Monday, May 19, 2008

காஞ்சி காமாக்ஷியின் அருந்தவப் புதல்வன்


இன்று வைசாக அனுஷம் நாள். 1894-ஆம் ஆண்டு இதே மே மாதம் 20 ஆம் தேதியன்றுதான் மாஹா பெரியவா என்று எல்லோராலும் அழைக்கப்படும் காஞ்சி மடத்தின் 68 வது பீடாதிபதியான மகான் அவதரித்ததினம். இப்பொழுதும் அதே மே மாதத்தில் 20 ஆம் தேதி அனுஷம் வருவது ஒரு சிறப்பு நிகழ்ச்சியாகும்.

அவரைப்பற்றி நிறைய நிகழ்ச்சிகளை இன்நன்நாளில் நினைவு கூறலாம். அதில் எனக்கு தெரிந்த நான்கு நிகழ்ச்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இந்தப் பதிவு. இந்தப் பதிவில் பரமாசாரியரைப் பற்றிய வீடியோ பதிவுகளையும் நான்கு பகுதியாகச் சேர்த்திருக்கிறேன் அதையும் கண்டு அன்னாரின் ஆசிக்கு பாத்திரமாகும்படி கேட்டுக்கொள்கிறேன்

மிளிரும் நகைச்சுவை.

நமக்கெல்லாம் சன்யாசி என்றால் எப்பொழுதும் பூஜை, உபன்யாஸம் என்று மிகவும் கடுமையாக இருப்பார்கள் என்ற எண்ணம் உணடு. ஆனால் மஹா பெரியவாளோ சிறந்த நகைச்சுவையாளர். இதோ ஒரு சின்ன உதாரணம்.

ஒருமுறை ஸ்வாமிகள் மஹாரஷ்ராவில் ஒரு கிராமத்தின் சாலையோரம் முகாமிட்டிருந்தார்கள். அப்போது அந்த வழியாக நான்கு பேர்கள் ஒரு யானையின் மீது ஏறிக்கொண்டு சென்றுகொண்டிருந்தார்கள். ஸ்வாமிகள் அவர்களைப்பார்த்ததும் மடத்தின் சிப்பந்தியைக் கூப்பிட்டு அவர்களை அழைத்துவரச் சொன்னார்கள். அவர்களும் யானையைவிட்டு இறங்கிவந்து ஸ்வாமிகளை சேவித்துவிட்டு கைகட்டி நின்றார்கள். ஸ்வாமிகள் அவர்களைப் பார்த்து" யார் நீங்கள்? யானையின்மீது ஏறிக்கொண்டு எங்கு செல்கிறீர்கள்?"என்று வினவினார். அவர்களும் பவ்யமாக "ஸ்வாமிகளே நாங்கள் ஒருகாலத்தில் செல்வந்தராக இருந்தோம். எங்கள் தகப்பனார் எல்லாவற்றையும் தானம் தருமம் செய்து பின்னர் எஞ்சிய யானையை எங்களுக்கு அளித்து அதன் மூலம் பிழைத்துக்கொள்ளச் சொன்னார். நாங்களும் அதன் மீது ஏறிக்கொண்டு ஊர் ஊராகச் செல்வோம்.பக்திப்பாடல்கள் பாடுவோம்,புராணக் கதைகளைச் சொல்லுவோம். எங்களுக்கும் பொருள் கிடைக்கும் யானைக்கும் தீனி கிடைக்கும் இப்படி எங்கள் ஜீவன்ம் செல்லுகிறது என்றார்கள். அதற்கு ஆசார்ய ஸ்வாமிகள் புன்சிரிப்புடன் கூறினார்" இங்கேயும் இதான் நடக்கிறது. இவா என்னை யானை மாதிரி ஊர் ஊராக அழைத்து கொண்டு செல்கிறார்கள். நானும் அங்கே அங்கே போய் உபன்யாஸம் செய்கிறேன் ஸ்லோகங்களைப் பாடுகிறேன். போற இடத்தில இவாளுக்கும் சாப்பாடு பணம் எல்லாம் கிடைக்கிறது. எனக்கும் பூஜை செய்ய இடம் பக்தர்கள் எல்லாம் கிடைக்கிறது. நம்மரெண்டு பேருக்கும் ஒரே தொழில்தான்"' என்றார் மாஹாஸ்வாமிகள். கூடியிருந்த பக்தர்கள் ஸ்வாமியின் நகைச்சுவை உணர்ச்சியையும் பக்தர்களை தனக்கு சாமானமாக பாவிக்கும் உயர்ந்த உள்ளத்தையும் கண்டு மெய்சிலிர்த்தார்கள்-

