Tuesday, July 15, 2008

சிருங்க கிரியா? கிரியா? இல்லை தோடகரா?

துங்காநதிக்கரை, இடம் சிருங்கேரி. சங்கரர் தன் சீடர்களுடன் அங்கே தங்கி , இதுதான் சாரதையைப் பிரதிஷ்டை செய்யச் சரியான இடம் எனத் தேர்வு செய்து தங்கி இருந்த நேரம் அது! சரசவாணி, தான் கொடுத்த வாக்குக்கு ஏற்ப இந்த இடமே சிறந்த இடம், எனத் தேர்ந்தெடுத்துத் தங்கி இருந்த இடம் அது. கலைக்கோயில், கல்விக்கு அதிபதியான கலைவாணி விரும்பித் தங்கிய இடம். அங்கே சாராதாஷ்டகம் பாடிய சங்கரர், தன் சீடர்களுக்குத் தினமும் பாஷ்யமும் பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். முக்கிய சீடர்கள் பத்மபாதர், சுரேச்வரர், ஹஸ்தாமலகர் ஆகியோர். இவர்களில்பத்மபாதரோ நரசிம்மரின் அருள் பெற்றவர், சுரேச்வரரோ, மண்டனமிஸ்ரராக இருந்து வாதம் புரிந்து, பின்னர் சீடர் ஆனவர். அந்தக் கலைவாணிக்கே கணவனாய் இருந்தவர். ஹஸ்தாமலகரோ, கேட்கவே வேண்டாம். பிறந்தப்போவே பிரம்ம ஞானி. உள்ளங்கை நெல்லிக்கனிபோல் ஞானம் விளங்குகின்றது என ஆச்சாரியர் புரிந்துகொண்டு, தன் சீடனாக்கிக் கொண்டவர். இந்தச் சீடர்கள் அங்கே பாஷ்யம் பாடம் சொல்லிக் கொடுக்கக் காத்திருந்தனர் ஒருநாள்.அனைவருக்கும் அவரவர் வித்தையில் சற்றே கர்வம் இருந்தது. இது ஆச்சாரியரும் புரிந்து கொண்டே இருந்தார். எனினும் தக்க நேரம் வரவேண்டுமல்லவா? காத்திருந்தார். அன்று, நேரமும் வந்தது. அங்கே எடுபிடி வேலைகள் செய்து தரவேண்டி ஒரு பையன் இருந்தான். அவன் பெயர் கிரி என்பதாகும். அவனோ ஞானசூன்யம் என்று சொல்லும்படிக்கு, ஏதும் தெரியாதவனாய் இருந்தான். எதையும் ஒரு முறைக்கு இரு முறை சொல்லவேண்டும். "கிரி, பூப்பறித்து வா!" "இதோ குருவே" என்று ஓடுவான். "கிரி, துணிகளை என்ன செய்தாய்?" "துவைத்து உலர்த்தி எடுத்து வந்துவிட்டேன் குருவே!" என்று சொல்வான். இத்தகைய தொண்டுகள் செய்து வந்த அவன் தன் வேலையிலே மட்டுமே கவனமாக இருப்பான்.

இங்கேயே வாதமும், பிரதிவாதமும் நடக்கும். ஒவ்வொருவரும் தாங்கள் கற்றதிலிருந்து தெரிந்து கொண்டவற்றை வைத்து ஒருவருக்கொருவர் வாதம் புரிந்துகொள்வார்கள். கிரியோ?? அருகே கூட வரமாட்டான். நின்று கூடக் கேட்டதில்லை. அவனுக்குப் படிப்பு என்றால் வேப்பங்காய் சாப்பிடுவது போலவோ? என எண்ணிக் கொண்டனர் சீடர்கள். அந்த நாள் இனிய நாள்! யாருக்கு?? கிரிக்கு மட்டுமே! மற்றவர்களுக்கு? இதோ ஆச்சாரியாரின் திருவிளையாடல் காண்போமா??

