Thursday, July 10, 2008
சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா????
பிரம்மத்தைப் பற்றியும், பூரண சரணாகதியைப் பற்றியும் படிச்சதும், இது நினைவுக்கு வந்தது. இறைவன் இருக்குமிடம் தேடி அலையவேண்டாம், நம்முள்ளேயே உறைகின்றான் என்றாலும், அதை உணர்ந்தவர் வெகு சிலர். அப்படி உணர்ந்தவர்களும் திரும்பத் திரும்ப இறைவன் புகழைப் பாட பூமியிலேயே பிறக்க ஆசைப்பட்டனர். இன்னும் சிலர் இந்தப் பூமியிலேயே சிரஞ்சீவியாக நிலைக்கவும் நிலைத்தனர், அப்படி நிலைத்தவர்களில் ஆஞ்சநேயரும் ஒருத்தர். ராமர் வைகுண்டம் செல்லத் தயார் ஆனபோது அனைவரும் அவருடன் கிளம்பத் தயார் ஆனார்கள். இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டு அனுமன் மட்டும் தனித்திருக்க, ராமர் அனுமனைக் கூப்பிட்டு, "அப்பா, நீ ஏன் இன்னும் கிளம்பவில்லை? நீ வைகுண்டம் வரவில்லையா?" என்று கேட்டாராம். அனுமனோ, "ராமா, வைகுண்டத்தில் நீ யார்? மகாவிஷ்ணு! உனக்கு அங்கே சேவை சாதிக்க அநேகக் கோடி அடியார்கள் இருக்கின்றார்கள். ஏற்கெனவே உன் வாகனம் ஆக கருடனும், உன் படுக்கையாக ஆதிசேஷனும் இடம் பெற்றிருக்கின்றார்கள். உன்னருகில் அமர உரிமை பெற்ற இரு பெண்களும் இருக்கின்றார்கள். மற்ற அடியார்களோடு அடியாராக நான் அங்கே இருந்து என்ன செய்யப் போகின்றேன்? இந்த உன் ராம அவதாரத்தைக் கண்ட என் கண்கள், ராம காதையைச் சொன்ன என் நாவு, ராம காதையைக் கேட்ட என் செவிகள், உன் சர்வாலிங்கனத்தை உணர்ந்த என் உடல், உணர்வு, உன் அன்பில் திளைத்த என் புலன்கள், இனி இன்னொருவரை நாடுமோ? நான் இங்கேயே இருக்கின்றேன். உன் ராம கதை இந்தப் பூவுலகில் பாடும்வரை, எங்கெல்லாம் பாடப் படுகின்றதோ, சொல்லப் படுகின்றதோ, எழுதப் படுகின்றதோ அங்கெல்லாம் நான் இருப்பேன். நீ எனக்கு அதற்கு மட்டும் அருள் புரிந்தால் போதும்." என்று சொல்ல ராமனும் அவ்வாறே அருள் பாலித்தானாம். ஆஞ்சநேயரும்,
"யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர கிதமஸ்த காஞ்சனம்
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்
மாருதிம் நமத ராட்ச சாந்தகம்"
என்று சொல்லும் வண்ணம் இன்றளவும் ராம காதையைக் கேட்டு அனுபவித்துக் கொண்டிருப்பதாய்ச் சொல்லுவதுண்டு.இதையே தான் தொண்டரடிப் பொடியாழ்வாரும்(??) தன்
"பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா, அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன், அரங்கமாநகருளானே!"
என்று சொல்லி இருக்கின்றார். 13-ம் ஆழ்வார் வந்து இதைச் சொன்னது தொண்டரடிப் பொடிதானானு சொல்ல அழைக்கிறேன். இன்னொருத்தரும் சொல்லி இருக்கார்,. பெயர் நிச்சயம் செய்யாததால் போடவில்லை,
"ஊரிலேன் காணி இல்லை, உறவு மற்றொருவர் இல்லை,
பாரில் நின் பாத மூலம் பற்றினேன் பரம மூர்த்தி,
காரொளிர் வண்ணனே, கண்ணனே கதறுகின்றேன்,
ஆருளர் களை கண் அம்மா, அரங்கமாநகருளானே!"
