Wednesday, December 17, 2008

ஸ்ரீ சமர்த்த ராமதாஸர் - பகுதி -2சமர்த்த ராமதாஸர் காசி, அயோத்தி, பிரயாகை, பிருந்தாவனம் என்று பல புண்ணிய க்ஷேத்திரங்களுக்கும் செல்கையில் காசியில் ஹனுமான்-காட் என்னும் இடத்தில் ஹனுமானுக்கு ஒரு கோவில் அமைத்திருக்கிறார். இன்றும் அந்த கோவில் மிகப் பிரசித்தியுடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. நாஸிக் திரும்பிய ராமதாஸர் தனது அன்னையின் வயோதிக நிலை அறிந்து ஜம்ப் கிராமத்திற்கு வந்து தமது ராம நாம ஜபத்தின் மூலமாக அன்னைக்கு கண் பார்வை கிடைக்கச் செய்ததாகச் சொல்லப்படுகிறது. தமது அன்னையின் அந்திம காலத்திற்குப் பின் மீண்டும் பிரயாணம் செய்திருக்கிறார். தஞ்சைக்கு வருகையில் கண்களை இழந்த ஸ்தபதிக்கு கண்ணொளி தந்திருக்கிறார். அந்த ஸ்தபதி மூலம் கல்லில் அழகிய இராமர் பட்டாபிஷேகச் சிலைனைச் செய்ய வைத்து தமது பூஜையில் அவற்றை வைத்திருந்திருக்கிறார். இந்த சிலா விக்கிரஹங்கள் ஸஜ்ஜன் -காட் என்னும் இடத்தில் ராமதாஸர் சமாதிக்கருகில் கோவிலில் வைத்து ஆராதனை செய்யப்படுகிறது

ஸ்ரீராமதாஸர் காலத்தில்தான் சத்ரபதி சிவாஜி முன்னேற்றம் அடைந்தது. சிவாஜி மன்னன் ராம தாசஸரைச் சந்தித்து அவர் ஆசி பெற்றிருக்கிறார். அவரை தன்னுடன் இருந்து நல்வழிப்படுத்த வேண்ட, ராமதாஸர் அரசர் அருகில் இருப்பதைத் தவிர்த்து பக்கத்தில் இருக்கும் ஒரு குன்றில் (ஸஜ்ஜன்-காட்) வசித்து வந்திருக்கிறார். இந்த இடத்தில் தான் ராமதாஸரின் சமாதித் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இவரது அந்திம காலத்தில் ஸ்ரீராமபிரானே பிரத்யக்ஷ தரிசனம் தந்து ஸன்யாச தீக்ஷையும், காஷாய வஸ்திரமும் அளித்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த வஸ்திரம் இன்றும் இவரது சமாதிக் கோவிலில் வைக்கப்பட்டிருக்கிறது.
இவர் மஹாராஷ்டிர பாஷையிலும், ஸம்ஸ்கிருதத்திலும் பல நூல்கள் எழுதியிருக்கிறார், அவை, தாஸபோதம், பஞ்சீகரணம், பீமரூபிசுலோகம், கருணாஷ்டகம், அமிருதகம், அமிருத பிந்து ராமாயணம் ஆகியவை. இந்த நூல்களைத் தவிர ஏராளமான கீர்த்தனங்கள், அபங்கங்களும் எழுதியிருக்கிறார். ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியும், கண்ணனும் உபதேசித்த கர்ம-பக்தி யோகங்களை தேச பக்தியுடன் சேர்த்து உபதேசித்தவர் ஸ்ரீ சமர்த்தர் என்று கூறுகின்றனர்.

இனி திரு. திரச அவர்கள் பதிவினைத் தொடருகிறார்...

ஸ்ரீ ஆஞ்சநேயரின் அவதாரமாக மஹாராஷ்டிரத்தில் தோன்றிய மஹான் 'ஸ்ரீ சமர்த்த ராமதாஸ் சுவாமிகள்' மாருதியைப் ப்ரத்யட்சமாகக் கண்டு, அவர் மூலமாக சாட்சாத் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் தரிசனத்தைப் பெற்று 'த்ரயோதசாக்ஷரி'யான 'ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்' என்ற மஹா மந்த்ரத்தை உபதேசித்து பூமியெல்லாம் தழைக்கச் செய்தார்.இவர் வாழ்ந்த காலம் சந்த் துக்காராம் வாழ்ந்த காலம்.