ஓளிரும் தன்னடக்கம்
ஒருமுறை சென்னையில் ஹிந்துமத மாநாடு ஒன்று நடைபெற்றது. அதில் எல்லா மடத்தலைவர்களும் ஆதீனங்களும் கலந்து கொள்வதாய் ஏற்பாடு.முதல்நாள் அந்த மாநாட்டுக்கு மஹாஸ்வாமிகளை தலைமை தாங்கும்படி முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.ஸ்வாமிகளும் சரி பார்க்கலாம் என்று சொல்லியிருந்தார்.இதற்கிடையில் அன்று இரவு மற்ற மாடதிபதிகளும் ஆதீனங்களும் வேறுமாதிரி முடிவெடுத்தனர். அந்தமாநாட்டுக்க்கு ஸ்வாமிகளை தலைமைதாங்கவிடக்கூடாது என்று முடிவாகி ஒரு ஆதீனத்தை தலைமை தாங்க வைப்பது என்று முடிவெடுத்துவிட்டனர். இது விஷயம் ஸ்வாமிகள் காதுக்கு எட்டியது. பக்தர்கள் அந்த மாநாட்டுக்கு ஸ்வாமிகளைப் போகவேண்டாம் என்று தடுத்தனர்.ஆனால் ஸ்வாமிகளோ வாக்களித்தபடி போகத்தான் வேண்டும் கூறி மறுநாள் காலை மாநாட்டுக்கு கிளம்பிவிட்டார். பக்தர்கள் ஸ்வாமிகளுக்கு ஒன்றும் அபசாரம் நிகழ்ந்து விடக் கூடாதே என்று மனம் பதைபதைக்க அவருடன் சென்றனர்.
மாநாடு துவங்கியதும் முதல் பணி தலைவரை தேர்ந்தெடுப்பது. அமைப்பாளர் கூட்டத்தில் பங்கு கொள்ள வந்திருந்தவர்களைப் பார்த்து மாநாட்டு தலைவரை முன்மொழியச் சொன்னார். அரங்கத்தில் அமைதி குடிகொண்டது. ஒருவர் எழுந்து .........ஆதீனத்தின் பெயரை மாநாட்டுத் தலைவராக நான் முன் மொழிகிறேன் என்றார். உடனே கொஞ்சம் சலசலப்பு மாநாட்டின் பந்தலில்.ஆனால் அதை அடக்கும் வண்ணம் "'நான் அதை ஆமோதிக்கிறேன்" என்று ஒரு மெல்லிய குரல் அவையிலிருந்து எழுந்தது. குரல் வந்த திசையை எல்லோரும் திரும்பிப் பார்த்தனர்.ஆம் அது "'தெய்வத்தின் குரல்தான்" மஹா பெரியவரே அதை ஆமோதித்து அந்த சிக்கலான விஷயத்தை லகுவாக சமாளித்து விட்டார் ,பட்டம் பதவி இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட மஹான்.
சர்வமத சம்மதன்