பாடம் சொல்ல ஆச்சாரியர் உட்கார்ந்தாயிற்று. சீடர்களும் வந்து அமர்ந்தனர். ஆனால் குருவோ பாடத்தை ஆரம்பிக்கவில்லை. நேரமோ போய்க் கொண்டிருந்தது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர் சீடர்கள். ஒவ்வொருவராக மாறி மாறி குரு தன் சீடர்களைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுத் தன் மோனநிலைக்குப் போகத் தொடங்க, ஆஹா, மெளனமா?? மெளனமாய் குரு இருந்து உபதேசம் செய்வதும் உண்டுதான், ஆனால் இன்று பாஷ்யம் மிச்சமும் படிக்கவேண்டுமே? என்ன செய்வது? (இப்போன்னா பசங்க ராக்கெட் விட்டிருப்பாங்க, சாக்பீஸ் பறக்கும், ஆசிரியர் மேலே, ஆனால் இவங்க அந்தக் கால சீடர்களாச்சே? :P :P) சற்றே துணிச்சலுடன் பத்மபாதர், "குருவே, இன்று பாடம் இல்லையோ?" என மிக மிகத் தயக்கத்துடன் கேட்க, கண் திறந்தார் குரு. "கிரி எங்கே? அவனும் வரட்டும்!" மீண்டும் மோனத்தில் ஆழ்ந்தார் சங்கரர். "என்ன கிரியா? " சீடர்கள் ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்துக் கொண்டனர். கிரியா? சிருங்ககிரியா? பத்மபாதர் யோசித்துக் கொண்டிருக்கும்போது "என்ன அது? இனிமையான பாடல் ஒன்று கேட்கிறதே? உங்களுக்கெல்லாம் கேட்கிறதோ?" என்றார் பத்மபாதர், தம் நண்பர்களைப் பார்த்து.

அட, நம்ம ஆசிரியருக்கு கிரி என்னமோ சொக்குப் பொடி போட்டுட்டான் போலிருக்கே?? என்ன இது? கிரியின் குரலில் சங்கீதம்? அதுவும் ஏதோ குரு ஸ்துதி போல் அல்லவா இருக்கு? ஆமாம், குரு ஸ்துதியேதான். கிரிதான் பாடிக் கொண்டிருந்தான். இல்லை, இல்லை, சங்கீதம் அவனிடம் கைகட்டி வாய் பொத்தி, அவன் ஆளுகைக்கு உட்பட்டு ஊழியம் செய்து கொண்டிருந்தது. மொழியோ அவன் நாவிலிருந்து புறப்பட தாம் செய்த பாக்கியம் என்றது. ஆம், கிரி தான் குருவை வணங்கிப் பாடிக் கொண்டிருந்தான். அந்த சந்தோஷம் தாங்காமல் மொழி பிரவாகமாய்ப் பொங்கிற்று.
"விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே
மஹிகோப நிஷத் கதி தார்த்தநிதே
ஹிருதயே கலயே விமலம் சரணம்
பவசங்கர தேசிக மே சரணம்"


என்று தன் ஆசாரியருக்கு தோத்திரம் சொல்லி, உண்மையில் அவர் யார் எனத் தனக்குத் தெரிந்துவிட்டதாயும், சாட்சாத் அந்த ஈசனே இவர் தான், எனவும் பேரொளியான ப்ரப்ரும்மமே ஆசாரியராய் அவதரித்திருக்கின்றது எனவும் சொல்லி வணங்கிப் பாடிக் கொண்டிருந்தான் கிரி. அதைக் கேட்ட மற்றச் சீடர்கள் வெட்கித் தலை குனிய, கிரி தன்னிலை மறந்து பாடிக் கொண்டே குருவின் காலடியில் விழுந்து வணங்கினான். சங்கரர் கண் விழித்தார். பத்மபாதரைப் பார்த்தார்.

"என்ன சிருங்க கிரியா? வெறும் கிரியா?" என வினவினார் சங்கரர் பத்மபாதரிடம். பத்மபாதர் தலை வெட்கத்தால் குனிந்தது. ஆசாரியரின் பிரியமான சீடனாக கிரி மாறினான். தோடகவிருத்தத்தில் அமைந்த அஷ்டகம் அந்த குரு ஸ்துதி என்பதால் அந்த அஷ்டகமும் "தோடகாஷ்டகம்" என்ற பெயரும் பெற்று, அன்று முதல் கிரியும் தோடகர் எனவே அழைக்கப் பட்டார்.

