Monday, March 31, 2008

குருவுக்கு "மிஞ்சிய" சிஷ்யன்


பாடம் நடந்து கொண்டிருந்தது. குரு போதித்துக் கொண்டிருந்தார். சிஷ்யர்கள் அனனவரும் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தனர். எல்லாம் அந்தக் கார்மேகக் கண்ணனைப் பற்றியதே ஆகும். அவனைப் பற்றி வர்ணிக்கும் ஒரு ஸ்லோகம் "தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீக - மேவ மட்சிணி" என வந்தது. குருவானவர் அதை வர்ணிக்கும் வேளையில் கப்யாஸம் என்னும் சொல்லுக்குக் "குரங்கின் ஆசனவாய்" என்ற அர்த்தம் வரும் என விவரித்து விட்டு, பகவானின் கண்களைக் குரங்கின் ஆசனவாய்க்கு ஒப்பிட்டார். கேட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒரு சீடனுக்குக் கண்ணீர் பொங்கி வந்தது. கண்ணீர் விட்டு அழுதான். குருவானவர் தன் பாடம் அவ்வளவு உருக்கமாய் இருந்ததாய் நினைத்தார். ஆனால் சிஷ்யன் விம்மி, விம்மி அழவே குருவுக்குச் சந்தேகமாய் இருந்தது. மற்றவர்களை அனுப்பி விட்டு அந்தச் சீடனிடம், "அப்பனே, ஏன் அழுகின்றாய்? என்ன நடந்தது? இன்றைய பாடம் உனக்குப் புரியவில்லை என்றால் விட்டு விடு! பின்பொரு நாள் பார்த்துக் கொள்ளலாம்," என்று சொன்னார்.

சீடனோ வணக்கத்துடனேயே , "குருவே, தாங்கள் அதி மேதாவி, எனக்கு அதில் சந்தேகமே இல்லை, ஆனால் ஏதோ தவறு நிகழ்ந்திருக்கின்றது. என்னவென்று புரியவில்லை." என்று பணிவுடனேயே தெரிவித்தான். குருவுக்குக் கோபம் ஏறிக் கொண்டிருந்தது. பாடம் புரிந்து கொள்ள முடியாதவன் இங்கே வந்து ஏதோ உளறுகின்றான் என்றே நினைத்துக் கொண்டார். சீடனைப் பார்த்து, "என்ன, விஷயம்? சொல்லு, பார்ப்போம், அந்த வேடிக்கையையும்!" எனக் கேலியாகவே சொன்னார். சீடனோ குருவைப் பார்த்து, "இப்போது தாங்கள் நடத்திய சாந்தோக்ய உபநிடத்தின் முதல் அத்தியாயம், ஆறாவது பகுதியின் ஏழாவது மந்திரப் பாடத்தில் தான், "கப்யாஸம்" என்னும் சொல்லுக்குத் தாங்கள் சொன்ன அர்த்தம் தான், கொஞ்சம் தவறோ என்று மனதில் பட்டது!" மிகுந்த வணக்கத்துடனும், பணிவுடனுமே சொன்னார் சீடர். "என்ன, நான் சொல்லும் அர்த்தத்தில் உனக்குச் ச்ந்தேகமா? வேறு அர்த்தம் சொல்லப் போகின்றாயா? என்ன துணிச்சல்?" எனக் கண்கள் சிவக்கக் கேட்கின்றார்.

