Monday, September 1, 2008

கீதாசாரியனா??? ஜகதாசாரியனா??? யார் உண்மையான ஆசாரியன்?

இந்தப் புண்ணிய பூமி கர்ம பூமி, எனவும், ஞானபூமி எனவும் சொல்லப் படுகின்றது. இந்த பாரதத் திருநாட்டை நோக்கி ஞானகுருவான தட்சிணாமூர்த்தி ஸ்வரூபமாகத் திருக்கைலையில் ஈசன் அமர்ந்திருக்கும் கோலத்தில் கைலை தரிசனம் காணலாம். அதனாலேயே ஞானபூமி என்று சொன்னார்களோ என்னவோ? ஆனாலும் ஆதிகுரு தட்சிணாமூர்த்தி என்றாலும், அவர் உபதேசித்தது மெளனத்தின் மூலமே. மெளன குருவான அவர் பேசாத குருவாக இருப்பதால், நம்மிடம் பேசி உபதேசம் பண்ணிய ஒரே குரு, முக்கியமாய் அத்வைத வேதாந்திகளுக்கு ஸ்ரீமந்நாராயணனே ஆசார்யன் ஆவான். அவர்களின் கர்மாக்களின் மந்திரங்களின் முக்கிய இடைவெளியில், "கிருஷ்ண, கிருஷ்ண," என்றோ, "கோவிந்தா, கோவிந்தா" என்றோ அல்லது "நாராயணா, நாராயணா" என்றோ சொல்லி, செய்வதை அனைத்தையும் அவனுக்கே அர்ப்பணிப்பார்கள்.

இந்த ஸ்ரீமந்நாராயணனின் பிள்ளையான பிரம்மா, பிரம்மாவின் பிள்ளை வசிஷ்டர், வசிஷ்டரின் மகன் சக்தி, அவர் மகனும் விஷ்ணு புராணம் எழுதியவரும் ஆன பராசரர், பராசரரின் பிள்ளை வியாசர், வியாசரின் மகன், சுகர், சுகர் பிரம்மச்சாரி. பிறந்ததில் இருந்தே பரப்பிரம்மம். இவருக்குக் கிளி மூக்கும், முகமும் வந்த கதை அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த சுகர் திருமணம் செய்து கொள்ளாததால், இவருக்குச் சீடர் மட்டுமே உண்டு. அவர் தான் கெளடபாதர். கெளடபாதரோ, சந்யாஸி. ஆகவே இவருக்கும் சிஷ்ய பரம்பரையே வருகின்றது. இந்த சிஷ்ய பரம்பரையில் வந்தவரே கெளடபாதரின் சிஷ்யர் ஆன கோவிந்த பகவத்பாதர். கோவிந்த பகவத்பாதரின் சிஷ்யரே ஆதிசங்கரர். சங்கரருடைய நான்கு சிஷ்யர்கள் ஆன, பத்மபாதர், தோடகர், ஹஸ்தாமலகர், ஸுரேஸ்வரர் போன்றவர்கள் பற்றியும், அவர்கள் சார்ந்த மடங்கள் பற்றியும் ஓரளவு அறிவோம். இப்படிப் பார்த்தால் நம் ஆசாரியர் என்பவர் ஆதிகுருவான விஷ்ணுவின் சாட்சாத் அவதாரம் ஆன வியாசரே ஆவார். "முநீநா மப்யஹம் வ்யாஸ:" என்று கீதையில் கீதாசார்யனே சொல்லி இருக்கின்றான். மேலும் விஷ்ணு சஹஸ்ரநாமாவளியில் "வ்யாஸாய விஷ்ணு ரூபாய" "வ்யாஸ ரூபாய விஷ்ணவே" என்றும் வருகின்றது. இந்த வேத வியாஸர் அவதாரம் காரணத்துடனேயே ஏற்பட்டது. பராசர முனிவர், குறிப்பிட்ட நேரத்தில் மச்சகந்தியுடன் கூடியதன் விளைவாக ஒரு த்வீபத்தில் தோன்றியவர் வேத வியாஸர். தீவில் பிறந்ததால் அவருடைய பெயர் "த்வைபாயனர்" என்றும், கறுப்பாக இருந்தமையால், "கிருஷ்ணர்" என்றும், இரண்டையும் சேர்த்தே வேத வியாஸரை "கிருஷ்ண த்வைபாயனர்" என்றும் சொல்லுவதுண்டு. கலி தோன்றப் போகின்றது என்பதாலேயே, வேதங்களைக் காத்து அவற்றைத் தொகுத்து மக்களைச் சென்றடையவேண்டியே பகவான் எடுத்த ஒரு அவதாரமே, விஷ்ணுவின் அம்சமே வியாஸர் என்றும் சொல்லுவார்கள். இந்த வியாஸர் வேதங்களைத் தொகுத்தமையால், "வேத வியாஸர்" என்ற பெயர் பெற்றார். மும்மூர்த்திகளின் சொரூபமாயும் வேத வியாஸரைச் சொல்லுவதுண்டு. வியாஸரே "குரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு தேவோ மஹேஸ்வர:" என்றும் திரிமூர்த்திகளும் சேர்ந்தவர் என்றும் சொல்லுவது உண்டு.

