Wednesday, November 26, 2008

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் -4

கரூரில் வசித்த சாஸ்திரிகள் சிலரும், கனபாடிகள் சிலரும் சதாசிவரை அணுகி "திருப்பதி ஸ்தல யாத்திரை செய்வது மிக சிரமமாக இருக்கிறது. இந்த தான் தோன்றி மலையில் உள்ள அப்பரை தரிசித்தால் வெங்கடாசலபதியை தரிசித்த புண்ணியமுண்டாக வேண்டும்" என வேண்டினர். சதாசிவரும் சந்தோஷமாக அங்கே சென்று பூஜை செய்து ஜன ஆகர்ஷண யந்திரம் ஒன்று எழுதி அங்கே பிரதிஷ்டை செய்தார்.

தஞ்சைக்கு அருகே புன்னை காடுகள் இருந்தன. தஞ்சை ராஜா ராமேஸ்வரம் ஸ்தல யாத்திரை செய்து திரும்பும் போது அந்த புன்னை காடுகள் அருகில் தங்கி இருந்த போது அவருடைய குழந்தைக்கு உஷ்ணம் அதிகமாகி கண்ணிலிருந்து ரத்தமே வந்தது. இது சரியாக வேண்டுமென சமயபுரம் மாரியம்மனுக்கு ராஜா பிரார்த்தனை செய்ய அன்றிரவு " நான் இங்கேயே இருக்க ஏன் சமயபுரத்துக்கு வருவதாக பிரார்த்திக்கிறாய்?” என்று அன்னை கேட்டாள். அட, இது தெரியாமல் போயிற்றே, என் ராஜ்ஜியத்திலேயே இருக்கிறாளா என்று நாலாபுறமும் ஆட்களை அனுப்பி தேடினான். தேடியவர்கள் இங்கே ஒரு புற்றுக்கு சிறுவர்கள் வேப்பிலை வைத்து மாரியம்மன் என்று விளையாட்டாக வழிபடுவது தவிர கோவில் எதுவும் இல்லை என சொன்னார்கள்.

மகாராஜா அந்த புன்னை காடுகளை சுற்றி வந்தார். அங்கே ஏதோ விசேஷம் இருப்பதாக தோன்றவே உள்ளே நுழைந்து தேடினார்கள். ஒரு இடத்தில் சதாசிவர் அமர்ந்து இருப்பதை பார்த்து மகிழ்ந்து வணங்கி எழுந்து " இங்கே மாரியம்மன் கோவில் இருப்பதாக கனவு கண்டேன். ஆனால் என்ன தேடியும் ஒரு புற்றை தவிர ஒன்றும் தென்படவில்லை. என்ன செய்வது என்று சொல்ல வேண்டும்" என்று வேண்ட, சதாசிவர் "அந்த புற்றேதான் மாரியம்மன்" என்று எழுதிக்காட்டினார். "இப்படி இருந்தால் ஜனங்கள் எப்படி பக்தியோடு வழிபட முடியும்? நீங்கள்தான் ஏதாவது செய்ய வேண்டும்" என்க சதாசிவரும் கோரோசனை, கஸ்தூரி, சாம்பிராணி, புனுகு, ஜவ்வாது, அகில் சந்தனம், குங்குமப்பூ, பச்சைகற்பூரம் ஆகியவற்றை வாங்கி வரச்செய்து அந்த புற்று மண்ணிலேயே பிசைந்து மாரியம்மனை செய்தார். ஜன ஆகர்ஷண யந்திரம் ஒன்றையும் எழுதி அம்மன் முன் வைத்து "இதற்கு பூஜை செய், குழந்தையின் கண் சரியாகும்" என்று தெரிவிக்க, அவ்வாறே செய்து பிரச்சினை தீர்ந்தது. தினசரி பூஜைக்கு ஏற்பாடு செய்யவே இன்றளவும் பூஜை நடக்கிறது. 5 வருடங்களுக்கு ஒரு முறை சாம்பிராணி தைல அபிஷேகம் மட்டும் செய்கிறார்கள். அம்மன் பக்தர்கள் பலர் கனவில் தோன்றி தனக்கு புடவை சாற்றுமாறு சொல்வாள். அவர்களும் அப்படியே செய்து அவர்களது வேண்டுதல் கைவர பெறுவர். அபிஷேகம் நடக்கும் காலத்தில் அவற்றை நீக்குவார்கள். வெகு நேரம் பிடிக்குமாம்.


