Wednesday, March 19, 2008

குருவிடம் சில கேள்விகள் - 2



கேள்வி : குருவை அடைவதிலும், ஆன்மீக வாழ்வை நடத்துவதிலும் விருப்பமுள்ளவன் குருவை அடைவதற்கு முன்பு ஆன்மீக சாதனை செய்ய வேண்டுமென்றால் என்ன செய்யலாம்?.


பதில் : மனதால் இறைவனை பூஜிக்கலாம், ஏதேனும் மந்திரங்கள்/திருமுறைகள் தெரிந்தால் அதனை ஜபிக்கலாம். மனதால் ஈஸ்வரனை பூஜிக்க நியமங்களில்லை, எனவே சிவ மானஸ பூஜை போன்றவற்றை செய்யலாம். செய்யும் எல்லா செயல்களின் பலன்களையும் இறைவனுக்கு அர்பணித்து இறைபக்தியை வளர்ப்பது நல்லது. விவேகம் மூலமாக தீவிரமான வைராக்கியத்தை பெற வேண்டும். சிரத்தையுடன் இறைவனைப் பிரார்த்தித்தால் ஸத்குருவை அடையும்படி செய்வான்.


கேள்வி : லெளகீக வாழ்வில் ஈடுபட்டுள்ளவனுக்கு குருவின் உபதேசம் தேவையா?


பதில் : வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைத்தியம் எவ்வளவு தேவையோ அது போல லெளகீகத்தில் இருப்பவர்களுக்கு குரு அவசியம். லெளகீக வாழ்வில் இருப்பவன் அவன் எதிர்பார்க்கும் அளவிற்கு இன்பம் பெருகிறானா?, இல்லையே!. அவன் எதிர்பார்க்கும் அளவிலும் அதற்கு மேலுமாக ஒருவன் இன்பம், அமைதி போன்றவறை அடைய ஒரு வழிகாட்டி வேண்டுமல்லவா?. தத்துவத்தை அறிந்தவரின் ஆசி மிக பலமுள்ளது. ஆகையால் எப்படி வாழ்ந்தாலும் ஒரு மஹானின் அருளும் உபதேசமும் பெறுவது நல்லது.


கேள்வி : தன் மனதில் உள்ள எல்லாவற்றையும் குருவிடம் சொல்வதில் மக்களுக்கு தயக்கம் இருக்கிறது. இதனால், சீடன் தன் மனதிலிருக்கும் எல்லாவற்றையும் குருவிடம் கூறுவதில்லை. இது சரியா?, இவ்வாறு இருப்பதால் எவ்விதமான பலன் அடைவான்.


பதில்: ஒரு வைத்தியனிடம் செல்லும்போது தனக்கு வந்திருக்கும் வியாதியினை மறைத்தல் முட்டாள் தனம் அல்லவா?. அது போலவே சீடன் குருவிடன் செல்லும் சமயத்தில் தனது கஷ்டங்களை மனம் விட்டு கூறுதல் வேண்டும். சரணாகதி பண்ணும் சீடன் தனது சுக-துக்கங்களை குருவிடம் சமர்பித்தல் என்பதே இது. சரி, சீடன் அவ்வாறு செய்யவில்லை என்றாலும், குரு தனது தபோ பலத்தாலும், மெய்யுணர்வாலும் சீடனுக்கு உபதேசிக்கும் எதுவும் அவனது கஷ்டங்களில் இருந்து சமனப்படுத்திடும். உத்தம சீடன் குருவின் ஆக்ஞையின்படி நடப்பானே தவிர, அக்ஞையினை ஆராயவோ, அல்லது தன்னால் இயலுமா என்றெல்லாம் சிந்திக்காது செயலில் இறங்கிடுவான். இதற்கு ஹஸ்தாமலகர் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. இவ்வாறாக குருவின் சொல்படி நடக்கிறான் என்பதால் அவனுக்கு சொந்த புத்தி இல்லை என்று அர்த்தமல்ல, தன்னைக் காட்டிலும் உத்தம சக்தியுடைய குருவிடம், சரணாகதி பண்ணியதாகத்தான் பொருள்.



கேள்வி : குருவின் அருளிருந்த்தால் மஹாபாவியும் முன்னேற முடியுமா?.


பதில் : இறைவன் மற்றும் குருவின் அனுக்ரஹம் கிடைத்தால் எப்படிப்பட்டவனும் முன்னேறலாம். ஆனால் குருவின் அருளால் மட்டுமே முன்னேறலாம் என்று இல்லாமல் தனது முயற்சியும் இருக்க வேண்டும்.