"குருவே! பரமாத்வாவின் கண்களைத் தாங்கள் குரங்கின் ஆசனவாயோடு ஒப்பிடுவது எவ்வகையிலும் பொருத்தமே அல்ல! மேலும் கப்யாஸம் என்னும் சொல்லைப் பிரிப்பது எவ்வாறெனில் தாங்கள் அனுமதி அளித்தால் சொல்லுகின்றேன்!" என்று வணக்கத்துடனேயே சீடர் கேட்கின்றார். குருவும் கூறச் சொல்லி ஆணையிடச் சீடன் சொல்கின்றார்:" குருவே "ஆஸ" என்றால் மலருதல் என்று அர்த்தம் வரும் இல்லையா? "கப்யாஸம்" என்றால் ஆதவனால் மலர்ந்தது என்று தானே பொருள் கொள்ள முடியும்? சகல கல்யாண குணங்களும் நிறைந்திருக்கும் எம்பெருமானின் திருக்கண்கள் சூரியனை கண்டதுமே அன்றாடம் மலரும் தாமரையைப் போல் அல்லவோ இருக்க வேண்டும்? இந்த இடத்தில் இவ்வாறு பொருள் கொள்வது தானே சரியானது? மாறாகக் குரங்கின் ஆசனவாயோடு பொருள் கொள்வது சரியாக இருக்காது என்பதே என் தாழ்மையான கருத்து!" எனத் தெரிவிக்கின்றார்.

கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய குருவும் சீடனை அணைத்துக் கொண்டு தன் தவற்றுக்கு வருந்துகின்றார். மிக, மிகப் பெருந்தன்மையோடேயே அந்தச் சீடன் தன் தவற்றைத் திருத்தியமைக்கு அனைவரிடமும் சொல்லி ஆனந்தமும், பெருமையும் கொள்கின்றார். சீடனின் புகழோ உலகெங்கும் பரவியதோடல்லாமல், ஒரு மாபெரும் தத்துவத்தையே இவ்வுலகுக்குத் தருகின்றான். அந்த சீடன் தான் ஸ்ரீபாஷ்யம் போன்ற நூல்களை இயற்றியவரும், வேதாந்த நெறிகளைக் காவிய நடையில் மெருகூட்டி "விசிஷ்டாத்வைதம்" என்னும் தத்துவ தரிசனமாய் உலகுக்கு ஈந்தவரும் ஆன ஸ்ரீ ராமானுஜாச்சாரியார். குருவானவரின் பெருந்தன்மையும், அன்பும், மன்னிக்கும் குணமுமே சீடனையும் பெருமை கொள்ளச் செய்யும் என்பது இங்கே நிதரிசனம் ஆகி விட்டது.

Thursday, March 27, 2008

குருவருள் சுகபிரும்மம் ( 2)

ஸ்ரீமத் பாகவதத்தை இயற்றிய வியாசர், பின்னர், அதை தனது மகனாகிய சுகருக்கு உபதேசித்தார். சுகர், மிகச்சிறிய வயதிலேயே பெரும் ஞானத்தைப் பெற்றவர். அவர் எல்லாவற்றையும் துறந்து செல்கிறபோது,மகன் மீதான பாசத்தினால் வியாசர் உரக்கக் கூவி அவரை அழைத்தார். வனத்தில் இருந்த மரம், செடி, கொடிகள்எல்லாம் "ஏன்? ஏன்?' என்று கேட்டன. அப்படி, தான், மற்றது என்ற பேதங்களை எல்லாம்கடந்தவராக சுகர் விளங்கினார்



அவருக்கு பிரும்மம் என்ற பட்டம் எப்படி வந்தது? சுகரை ஜனக மஹாரிஷியிடம் பாடம் படிக்க(சீதையின் தந்தை) அவரின் தந்தை அனுப்புகிறார். பாடம் படிக்க வரும் சுகர் அரன்மனைக்கு வெளியில் இருக்கும் மல்ர்தோட்டத்தை பார்க்கிறார், பின்பு அங்கு வாயிலில் இருக்கும் யானையைப் பார்க்கிறார்,வாயில் காப்போனிடம் வழிகேட்கிறார், வழியில் செல்லும் பெண்களைப் பார்க்கிறார், பின்பு படியின் மீது ஏறிச் சென்று ஜனக மஹா ராஜனைப் பார்க்கிறார். சுகரை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என்று அவரை சோதிக்கும் வண்ணம் ஜனகர் கேட்கிறார். இங்கு வந்தது முதல் நீ என்ன என்ன பார்த்தீர்கள் என்று கேட்டார்.

