குருபிரம்மா குரு விஷ்ணோ,
குருதேவோ மஹேஸ்வரஹா,
குரு சாக்ஷாத் பரப்ரும்மம்
குரவே நமஹா!"
குருவைப் பற்றி எழுதுவதென்றால் மேலும் மேலும் எழுதலாம், ராகவன் ஸ்வயம் ஆச்சாரியர்கள் பற்றிக் கேட்டிருந்தார். அதற்கு முதலில் குருவுக்கும், ஆச்சாரியருக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளவேண்டும் அல்லவா??
குருவானவர் அனைத்துக்கும் மேலானவர், அவரே பிரம்மா, அவரே விஷ்ணு, அவரே மஹேஸ்வரன், மேலும் அந்தக் குருவே சாக்ஷாத் பரப்ரம்மம் என்று கூறும் மேற்கண்ட ஸ்லோகத்தை அறியாதோர் இருக்க முடியாது. அப்படிப் பட்ட குருவானவர் வயதானவராகவே, சகலமும் கற்று அறிந்தவராகவே இருத்தல் வேண்டும் என்பது இல்லை. வயதிலே சிறியவராய்க் கூட இருக்கலாம், இவர் சிஷ்யர்களுக்கு உபதேசம் செய்தாகவேண்டும் என்பதாய்க் கட்டாயம் ஏதும் இல்லை. தன்னுள்ளே தன்னை அறிந்தவராய் இவர் இருப்பதாலேயே இவரைக் குருவாய் ஏற்றிருப்பார்கள். உபதேசமும் செய்யவேண்டும் என்பதும் இவரிடம் எதிர்பார்க்கவேண்டியது இல்லை. இவரைப் பற்றிய மஹிமை நன்கு தெரிந்தவர்களும், அறிந்தவர்களுமே இவரைக் குருவாக ஏற்பார்கள். அப்படியான குருவானவர் பலரும் இருந்தாலும் ஆதிகுரு என்று அனைவராலும் சொல்லப் படுபவர் தட்சிணாமூர்த்தியே ஆவார். வயதில் மிக இளைஞன் ஆன இவர் வாய் திறந்து ஏதும் பேசவில்லை. தன் கைச் சின்முத்திரை ஒன்றே தன் சீடர்களுக்கு, அதாவது தன்னைக் குருவாய் வரித்தவர்களுக்கு அவர் சொல்லும் ஒரே போதனை! இவரைக் குருவாய் வரித்தவர்களோ, வயது முதிர்ந்த ரிஷிகள். அவர்கள் இவரிடம் பாடம் ஏதும் கேட்கவில்லை, இவரும் சொல்லவில்லை. மெளனமே மொழியாக அனைத்தும் அறியப் பட்டது, உணரப் பட்டது. குருவானவர் இவரே. எனினும் குரு பேசவும் செய்யலாம், அதே சமயம் உபதேசமும் செய்யலாம், அது சீடர்களின் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தே அமையும். நம்முடைய மனத்தின் இருளைப் போக்கி ஆத்ம ஞானத்தை அறியச் செய்பவரே குரு என்று சொல்லவேண்டும்.
ஆனால் ஆச்சாரியர் என்பவர் வேறு. அவர் தாம் அனைத்தும் அறிந்தவராய் இருந்தாலும், வாழ்க்கை நியதிக்கு ஏற்ப, வாழ்க்கையின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு, அதன்படி நல்லொழுக்கங்களைக் கடைப்பிடித்துக் கொண்டு, நல்லுபதேசங்களைச் சீடர்களுக்கு உபதேசித்துக் கொண்டு இருப்பார். தான் சிஷ்யர்களுக்குப் போதிக்கும் அதே வழிமுறைகளைத் தானும் ஏற்கெனவே பின்பற்றி வாழ்ந்து கொண்டிருப்பவரே ஆச்சாரியர் என்பார்கள். சிஷ்யர்களையும் அதே வழிமுறையில் நடக்கச் செய்பவரே ஆச்சாரியர். இந்த முறையில் பார்த்தோமானால் குருவுக்கும், ஆச்சாரியருக்கும் உள்ள வித்தியாசம் புரிந்தாலும், பொதுவாக நாம் அனைவரையும் குரு என்றே அழைக்கின்றோம்.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்றும் சொல்லுகின்றோம். நம் உடலைப் பேணிப் பாதுகாத்து, அதற்கு உணவிட்டு, உடை அளித்து, நகை அணிவித்துப் பார்த்து மகிழ்வோர் பெற்றோர். பெற்றோரிடம் இருந்தும் நாம் சிறிதளவாவது ஞானமோ, நற்போதனைகளோ, நல்லொழுக்கமோ கற்றாலும் அவர்களிலும் சிறந்தவர் குருவே, அந்தக் குருவைத் தெய்வம் எனவே சொல்லவேண்டும். அம்மா போடும் சாப்பாடோ ஜீரணம் ஆகிவிடும் தானாகவே, அப்பா வைக்கும் சொத்தையே ஜீரணம் செய்வோம் நாமாகவே, ஆனால் குரு என்னும் ஆச்சாரியர் அளிக்கும் சொத்தோ என்றும் அழிவில்லாமல் நிற்கும், நாம் இன்னொருவருக்கு எவ்வளவு வாரிக் கொடுத்தாலும் குறையாது. அழிவில்லாதது இது ஒன்றே. ஆகவே சீடனுக்குப் புரிகின்றவரையிலும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுப்பவரே உண்மையான ஆச்சாரியரும், குருவும் ஆவார்.
