Wednesday, October 29, 2008

நாம-சங்கீர்த்தனச் சக்ரவர்த்தி ஸ்ரீதர ஐயாவாள் - 2


ஐயாவாள் திருச்சிராப்பள்ளியில் வசித்த காலத்தில், தினம் மாத்ரு பூதேஸ்வரரை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மாலை தரிசனம் முடிந்தபின் தமது இல்லத்திலேயே ராமாயணம், பாகவதம், பாரதம், சிவபுராணம், என்று சிவ-வைஷ்ணவ பேதமில்லாது ப்ரவசனங்களைச் செய்துவந்தாராம். அப்போது திருச்சியை ஆண்ட நாயக்க வம்சத்து அரசர் வைஷ்ணவ மதத்தை சார்ந்தவராக இருந்தாலும், சமஸ்த ஜனங்களையும் அனுசரித்து ராஜ்யாதிபத்யம் செய்து வந்திருக்கிறார். அப்போது சிலர் அரசரிடம் நல்மதிப்பைப் பெறுவதற்காக மைசூர் சமஸ்தானத்தில் இருந்து வந்த ஐயாவாள் சைவ மதப்பிராசாரம் செய்வதாகவும் வைஷ்ணவத்தை இகழ்வதாகவும் சொல்கின்றனர். நிலையை அறிந்த அரசர் தமது உளவுப் பிரிவின் மூலம் ஐயாவாளைப் பற்றிய உண்மையை அறிகிறார். பின் தம்மிடம் தவறான செய்தியைச் சொன்னவர்களும் ஐயாவளை பற்றி அறியவும், தமது அரசுக்கு உட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் மஹானை எல்லோருக்கும் உணர்த்தவும் உறுதி கொள்கிறார். நேரடியாக ஏதும் சொல்வதோ அல்லது ஐயாவாளை சொல்லச் சொல்வதோ நல்லதல்ல என்று தீர்மானித்து, ஸ்ரீ கிருஷ்ண விக்ரஹத்தினை அலங்கரித்து வீதிவலம் வரச் செய்கிறார். ஐயாவாள் தமது பூஜையை முடித்து தியானத்தில் இருக்கையில் வீதியில் இறைவனது ஊர்வலம் வருகிறது. நாத-வாத்யங்களின் சப்தத்தால் தியானம் கலைந்த ஐயாவாள், வாசலுக்கு வந்து மலர்களும், நிவேதனமும் அளித்துப் பணிகிறார். ஸ்ரீ ஐயாவாள் ஏக பாவத்தில், சிவ-விஷ்ணு வித்யாசம் ஏதும் இல்லாது ஸ்தோத்திரம் செய்கிறார்.


அநித்யத்வம் ஜானன்னதி த்ருடமதர்ப் பஸ்ஸவினய:
ஸ்வகே தோஷே அபிக்ஞ: பரஜுஷிது மூடஸ்ஸகருண:
ஸதாம் தாஸ: சாந்த: ஸமமதிரஜஸ்வரம் தவ யதா
பஜேயம் பாதாப்ஜம் யதுவர தயேதா மம கதா



என்று ஸ்தோத்திரம் செய்கிறார். அதாவது உலகத்தின் அநித்ய நிலையை புரிந்தவனாகவும், கர்வமில்லாதவனாகவும், வினயமுடையவனாகவும், என்னுடைய தோஷங்களை அறிந்தவனாகவும், பிறர் தோஷங்களை அறியாதவனாகவும், எல்லா ஜீவராசிகளிடமும் இரக்கம் உடையவனாகவும், பாகவதர்களுக்கு தாசனாகவும், சாந்தனாகவும், உன் பாதகமலத்தை எப்போதும் பூஜிப்பவனாகவும் எப்போது நான் மாறுவேன் க்ருஷ்ணா என்று கேட்பதாகப் பாடுகிறார். இவ்வாறாக இந்த நேரத்தில் அவர் க்ருஷ்ணன் மீது செய்த ஸ்தோத்திரம் தான் "க்ருஷ்ண த்வாதச மஞ்சரி" என்று கூறப்படுகிறது. அங்கு இருந்த ஊரார் இவரது ஸ்தோத்திரங்களை கேட்டு, அவரது, வினயம், பக்தி போன்றவற்றைப் பார்த்து, அரசர் உட்பட, வைஷ்ணவத்தைப் பழிப்பதாகச் சொன்னவர்கள் உட்பட எல்லோரும் அவரது உன்னத பக்தியினை உணர்ந்து அவர் காலடியில் வீழ்ந்து வணங்கினராம்.