அதுவரையிலும் கங்குகரை இல்லாமல் இருந்த வேதங்கள் நான்காய்ப் பிரிக்கப் பட்டது வியாஸராலேயே. தம் சிஷ்யர்களில் பைலரிடம் ரிக்வேதத்தையும், வைசம்பாயனரிடம் யஜுர்வேதத்தையும், ஜைமினியிடம் சாமவேதத்தையும், ஸுமந்துவிடம் அதர்வண வேதத்தையும் உபதேசித்து, இவை பரவ வழி வகுத்துக் கொடுத்தார். இதே வியாசர் தான் புராணங்களையும் பதினெட்டாய்த் தொகுத்து அவற்றையும், மஹாபாரதத்தையும் ஸூத முனிவருக்கு உபதேசித்து அவர் மூலம் இவை பரவ வழி வகுத்தார். இந்த ஸூத முனிவர் வழியாய் வந்தவையே நம் பதினெண் புராணங்கள். இந்த ஸுத முனிவர் பிறப்பால் பிராமணர் இல்லை, தேரோட்டி மகன் என்பதும் குறிப்பிடத் தகுந்தது. பிரம்மதத்துவத்தைச் சொல்லும் பிரம்ம ஸூத்திரத்தையும் வேத வியாஸர் ஏற்படுத்தி, சுகப்பிரம்ம ரிஷிக்கு அவற்றை உபதேசித்தார்.

இந்த பிரம்ம ஸூத்திரத்துக்குப் பாஷ்யம் எழுதியவர்களிலேயே நாம் இன்றைக்கும் பின்பற்றும் ஆசாரிய பரம்பரைக்கு வழி வகுத்த சங்கரர், (அத்வைதம்)ராமானுஜர்,(விசிஷ்டாத்வைதம்) மத்வர், (த்வைதம்), ஸ்ரீகண்டாசாரியார்(சைவ சித்தாந்தம்), வல்லபாசாரியார்(கிருஷ்ண பக்தி மார்க்கம்) போன்றவற்றைத் தம் தம் நோக்கில் எழுதி இருக்கின்றார்கள். ஆகவே மூலம் என்பது ஒன்றே. இதில் நமக்கு எதைப் பிடிக்கிறதோ, அல்லது குடும்ப வழி என்று சிலருக்கு வருகின்றதோ, அல்லது இஷ்டம் என்று சிலருக்குத் தோன்றுகின்றதோ அதை எடுத்துக் கொண்டு அதன்படி பயிற்சி செய்து வருகின்றோம். ஆனால் அனைத்துக்கும் மூல காரணம் வேத வியாஸரே.

அதனாலேயே குரு பூர்ணிமா என்று ஏற்பட்டு வேத வியாஸருக்கு என்று தனியாகப் பூஜை, வழிபாடுகள் செய்து வருகின்றோம். இன்னும் குடும்ப வாழ்வில் ஈடுபட்டவர்களும், திருமணம் ஆகாத பிரம்மசாரிகளும் ஒருபடி மேலே போய் ஆவணி அவிட்டத்தின்போது, பூணூல் போட்டுக் கொள்ளும் முன்னர், வேத வியாஸரைக் கும்பத்தில் ஆவாஹனம் செய்து வழிபட்டு, நைவேத்தியங்கள் செய்து, அந்தப் பிரசாதத்தை வீட்டில் உள்ள அனைவருக்கும் நினைவாய் எடுத்து வந்து கொடுத்து வியாஸரை நினைவு கூருகின்றார்கள். அதோடு அன்றைய தினம் தர்ப்பணம், ஹோமம், போன்றவையும் செய்து ஆராதிக்கின்றனர். இது முன்னர் அனைத்து வர்ணத்தினராலும் செய்யப் பட்டு வந்திருக்கின்றது, என்றாலும் இன்றும் ஒரு சில வேறு வர்ணத்தினரும் விடாமல் செய்து வருகின்றார்கள். ஆனால் சந்யாஸிகள் பூணூல் தரிப்பது இல்லை ஒரு சிலரைத் தவிர. ஆகவே அவர்கள் வியாஸரை நினைவு கூருவதற்காகவே சாதுர்மாஸ ஆரம்பத்தின்போது வியாஸ பூஜை செய்து வழிபடுகின்றார்கள்.