மாவீரன் சிவாஜியின் குரு. சிவாஜி தன் ராஜ்ஜியத்தையே தன் குருவான ராமதாசருக்கு அர்பணிக்க தயாராயிருந்தான் ஆனால் குரு ஏற்கவில்லை. ஒரு சமயம் குரு ராமதாசர் வீதியில்பிக்ஷை எடுத்துக்கொண்டு வருவதை சிவாஜி அரண்மனையிலிருந்து பார்த்தார். உடனே தன் நண்பன்பாலஜியிடம் ஒரு பேப்பரில் ஏதோ எழுதி அதை குருவின் கமண்டலத்தில் போடச் சொன்னார்.அவரும் அதை ராமதாஸரின் கமண்டலத்தில் இட்டார். அதில் என்ன எழுதியிருந்தது தெரியுமா? சிவாஜி மகாராஜ் தன்னுடைய அகண்ட ரஜ்ஜியத்தை குருவிற்கு தானமாக கொடுத்துவிட்டதாக இருந்தது. குரு ராமதாஸரும் சரி என்று சொல்லிவிட்டு சிவாஜி இப்போது மன்னன் இல்லை என்னுடன் பிக்ஷை எடுக்க வரச்சொல் என்றார். சிவாஜியும் ராஜ உடையை களைந்து விட்டு குருவுடன் கமண்டலத்தை ஏந்திக்கொண்டு பிக்ஷை எடுத்தார்.மக்கள் அனைவரும் பிக்ஷை இட்டார்கள். அதை எடுத்துவந்து உணவாக்கி குருவுக்கு அளித்துவிட்டு அவர் உண்ட மிச்சத்தை உண்டார் சிவாஜி. மறுநாள் காலை சிவாஜி குருவிடம் கேட்டார் என்னை பிச்சைக்காரனாக்கிவிட்டீர்கள் மேலும் என்ன செய்வதாக உத்தேசம் என்றார்.குரு சிரித்துக்கொண்டே சொன்னார் ""இனி நான் சொல்லும் வேலையைத்தான் செய்ய வேண்டும்"" என்றார். சிவாஜியும் அப்படியே ஆகட்டும் குருவே என்றார். ராமதாஸர் உடனே சிவாஜியிடம்"" இந்த அகண்ட ராஜ்ஜ்யத்தை மக்களின் பிரநிதியாக இருந்த ஆட்சிபுரிவாயாக"" என்றார். இப்படி கூறிவிட்டு தன்னுடைய காவி வஸ்த்திரத்திலிருந்து ஒரு பகுதியை கிழித்து கொடுத்து இதையே உனது கொடியாகக் கொண்டு பரிபாலனம் செய்.என்று ஆசி வழங்கினார்.சிவாஜியும் குரு கூறியபடியே அதைக் கொடியாக்கொண்டு மிகப் பெரிய ராஜியத்தை உருவாக்கினான்.பின்னர் ராமதாஸர் தேசம் முழுவதும் தீர்த்த யாத்திரை மேற்கொண்டு பல இடங்களுக்குச் சென்றார். தஞ்சைக்கும் வந்து ஒரு மடத்தை நிறுவினார். கடைசியாக 1642 இல் சதராவுக்கு அருகில் உள்ள சஜ்ஜ்வட் என்ற ஊரில் ஜீவ சமாதி ஆனார். அவர் இந்த உலக வாழ்வை நீத்தபோது ஒரு பிரகாசமான ஒளி அவர் உடம்பிலிருந்து கிளம்பி மேலே சென்றது.. பணி நிமித்தமாக சதராவிற்கு சென்று 20 நாட்க்கள் தங்கும் வாய்ப்பு கிடைத்த போது அவருடைய சமாதிக்குச் செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. நம்ப ஊர் மாதிரி இல்லை மிக பக்தியுடன் மிகவும் நேர்த்தியாக வைத்துள்ளார்கள். எபொழுதும் ராமஜபம் நடந்து கொண்டு இருக்கிறது

இவர் ராமனின் மீதும் ஆஞ்சநேயரின் மீதும் பல பாடல்களை இயற்றியுள்ளார். அப்படி அவர் ராமனின் மீது பாடிய ஒரு பாடலை திரு. பீம்ஷிங் ஜோஷி குரலில்


ஸ்ரீ ராம், ஜெய்-ராம் ஜெய்-ஜெய்-ராம்....


ஸ்ரீ சமர்த்த ராமதாசர் திருவடிகளே சரணம்.

