Wednesday, August 20, 2008

தங்கத் தாம்பாளத்தில் ஏந்தப் பட்ட குழந்தை!

எந்தவொரு காரியத்துக்குமே காரணங்கள் கட்டாயமாய் இருக்கும். ஆராயப் போனால் நம் அறிவுக்கு உகந்த முறையில் சரியான பதில் எல்லாவற்றுக்கும் கிடைப்பது இல்லை. பொதுவாகவே நம் பெரியோர்கள் அதனாலேயே நம்மை எதையும் அதிகம் ஆராயாதே எனச் சொல்லி வருகின்றார்கள் போலும். இறைவன் ஒருவனே அனைத்தையும் அறிந்தவன், காரணத்தை மட்டுமல்லாது, காரியத்தையும் அவனே அறிவான். மாத்வாசாரியாரின் மகத்தான வழியைப் பின்பற்றுபவர்களுக்கு அவர் ஸ்தாபித்த 8 மடங்கள் பற்றித் தெரிந்திருக்கும். அந்த எட்டு மடங்களின் தலைமை குருவாக இருப்பவரே மாறி, மாறி உடுப்பி ஸ்ரீகிருஷ்ணன் கோயிலின் வழிபாடுகளைச் செய்து வருகின்றனர் இன்றளவும். அதில் ஒன்றான ஸோதே மடத்தின் அதிபதியான வாகீச தீர்த்தர் ஒரு ஊருக்குச் சென்றிருந்த போது ஒரு தம்பதிகள் அவரை வந்து பார்த்துக் காலில் விழுந்து வணங்கி விண்ணப்பம் கோரி நின்றனர். தம்பதிகளுக்குத் திருமணம் ஆகிப் பல வருஷங்கள் ஆகியும் குழந்தைப் பேறு இல்லை. ஆகவே வாகீச தீர்த்தரிடம் தங்கள் வேண்டுகோளை முன் வைக்கின்றனர் இருவரும்.

வாகீச தீர்த்தர் ஒரு மகான். நடக்கப் போவதை அறிந்தவர். அவர் சொல்கின்றார்: "உங்களுக்குக் குழந்தை பிறக்கும். அதுவும் ஆண் குழந்தையாகவே பிறக்கும். ஆனால் அந்தக் குழந்தை பிறந்தவுடனேயே எங்கள் ஸ்ரீமடத்திற்குக் குழந்தையைத் தந்து விடவேண்டும், சம்மதமா?" என்று கேட்கின்றார். தம்பதிகள் தடுமாறினார்கள். குழந்தை நிச்சயம் பிறக்கும், அதுவும் ஆண் குழந்தையே பிறக்கும். ஆனால் பிறந்த குழந்தையை எவ்வாறு ஸ்ரீமடத்திற்குத் தருவது?? கொஞ்சம் கலங்கினர் இருவரும். பேசாமல் நின்றனர். மகான் யோசித்தார். இவர்கள் இவ்வாறெல்லாம் வழிக்கு வரமாட்டார்களே?? என்ன செய்வது??? வாகீச தீர்த்தர் சொல்கின்றார்:"சரி, நான் வேறொரு யோசனையைச் சொல்கின்றேன். பிறக்கும் குழந்தை வீட்டுக்குள்ளேயே பிறந்தால் அந்தக் குழந்தை உங்களுக்கு. ஆனால் அது வீட்டுக்கு வெளியே பிறந்தால் அந்தக் குழந்தை ஸ்ரீமடத்துக்கு. சம்மதமா?" என்று கேட்கின்றார்.

போன உயிர் திரும்பி வந்தாற்போல் இருக்கிறது இருவருக்கும். அப்பாடா, குழந்தையாவது வீட்டுக்கு வெளியே பிறப்பதாவது?? எப்படியும் வீட்டுக்கு உள்ளேயே குழந்தை பிறக்கும், நாமும் குழந்தையை மடத்துக்குக் கொடுக்கவேண்டியதில்லை, ஆகவே இதுக்கு சரினு சொல்லிடுவோம். இருவரும் ஒத்துக் கொண்டனர். வாகீச தீர்த்தர் அளித்த மந்திராட்சதையைப் பெற்றுக் கொண்டு இருவரும் திரும்பி வருகின்றனர். இவர்கள் பெயர் இருவிதமாய் வழங்குகின்றது. ஒரு சாரார் தேவரநாம பட்டர்-கெளரிபாய் என்றும் இன்னும் சிலர், ராமாசார்யர்-சரஸ்வதி என்றும் சொல்கின்றனர். நமக்கு முக்கியம் ஸ்ரீவாதிராஜரே. ஆகவே அதைக் கவனிப்போம்.

