Thursday, March 13, 2008

குருவின் ஆணையை மீறினால் தர்மம் காக்குமா?
மன்னன் மகாபலியின் அரசவை. மன்னன் தனக்கு உரிய சிங்காதனத்தில் அமர்ந்திருக்கிறான். வேள்வி ஒன்றைத் தொடங்கி உள்ளான் மன்னன். மூவுலகையும் ஆளும் மகாபலிச் சக்கரவர்த்தியின் வேள்வி என்றால் சும்மாவா? இந்திர லோகம், சந்திர லோகம், பிரம்ம லோகம், பூலோகம், பாதாளம், என்று அனைத்து உலக மக்களுக்கும் தானங்கள், மரியாதைகள் செய்யப் படுகின்றன. வேள்வி வெகு விமரிசையாக நடைபெறுகிறது. வேள்வி நடக்கும் விமரிசையைப் பார்த்தால் சீக்கிரம் முடியும் என்பதோடு மட்டுமின்றி, தேவேந்திரனுக்கும் ஆபத்து வரும் எனப் புரிகின்றது. என்ன செய்வது? தேவேந்திரன் யோசித்து, பிரம்மாவைப் பணிகின்றான்.
பிரம்மா சொல்கின்றார். "தேவேந்திரா, மகாபலி, சிறந்த அரசன், மகா புத்திமான், பக்திமானும் கூட. ஆகவே அவனுக்கு வேண்டிய வரங்களைக் கொடுக்காமல் இருக்க முடியாது. தேவர்கள் ஆன உங்களைத் தவிர மற்றவர்க்குத் தீங்கும் செய்யாதவன் அவன். ஆகவே அவனைத் தந்திரத்தால் தான் வெல்ல வேண்டும். அவன் செய்யும் தர்மம் அவனைக் காக்கும்." என்று சொல்லி விடுகின்றார். இந்திரனும் மகாவிஸ்க்ணுவைப் போய்ப் பணிய அவரும், "தேவேந்திர, மிக நல்லவன் ஒருவன் செய்யும் வேள்வி பூலோகத்துக்கே நல்லது, என்றாலும், தேவர்கள் ஆன உங்களுக்கு அவன் தொடர்ந்து கெடுதலே செய்து வருவதாலும், அவனின் தர்மத்தின் படி அவனுக்கு முக்தி பெறுவதற்கு உரிய நேரம் வந்து விட்ட படியாலும், இதில் நானே நேரில் சென்று அவனுக்கு முக்தி கொடுக்க உள்ளேன்." என்றார்.

பின்னர் காசியபரின் மகனாய்ப் பிறந்த மகாவிஷ்ணு மிக மிகக் குள்ளமான ஒரு பிரம்மச்சாரியாக இருந்து வருகின்றார். அப்போது தான் ஆசிரமத்தில் அனைவரும் பேசிக் கொள்கின்றனர். "மகாபலி வேள்வியை முடிக்கப் போகிறானாம். அனைவருக்கும் இல்லை என்னாது, கொடுத்து வருகிறானாம். இப்போது எல்லாருக்கும், எல்லாமும் கொடுத்து முடித்தாகி விட்டது. இனி வேள்வி முடிய வேண்டியது ஒன்றே பாக்கி" என்று பேசிக் கொண்டார்கள். மாயவன் குறு நகை புரிந்தான். அவன் காத்திருந்த தருணமும் வந்து விட்டது. வேள்வி நடக்கும் வேள்விச்சாலைக்குச் சென்றான். எப்படி? கையிலே தாழங்குடை. பிரம்மச் சாரி என்பதைக் குறிக்கும் தண்டம். வேள்விச் சாலைக்கு வந்து சேருகிறான். மிகுந்த களைப்பு என்பது போல் ஒரு நடிப்பு. உலகத்தவர் அனைவரையும் பிறப்பித்து அன்றாடம் நடிக்க வைப்பவனுக்கு நடிப்பா ஒரு பொருட்டு?