இப்படி ஆழ்வார்களும், அடியார்களும் வேண்டாம் என்று சொல்லும் சொர்க்கத்தை வேண்டாம் என்று சொன்ன ரிஷி ஒருத்தரும் புராண காலத்திலே இருந்திருக்கின்றார்.அவர் தான் முத்கலர். நானுமே சொர்க்கம் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்! முத்கலரும், அனுமனும், ஆழ்வார்களும் மறுத்த சொர்க்கத்தில் உண்மையில் என்ன இருக்கின்றது? அங்கே போனால் அனுபவித்துத் தீர்த்ததும், மீண்டும் பிறந்து கர்மாவைக் கழிக்க இறைவனைப் பாடி அவனருளாலே, அவன் தாள் பற்றி, சற்றேனும் அவனை மறவாமல் இருந்தால் அதை விடச் சிறந்தது வேறு என்ன உண்டு. "இறைவனைப் பேசாத நாளெல்லாம் பிறவாத நாளே!" என்று இருந்தால் அதுவே போதுமே! கீழே உள்ளவை குமரனின் "புல்லாகிப் பூண்டாகி" தொடருக்கு நரசிம்ம தாசரின் பக்தியைக் குறித்து வியந்த நான் அது பற்றி எழுதிய விமரிசனம். அந்தத் தொடர் மொத்தத்திலும் என்னைக் கவர்ந்ததும் இந்த ஒரு அத்தியாயமே!
பின்னர் மனிதரில் தேவர் ஆன நரசிம்மதாசரின் பக்தி மெய் சிலிர்க்க வைக்கிறது. "உண்ணும் சோறும், பருகும் நீரும் கண்ணனே!" என்ற நிலையில் இருக்கும் நரசிம்மதாசன், குரு சைதன்யர் இன்னும் ஐநூறு பிறவிகள் இருக்கின்றன என்று சொல்லுவதைக் கேட்டு ஆனந்த நடனம் ஆடுகிறான். இதைக் கண்ட மற்றவர் வியந்தாலும் ஐநூறு பிறவிகளிலும் கண்ணனை மறவாமல் இருக்கவேண்டும் என்ற நரசிம்மதாசனின் பக்தியை நினைத்தால் உண்மையிலேயே "அரிது, அரிது, மானிடராய்ப் பிறப்பது அரிது" என்ற தமிழ் மூதாட்டியின் சொல்லின் உண்மையில் மெய் சிலிர்க்கிறது. இப்போ முத்கலர் பற்றிப் பார்ப்போமா???
முத்கலர் என்னும் முனிவர் மிகச் சிறந்த ஞானி, தவசீலர், கேட்பவருக்கு இல்லை என்னாது இயன்றவரை தரும் தயாள குணம் படைத்தவர். எனினும் அன்றாட உணவுக்குத் தேவையான தானியங்களை அவ்வப்போது சேமித்துக் கொண்டே உண்பவர்கள் அவரும், குடும்பத்தினரும். ஆகவே எப்போதுமே ஒரு பத்து நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களே கைவசம் இருக்கும். இது இவ்வாறிருக்க, ஒரு முறை இவரின் ஆசிரமத்துக்கு துர்வாசர் வருகை புரிந்தார். மகிழ்வோடு துர்வாசரை முத்கலர் வரவேற்றார். முத்கலர் மட்டுமின்றி, அவர் குடும்பத்தினரும் துர்வாசர் வரவால் மகிழ்ந்து அவரை வரவேற்றனர், உபசரித்தனர். துர்வாசருக்கு விருந்து அளிக்க விரும்பினார் முத்கலர். துர்வாசரிடம் உணவு அருந்திவிட்டுச் செல்லும்படி கூறினார் முத்கலர். அவர் குடும்பத்தினரும் அவ்வாறே அவரை உபசரித்தனர். துர்வாசருக்கு மிகுந்த நகைப்பாக இருந்தது. ஏளனத்துடன், "எனக்கு உணவளித்து உபசரிக்கும் வல்லமை உன்னிடம் உண்டோ?" என வினவினார் முத்கலரிடம். முத்கலர் தன்னிடம் இருப்பதை வைத்து விருந்து அளிப்பதாய் மிகுந்த வணக்கத்துடன் சொல்ல, துர்வாசரும் ஒப்புக் கொண்டார். முத்கலர் விருந்து அளிப்பதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கச் சென்றார். பத்து நாட்களுக்காகச் சேர்த்து வைத்த அனைத்து உணவுப் பொருட்களையும் போட்டு மிக அருமையான விருந்து தயாரிக்கப் பட்டது. துர்வாசர் நதியில் நீராடி நித்திய கர்மானுஷ்டானங்களைச் செய்யப் புறப்பட்டுச் சென்றார். அனைத்தையும் முடித்துக் கொண்டு வந்த துர்வாசருக்கு, முத்கலரும், அவர் மனைவியும் விருந்து அளித்தனர். தங்கள் எளிமையான விருந்தை துர்வாசர் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும் வேண்டிக் கொண்டனர்.