மஹாஸ்வாமிகளுக்கு எல்லா மதத்தினர் மீதும் மரியாதை உண்டு.அதேமாதிரி மற்ற மதத்தினரும் அவருக்கு மரியாதை செலுத்தத் தவறியதே இல்லை.கீழே உள்ள வீடியோ பதிவில் அவர் சமாதியான அன்று மரியாதை செலுத்த வந்தவர்களில் சில இஸ்லாமிய சகோதரர்களையும் பார்க்கலாம். ஒருமுறை சிறந்த இலக்கியவாதியும், கம்பன் கழகத்தின் தலைமை பொறுப்பிலிருந்த திரு.நீதியரசர் இஸ்மயில் அவர்கள் பெரியவர்களைப் பார்க்க வந்தார். இருவருக்கும் இடையே இலக்கிய விஷயங்களைப் பற்றியும் கம்பராமாயணத்தைப் பற்றியும் விவாதம் வெகு நேரம் நடந்து கொண்டு இருந்தது. மடத்திலிருந்த எல்லோருக்கும் ஸவாமிகள் நீதியரசருக்கு என்ன பிரசாதம் கொடுக்கப் போகிறார் என்ற எண்ணமே மிகுதியாக இருந்தது. இந்துக்களுக்கெல்லாம் விபூதி குங்குமம் வழங்கலாம். ஆனால் இந்த இஸலாமிய பெரியவருக்கு என்ன கொடுப்பார்? விவாதம் முடிந்து நீதியரசர் விடைபெறும் நேரம் நெருங்கிவிட்டது. ஸ்வாமிகள் மடத்துச் சிப்பந்தி ஒருவரை அழைத்து சைகையால் ஒரு பொருளை கொண்டுவரச்சொன்னார்கள். உடனே அவரும் ஒரு வெள்ளிப் பேழையில் அந்தப்பொருளைக் கொண்டுவந்து ஸ்வாமிகள்முன் வைத்தார். ஸ்வாமிகள் நீதியரசரைப் பார்த்து இந்தப்பேழையில் சந்தனம் இருக்கிறது இதை அணிந்துகொண்டு நலமாக இருங்கள் என்றார்.மேலும் கூறினார் நம் இருமதத்தினருக்கும் பொதுவான அம்சம் இது. உங்கள் தர்காவிலும் சந்தனக்கூடு உண்டு எங்கள் கோவில்களிலும் சந்தனம் உண்டு. நீதியரசரும் சந்தோஷத்துடன் அதை அணிந்து கொண்டு சென்றார்.
-


என்னப்பெரும் தவம் யான் செய்ததறியேனே என்னையும் காஞ்சி முனி ஆட்கொண்டதென் சொல்வேன்.