சுகர் சொன்னார், வரும்போது மலர்கள்பிரும்மத்தைப் பார்த்தேன்,காவலன்பிரும்மத்திடம் வழி கேட்டு யானை பிரும்மத்தின் அழகை ரசித்து, பெண்கள் பிரும்மத்தை பார்த்துகொண்டே, படிகள்பிரும்மத்தின்மீது ஏறி, ஜனக பிரும்மத்தை பார்த்தேன் என்றார்.உடனே ஜனகமஹா ரிஷி சொன்னார் உனக்கு பாடம் சொல்ல எனக்குத் தகுதியில்லை அசையும் பொருள் அசையாப் பொருள் ஆண், பெண், மிருகம்,செடி, மலர், எல்லாவற்றையும் அந்த பிரும்மாகவே( கடவுளாகவே) பார்க்கும் எண்ணம் உள்ள நீங்கள் சுகப்பிரும்மம் என்று அழைக்கப்படிவீர்கள் என்றார்.இப்படி ஆச்சார்ய ஹிருதயத்தில் இடம் பிடித்தவர் சுகபிரும்மம்.

அது சரி ஜனகரை ஏன் சுகருக்கு குருவாக தேர்ந்தெடுத்தார் வியாசர் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்

Wednesday, March 19, 2008

குருவிடம் சில கேள்விகள் - 2



கேள்வி : குருவை அடைவதிலும், ஆன்மீக வாழ்வை நடத்துவதிலும் விருப்பமுள்ளவன் குருவை அடைவதற்கு முன்பு ஆன்மீக சாதனை செய்ய வேண்டுமென்றால் என்ன செய்யலாம்?.


பதில் : மனதால் இறைவனை பூஜிக்கலாம், ஏதேனும் மந்திரங்கள்/திருமுறைகள் தெரிந்தால் அதனை ஜபிக்கலாம். மனதால் ஈஸ்வரனை பூஜிக்க நியமங்களில்லை, எனவே சிவ மானஸ பூஜை போன்றவற்றை செய்யலாம். செய்யும் எல்லா செயல்களின் பலன்களையும் இறைவனுக்கு அர்பணித்து இறைபக்தியை வளர்ப்பது நல்லது. விவேகம் மூலமாக தீவிரமான வைராக்கியத்தை பெற வேண்டும். சிரத்தையுடன் இறைவனைப் பிரார்த்தித்தால் ஸத்குருவை அடையும்படி செய்வான்.


கேள்வி : லெளகீக வாழ்வில் ஈடுபட்டுள்ளவனுக்கு குருவின் உபதேசம் தேவையா?


பதில் : வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைத்தியம் எவ்வளவு தேவையோ அது போல லெளகீகத்தில் இருப்பவர்களுக்கு குரு அவசியம். லெளகீக வாழ்வில் இருப்பவன் அவன் எதிர்பார்க்கும் அளவிற்கு இன்பம் பெருகிறானா?, இல்லையே!. அவன் எதிர்பார்க்கும் அளவிலும் அதற்கு மேலுமாக ஒருவன் இன்பம், அமைதி போன்றவறை அடைய ஒரு வழிகாட்டி வேண்டுமல்லவா?. தத்துவத்தை அறிந்தவரின் ஆசி மிக பலமுள்ளது. ஆகையால் எப்படி வாழ்ந்தாலும் ஒரு மஹானின் அருளும் உபதேசமும் பெறுவது நல்லது.


கேள்வி : தன் மனதில் உள்ள எல்லாவற்றையும் குருவிடம் சொல்வதில் மக்களுக்கு தயக்கம் இருக்கிறது. இதனால், சீடன் தன் மனதிலிருக்கும் எல்லாவற்றையும் குருவிடம் கூறுவதில்லை. இது சரியா?, இவ்வாறு இருப்பதால் எவ்விதமான பலன் அடைவான்.