அதிலும் சில ஆச்சாரியர்கள் அனைத்தையும் கடந்தவர்களாக, ஆத்ம ஞானம் பெற்றவராக, தம்முள் தம்மை உணர்ந்தவராக இருந்தாலும் வெளியில் பார்க்கும்போது அது தெரியாமல் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இவர்களைக் குரு எனச் சொல்லலாம். அப்படிப் பட்ட குருக்களிடம் சிஷ்யர்கள் தாங்களாகவே விருப்பத்தின் பேரில் வந்து இணைவார்கள். இந்தக் குரு எதையும் போதிக்காவிட்டாலும் இவரின் அருள் இருந்தாலே போதும் என நினைத்தும் சேர்ந்து கொள்வார்கள். இவர்களையே நாம் "ஸ்வயம் ஆச்சாரியர்கள்" என்று அழைக்கின்றோம். இப்படி குருவாகவும், ஆச்சாரியர்களாகவும் திகழ்ந்தவர்கள், நம் சநாதன தர்மத்தில் பலர் இருந்தாலும், பெரும்புகழ் பெற்றுக் குறிப்பிட்டுச் சொல்லும்படி இருந்தவர் மூவர் ஆவார்.
அவர்களில் ஆதிகுரு என்றும், காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பாதயாத்திரையாகவே சென்று தம் கொள்கையான அத்வைதத்தைப் பரப்பியவரும் ஒரு ஆச்சார்யன் எவ்வாறு நடக்கவேண்டுமோ அவ்வாறே நடந்து காட்டியவரும், தனது நான்கு முக்கிய சீடர்கள் மூலம் தனது குரு பரம்பரையை உருவாக்கியவரும் ஆன "ஆதிசங்கரர்" என்பவரே முதல் ஆச்சாரியரும், குருவும் ஆவார். இவரிடம் சிஷ்யர்கள் உபதேசம் பெறச் சேர்ந்தாலும் இவர் குருதான், தம்மில் தம்மை உணர்ந்தவரே, வேதவித்து, ஞானி, சாட்சாத அந்தப் பரப்ரும்ம சொரூபன் ஆன ஈசனின் அம்சம் என்றும் சொல்லப் படுவார். அதே சமயம் "ஸ்வயம் ஆச்சாரியர்" ஆகவும் ஆனார் என்றும் சொல்லப் படுவார். ஒரே சமயம் ஒரு ஞானகுருவாகவும், சிஷ்யர்களுக்குப் போதிக்கும் ஆச்சாரியனாகவும் திகழ்ந்தவர்களில் இவர் முதன்மையானவர்.
அடுத்து வருபவர் "ராமானுஜாச்சாரியார்" இவரின் "விசிஷ்டாத்வைதம்" வழிமுறைகளை இவரும் ஒரு குருவாகவும், அதே சமயம் ஆச்சாரியராகவும் இருந்து உபதேசித்திருக்கின்றார். 74 சீடப் பரம்பரையை இவர் பெற்றிருப்பதாய்ச் சொன்னாலும் வைஷ்ணவ குருபரம்பரையானது இவரிடம் இருந்து பிரிந்து பல்வேறு வழிமுறைகளில் சென்று விட்டதாயும் சில வைஷ்ணவர்களின் திடமான எண்ணம். எனினும் இவரும் ஒரு ஸ்வயம் ஆச்சாரியரே ஆவார். இவரும் தம் சிஷ்யர்களுக்குத் தம் வாழ்க்கையின் மூலமும், தன் ஞானத்தின் மூலமும் பல்வேறு போதனைகளைச் செய்தார். வைணவ பரம்பரையின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவரும் ஆவார்.
