Thursday, September 11, 2008

ஸ்ரீஹயக்ரீவர் ஜெயந்தி இன்று! ஓணம், திருவோணம்!

வாதிராஜர் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட பின்னர் தியானத்தில் அமர்ந்தார். அவர் கண்களுக்கு வெள்ளைக் குதிரையாக வந்து நிலத்தில் திருவிளையாடல் புரிந்தது ஸ்ரீ ஹயக்ரீவரே என்பது புரிந்தது. தியானம் கலைந்தது. நிலத்து உரிமையாளரோ அற்புதம் செய்த குதிரையை மீண்டும் காணவேண்டும் என ஆசைப் படுகின்றார். வாதிராஜருக்கு உண்மை நிலைமை புரிய, இனி அந்தக் குதிரை கண்ணில் காண முடியாது எனப் புரிய, நிலத்துக்காரரை எச்சரிக்கின்றார். விபரீத ஆசை வேண்டாம் என்றும், அந்தக் குதிரையை இனியும் பார்க்க முயன்றால் ஒருவேளை கண்பார்வையே போய்விடும் என்றும் சொல்லுகின்றார். நிலத்துக் காரரோ, பிடிவாதமாய்க் கண் போனாலும் பரவாயில்லை, என்று அன்று இரவு மீண்டும் நிலத்துக்குப் போய்க் குதிரையின் வரவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்க, குதிரையும் வந்தது. அதைப் பார்த்ததுமே அவர் கண்பார்வையும் போனது. ஆனாலும் நிலத்துக்காரர் கவலைப்படாமல் இறைவனின் அவதார சொரூபத்தைத் தரிசிக்க முடிந்ததை எண்ணி மன மகிழ்ந்து இருந்தார். ஆனால் ஸ்ரீ வாதிராஜர் அவ்வாறு இருக்க முடியாமல் ஸ்ரீ ஹயக்ரீவரை வேண்டிக் கொள்ள, நிலத்துச் சொந்தக் காரரின் கண்பார்வை திரும்புகின்றது.

தெய்வீகக் குதிரையின் காலடி பட்ட இந்த எனது நிலம், இனிமேல் ஸ்ரீ மடத்துக்கே சொந்தம் என்று நிலத்துச் சொந்தக் காரர் அந்த நிலத்தை ஸ்ரீமடத்துக்கே கொடுக்கின்றார். அன்று முதல் அந்த நிலத்தில் விளையும் கடலையை வேகவைத்து வெல்லம், தேங்காய் துருவல் சேர்த்து, ஸ்ரீஹயக்ரீவருக்கு நைவேத்தியம் செய்யும் வழக்கத்தை ஆரம்பித்து வைக்கின்றார் ஸ்ரீவாதிராஜர். இது ஹயக்ரீவ பண்டி என்று அழைக்கப் படுவதாய்த் தெரிகின்றது. (எங்கே பெண்களூருக் காரங்க, வந்து இது சரியா, தப்பானு சொல்லிட்டுப் போங்க, பார்க்கலாம்.)

அம்பி, உடனேயே கடலையை வேக வைக்கக் கிளம்பவேண்டாம், இன்னும் கொஞ்சம் இருக்கு இதிலே! அதுக்குள்ளே கடலை போட அவசரமா?????

ஸ்வாமிக்காகத் தயாரிக்கப் பட்ட நைவேத்தியத்தை ஒரு தட்டில் வைத்துத் தன் இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு தன் தலைக்கு மேல் வைத்துக் கொள்ளுவார் ஸ்ரீவாதிராஜர். அவருக்குப் பின்புறமாய் அந்த வெள்ளைக் குதிரை வடிவில் ஸ்ரீஹயக்ரீவர் வந்து , தனது முன்னங்கால்கள் இரண்டையும் வாதிராஜரின் தோள்களில் வைத்துக் கொண்டு, நைவேத்தியத்தை உண்ணுவார். ஸ்ரீவாதிராஜருக்கும் அதில் கொஞ்சம் மீதி வைப்பார். இறைவனின் உண்மையான பிரசாதம் ஆன அதை ஸ்ரீவாதிராஜரும் தினமும் உண்டு வந்தார். இது அன்றாடம் நடக்க ஆரம்பித்தது. எங்கே போனாலும் ஒரு சிலருக்கு ஒரு சில விஷயங்கள் பிடிக்காமல் போகுமல்லவா?? உலக நியதிக்கு ஏற்ப இப்போது ஸ்ரீமடத்திலும் சிலருக்கு வாதிராஜரின் அருகே வெள்ளைக் குதிரை வடிவில் ஸ்ரீஹயக்ரீவரே நேரில் வந்து உண்ணுவதை நம்ப முடியாததோடு அல்லாமல், அதனால் வாதிராஜரின் கீர்த்தி அதிகரிப்பதைக் கண்டு பொறாமையும் உண்டானது. ஆகவே வாதிராஜர் தினமும் நைவேத்தியக் கடலைப் பிரசாதத்தை உண்ணுவதைத் தெரிந்து கொண்ட அவர்கள் ,அந்த நைவேத்தியத்தில் விஷம் கலந்தால், வழக்கப் படி மீதியை உண்ணும்போது விஷம் கலந்த கடலையை உண்ணும் வாதிராஜர் இறந்து போய் விடுவார் என்று எண்ணிக் கொண்டு, ஒரு நாள் நைவேத்தியத்தில் விஷத்தைக் கலந்து வைக்கின்றார்கள்.