பதில்: ஒரு வைத்தியனிடம் செல்லும்போது தனக்கு வந்திருக்கும் வியாதியினை மறைத்தல் முட்டாள் தனம் அல்லவா?. அது போலவே சீடன் குருவிடன் செல்லும் சமயத்தில் தனது கஷ்டங்களை மனம் விட்டு கூறுதல் வேண்டும். சரணாகதி பண்ணும் சீடன் தனது சுக-துக்கங்களை குருவிடம் சமர்பித்தல் என்பதே இது. சரி, சீடன் அவ்வாறு செய்யவில்லை என்றாலும், குரு தனது தபோ பலத்தாலும், மெய்யுணர்வாலும் சீடனுக்கு உபதேசிக்கும் எதுவும் அவனது கஷ்டங்களில் இருந்து சமனப்படுத்திடும். உத்தம சீடன் குருவின் ஆக்ஞையின்படி நடப்பானே தவிர, அக்ஞையினை ஆராயவோ, அல்லது தன்னால் இயலுமா என்றெல்லாம் சிந்திக்காது செயலில் இறங்கிடுவான். இதற்கு ஹஸ்தாமலகர் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. இவ்வாறாக குருவின் சொல்படி நடக்கிறான் என்பதால் அவனுக்கு சொந்த புத்தி இல்லை என்று அர்த்தமல்ல, தன்னைக் காட்டிலும் உத்தம சக்தியுடைய குருவிடம், சரணாகதி பண்ணியதாகத்தான் பொருள்.



கேள்வி : குருவின் அருளிருந்த்தால் மஹாபாவியும் முன்னேற முடியுமா?.


பதில் : இறைவன் மற்றும் குருவின் அனுக்ரஹம் கிடைத்தால் எப்படிப்பட்டவனும் முன்னேறலாம். ஆனால் குருவின் அருளால் மட்டுமே முன்னேறலாம் என்று இல்லாமல் தனது முயற்சியும் இருக்க வேண்டும்.


கேள்வி : ஒருவன் முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் பகவானின் அருளைப் பெருகிறான் என்றால் அருளூம் புண்ணியத்தால் வாங்கப்படும் பொருள் போல ஆகிவிடுகிறதே?.


பதில் : ஒரு தீபத்தின் ஒளி சுற்றியுள்ள இடங்களில் விழுகிறது. ஒருவன் அந்த ஒளியினை பயன்படுத்தி புத்தகங்களைப் படித்துக் கொள்ளலாம். மற்றொருவன் அதில் கவனம் செலுத்தாமல் தூங்கி காலம் கழிக்கலாம். அந்த தீபத்தைப் போலவே குரு எப்போதும், எல்லோருக்கும் அருள்புரிந்து வருகிறார். அவனவன் மனநிலையைப் பொறுத்துப் பயனடைவான். குளத்திற்கு பெரிய குடம் கொண்டு சென்றால் அது முழுவதுமாக நிறைய நீர் எடுத்து வர இயலும், ஆனால் கொண்டு சென்றது சிறிய பாத்திரமாக இருந்தால் நீரும் குறைவாகவே எடுத்து வர இயலுமல்லவா?. முற்பிறவியில் நல்லது செய்திருந்தால் மஹான்/குருவின் ஸஹவாசம் கிடைக்கும். ஆனால் கிடைத்ததை உபயோகப்படுத்திக் கொள்ள தெரியவேண்டும். இன்னொருவனுக்கு குருவின் தொடர்ச்சியான ஸஹவாசம் கிடைக்கவில்லை என்றாலும், சிறிதே காலம் ஏற்பட்ட தொடர்பினைப் பயன்படுத்தி, விசேஷ அனுக்கிரஹத்தை பெற்று இருக்கலாம்.


கேள்வி : குருவின் சன்னிதியில் சீடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?

