Wednesday, April 16, 2008

ஆதிசங்கரரும் அடியார்க்கு அடியார்தான்...



நம்மில் பலரும் ஆதிசங்கரர் என்றாலே அவர் சைவ/வைதிக மதத்திற்கு மட்டுமே ஆச்சார்யார் என்று நினைக்கிறோம். ஆனால் ஆதிசங்கரருக்கு 'ஷண்மத ஸ்தாபனாச்சார்யர்' என்று ஒரு பட்டம் உண்டு. அதென்ன ஷண்மத ஸ்தாபனம்?. ஏன் அவருக்கு முன் மதங்கள் இல்லையா?. இருந்தது. அவர் காலத்தில் ஹிந்து மதப் பிரிவுகளில் ஏகப்பட்ட வேற்றுமைகள் மற்றும் வேதத்தின் அடிப்படை ப்ரமாணத்தை ஏற்காத பெளத்த/சமண சமயங்களால் மேலும் வேற்றுமைகள் பெருகியது. இந்த நிலையில் ஹிந்து மதம் நீர்த்துப் போகாது இருக்க வேண்டுமானால் இந்த வேற்றுமைகளினிடயே இருக்கும் பல ஒற்றுமைகளை நிலைநாட்டி அதன் மூலம் இந்துமத பிரிவுகளிடையே சண்டை-சச்சரவுகளை குறைக்க முயன்றார். அவர் காலத்தில், இந்து மதத்தில் மட்டும் 72 பிரிவுகள் இருந்தனவாம். இந்த 72 பிரிவுகளையும் ஆராய்ந்து, பலவற்றை இணைத்தும், சிலவற்றை தள்ளியும் முடிவாக "சைவம், வைஷ்ணவம், காணாபத்யம், கெளமாரம், செளரம், சாக்தம்' என்று வகைப்படுத்தினாராம். இவ்வாறு வகைப்படுத்தப்பட்டபின் இந்த 6 பிரிவுகளும் சொல்லும் பல பெயர்களும் பரப்பிரம்மத்தையே சாரும் என்கிறார். சரி, இதுக்கும் தொண்டரடிக்கும் என்ன தொடர்பு?, பார்க்கலாம்.



ஆதி சங்கரர் ஷண்மதங்களை ஸ்தாபித்தாலும், அவர் வைஷ்ணவத்தை உணர்ந்து, மஹா விஷ்ணுவை பல இடங்களில் பலவாறு கொண்டாடுகிறார். விஷ்ணு சஹஸ்ர நாமத்திற்கு பாஷ்யம் செய்திருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் அவரது பாஷ்ய க்ரந்தங்களில் எல்லாம் நாராயணனையே பரம்பொருளாக கொண்டாடுகிறார். நாரயணீயத்தில் ஆதி சங்கரர் பற்றிக் குறிப்பிடும் போது பட்டத்ரி இது பற்றி வியக்கிறார். ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட மடங்களில் இன்றும் 'நாராயண ஸ்மிருதி' என்றே கையொப்பமிடப்படுகிறது. ஆதி சங்கரர் சமாஸ்சரணம்/ உடம்பில் சூடு போட்டு முத்திரை (சங்கு-சக்கரம்) குத்திக் கொள்வதை எதிர்த்தார், ஆகையால் அவர் வைஷ்ணவ எதிரி என்பதாக கூறப்படுகிறது. அவர் காலத்தில் வைணவத்தில் மட்டுமல்ல, சைவத்திலும் போன்றவற்றிலும் உடலில் முத்திரை குத்தி கொள்ளும் முறை இருந்துள்ளது. சைவர்கள் ரிஷப, சூல முத்திரைகளை கொண்டு இருந்திருக்கிறார்கள். சங்கரர் இவை இரண்டையுமே கண்டித்திருக்கிறார். அவர் அதனை கண்டிக்க காரணமும் சொல்லியிருக்கிறார். அதாவது மனித உடலின் பல பாகங்களிலும் தேவர்களும், பித்ருக்களும் வாசம் செய்கின்றனர். இவ்வாறு சூடு வைத்துக் கொள்வது அவர்களுக்கு ப்ரிதியாகாது என்பதாகச் சொல்கிறார். அவரது இந்த கண்டிப்பு சைவ/வைஷ்ணவ மரபுகள் இரண்டிற்குமே தான்.