Posted by Picasa


சதாசிவரின் சித்தம் வெளிமுகமாகிய ஒரு சந்தர்பத்தில் தன்னுடன் இளமையில் பயின்ற போதேந்திராளையும் அய்யாவாளையும் நினைத்தாராம். அவரை காண எண்ணி கோவிந்தபுரம் அடைந்து, அதற்குள் சித்தம் அகமுகமாகிவிட அங்கிருந்த நாணல் புதர்களில் விழுந்து அப்படியே கிடந்தாராம். அய்யாவாள் வாரம் ஒரு முறை கோவிந்தபுரம் வருவார். அப்படி வரும்போது புதரில் கிடந்த சதாசிவரை பார்த்து அடையாளம் தெரியாமல் யாரோ ஒரு மகான் இப்படி இருக்கிறார். இவர் ஆசி கிடைத்தால் பாக்கியம் பெறுவோம் என்று நினைத்து சுற்றி வந்து வணங்கினார்; ஸ்தோத்திரம் செய்தார். அப்படியும் சதாசிவர் அகமுகமாகவே இருந்துவிட்டார்.

அய்யாவாள் தன் குருநாதராகிய போதேந்திராளிடம் இதை சொல்ல அவரும் உடனே அப்படிப்பட்ட மகானுபாவரை உடனே தரிசிப்போம் என்று புறப்பட்டார். சுற்றி இருந்த புதர்களையும் செடிகளையும் அப்புறப்படுத்தி சுத்தம் செய்து தீபம் ஏற்றி சாம்பிராணி புகையும் போட்டால் பகிர்முகப்படுவாரோ என்று அதையும் செய்தனர்.

சதாசிவர் அசையக்கூடவில்லை. போதேந்திராள் தன் யோக வலிமையால் ராம நாமத்தை அந்த உடலுக்குள் புகுத்தினாராம். ராம நாமம் கேட்டு விழித்துக்கொள்ளட்டும், பின்னால் மன்னிப்பு கேட்டுக்கொள்ளலாம் என்று நினைத்து, "பிபரே ராம ரஸம்" என பாடலானார். இதனால் சற்றே பகிர்முகமானார் சதாசிவர். அடுத்து " கேலதி மம ஹ்ருதயே" என பாட, சதாசிவர் சப்த பேதத்தை திருத்தினார். இது சதாசிவமே என நிச்சயித்து பலவாறு புகழ்ந்து போற்றினார்கள். அதற்குள் பிரம்மம் அகமுகமாகிவிட்டது. (முன் நினைத்த வேலை முடிந்ததல்லவா? இருவரையும் கண்டாகிவிட்டது.) என்ன செய்தும் அவரை பகிர்முகப்படுத்தி மடத்துக்குள் கொண்டு செல்ல முடியவில்லை எனக்கண்டு அப்படியே விட்டு விட்டனர். சதாசிவரும் பிறகு எங்கோ போய்விட்டார்.

சதாசிவர் நிகழ்த்திய அற்புதங்கள் பலவாக சொல்லப்படுகின்றன. அவரா நிகழ்த்தினார்? ப்ரம்மத்துக்கு சங்கல்பமேது? அந்த உடல் முன்னிலையில் பல அற்புதங்கள் நடந்தன. தாக்க வந்த மூடர்கள் செயலிழந்து போயினர். பலரை தன் பார்வையாலேயே பிணி தீர்த்தார். " தாத்தா, திருவிழா காண வேண்டும் " என்று கேட்ட குழந்தைகளை கண நேரத்தில் மதுரை அழைத்து சென்று காண்பித்து திருப்பியும் கூட்டி வந்தார்.

Wednesday, November 19, 2008

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர்-3

இந்த நிலையில் மைசூரில் அரசவையில் சரியான வித்வான் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வந்தார்கள். சிவராமன் புகழை கேள்விப்பட்டு பரமசிவேந்திரரிடம் விழுந்து வணங்கி மைசூர் ஆஸ்தான வித்வானாக அனுப்பும் படி கேட்க அவரும் நாட்டு நலன் கருதி இசைந்தார். மைசூர் ராஜாவின் சந்தோஷத்துக்கு அளவில்லை! வருகிற எல்லா வித்வான்களும் இவராலேயே பரீட்சிக்கப்பட வேண்டும்; இவர் சொல்கிற சன்மானம்தான் தர வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. சிவராமனுக்கோ அத்தனை கலைகளும் அத்துப்படி. ஒரு ராகம்பாடினால் அது சுத்தமாக இல்லையென்றால் கண்டுபிடித்துவிடுவார். சாஸ்திரம் பற்றி கேட்கவே வேண்டாம். இவரிடம் பரிசு வாங்க வித்வான்கள் சிரமப்பட்டு போயினர்.