பதில் : குருவிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் குருவுக்கு சேவை செய்ய வேண்டும். அவ்வாறு சேவை செய்யவும் அவரிடம் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். மனதில் ஏதெனும் சந்தேகம் எற்பட்டிருந்தால் குரு வேறு காரியங்களில் ஈடுபடாதிருக்கும் நேரத்தில் அவரிடம் கேட்கலாம். குருவிடம் பாடம் கற்றுக் கொள்வது நமது பாக்கியம் என்று கருதி, பாடத்தில் சிரத்தை வைத்துக் கேட்க வேண்டும். அவர் தரும் உபதேசங்களை மறக்காமல் மனதிருந்த்தி வாழ்க்கையினை அந்த உபதேசத்தின்படி நடக்க வேண்டும்.


Thursday, March 13, 2008

குருவின் ஆணையை மீறினால் தர்மம் காக்குமா?




மன்னன் மகாபலியின் அரசவை. மன்னன் தனக்கு உரிய சிங்காதனத்தில் அமர்ந்திருக்கிறான். வேள்வி ஒன்றைத் தொடங்கி உள்ளான் மன்னன். மூவுலகையும் ஆளும் மகாபலிச் சக்கரவர்த்தியின் வேள்வி என்றால் சும்மாவா? இந்திர லோகம், சந்திர லோகம், பிரம்ம லோகம், பூலோகம், பாதாளம், என்று அனைத்து உலக மக்களுக்கும் தானங்கள், மரியாதைகள் செய்யப் படுகின்றன. வேள்வி வெகு விமரிசையாக நடைபெறுகிறது. வேள்வி நடக்கும் விமரிசையைப் பார்த்தால் சீக்கிரம் முடியும் என்பதோடு மட்டுமின்றி, தேவேந்திரனுக்கும் ஆபத்து வரும் எனப் புரிகின்றது. என்ன செய்வது? தேவேந்திரன் யோசித்து, பிரம்மாவைப் பணிகின்றான்.
பிரம்மா சொல்கின்றார். "தேவேந்திரா, மகாபலி, சிறந்த அரசன், மகா புத்திமான், பக்திமானும் கூட. ஆகவே அவனுக்கு வேண்டிய வரங்களைக் கொடுக்காமல் இருக்க முடியாது. தேவர்கள் ஆன உங்களைத் தவிர மற்றவர்க்குத் தீங்கும் செய்யாதவன் அவன். ஆகவே அவனைத் தந்திரத்தால் தான் வெல்ல வேண்டும். அவன் செய்யும் தர்மம் அவனைக் காக்கும்." என்று சொல்லி விடுகின்றார். இந்திரனும் மகாவிஸ்க்ணுவைப் போய்ப் பணிய அவரும், "தேவேந்திர, மிக நல்லவன் ஒருவன் செய்யும் வேள்வி பூலோகத்துக்கே நல்லது, என்றாலும், தேவர்கள் ஆன உங்களுக்கு அவன் தொடர்ந்து கெடுதலே செய்து வருவதாலும், அவனின் தர்மத்தின் படி அவனுக்கு முக்தி பெறுவதற்கு உரிய நேரம் வந்து விட்ட படியாலும், இதில் நானே நேரில் சென்று அவனுக்கு முக்தி கொடுக்க உள்ளேன்." என்றார்.

பின்னர் காசியபரின் மகனாய்ப் பிறந்த மகாவிஷ்ணு மிக மிகக் குள்ளமான ஒரு பிரம்மச்சாரியாக இருந்து வருகின்றார். அப்போது தான் ஆசிரமத்தில் அனைவரும் பேசிக் கொள்கின்றனர். "மகாபலி வேள்வியை முடிக்கப் போகிறானாம். அனைவருக்கும் இல்லை என்னாது, கொடுத்து வருகிறானாம். இப்போது எல்லாருக்கும், எல்லாமும் கொடுத்து முடித்தாகி விட்டது. இனி வேள்வி முடிய வேண்டியது ஒன்றே பாக்கி" என்று பேசிக் கொண்டார்கள். மாயவன் குறு நகை புரிந்தான். அவன் காத்திருந்த தருணமும் வந்து விட்டது. வேள்வி நடக்கும் வேள்விச்சாலைக்குச் சென்றான். எப்படி? கையிலே தாழங்குடை. பிரம்மச் சாரி என்பதைக் குறிக்கும் தண்டம். வேள்விச் சாலைக்கு வந்து சேருகிறான். மிகுந்த களைப்பு என்பது போல் ஒரு நடிப்பு. உலகத்தவர் அனைவரையும் பிறப்பித்து அன்றாடம் நடிக்க வைப்பவனுக்கு நடிப்பா ஒரு பொருட்டு?