சங்கரரின் தாயார் ஆர்யாம்பாளின் இறுதிக்காலம் நெருங்கும் சமயத்தில், ஆதிசங்கரர் தான் முன்னர் வாக்கு கொடுத்ததுபடி தாயருகில் இருக்கிறார். தனது தாயின் வேண்டுகோளுக்கிணங்க, சிவனைத் துதித்து தனது தாயின் அந்திம காலம் சிரமமின்றி இருக்க வேண்டுகிறார். இவரது துதியினை கேட்டு ஈசன் சிவகணங்களை அனுப்பினாராம். அந்த சிவகணங்களின் உருவம் கண்டு அஞ்சிய ஆர்யாம்பாள், சங்கரரிடம், தனக்கு பயமாக இருக்கிறதென்றும் இந்த கணங்களுடன் தான் கைலாசம் போக மாட்டேன் என்றும் சொல்கிறார். உடனே ஆச்சார்யார் விஷ்ணுவைத் துதிக்கிறார். அந்த துதியில் நாராயணனை பாதாதி-கேசம் வர்ணிப்பதாக அமைத்து 15 பாடல்கள் பாடுகிறார். அந்த சமயத்தில் வைகுந்த வாசனின் தூதர்கள் வந்து ஆர்யாம்பாளின் ஜீவனை கூட்டிச் சென்றதாக சொல்லப்படுகிறது. இந்த 15 பாடல்கள் விஷ்ணு பாதாதி-கேச ஸ்துதி என்று கூறப்படுகிறது. இதன் முடிவில் "என்னாலே சொல்லப்பட்ட இந்த ஸ்துதியால் யார்-யார் மஹா விஷ்ணுவின் அழகை அனுபவிக்கிறார்களோ அப்படிப்பட்ட விஷ்ணு பக்தர்களின் நிர்மலமான திருவடிகளை எப்போதும் நான் நமஸ்காரம் செய்கிறேன்" என்ற் சொல்லி முடிக்கிறார். இப்போது சொல்லுங்க ஆதிசங்கரரும் அடியார்க்கு அடியார் தானே?

13 comments:

Geetha Sambasivam said...

அட, முந்திக்கிட்டீங்களே? :P
நல்ல அருமையான கருத்துக்கள் மெளலி, ஒரு நாள் முன்னாலேயே கொடுத்துட்டீங்க போலிருக்கு!

மெளலி (மதுரையம்பதி) said...

கீதாம்மா,

நன்றி.

முந்திக்கிட்டேனா? இல்லையே. இன்னைக்கு கார்த்தால 9.45க்குத்தானே பப்ளிஷ் பண்ணினேன்?.

குமரன் (Kumaran) said...

இந்த சைவ/அத்வைத குழப்பம் நிறைய உண்டு. அத்வைத ஆசாரியர்களும் திருநீறு அணிவதால் அவர்களை சைவர்களாக அடையாளம் காண்கிறார்கள். ஆனால் அவர்கள் சைவர்களும் கிடையாது; வைணவர்களும் கிடையாது - அல்லது இரண்டுமே. சரி தானா மௌலி? அதே போல் அவர்கள் வைதிக ஆசாரியர்கள் என்று சொல்வதும் முழுக்க முழுக்க சரியில்லை. வைதிக சம்ப்ரதாயங்கள் இந்தியத் திருநாட்டில் நிறைய இருக்கின்றன. அத்வைதம் அப்படிப்பட்ட வைதிக சம்ப்ரதாயங்களில் ஒன்று. அவ்வளவு தான். அதுவும் சரி தானா மௌலி?