7 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நம்ப ஊர் மாதிரி இல்லை மிக பக்தியுடன் மிகவும் நேர்த்தியாக வைத்துள்ளார்கள். எபொழுதும் ராமஜபம் நடந்து கொண்டு இருக்கிறது//

நல்லது திராச ஐயா! ஜீவ பிருந்தாவனங்களை ஆலயத்தைக் காட்டிலும் நேர்த்தியாக வைத்துக் கொள்வது மிகவும் சிறப்பான ஒன்று!

//ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியும், கண்ணனும் உபதேசித்த கர்ம-பக்தி யோகங்களை//

இராமன் கர்ம யோகம் வேற சொல்லி இருக்கானா? ஆகா! எங்கே? அறியத் தாருங்களேன்!

//உபதேசித்த கர்ம-பக்தி யோகங்களை தேச பக்தியுடன் சேர்த்து//

ஈஸ்வரா! இப்படி கர்ம யோகத்துடன் மற்றதை எல்லாம் "சேர்க்கலாகுமோ"? :))

குமரன் (Kumaran) said...

சமர்த்த ராமதாஸ் மஹராஜ்கி ஜெய்!

கபீரன்பன் said...

படித்தும் கேட்டும் மகிழ்ந்தேன்.

ராமதாஸர் வரலாறுக்கும் அற்புதமான அவருடைய அபங்க்-கிற்கும் மிக்க நன்றி, இருவருக்கும். :)

Kavinaya said...

சிவாஜியின் குருபக்தியே பக்தி. சமர்த்தராமதாஸரின் திருவடிகள் சரணம். நன்றி தி.ரா.ச. ஐயா, மற்றும் மௌலி.

jeevagv said...

மஹாராஷ்டிரம், ஹிந்து மகாணம் (பாரதியார் இப்படிக் குறிப்பிடுவார்) என இனம் காணப்படுவதற்கான அடித்தளம் இதுபோன்ற நிகழ்வுகளால் போலும்!

Venkatasubramanian said...

சமர்த்த ராமதாசர் சரித்திரம் ஸ்ரீ மகா பக்த விஜயம் என்ற ஒப்பற்ற நூலிலும் உள்ளது. இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலும் அம் மஹானை இளையவர்கள் நினைத்துப் பார்ப்பது பரவசம் ஆன ஒன்றே. வளர்க இத்தொண்டு.

அவர் அளித்த மந்திரம் "ஸ்ரீ ராம் ஜெய் ராம், ஜெய் ஜெய் ராம் " . இந்த மந்திரத்திற்கு குரு உபதேசம் தேவை இல்லை என்றும் அருளியுள்ளார். ஒவ்வொரு மராட்டியனும் இந்த மந்திரத்தை ஜபித்து கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மஹாராஷ்டிரத்தில் ஒருவருக்கொருவர் சந்திக்கும் போது " ராம் ராம்" மற்றும் , "ஜெய் ராம்ஜி கி" போன்ற வார்த்தைகளால் மட்டுமே மரியாதை செய்ய வேண்டும் என்று ஏற்படுத்தினார்.

இவரை ஆஞ்சநேயர் காட்டில் (ஏன் காட்டிற்கு ஓடினார் என்பது இன்னொரு விருத்தாந்தம்) கண்ட போது, அவரை ஒரு பாழடைந்த ராமர் ஆலயத்திற்கு அழைத்துச் சென்று அங்கே ராமபிரானைப் பார் என்று கட்டினாராம். இவருக்கோ தெரியவில்லை. அப்போது ஹனுமார், "ஒ , இவனுக்கு இன்னும் குரு உபதேசம் ஆகவில்லை ! அதனால் தான் இவன் அண்ணலைப் பார்க்க முடியவில்லை" என்று உணர்ந்து , பிறகு, அவருக்கு சம்ஸ்காரங்களை செய்வித்தார். பிறகே ஸ்ரீ ராமனைத் தரிசித்தார் என ஓடுகிறது அவர் திவ்விய வரலாறு.

R.DEVARAJAN said...

தஞ்சை ஸ்வாமிநாத ஆத்ரேயர் அவர்கள் ஸமர்த்த ராமதாஸர்
பற்றிய நூல் ஒன்றை அண்மையில் எழுதியிருப்பதாகத் தெரிகிறது.
பங்களூரு நிறுவனம் ஒன்று அதை வெளியிட்டிருப்பதாகவும் தெரிகிறது.
ஆத்ரேயர் மணிக்கொடி எழுத்தாளர்களோடு தொடர்பில் இருந்தவர்.
நாமஜப நியமத்தில் ஊறியவர்.
இப்புத்தகம் பற்றிய தகவல் கிடைத்தால் தெரிவிக்க வேண்டுகிறேன்.

தேவ்