Friday, May 9, 2008

ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர!

சக்திக்கும், ஆற்றலைக் கணக்கிடுவதற்கும் குதிரையைப்பயன்படுத்துகின்றோம். அதுபோல் மனமும் ஒரு குதிரையே. குதிரையை அடக்க எவ்வாறு கடிவாளம் தேவையோ, அதே போல் நம் மனமாகிய குதிரையும் பக்தி, ஞானம், விவேகம் என்ற கடிவாளங்களினாலேயே அடங்கும். ஆனால் ஜகத்குரு என்று போற்றப்படும் ஆச்சாரியரோ, பிறப்பிலேயே மனோவலிமை உள்ளவர். அவரின் அவதார நோக்கமே இந்த உலகில் பக்தி மார்க்கத்தின் மூலம் நம் போன்ற சாதாரண மக்களை உய்விப்பதற்கும், அதற்கு ஒரு வழிகாட்டியுமாய் இருப்பதற்குமே. அத்தகைய பரப்பிரம்ம சொரூபத்திற்கே சோதனையும் வந்தது. என்னதான் பரப்பிரம்மம் என்றாலும் மனுஷ ரூபத்தில் வந்து, மானிட வாழ்க்கை வாழ்ந்து வரும்போது அதன் இன்ப, துன்பங்களை அனுபவித்தே ஆகவேண்டும், விதிப்படி. அத்தகைய ஒரு சமயம் ஜகத்குருவின் வாழ்விலும் ஏற்பட்டது ஒரு பெண்ணினால். அதுவும் அந்தப் பெண்ணோ கலைமகளின் உறைவிடம். சரசவாணி, அவள் கணவனோ படைப்புக்காரணம் ஆன பிரம்மனின் அம்சம். தன் கணவன் ஒரு சந்நியாசியிடம் தோற்பதை எந்தப் பெண்தான் விரும்புவாள்? பெண்ணினத்திற்கே உரிய பாசத்தோடும், கணவனின் திறமையையும் அறிவையும் நிலைநாட்டவும் அவள் ஜகத்குருவைப் பார்த்துக் கேட்ட கேள்வி? மனம் நொந்து போய்க் கூனிக் குறுகி உட்கார்ந்தாளாம் சரசவாணியே அத்தகைய கேள்வியைக் கேட்குமாறு நேர்ந்துவிட்டதே?அதிலும் ஒரு இளம் சந்நியாசி, இத்தன நேரம் அத்தனை கேள்விகளுக்கும் சரியான மறுமொழி பகிர்ந்துவிட்டு வாதத்தில் வெல்லப் போகும் நேரம் கேட்டாள் சரசவாணி! "துறவியே, அனைத்து உலகாயத வழக்குகள், வேதம், வேதாந்தம், சாஸ்திரம், சம்பிரதாயம், ஜோதிடம், மருத்துவம், இதிகாசம், கணிதம் என்ற அனைத்திலும் நீர் தேர்ந்து இருக்கின்றீர். இன்னும் ஒரே ஒரு கேள்வி பாக்கி. இல்லற சுகம் பற்றிய உங்கள் கருத்தை இன்னும் 30 நாட்களுக்குள் எனக்குச் சொல்லுவீர்களாக!" என்று சொல்லி விட்டுச் சென்று விட்டாள் சரசவாணி.

