சில பல "புரிதல்கள்" காரணமாக,
"ஆச்சார்ய ஹ்ருதயம் என்னும் வலைப்பூவில்" பதிவுகள் இடுவதை நிறுத்தி வைத்திருந்தேன்!
ஆனால் பெரியவர் திராச ஐயா, ஒரு கிருத்திகை தினத்தன்று, முருகனருள் வலைப்பூவில் திடீரென்று ஆக்ஞாபித்தார்! - "கேஆரெஸ், மீண்டும் ஆச்சார்ய ஹ்ருதயத்தில் எழுதத் துவங்குங்கள்"!
இதோ, அவர் மார்கழியில் இட்ட இந்தப் பதிவினையே எடுத்துக் கொண்டு மீண்டும் துவங்குகிறேன்!
ஆச்சாரம் என்றால் என்ன?
ஆச்சாரம், ஆசரிதி, ஆசரணை என்று எல்லாம் சொல்லப்படும்! அத்தனைக்கும் ஒரே பொருள் தான்! ஆச்சாரம் = ஒழுக்கம்!

சரிங்க, அப்போ, ஒழுக்கம்-ன்னா என்ன?
* "ஒழுங்கா" நான் சொல்லுறதைக் கேள்!
* "ஒழுங்கா" என் பேச்சுப்படி நட!
* "ஒழுங்காப்" பேசு!
* "ஒழுங்கா" எழுது!
- இதெல்லாமா ஒழுக்கம்?
"ஒழுகுதல்"-ன்னு வேற இதைச் சொல்றாங்க? வீட்டுக் கூரையில் இருந்து மழைத்தண்ணி ஒழுகுதலா? ஹா ஹா ஹா! :)
தமிழில் இருக்கும் அழகான காரணப் பெயர்களில், மிக மிக அழகானது, இந்த "ஒழுக்கம்"!
ஒழுகு = நட, கடைப்பிடி, குணம் (ஆற்றொழுக்கு-நீரோட்டம் போல போய்க்கொண்டே இருப்பது!)
* உயர்வான ஒன்றைக் குறித்துக் கொண்டு, அதில் ஒழுகுவதே ஒழுக்கம்!
* உயர்வான ஒன்றைப் பற்றி, "பேச மட்டும் செய்யாது, அதைக் கடைப்பிடிப்பதே" = ஒழுக்கம்! ஆச்சாரம்!
ஒழுக்கம்-ன்னா என்ன-ன்னு ஐயன் என்ன சொல்றாரு?
ஒழுக்கம் விழுப்பம் தரலான்! ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்!
* பெரியதை (விழுப்பம்) தருவது = ஒழுக்கம்!
* அதனால் ஒழுக்கம் உயிரை விட கடைப்பிடிக்கப்படும்! ஆச்சாரத்தை (ஒழுக்கத்தை) கடைப்பிடித்தே ஆகணும்-ன்னு வள்ளுவரே சொல்றாரு! :)
ஓ...பெரியதைத் தருவது தான் ஒழுக்கமா?
அப்போ எது பெரியது? = கடவுள் தான் பெரியது! இதில் என்ன சந்தேகம்?
எனவே கடவுள் பூசை எல்லாம் "ஒழுங்கா" கடைப்பிடிச்சே ஆகணும்! "எக்காரணம்" கொண்டும் ஒழுக்கம்=ஆச்சாரம் விட்டுறக் கூடாது! சரி தானே?
ஹிஹி! சரி தான்! ஆனால் பொறுமை! பொறுமை!
ஞானம் பற்றிப் பேசினா மட்டும் போதாது! அனுஷ்டானமும் ரொம்ப ரொம்ப முக்கியம்! ஆத்மார்த்தமான அனுஷ்டானம்!
ஞானம், அனுஷ்டானம் ரெண்டுமே வேண்டும்!

ஒழுக்கம் விழுப்பம் தரலான்! பெரியதைத் தருவது தானே ஒழுக்கம்? இப்போ எது பெரியது-க்கு வருவோம்! எது பெரியது?
என் அப்பனும் சுப்பனும் ஆன முருகப் பெருமான், இதே கேள்வியைத் தான் கேட்கிறான்! - "ஒளவையே, எது பெரியது?"