கேள்வி : ஒருவன் முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் பகவானின் அருளைப் பெருகிறான் என்றால் அருளூம் புண்ணியத்தால் வாங்கப்படும் பொருள் போல ஆகிவிடுகிறதே?.


பதில் : ஒரு தீபத்தின் ஒளி சுற்றியுள்ள இடங்களில் விழுகிறது. ஒருவன் அந்த ஒளியினை பயன்படுத்தி புத்தகங்களைப் படித்துக் கொள்ளலாம். மற்றொருவன் அதில் கவனம் செலுத்தாமல் தூங்கி காலம் கழிக்கலாம். அந்த தீபத்தைப் போலவே குரு எப்போதும், எல்லோருக்கும் அருள்புரிந்து வருகிறார். அவனவன் மனநிலையைப் பொறுத்துப் பயனடைவான். குளத்திற்கு பெரிய குடம் கொண்டு சென்றால் அது முழுவதுமாக நிறைய நீர் எடுத்து வர இயலும், ஆனால் கொண்டு சென்றது சிறிய பாத்திரமாக இருந்தால் நீரும் குறைவாகவே எடுத்து வர இயலுமல்லவா?. முற்பிறவியில் நல்லது செய்திருந்தால் மஹான்/குருவின் ஸஹவாசம் கிடைக்கும். ஆனால் கிடைத்ததை உபயோகப்படுத்திக் கொள்ள தெரியவேண்டும். இன்னொருவனுக்கு குருவின் தொடர்ச்சியான ஸஹவாசம் கிடைக்கவில்லை என்றாலும், சிறிதே காலம் ஏற்பட்ட தொடர்பினைப் பயன்படுத்தி, விசேஷ அனுக்கிரஹத்தை பெற்று இருக்கலாம்.


கேள்வி : குருவின் சன்னிதியில் சீடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?

பதில் : குருவிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் குருவுக்கு சேவை செய்ய வேண்டும். அவ்வாறு சேவை செய்யவும் அவரிடம் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். மனதில் ஏதெனும் சந்தேகம் எற்பட்டிருந்தால் குரு வேறு காரியங்களில் ஈடுபடாதிருக்கும் நேரத்தில் அவரிடம் கேட்கலாம். குருவிடம் பாடம் கற்றுக் கொள்வது நமது பாக்கியம் என்று கருதி, பாடத்தில் சிரத்தை வைத்துக் கேட்க வேண்டும். அவர் தரும் உபதேசங்களை மறக்காமல் மனதிருந்த்தி வாழ்க்கையினை அந்த உபதேசத்தின்படி நடக்க வேண்டும்.


5 comments:

Geetha Sambasivam said...

மெளலி, இந்த அளவுக்கு என்னாலே எழுத முடியுமா??????? ம்ம்ம்ம்ம்ம் உங்க கிட்டே ஒத்துண்டு தப்புப் பண்ணிட்டேனோன்னு நினைக்கிறேன். :(

குமரன் (Kumaran) said...

பத்மபாதரின் எடுத்துக்காட்டை மிக நன்றாகச் சொல்லியிருக்கிறார் ஆசார்யர். கல்லூரி காலத்தில் படித்த ஆசாரியரின் கேள்வி பதிலகளை மீண்டும் படிப்பதில் மகிழ்ச்சி. இரு பகுதிகளை இன்னும் வைத்திருக்கிறேன். எடுத்துப் படிக்கத் தான் இயல்வதில்லை. நீங்கள் இப்படி எடுத்துக் கொடுப்பதில் மிக்க மகிழ்ச்சி. நன்றிகள் மௌலி.

கீதையில் எப்படி குருவிடம் கற்றுக் கொள்ள வேண்டும் - பரிப்ரச்னேன சேவயா - என்று சொல்லியிருப்பதை நன்கு விளக்கியிருக்கிறார் ஆசார்யர்.

மெளலி (மதுரையம்பதி) said...

//பரிப்ரச்னேன சேவயா - என்று சொல்லியிருப்பதை நன்கு விளக்கியிருக்கிறார் ஆசார்யர்//

அதே அதே குமரன். வருகைக்கும் நன்றி.

மெளலி (மதுரையம்பதி) said...

கீதாம்மா,

இதெல்லாம் நான் எழுதியது அல்ல. ஆச்சார்யார் அருளுரை. அவ்வளவே. :-)

தென்றல்sankar said...

aanmeegathil mulkivitteean