இதே போல திருவிசைநல்லூரில் வசிக்கையில் அங்கிருந்த பண்டிதர்களுக்கு ஐயாவாளிடம் பொறாமை உண்டாகியிருக்கிறது. ஒரு கோகுலாஷ்டமி தினத்தில் விழாவிற்க்கு ஐயாவாளையும் அழைத்திருக்கின்றனர். ஆழ்ந்த பக்தி இல்லாது வெறும் டாம்பீகமான விழாவாக தோன்றியதால் ஐயாவாள் அதில் பங்கேற்காது விட்டு விடுகிறார். வாசலில் க்ருஷ்ணன் ஊர்வலமாக வருகையில் ஐயாவாள் இறைவனை வணங்க வருகிறார். ஆனால் விழாவை நடத்தினவர்கள் கோபித்துக் கொண்டு, உமக்கோ க்ருஷ்ண பக்தி கிடையாது, இப்போது மட்டும் ஏன் வருகிறீர்கள் என்று மறுத்துப் பேசுகின்றனர். ஐயாவாள் அவர்களிடம் தனது க்ருஷ்ண பக்தியை நிருபிக்க வேண்டிய அவசியமில்லை என்று உள்ளே சென்றுவிடுகிறார். உடனே தன் கண்களையே க்ருஷ்ணனின் தோழியாக பாவித்து கோபிகா பாவத்தில் க்ருஷ்ணனனை நினைத்து, "என் ப்ரியசகியான த்ருஷ்டியே, நீலோத்பலம் போன்ற அழகிய காந்தியுடையவனும், சந்த்ர பிம்பத்தைவிட அழகான முகமுடையவனும், நந்தகோபன்-யசோதையின் ஆனந்தத்திற்கு காரணமான கருணாமூர்த்தியான க்ருஷ்ணனை அனுபவி என்று பாடுகின்றார். திடிரென ஊர்வலத்தில் இருந்தவர்கள், தமது விக்ரஹத்தின் பீடம் மட்டும் இருப்பதை காண்கின்றனர். அதே சமயத்தில் ஐயாவாள் பாடுவதும் காதில் விழ, அவர்கள் ஐயாவாள் இல்லத்திற்குள் சென்று பார்த்தால் அங்கு விக்ரஹம் இருக்க ஐயாவாள் தம்மை மறந்து டோலோத்ஸவ ஸேவை சார்த்துவதாக பாடிக்கொண்டிருப்பதை கண்டு பிரமிக்கின்றனர். அவரது பக்தியை உணர்ந்த பண்டிதர்கள், தமது ஊர்வலத்தை விட்டு அங்கேயே இரவு முழுவதும் நாமசங்கீர்த்தனம் செய்து ஐயாவாளிடம் மன்னிப்பும் கேட்டனர். இந்த நிகழ்வின் போது ஐயாவாள் பாடியதுதான் "டோலோ நவரத்ன மாலிகா" என்று சொல்லப்படுகிறது.


திருவிசநல்லூரில் இருந்த காலத்தில் தினம் திருவிடைமருதூர் மஹாலிங்கத்தை தவறாது தரிசனம் செய்தார். ஒருநாள் அதிக மழையின் காரணமாக அவர் காவிரியைக் கடந்து கோவிலுக்கு செல்ல இயலாது தவித்து தாம் ஏதோ சிவாபராதம் செய்திருப்பதாக கலங்குகிறார். அப்போது அவர் செய்த ஸ்தோத்திரம் தான் "ஆர்த்திஹர ஸ்தோத்திரம்" என்று சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் கோவில் அர்ச்சகர் தோற்றத்தில் ஈஸ்வரனே வந்து பிரசாதம் அளித்ததாக சொல்லப்படுகிறது. மறுநாள் கோவிலுக்குச் சென்று அந்த அர்ச்சகரிடம் பேசுகையில் அவர் வரவில்லை என்றும் வந்தது சர்வேஸ்வரனே என்று உணர்ந்து, ஈசனது தயை போற்றும் விதமாக செய்ததே "தயா சதகம்" என்னும் 100 ஸ்லோகங்கள்.