விருந்து எளிமையாக இருந்தாலும், சுவையாகவே இருந்தது. வயிறு நிரம்பத் திருப்தியோடு சாப்பிட்டார் துர்வாசர். யாருக்கும், எதுவும் மிச்சம் வைக்கவில்லை. சாப்பிட்டு முடிந்ததும், அவசரம், அவசரமாய் அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டார். முத்கலரோ, அவர் மனைவியோ சாப்பிட்டார்களா என்று பார்த்துக் காத்திருக்கவில்லை. சாப்பிட்ட பின்னர் முறையாகச் செய்ய வேண்டிய ஆசி வழங்கும் கடமையையும் செய்து முடிக்கவில்லை. துர்வாசர் சென்று விட்டார். ஆயிற்று. விருந்து முடிந்தது. ஆனால் பத்து நாட்களுக்கான தானியங்களைப் போட்டுச் செய்த விருந்து இது! துர்வாசர் அனைத்தையும் அவரே சாப்பிட்டு முடித்துவிட்டார். இனி என்ன செய்வது?? அரைப் பட்டினி, கால் பட்டினி தான். இனி வேண்டும் தானியங்களைச் சேகரித்தாலே, அடுத்து வரும் நாட்களுக்கான உணவு கிட்டும். அதுவரையிலும் கிடைத்த காய், கிழங்குகள் தான். இருக்கும் கொஞ்ச தானியத்தில் கஞ்சி தான். மீண்டும் தானியங்களைச் சேகரித்த பின்னரே முழுச்சாப்பாடு.
இதற்கெனக் கவலைப் படாமல் முத்கலர் மீண்டும் தானியங்களைச் சேகரித்தார். குடும்பத்தினரும் உதவினார்கள். அதுவரையில் கிடைத்தவற்றைச் சாப்பிட்டனர் அவர் குடும்பத்தினரும், அவரும். தானியங்கள் சேகரிக்கப் பட்டது. அதற்குள் துர்வாசர் முதல் முறை வந்து போய்ப் பத்து நாட்களும் ஆகி இருந்தது. சரியாகப் பதினோராவது நாள். இருக்கும் தானியங்களை வைத்து உணவு தயார் ஆனது. குடும்பத்தினர் சாப்பிட அமர்ந்தனர். அந்தச் சமயம் பார்த்து வந்தார் துர்வாசர். தான் மிகுந்த பசியோடு வந்திருப்பதாயும், உணவு கிட்டுமா எனவும் கேட்டார். கடுகடுத்த முகத்துடனேயே இருந்த அவரைப் பார்க்கவே பயமாகவும் இருந்தது. வீட்டில் உள்ளவர் யாரும் இதை எதிர்பார்க்கவில்லை எனினும் துர்வாசரை அமர வைத்து உணவைப் பரிமாறினார்கள். துர்வாசர் இம்முறையும் உணவு அனைத்தையும் அவரே உண்டார். கடு கடுத்த முகத்துடன் உணவை உண்ட அவர் இம்முறையும் ஒன்றும் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டார்.
முத்கலர் குடும்பத்தினரின் அரைப்பட்டினி நிலை தொடர்ந்தது. எனினும் குடும்பத்தினர் யாரும் இதற்காகக் கவலைப்படவில்லை. வருந்தவும் இல்லை. தங்கள் வேலையைத் தொடர்ந்தனர். தினசரி வேலைகளைச் செய்வதும், எஞ்சியுள்ள நேரத்தில் வயல்வெளிக்குச் சென்று தானியங்கள் சேகரித்து வருவதும் வழக்கம் ஆனது. மீண்டும் அதே போல் பத்து நாட்கள் கடந்தது. பதினோராம் நாள் மீண்டும் அழையா விருந்தாளி துர்வாசர், அதே போல் கடுகடுத்த முகத்துடன், மிகுந்த பசியோடு, உணவு அளிக்கும்படியான அதிகாரத் தொனியோடு. மீண்டும் உணவளித்தனர் குடும்பத்தினர். இப்படியே தொடர்ந்தது, இரண்டு மாதங்களுக்கு மேல். துர்வாசர் வரும்போது இருக்கும் தானியங்களை வைத்து உணவு படைப்பதும், வீட்டில் உள்ளவர்கள் அரைப்பட்டினி இருப்பதும், மீண்டும் தானியங்கள் சேர்ப்பதும், துர்வாசர் வருவதும், தொடர்கதையானது. இப்போது இது ஏழாம் முறை!