மகா பலி யாக முடிவுக்கான பூர்ணாஹுதியை இட இன்னும் சிறிது நேரமே உள்ளது. அப்போது மன்னன் முன் போய் நின்றான் குள்ள வாமனன். தன் முன் தோன்றிய குள்ள வாமனனைக் கண்டான், மகாபலிச் சக்கரவர்த்தி. மனதில் நினைத்தான், "மிகச் சிறு பிள்ளை! என்னவோ வேண்டி வந்திருக்கிறான். நம்மிடம் இப்போது ஒன்றுமே இல்லையே?" குழப்பத்துடன் கேட்கிறான், "பிள்ளாய், என்ன வேண்டும் உனக்கு?" என. அவனும் சொல்கின்றான், "மகாராஜாவே, என் காலடியால் அளக்கப் பட்ட மூன்று காலடி மண் வேண்டும் எனக்கு, இது கொடுத்தால் போதும்." அப்போது அங்கே வருகின்றார் குல குரு சுக்கிராச்சாரியார். வேள்வி நடை பெறுவதே அவர் தலைமையில் தான். பூர்ண ஆஹுதிக்குத் தயார் நிலைமையில் மன்னனை அழைத்துச் செல்ல வருகின்றார். வந்தவருக்கு உடனேயே புரிந்து விடுகின்றது, இங்கே ஒரு நாடகம் நடக்கிறது என. வந்தவன் மாயவன், மாயக் கள்ளன், அந்த நாராயணன், என்பதும் தெரிய வருகிறது அவருக்கு.

அக்காலத்தில் மட்டுமில்லாமல், எக்காலத்திலும் குரு என்றவர் ஆணை இட்டால் உடனேயே அதைச் செய்து முடிக்க வேண்டும் என்பதே அனைவரும் அறிந்த செய்தி அல்லவா? அப்போது தான் குருவருள் கிட்டும், குருவருள் கிட்டினால் தான் திரு அருள் என்றும் சொல்லுவார்கள். ஆகவே ஆணை இட்டார் மகாபலியிடம், இந்தப் பிரம்மச்சாரி எதைக் கேட்டாலும் கொடுக்காதே, இது உன் குருவின் ஆணை என. ஆனால் மகாபலியின் மனதிலோ, குருவின் ஆணையை விடத் தான் கொடுத்த வாக்குறுதியும், அதைக் காப்பாற்ற வேண்டும் என்ற தர்மமுமே மேலோங்கி இருந்தது. ஆகவே தர்மத்தையும், சொன்ன சொல்லைக் காப்பாற்றவும் எண்ணிய மகாபலிச் சக்கரவர்த்தி தன் கையில் கமண்டலத்தை வாங்கி நீரால் தாரை வார்த்து வாமனன் திருவடியால் மூவுலகை அளக்கத் தொடங்குகிறான். சுக்ராச்சாரியாரோ பதற்றத்தோடு கமண்டலத்தின் வாயை ஒரு வண்டின் உருவில் அடைக்க முயலுகின்றார். மாயவனா அசருவான். அதை ஒரு த்ர்ப்பைக் குச்சியால் குத்தி வண்டை அகற்றி விட்டு விஸ்வரூபம் எடுக்கின்றான். முக்தி அடைய வேண்டிய நிலையில் இருந்த மகாபலிச் சக்கரவர்த்தியும் விஸ்வரூபத்தில் திளத்து மனம் மயங்கி தன் தலையைத் தாழ்த்துகின்றான் இறைவன் திருவடியில். திரு அருள் பூரணமாகக் கிட்டியது.

சாதாரணமாகக் குருவின் வார்த்தையைத் தட்டக் கூடாது என்று இருந்தாலும் இது தனிப்பட்ட தர்மம் ஆகக் கடைப் பிடிக்கப் பட்டு இன்றளவும் குருவின் வார்த்தையை மீறிய மகாபலிச்சக்கரவர்த்தி அதற்காகத் தண்டிக்கப் படாமல், விசேஷமாய்த் திரு அருள் பெற மட்டுமின்றி தர்மத்தைக் காப்பாற்றவும் குருவின் ஆணையை மீறியதற்காக அவன் கொண்டாடப் படுகின்றான். \\