வைதிக சம்ப்ரதாயங்களில் நான் படித்தவரை எல்லா மரபுகளும் (சம்ப்ரதாயங்களும்) விஷ்ணுவே பரம்பொருள் என்று சொல்கின்றன. அத்வைதத்தில் நிர்க்குண பிரம்மமே இறுதி நிலை என்று சொல்லிவிட்டு சகுணமாக சகாரமாக வரும் போது நாராயணனே பரம்பொருள் என்பது ஆதிசங்கரரின்/அத்வைத்ததின் கருத்து என்று படித்த நினைவு. சரி தானா? விசிஷ்டாத்வைத, த்வைத, அசிந்த்ய பேதாபேத (கௌடிய), நிம்பார்க்க மரபுகள் எல்லாம் நேரடியாக இறுதி நிலையே விஷ்ணு தான் என்று சொல்லிவிடுகின்றன. சிவபெருமானை விஷ்ணுவிற்குச் சமமாக வைப்பதும் அடுத்த நிலையில் வைப்பதும் என இந்த மரபுகளில் வேறுபாடு உண்டு.

பகவத்பாதர் லலிதா சஹஸ்ரநாமத்திற்கு விளக்கவுரை எழுத எண்ணி அந்த நூலைக் கொண்டுவர சீடரைப் பணித்த போது அம்பாள் ஒரு சிறு பெண்ணின் உருவில் வந்து திரும்பத்திரும்ப விஷ்ணு சஹஸ்ரநாமத்தையே எடுத்துக் கொடுத்தாள் என்றொரு தொன்மத்தைப் படித்திருக்கிறேன். அதனாலேயே பொதுவாகச் சஹஸ்ரநாமம் என்று சொன்னாலே அது விஷ்ணு சஹஸ்ரநாமத்தையே குறிக்கும் என்றும் படித்திருக்கிறேன். சரி தானா?

காஞ்சி ஆசார்யர் தீபாவளி தினத்தன்று தொலைக்காட்சியில் ஆசி வழங்கி நிறைவு செய்யும் போது 'நாராயண நாராயண நாராயண' என்று நிறைவு செய்வதைப் பார்த்த போது தான் எனக்கு நாராயண ஸ்மிருதியைப் பற்றி முதலில் தெரியவந்தது. :-)

வேதத்தில் எங்கோ ஒரு இடத்தில் உடலில் எந்த விதமான செயற்கையான குறிகளை இட்டுக் கொள்ளக் கூடாது என்றொரு கட்டளை இருக்கிறது என்று நினைக்கிறேன். கிருஸ்தவத்தில் டாட்டூவிற்கு இருக்கும் எதிர்ப்பினைப் போல. அந்த வேத வாக்கியத்தைக் கொண்டு தான் பஞ்சசம்ஸ்காரத்தை சங்கரர் கண்டித்ததைப் படித்திருக்கிறேன். இன்றும் சைவ சிந்தாந்த மரபில் தீட்சை அளிக்கும் போது ரிஷப சூல முத்திரைகளை குத்திக் கொள்ளும் முறை இருக்கிறது என்று நினைக்கிறேன்.

இதில் என்ன ஐயம்? கட்டாயம் ஆதிசங்கரரும் தொண்டரடிப்பொடியார் தான். கேயம் கீதா நாமஸஹஸ்ரம் என்றும் த்யேயம் ச்ரிபதி ரூபம் என்றும் பகவத் கீதா கிஞ்சித் அதீதா என்றும் சக்ருத் அபி யேன முராரி சமர்ச்சா என்றும் பஜகோவிந்தத்தில் பாடியவர் பஜகோவிந்தம் பஜகோவிந்தம் என்று மீண்டும் மீண்டும் பாடியவர் தொண்டரடிப்பொடியார் இல்லாமல் என்ன?

கீதாம்மாவும் நீங்களும் பேசியது புரியவில்லை. சங்கர ஜயந்தியா இன்று? நாட்காட்டியைப் பார்க்காததால் தெரியவில்லை. சங்கரரும் இராமானுஜரும் ஒரே நாளில் தானே பிறந்தார்கள் (அதாவது ஒரே மாத நட்சத்திரத்தில்).

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க குமரன்....