வரும்போதே இம்முறை துர்வாசர் முகத்தில் மலர்ச்சி காணப்பட்டது. மிகுந்த சுமுகத்தோடு காட்சி அளித்தார். முத்கலரிடம் சொன்னார்:" முத்கலரே! உம்முடைய பணிவும், வினயமும், திட சிந்தையும், விருந்தோம்பும் குணமும் என்னை வியக்க வைத்தது. அதைப் பரிட்சை செய்து பார்க்கவே இம்மாதிரியாக நடந்து கொள்ளவேண்டி வந்தது. ஒன்றையும் மிச்சம் வைக்காமல் உங்கள் அனைவரையும் பட்டினி போட்டுவிட்டு நான் ஒவ்வொரு முறையும் சாப்பிட்டு விட்டுப் போனாலும், நீர் ஒவ்வொரு முறையும் இன்முகத்தோடு விருந்தளித்து எம்மை மகிழ்வித்தீர். உம் பண்பு என்னை மட்டுமில்லாமல் தேவாதிதேவர்களையும் வியக்க வைத்தது. தேவலோகத்திலிருந்து, இதோ உமக்காகப் பொன்மயமான ரதம் வந்துள்ளது. போதும் இப்பூவுலக் வாழ்க்கை! உம் துன்பங்கள் அனைத்தும் இன்றோடு அழிந்து விடப் போகின்றது. கிளம்பும், தேவதூதர்களோடு, சொர்க்கத்துக்கு!" என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்கின்றார். முத்கலரோ???
மிக மிக மெதுவாக, "மகரிஷி, இம்மண்ணுலகுக்கும், அவ்விண்ணுலகுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று எடுத்துரைக்க இயலுமா தங்களால்? என்று கேட்கின்றார். துர்வாசர் சொல்கின்றார்: "பூலோகம் கர்மபூமி. வினைப்பயன்களை அனுபவித்தே தீரவேண்டும். சொர்க்கமோ எனில் போக பூமி. கற்பனைக்கும் எட்டாத சுகங்களை அங்கே அனுபவிக்கலாம். எப்போதும் அங்கே மகிழ்ச்சிதான். துன்பம் என்பதே இல்லை. பூமியில் பிறந்து புண்ணியங்களைச் சேகரித்துக் கொண்டால் ஒழிய சொர்க்கம் இத்தனை எளிதில் கிட்டாது. நீர் இந்தப் பூமியில் செய்த பாவ, புண்ணியங்களின் விளைவாலேயே சொர்க்கம் உமக்குக் கிட்டியுள்ளது என்பதில் சந்தேகமும் இல்லை. அதிலும் உம்போன்ற தவசீலர்களின் செயல்களால் சொர்க்கம் அன்றி வேறு ஏது கிட்டும்? உமக்குத் தகுந்தது சொர்க்கம் ஒன்றே!" என்று சொல்கின்றார்.
முத்கலரோ,"ஸ்வாமி, அங்கே எப்போதும் மகிழ்ச்சி என்றால் குறை ஒன்றும் இல்லையோ? சொர்க்கத்திலும் குறை இருக்குமே ஸ்வாமி?" என வினவ, துர்வாசர், "முத்கலரே, ஒரே ஒரு குறைதான் சொர்க்கத்திலே, புண்ணிய பலன்களை அங்கே வேண்டிய மட்டும் அனுபவிக்கலாமே ஒழிய, புண்ணியங்களை மேன்மேலும் பெருக்கிக் கொண்டு போக அங்கே இடம் இல்லை. புண்ணியத்தைப் பெருக்கிக் கொள்ளவேண்டுமானால், மீண்டும் பூமியில் பிறந்து, தானம், தர்மம், போன்ற நற்செயல்களைச் செய்து, புண்ணியத்தைப் பெருக்கிக் கொள்ளலாமே தவிர, சொர்க்கத்தில் புண்ணியம் பெருக வாய்ப்பே இல்லை" என்று சொல்ல, முத்கலரோ, "ஸ்வாமி, அறச்செயல்கள் செய்ய வாய்ப்பில்லை எனில் அது எவ்வாறு சொர்க்கம் ஆகும்? அப்படி வாய்ப்பில்லாத ஓர் இடம் எனக்குத் தேவை இல்லை. இந்தக் கர்ம பூமியிலேயே மீண்டும், மீண்டும் பிறந்து, கர்மங்களோடு சேர்ந்து அறங்களையும் முறைப்படி செய்து, கர்மங்களுக்கான பலன்களையும் அனுபவித்து, அறச்செயல்களைச் செய்தும், பிறருக்குத் தொண்டுகள் பல செய்தும், வாழவே ஆசைப்படுகின்றேன். இதிலே கிடைக்கும் மன நிறைவும், மன மகிழ்ச்சியும், உங்கள் சொர்க்கத்திலே கிட்டாது எனில் அந்த சொர்க்கம் எனக்குத் தேவை இல்லை, துர்வாசரே, என்ன மிக மிக மன்னிக்க வேண்டுகின்றேன்." என்று சொல்கின்றார் முத்கலர்.
சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல் வருமா???????????????