"பொதுவாக குருவானவர் என்ன ஆணை இடுகின்றாரோ அதை மாணாக்கர்கள் பின்பற்ற வேண்டியதே அவர்கள் கடமை ஆகும். ஆனால் குருவானவர் மாணவனின் தவறைச் சுட்டிக் காட்டி அவனை நல்வழிப் படுத்த வேண்டும். இங்கே சுக்ராச்சாரியார் அவ்வாறு செய்யாமல் மகாபலி மேலும், மேலும் தவறான பாதையில் செல்வதையே மறைமுகமாய் ஆதரிக்கிறார். ஆனால் அரச தர்மத்தையும், குடிமக்கள் பரிபாலனமும் நன்கு செய்து வந்த மகாபலியோ எது தர்மம்? என்பதை உணர்ந்தவனாய், இந்த இடத்தில் , குருவின் ஆணையை ஏற்றுத் தான் உயிர் பிழைப்பதைக் காட்டிலும், தர்மத்தை நிலை நாட்டுவதே முக்கியம் என்று உணருகிறான். ஒரு குருவானவர் எப்படி இருக்கக் கூடாது என்பதைச் சுட்டும் அதே சமயம், மாணாக்கன் தர்மத்தைக் காப்பாற்ற குருவின் ஆணையை, அது தவறானதாய் இருக்கும் பட்சத்தில் மீறலாம் என்றும் காட்டுகிறது, இந்த சம்பவம்."

8 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கீதாம்மா.

வந்தவுடன் கதையா?, கலக்குங்க... :-)

Geetha Sambasivam said...

என்னத்தைச் சொல்றது? மெளலியிடம் நான் எழுதலை, என்னை விட்டுடுங்கன்னு சொன்னாக் கேட்கலை, விதி வலியது! பாவம், மெளலியும், திராச, சாரும், ஏதோ ஆன்மீகமாய் குருவே சகலமும் என்ற பாணியில் எழுதினா நான் வந்து "மொக்கை"யாக எழுதித் தள்ளப் போறேன், அவங்க தலைவிதி இப்படி இருந்தா யார் என்ன செய்ய முடியும்? :))))))))))

தி. ரா. ச.(T.R.C.) said...

@ கீதா மேடம் வாங்க.குரு ஆணையை மீறமுடியுமா என்பது ஒருபக்கம் ஆனா உங்க ஆணையை மீற முடியாது

குமரன் (Kumaran) said...

அருமையான கதையை அருமையாச் சொன்னீர்கள் கீதாம்மா. தர்மஸ்ய ப்ரபுர் அச்யுத: - அந்த தருமத்தின் தலைவனே வந்திருக்கும் போது தருமம் எது என்பது மிக நன்றாக அரக்கர் தலைவனுக்குத் தெரிந்துவிட்டது போலும். அசுரகுருவே தடுத்தாலும் கள்ள வாமனனுக்குத் தாரை வார்த்து ஓங்கி உலகளந்த உத்தமன் ஆக்கிவிட்டான்.

ambi said...

அட இந்த கதையை இப்படி கூட யூஸ் பண்ணிக்க முடியுமா? நல்லா இருக்கு. :))


//மெளலியிடம் நான் எழுதலை, என்னை விட்டுடுங்கன்னு சொன்னாக் கேட்கலை, விதி வலியது!//

இங்க பாருடா! தன்னடக்கமாம். :p

Geetha Sambasivam said...

இன்னிக்கு இந்த வலைப்பக்கத்துக்கு வரலாம்னு க்ளிக்கினால், அப்படி ஒண்ணு இல்லவே இல்லனு செய்தி வந்துச்சு, அப்புறம் எப்படியோ ஒரு மாதிரியா வந்து சேர்ந்தேன்! :P

திவாண்ணா said...

ஓ! பிச்சை எடுத்த பெருமாள் பத்தி எழுதியாச்சா?
சுக்கிராச்சார்யார் செய்தது அவர் நோக்கில சரிதான். சிஷ்யனுக்கு நல்லது கெட்டது எதுன்னு பாத்துதானே செய்வாங்க? சாதாரணமாக விஷ்ணு சிவன் பிரம்மா எல்லாம் தேவர்கள் பக்கம்தான் சாய்வாங்க. அதனால அசுர ராஜாக்கு கெடுதல்தான் ஏற்படும். அதனால கொடுக்காதே ன்னு சொன்னது சரிதான்.

cheena (சீனா) said...

குரு தன் சீடர்களின் நலன் கருதியே ஆணை இடுவார். அதனை ஏற்பதும் ஏற்காததும் சீடர்கள் முடிவே ! இம்மாதிரி தருணங்களில், குருவின் ஆணையை மீற சீடன் முடிவெடுத்தால், அதன் விளைவுகளுக்கு குரு பொறுப்பேற்க இயலாது. மீறுவது தவறல்ல