வாகீச தீர்த்தரின் வாக்குப் பலித்தது. கெளரிபாயின் வயிற்றில் திரு உதித்தது. பட்டருக்குக் கவலை அதிகம் ஆனது. மனைவியைக் கண்ணும் கருத்துமாய்க் கவனித்து வந்தார். வெளியே எங்கும், எதற்கும் மனைவியை அனுப்புவதில்லை. தானே வெளிவேலைகளையும் சேர்த்துக் கவனித்து வருகின்றார். வீட்டின் பின்பக்கம் ஆன தோட்டத்துக்கோ, மாட்டுத் தொழுவத்துக்கோ கூட மனைவியை அனுப்பாமல் அதையும் தானே கவனித்துக் கொண்டு மனைவியின் நடமாட்டத்தையே கட்டுப் படுத்திக் கொண்டு வந்தார். பிரசவம் என்பது எப்படியும் வீட்டின் உள்ளே தானே நடக்கும் என்ற நம்பிக்கையும் அவருக்கு இருந்தாலும், ஒருவேளை என்ற சந்தேகமே இவ்வாறெல்லாம் அவரை நடக்க வைத்தது.

நாட்கள் சென்றன. கெளரிபாய் நிறை கர்ப்பிணி. வீட்டுக்குத் திடீரென ஒரு விருந்தினர் வந்தார். வேறு வழியில்லை. கர்ப்பிணியான கெளரிபாயே எழுந்து அவரைக் கவனித்தார். சாப்பாடு சாப்பிடும் நேரமும் வர, இருவருக்கும் நிறை கர்ப்பிணியான கெளரிபாயே உணவும் பரிமாறினார். அப்போது வீட்டின் கொல்லைப்புறம் திறந்திருந்தது. அது வழியாக ஒரு மாடு உள்ளே நுழைந்தது. அவர்கள் மாடு இல்லை அது. கொல்லையில் தோட்டம் வேறே இருந்தது. மாடு என்ற சொல்லுக்கு செல்வம் என்ற ஒரு அர்த்தமும் உண்டல்லவா??? மாடு உள்ளே நுழைந்ததின் காரணமே, உலகுக்குச் செல்வத்தை இவர்களே வைத்துக் கொள்ளப் போகின்றார்களோ என்ற பயமாயும் இருக்கலாமோ???

இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபடியால் வேறு வழியில்லாமல் கெளரிபாய் வெளியே வர நேரிட்டது. வெளியே வந்து மாட்டை விரட்டினார். அதுவா, வேகமாய் ஓட மறுத்தது. நகர மறுத்துச் சண்டித்தனம் வேறே. மாட்டைச் சற்றுக் கோபத்துடனேயே வேகமாய் ஓடிப் போய் விரட்ட ஆரம்பிக்கின்றார் கெளரிபாய். திடீரென ஓட ஆரம்பித்த மாடு வேகமாய் ஓடி மறைய, மாட்டின் பின்னால் இயல்புக்கு மாறாக வேகமாய் ஓடிய கெளரிபாய்க்கு வீடு நோக்கித் திரும்பும் எண்ணம் வர வைத்தது, திடீரென ஏற்பட்ட பிரசவ வலி. வேதனையில் துடித்த அவர் வீடு நோக்கி அவசர, அவசரமாய்த் திரும்ப முயல, திரும்ப முடியாமல் அங்கேயே ஒரு மரத்தடியில் உட்கார்ந்துவிட்டார் நடக்கக் கூட முடியாமல்.

அப்போது பார்த்தால் வாசலில் ஸ்ரீமடத்தைச் சேர்ந்த இருவர் நிற்க, என்னவெனப் போய்ப் பார்க்கின்றார் பட்டர். ஒரு தங்கத் தாம்பாளத்தை அவர் கையில் கொடுத்துப் பிறக்கும் குழந்தை பூமியில் படுமுன்னே அதைத் தங்கத் தாம்பாளத்தில் ஏந்துமாறு வாகீச தீர்த்தர் சொன்னதாய்ச் சொல்லவே, கலங்கிய பட்டர் அப்போது தான் மாட்டைத் துரத்திய மனைவி வீட்டினுள் நுழையவில்லை எனப் புரிந்து வேகமாய் வெளியே ஓட, அப்போது ஒரு ஒளிமயமான ஆண்குழந்தை பிறக்க, செய்வதறியாது, தன் கையில் இருந்த தங்கத் தாம்பாளத்தில் அந்தக் குழந்தையை ஏந்தினார் பட்டர். வேறு வழி இல்லை. நிபந்தனையில் ஜெயிப்போம் என நினைத்தால் இறைவன் அருள் இவ்வாறு இருக்கின்றதே! குழந்தையை எடுத்துக் கொண்டு ஸ்ரீமடத்திற்குச் சென்று வாகீச தீர்த்தரிடம் குழந்தையை ஒப்படைக்கின்றார் பேச்சுப் படியே பட்டர். பட்டரைப் பார்த்த வாகீசர், உலகு உய்ய ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த உங்களுக்கு இன்னொரு குழந்தை பிறக்கும். அந்தக் குழந்தை உங்கள் குழந்தையாக இருப்பான் என்று ஆசீர்வதிக்கின்றார். மடத்துக்காக ஒப்படைக்கப் பட்ட குழந்தைக்கு ஸ்வாமியின் அபிஷேகப் பாலை ஊட்டி வளர்த்தார் வாகீச தீர்த்தர். கூடவே குழந்தைக்கு ஞானமும் ஊட்டப் பட்டது. அந்தக் குழந்தைதான் வாதிராஜர்.