தஞ்சையிலிருந்து ஒரு வித்வான் -கோபாலகிருஷ்ண சாஸ்திரி என்பவர் - சிவராமனை வென்று ஆஸ்தான வித்வான் ஆக வேண்டும் என்ற கனவுடன் கிளம்பிப்போய் இவரை கண்டவுடன் விழுந்து வணங்கி "குருவே தங்களுக்கு சேவை செய்ய வந்து இருக்கிறேன்" என்றாராம்! சேவையில் சில காலம் போன பின் கோபாலக்ருஷ்ணன் பரம குருவை சந்திக்க வேண்டி கேட்க சிவராமனும் பரமசிவேந்திராளை சந்திக்கும் விதி முறை, வழி, இடமெல்லாம் சொல்லி அனுப்பி வைத்தார். அப்படியே பரம குருவை சந்தித்த கோபாலர் " சிவராமக்ருஷ்ணர் தங்கள் சிஷ்யர்களிலே மிக உயர்ந்தவர் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அவர் வரும் வித்வான்களை வாதத்தில் வென்று வெற்றி அடைவதிலேயே குறியாக இருக்கிறார். யாருக்கும் விரும்பிய பரிசு கிடைப்பதில்லை. இதனால் ராஜ்யத்துக்கு அவப்பெயர். மேலும் இவர் இதிலேயே கவனமாக இருப்பதால் தவம் செய்ய நேரம், இடம் இல்லை. இவர் வெளியேறி தவம் செய்தால் இவர் ராஜா முன் கைகட்டி நில்லாமல் இவரிடம் மகாராஜாக்கள் கைகட்டி காத்து நிற்பர்" என்ற ரீதியில் சொல்லவே, இதன் உண்மையை உணர்ந்து பரமசிவர் " நான் தரிசிக்க விரும்பியதாக கூறு" என்று சொல்லி அனுப்பிவிட்டார். இதை கேள்விப்பட்ட சிவராமன் மிக வருந்தினார். ஒரு குரு சிஷ்யனை தரிசிப்பதாவது! அப்படி சொன்னால் என்ன ஒரு வருத்தம் இருக்க வேண்டும் என்று உணர்ந்து வேலையை ராஜினாமா செய்து விட்டார்.

வந்து வணங்கிய சிவராமனை கண்ட பரமசிவேந்திரர் " ஊரார் வாயை அடக்கக் கற்ற நீ உன் வாயை அடக்க கற்கவில்லையே" என்று கூற அந்த கணத்திலிருந்து இனி பேசுவதில்லை என்று உறுதி கொண்டுவிட்டார். குருநாதரும் சன்னியாசம் கொடுத்து "இனி பிரியமான இடம் சென்று தவம் செய்" என்று சொல்லிவிட்டதாக கூறுகிறார்கள். (சன்னியாசம் இவர் கொடுத்தாரா என்பதில் அபிப்பிராய பேதம் இருக்கலாம்) தவம் செய்ய ஏகாந்த இடத்தை தேடி நெரூர் வந்து சேர்ந்தார் சதாசிவர். யோகம் பயின்று அனைத்து யோக சித்திகளும் கைவரப்பெற்று மேலும் தவம் செய்து ப்ரம்மமாகவே ஆகிவிட்டார்.

கொடுமுடிக்கு பக்கத்தில் அகத்தியம் பாறை என்ற ஒரிடத்தில் காவேரிக்கு நடுவே மையத்தில் ஒரு பெரும்பாறை உண்டு. பல சமயம் இந்த பாறை மீது அமர்ந்து சதாசிவர் தவம் செய்வார். சாதாரணமாக தவம் செய்பவரை பெரியவர்கள் தொந்திரவு செய்யமாட்டார்கள். ஆனால் சிறுவர்கள் செய்யக்கூடுமாகையால் இப்படி ஆற்றின் நடுவே அமர்வார். ஒரு நாள் ஆற்றுவெள்ளம் அதிகமாகி இந்த பாறையையும் சதாசிவரையும் புரட்டிப்போட்டுவிட்டது. நீர் வற்றிய பின் சதாசிவரை தேடி தேடி அலுத்தனர் மக்கள்.

பல மாதங்கள் ஓடி முடிந்து வற்றி இருந்த ஆற்றில் கட்டிட வேலைக்காக மணல் எடுக்க வந்தனர் சிலர். ஓரிடத்தில் நல்ல மணல் கிடைக்கிறது என்று தோண்டவே ஆழமாக போன பின் மண்வெட்டியால் வெட்ட ரத்தம் வந்தது. பயந்து போனவர்கள் கிராம அதிகாரியை அழைத்துவர
அவர் இது சதாசிவ பிரம்மமாகத்தான் இருக்க வேன்டும் என ஊகித்து சுற்றிலும் மணலை எடுக்கச்செய்யவே சதாசிவர் உணர்வு பெற்று எழுந்து நடந்து போய்விட்டாராம்.

புதுக்கோட்டை அரசரது காடுகளை அடுத்த வயல்களில் சதாசிவர் போய் கொண்டு இருந்த போது வைக்கோல் போர் போட்டுக்கொண்டு இருந்தார்கள். இது வழி, இது வழி அல்ல என ஆராயும் நிலையில் இல்லாத சதாசிவர் பாட்டுக்கு நேரே போக, வைக்கோல் போர் இடையே மாட்டிக்கொண்டார். வேலையாட்கள் தெரியாமல் மேலும் மேலும் வைக்கோல் போட 10,000 போர்கள் போட்டுவிட்டனர். பிறகு பல மாதங்கள் கழித்து அது செலவழிந்து கீழே பார்க்க சதாசிவர் படுத்த நிலையிலேயே இருந்தார்.

