Monday, March 31, 2008

குருவுக்கு "மிஞ்சிய" சிஷ்யன்


பாடம் நடந்து கொண்டிருந்தது. குரு போதித்துக் கொண்டிருந்தார். சிஷ்யர்கள் அனனவரும் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தனர். எல்லாம் அந்தக் கார்மேகக் கண்ணனைப் பற்றியதே ஆகும். அவனைப் பற்றி வர்ணிக்கும் ஒரு ஸ்லோகம் "தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீக - மேவ மட்சிணி" என வந்தது. குருவானவர் அதை வர்ணிக்கும் வேளையில் கப்யாஸம் என்னும் சொல்லுக்குக் "குரங்கின் ஆசனவாய்" என்ற அர்த்தம் வரும் என விவரித்து விட்டு, பகவானின் கண்களைக் குரங்கின் ஆசனவாய்க்கு ஒப்பிட்டார். கேட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒரு சீடனுக்குக் கண்ணீர் பொங்கி வந்தது. கண்ணீர் விட்டு அழுதான். குருவானவர் தன் பாடம் அவ்வளவு உருக்கமாய் இருந்ததாய் நினைத்தார். ஆனால் சிஷ்யன் விம்மி, விம்மி அழவே குருவுக்குச் சந்தேகமாய் இருந்தது. மற்றவர்களை அனுப்பி விட்டு அந்தச் சீடனிடம், "அப்பனே, ஏன் அழுகின்றாய்? என்ன நடந்தது? இன்றைய பாடம் உனக்குப் புரியவில்லை என்றால் விட்டு விடு! பின்பொரு நாள் பார்த்துக் கொள்ளலாம்," என்று சொன்னார்.

சீடனோ வணக்கத்துடனேயே , "குருவே, தாங்கள் அதி மேதாவி, எனக்கு அதில் சந்தேகமே இல்லை, ஆனால் ஏதோ தவறு நிகழ்ந்திருக்கின்றது. என்னவென்று புரியவில்லை." என்று பணிவுடனேயே தெரிவித்தான். குருவுக்குக் கோபம் ஏறிக் கொண்டிருந்தது. பாடம் புரிந்து கொள்ள முடியாதவன் இங்கே வந்து ஏதோ உளறுகின்றான் என்றே நினைத்துக் கொண்டார். சீடனைப் பார்த்து, "என்ன, விஷயம்? சொல்லு, பார்ப்போம், அந்த வேடிக்கையையும்!" எனக் கேலியாகவே சொன்னார். சீடனோ குருவைப் பார்த்து, "இப்போது தாங்கள் நடத்திய சாந்தோக்ய உபநிடத்தின் முதல் அத்தியாயம், ஆறாவது பகுதியின் ஏழாவது மந்திரப் பாடத்தில் தான், "கப்யாஸம்" என்னும் சொல்லுக்குத் தாங்கள் சொன்ன அர்த்தம் தான், கொஞ்சம் தவறோ என்று மனதில் பட்டது!" மிகுந்த வணக்கத்துடனும், பணிவுடனுமே சொன்னார் சீடர். "என்ன, நான் சொல்லும் அர்த்தத்தில் உனக்குச் ச்ந்தேகமா? வேறு அர்த்தம் சொல்லப் போகின்றாயா? என்ன துணிச்சல்?" எனக் கண்கள் சிவக்கக் கேட்கின்றார்.

"குருவே! பரமாத்வாவின் கண்களைத் தாங்கள் குரங்கின் ஆசனவாயோடு ஒப்பிடுவது எவ்வகையிலும் பொருத்தமே அல்ல! மேலும் கப்யாஸம் என்னும் சொல்லைப் பிரிப்பது எவ்வாறெனில் தாங்கள் அனுமதி அளித்தால் சொல்லுகின்றேன்!" என்று வணக்கத்துடனேயே சீடர் கேட்கின்றார். குருவும் கூறச் சொல்லி ஆணையிடச் சீடன் சொல்கின்றார்:" குருவே "ஆஸ" என்றால் மலருதல் என்று அர்த்தம் வரும் இல்லையா? "கப்யாஸம்" என்றால் ஆதவனால் மலர்ந்தது என்று தானே பொருள் கொள்ள முடியும்? சகல கல்யாண குணங்களும் நிறைந்திருக்கும் எம்பெருமானின் திருக்கண்கள் சூரியனை கண்டதுமே அன்றாடம் மலரும் தாமரையைப் போல் அல்லவோ இருக்க வேண்டும்? இந்த இடத்தில் இவ்வாறு பொருள் கொள்வது தானே சரியானது? மாறாகக் குரங்கின் ஆசனவாயோடு பொருள் கொள்வது சரியாக இருக்காது என்பதே என் தாழ்மையான கருத்து!" எனத் தெரிவிக்கின்றார்.

கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய குருவும் சீடனை அணைத்துக் கொண்டு தன் தவற்றுக்கு வருந்துகின்றார். மிக, மிகப் பெருந்தன்மையோடேயே அந்தச் சீடன் தன் தவற்றைத் திருத்தியமைக்கு அனைவரிடமும் சொல்லி ஆனந்தமும், பெருமையும் கொள்கின்றார். சீடனின் புகழோ உலகெங்கும் பரவியதோடல்லாமல், ஒரு மாபெரும் தத்துவத்தையே இவ்வுலகுக்குத் தருகின்றான். அந்த சீடன் தான் ஸ்ரீபாஷ்யம் போன்ற நூல்களை இயற்றியவரும், வேதாந்த நெறிகளைக் காவிய நடையில் மெருகூட்டி "விசிஷ்டாத்வைதம்" என்னும் தத்துவ தரிசனமாய் உலகுக்கு ஈந்தவரும் ஆன ஸ்ரீ ராமானுஜாச்சாரியார். குருவானவரின் பெருந்தன்மையும், அன்பும், மன்னிக்கும் குணமுமே சீடனையும் பெருமை கொள்ளச் செய்யும் என்பது இங்கே நிதரிசனம் ஆகி விட்டது.

4 comments:

ambi said...

இப்படி ஒரு கதையை மாதவி பந்தலில் கேஆரேஸ் அண்ணா கூட எழுதவில்லை. :))

உங்களுக்கு மட்டும் எப்படி கிடைக்குதோ? சரி, அந்த குருவின் பெயர் என்ன? :D

மெளலி (மதுரையம்பதி) said...

அட! சூப்பர் கதையா இருக்கே?...

அம்பி, கே.ஆர்.எஸ் கிட்ட குரு பெயரை கேட்டு தெரிந்துகொண்டு இங்கயும் ஒரு பின்னூட்டத்த போடுங்க... :)

குமரன் (Kumaran) said...

கீதா அம்மா. கதை சரியான கதை தான். ஆனால் கடைசி பத்தியில் தான் எனக்கு ஐயம். யாதவப்ரகாசர் என்ற திருப்பெயர் கொண்ட அந்த ஆசாரியர் இராமானுஜர் அவர் சொன்ன விளக்கத்தைத் திருத்திய போது வெகுண்டு விலகிச் சென்றார் என்றும் பின்னர் காசி யாத்திரை அழைத்துச் சென்று இராமானுஜரைக் கங்கையில் மூழ்கடித்துக் கொல்லத் திட்டமிட்டார் என்றும் அதில் இருந்து இராமானுஜர் தப்பிப் பிழைத்து காஞ்சிக்குத் திரும்பி வந்தார் என்றும் கடைசியில் இராமானுஜாச்சாரியரிடமே மனம் திருந்தி யாதவப்ரகாசர் சீடராக வந்து சேர்ந்தார் என்றும் இராமானுஜ திவ்ய சரித்திரத்தில் படித்திருக்கிறேன். சரி தானா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இராமானுஜாச்சாரியரிடமே மனம் திருந்தி யாதவப்ரகாசர் சீடராக வந்து சேர்ந்தார் என்றும் இராமானுஜ திவ்ய சரித்திரத்தில் படித்திருக்கிறேன். சரி தானா?//

சரி தான் குமரன்!

//இப்படி ஒரு கதையை மாதவி பந்தலில் கேஆரேஸ் அண்ணா கூட எழுதவில்லை. :))
//

ஏம்பா அம்பி! உனக்கு இன்று வேறு இடம் கிடைக்கவில்லையா? :-))

கீதாம்மா
குமரன் சொன்னபடிக்குக் கடைசிப் பத்தியைத் திருத்தி விடுங்களேன்!
துவேஷத்தால் சீடனைக் கொல்லும் அளவுக்குத் துணிந்த யாதவப் பிரகாசர், பிறகு தமது தாயின் சொல் கேட்டு, பல நாள் கழித்து இராமானுசரிடமே மன்னிப்பு கோரி, சீடனாகவும் சேர்ந்து கொள்வார்!

ஆனால் இராமானுசர் அவரைச் சீடனாகக் கருதாமல் கோவிந்த ஜீயர் என்று ஜீயர் பட்டமே அளித்து வயதுக்கும் முன்னாள் குரு என்கிற ஸ்தானத்திற்கும் மதிப்பளிப்பார்.

கோவிந்த ஜீயர் என்னும் யாதவப் பிரகாசர் மிகப் பெரும் தத்துவ ஞானி. இராமானுசரிடம் மீண்டும் சேர்ந்த பின்பு யதி தர்ம சமுச்சயம் என்ற நூலை எழுதிப் புகழ் பெற்றார். துறவிகள் எப்படி இருக்க வேண்டும் என்கிற இந்நூலை இக்காலத் துறவிகள் பலர் படித்தால்......:-)