அடுத்து வருபவர் மாத்வாசாரியார். இவரின் "த்வைதம்" தத்துவத்தால் வைணவத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரே இன்று மாத்வர்கள் என அழைக்கப் படுகின்றார்கள். இவர் எட்டுமடங்களை ஸ்தாபித்ததாயும் அதன் மூலம் தன் தத்துவங்களை உலகு அறியச் செய்ததாகவும் சொல்லுவார்கள். இவரும் ஒரு ஆச்சாரியராகவும், குருவாகவும் இருந்தே தன் கருத்துக்களைப் பரப்பி வந்திருக்கின்றார். இவரும் ஒரு ஸ்வயம் ஆச்சாரியரே ஆவார். இவர்கள் தவிர, சிருங்கேரி மடப் பீடாதிபதி ஆன வித்யாரண்யர், ஸ்ரீகிருஷ்ண சைதன்யர், மற்றும் வைணவப் பரம்பரையில் வந்த வல்லபாச்சாரியார் போன்றோரையும் சொல்லுவதுண்டு. வல்லபாச்சாரியாரின் தத்துவம் "சுத்த அத்வைதம் " என்று அழைக்கப் படுவதாயும் அறிகின்றோம். இவரின் கோட்பாடுகளின் படி திருமணம் செய்துகொண்டு, இல்லற வழியில் இருப்பவர்களே பீடாதிபதிகளாக இருக்கலாம்.
டிஸ்கி: "தெய்வத்தின் குரல்" ஆறாம் பாகமும், சென்ற வார துக்ளக்கில் வந்த "இந்து மகா சமுத்திரம்" இரண்டின் அடிப்படையும் கொண்டு எழுதி உள்ளேன். ஏற்கெனவே இதைப் பற்றிப் படித்துக் கொண்டிருந்த நேரமும், ராகவன் கேட்டதும் சரியாக இருக்கவே உடனேயே எழுதிவிட்டேன். நன்றி ராகவனுக்கு.
Thursday, June 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)
26 comments:
குருவுக்கும் ஆச்சார்யருக்கும் உள்ள வித்யாசத்தை அழகாக சொன்னமைக்கு நன்னி.
பதிவு வழக்கம் போல உங்கள் நடையில் தான் இருக்கு. :p
@அம்பி, வழக்கம்போல் சுண்டல், கேசரிக்கு முந்திண்டாச்சு??:P
என் நடை, தனி நடை, தெரியாது??? பார்த்தாலே தெரியுமே?????
//அப்படிப் பட்ட குருக்களிடம் சிஷ்யர்கள் தாங்களாகவே விருப்பத்தின் பேரில் வந்து இணைவார்கள். இந்தக் குரு எதையும் போதிக்காவிட்டாலும் இவரின் அருள் இருந்தாலே போதும் என நினைத்தும் சேர்ந்து கொள்வார்கள். இவர்களையே நாம் "ஸ்வயம் ஆச்சாரியர்கள்" என்று அழைக்கின்றோம்.//
இது, இது...இதுனாலதான் நான் உங்களை, கே.ஆர்.எஸ், குமரன் எல்லாம் அனக்கு குருன்னு சொல்லிக்கறேன். :))
//குருபரம்பரையானது இவரிடம் இருந்து பிரிந்து பல்வேறு வழிமுறைகளில் சென்று விட்டதாயும் சில வைஷ்ணவர்களின் திடமான எண்ணம். எனினும் இவரும் ஒரு ஸ்வயம் ஆச்சாரியரே ஆவார்//
எனினும் = ???
புதசெவி
புரியவில்லை கீதாம்மா!
//குரு எதையும் போதிக்காவிட்டாலும் இவரின் அருள் இருந்தாலே போதும் என நினைத்தும் சேர்ந்து கொள்வார்கள். இவர்களையே நாம் "ஸ்வயம் ஆச்சாரியர்கள்" என்று அழைக்கின்றோம்//
குரு=பாடம் சொல்லணும் என்கிற அவசியம் இல்லை!
ஆச்சார்யர்=பாடம் சொல்லியே ஆகணும்!
ஸ்வயம் ஆச்சார்யர்=?
குருவுக்கு என்ன சொன்னீர்களோ, அதே தானே ஸ்வயம் ஆச்சார்யருக்கும் சொல்கிறீர்கள்!
மேலதிகமாய் விளக்குங்க ப்ளீஸ்!