டிஸ்கி:"தோடகாஷ்டகம்" எங்கேயோ வைத்துவிட்டேன். தேடியும் கிடைக்கலை. அஷ்டகம் கிடைச்சதும் எழுத நினைச்சு, இப்போ குரு பூர்ணிமா வந்துட்டதாலேயும், ஏற்கெனவே நிறையப் பேர் துண்டு போட்டு வச்சுட்டதாலேயும் 2 நாள் முன்னதாக வழக்கம்போல் குரு பூர்ணிமா சிறப்புப் பதிவு போட்டாச்சு.-

31 comments:

ambi said...

//தோடகவிருத்தத்தில் அமைந்த அஷ்டகம் அந்த குரு ஸ்துதி என்பதால் //

புதிய செய்தி. அவர் பெயரே தோடகர் தான்னு இத்தனை நாளா நினச்சுட்டு இருந்தேன்.

ஒவ்வோரு விருத்தம் முடிந்தவுடன் நமஸ்காரம் செய்யனும் குருவுக்கு. மொத்தம் 12 or 22..? மறந்து போச்சே! :(

ambi said...

சரி, தோடக விருத்ததுக்கு இலக்கணம் என்ன?
இந்த நேர்-நேர் தேமா, தோசமாவுன்னு ஏதாவது...? :p

ambi said...

இதே எங்க கேஆரெஸ் அண்ணனா இருந்தா, "சிருங்ககிரியா கிரியா இல்லை பக்கிரியா?னு தலைப்பு வெச்சு அசத்தி இருப்பாரு. :)))

கீதா சாம்பசிவம் said...

ஒவ்வோரு விருத்தம் முடிந்தவுடன் நமஸ்காரம் செய்யனும் குருவுக்கு. மொத்தம் 12 or 22..? மறந்து போச்சே! :(
ஒவ்வொரு விருத்தம் முடிஞ்சதும் நமஸ்காரம் செய்யணும் தான், 12 என்றுதான் நினைவு, சமயத்தில் அஷ்டகம் உள்ள புத்தகம் எங்கேயோ வைச்சுட்டேன், இந்த வீட்டு வேலை நடந்ததில் எல்லாம் தலைகீழ், எது, எங்கேனு இன்னும் புரியலை! :((((

கீதா சாம்பசிவம் said...

//தோசமாவுன்னு ஏதாவது...? :p//

தோசமாவு இன்னிக்குத் தான் தீர்ந்தது ஒருவழியா!! போதும், போதும்னு ஆச்சு தீர்க்கறதுக்குள்ளே! :P

கீதா சாம்பசிவம் said...

//இதே எங்க கேஆரெஸ் அண்ணனா இருந்தா, "சிருங்ககிரியா கிரியா இல்லை பக்கிரியா?னு தலைப்பு வெச்சு அசத்தி இருப்பாரு. :)))//

வாஸ்தவம் தான், ஆனால் இதே நானா இருந்தா, "சிருங்ககிரியா, கிரியா, இல்லை போக்கிரியா?"னு தலைப்பு வச்சு உங்களைப் பத்தி எழுதிப் பின்னூட்டங்களாக் குவிச்சிருப்பேன், நேரம், என்ன செய்யறது? இது ஆச்சார்ய ஹ்ருதயமாப் போயிடுச்சே? :P :P :P

கவிநயா said...

அருமையான கதை கீதாம்மா. நன்றி. ஒண்ணும் தெரியாம இருக்கதுல தப்பில்லன்னு நம்பிக்கை வந்துருச்சு :)

கீதா சாம்பசிவம் said...