இந்த ஆவணி அவிட்டம் என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்று. ரிக், யஜுர் வேதக் காரர் அனைவருக்கும், ஆவணி மாத அவிட்ட நட்சத்திரத்தில் பெளர்ணமியும் கூடி இருக்கும்போது வந்தால், சாமவேதக் காரர்களுக்கு மட்டும், ஆவணி மாதம் அமாவாசை கழிந்து,(அநேகமாய் பாத்ரபத சுக்ல சதுர்த்தி அன்று) வரும் பிள்ளையார் சதுர்த்திக்கு முதல்நாள் அல்லது பிள்ளையார் சதுர்த்தி அன்று வரும். "வேதாநாம் ஸாமவேதோஸ்மி" என்று கீதையில் கீதாசாரியன் சொன்னது போல் சாமவேதம் மட்டும் தனித்து இருப்பது அதன் ராகங்களுக்காகவோ என்றும் தோன்றுகின்றது.ஆயிரம் சாகைகள் கொண்டதாய்ச் சொல்லப் படும் இவை இசைக்கும் முறையில், அந்த ராகமாகவே ஸ்ரீமந்நாராயணன் விளங்குகிறதாய் அவனே கீதையில் சொல்லுகின்றான். இதனால் மற்ற வேதங்கள் சிறப்பு இல்லை என்று அர்த்தம் இல்லை. இந்த சாமவேதம் மட்டுமே ராகத்தோடு பாடக்கூடியது. அந்த ராகமாகவே ஸ்ரீமந்நாராயணன் விளங்குகின்றான் என்றே அர்த்தம். எப்பொழுதுமே எல்லா கர்மாக்களையும் செய்து முடித்த பின்னரும் ஒவ்வொரு முறையும் செய்த அனைத்தையுமே ஸ்ரீமந்நாராயணனுக்கே சமர்ப்பிக்கின்றோம் இவ்வாறு சொல்லி.

//காயேந வாசா, மனஸேந்த்ரியைர்வா
புத்யாத்மநாவா ப்ரக்ருதேஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம்பரஸ்மை
நாராயாணாயேதி ஸமர்ப்பயாமி//


இந்தப் பதிவும் அப்படியே, ஸ்ரீமந்நாராயணனுக்கே சமர்ப்பணம். குரு பூர்ணிமாவுக்காக எழுதி எப்போவோ வச்சது. ஆனால் அப்போ வேறே போஸ்ட் போட்டுட்டேன், அதனாலும் இன்றைய நாளின் விசேஷத்தைக் கருதியும் இந்த போஸ்ட்.

சொந்த செலவில் மான்யம்:
யாருங்க அது, அங்கே நமக்கு நாமே மானியம் கொடுத்துக்கக் கூடாதுனு சொல்றது?? திராசவா?? ம்ஹூம், சான்ஸே இல்லை, அவர் இங்கே எல்லாம் வர மாட்டாரே! :P கே ஆரெஸ் பதிவுக்குத் தான் போய்ப் பின்னூட்டம் போடுவாராமே? அப்படியா??? :P:P:P

11 comments:

Kavinaya said...

நன்றி கீதாம்மா :)

மெளலி (மதுரையம்பதி) said...

// செய்து வழிபட்டு, நைவேத்தியங்கள் செய்து, //

பச்சைப்பயறு, வெல்லம் போட்டு சுண்டலும், அப்பமும்..ஹிஹிஹி

//சந்யாஸிகள் பூணூல் தரிப்பது இல்லை ஒரு சிலரைத் தவிர. ஆகவே அவர்கள் வியாஸரை நினைவு கூருவதற்காகவே சாதுர்மாஸ ஆரம்பத்தின்போது வியாஸ பூஜை செய்து வழிபடுகின்றார்கள்//

கிருஹஸ்தர்களுக்கும் வியாச பூஜை, சாதுர்மாஸ்ய விரதம் உண்டு... வழக்கொழிந்த பலவற்றில் இதுவும் ஒன்று.