பெரியது கேட்கும் எரி தவழ் வேலோய்!-ன்னு வரிசையா லிஸ்ட் போடுகிறாள் தமிழ் மூதாட்டி!
பெரிது பெரிது புவனம் பெரிது!
புவனமோ நான்முகன் படைப்பு!
...
...
புவியோ அரவுக்கு ஒரு தலைப் பாரம்
அரவமோ உமையவள் சிறுவிரல் மோதிரம்
...
...
உமையோ இறையவர் பாகத்து ஒடுக்கம்!
இறைவரோ தொண்டர் தம் உள்ளத்து ஒடுக்கம்!
தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!
இப்போ சொல்லுங்க! எது பெரிது? கடவுள் பெரிதா? ஆமாம்! இல்லை-ன்னு சொல்லலை! கடவுள் = "பெரிது"! ஆனால் தொண்டர் = "பெரிதே"!!!
* கடவுள் = பெரி"து"!
* ஆனால், அடியார்களை கடவுளுக்கு ஆட்படுத்துதல் = பெரி"தே"!
இப்போ எல்லாத்தையும் ஒவ்வொன்னாக் கோர்த்துப் படிங்க!
* பெரியதைத் தருவது தான் ஒழுக்கம் (ஆச்சாரம்)! ஒழுக்கம் விழுப்பம் தரலான்!
* அடியார்கள் தான் "பெரிதே"!
* ஆக, அடியார்கள் என்னும் பெரிதைத் தருவது எதுவோ, அதுவே ஒழுக்கம் (ஆச்சாரம்)!
நித்ய கர்மாக்கள் ஆச்சாரம் தான்! அதை விடக் கூடாது! ஞானம்,அனுஷ்டானம் இரண்டுமே வேண்டும்! ஆனால்...ஆனால்....
* நித்ய கர்மாக்கள் = ஆச்சாரம்!
* அடியார்கள் = ஆச்சார-ஆச்சாரம்! சதாச்சாரம்!
நேயம் "சத்ஜன" சங்கே சித்தம் என்றார் ஜகத்குரு ஆதிசங்கரர்! அவர் வழி வந்தவர் அல்லவா காஞ்சி மாமுனிகள்! அவர் எப்படி இருப்பார்? ஆச்சாரத்தை விடுவாரா?
ஹிஹி! காஞ்சி மாமுனிகளா? ஆச்சாரத்தை விடவே மாட்டார்!
*** அடியவர்கள்=ஆச்சாரம்! - இந்த அடியவர் என்னும் ஆச்சாரத்தை விடவே மாட்டார்!
இனி திராச ஐயா இதைப் பற்றிப் பேசுவார்! அவர் இட்ட பழைய பதிவு இதோ! படிப்போம்! ஒழுகுவோம்!
மஹா பெரியவா என்று எல்லோரலும் அழைக்கப்பட்ட காஞ்சிமாமுனி பூத உடலை நீத்து இன்றோடு 13 ஆண்டுகள் முடிந்து விட்டது. அவரோடு இருந்த நாட்கள் நடந்த நிகழ்ச்சிகள் எதையும் மறக்க முடியவில்லை.
வெறும் சாஸ்திர சம்பிரதயாத்தை மட்டும் அவர் போதிக்க வில்லை. அதற்கு மேலும் சென்று சிறந்த மனிதாபிமானியாகத் திகழ்ந்தார்.அதற்கு தானே வழிகாட்டியாகவும் வாழ்ந்துகாட்டினார்
ஒரு சமயம் திருவாடனை என்ற ஊரிலிருந்து பெரியவர்களின் பக்தர் கூட்டம் அவரை தரிசிக்க வந்தது. பெரியவர்கள் அன்று காஷ்டமௌனம். பேசமாட்டார்கள்.
வாரத்தில் ஒருநாள் இது மாதிரி இருப்பார் 30 வருடங்களாக கடைபிடித்துவரும் விரதம். பிரதமராக இந்திராகாந்தி அவரைக் காண வந்தபோதும் இதை அவர் விட்டுக் கொடுக்கவில்லை. துறவிக்கு வேந்தன் துரும்புதான்.
