
இங்கேயே வாதமும், பிரதிவாதமும் நடக்கும். ஒவ்வொருவரும் தாங்கள் கற்றதிலிருந்து தெரிந்து கொண்டவற்றை வைத்து ஒருவருக்கொருவர் வாதம் புரிந்துகொள்வார்கள். கிரியோ?? அருகே கூட வரமாட்டான். நின்று கூடக் கேட்டதில்லை. அவனுக்குப் படிப்பு என்றால் வேப்பங்காய் சாப்பிடுவது போலவோ? என எண்ணிக் கொண்டனர் சீடர்கள். அந்த நாள் இனிய நாள்! யாருக்கு?? கிரிக்கு மட்டுமே! மற்றவர்களுக்கு? இதோ ஆச்சாரியாரின் திருவிளையாடல் காண்போமா??
பாடம் சொல்ல ஆச்சாரியர் உட்கார்ந்தாயிற்று. சீடர்களும் வந்து அமர்ந்தனர். ஆனால் குருவோ பாடத்தை ஆரம்பிக்கவில்லை. நேரமோ போய்க் கொண்டிருந்தது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர் சீடர்கள். ஒவ்வொருவராக மாறி மாறி குரு தன் சீடர்களைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுத் தன் மோனநிலைக்குப் போகத் தொடங்க, ஆஹா, மெளனமா?? மெளனமாய் குரு இருந்து உபதேசம் செய்வதும் உண்டுதான், ஆனால் இன்று பாஷ்யம் மிச்சமும் படிக்கவேண்டுமே? என்ன செய்வது? (இப்போன்னா பசங்க ராக்கெட் விட்டிருப்பாங்க, சாக்பீஸ் பறக்கும், ஆசிரியர் மேலே, ஆனால் இவங்க அந்தக் கால சீடர்களாச்சே? :P :P) சற்றே துணிச்சலுடன் பத்மபாதர், "குருவே, இன்று பாடம் இல்லையோ?" என மிக மிகத் தயக்கத்துடன் கேட்க, கண் திறந்தார் குரு. "கிரி எங்கே? அவனும் வரட்டும்!" மீண்டும் மோனத்தில் ஆழ்ந்தார் சங்கரர். "என்ன கிரியா? " சீடர்கள் ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்துக் கொண்டனர். கிரியா? சிருங்ககிரியா? பத்மபாதர் யோசித்துக் கொண்டிருக்கும்போது "என்ன அது? இனிமையான பாடல் ஒன்று கேட்கிறதே? உங்களுக்கெல்லாம் கேட்கிறதோ?" என்றார் பத்மபாதர், தம் நண்பர்களைப் பார்த்து.
அட, நம்ம ஆசிரியருக்கு கிரி என்னமோ சொக்குப் பொடி போட்டுட்டான் போலிருக்கே?? என்ன இது? கிரியின் குரலில் சங்கீதம்? அதுவும் ஏதோ குரு ஸ்துதி போல் அல்லவா இருக்கு? ஆமாம், குரு ஸ்துதியேதான். கிரிதான் பாடிக் கொண்டிருந்தான். இல்லை, இல்லை, சங்கீதம் அவனிடம் கைகட்டி வாய் பொத்தி, அவன் ஆளுகைக்கு உட்பட்டு ஊழியம் செய்து கொண்டிருந்தது. மொழியோ அவன் நாவிலிருந்து புறப்பட தாம் செய்த பாக்கியம் என்றது. ஆம், கிரி தான் குருவை வணங்கிப் பாடிக் கொண்டிருந்தான். அந்த சந்தோஷம் தாங்காமல் மொழி பிரவாகமாய்ப் பொங்கிற்று.
"விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே
மஹிகோப நிஷத் கதி தார்த்தநிதே
ஹிருதயே கலயே விமலம் சரணம்
பவசங்கர தேசிக மே சரணம்"
என்று தன் ஆசாரியருக்கு தோத்திரம் சொல்லி, உண்மையில் அவர் யார் எனத் தனக்குத் தெரிந்துவிட்டதாயும், சாட்சாத் அந்த ஈசனே இவர் தான், எனவும் பேரொளியான ப்ரப்ரும்மமே ஆசாரியராய் அவதரித்திருக்கின்றது எனவும் சொல்லி வணங்கிப் பாடிக் கொண்டிருந்தான் கிரி. அதைக் கேட்ட மற்றச் சீடர்கள் வெட்கித் தலை குனிய, கிரி தன்னிலை மறந்து பாடிக் கொண்டே குருவின் காலடியில் விழுந்து வணங்கினான். சங்கரர் கண் விழித்தார். பத்மபாதரைப் பார்த்தார்.
"என்ன சிருங்க கிரியா? வெறும் கிரியா?" என வினவினார் சங்கரர் பத்மபாதரிடம். பத்மபாதர் தலை வெட்கத்தால் குனிந்தது. ஆசாரியரின் பிரியமான சீடனாக கிரி மாறினான். தோடகவிருத்தத்தில் அமைந்த அஷ்டகம் அந்த குரு ஸ்துதி என்பதால் அந்த அஷ்டகமும் "தோடகாஷ்டகம்" என்ற பெயரும் பெற்று, அன்று முதல் கிரியும் தோடகர் எனவே அழைக்கப் பட்டார்.
டிஸ்கி:"தோடகாஷ்டகம்" எங்கேயோ வைத்துவிட்டேன். தேடியும் கிடைக்கலை. அஷ்டகம் கிடைச்சதும் எழுத நினைச்சு, இப்போ குரு பூர்ணிமா வந்துட்டதாலேயும், ஏற்கெனவே நிறையப் பேர் துண்டு போட்டு வச்சுட்டதாலேயும் 2 நாள் முன்னதாக வழக்கம்போல் குரு பூர்ணிமா சிறப்புப் பதிவு போட்டாச்சு.
-