@kavinaya, கற்றது கைம்மண் அளவுனு சொன்னா அந்த மூதாட்டி, நான் கற்றது அந்த அளவு கூட இல்லை நிஜமாவே!!!! :((((((

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இதே எங்க கேஆரெஸ் அண்ணனா இருந்தா, "சிருங்ககிரியா கிரியா இல்லை பக்கிரியா?னு தலைப்பு வெச்சு அசத்தி இருப்பாரு. :)))//

சிருங்ககிரியா, கிரியா, ஜாங்கிரியா-ன்னு கூட வைக்கலாம்! ஆனாப் பொருத்தமும் வேணுமே! :-)

அடியேன் தலைப்பு:
சிருங்க கிரியில் ஒரு கர்வ கிரி!
(அ)
சங்கராச்சார்ய சீடர்களின் கர்வ பங்கம்!
:-)

//என்ன செய்யறது? இது ஆச்சார்ய ஹ்ருதயமாப் போயிடுச்சே? :P :P :P//

Means Dont justify ends.
But just ends can justify means!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே
மஹிதோபநிஷத் கதிதார்த்தநிதே
ஷ்ருதய கலயே விமலம் சரணம்
பவ சங்கர தேசிக மே சரணம்

ஜகத்குரு சங்கராச்சார்யர் திருவடிகளே சரணம்!

கருணா வருணாலய பாலய மாம்
பவஸாகர துக்க விதூன ஷ்ருதம்
ரசயாகிலதர்சன தத்வவிதம்
பவ சங்கர தேசிக மே சரணம்

ஜகத்குரு சங்கராச்சார்யர் திருவடிகளே சரணம்!

பவதா ஜனதா ஸுகிதா பவிதா
நிஜபோதவிசாரண சாருமதே
கலயேச்வர ஜீவ விவேகவிதம்
பவ சங்கர தேசிகமே சரணம்

ஜகத்குரு சங்கராச்சார்யர் திருவடிகளே சரணம்!

பவ ஏவ பவானிதி மே நிதராம்
ஸமஜாயத சேதஸி கௌதுகிதா
மம வாரய மோஹமஹாஜலதிம்
பவ சங்கர தேசிக மே சரணம்

ஜகத்குரு சங்கராச்சார்யர் திருவடிகளே சரணம்!

ஸுக்ருதே அதிக்ருதே பஹுதா பவதோ
பவிதா ஸமதர்சனலாலஸதா
அதிதீனமிமம் பரிபாலய மாம்
பவ சங்கர தேசிக மே சரணம்

ஜகத்குரு சங்கராச்சார்யர் திருவடிகளே சரணம்!

ஜகதீ மவிதும் கலிதாக்ருதயோ
விசரந்தி மஹா மஹஸஸ்சலத:
அஹிமாம்சுரிவாத்ர விபாஸி புரோ
பவ சங்கர தேசிக மே சரணம்

ஜகத்குரு சங்கராச்சார்யர் திருவடிகளே சரணம்!

குருபுங்க புங்கவ கேதந தே
ஸமதாம் அயதாம் நஹி கோபி ஸுதீ:
சரணாகத வத்ஸல தத்வநிதே
பவ சங்கர தேசிக மே சரணம்

ஜகத்குரு சங்கராச்சார்யர் திருவடிகளே சரணம்!

விதிதா ந மயா விசதைககலா
ந ச கிஞ்சன காஞ்சன மஸ்தி குரோ
த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்
பவ சங்கர தேசிக மே சரணம்

ஜகத்குரு சங்கராச்சார்யர் திருவடிகளே சரணம்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஒவ்வோரு விருத்தம் முடிந்தவுடன் நமஸ்காரம் செய்யனும் குருவுக்கு. மொத்தம் 12 or 22..? மறந்து போச்சே//

8 நமஸ்காரங்கள்!
உனக்குத் தான் கொடுத்தேன் அம்பி!
:-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//(இப்போன்னா பசங்க ராக்கெட் விட்டிருப்பாங்க, சாக்பீஸ் பறக்கும், ஆசிரியர் மேலே, ஆனால் இவங்க அந்தக் கால சீடர்களாச்சே? :P :P) //

என்ன கீதாம்மா,
எங்கள எப்போ தான் புரிஞ்சிக்கப் போறீங்க?
மிஸ் கிளாஸ் எடுக்காம கம்முனு இருந்தா, ரொம்ப நல்லது-ன்னு பசங்க மிஸ் கிட்ட மொக்க போடுவோம்!
இதே மாஸ்டர்-னாலும் ராக்கெட் எல்லாம் பறக்காது! கம்முன்னு தான் இருப்போம்! வகுப்புக்கு வெளீல! :-)

அச்சோ! அச்சோ!
என்ன ஜெர்ரியம்மா நீங்க?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அருமையான பதிவு கீதாம்மா!
இத இத இதத் தான் ஒங்க கிட்ட இருந்து எதிர்பார்த்தேன்!