நிறைவான பலகருத்துக்களை அழகாகச் சொன்னதுக்கு நன்றி...அதென்ன ஒவ்வொரு கருத்துக்கும் முடிவில் 'சரிதானா மெளலி'...:-)
பெரியவங்க நீங்க கேட்டதால் நானும் ஒவ்வொன்றுக்கும் சரி சொல்லிடறேன். :-)

//இந்த சைவ/அத்வைத குழப்பம் நிறைய உண்டு. அத்வைத ஆசாரியர்களும் திருநீறு அணிவதால் அவர்களை சைவர்களாக அடையாளம் காண்கிறார்கள். ஆனால் அவர்கள் சைவர்களும் கிடையாது; வைணவர்களும் கிடையாது - அல்லது இரண்டுமே. சரி தானா மௌலி? அதே போல் அவர்கள் வைதிக ஆசாரியர்கள் என்று சொல்வதும் முழுக்க முழுக்க சரியில்லை. வைதிக சம்ப்ரதாயங்கள் இந்தியத் திருநாட்டில் நிறைய இருக்கின்றன. அத்வைதம் அப்படிப்பட்ட வைதிக சம்ப்ரதாயங்களில் ஒன்று. அவ்வளவு தான். அதுவும் சரி தானா மௌலி? //

மிக மிக சரி..

//வைதிக சம்ப்ரதாயங்களில் நான் படித்தவரை எல்லா மரபுகளும் (சம்ப்ரதாயங்களும்) விஷ்ணுவே பரம்பொருள் என்று சொல்கின்றன. அத்வைதத்தில் நிர்க்குண பிரம்மமே இறுதி நிலை என்று சொல்லிவிட்டு சகுணமாக சகாரமாக வரும் போது நாராயணனே பரம்பொருள் என்பது ஆதிசங்கரரின்/அத்வைத்ததின் கருத்து என்று படித்த நினைவு. சரி தானா? //

பாயிண்டைப் பிடித்துவிட்டீர்கள் குமரன். சகுணமாக வரும்போது நாராயணன் என்றே பல இடங்களில் கூறியிருக்கிறார். ஆனால் சில இடங்களில் சிவ-சக்தி ஐக்கியத்தையும் கூறுகிறார். எங்கெல்லாம் நாராயணனை விடுத்து சிவ-சக்தி பற்றி சொல்லுகிறார் என்பது பற்றி பின்னர் ஒரு பதிவு எழுத எண்ணியிருக்கிறேன். :-)

//விசிஷ்டாத்வைத, த்வைத, அசிந்த்ய பேதாபேத (கௌடிய), நிம்பார்க்க மரபுகள் எல்லாம் நேரடியாக இறுதி நிலையே விஷ்ணு தான் என்று சொல்லிவிடுகின்றன. சிவபெருமானை விஷ்ணுவிற்குச் சமமாக வைப்பதும் அடுத்த நிலையில் வைப்பதும் என இந்த மரபுகளில் வேறுபாடு உண்டு. //

உண்மைதான். இதனால்தான் ஒருவனுக்கு சைவத்திலிருந்து அத்வைதம் புரிவது ஈசியாகிறதோ என்னமோ? :-)

//பகவத்பாதர் லலிதா சஹஸ்ரநாமத்திற்கு விளக்கவுரை எழுத எண்ணி அந்த நூலைக் கொண்டுவர சீடரைப் பணித்த போது அம்பாள் ஒரு சிறு பெண்ணின் உருவில் வந்து திரும்பத்திரும்ப விஷ்ணு சஹஸ்ரநாமத்தையே எடுத்துக் கொடுத்தாள் என்றொரு தொன்மத்தைப் படித்திருக்கிறேன். அதனாலேயே பொதுவாகச் சஹஸ்ரநாமம் என்று சொன்னாலே அது விஷ்ணு சஹஸ்ரநாமத்தையே குறிக்கும் என்றும் படித்திருக்கிறேன். சரி தானா? //

அன்னையே வந்து அளித்ததாக நான் படித்ததில்லை.சீடரிடம் சஹஸ்ரநாமம் எடுத்து வா என்று கூறியவுடன் விஷ்ணு சஹஸ்ரநாமம் வந்ததால், அதனையே உத்தரவாக கருதியதாக படித்திருக்கிறேன்.