ஒருமுறை திருப்பதி சென்றுவிட்டு நானும் என் ஆடிட்டர் நண்பரும் வரும் வழியில் காஞ்சி சென்று ஸ்வாமிகளை தரிசனம் செய்யும் எண்ணத்துடன் மடத்துக்கு சென்றோம். அன்று வெள்ளிக்கிழமை. ஸ்வாமிகள் திருப்பதியில் பெருமாளுக்கு அபிஷேகம் எப்படி நடைபெற்றது என்று விசாரித்து விட்டு என்னுடைய வங்கி எப்படி இருக்கிறது என்றும் விசாரித்தார்.அது முடிந்ததும் விடை பெற்றுக்கொள்ளலாம் என்று நினைத்து ஓரமாக நின்றோம்.மணிபகல் இரண்டாகி விட்டது.ஸ்வாமிகள் அநத கணக்கர் இரண்டுபேரையும் போய் மடத்தில் சாப்பிடச் சொல்லு என்று மடத்து சிப்பந்தி ச்ரீ கணடன் மூலமாக ஆணையிட்டார். நாங்களும் போய் உணவருந்திவிட்டு மறுபடியும் வந்து நின்றோம். எங்களைப் பார்த்ததும் ஸ்வாமிகள் இப்படியே இருங்கள் உங்களுக்கு ஒரு வேலை இருக்கிறது என்றார்.எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. எங்களைப் போன்ற சாமனியர்களால் ஸ்வாமிகளுக்கு வேலை செய்ய முடியுமா? அப்போது மடத்து சிப்பந்தி வந்து ஸ்வாமிகளிடம் ச்ரீ ரங்கம் ஜீயர் ஸ்வாமிகளிடமிருந்து ஒரு கடிதம் வந்திருப்பதாகக் கூறினார். அந்தச் சமயம் ச்ரீ ரஙகம் ரங்கநாத ஸ்வாமியின் ராஜகோபுரப் பணி நடந்து கொண்டு இருந்தது. ஸ்வாமிகளும் அதை உரக்கப் படிக்கும்படி அவரிடம் சொன்னார். அதில் கோபுரப் பணி எப்படி நடந்து கொண்டு இருக்கிறது என்றும் இன்னும் எவ்வளவு பாக்கி இருக்கிறது என்றும் எழுதி இருந்தார். அப்போது ஸ்வாமிகள் அவரிடம் கொஞ்சம் நிறுத்து என்று கூறி விட்டு என்னைப் பார்த்து உன்னுடைய வேலை வரப்போகிறது என்றார் நான் ஒன்றும் புரியாமல் விழித்தேன்.அடுத்த வரிகளில் அந்தக்கடிதத்தில் ச்ரீ. ஜீயர் ஸ்வாமிகள் கோபுரம் கட்டுவதற்கு நன் கொடை அளிக்கும் நிறுவனங்களுக்கு வருமான வரியிலிருந்து முழு விலக்கு அளிப்பதற்காக மத்திய அரசாங்கத்தின் நிதி துறைக்கு அனுப்பபட்ட விண்ணப்பம் இன்னும் பரிந்துரை செய்யப்பட்டு ஆர்டர் வந்து சேரவில்லை.ஆதலால் ஸ்வாமிகளின் உதவியை இந்த விஷயத்தில் கோரி இருந்தார். உடனே ஸ்வாமிகள் என்னைப் பார்த்து நீதானே வங்கியின் வருமானவ்ரி கணக்கு வழக்குகளை கவனித்துகொண்டு இருக்கிறாய்.உனக்குத்தான் டெல்லியில் மத்திய வருமானவரித்துறையின் குழுவின் தலைமையாளரை நன்றாகத்தெரியுமே. அவரிடம் சொல்லி சீக்கிரம் பர்மிஷன் வாங்கிக்கொடு.நல்ல காரியத்தில் பங்குகொண்ட பலனும் வரும் என்றார். அவருடையபெரிய நிலைக்கு கண்ணசைத்தால் நிதிமந்திரியே இதை செய்து முடித்திருந்திருப்பார் . இருந்தாலும் என்னைப்போல எளியவனிடம் இந்தப் பணியைக் கொடுத்தது எனக்கு அவர் செய்த அருள். அவர் சொன்னபடியேஅப்போது CBDT சேர்மனாக இருந்த டாக்டர். சிவ ஸ்வாமியிடம் அணுகி ஸ்வாமிகளின் விருப்பத்தைச் சொன்னதும் உடனே விலக்கு அளிக்கும் ஆர்டரை மத்திய கெஜட்டில் பதிவு செய்துவிட்டார்.
இதில் எனக்கு புரியாதது கடிதம் வருவதற்கு முன்பே எப்படி எனக்கு வேலை வரப்போகிறது என்றும், கடிதத்தின் பாதியில் படிக்காமலேயே நிறுத்தி எனக்குரிய பகுதி வரபோகிறது என்று எப்படிச் சொன்னார். அவர்தான் முக்காலமும் உணர்ந்த மஹானாயிற்றே இது ஒரு பெரிய விஷயமா அவருக்கு?


-


ராகம்:- ஹிந்தோளம் தாளம்:- மிச்ரசாபு
பல்லவி
ஸ்ரீ சந்தரசேகரேந்த்ர சரஸ்வதியே சரணம்
காஞ்சி வாழ் தயாநிதியே....(சந்தரசேகரேந்தர.)
அனுபல்லவி
அந்தரங்கமுடன் உந்தன் அருளைபெறவேநான்
என்ன தவன் செய்தேனோ கருணைக் கடலே.....(சந்த்ரசேகரந்தர)
சரணம்
பக்தர்கள் செய்திட்ட பாக்யம் அப்பாரினில் பரம் பொருளாகவே அவதரித்தார்
மாதவம் செய்திடும் மாணிக்கமாம் ஸ்ரீ ஜெயந்தரஸரஸ்வதியை அளித்தாய்
பந்த பாசம் வென்ற பாலயோகி ஸ்ரீசஙகரவிஜெயேந்த்ர