//ஒவ்வொரு முறையும் செய்த அனைத்தையுமே ஸ்ரீமந்நாராயணனுக்கே சமர்ப்பிக்கின்றோம் //

:))

Geetha Sambasivam said...

நன்றி கவிநயா,

மெளலி, குஜராத்தில் இன்னமும் குடும்பஸ்தர்கள் எந்த வர்ணத்தினராக இருந்தாலும் சாதுர்மாஸ்ய விரதம் இருக்கின்றார்கள். ஆகவே கிரஹஸ்தர்களுக்கும் இருந்தது என்பதும் தெரியும், தற்போது அனுசரிப்பது இல்லை என்பதால் அதைக் குறிப்பிடவில்லை. உபாகர்மா அன்றாவது கட்டாயமாய்ச் செய்யவேண்டும் என்பதற்காக எழுதப் பட்டது இது. ஒரு மாதம், காய்கனி வகைகள், ஒரு மாதம் பருப்பு வகைகள், பின்னர் பால், மோர் போன்ற பால் சார்ந்த வஸ்துக்கள் என்று ஒவ்வொரு மாதமும் ஒவ்வொன்றை நீக்கிவிட்டு கடும் விரதம் அனுஷ்டிப்பார்கள் குஜராத்தியர்கள் சாதுர்மாஸ்யத்தில். ராஜஸ்தானில் எங்கே பார்த்தாலும் ராமாயணப்ரவசனம் ஆரம்பித்து நடைபெற்று விஜயதசமியோடு முடியும். ராமாயணப்ரவசனம் என்றால் உத்தரகாண்டம் வரைக்கும் தான் அங்கே எல்லாம். சும்மா பட்டாபிஷேகத்தோடு மங்களம் பாடுவதெல்லாம் இல்லை!

மெளலி (மதுரையம்பதி) said...

//ஒரு மாதம், காய்கனி வகைகள், ஒரு மாதம் பருப்பு வகைகள், பின்னர் பால், மோர் போன்ற பால் சார்ந்த வஸ்துக்கள் என்று ஒவ்வொரு மாதமும் ஒவ்வொன்றை நீக்கிவிட்டு கடும் விரதம் அனுஷ்டிப்பார்கள் //

அதே!, அதே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நல்ல பதிவு கீதாம்மா!

இது போன்ற தகவற் களஞ்சிய பதிவுகள் பலவற்றைத் தொடர்ந்து தாருங்கள்!
இந்தப் பின்னூட்டத்தையும் நாராயாணாயேதி ஸமர்ப்பயாமி என்றே சமர்பிக்கின்றேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஹரித்வாரத்தில் வியாசருக்கு ஆலயம் உண்டு தெரியும்!
தென்னாட்டில் அன்னாருக்கு ஆலயம் உண்டா?

தி. ரா. ச.(T.R.C.) said...

இந்தப் பதிவும் அப்படியே, ஸ்ரீமந்நாராயணனுக்கே சமர்ப்பணம். குரு பூர்ணிமாவுக்காக எழுதி எப்போவோ வச்சது. ஆனால் அப்போ வேறே போஸ்ட் போட்டுட்டேன், அதனாலும் இன்றைய நாளின் விசேஷத்தைக் கருதியும் இந்த போஸ்ட்

அதான் தெரிஞ்ச விஷயமாச்சே. காலமழை தவறலாச்சே அது காலம் தவறி பெய்யலாச்சே என்ற செம்மகுடி பாட்டு ஞாபகத்துக்கு வருது.

தி. ரா. ச.(T.R.C.) said...

அதனாலேயே குரு பூர்ணிமா என்று ஏற்பட்டு வேத வியாஸருக்கு என்று தனியாகப் பூஜை, வழிபாடுகள் செய்து வருகின்றோம்

சரி கீதாம்மா.நல்ல குரு பரம்பரையைப் பற்றி விளக்கிச்சொன்னீர்கள். இதற்கு வியாச பூர்ணிமா என்ற பெயரும் உண்டு
எனக்கும் பதிவுக்கு வந்து பின்னுட்டம், பதிவு போட ஆசைதான். ஆனால் ஒருமாதமாக கடும் வெர்டிகோ பிரப்ளம்.மயக்கம்நிலை இருந்தாலும் அலுவலக பணியையும் விடமுடியவில்லை.நல்ல வேளையாக மகளின் நிச்சியதார்த்தம் 28 ஆம் தேதி கடவுள் கிருபையால் நன்றாக நடந்தது.கலயாணம் அக்டோபர் 31 ஆம் தேதி.அழைப்பு பின்னால் வரும்

Geetha Sambasivam said...