நன்றி கீதாம்மா. தெரியாத விஷயங்களை தெரிஞ்சிக்கிட்டேன். அப்ப, ஸ்ரீராமகிருஷ்ணர் இதுல எந்த வகை? அவரும் ஸ்வயம் ஆச்சார்யரா?
//என் நடை, தனி நடை, தெரியாது??? பார்த்தாலே தெரியுமே?????//
@geetha paati, ஆமா ஆமா! உங்க நடைய தான் நாங்க பெங்களூர் ரயில்வே ஸ்டேஷன்ல ஆரம்பிச்சு போன ஞாயிற்று கிழமை வரை பாத்துண்டே தானே இருக்கோம். :p
சரி உருப்படியா ஒரு கேள்வி, தோடகாச்சரியார் எந்த வகையில வருவார்?
//குரு எதையும் போதிக்காவிட்டாலும் இவரின் அருள் இருந்தாலே போதும் என நினைத்தும் சேர்ந்து கொள்வார்கள். இவர்களையே நாம் "ஸ்வயம் ஆச்சாரியர்கள்" என்று அழைக்கின்றோம்//
KRS,குருவுக்கும், ஆச்சாரியருக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்க இன்னும் சரியாப் புரிஞ்சுக்கலை, குருவும் பாடம் சொல்லணும், ஆச்சாரியரும் பாடம் சொல்லணும்னு சொன்னது ஒரு உதாரணத்துக்காக. அதே சமயம் குரு பாடம் சொல்லாமலேயே அவரைக் குருவாக ஏற்றுக் கொள்ள முடியும், விவேகானந்தர், ராமகிருஷ்ணரை ஏற்றது போல், நிவேதிதா, அரவிந்தரை ஏற்றது போல், அவ்வளவு ஏன் ஆதி சங்கரர், கோவிந்த பகவத் பாதரை ஏற்றது கூட அப்படித் தான்னு நினைக்கிறேன்.
இன்னும் புரியலையா, உங்க பிரியமான விஷயத்துக்கு வரேன். நம்மாழ்வாரை, பிறந்தப்போ இருந்து புளியமரத்தடியில் இருக்கும்போதே அவர் வாய் திறந்து பேசாதபோதே, அவர் இருக்கும் திசை நோக்கி, இதோ ஒரு மகான், என அவரை ஒரு ஒளிவீசும் நட்சத்திரமாய்க் கண்டு வந்தாரே, அவரை அறிவீர்கள் தானே?? பதிவு கூடப் போட்ட நினைவு, இவங்க எல்லாம் குருன்னா, மற்றவங்க தங்கள் வாழ்க்கையை, அதன் ஒழுங்கு முறையில், நடத்தையில் என்று தன்னைப் போலவே சிஷ்யர்களை உருவாக்குவார்கள், உதாரணம் சொல்லணும்னா துரோணரைச் சொல்லலாமோ???? ஏனெனில் நாம் விரும்பி அங்கே சென்று பாடம் பயில்கின்றோம். ஆனால் குரு என்பவர் தானாக மனதில் வரிப்பவரே, அவர் போதிக்கணும்னு கட்டாயம் எதுவும் இல்லை. அதையும் மீறி குருவின் போதனைகள் கிடைச்சால், நமக்கு அதிர்ஷ்டம், அப்படி அதிர்ஷ்டம் செய்தவர்களே , இந்த மூன்று ஸ்வயம் ஆச்சாரியர்களின் சீடர்கள் ஆகி, குரு பரம்பரையிலும் இடம் பெறுகின்றனர். மத்ததுக்குப் பதில் பின்னர். இப்போ நேரம் இல்லை.
போதனைகள் செய்யாமலேயே புரிய வைத்ததால் தான் தக்ஷிணாமூர்த்தியை ஆதிகுரு என்று சொல்லுகின்றோம். வாய் திறந்து பேசாமலேயே தன் சின்முத்திரையால் சொல்ல வந்ததைச் சொன்னார் அவர். இப்போப் புரியுதா?? இல்லைனா கொஞ்சம் காத்திருக்கணும். :))))))
//KRS, குருவுக்கும், ஆச்சாரியருக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்க இன்னும் சரியாப் புரிஞ்சுக்கலை//
அதைப் புரிய வைக்கத் தானே தலைவியா, கீதாசார்யரா நீங்க இருக்கீங்க? :-)
//அதே சமயம் குரு பாடம் சொல்லாமலேயே அவரைக் குருவாக ஏற்றுக் கொள்ள முடியும், விவேகானந்தர//
என்ன ஜெர்ரியம்மா வெளையாடறீங்களா?