இதை கண்டு அதிசயித்து மகாராஜாவிடம் போய் சொன்னார்கள். மகாராஜா விஜய ரகுநாத தொண்டைமான் சாதுக்களிடம் மரியாதையும் நம்பிக்கையும் உள்ளவர். ராஜ்ய பரிபாலனத்தில் நிகழும் கேடுகளை சாதுக்களால் தீர்க்க முடியும் என நம்பியவர். ஒரு பல்லக்கை கொண்டுவரச்சொல்லி குதிரை மீது ஏறி விரைந்து சென்று ப்ரம்மத்தை தரிசித்தார். சுற்றி வந்து வீழ்ந்து வணங்கி அரண்மனை வருமாறு வேண்டியும் ப்ரம்மம் ஏதும் சலனமில்லாமல் இருந்தார். மேலும் வற்புறுத்த திருவரங்குளம் காட்டுள் சென்றுவிட்டார். முயற்சியில் தளராத ராஜா இவரது அருகாமையில் ஒரு குடிசை அமைத்து சதாசிவருக்கு சேவை செய்து வரலானார். இடையிடையே அரண்மணை சென்று ராஜாங்க வேலைகளை கவனித்துவிட்டு மீண்டும் சேவைக்கு வந்துவிடுவார். இப்படி 8 வருடங்கள் ஓடின. ஒரு நாள் தனக்கு மந்திர தீக்ஷை தர வேண்டும் என மிகவும் வேண்ட சதாசிவர் மந்திரத்தை மணலில் எழுதிக்காண்பித்தார். ராஜாவும் அதை பாடம் செய்து கொண்டு அந்த மணலை அரண்மணைக்கு கொண்டுவந்து தங்கப்பேழையில் வைத்து பூஜை செய்யலானான். இந்த மணல் இன்னும் இருப்பதாக கூறப்படுகிறது. நவ ராத்திரிபோது அதை காட்சிக்கு வைப்பதாக சொல்கிறார்கள்.

சாஸ்திர சந்தேகங்களை ராஜா கேட்க, பதில் வராததை கண்டு இனி தொந்திரவு செய்யக்கூடாது என நிச்சயித்து எங்கு சென்றாலும் கடைசியில் சரீரத்தை உகுக்கும் காலத்தில் தங்களை தரிசிக்கும் பாக்கியத்தை தரும்படி கேட்டுக்கொண்டான். சதாசிவரும் இசைவை தெரிவித்து தகுந்த சாஸ்திர குருவையும் அடையாளம் காட்டி தன் போக்கில் போகலானார்.

Wednesday, November 12, 2008

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் - 2

சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் சோமநாத யோகியார் - பார்வதி தம்பதியர். சோமநாத யோகி சிறு வயதில் இருந்து பிரம்மசர்யத்தை கடைபிடித்து குண்டலினி யோகம் பயின்று சித்திகள் வரப்பெற்றவர். இவரது தாய் தந்தையர் புத்திரனுக்கு வயதாகிக்கொண்டே போகிறதே என்று கவலைப்பட்டு திருமணம் செய்து வைக்க முயல யோகியார் லேசில் சம்மதிக்கவில்லை. அப்பா உனக்கு திருமணம் செய்து வைத்தால் எங்கள் கடமைகள் எல்லாம் நிறைவேற்றியவர்கள் ஆவோம். அதன் பின் பஞ்ச மகா யக்ஞங்கள் செய்து, வானபிரஸ்தம் அனுஷ்டித்து கடைதேறும் வழியை பார்க்க வேண்டும் என்று பலவாறு சொல்ல பின் யோகியாரும் இணங்கினார்.

திருமணத்திற்கு பிறகும் யோகியார் பிரம்மசரியத்தை கடைபிடித்துவர 15 வருடங்கள் சென்றன. சந்ததி குறித்து ஒரு சிந்தனையும் இல்லாது இருக்கிறார் என்று தெரிந்து கொண்ட பார்வதி அம்மை " சுவாமி திருமணம் நடந்து 15 வருடங்கள் ஆகின்றன. ஒரு சத்புத்திரனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வார்களே" என்று கேட்டார். யோகியார் "உன் வாயால் சத் புத்திரன் என்று வந்துவிட்டதா? சரி. அப்படி நடக்க வேண்டுமானால் கோடிக்கணக்கில் நாம ஜபம் செய்ய வேண்டும். உடம்பின் ஒவ்வொரு அணுவும் ராம நாமம் சொல்ல வேண்டும். அப்படி ஆனால்தான் உடலும் உள்ளமும் தூய்மையாக இருக்கும். அப்படி பட்ட நேரத்தில் கர்ப்பம் தரித்தால் அதில் ஒரு மகரிஷி வந்து புகுவார். அது நாட்டுக்கு நல்லது" என்று சொல்ல அம்மையும் இசைந்து மந்திர உபதேசம் பெற்று ஜபம் செய்து வரலானார்.

