போது, ஒரு அறிஞர் எழுந்து , (100 வயதைத் தாண்டிய”ஆமருவி நிரை மேய்த்தான் நம்பியார்”) 7ம் பாசுரத்தில் ,”தலையில் வணங்கவுமாங்கொலோ தையாலார் முன்பே” என்று உள்ளது.அப்படியானால் தலைவி, தலைவனைத் தலையால் வணங்குவது என்பதும் உண்டோ எனக் கேட்கிறார்.இதற்கு அற்புதமாக இராமயண விளக்கம் கொடுத்தார் கூரேசர். என்ன அது?
“கௌஸல்யா லோகபர்த்தாரம் ஸுஷுவே யம் மநஸ்விநி
தம் மமார்த்தே ஸுகம் ப்ருச்ச சிரஸசாபிவாதய” என்று அனுமனிடத்தில் சீதை சொல்கிறாள். மமார்த்தே...சிரஸசாபிவாதய என்பதற்கு, “எனக்காக அவரைத் தலையால் வணங்கு, நான் வணங்கினாற்போலே”. என்பது விளக்கம், இதன் மூலம் நம்மாழ்வார் எழுதிய நாயகி பாவத்தை, அழகாக நிர்வாஹம் செய்து, அப்பெரியவரை, மகிழ்ச்சி கொள்ளச் செய்தார் கூரேசர்.இது போன்ற ஒரு திருவாய் மொழி விளக்கம் தான் அவர் பரமபதம் அடைய உடனே முயற்சி செய்ய வேண்டும் என்று தூண்டியது? என்ன அது? எந்தப்பாசுரம்? அதன் அர்த்தம் என்ன?
நம்மாழ்வாரின் “சூழ் விசும்பணிமுகில்”(10-9-1) என்று துவங்கும் திருவாழ்மொழியில் “முடியுடை வானவர் முறை முறை எதிர்கொள்ள” என்ற திருவாய்மொழிப்பாசுரம். எம்பெருமானார் இப்பாடலை விளக்கும் போது, பரமபதத்திலே முற்பட்டவர்கள்,பிற்பாடு எழுந்தருளுபவர்களை எதிர்கொண்டு உபசரிப்பர் என்று கூறினார்.
கூரத்தாழ்வாரைத் தொடர்வோம், குருவருளைப் பெறுவோம்