Subscribe to:
Post Comments (Atom)
27 comments:
//கர்மங்களோடு சேர்ந்து அறங்களையும் முறைப்படி செய்து, கர்மங்களுக்கான பலன்களையும் அனுபவித்து, அறச்செயல்களைச் செய்தும், பிறருக்குத் தொண்டுகள் பல செய்தும், வாழவே ஆசைப்படுகின்றேன். //
சுவர்க்க வாழ்வு என்பது புண்ணிய பலன், அது முடிந்தது என்றால் மறுபடி ஜனனம் இருக்கவே செய்யும். அதனால் தான் முத்கலர் பிறவா நிலை அடைய அறச்செயல்களையும், தொண்டு செய்யும் பாக்கியத்தையும் வேண்டினார் போல.
குமரனின் "புல்லாகிப் பூண்டாகி" எனக்கும் சில தாக்கங்களை ஏற்படுத்தியது என்னமோ உண்மை. சில காலம் கழித்து வேறு ஏதோ படிக்கையில் கூட இந்த கருத்து நினைவில் வந்தது உண்மை.
// நீர் இந்தப் பூமியில் செய்த பாவ, புண்ணியங்களின் விளைவாலேயே சொர்க்கம் உமக்குக் கிட்டியுள்ளது என்பதில் சந்தேகமும் இல்லை. அதிலும் உம்போன்ற தவசீலர்களின் செயல்களால் சொர்க்கம் அன்றி வேறு ஏது கிட்டும்? உமக்குத் தகுந்தது சொர்க்கம் ஒன்றே!" //
ஆக, தவம் மற்றும் அறச் செயல்களால் சுவர்க்கம் கிடைத்து அதன் தொடர்பால் மறுபடி ஜனனம் போன்றவை வேண்டாம். பாவ-புண்ணியமற்ற நீயூட்ரல் ஸ்டேட் மட்டுமே முக்திக்கு வழி என்பதால் தான் ராகவேந்திர ஸ்வாமிகள் தனது புண்ணியத்தை தீர்க்க 400 வருடங்கள் பூவுலகில் பிருந்தாவனஸ்தராக இருக்கிறார் என்றும் சொல்ல கேட்டிருக்கிறேன்.
முத்கலரின் இந்த விருந்தோம்பல் பற்றி நான் முன்பு படித்திருக்கிறேன். இங்கு தந்தமைக்கு நன்றி கீதாம்மா...
//முத்கலரின் இந்த விருந்தோம்பல் பற்றி நான் முன்பு படித்திருக்கிறேன். இங்கு தந்தமைக்கு நன்றி கீதாம்மா...//
உங்களுக்குத் தெரியலைனால் தான் ஆச்சரியமா இருந்திருக்கும், சரி தான்,
//முத்கலர் பிறவா நிலை அடைய அறச்செயல்களையும், தொண்டு செய்யும் பாக்கியத்தையும் வேண்டினார் போல.//
நானும் இதை இப்படித் தான் புரிஞ்சுண்டேன் என்றாலும் எழுதினால் சரியா இருக்குமானு தோணி, காலம்பர தான் அதை எடுத்தேன். பின்னூட்டமாகவே வந்துருக்கு! ஓகே!
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால் வெண்ணீரும்
இனித்த முடைய எடுத்தப் பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே
சொன்னவர் வேறு கருத்து ஒன்றுதான். முத்கலர் பொறுமையும் எண்ணமும் வியகத்தக்கது.நல்ல படைப்பு.
தூர்வாசராவது 11 நாளைக்கு ஒருதரம்தான் வருவார் சிலர் வாரா வாரம் வருகிறாரே
என்றாலும் நரசிம்ம தாசரின் ஆசையை நினைக்கும்போது இன்னும் எனக்கு ஆச்சரியமாவே இருக்கு! எத்தனை ஜென்மம்? எத்தனை பாவம், புண்ணியம்? அத்தனையும் அனுபவிக்கத் தயாரா இருக்கிறதும், அவரோட மன உறுதியைக் காட்டறது இல்லையா??
//தூர்வாசராவது 11 நாளைக்கு ஒருதரம்தான் வருவார் சிலர் வாரா வாரம் வருகிறாரே//
கெளசிக கோத்திரக் காரங்க கேட்கிற கேள்வியா இது??? விசுவாமித்திரர் அவதாரம் எடுக்க வேண்டியது தானே? :P :P :P சிலருக்கு எத்தனை முறை சொன்னாலும் புரியாது, அதிலே இந்த வாரா வாரம் வரவங்களும் ஒண்ணு! :P :P நான் சொன்னேன்னு சொல்லுங்க, வர மாட்டார்.
//குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால் வெண்ணீரும்
இனித்த முடைய எடுத்தப் பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே//
இதுவேதான் எனக்கும் நினைவு வந்தது :)
முத்கலரின் கதையை அருமையாக எடுத்துச் சொன்னமைக்கு நன்றி கீதாம்மா.