செந்தல்-வாழைப்பழம் மாதிரி, அது தான்பா இதுன்னு!:-)
ஒழுங்கா நான் போட்ட பின்னூட்டத்தைப் படிங்க!
குரு-ன்னா சொல்லிக் கொடுக்கணும் என்கிற கட்டாயம் இல்லை-ன்னு தான் நானும் சொல்லி இருக்கேன்!
இதோ:
//குரு=பாடம் சொல்லணும் என்கிற அவசியம் இல்லை!
ஆச்சார்யர்=பாடம் சொல்லியே ஆகணும்!//
நான் கேட்டது என்னான்னா
குருவுக்குச் சொன்னதையே ஸ்வயம் ஆச்சாரியருக்கும் சொல்லி இருக்கீங்களே!
அப்படின்னா குருவுக்கும்-"ஸ்வயம்" ஆச்சாரியருக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று தான் உங்களைக் கேட்டேன்!
//இன்னும் புரியலையா, உங்க பிரியமான விஷயத்துக்கு வரேன். நம்மாழ்வாரை//
இந்த நுண்ணரசியல் எல்லாம் அடியேனிடம் செல்லாது!
எனக்குப் பிரியமான பட்டினத்தார்-பத்ரகிரியார் கிட்டயே வாங்க! :-)
//அவர் இருக்கும் திசை நோக்கி, இதோ ஒரு மகான், என அவரை ஒரு ஒளிவீசும் நட்சத்திரமாய்க் கண்டு வந்தாரே, அவரை அறிவீர்கள் தானே?? //
நமக்கு இந்த வைணவக் கதைகள் எல்லாம் அவ்வளவா தெரியாது கீதாம்மா! :-)
// வாய் திறந்து பேசாமலேயே தன் சின்முத்திரையால் சொல்ல வந்ததைச் சொன்னார் அவர். இப்போப் புரியுதா?? //
தட்சிணாமூர்த்தி பற்றித் தான் அடியேன் முதல் பதிவு!
அவர் பேசவில்லை! நயன தீக்ஷையே போதும்! அவர் ஆதி "குரு"! அழகாகப் புரிகிறது!
பின்னூடத்தை அவசரப்படாம நிதானமாகப் படிச்சிட்டு மெள்ள வந்து பதில் சொல்லுங்க!:-)
//இந்தக் குரு எதையும் போதிக்காவிட்டாலும் இவரின் அருள் இருந்தாலே போதும் என நினைத்தும் சேர்ந்து கொள்வார்கள். இவர்களையே நாம் "ஸ்வயம் ஆச்சாரியர்கள்"//
ஆக
குரு=ஸ்வயம் ஆச்சாரியர்கள்
???
நன்றி கீதாம்மா, அற்புதமான விளக்கம். ஸ்வயம் ஆச்சார்யர்களின் ஆதாரத்தை அறிந்து கொண்டேன். இருந்தும் என் மனதில் சில கேள்விகள்.
1. இன்றைய காலத்தில் ஸ்வயமாச்சார்யர்கள் ?
2. பொதுவாக ஒவ்வொரு வைணவரும் தன்னுடைய குருவிடம் தான் ஸமாஷனம் செய்து கொள்ள வேண்டும்.
ஆனால், அவருடைய குடும்பத்தில் ஸ்வயமாச்சார்யர்கள் இருக்கும் பட்சத்தில், அவர் ஸமாஷனம் செய்து வைக்க தகுதி உள்ளவர் ஆகிறார். (எனக்கும், என் குடும்பத்தினர்க்கும் என் பெரியப்பா தான் ஸமாஷனம் செய்து வைத்தார். என் பெரியப்பா "பரவஸ்து. நாரயண அய்யங்கார்", வேதம், பிரபந்த வியாக்யானம் அனைத்திலும் கரை கண்டவர் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. எனக்குள்ள சந்தேகம் இதுதான்,
ஸ்வயமாச்சார்யர் பரம்பரை என்று உள்ளதா (Eg: பரவஸ்து,)?. அந்த பரம்பரை வழி வந்தவர் அனைவரும் ஸ்வயமாச்சார்யர் என்று ஆக முடியுமா ? அப்படி பார்த்தால், நான் ஸ்வயமாச்சார்யனா ? (இது கிண்டல் மட்டுமே, தவறாக எண்ண வேண்டாம்.)