யோசனையுடன் தன் சிஷ்யர்களுடன் திரும்பி நடந்தார் சங்கரர். இதில் தோற்றால் சங்கரர் திருமணம் செய்து கொள்ளவேண்டும். சந்நியாச வாழ்வைத் துறக்க வேண்டும். அதுவே நிபந்தனை. என்ன செய்யலாம்? ஒரே குழப்பம்? ஒரு சந்நியாசியான தனக்கு இது எவ்வாறு தெரியமுடியும்? எப்படிப் பார்த்தாலும் இடிக்கின்றதே? அந்த சரசவாணி மிகுந்த கெட்டிக்காரிதான். இப்படி ஒரு இக்கட்டில் கொண்டு நிறுத்திவிட்டாளே? தன் குருவின் முகம் வாடி இருப்பதைக் கண்ட பத்மபாதரின் முகமும் வாடுகின்றது. மெல்ல, மெல்ல அருகிலிருந்த காட்டிற்குள் வருகின்றார்கள். காட்டிற்குள் நடக்கும்போது ஒரு இடத்தில் அநேகப் பறவைகளின் கூச்சல்! ஒரே ஆரவாரம். என்ன வென்று பார்த்தால், ஒரு மன்னன் தன்னந்தனியாய் இறந்து கிடந்தான். வழி தவறிவிட்டானோ என்னமோ? சட்டெனெ ஒரு யோசனை தோன்றியது சங்கரருக்கு. நின்று, திரும்பி பத்மபாதரைக் குறிப்பாய்ப்பார்த்தார் சங்கரர். குரு ஏதோ முக்கிய விஷயம் தெரிவிப்பதை அறிந்த பத்மபாதர் குருவின் அடுத்த உத்தரவுக்குக் காத்திருந்தார்.

"பத்மபாதா! சரசவாணி கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல இந்த மன்னன் உடலை நான் பயன்படுத்திக் கொள்ளப் போகின்றேன். மன்னனின் உடலுக்குள் நான் புகுந்து கொண்டு அரண்மனைக்குச் செல்லப் போகின்றேன். சரியாக ஒரு மாதம் இந்த உடலில் இருந்துவிட்டுத் திரும்புகின்றேன்." இதுவே சங்கரர் சொன்னது. மற்ற சீடர்கள் ஒப்புக்கொள்ள பத்மபாதர் மட்டும் இது சரியெனச் சொல்லவில்லை. "மக்கள் தவறாய்ப் பேசுவார்களே?" என்று கவலைப்பட, "ஆத்மாவைக் காம உணர்வுகள் தாக்காது, பத்மபாதா!" என்றார் குரு. மேலும் சொன்னார்:"இது எனக்குத் தனிப்பட்ட சோதனையாகக் கொள்ளக் கூடாது. சத்தியத்துக்கு நேர்ந்த சோதனை என்றே கொள்ளவேண்டும். மனிதப் பிறவி எடுத்தால் மனிதர்களுக்கு நேரும் அத்தனை சங்கடங்களையும் அனுபவித்தே தீரவேண்டும்." என்று சொல்ல,பின்னர் தன் உடலைப் பத்திரமாய் ஒரு குகைக்குள் வைக்கச் சொல்லிவிட்டுக் கீழே படுத்தார். யோக முறைப்படித் தன் கால் பெருவிரலில் இருந்து உயிரை மேலே வாங்கித் தன் உச்சந்தலை வழியே வெளிக்கொண்டுவந்து மன்னன் உடலில் புகுந்தார். அந்த மாண்ட மன்னன் உடலில் இந்த உலகை ஆண்ட குருவின் உயிர். மாண்டவன் ஆண்டவனாகி மீண்டு வந்தான். தன் உடலை ஒரு முறை பார்த்துவிட்டுச் சங்கரராகிய மன்னன் உடல் நாட்டை நோக்கி நடந்தது. வழியில் மன்னனைத் தேடிக் கொண்டு வந்த அவன் பரிவாரங்கள் மன்னனை வழியிலேயே கண்டனர். "மன்னன் அமருகன் வாழ்க! வாழ்க!" கோஷம் எழுந்தது. மன்னனை மகிழ்விக்க மதுபானம் நிரம்பிய கோப்பையும், அந்தப் புரப் பெண்களும் வந்தனர். சங்கரராகிய மன்னன் பார்த்தார். மன்னனிடமிருந்து தோன்றிய ஒரு புது ஒளி அவர்கள் கண்ணிலிருந்து உள்ளத்துள்ளும் சென்றது.