இப்பொழுது தான் முத்கலர் பற்றி அறிகிறேன். ஒவ்வொரு ஆச்சார்யர்களின் சிறப்பையும் அறிய ஆவலாக உள்ளேன்.
//பச்சை மாமலை போல் மேனி..
இது குலசேகர ஆழ்வார் பாசுரம். பெருமாள் சம்பந்தம் இருந்தாலே போதும் என்கிறார். படியாய் கிடந்து உன் பவள வாய் காண்பேனே என்று பரவசப்படுகிறார். அதனால் தான் இன்றும் கோவில் கர்ப்பகிருக வாயில் படி குலசேகராழ்வான் படி என்று அழைக்கப்படுகிறது.
அருமையான பதிவு.
ஒரு வகையில் சொர்க்க பதவி கூட கர்மா தான் இல்லையா? ம்ம்.
எங்கே நம்மையும் துர்வாசர் போல வந்து கழுத்தறுக்கறான்னு சொல்லிடுவாங்களோன்னு தான் சில இடங்களுக்கு போவதே இல்லை. :))
//13-ம் ஆழ்வார் வந்து இதைச் சொன்னது தொண்டரடிப் பொடிதானானு சொல்ல அழைக்கிறேன்.//
நான் அவரோட கடைப்பொடி தாசன்.. நாங்களும் சொல்லலாம்ல ?
//கர்மங்களோடு சேர்ந்து அறங்களையும் முறைப்படி செய்து, கர்மங்களுக்கான பலன்களையும் அனுபவித்து, அறச்செயல்களைச் செய்தும், பிறருக்குத் தொண்டுகள் பல செய்தும், வாழவே ஆசைப்படுகின்றேன். //
அப்படியென்றால் அதற்குரிய பலாபலன்கள் என்னவாகும்? ஆத்ம திருப்தி மட்டும் போதும் என்பது போல் உள்ளது. திருமூலர் "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று அருளியது போல் இவரும் ஆசைப்படுகிறார்.
முத்கலரின் கதையை அருமையா இயல்பாச் சொல்லி இருக்கீங்க கீதாம்மா! சொர்க்கம் பற்றிய விளக்கங்களும் அருமை!
அது என்ன...பதிவு ஃபுல்லா ஒரே வைணவப் படமா இருக்கு?
முத்கலரின் படத்தைப் போடக் கூடாதா? :-)
//இதையே தான் தொண்டரடிப் பொடியாழ்வாரும்(??)//
சந்தேகமே வேண்டாம்!
தொண்டரடிப்பொடி ஆழ்வார் தான்!
ராகவன்...
படியாய் கிடந்து பவள வாய் காண்பேனே என்பது தான் குலசேகராழ்வார் பாசுரம்!
கீதாம்மா மேற்கோள் காட்டிய
பச்சை மாமலை போல் மேனி..
மற்றும் ஊரிலேன் காணியில்லை - இவை தொண்டரடிப் பொடியின் திருமாலை!
கீதாம்மா
சொர்க்கம் பற்றி சேக்கிழார் சுவாமிகளும் மிகவும் நயமாக நுனித்துணர்ந்து குறிப்பிடுவார்! அடியார்கள் சொர்க்கம் என்ன, வீடுபேறும் வேண்ட மாட்டார்களாம்!
கூடும் அன்பினால் கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்!
அதாச்சும் இறைவனின் திருவுள்ள உகப்பிற்க்கு மட்டும் தான் தாம் என்று மோட்சமும் கேட்காமல் இருப்பது!
அதைத் தான் ஆஞ்சநேயர் செய்தார். நீங்களும் அவர் செய்ததை அருமையாகச் சொல்லி இருக்கீங்க!
வாழ்க நீ எம்மாள்!
சுப்ரபாத சுலோகம் தான் நினைவுக்கு வருகிறது உங்க பதிவைப் படிக்கும் போது!
த்வத் கோபுர ஆக்ர சிகராணி, நிரீக்ஷ மாணா
ஸ்வர்கா அபவர்க பதவீம், பரமாம் ச்ரயந்த!
மர்த்யா மநுஷ்ய புவனே, மதி மாச்ரயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்!
த்வத் கோபுராக்ர சிகராணி = உன் ஆலய கோபுரத்தின் சிகரத்தைக்
நிரீக்ஷ மாணா = கண்ணாரக் கண்டு
ஸ்வர்கா அபவர்க பதவீம் = சொர்க்கம் மற்றும் மோட்சப் பதவியைக் கூட விரும்பாமல்!
பரமாம் ச்ரயந்த= உத்தமமான உன் சேவையில், திருத் தொண்டில் மட்டும் ஈடுபாடு கொண்டுள்ளார்கள்!