பணியுமாம் என்றும் பெருமை, சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து!

தோடகர் பணிவும், மற்றவரின் அணிவும் சொன்ன கதை மிக நன்று!

பத்மபாதர் முதலான மற்ற சீடர்களும் அகங்காரம் கொண்டவர்கள் அல்லர் என்றாலும்....

அறிவு, ஞானம், தத்துவம் முதலான சத்து மிக்க பானங்கள், நுரையும் கூடவே தள்ளும்! அதற்குத் தான் சரணாகதி என்னும் நிர்மலமான நீருடன் அவை கலக்க வேண்டும்!

தி. ரா. ச.(T.R.C.) said...

கீதா மேடம் நான் இதுவரை சிருங்ககிரி பார்த்ததில்லை. உங்கள் அனுமதி இல்லாமல் தோடஷ்டகம் பாட்டை வீடியோவில் உங்கள் பதிவில் இட்டதற்கு மன்னித்து விடுங்கள். இந்த அம்பிப் பயல் உங்களை கலாய்ப்பதைப் பார்த்து தாங்க முடியவில்லை அதான் நான் ஏற்கனவே துண்டுபோட்டு வெச்சிருந்த தோடகாஷ்டகத்தை எடுத்து பொட்டு விட்டேன்
பத்மாபாதரும் பெரிய ஆள்தான். குரு கூப்பிட்டவுடன் ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு தண்ணீர் இருப்பதை மறந்து உடனே வரவில்லயா? குருபக்திக்காக அவர் நதியில் கால் வைத்த இடத்தில் ஒரு தாமரை முளைத்து அவரைத் தாங்கவில்லயா. அழகன பதிவு கருத்து மிக்க பதிவு

Raghav said...

கீதாம்மா, இப்புடி எல்லாம் விஷயங்கள் இப்பதான் தெரிஞ்சுக்குறேன். கொஞ்ச நாள் முன்னால தோடகாஷ்டகம் யாரோ ரீமிக்ஸ் பண்ணி கேட்டுருக்கேன். அப்ப அது என்ன பாடல்னே தெரியாம ரசிச்சேன். அதன் அருமை, பெருமைய உங்க பதிவு வண்ணத்தால் தெரிந்து கொண்டேன்.

மதுரையம்பதி said...

மிக அழகிய பதிவு. நன்றி கீதாம்மா...

சிருங்கேரியின் முதல் ஆச்சார்யார் யார்?, தோடகரா?, இல்லை சுக்ராச்சார்யாரா?.

இருப்பதிலேயே தோடக விருத்தம் எழுதுவது கஷ்டமானது என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

ஆச்சார்யாருக்கு பணிவிடை மட்டுமே பண்ணிக் கொண்டிருந்த கிரிக்கு சுத்தமான இலக்கணத்தில், பாட்டாக பாட முடிந்தது என்றால் அதுக்கு
அவரது குருபக்தியே காரணம்.

இறையருள் அடைவதற்கு குருவருள் அவசியம்.

@ அம்பி, எப்போதும் நமஸ்காரம் பண்ணுகையில் குறைந்தது 2 நமளஸ்காரங்களாவது செய்யணுமுன்னு சொல்வார்கள். மினிமமாக ஒரு ஸ்லோகத்துக்கு 2 நமஸ்காரம் அப்படின்னு 16 பண்ணச் சொல்லிருப்பாங்க, நீங்களும் கூட்டத்துல கோவிந்தான்னு நமஸ்காரம் பண்ணியிருப்பீங்க..

@கே.ஆர்.எஸ் அண்ணா, அப்படியே 8 ஸ்லோகங்களுக்கு விளக்கமும் குடுத்துட்டீங்கன்னா நல்லாயிருக்குமே?