//இதில் என்ன ஐயம்? கட்டாயம் ஆதிசங்கரரும் தொண்டரடிப்பொடியார் தான். கேயம் கீதா நாமஸஹஸ்ரம் என்றும் த்யேயம் ச்ரிபதி ரூபம் என்றும் பகவத் கீதா கிஞ்சித் அதீதா என்றும் சக்ருத் அபி யேன முராரி சமர்ச்சா என்றும் பஜகோவிந்தத்தில் பாடியவர் பஜகோவிந்தம் பஜகோவிந்தம் என்று மீண்டும் மீண்டும் பாடியவர் தொண்டரடிப்பொடியார் இல்லாமல் என்ன?//

ஆஹா!! மிகச்சரியானதை எடுத்துக் கொடுத்துள்ளீர்கள். நன்றிகள் பல.

//கீதாம்மாவும் நீங்களும் பேசியது புரியவில்லை. சங்கர ஜயந்தியா இன்று? நாட்காட்டியைப் பார்க்காததால் தெரியவில்லை. //

இன்று சங்கர ஜெயந்தி அல்ல, அது சித்திரை கடைசியில் வருகிறது. ஆம்! சங்கர-ராமானுஜ ஜெயந்தியும் ஒரே நாள் தான்.

இந்த வலைப்பூவில் எல்லா வியாழனும், யாரேனும் ஒருவர் பதிவிடுவதாக ஒரு ஏற்பாடு. கீதாம்மா இந்த வாரம் போடுவதற்கு வந்தார்கள் போல, ஆனால் அதற்கு முன்பே நான் பதிவிட்டேன் என்பதை சொல்லியிருக்காங்கன்னு நினைக்கிறேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@மௌளி சந்தேகமே வேண்டாம் சங்கரர் அடியார்க்கு அடியார்தான். ஏழை குடு,பத்துக்காக கனதாரஸ்தவம் பாடியவர்தானே.

கபீரன்பன் said...

//இந்த சைவ/அத்வைத குழப்பம் நிறைய உண்டு //

ஆதிசங்கரர் வழி பின்பற்றுவோரை பொதுவாக ஸ்மார்தர் என்று கூறுவர். இவர்களுக்கு சிவ-விஷ்ணு பேதமில்லை. எனவே சங்கரமடத்தில் 'நாராயண'ஸ்மிருதியும் சந்திரமௌளீஸ்வர பூஜையும் ஒருங்கே காண்கிறோம்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இப்போது சொல்லுங்க ஆதிசங்கரரும் அடியார்க்கு அடியார் தானே?//

இல்லை! :-)
சங்கரர் = அடியார்க்கு அடியாரின் அடியார்!

//அப்படிப்பட்ட விஷ்ணு பக்தர்களின் நிர்மலமான திருவடிகளை எப்போதும் நான் நமஸ்காரம் செய்கிறேன்" என்ற் சொல்லி முடிக்கிறார்//

பெருமாளே ஒரு விதத்தில் அடியவர் தான்! :-)
எனவே அவர் அடியவர்கள் அடியார்க்கு அடியார்கள்!
இவர்களின் அடியவர்கள் அடியார்க்கு அடியாரின் அடியார்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சங்கர பகவத்பாதரைப் பற்றிய மாறுபட்ட கோணத்தில் நல்ல பதிவு மெளலி அண்ணா! தொலைபேசியிலேயே இந்தப் பதிவைப் படித்துவிட்டேன்! :-)

பாதாதி கேசம் பாடல், அதன் கடைசிப் பத்தியாவது முடிந்தால் இடுங்களேன்!

//திருநீறு அணிவதால் அவர்களை சைவர்களாக அடையாளம் காண்கிறார்கள்//

குமரன்,
திருநீறு மட்டுமே இடாது திருமண் இல்லை சந்தனக் காப்பிடும் அத்வைதர்களும் உண்டு! அத்வைதத்துக்குச் சைவம், வைணவம் இரண்டுமே இரண்டு கண் தான்!