3. ஸ்வயமாச்சார் யார்?, அவருக்குரிய தகுதிகள் யாவை ? வேத சாற்றுமறை கற்று தேர்ச்சி பெற்றால் மட்டும் போதுமா ?
4. சைவ சமயத்தில் ஸ்வயமாச்சார்யர் உள்ளனரா?
கேஆர்ஸ் எனக்கு ஒன்னும் சரியாக புரியாமல் இருந்தது. ஆனா இப்போ புரிஞ்சாமாதிரி இருக்கு. பல சிஷ்யர்களை உருவாக்குபவர் குரு. பல குருமார்களை உருவாக்குபவர் ஆச்சார்யர். சரிதானா குருவே
மூன்று மதாச்சார்யகளையும் ஒரே பீடத்தில் ஏற்றிவைத்து பெருமை படித்து விட்டீர்கள். நல்ல பதிவு.
கீதாம்மா பிசியாக இருப்பதால் அடியேன் அறிந்த வரை விளக்க முயல்கிறேன்!
கீதாம்மா சொன்னது போல்
குரு = "முறையாக" பாடம் நடத்த வேண்டும் என்று இல்லை!
அவருடன் நிற்பதுவும் நடப்பதுவும் இருப்பதுவுமே ஒரு வகையில் பாடம் தான்!
குரு பாடத்தைக் காட்டிலும் ரகசியத்தை உணர்த்துபவர்.
எ.கா = சனகாதி முனிவர்களுக்கு தட்சிணாமூர்த்தி மகா குரு!
அதே போல் சித்த புருஷர்கள் பலரைக் குரு என்றே கொள்ள முடியும்!
ஆச்சார்யர் = "முறையாக" பாடம் சொல்லிக் கொடுப்பவர்! அதற்கென்று பாடத்திட்டம் (Syllabus) எல்லாம் கூட இருக்கலாம்!
எ.கா = சங்கராச்சார்யர், தியாகராஜர் என்று சீடர்களுக்கு/மாணாக்கர்களுக்கு முறையாகப் பாடம் பயிற்றுவிப்பவர்கள்.
ஒருவரே குருவாகவும், ஆச்சார்யராகவும் இருக்கலாம்!
எ.கா = கண்ணன்
ஜகத்குருவாகவும் இருப்பான், கீதாசார்யன் என்று சொல்லிக் கொடுக்கும் ஆசார்யனாகவும் இருப்பான்!
ஆதிசங்கரர் ஒருவருக்கு குருவாக இருப்பார், இன்னும் சிலருக்கு ஆச்சார்யராக இருப்பார்!
இராமானுசர் கூரத்தாழ்வனுக்கு ஆச்சார்யன்! ஆனால் பிள்ளை உறங்கா வில்லிக்கு குரு!
இப்படிப் பலர்...
இப்போ, ஸ்வயம் ஆச்சார்யர்:
சில குடும்பங்களில் ஆச்சார்யர்கள் மற்ற வீட்டுப் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பார்கள். அப்படி என்றால், அவர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு?
அவர்கள் வீட்டுப் பிள்ளைகளும் அவரிடமே பாடம் கேட்கும்!
(இடம், காலம், இன்னொரு பள்ளிக்குப் போய் வரும் வசதி இதை எல்லாம் பொறுத்து)
இவர்களை ஸ்வயம் ஆச்சார்யர்கள் என்று குறிப்பது வழக்கம்!
அதாவது...தனியாக வேறு ஒரு மடத்தில் போய் பாடம் கேட்க வேண்டிய அவசியம் இல்லாமல், அவர்களிடத்திலேயே பாடம் கேட்டுக் கொள்வது!
சில வீடுகளில் மூத்தவர்களே ஸ்வயம் ஆச்சார்யர்களா இருப்பார்கள்! ஆசார்ய வழி வந்தவர்களாக இருப்பார்கள்! அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் அவரிடமே பாடம் கேட்டுக் கொள்ளூம். இன்ன சில சடங்குகளையும் அவரிடமே செய்து கொள்ளும்! அவர்களை ஸ்வயம் ஆச்சார்யர் என்று அழைக்கிறோம்!
உடனே அந்தப் பரம்பரையில் வந்தவர் எல்லாம் ஸ்வயம் ஆச்சார்யர்கள் என்று சொல்லி விட முடியாது!
ஆசார்ய தகுதியும் இருந்து + ஸ்வயமும் இருந்தால் தான் ஸ்வயம் ஆச்சார்யர்!
அஹோபில மடத்து ஆச்சார்யரிடம் பாடம் கேட்பதும், சடங்குகள் செய்து கொள்வதும் ஒரு வகை!