வந்திருந்தவர்களில் சங்கரனும் ஒருவர். அவர் தேச விடுதலைக்காக போராடி ஆங்கிலேயரால் தடியடி பட்டு இருகண்களையும் இழந்தவர். மடத்து சிப்பந்தி ஒவ்வொருவரையும் பெரியாவாளுக்கு அறிமுகப் படுத்தினார் அவர்களுக்கு மௌனமாக ஆசி வழங்கினார். சங்கரன் முறை வந்ததும் அவரையும் அறிமுகப் செய்தார்கள்.
ஸ்வாமிகளுக்கு சங்கரனை நன்றாகத் தெரியும்.ஸ்வாமிகள் உடனே கம்பீரமான உரத்த குரலில்""என்ன சங்கரா சௌக்கியமா மனைவியும் குழந்தைகளும் சௌக்கியமா. இன்னும்விடாமல் தேசத்தொண்டு செய்து கொண்டு இருக்கிறாயா"" என்று கேட்டார்.
சங்கரனுக்கு மிகவும் சந்தோஷம்.பெரியவா பேசிவிட்டாரே என்று.
மடத்திலிருந்தவர்களுக்கு மிகவும் ஆச்சர்யமும் வருத்தமும் ஆச்சாரியர் தன்னுடைய விரதத்தை சங்கரனுக்குகாக முறித்து விட்டாரே என்று.
அவர்கள் எல்லோரும் பிரசாதம் வாங்கிக் கொண்டு சென்ற பிறகு மடத்து சிப்பந்திகள் ஸ்வாமிகளிடம் கேட்டார்கள் எதற்காக மௌனத்திலிருந்து விடுபட்டு பேசவேண்டும். எல்லாரையும் போலவே மௌனமாக அனுக்கிரஹம் செய்து இருக்கலாமே. சங்கரன் என்ன அவ்வளவு பெரியவனா?
ஸ்வாமிகள் சிரித்துக் கொண்டே சொன்னார்கள்.
""எல்லோரையும் போல சங்கரனை நடத்தக் கூடாது.அவனுக்கு கண்தெரியாது. என்னைப் பார்த்து ஆசி வாங்க வந்திருக்கிறான்.ஆனால் அவனால் என்னைப் பார்க்கமுடியாது .
நான் மௌனமாக ஆசீர்வாதம் செய்தால் அவனுக்குப் போய் சேராது.
அவனுக்கு வருத்தமாக இருக்கும் நான் அவனைப் பார்த்தேனா ஆசீர்வாதம் செய்தேனா என்று.
இந்த தேசத்துக்காக தன் கண்களையே தியாகம் செய்தவன் அவன்.
அவனுக்காக நான் என்னுடைய ஆச்சாரத்தை கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் ஒன்றும் குறைந்துவிடாது. அவனுடைய தியாகத்துக்கு முன்னால் என்னுடையது ஒன்றும் பெரிதல்ல""
இதைகேட்டதும் அங்கு கூடியிருந்தவர்கள் எல்லோரும் ஸ்வாமிகளின் மனிதாபிமானத்தை எண்ணி மகிழ்ந்தார்கள் - காஞ்சி மாமுனியின் கருணை!
காஞ்சி முனிகளை விடவா நாம் ஆச்சாரத்தில் விற்பன்னர்கள்?
அவர் ஹ்ருதயம் = ஆச்சார்ய ஹ்ருதயம்!
அவர் ஹ்ருதயம் = அடியவர் ஹ்ருதயம்!
நமக்குள் ஆயிரம் ஒழுக்க வேறுபாடுகள், அனுஷ்டான வேறுபாடுகள், கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்! ஆனால் ஹ்ருதயத்தில் அடியவர் வெறுப்பு என்பது மட்டும் கூடவே கூடாது! அது "ஆச்சாரம்" ஆகாது!
ஒழுக்கம் = விழுப்பம் தரலான்! பெரியதைத் தருவது தான் ஒழுக்கம்!
அடியார்கள் என்னும் பெரியதைத் தருவது தான் ஒழுக்கம் = ஆச்சாரம்!
இந்த அடியவர் ஆச்சாரத்தை "எக்காரணம்" கொண்டும்....இனி நாம் விட்டுக் கொடுக்கவே கூடாது என்று சங்கல்பித்துக் கொள்வோம்!

நாராயண! நாராயண!