ஸ்தல யாத்திரை செய்து ராமேஸ்வரம் சென்றபோது கனவில் "உனக்கு சத் புத்திரன் உண்டவான்" என்று ராமநாதர் சொல்ல விழித்ததும் யோகியார் தானும் அதே கனவை கண்டதாக சொல்லி வீடு திரும்பினர். இறைவன் ஆணைப்படியே 10 ஆம் மாதம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. சிவராமகிருஷ்ணன் என பெயரிட்டனர். குழந்தை 3 வயதை எட்டும் முன்னேயே யோகியார் இமயத்துக்கு தவம் செய்ய போய்விட்டார்.

சிறு வயதிலேயே வேதம் படிக்க அனுப்பிவிட்டார்கள். அதி புத்திசாலியாகையால் மிக விரைவில் 4 வேதங்களும் கற்றுக்கொண்டுவிட்டார். அத்துடன் சாஸ்திரங்களும் கற்றார்.
இவரது திறமையை பார்த்த உள்ளூர் சாஸ்திர விற்பனர்கள் மேற்கொண்டு சாஸ்திரம் வாசிக்க திருவீசைநல்லூர் வேங்கடேச அய்யாவாளிடம் அனுப்பச்சொல்லி வேண்டினர். ஆனால் அன்னை
அதற்கு சம்மதிக்கவில்லை. கொஞ்சம் காலம் சென்ற பின் மீண்டும் கேட்க அன்னையோ அவருக்கு தக்க ஒரு மணப்பெண்ணை தேடி திருமணம் செய்து வைத்தார். பெண்ணுக்கு 5 வயதே ஆனபடியால் உரிய வயது வந்த பின் கொண்டு வந்து விடுவதாக ஏற்பாடு ஆகியது. எப்படியோ இப்போது திருவீசைநல்லூர் போக அனுமதி கிடைத்துவிட்டது என்று சிவராமன் உற்சாகமடைந்தார்.

சதாசிவருக்கு பாடம் சொன்ன அய்யாவாளுக்கு வியப்பு மேலிட்டது. சாதாரணமாக ஒருவர் பாடம் கற்று அதை அசை போட்டு புரிந்து கொள்வர். பாடம் கேட்டு மனனம் செய்யவே 7 வருஷம் ஆகும். அப்புறம் மீமாம்சை படித்தால்தான் பாஷ்யம் படித்து வேதத்துக்கு பொருளை ஒருவாறு உணரமுடியும். அதற்குப்பிறகு அனுபவம் பெறும் முறைகளையும் கற்க வேண்டும்.

ஆனால் சிவராம க்ருஷ்ணனுக்கோ பாடம் கேட்கும் போதே அனுபூதி கிடைக்கிறது! அனுபவத்தின் முதிர்ந்த நிலை அடைகிறான். இவனை இப்படியே விடக்கூடாது என்று ஸ்ரீமடாதிபதி பரமசிவேந்திரரிடம் (இவர் அதிஷ்டானம் திருவெண்காடு அருகில் உள்ளது) இவனை கொண்டு விட்டார். சில மாதங்களிலேயே அத்யாத்ம சாஸ்திரங்களை கற்று தேர்ந்தான் சிவராமன். ஏக சந்த க்ராஹி என்பார்கள்- ஒரு முறை கேட்டாலே நினைவில் இருத்திக்கொள்ள முடியும். அப்படி ஒரு சக்தி - இல்லை, - புரிவதும் நிகழ்வதால் அதுக்கும் மேலே- இருந்தது சிவராமனுக்கு. குருவே சிலாகித்த சிஷ்யனாக விளங்கினார்.

Thursday, November 6, 2008

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர்

கொஞ்ச நாள் முன்னால் நெரூர் போக நேர்ந்தது. அதைப்பத்தி பதிவு போடப்போய் மௌலி ஆச்சார்ய ஹ்ருதயத்திலேயும் இதை வெளியிடணும்ன்னு கொக்கி போட்டார். ரொம்பவே லைட்டா பேச்சு மொழியில எழுதறவன் இதிலே போடலாமான்னு யோசிச்சேன். உம்ம்ம்ம், விதி யாரை விட்டது?
கொஞ்சம் அதிக தகவல்களுடன் சில படங்களுடன் இதோ போட்டாச்சு.

சிறிய, கொஞ்சம் பெரிய கிராமங்களை தாண்டி நெரூர் போய் சேர்ந்தோம். நேரடியாக பிரம்மேந்திராள் அதிஷ்டானத்துக்கு போனோம். நல்ல கடுமையான வெயில். புகளூர் போன நண்பர் அப்போதே வெயிலைப்பத்தி புகார் சொல்லிக்கொண்டு இருந்தார். அப்போது அதிகமாக சொல்கிறாரோ என்று நினைத்தேன். இல்லை என்று தெரிந்தது.