ஆனால் தன் பக்தன் ஒருவன் அநியாயமாய் இறப்பதைக் கண்டு கொண்டு இறைவன் சும்மாவா இருப்பான்?? பக்தனை எப்பாடு பட்டாவது காக்க மாட்டானா?? ஆகவே விஷயத்தைப் புரிந்து கொண்ட குதிரை வடிவில் வந்த ஸ்ரீஹயக்ரீவர் அன்றைய பிரசாதத்தை முழுதும் உண்டுவிட்டு, மயங்கிக் கீழே விழுந்தார். ஏதோ நடந்திருக்கின்றது என்பதைப் பிரசாதம் மிச்சமில்லாதபோதே புரிந்து கொண்ட வாதிராஜர் குதிரை மயங்கிக் கீழே விழவும், இறைவனைத் தியானித்துக் கொண்டு, “வாதிராஜ குள்ளா” என்னும் ஒருவகைக் கத்தரிக்காயை வேகவைத்துக் குதிரைக்குக் கொடுக்க விஷம் நீங்கிய குதிரை துள்ளிக் குதித்தது. ஒவ்வொரு வருஷமும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் வரும் ஹயக்ரீவரின் ஜெயந்தி நாள் அன்று இந்த நைவேத்தியத்தை ஸ்ரீஹயக்ரீவருக்கு அனனவருமே செய்து வழிபடலாம். ஸ்ரீவாதிராஜர் அதன் பின்னர் பல்லாண்டுகள் வாழ்ந்திருந்து ஸ்ரீகிருஷ்ணனுக்கும், ஹயக்ரீவருக்கும் தொண்டுகள் பல புரிந்து, கி.பி. 1600-ம் ஆண்டு “ஸோதே” மடத்தில் பிருந்தாவனப் பிரவேசம் செய்தார்.

9 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

தொடர் மிக அருமையாகச் சென்றது கீதாம்மா...அருமையான தகவல்களை அழகாக பதிந்தமைக்கு நன்றி.

ஒரே ஒரு சந்தேகம்,

//“ஸோதே” மடத்தில் பிருந்தாவனப் பிரவேசம்//

ஸோதே மடத்தின் தலைவர், ஆனா, அவர் பிருந்தாவனம் இருப்பது/பிரவேசம் செய்த இடம் ஸோதே என்னும் இடத்தில் இல்லைன்னு நினைக்கிறேன்...கொஞ்சம் சரிபார்த்துச் சொல்ல முடியுமா?

திவாண்ணா said...

நிறைவான கதை!
அதாவது கதை முடிஞ்சு போச்சுன்னு..... ஹிஹிஹி
நல்லாவே இருந்தது.

//(எங்கே பெண்களூருக் காரங்க, வந்து இது சரியா, தப்பானு சொல்லிட்டுப் போங்க, பார்க்கலாம்.)//

ஆமாம் பெண்களூருக் காரங்க பாத்து சொல்லலாம், அப்ப ஆண்களூரு காரங்க என்ன செய்யறதாம்?

அப்புறம் உங்க followers இங்கேந்துதான் வந்திருக்காங்க போல இருக்கு!
:-))

Geetha Sambasivam said...

//அப்புறம் உங்க followers இங்கேந்துதான் வந்திருக்காங்க போல இருக்கு!
:-))//

இது இன்னிக்குத் தான் நான் பார்த்தேன், அதுக்கு முன்னாலே சொந்த வீட்டிலேயே பார்த்துட்டேனே??? :P :P :P

Geetha Sambasivam said...

எனக்குத் தெரிஞ்சு ஸோதே மடத்தில் தான் பிருந்தாவனப் ப்ரவேசம் செய்திருக்கின்றார், என்றாலும் ராகவேந்திரர் கோயிலில் யாரையானும் கேட்டுட்டு நிச்சயம் செய்து சொல்றேன், மெளலி. வேறே இடம்னா நீங்களே சொல்லலாமோ?????

Geetha Sambasivam said...

@திவா, நீங்க தான் என்னோட follower இல்லையே, அப்புறமா என்ன??? :P:P:P

Kavinaya said...

கதை முடிஞ்சு போச்சா :(
நல்லாருந்தது. நன்றி கீதாம்மா :)

ambi said...

கதையும் முடிஞ்சது, கத்ரிகாயும் காய்ச்சது! :))

உடுப்பி கோவிலில் வாதி ராஜர் ஹயக்ரீவருக்கு கடலை குடுப்பது சித்திரமாக இருக்கு.

Geetha Sambasivam said...

@அம்பி,நானும் உடுப்பி கோயிலில் பார்த்தேன், :P

அது என்ன கத்ரிகாய்?? பிடிக்கலைனா ஒரு காயை இப்படியாப் பழி வாங்கறது? அழகாக் கத்தரிக்காய் என்று எழுதுங்க. ஆயிரம் முறையாவது! :P :P:P:P

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஹயக்ரீவ பண்டி சமையல் குறிப்பெல்லாம் குடுக்க மாட்டீங்களா கீதாம்மா? :)

அருமையான நிறைவான தொடர்-கதை!