மதுரையம்பதி said...

//அதான் நான் ஏற்கனவே துண்டுபோட்டு வெச்சிருந்த தோடகாஷ்டகத்தை எடுத்து பொட்டு விட்டேன்//

@ திரச, ஆக துண்டை உதறித் தோளில் போட்டுக்கிட்டீங்கன்னு சொல்லுங்க.. :))

கீதா சாம்பசிவம் said...

//கீதா மேடம் நான் இதுவரை சிருங்ககிரி பார்த்ததில்லை. உங்கள் அனுமதி இல்லாமல் தோடஷ்டகம் பாட்டை வீடியோவில் உங்கள் பதிவில் இட்டதற்கு மன்னித்து விடுங்கள். இந்த அம்பிப் பயல் உங்களை கலாய்ப்பதைப் பார்த்து தாங்க முடியவில்லை அதான் நான் ஏற்கனவே துண்டுபோட்டு வெச்சிருந்த //

@திராச, சார், வார்த்தைகளே இல்லை, தோடகாஷ்டகம் காசெட் இருக்கு, ஆனால் எப்படிப் பதியறதுனு தெரியாமல் இருக்கேனு நினைச்சேன், அழகான படத்துடன் கூடிய இந்தப் பரிசு நிஜமாவே எனக்கு நிஜமாவே சந்தோஷமாவும், கண்ணில் நீரும் வர வச்சுடுத்து. ரொம்ப ரொம்ப நன்றி சார்.

கீதா சாம்பசிவம் said...

//பத்மபாதர் முதலான மற்ற சீடர்களும் அகங்காரம் கொண்டவர்கள் அல்லர் என்றாலும்....//

@கே ஆர் எஸ்,
கிரியின் பெருமையைக் குறிக்கவும் அவ்வாறு சங்கர விஜயத்தில் சொல்லி இருக்கலாமோ? பத்மபாதரும் குருபக்தி நிரம்பியவர் தான், நீங்களும், திராச சாரும் பத்மபாதரை மட்டுமே இங்கே குறிப்பிடறதிலே என்ன உ.கு.னு புரியலையே???

கீதா சாம்பசிவம் said...

//Means Dont justify ends.
But just ends can justify means//

ஹிஹிஹி, என்னமோ பீட்டர் எல்லாம் வந்திருக்கு போலிருக்கு??? :P :P :P

கீதா சாம்பசிவம் said...

@திராச சார்,
கூடிய சீக்கிரம் சிருங்ககிரிக்கு உங்களயும், உங்கள் தங்கமணியையும் குரு அழைப்பார் எனப் பிரார்த்தித்துக் கொள்கின்றேன். சீக்கிரமே பத்மபாதர் பத்தியும் எழுதறேன் சார், நீங்க யாரும் அவருக்கும் சேர்த்துத் துண்டு போடலைனால். :)))))))

@மதுரையம்பதி,
மெயிலில் இருக்கு பதில், பார்த்துக்குங்க, :P :P :P

கீதா சாம்பசிவம் said...

@ராகவ்,
இது மாதிரிக் கதைகளைக் கேட்டே வளர்ந்ததாலேயோ என்னமோ தெரியலை, இப்போவும் கதை மட்டுமே சொல்லிண்டு இருக்கேன். பார்ப்போம் மிச்சக் கதையும் சொல்ல முடியறதானு? :D

ambi said...

//உனக்குத் தான் கொடுத்தேன் அம்பி!
//

@KRS, மிக்க நன்னி அண்ணா. எனக்கு பழைய நினைவுகளை வரவழைத்து விட்டீர்கள்.

@M'pathi, நல்ல வேளை, TRC sir தோளுல தான் துண்டை போட்டார்னு சொன்னீங்க. :p

@geetha madam, என்ன மேடம், ஒரே பீலிங்கஸா இருக்கு போலிருக்கு. சாம்பு மாமாவை தள்ளி போய் வெங்காயம் உறிக்க சொல்லுங்க. :))

கீதா சாம்பசிவம் said...