Posted by Picasa


சமீபத்தில் கட்டிய கட்டிடங்கள். நுழைவாயில் அருகில் பூந்தோட்டம். சற்று உள்ளே சென்று கோவிலின் வாசல். சற்றே முன் குருக்கள் வெளியே போய்விட்டார் என்றார்கள். நல்ல வேளையாக நடை சாத்தவில்லை. ஓய்வு பெற்ற தாசில்தார் ஒருவர் அங்கே தொண்டு செய்து வருகிறார். அவர் எங்களை அழைத்துப்போய் சுற்றிக்காட்டினார். நேரடியாக உள்ளே நுழைய இருப்பது காசி விஸ்வநாதர் சன்னதி. சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது.
வலது பக்கம் அம்பாள் சன்னதி. 90 டிகிரி கோணத்தில். இவர்களை வணங்கி சுற்றிக்கொண்டு பின் பக்கம் போனால் அங்கே பிரம்மேந்திராள் சித்தி ஆன இடத்தை பார்க்கலாம்.

நாங்கள் முதல் முறை பார்த்தபோது துயரமே மேலிட்டது.

பிரம்மேந்திராள் சித்தி ஆகும் முன் இந்த இடத்தில் ஒரு குகை அமையுங்கள் என்று சொல்லி அங்கு அமர்ந்துவிட்டார். "அங்கே ஒரு வில்வ மரம் ஒன்பதாம் நாள் முளைக்கும்: சித்தி ஆன 9 ஆம் நாள் காசியில் இருந்து ஒரு பிரம்மசாரி ஒரு சிவலிங்கத்துடன் வருவான். அந்த சிவலிங்கத்தை இந்த உடல் அமரும் இடத்திலிருந்து 12 அடி தூரத்தில் கிழக்கே பிரதிஷ்டை செய்யுங்கள்" என்று தெரிவித்ததாக சொல்கிறார்கள். அதே போல நடந்தது. புதுக்கோட்டை மகாராஜா சுற்று சுவர் எழுப்பினாராம்.

இந்த இடத்தை நிர்வகிப்பதில் கொஞ்சம் பிரச்சினை இருக்கிறது. சாதாரணமாக இப்படி சிவலிங்க பிரதிஷ்டை செய்தால் அதற்குத்தான் அபிஷேக ஆராதனைகள். ஆனால் இங்கோ சமாதியான இடத்தில் சிவலிங்கத்தை வைக்கவில்லை. ஆகவே அது ஒரு கோவிலாக மாறி அரசின் கைக்கு போய்விட்டது. காசு இல்லாத இடத்தில் அரசு என்ன அக்கறை காட்டப்போகிறது?

குழம்பிய பக்தர்கள் வில்வ மரத்துக்கே பூஜை செய்ய ஆரம்பித்தனர் போலும். பக்கத்தில் சதாசிவானந்த சுவாமிகள் என்று ஒரு துறவி கைலாஸ ஆஸ்ரமம் என்று அமைத்து இந்த கோவிலையும் சுற்றி சுவர் எழுப்பி கணபதி, முருகன், பைரவர் என்று பிரதிஷ்டை செய்து கொஞ்சம் பெருக்கினார். பிறகு பக்தர்கள் உற்சாகத்தில் வில்வ மரத்தை சுற்றி தியானம் செய்ய வசதியாக மண்டபம் அமைத்து மரத்தை சுற்றி ஒரு அதீத உற்சாகத்தில் கல் தளமும் அமைக்கவும்; நாளாக ஆக வில்வ மரத்துக்கு 50 லிட்டர் 100 லிட்டர் ஆவின் பால் என்று அபிஷேகம் செய்யவும் மரம் பட்டுப்போய்விட்டது. இயற்கையாக எதையும் இருக்கவிட மனிதன் ஏன் சம்மதிப்பதில்லை என்பது எனக்கு புரியாத புதிர்.

போதாக்குறைக்கு ஒரு கீத்துக்கொட்டாய் வேறு மரத்தின் அருகில் போட்டு வைத்து அங்கே விளக்கையும் ஏற்றி வைத்துவிட்டதால் ஒரு நாள் இரவு கொட்டகை தீப்பிடித்து அதுவும் எரிந்து கொட்டகையும் எரிந்து காவலுக்கு இருந்த ஒரு சிறுவன் முயன்ற வரை அதை அணைக்கப்பார்த்து... நாங்கள் போனபோது பட்டுப்போய் கருகிய மரமே காட்சி அளித்தது. ரொம்ப முன்னேறி பாலன்ஸ் ஆகிவிட்டவன் என்று நினைத்துக்கொண்டு இருந்த எனக்கு அப்படி ஒன்றும் இல்லை என்று நன்றாக புரிந்து போய்விட்டது. அவ்வளவு அப்செட் ஆகிவிட்டேன். ஏதும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் அங்கிருந்து கிளம்பி வந்த காரியத்தை பார்க்க போய்விட்டோம்.