ஸரஸ்வதியையும் அளித்தாய்.....( சந்த்ரசேகரேந்தர..)
பெரியவர்கள் மீது உள்ள பாடலை பாடியவர் திரு. மஹாராஜபுரம். ராமச்சந்தரன்

இயற்றியது மறைந்த சங்கீத கலாநிதி மஹாராஜபுரம் சந்தானம்

பாடலை இங்கே
%3Eகிளிக் செய்து கேளுங்கள்

மஹா பெரியவா என்றாலே நமக்கு நினைவுக்கு வருபவர் எம் ஸ் அம்மாதான்.ஸ்வாமிகள் மீது அபாரா பக்தியும் அன்பும் கொண்டவர். அவருடைய பாடல் இல்லாமல் இந்தப்பதிவையும் குருவருளயும் முடிக்க முடியுமா?முடிவில் பகைவனுக்கும் அருளவேண்டும் என்ற எண்ணமும், யுத்த வெறியும் நாடு பிடிக்கும் ஆசையும் நமக்கு கிடையாது என்ற நமது தேசத்தின் உயர்ந்த கொள்கையை உறுதிப்படுத்தும் வண்ணம் ஸ்வாமிகள் எழுதி எம் ஸ் அம்மா அவர்களால் ஐக்கிய நாட்டு சபையில் பாடிய பாடலோடும் அவர் ஆசி வழங்கும் படத்துடன் குருவருள் பெற்று முடித்துக்கொள்ளலாம்11 comments:

ambi said...

//அந்தரங்கமுடன் உந்தன் அருளைபெறவேநான்
என்ன தவன் செய்தேனோ கருணைக் கடலே.....(//

உங்கள் அனுபவத்தை படித்த பிறகு பாடலில் இந்த வரிகள் உங்களுக்காகவே எழுதபட்டது போல இருந்தது. :))

நல்ல விஷயங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

Geetha Sambasivam said...

அருமையான பகிர்வுகள் திரு திராச, அவர்களே, ஒவ்வொன்றும் கரும்பின் இனிப்புப் போல் நினைத்து, நினைத்துச் சுவைக்க வல்லது. மிக்க நன்றி.

மெளலி (மதுரையம்பதி) said...

முன்னமே படித்தாலும், இன்றும் ஒருமுறை படித்தேன்...மனதால் அவரை வணங்கினேன்.பழைய நினவுகளில் மூழ்கினேன்.. வேறு ஏதும் சொல்ல தோணல்லை.

தி. ரா. ச.(T.R.C.) said...

அம்பி நிஜமாகவே நினைத்தாலே இனிக்கும் நினைவலைகள் அது. வாழ்க்கையின் பொற்காலம் அது.

தி. ரா. ச.(T.R.C.) said...

நன்றி கீதா மேடம்.. நினைவுப் பெட்டகத்திலிருந்து சிறு துளிகள்தான் இவை.

தி. ரா. ச.(T.R.C.) said...

@மௌளி சார்
அவருடன் பழகிய தினங்களும் தரிசன அனுபவமும்தான் வாழ்க்கையில் மிஞ்சப்போவது.மஹன்களை புரிந்து கொள்ளுவது எளிதல்ல. அவர்கள் நிலைக்கு நம்மால் போகமுடியாது நம் நிலையில் இருந்து அவர்களை புரிந்து கொள்ளவும் முடியாது.