மர்த்யா மநுஷ்ய = அழியும் மானிடப் பிறவிகள் வாழும்
புவனே = பூவுலகில், பிறக்கத் தான்
மதிம் ஆச்ரயந்தே = அவர்கள் எண்ணம் போகின்றது
ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!
http://verygoodmorning.blogspot.com/2007/10/19.html
நன்றி ரவி அண்ணா. திருத்திக்கிறேன்.
முத்கலரின் சரிதத்தைச் சொன்னதற்கு மிக்க நன்றி அம்மா. இதுவரை அடியேன் படித்ததில்லை.
கே.ஆர்.எஸ்,
மிச்சமிருக்கும் சுப்ரபாதத்தை எப்போ எழுதப்போறீங்க...அதையும் சொல்லிடுங்களேன். :)
@கவிநயா, மிக்க நன்றிம்மா!
@ராகவன், குலசேகர ஆழ்வார் பாசுரத்தில் அதிகம் ராமரைப் பத்தி இல்லை வரும்?? :))) போகட்டும், இரண்டாவதாய் நான் எழுதி இருந்தது, "மதுரகவி ஆழ்வார்"னு நினைச்சேன், 13-ம் ஆழ்வார் அவரும் தொண்டரடிப் பொடிதான்னு சொல்றாரே??ம்ம்ம்ம்,., என்ன போங்க, இங்கே வைணவர்கள் வீடுகளிலே திவ்யப்ரபந்தமே இல்லையாம், கூகிளாரிடம் கேட்டால் சீனமொழியில் தந்தார். மொழிமாற்றம் செய்ய முடியலை, மறுபடி முயலணும்! :P
//எங்கே நம்மையும் துர்வாசர் போல வந்து கழுத்தறுக்கறான்னு சொல்லிடுவாங்களோன்னு தான் சில இடங்களுக்கு போவதே இல்லை. :))//
@அம்பி,திரும்பத் திரும்ப ஒரே இடத்துக்குப் போனாலும், அப்புறமா அவங்க துர்வாசராயிடுவாங்க, இல்லைனா வீட்டைச் சொல்லாமக் கொள்ளாம மாத்திடுவாங்க, பார்த்து! ஜாக்கிரதை! :P
@கே ஆர் எஸ், வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் வாங்கிட்டேன், படம் முத்கலர்னு போட்டால் வரவே இல்லை, ரிஷி, முனிவர்கள்னு போட்டால், என்னோட படமே வருது!! :))))))) என்னத்தைச் சொல்ல?????
//கீதாம்மா
சொர்க்கம் பற்றி சேக்கிழார் சுவாமிகளும் மிகவும் நயமாக நுனித்துணர்ந்து குறிப்பிடுவார்! அடியார்கள் சொர்க்கம் என்ன, வீடுபேறும் வேண்ட மாட்டார்களாம்!//
ஹிஹிஹி,பெரிய புராணம் ஏற்கெனவே படிச்சிருந்தாலும் இப்போ மறுபடியும் படிச்சுட்டு இருக்கேன், வேறே ஒரு விஷயதானத்துக்கு, அதனால் சேக்கிழார் பற்றிய சொற்ப அறிவு உண்டு!
@குமரன், மிக்க நன்றி.
//இங்கே வைணவர்கள் வீடுகளிலே திவ்யப்ரபந்தமே இல்லையாம்//
எங்கே கீதாம்மா?, அதே நிலைமை தான் தமிழ்நாட்டில். எனக்கென்னவோ இது நம் பெரியவர்களின் தவறென்று தோன்றுகிறது. தங்கள் பிள்ளைகளுக்கு சரியான முறையிலே கற்றுத்தரவில்லை. நாமே தான் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. கோவிலில் பூஜை செய்வது ஒரு தொழில் என்ற அளவில் தான் எனக்கு தெரிந்திருந்தது. நான் என் வீட்டுப் பெரியவர்களிடம் இருந்து தெரிந்து கொண்டதை விட, ரவி அண்ணா, குமரன், நீங்கள், மெளலி அண்ணா.. உங்கள் பதிவுகள் மூலம் தான் கற்றுக் கொள்கிறேன்.
தன் பிள்ளைகள் படித்து, அமெரிக்கா சென்று நல்லபடியாக இருந்தால் போதும் என்றே அனேகம் பேர் உள்ளனர்.