மகா பலி யாக முடிவுக்கான பூர்ணாஹுதியை இட இன்னும் சிறிது நேரமே உள்ளது. அப்போது மன்னன் முன் போய் நின்றான் குள்ள வாமனன். தன் முன் தோன்றிய குள்ள வாமனனைக் கண்டான், மகாபலிச் சக்கரவர்த்தி. மனதில் நினைத்தான், "மிகச் சிறு பிள்ளை! என்னவோ வேண்டி வந்திருக்கிறான். நம்மிடம் இப்போது ஒன்றுமே இல்லையே?" குழப்பத்துடன் கேட்கிறான், "பிள்ளாய், என்ன வேண்டும் உனக்கு?" என. அவனும் சொல்கின்றான், "மகாராஜாவே, என் காலடியால் அளக்கப் பட்ட மூன்று காலடி மண் வேண்டும் எனக்கு, இது கொடுத்தால் போதும்." அப்போது அங்கே வருகின்றார் குல குரு சுக்கிராச்சாரியார். வேள்வி நடை பெறுவதே அவர் தலைமையில் தான். பூர்ண ஆஹுதிக்குத் தயார் நிலைமையில் மன்னனை அழைத்துச் செல்ல வருகின்றார். வந்தவருக்கு உடனேயே புரிந்து விடுகின்றது, இங்கே ஒரு நாடகம் நடக்கிறது என. வந்தவன் மாயவன், மாயக் கள்ளன், அந்த நாராயணன், என்பதும் தெரிய வருகிறது அவருக்கு.

அக்காலத்தில் மட்டுமில்லாமல், எக்காலத்திலும் குரு என்றவர் ஆணை இட்டால் உடனேயே அதைச் செய்து முடிக்க வேண்டும் என்பதே அனைவரும் அறிந்த செய்தி அல்லவா? அப்போது தான் குருவருள் கிட்டும், குருவருள் கிட்டினால் தான் திரு அருள் என்றும் சொல்லுவார்கள். ஆகவே ஆணை இட்டார் மகாபலியிடம், இந்தப் பிரம்மச்சாரி எதைக் கேட்டாலும் கொடுக்காதே, இது உன் குருவின் ஆணை என. ஆனால் மகாபலியின் மனதிலோ, குருவின் ஆணையை விடத் தான் கொடுத்த வாக்குறுதியும், அதைக் காப்பாற்ற வேண்டும் என்ற தர்மமுமே மேலோங்கி இருந்தது. ஆகவே தர்மத்தையும், சொன்ன சொல்லைக் காப்பாற்றவும் எண்ணிய மகாபலிச் சக்கரவர்த்தி தன் கையில் கமண்டலத்தை வாங்கி நீரால் தாரை வார்த்து வாமனன் திருவடியால் மூவுலகை அளக்கத் தொடங்குகிறான். சுக்ராச்சாரியாரோ பதற்றத்தோடு கமண்டலத்தின் வாயை ஒரு வண்டின் உருவில் அடைக்க முயலுகின்றார். மாயவனா அசருவான். அதை ஒரு த்ர்ப்பைக் குச்சியால் குத்தி வண்டை அகற்றி விட்டு விஸ்வரூபம் எடுக்கின்றான். முக்தி அடைய வேண்டிய நிலையில் இருந்த மகாபலிச் சக்கரவர்த்தியும் விஸ்வரூபத்தில் திளத்து மனம் மயங்கி தன் தலையைத் தாழ்த்துகின்றான் இறைவன் திருவடியில். திரு அருள் பூரணமாகக் கிட்டியது.