தன் இல்லத்து மூத்த ஸ்வயம் ஆச்சார்யரிடம் செய்து கொள்வதும் ஒரு வகை!
ராகவன் கேட்ட கேள்விகளுக்கு ஓரளவு விடை கிடைத்து இருக்கும் என்று நினைக்கிறேன்!
சைவ சமயத்திலும் ஸ்வயம் ஆச்சார்யர்கள் உண்டு!
அப்பைய தீட்சிதர்கள் வழி வந்தவர்கள் சிலர் ஸ்வயம் ஆச்சார்யர்!
மகான் ஸ்ரீமத் அப்பைய்ய தீட்சிதர் ஒரு சிலருக்குக் குரு!
தன் மாணாக்கர்களுக்கு அவர் ஆச்சார்யர்!
அவர் குடும்ப வழித்தோன்றல்களான நீலகண்ட தீட்சிதர் போன்றவர்களுக்கு அவர் ஸ்வயம் ஆச்சார்யர்!
நன்றி கே.ஆர்.எஸ். அண்ணா. நன்றாக புரிந்து கொண்டேன். கீதாம்மாவோட ஆழ்ந்த விளக்கமும், தங்களின் எளிய பதிலும், என்னை தெளிவுபடுத்துகிறது.
//குருபரம்பரையானது இவரிடம் இருந்து பிரிந்து பல்வேறு வழிமுறைகளில் சென்று விட்டதாயும் சில வைஷ்ணவர்களின் திடமான எண்ணம். எனினும் இவரும் ஒரு ஸ்வயம் ஆச்சாரியரே ஆவார்//
//எனினும் = ???
புதசெவி//
பதின்மூன்றாம் ஆழ்வாரான உங்களுக்கு இது பத்தி நான் சொல்லணுமா என்ன????? :D
//நான் கேட்டது என்னான்னா
குருவுக்குச் சொன்னதையே ஸ்வயம் ஆச்சாரியருக்கும் சொல்லி இருக்கீங்களே!
அப்படின்னா குருவுக்கும்-"ஸ்வயம்" ஆச்சாரியருக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று தான் உங்களைக் கேட்டேன்!//
புரியலைங்கறீங்க??? நம்ப முடியலையே??? சரி, எப்படிப் புரிய வைக்கிறதுனு யோசிக்கறேன்.
//பின்னூடத்தை அவசரப்படாம நிதானமாகப் படிச்சிட்டு மெள்ள வந்து பதில் சொல்லுங்க!:-)//
அட, கடைசியிலே இப்படிச் சொல்லிட்டிங்களே?? :((((((
சரி, உங்களுக்குப் புரியாமல் இல்லை, ஆனால் நான் தான் சொல்லணும்னு எதிர்பார்க்கிறீங்கங்கறவரை புரிஞ்சது, ஆனால் ராகவனுக்குச் சொல்லும்போது உங்களுக்கும் புரிஞ்சு தான் இருக்குனு தெரியுதே?? :P அப்புறம் எதுக்கு இந்தக் கேள்வி???
//3. ஸ்வயமாச்சார் யார்?, அவருக்குரிய தகுதிகள் யாவை ? வேத சாற்றுமறை கற்று தேர்ச்சி பெற்றால் மட்டும் போதுமா ?//
ராகவன், ஸ்வயம் ஆச்சார்யர் என்பவர்கள், குருவாக இருக்கத் தகுதியும் படைத்தவர்களே, எப்படி என்று நடைமுறை விளக்கம் தேவையானால், துரோணாச்சாரியார், ஏகலைவனுக்குக் குரு, அதே சமயம் அர்ஜுனனுக்கு ஆச்சாரியர், இப்போக் கொஞ்சமாவது புரியும்னு நினைக்கிறேன். வேதசாற்றுமுறைகள் கற்றுத் தேறாமலேயே குருவாகவும், ஸ்வயம் ஆச்சாரியராகவும் இருக்கலாம், இருக்கவும் முடியும், ஏனெனில் ஸ்வயம் ஆச்சாரியர்கள், தன்னில், தன்னை உணர்ந்து ஞானம் பெற்றவர்கள் என்பதை அவர்கள் சீடர்கள் உள்ளுணர்வு சொல்லுவதாலேயே அவர்களைத் தம் குருவாக ஏற்றுக் கொள்கின்றனர்.
துரோணாச்சாரியார்-ஏகலைவன்,
துரோணாச்சாரியார்=அர்ஜுனன், ஒரு நடைமுறை உதாரணத்துக்கு மட்டுமே சொல்கின்றேன்.