//@KRS, மிக்க நன்னி அண்ணா. எனக்கு பழைய நினைவுகளை வரவழைத்து விட்டீர்கள்.//

என்ன மலரும் நினைவுகள்?? ஆசிரியர்களைப் படுத்தி வச்சது தானே?? :P :P :P


//@geetha madam, என்ன மேடம், ஒரே பீலிங்கஸா இருக்கு போலிருக்கு. சாம்பு மாமாவை தள்ளி போய் வெங்காயம் உறிக்க சொல்லுங்க. :))//

ரைட்டு, அவர் தான் வெங்காயம் உரிக்கணும்! :P ஆனால் இப்போ ஒரு மாசமா நோ வெங்காயம்! வெங்காயத்துக்குத் தடா!!! :P :P :P ஆகவே நீங்க உரிக்கிறதை இங்கே சொல்லவேண்டாம், எல்லாருக்குமே தெரியும்! :P :P :P

தி. ரா. ச.(T.R.C.) said...

கீதா மேடம், அம்பி,மௌளி, கேஆர்ஸ். பள்ளிநாட்களில் தினமும் ஒரு ஆறுமாதகாலங்கள் மஹாபெரியவருக்கு தோடகஷ்டகம் சொல்லி நமஸ்காரம் செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.அதுவும் தோடக்ஷ்டகம் சொல்ல் ஆரம்பித்தால் பெரியவர் இருந்த இடத்திலேயே கண்ணைமூடிக்கொண்டு அமர்ந்தவண்ணம் முழுவதையும் கேட்டுவிட்டு நமக்கு ஆசி வழங்கிவிட்டுத்தான் அந்த இடத்தை விட்டு நகருவார்.அந்த ஆசிதான் தாய் தந்தையற்ற சிறுவனை ஆடிட்டர் ஆக்கி வங்கியில் உயர்பதவியில் அமர்த்தியது.
மறக்க முடியுமா அந்த கருணாமூர்த்தியை!

கீதா சாம்பசிவம் said...

அட, உண்மையிலேயே கொடுத்து வச்சிருக்கீங்க நீங்க, அனுபவங்களை எல்லாம் எப்போ எழுதப் போறீங்க??? ஆவலோட காத்துட்டு இருக்கோம்!

Raghav said...

நிறைய சொல்லுங்க கீதாம்மா. எனக்கு இந்த மாதிரி சின்ன வயசில கேட்க கொடுத்து வைக்கல..

சில அனுபவங்கள் மூலமாக பெருமாளை தெரிந்து கொண்டேன். இப்போ, உங்க மூலமா நிறைய விஷயங்கள் புரியுது. என்னுள் ஒரு தேடலையும் உண்டாக்கியுள்ளது. அடுத்த வாரம் நியுயார்க் என்னும் அபிமான ஸ்தலம் போய் ஒருத்தரை தரிசனம் பண்ணப் போறேன்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஆகவே நீங்க உரிக்கிறதை இங்கே சொல்லவேண்டாம், எல்லாருக்குமே தெரியும்! :P :P :P//

கீதாம்மா
நல்லாவே உரிச்சிட்டீங்க! :)

கீதா சாம்பசிவம் said...

ம்ம்ம்ம்ம் ராகவ், நியூயார்க் போனால் தயானந்தரின் அர்ஷவித்யா குருகுலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி கோயிலைப் பார்த்துவிட்டு வாருங்கள். அங்கே உள்ள லைப்ரரி பத்தியும் கேள்விப் பட்டிருக்கேன். அதையும் பாருங்கள். வாழ்த்துகள் சுகமான பயணத்துக்கும் கே ஆர் எஸ்ஸை சந்திக்கப் போவதற்கும்.

குமரன் (Kumaran) said...

பவ சங்கர தேசிக மே சரணம்.

இந்தக் கதை தெரியும்; ஆனால் சிருங்கேரியில் தான் நடந்தது என்று இன்று தான் தெரிந்து கொண்டேன். நன்றி கீதாம்மா.

K. கிருஷ்ணமூர்த்தி said...

Sureswaracharya is the first acharya of Sringeri Mutt. This reply is for mr. Maduraiyambathi. Hello sir I am also a maduraikkaran. now chennai