சாதாரணமாகக் குருவின் வார்த்தையைத் தட்டக் கூடாது என்று இருந்தாலும் இது தனிப்பட்ட தர்மம் ஆகக் கடைப் பிடிக்கப் பட்டு இன்றளவும் குருவின் வார்த்தையை மீறிய மகாபலிச்சக்கரவர்த்தி அதற்காகத் தண்டிக்கப் படாமல், விசேஷமாய்த் திரு அருள் பெற மட்டுமின்றி தர்மத்தைக் காப்பாற்றவும் குருவின் ஆணையை மீறியதற்காக அவன் கொண்டாடப் படுகின்றான். \\

"பொதுவாக குருவானவர் என்ன ஆணை இடுகின்றாரோ அதை மாணாக்கர்கள் பின்பற்ற வேண்டியதே அவர்கள் கடமை ஆகும். ஆனால் குருவானவர் மாணவனின் தவறைச் சுட்டிக் காட்டி அவனை நல்வழிப் படுத்த வேண்டும். இங்கே சுக்ராச்சாரியார் அவ்வாறு செய்யாமல் மகாபலி மேலும், மேலும் தவறான பாதையில் செல்வதையே மறைமுகமாய் ஆதரிக்கிறார். ஆனால் அரச தர்மத்தையும், குடிமக்கள் பரிபாலனமும் நன்கு செய்து வந்த மகாபலியோ எது தர்மம்? என்பதை உணர்ந்தவனாய், இந்த இடத்தில் , குருவின் ஆணையை ஏற்றுத் தான் உயிர் பிழைப்பதைக் காட்டிலும், தர்மத்தை நிலை நாட்டுவதே முக்கியம் என்று உணருகிறான். ஒரு குருவானவர் எப்படி இருக்கக் கூடாது என்பதைச் சுட்டும் அதே சமயம், மாணாக்கன் தர்மத்தைக் காப்பாற்ற குருவின் ஆணையை, அது தவறானதாய் இருக்கும் பட்சத்தில் மீறலாம் என்றும் காட்டுகிறது, இந்த சம்பவம்."

Wednesday, March 5, 2008

குருவின் தனித்தன்மை

மக்கள் யாரை குருவாகக் கொள்வார்கள். மக்கள் மனத்தில் அவர்கள் மீது நம்பிக்கைவர வேண்டும். அப்படி நம்பிக்கை வருமளவில் யார் நடப்பார்களே அவர்களுக்கு தனி மதிப்பு சமூகத்தில் உண்டு.மதிப்பு என்பது தானாக வரவேண்டும் அதை கேட்டு வாங்க முடியாது.




அதுசரி திராச இப்படிச் சொன்னால் நான் எப்படி ஒப்புக்கொளவது ஏதாவது கதை இருக்கா இதுக்கு புராணத்திலேன்னு கேஆர்ஸ் கேட்கலாம். இதோ......
பராசரருடைய குமாரர் வேதவியாசர் . வேதவியாசர்ருடைய குமாரர் சுகப்பிரும்மம்.இந்த சுகபிரும்மம்தான் பரிக்ஷித்து மஹாராஜனுக்கு ஏழு நாட்களில் பாகவதத்தை கூறி அவனுக்கு மோக்ஷ்மளித்தார்.வியாசருக்கு கொஞசம் பெருமை பிடிப்பு இருந்தது. தான்னால் தான் பாரதம் எழுதப்பட்டது, தான் விஷ்ணுவுக்கு சமானமானவர் என்று.

ஒரு சமயம் வேதவியாசரும் சுகபிரும்மமும் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். வழியில் ஒரு நதியைக் கடக்க வேண்டி இருந்தது. சுகபிரும்மம் முதலில் சென்று கொண்டிருந்தார் அவரைத் தொடர்ந்து சிறிது தூரத்தில் வேதவியாஸர் வந்து கொண்டிருந்தார்.