அடுத்து வாதிராஜரின் வாழ்வில் ஹயக்ரீவரின் அற்புதங்களும், கடலை நைவேத்தியமும்.

தொடரும்

15 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

arumai, appdiye movie scene maathiri cholli irukkeenga!
rock on! :)

motham how many parts, geethamma?
1 week interval too wide; 2-3 days na ok!

ambi said...

கதை நல்லா இருக்கு. நிதானமாவே மீதி பகுதியை போடுங்க. தரம் பாதிக்க கூடாது இல்ல..? :))

தமிங்கலத்தில் பின்னூட்டம் போட்ட எம்மாழ்வாருக்கு கண்டனங்கள். :p

மெளலி (மதுரையம்பதி) said...

நல்லாயிருக்கு கீதாம்மா....தொடரட்டும்...:)

மெளலி (மதுரையம்பதி) said...

வாதிராஜ முனினா...அப்படின்னு கன்னடத்துல அவர் சரிதத்தை சொல்லும் பாடல் ஒன்று இருக்கு....பிரபல கன்னட பக்தி பாடல் பாடுபவர் (பெயர் மறந்துடுத்து) கூட பாடியிருக்கார்....இந்த பதிவினை படித்ததும், அந்த பாடல் காதில் ஒலிக்கிறது. :)

Geetha Sambasivam said...

@KRS,நீங்க எல்லாம் போட்டு வச்ச துண்டை எடுத்துட்டு இல்லை பெரிய 18முழம் புடைவையாக இல்லை போடறேன், நீங்களும் துண்டு போட்டு வச்சிருக்கிறதைப் போடுங்க, நாங்களும் போடறோம், எக்கச்சக்க கமிட்மெண்ட்!! அடுத்தது அடுத்த வாரம் தான். இப்போ இல்லை! :P :P :P

Geetha Sambasivam said...

@அம்பி, இது கணேசன் எழுதிக் கொடுத்ததுனு நினைக்கறேன், சரியா??? :P :P

Geetha Sambasivam said...

@மதுரை, நீங்க சொல்ற பாட்டு, இங்கே பக்கத்திலே இருந்த கன்னடக் காரங்க பாடுவாங்க, ஆனால் அவங்க இல்லை, இப்போ, ம்ம்ம்ம்ம்ம்., புத்தகம் கூடத் தரேன்னு சொல்லி இருந்தாங்க, என் நேரம்! கிடைக்கலை!!! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

மெளலி (மதுரையம்பதி) said...

//@மதுரை, நீங்க சொல்ற பாட்டு, இங்கே பக்கத்திலே இருந்த கன்னடக் காரங்க பாடுவாங்க, ஆனால் அவங்க இல்லை, இப்போ, ம்ம்ம்ம்ம்ம்., புத்தகம் கூடத் தரேன்னு சொல்லி இருந்தாங்க, என் நேரம்! கிடைக்கலை!!! ம்ம்ம்ம்ம்ம்...//

உங்களுக்கு புஸ்தகம் தரேன்னு சொன்ன யாரும் தரமாட்டாங்க போல இருக்கு...:)

ஆமாம், இதுக்கு எதுக்கு இத்தனை 'ம்ம்ம்'...இழுவை?...:)

Expatguru said...

அரிய தகவலை அழகாக சொல்லி இருக்கிறீர்கள். அடுத்த பகுதியை சீக்கிரம் வெளியிடுங்கள்.

Geetha Sambasivam said...

@expatguru, அடுத்த வாரம் தான் அடுத்த பதிவு. இப்போ நேரம் இல்லை.

Kavinaya said...

அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் கீதாம்மா. நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ambi said...
தமிங்கலத்தில் பின்னூட்டம் போட்ட எம்மாழ்வாருக்கு கண்டனங்கள். :p//

கறைக்கண்டன் அருளாலே கண்டனங்களைத் துண்டனங்கள் செய்வோம்! :)

தமிழில் மறுமொழிந்தால் எம்மாழ்வார்!
தமிங்கலத்தில் கமென்ட்டினால் M-ஆழ்வார்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கீதா சாம்பசிவம் said...
@KRS,நீங்க எல்லாம் போட்டு வச்ச துண்டை எடுத்துட்டு இல்லை பெரிய 18முழம் புடைவையாக இல்லை போடறேன்//

ஆகா
என்னிடம் மிரட்டல் உருட்டல மட்டும் நடக்கவே நடக்காது!
அடுத்த வியாழன் நீங்களா நானா-ன்னு பாத்துடலாம் கீதாம்மா! பாத்துடலாம் :))

guru said...

இந்த கதையெல்லாம் எங்கே இருந்து தெரிந்துக் கொள்கிறீர்கள்.

புத்தங்கள் எங்கு கிடைக்கின்றன.

குமரன் (Kumaran) said...

வாதிராஜ யதிகள் பிறந்த வைபவத்தை மிக அழகாகச் சொன்னீர்கள் கீதாம்மா. மிக்க நன்றி.