//4. சைவ சமயத்தில் ஸ்வயமாச்சார்யர் உள்ளனரா?//
ம்ம்ம்ம்????? சைவம், வைணவம்னு பிரிச்சால் இப்படித் தான் கேள்வி வரும். அதே சமயம் ஆச்சாரியர்கள் மட்டும்னு பார்த்தால் சங்கராச்சாரியார் தான் முதலில் வருவார். அவருக்குப் பின்னரே மற்றவர்கள். என்ன ஒரு வித்தியாசம்னு கேட்டால் அவர் வழிபாட்டு முறைகளையும் வகைப்படுத்திவிட்டார். ஆகவே சைவம், வைணவம்னு சொல்லவேண்டியதா இருக்கு, அதனாலேயே தனியா சைவத்திலே இருக்காங்களானு கேட்கிறீங்க! சைவத்திலே அத்தனை பேருமே தங்களை சிவனடியார்களாய்த் தான் நினைத்தார்கள். யாருமே தங்களை ஒரு குருவாகவோ, ஆச்சாரியனாகவோ கருதவில்லை. வயதில் மிக மூத்த அப்பர், திருஞானசம்மந்தரை வணங்கிய வரலாறும் உண்டு.
//. பொதுவாக ஒவ்வொரு வைணவரும் தன்னுடைய குருவிடம் தான் ஸமாஷனம் செய்து கொள்ள வேண்டும்.
ஆனால், அவருடைய குடும்பத்தில் ஸ்வயமாச்சார்யர்கள் இருக்கும் பட்சத்தில், அவர் ஸமாஷனம் செய்து வைக்க தகுதி உள்ளவர் ஆகிறார். (எனக்கும், என் குடும்பத்தினர்க்கும் என் பெரியப்பா தான் ஸமாஷனம் செய்து வைத்தார். என் பெரியப்பா "பரவஸ்து. நாரயண அய்யங்கார்", வேதம், பிரபந்த வியாக்யானம் அனைத்திலும் கரை கண்டவர் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. எனக்குள்ள சந்தேகம் இதுதான்,//
ம்ம்ம்ம்ம்ம்???????? எனக்குத் தெரிஞ்சு குருகிட்டே தான் ஸ்ம்ரக்ஷணம் செய்துக்கணும், உங்க பெரியப்பா அதுக்குத் தகுதி படைச்சிருந்திருக்கார்னா அது பெரிய விஷயம் தான். ஆனால் இது பத்தி, நான் எங்க வைணவ நண்பர்கள் கிட்டே கேட்டுத் தான் சொல்லணும், நான் ஒரு கை நாட்டு இந்த மாதிரி விஷயத்திலே, ஒருவேளை கே ஆர் எஸ் சொல்லி இருப்பதும் சரியாக இருக்கலாம். :))))))
//சைவ சமயத்திலும் ஸ்வயம் ஆச்சார்யர்கள் உண்டு!
அப்பைய தீட்சிதர்கள் வழி வந்தவர்கள் சிலர் ஸ்வயம் ஆச்சார்யர்!
மகான் ஸ்ரீமத் அப்பைய்ய தீட்சிதர் ஒரு சிலருக்குக் குரு!
தன் மாணாக்கர்களுக்கு அவர் ஆச்சார்யர்!
அவர் குடும்ப வழித்தோன்றல்களான நீலகண்ட தீட்சிதர் போன்றவர்களுக்கு அவர் ஸ்வயம் ஆச்சார்யர்!//
ம்ம்ம்ம்?????? அப்படித் தெரியலை, என்றாலும் இது பத்தி விசாரிக்கணும்,
அடடே, இப்பதான் மற்ற பின்னூட்டங்களைப் பார்த்தேன்...
அப்பைய, நீலகண்ட தீட்சிதர்கள் பற்றி நானே மதுரையம்பதில எழுத நினைத்திருந்தேன்.....சூப்பர்....
பதிவு முழுவதையும் படித்து விட்டேன். பின்னூட்டங்களையும் - அவை பற்றிய மறுமொழிகள் - பதில் மொழிகள் - விவாதங்கள் - புதசெவிகள் - அனைத்தும் பொறுமையாகப் படித்தேன். புரிந்தது - புரியவில்லை.
ம்ம்ம்ம்ம் - நான் புரிந்து கொண்டது : கற்றுக் கொடுப்பவன் ஆச்சார்யன். அவனை உருவாக்குபவன் குரு.
ஆளெ விடுங்கப்பா
Post a Comment