நெரூர் அக்கிரஹாரம் கொஞ்சம் வித்தியாசமான அமைப்பு உள்ளது. இரண்டு சாரி வீடுகள். நடுவில் வாய்க்கால் ஒன்று ஓடுகிறது. ஓரிரண்டு கிளைத்தெருக்களும் உண்டு. வீடு-வீதி- வாய்க்கால் -வீதி- வீடுகள் இப்படி இருக்கிறது. ஒரு பக்கம் கொஞ்சம் பேர் இன்னும் வசிக்கிறார்கள். எதிர் சாரியில் ஒரு போஸ்ட் ஆபீஸ். சமீபத்தில் வந்த ஒரு ஜ்யோதி நிலையம் -வள்ளலார் பக்தர் ஒருவர் ஒரு விசாலமான ஹால்; பின்னால் ஒரு ஓடு வேய்ந்த பிரமிட்; பக்கதில் அவர் வசிக்க வீடு இப்படி கட்டி இருக்கிறார்.தினசரி காலை கஞ்சி ஊற்றுகிறார்கள். ஒவ்வொரு பௌர்ணமியும் அன்னதானம். அங்கே இருக்கக்கூடிய சுமார் 20 வீடுகளில் 7-8 தவிர எல்லாம் பராமரிப்பு இல்லாமல் இடிந்து போய்விட்டன. பிரம்மேந்திராளுக்கு பூஜை செய்யும் கன்னடத்து பட்டர், மடத்து பூஜை செய்யும் ஒருவர் தவிர யாரும் அங்கே குறிப்பிட்டு சொல்கிறபடியாக இல்லை.

நாங்கள் பார்க்கப்போன வக்கீல் அங்கே இருக்கும் ஸ்ரீமடத்து ஔஷதாலயத்துக்கு நிர்வாகியாக இருக்கிறார். சியவனப்பிராஷ் போல சில மருந்துகள் தயாரிக்கிறார்கள்.
வில்வ மரம் பற்றி விசாரித்தோம். சுமார் 5 வருஷங்களாக அது பட்டுபோய்க்கொண்டு இருப்பதாயும் அப்போதிலிருந்து அந்த அக்ரஹாரத்தவர்களுக்கு துர்பிக்ஷம்தான் என்றும் சொன்னார். சமீபகாலம் வரை துளிர் கொஞ்சம் இருந்தது. இப்போது தான் முழுக்க எரிந்துபோய்விட்டது என்று அவர் சொன்னபின் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு கொஞ்சம் கனத்த மனசுடன் கிளம்பினோம்.

அடுத்த பதிவிலிருந்து பிரம்மேந்திராள் சரிதம்.

Wednesday, November 5, 2008

ஸ்ரீ சமர்த்த ராமதாஸர் - பகுதி -1

கலியுகத்தில் பக்தி மார்க்கத்தை கொண்டு இறைவனடி சேர்வதே எளிதென்று பல மஹான்களும் சொல்லியிருக்கிறார்கள். இப்படிச் சொல்லியதால் மற்றவை பயனற்றது என்று பொருளல்ல. இந்த யுகத்தில் கர்ம-ஞான மார்க்கங்கள் எளிதில் பின்பற்றக்கூடியவையாக இருக்காது என்பதால் மட்டுமே கலியில் பக்தியை அடிப்படையாக வைத்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள். ஸ்வகர்மாவினை விடாது செய்து அத்துடன் பரம பவித்ரமான பக்தியை ஆஸ்ரயிக்க வேண்டும் என்பதுதான் பெரியவர்கள் சொல்லிச் சென்றது. இந்த கருத்தை அடிப்படையாகக் கொண்டே போதேந்திரர், திருவிசை ஐயாவாள் என்று சில நாம பக்தி சிரோன்மணிகளை இங்கு கண்டோம். இன்று நாம் காண இருப்பது சமர்த்த ராமதாசர். தியாகராஜர், திருவிசையார், போதேந்திரர், மற்றும் சதாசிவ பிரம்மேந்திரர் போன்றே இவரும் ராம பக்தியில் திளைத்தவர். ராமநாமத்தை பலகோடி முறை ஜபித்து அதன் மூலம் ராமசந்திர மூர்த்தியைப் பிரத்யக்ஷமாக கண்டவர். அவரது வரலாற்றினை அறியாலாமா? [ராமதாஸர் பற்றி திராச எழுத ஆரம்பித்து அப்படியே வைத்திருக்கிறார். அவர் ராமதாசர் பாடல்களை/பஜனைகளைப் பற்றி எழுத இருக்கிறார் என்றே நினைக்கிறேன், இது ராமதாசர் வரலாறு மட்டுமே]



பாரதத்தை அன்னியர்கள் ஆக்ரமித்த 17ஆம் நூற்றாண்டில் தோன்றியவர் ராமதாஸர். இவர் மஹாராஷ்ட்ராவில் உள்ள சதாரா என்னும் இடத்திற்கு அருகில் இருக்கும் ஜம்ப் என்னும் கிராமத்தில் பிறந்தவர். சூர்யாஜி பந்த்-ரேணுபாய் என்னும் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக 1605ஆம் ஆண்டு ராமநவமி தினத்தில் பிறந்தவர். தாய்-தந்தையர் இவருக்கு வைத்த பெயர் நாராயணன் என்பது. சிறுவயதில் இவரது உடலில், பின்பகுதி சற்று நீண்ட வால் போன்ற பாகம் இருந்ததாம்.ன் பின்னர் வயதான போது அது மறைந்துவிட்டதாக கூறுப்படுகிறது. பிற்காலத்தில் இவரை ஸ்ரீ ஹனுமானது அம்சம் என்று கூற இதுவும் ஒரு காரணம். சிறு வயதில் தந்தையை இழந்தாலும், அவரது தாயும் அண்ணனும் இவருக்கு காலத்தில் உபநயனம் போன்றவற்றைச் செய்து வைத்து வளர்த்து வந்தனர்.