ஒரு முறை மஹான் சேஷாத்திரி ஸ்வாமிகள் திருவண்ணாமலையில் ஒரு மண்மேடு மீது படுத்துக்கொண்டு இருந்தார். போகிறவர்களில் அவரைப்பற்றித் தெரியாதவ்ர்கள் இதோ ஒரு பைத்தியம் படுத்துக்கொண்டு இருக்கிறது என்றார்கள். உடனே சேஷாத்ரிஸ்வாமிகள் ஆமாம் இங்கே ஒரு பைத்தியம் படுத்துக்கொண்டு இருக்கிறது அங்கே ஒரு பைத்தியம் பல்லக்கில் போய்க் கொண்டு இருக்கிறது என்றார். இது நடந்தது திருவண்ணாமலையில். அப்போது மஹா பெரியவர் கேரளாவில் ஒர் ஊரில் இருந்து வேறு ஊருக்கு பல்லக்கில் போய்க் கொண்டு இருந்தார். சேஷாத்ரிஸ்வாமிகள் இவ்வாறு சொன்னதும் அங்கே பெரியவர்கள் அப்படியே பல்லாக்கை நிறுதத்ச் சொல்லிவிட்டு அன்றிலிருந்து மேனா, அல்லது சைக்கிள் ரிக்க்ஷா இவைகளைப் பிடித்துக்கொண்டு வேகமாக நடக்கத்தொடங்கினார். இதே மாதிரி நடந்தே இந்தியாவை இரண்டு முறை வலம் வந்தார். திருவண்ணாமலையிலிருந்து கேரளாவிற்கு விஷயம் எப்படி இ மெயிலிலா, அல்லது செல் போனிலேயேவா போனது.

மெளலி (மதுரையம்பதி) said...

//அவருடன் பழகிய தினங்களும் தரிசன அனுபவமும்தான் வாழ்க்கையில் மிஞ்சப்போவது.மஹன்களை புரிந்து கொள்ளுவது எளிதல்ல. அவர்கள் நிலைக்கு நம்மால் போகமுடியாது நம் நிலையில் இருந்து அவர்களை புரிந்து கொள்ளவும் முடியாது.//

மஹா வாக்யம்...:))

இவர் காலத்தில், இவருடன் பேசியிருக்கோம், நமஸ்காரம் பண்ணியிருக்கோம் அப்படிங்கறதுக்கே
'யான் செய்த தவப்பயனே' பாடலாம்.

கபீரன்பன் said...

//...நினைவுப் பெட்டகத்திலிருந்து சிறு துளிகள்தான் இவை //

எங்கள் மனம் வறண்ட பிரதேசத்தை சேர்ந்தது. சிறு துளியெல்லாம் பத்தாது. பெருமழை பெய்யும் மேகமாக வாருங்கள்.
குருவருள் துணை நிற்கும். :))

தி. ரா. ச.(T.R.C.) said...

கபீரன்பன் வாங்க. அந்த ஆசை உண்டு. ஆனால் குருவருள் வேண்டுமே

குமரன் (Kumaran) said...

அருமையான பகிர்வுகள் தி.ரா.ச படித்து மனம் மகிழ்ந்தது. 'என்ன புண்ணியம் செய்தேனோ சத்குருநாதா எத்தனை தவம் செய்தேனோ உன் அருள் பெறவே' என்று மனம் பாடிக் கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த இடுகையை பிரதி எடுத்துப் பேருந்தில் படித்ததால் இன்னும் வீடியோ ஆடியோ எல்லாம் பார்க்கவும் கேட்கவும் செய்யவில்லை. இனிமேல் பார்க்கிறேன்/கேட்கிறேன். நன்றிகள்.

குமரன் (Kumaran) said...

அருமையான பகிர்வுகள் தி.ரா.ச படித்து மனம் மகிழ்ந்தது. 'என்ன புண்ணியம் செய்தேனோ சத்குருநாதா எத்தனை தவம் செய்தேனோ உன் அருள் பெறவே' என்று மனம் பாடிக் கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த இடுகையை பிரதி எடுத்துப் பேருந்தில் படித்ததால் இன்னும் வீடியோ ஆடியோ எல்லாம் பார்க்கவும் கேட்கவும் செய்யவில்லை. இனிமேல் பார்க்கிறேன்/கேட்கிறேன். நன்றிகள்.