நதியில் முழங்கால் அளவுதான் தண்ணீர் ஓடிக் கொண்டு இருந்தது। ஆற்றில் சில பெண்கள் குறைந்த ஆடைகளுடன் குளித்துக் கொண்டு இருந்தார்கள்।சுகபிரும்மம் அவர்கள் அருகில் ஆற்றை கடந்து சென்றார்.அப்போது அந்தப் பெண்கள் தாங்கள் பாட்டுக்கு எந்த வித லஜ்ஜையும் இல்லாமல் குளித்துக்கொண்டு இருந்தார்கள்.பின்னாலேயே சிறிது நேரத்தில் வேதவியாசர் வந்தார். அவரும் அங்குதான் கரையைக் கடந்தார். ஆனால் அவரைப் பார்த்த பெண்கள் பதறி அடித்துக்கொண்டு கரைக்கு வந்து ஆடைகளை அவசர அவசரமாக எடுத்து வெட்கத்துடன் உடலைப் போர்த்திகொண்டார்கள்

இதைப் பார்த்த வேதவியாசர் அந்தப் பெண்களைப் பார்த்துக் கேட்டார்.நான் மிகவும் வயசானவன், முற்றும் துறந்த முனிவன், விஷ்ணுவுக்கு ஒப்பானவன் இருந்தும் நீங்கள் என்னப் பார்த்து லஜ்ஜையுடன் உங்கள் உடலை துணிகளால் மறைத்துக்கொண்டீர்கள். ஆனால் இதற்கு சிறிது நேரம் முன்பு சென்றானே சுகபிரும்மம் என் மகன் வாலிபமுறுக்கு உள்ளவன் , முற்றும் துறந்த முனிவனும் அல்லன், திகம்பரனும் ஆவான், அவனைப் பார்க்கும்போது உங்களுக்கு லஜ்ஜையே வராமல் குளித்துகொண்டு இருந்தீர்களே அது ஏன் என்று கேட்டார்.

அந்தப் பெண்கள் சொன்னார்கள். முனிவரே சுகபிரும்மமும் இந்த வழியாகத்தான் போனார்.ஆனால் வாலிபரரகவும் திகம்பரராகவும் இருந்தாலும், அவர் பாட்டுக்கு மரங்கள் பிரும்மத்தையும்,நதி பிரும்மத்தையும்,குளித்துக்கொண்டு இருக்கின்ற பெண்கள் பிரும்மத்தையும்,பார்த்துகொண்டு நதியின் அடுத்த கரை பிரும்மத்துக்கு சென்று விட்டார். அவர் மனத்தில் எதுவும் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. எல்லாவற்றையும் அவர் பிரும்மமாகவே பார்த்தார். அதனால் எங்களுக்கும் எந்த வித லஜ்ஜையும் வரவில்லை. ஆனால் முற்றும் துறந்த வயோதிகம் மிக்க முனிவராகிய உங்களுக்கு,இந்த நதியும், அரை குறை ஆடையுடன் குளித்துக் கொண்டு பெண்களாகிய நாங்களும் உங்கள் சிந்தையில் பட்டு சலனத்தை ஏற்படுத்தியது. அப்படியானால் உங்களுக்கு இது நதி ,இது பெண்கள்,அரைகுறை ஆடைகள்,இவ்வளவு விஷ்யங்களும் உங்களை பாதித்து இருந்தது. அதனால்தான் நாங்களும் உங்களைப் பார்த்ததும் எங்களை ஆடைகளால் முழுவதும் மறைத்துக் கொண்டோம் என்றார்கள்.

இப்பொழுது மறுபடியும் படியுங்கள்

மக்கள் யாரை குருவாகக் கொள்வார்கள். மக்கள் மனத்தில் அவர்கள் மீது நம்பிக்கைவர வேண்டும். அப்படி நம்பிக்கை வருமளவில் யார் நடப்பார்களே அவர்களுக்கு தனி மதிப்பு சமூகத்தில் உண்டு.மதிப்பு என்பது தானாக வரவேண்டும் அதை கேட்டு வாங்க முடியாது
.