9 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அங்கு கேட்ட குதிரைக்கு, இங்கு சொல்லாமல் சொல்லி விளக்கம் தந்த கீதாம்மாவின் குதிரை வேகத்துக்குத் தலை வணங்குகிறேன்! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர
சிவ சிவ சங்கர
பவ பவ சங்கர

சங்கரர் இவ்வாறு கூடு விட்டுக் கூடு பாய்ந்து பதில் இருத்ததில் இன்னொரு சூட்சுமமும் இருக்கு!
சர்வ வித்யா, சகல சாஸ்திர விற்பன்னர் ஆதி சங்கரர் நினைத்திருந்தால் நூலறிவு மட்டுமே கொண்டு சரசவாணிக்கு விடை சொல்லி இருக்கலாம்!

ஆனால் ஆசார்யர்கள் எதுவும் உள்வாங்காது (Internalization) ஒப்புக்கு உரைக்க மாட்டார்கள்! எதையும் படிப்பதோடு மட்டுமன்றி உணர்ந்தும் கொண்ட பின்னரே உரைக்கத் தலைப்படுவர்.
அதனால் தான் அவர்கள் ஜகத்குரு!

தவம்செய்வார் தம்கருமம் செய்வார் மற்றல்லார்
அவம்செய்வார் ஆசையுட் பட்டு

மெளலி (மதுரையம்பதி) said...

//ஆனால் ஆசார்யர்கள் எதுவும் உள்வாங்காது (Internalization) ஒப்புக்கு உரைக்க மாட்டார்கள்!//

இதெல்லாம் பண்ணுற ஒரு ஆச்சார்யார் எனக்கு இருக்காரே..
(ஆதிசங்கரரை விட அவர் சிஷ்யர்கள் பெரியவரர்களாமே அதுபோல என் ஆச்சார்யார் என்னை விட சிறியவர்)

மெளலி (மதுரையம்பதி) said...

ஆமாம், கீதாம்மா இதென்ன ஜெயந்தி மஹோத்ஸவ சிறப்புத் தொடரா?, சூப்பர்...கலக்குங்க...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மதுரையம்பதி said...
இதெல்லாம் பண்ணுற ஒரு ஆச்சார்யார் எனக்கு இருக்காரே..
(ஆதிசங்கரரை விட அவர் சிஷ்யர்கள் பெரியவரர்களாமே அதுபோல என் ஆச்சார்யார் என்னை விட சிறியவர்)//

இன்று முதல் மதுரையம்பதியாகிய நீங்கள் குசும்பு-அம்-பதி என்று அழைக்கப்படக் கடவீர்களாக! :-)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

என்ன இருந்தாலும் நீங்க என் குருநாதர் அம்பியை இப்பிடி எல்லாம் ஓட்டக் கூடாது குசும்பு-அம்-பதி அவர்களே! :-)

Geetha Sambasivam said...

இங்கே வந்து விளக்கம் எதுவும் கொடுக்காமல் கும்மி மட்டும் அடிச்சவங்களுக்கு நோ நன்னி! :P

மெளலி (மதுரையம்பதி) said...

//இங்கே வந்து விளக்கம் எதுவும் கொடுக்காமல் கும்மி மட்டும் அடிச்சவங்களுக்கு நோ நன்னி!//

பரவாயில்ல ஏதோ நோ நன்னிங்கறதுடன் விட்டீங்களே!!!, நன்னி, பன்னின்னு திட்டாம :-)

மெளலி (மதுரையம்பதி) said...

என்னாது குசும்பம்பதியா?...எங்க குமரனை இப்படியெல்லாம் திட்டுறீங்க?.... நேத்துத்தான் கூடலம்பதின்னீங்க...அதுக்குள்ள இப்படி..எங்க ஊர்ஸை இப்படியெல்லாம் வம்பிழுக்க கூடாது அப்படின்னு இஷ்டிராங்காச் சொல்லிக்கறேன்... :-)