//இது போன்ற தகவற் களஞ்சிய பதிவுகள் பலவற்றைத் தொடர்ந்து தாருங்கள்!
இந்தப் பின்னூட்டத்தையும் நாராயாணாயேதி ஸமர்ப்பயாமி என்றே சமர்பிக்கின்றேன்!//

இது கேஆரெஸ்ஸா?? சந்தேகமா இல்லை இருக்கு? :P:P:P:P


//ஹரித்வாரத்தில் வியாசருக்கு ஆலயம் உண்டு தெரியும்!
தென்னாட்டில் அன்னாருக்கு ஆலயம் உண்டா?//
ஹரித்வாரில் வியாசர் கோயில் இருக்கா என்ன?/ தெரியலை, எங்களுக்கு அப்படி ஒண்ணும் யாரும் சொல்லலை. ஆனால் பத்ரிநாத்தில் இருந்து மேலே ஏறி மானா என்னும் ஊருக்குச் செல்லவேண்டும். கொஞ்சதூரம் வரையில் டாடா சுமோ அல்லது க்வாலிஸில் போகலாம். குறிப்பிட்ட தூரத்தில் வண்டிகள் நின்றுவிடும்./ அப்புறம் ஒரு 3ல் இருந்து 5 கிமீ, நடைப் பயணம் தான். மேலே ஏறிச் சென்று, அங்கே வியாசர் மஹாபாரதம் எழுதிய குகையைப் பார்க்கலாம். பிள்ளையாரும் இருப்பார் அங்கே. அதுக்கும் மேலே வியாசரின் இருப்பிடம் ஆன குகையும், அங்கே சரஸ்வதி நதியின் ஆரம்பஸ்தானமும் இருக்கின்றது. "ஹோ"வென்ற பேரிரைச்சலுடன் சரஸ்வதி அங்கே கண்ணுக்குத் தெரிவாள். அதன் பின்னர் அவள் வடவாமுகாக்னியை ஏந்திக் கொண்டு வருவதால், மறைந்தே வருகின்றாள். அந்த அக்னியின் உஷ்ணமே பத்ரிநாத்தில் உள்ள தப்த குண்டங்கள். நீர் கொதிநிலைக்கும் அதிகமான சூடில் இருக்கும், அரிசியைத் துணியில் முடிந்து நீரினுள் விட்டு ஒரு சுழற்றுச் சுழற்றி எடுத்தால் வெந்து பக்குவம் ஆகி இருக்கும். பத்ரிநாதருக்குத்தினமும் அந்த மாதிரித் தான் நைவேத்தியம் தயாரிக்கப் படும். இதை "போக் தர்ஷன்" என்று சொல்வார்கள். இதில் இருந்தே பிரம்ம கபாலத்திற்குப் பிண்டம் போட எடுத்துத் தரப் படும். ஹிஹிஹி, ரொம்பப் பெரிசா ஆயிடுச்சோ?? நிறுத்திடறேன்! :)))))

Geetha Sambasivam said...

//அதான் தெரிஞ்ச விஷயமாச்சே. காலமழை தவறலாச்சே அது காலம் தவறி பெய்யலாச்சே என்ற செம்மகுடி பாட்டு ஞாபகத்துக்கு வருது//
ஹிஹிஹி, திராச சார், வாங்க, வாங்க, உடம்பு சரியில்லையா?? :((((((( தெரியாது சார், அம்பியும் இதைச் சொல்லவே இல்லை, எங்கே டயப்பர் மாத்தறதிலே பிசி போலிருக்கு! போகட்டும் பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆனது பற்றி சந்தோஷமும், வாழ்த்துகளும், நிறைவான, மகிழ்வான திருமண வாழ்க்கைக்கு வாழ்த்துகள்.

Sivamjothi said...

குரு சாட்சாத் பரப்பிரம்மா
புண்ணியம் செய்யுங்கள்! தான தர்மம் செய்யுங்கள் ! எது புண்ணியம்!
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ?! குருவை வணங்க கூசி
நின்றேனோ!? மறுமுறை கண்ட வாசகத்தில் வள்ளல் பெருமான் உரைத்த
நீதி இது! குருவை பெறவேண்டும்! அதுவே புண்ணியம்! நல்ல சற்குருவை
பெற்று திருவடி உபதேசம் திருவடி தீட்சை பெற வேண்டும்! அவனே புண்ணியம் செய்தவன்!
http://sagakalvi.blogspot.in/2012/02/blog-post_20.html