எனது தாத்தா, பெரியப்பா போன்றோர் சிவன் கோவில் வழியாக செல்லும் போது அதன் கோபுர நிழல் கூட பட்டு விடக்கூடாது என்று விலகி செல்வார்கள் என்று என் அண்ணா பெருமையாக சொல்லிக் கேட்டுள்ளேன். இதெல்லாம் ஏன் என்று எனக்கு புரியவில்லை. உபய வேதாந்திகளாக இருந்து கொண்டு அதனை செயல்படுத்த மறுப்பதன் காரணம் என்ன? ஏட்டுச் சுரைக்காய் என்று மட்டும் நினைக்கின்றனரா?
ஒருபக்கம் ஆழ்வார்களை சேவித்துக் கொண்டு, மறுபக்கம் வேற்று சாதியில் திருமணம் செய்வது "பாவம்" என்று சொல்வது என்ன வகை ?
@ராகவன், நிறையப் பேர் வீடுகளில் கேட்டுப் பார்த்தாச்சு, திவ்யப்ரபந்தம் இல்லைனே சொல்றாங்க, போகட்டும், கோவில்களில் சொல்லக் கூடிய சிலவற்றைக் கேட்டுச் சொல்லுங்க என்று சொன்னால் அதுவும் தெரியறதில்லை! என்னத்தைச் சொல்றது??? :((((((அதெல்லாம் யார் தினமும் படிக்கிறாங்கனு வேறே கேட்கிறாங்க! இனி வரும் தலைமுறையாவது மாற அந்த பெருமாள் தான் துணை செய்யணும்! :((((((((
//எனது தாத்தா, பெரியப்பா போன்றோர் சிவன் கோவில் வழியாக செல்லும் போது அதன் கோபுர நிழல் கூட பட்டு விடக்கூடாது என்று விலகி செல்வார்கள் என்று என் அண்ணா பெருமையாக சொல்லிக் கேட்டுள்ளேன்.//
உடையவரை மட்டும் ஏற்றுக் கொண்டு அவரது வார்த்தைகள், பாஷ்யங்களை விட்டுட்டதன் விளைவே இது. எவ்வாறு இருப்பினும் நாம் இப்பெரியோர்களது வைராக்ய சித்தத்தையும் குருபக்தியினையும் எப்போதும் வணங்கிட வேண்டும்.
// இதெல்லாம் ஏன் என்று எனக்கு புரியவில்லை. உபய வேதாந்திகளாக இருந்து கொண்டு அதனை செயல்படுத்த மறுப்பதன் காரணம் என்ன? ஏட்டுச் சுரைக்காய் என்று மட்டும் நினைக்கின்றனரா?//
சில விஷயங்கள் குல ஆச்சாரம் என்ற முறையில் வந்து நம்மை அழுத்தத்தான் செய்யும் ராகவ். இன்றைய வாழ்க்கை முறையில் எதுவரை நம்மால் செயல்படுத்த முடிகிறதோ அதை முதலில் செய்யத் துவங்குவோம்.
தெரியாதவற்றை அறிந்து கொண்டு செயல்படுத்த ஏதுவான காலங்களில் செயல் படுத்துவோம் என்றே இருக்க வேண்டும்.
நமது சிரத்தைக்கு எற்ற அளவே சூழ்நிலையும், அறிதலும், அனுபவமும் அமையும்.
திவாண்ணாவின் பதிவுகளைப் படிக்கிறீர்கள் தானே?. :))
கீதாம்மா, இந்த நிலைமை மாற நானும் கொஞ்சம் முயற்சி எடுக்கிறேன். திவ்யப் பிரபந்த நூல்களை officeல் print எடுத்து குறைந்தபட்சம் எனது உறவினர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைத்து வருகிறேன். இணைய வசதி உள்ளவர்களுக்கு நமது பதிவுகளை பற்றி தெரியப்படுத்தியுள்ளேன். பார்க்கலம்.
மெளலி அண்ணா, இப்பொழுது தான் நிறைய விஷயங்கள் தெளிவுற துவங்கியுள்ளது. என் தெளிவுறுத்தலுக்கு காரணம் தங்களின் பதிவுகள் தான். இப்பொழுது தான் தொடங்கியுள்ளேன். திவாண்ணா பதிவுகள் பற்றி link கொடுங்களேன். நான் இதுவரை அறிந்ததில்லை.
http://anmikam4dumbme.blogspot.com/
@ராகவன், திவாவின் பதிவின் லிங்க் கொடுத்துள்ளேன், என்னோட பதிவிலே இருந்தும் போகலாம்.
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
போஸ்ட் போட்டா சொல்லக்கூடாதா? நான்தானே இதைப்பத்தி கேட்டேன்?
அருமையான பதிவு.
//கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
போஸ்ட் போட்டா சொல்லக்கூடாதா? நான்தானே இதைப்பத்தி கேட்டேன்?
அருமையான பதிவு.//
மெயில் செக் பண்ற வழக்கம் உண்டோ இல்லையோ??? தெரியலை! :P :P :P
Post a Comment