//அந்த வேத வாக்கியத்தைக் கொண்டு தான் பஞ்சசம்ஸ்காரத்தை சங்கரர் கண்டித்ததைப் படித்திருக்கிறேன்//

அந்தக் கண்டிப்புக்குப் வேதப் பிரமாணம் இல்லை என்பதை வேதாந்த தேசிகர் தமது சத தூஷணி நூலில் பதில் சொல்லி இருப்பாரு! :-)

//அத்வைதத்தில் நிர்க்குண பிரம்மமே இறுதி நிலை என்று சொல்லிவிட்டு சகுணமாக சகாரமாக வரும் போது நாராயணனே பரம்பொருள் என்பது ஆதிசங்கரரின்/அத்வைத்ததின் கருத்து என்று படித்த நினைவு. சரி தானா?//

மிகவும் சரி!
சங்கரரும் தமது பிரம்ம சூத்திர பாஷ்யத்தில் இதையே சொல்லி இருப்பார்.
நாராயண பரோ வ்யக்தாத் அண்டம் அவ்யக்த சம்பவம் என்று தான் சங்கர பாஷ்யமும் துவங்குகிறது! சங்கரருக்குச் சைவ வைணவ பேதங்களே இல்லை!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஆதிசங்கரர் மிகப் பெரும் அடியவர்! அடியார்க்கு அடியார் தான்! அதில் சந்தேகமே இல்லை!

சண்டாளன்(ர்) ஒருவன் முன்னே தோன்றும் போது சற்றே ஒதுங்கிய சங்கரர், தெளிந்த சில நிமிடங்களில் அவன் காலில் விழவில்லையா?
மண்டன மிஸ்ரரின் மனைவி உபய பாரதியான சரஸ்வதியையும் பணியவில்லையா?

இப்படி அடியவரைப் பணிந்த சங்கரர் அடியார்க்கு அடியாரே!
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து!

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கபிரன்பன். உங்களது முதல் வரவு நல்வரவாகுக.. :)

மெளலி (மதுரையம்பதி) said...

அய்யா கே.ஆர்.எஸ், வாங்கய்யா!!!

அடுத்த வாரத்து பதிவுல போடற அளவு விஷயத்தை பின்னூட்டத்திலேயே போட்ட மஹராஜரே...வாழ்க. :-)

எனிவே!, கே.ஆர்.எஸ், அடுத்தவாரம் வியாழன் நீங்கதான் பதிவு போடணும். அதுவும் வேதாந்த தேசிகர் பற்றி (அவரைப்பற்றி மட்டுமே, சததூஷணி பற்றி அல்ல, அல்ல, அல்ல) :)

மெளலி (மதுரையம்பதி) said...

//திருநீறு மட்டுமே இடாது திருமண் இல்லை சந்தனக் காப்பிடும் அத்வைதர்களும் உண்டு! //

அத்வைதர்கள் தரிப்பதற்கு பெயர் திருமண் கிடையாது. அது வேறு விதமான ஒரு மண், சந்தனம் போன்ற நிறத்தில் இருக்கும். நாமம் போல், ஆனால் சின்னதாக புருவ மத்தியில் தரிப்பர். மற்றபடி நித்ய பூஜை ஆகி சந்தனம் தரிப்பார்கள்.

எனக்குத் தெரிந்தவரையில், சாமவேதிகள் கோபிசந்தனம் தரிப்பார்கள்.

//பாதாதி கேசம் பாடல், அதன் கடைசிப் பத்தியாவது முடிந்தால் இடுங்களேன்//

முயற்சிக்கிறேன் கே.ஆர்.எஸ் :-). ஆனா ஒன்று தெரியுமோ உங்களுக்கு?
சன்யாசிகள் தான் பாதாதி கேசம் வர்ணிக்க, பூஜிக்கலாம். க்ருஹஸ்தர்கள் கேசாதி-பாதம் பூஜிக்க/வர்ணிக்க வேண்டும் :-)

கபீரன்பன் said...

//உங்களது முதல் வரவு நல்வரவாகுக.. :)

முதல் வரவா! நான் ரொம்ப முதலியே வந்துவிட்டேன். உங்கள் முதல் பதிவை திறந்து பார்க்கவும். :))