சிறுவயதிலேயே தமக்கு காயத்ரி மந்திரம் தவிர வேறு ஏதேனும் ஒரு மந்திரம் உபதேசம் செய்து வைக்க வேண்டும் என்று தனது அண்ணாவிடம் கேட்க, அவரும் காலம் வருகையில் உபதேசம் செய்து வைப்பதாகக் கூறியிருக்கிறார். தனது மன உந்துதலால் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஹனுமன் கோவிலில் நாட்கணக்கில் அன்ன-பானம் ஏதும் இன்றி தியானத்தில் அமர்ந்து விடுகிறார். அப்போது ஹனுமனது தரிசனம் மட்டுமன்றி அவரிடமிருந்தே ஸ்ரீராம மந்திரம் உபதேசமாகிறது. இந்த நிகழ்ச்சிக்குப்பின் நாராயணனது செயல்களில் அதிக மாற்றம் தெரிய ஆரம்பிக்கிறது.

வேத பாராயணம், போன்ற நேரங்கள் போக மற்ற நேரங்களில் ஹனுமன் சன்னதியில் ஆழ்நிலை தியானத்தில் இருப்பதும், எப்போதும் ராமநாம ஜபமுமாக இருப்பதைக் கண்ட சகோதரர் நாராயணனுக்கு திருமணம் செய்விக்க முடிவு பண்ணுகிறார். அண்ணனின் மனத்தில் இருக்கும் எண்ணத்தை அறிந்த நாராயணன் வீட்டை விட்டு முழுதாக வெளியேறி நாஸிக் அருகில் ஒரு கிராமத்தில் குடில் அமைத்துக் கொண்டு, பிக்ஷை எடுத்து வாழத் தொடங்குகிறார்.




இவ்வாறு தீவிர பிரம்ஹசரிய வாழ்கை வாழும் காலத்தில் மஹாமந்திரமான காயத்ரியையும், ஸ்ரீராம த்ரயோதசாக்ஷரி (ஸ்ரீராம் ஜயராம் ஜயஜயராம்) மந்திரத்தையும் முன்று கோடி முறை ஜபித்து அதன் மீலம் ராமச்சந்திர மூர்த்தியின் தரிசனம் பெறுகிறார். ஸ்ரீ ராமரின் உத்தரவின் பேரிலேயே பாரதம் முழுவதும் பயணப்பட்டு த்ரயோதசாக்ஷரி மந்திரத்தை பரப்ப முடிவு செய்கிறார். இந்த தரிசனத்துக்குப் பின்னரே அவருக்கு சமர்த்த ராமதாஸ் என்ற பெயர் வழங்கலாயிற்று. தனது குருவான ஸ்ரீ ஹனுமனுக்கு கோவில் கட்டி அதனருகிலேயே தங்கி வந்தார்.



இவர் யாத்திரையில் இருந்த போது ஒரு கிராமத்தில் ஒரு வாலிபன் அகால மரணமடைகிறான். அவன் மனைவி ராமதாசரை கண்டு கண்ணீருடன் வணங்க, இவரும் அவளது நிலையறியாது அவளுக்கு பிள்ளைப் பேற்றினை ஆசிர்வாதிக்கிறார். திகைத்துப் போன பெண் தன் நிலையைக் கூறி தாம் தன் கணவனுடன் உடன்கட்டை ஏறவே சென்றுகொண்டு இருப்பதாகக் கூறுகிறாள். ஸ்வாமிகளோ, ஸ்ரீ ராமர் அருளால், இந்த ஜன்மத்திலேயே உனக்கு பிள்ளை பிறக்கும் என்று கூறுகிறார். பின்னர் அந்த பெண்ணுடன் தானும் சுடுகாட்டுக்குச் சென்று மந்திர உச்சாடனம் செய்து தீர்த்தத்தை சடலத்தின் மீது தெளிக்கிறார். அந்த ஆண்மகன் தூக்கத்தில் இருந்து முழிப்பது போல எழுகிறான். இருவரும் ராமதாசரை வணங்கிச் செல்கின்றனர். இவர்களுக்குப் பிறக்கும் மகனே பிற்காலத்தில் உத்தவர் என்ற பெயர் பெற்று ராமதாசரின் முதன்மைச் சீடராகிறார்.