இவ்வாறாக திருவிடைமருதூர் மஹாலிங்கத்தை அர்த்த ஜாம பூஜையில் தரிசிப்பதை வழக்கமாக கொண்ட ஐயாவாள், ஸம்சாரம் என்னும் விசாலமான நாடகமேடையில் எல்லா ரூபங்களும் தரித்து ஆடிப்பாடி களைத்து விட்டேன். சர்வக்ஞனும், தயாபரனுமான நீ போதும் என்று கூறி என்னை ஏற்றுக் கொள்வதுதான் உசிதம் என்று கூறி குமுறிக் குமுறி அழுகிறார். மற்றவர்களுக்கு ஐயாவாள் அழுவதன் காரணும் ஏதும் அறியவில்லை என்றாலும் அவரது பக்தியைக் கண்டு மெய்சிலிர்த்தனர். அப்போது ப்ரேம பக்தியில் உன்மத்தமான ஐயாவாள் தீடீரென கர்ப்பகிரஹத்தை நோக்கி சென்று மஹாலிங்கத்தை ஆலிங்கனம் செய்ய முற்பட்டு, அப்படியே ஜோதிவடிவில் பரமேஸ்வரனை அடைந்தார் என்று கூறப்படுகிறது.

ஸ்ரீகண்டமிவ பாஸ்வந்தம் சிவநாம பராயணம்
ஸ்ரீதரம் வேங்கடேஸார்யம் ச்ரேயஸே குருமாச்ரயே

[ஸாக்ஷாத் பரமேஸ்வரன் போல பிரகாசிக்கிறவரும், எப்போழுதும் சிவநாம ஜபம் செய்வபவருமான ஸ்ரீதர வேங்கடேஸர் என்னும் குருவை ஆச்ரயிக்கிறேன்]

கலியில் நாம ஸ்மரணைதான் சுலபம், அதனை விடாது செய்து, எல்லாம் வல்ல இறையினை உணர இந்த மஹான் அருளட்டும்.

7 comments:

Kavinaya said...

ஆஹா. அருமையான பதிவு. ஸ்ரீதர ஐயாவாள் அவர்களை வணங்கி, இறைவனிடத்தில் பக்தியும் அன்பும் நாமஸ்மரணையும் கைகூடப் பிரார்த்திக்கிறேன். நன்றி மௌலி.

கபீரன்பன் said...

ஓ ! அது ’டோலோ நவரத்ன மாலிகா’ வா ? என்னிடம் உள்ள புத்தகத்தில் ’லோவோ’ என்றிருந்தது. நானும் பொருள் தெரியாமல் முழித்தேன். சந்தேக நிவாரணத்திற்கு நன்றி.

//அப்படியே ஜோதிவடிவில் பரமேஸ்வரனை அடைந்தார் என்று கூறப்படுகிறது//

மணிவாசகரையும் மீராவையும் நினைவுபடுத்துகிறது அவரது பக்தியின் சிறப்பு.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அப்போது சிலர் அரசரிடம் நல்மதிப்பைப் பெறுவதற்காக மைசூர் சமஸ்தானத்தில் இருந்து வந்த ஐயாவாள் சைவ மதப்பிராசாரம் செய்வதாகவும் வைஷ்ணவத்தை இகழ்வதாகவும் சொல்கின்றனர்//

அப்பவே பதிவர்கள் எல்லாம் கும்மி அடிச்சிருக்காங்க போல!
அம்பி நோட் திஸ் பாயிண்ட்! :)

இப்போ வைணவப் பிராசாரம் செய்வதாகவும் சைவத்தை இகழ்வதாகவும் Reverse Hypothesis நடக்குதோ? :))

//ஸ்ரீ கிருஷ்ண விக்ரஹத்தினை அலங்கரித்து வீதிவலம் வரச் செய்கிறார்//

இல்லை மெளலீண்ணா!
திருவிடைமருதூர் மகாலிங்கப் பெருமானுக்குக் கிருஷ்ணாலங்காரம் செய்து வீதியுலா வரச் செய்தார்! இன்றும் ஒரு நாள், திருவிடைமருதூரில், சிவபிரானுக்கு இந்த அலங்காரம் உண்டு!

//தன் கண்களையே க்ருஷ்ணனின் தோழியாக பாவித்து கோபிகா பாவத்தில் க்ருஷ்ணனனை நினைத்து//

அருமை! டோலோ நவரத்ன மாலிகா உண்டான விதம் அருமை!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தயா சதகம்" என்னும் 100 ஸ்லோகங்கள்//

வேதாந்த தேசிகரும் இதே பெயரில் தயா சதகம் என்று திருமலையப்பன் மீது அருளிச் செய்துள்ளார்!
இவர் ஸ்ரீதர வேங்கடேசர்!
அவர் தூப்புல் வேங்கடநாதர்!
ஒரு வேளை தயா சதகம் செய்யணும்னா, "வேங்கட" என்ற தொடர்பு வேணுமோ? :)

//கபீரன்பன் said...
ஓ ! அது ’டோலோ நவரத்ன மாலிகா’ வா ? என்னிடம் உள்ள புத்தகத்தில் ’லோவோ’ என்றிருந்தது//

கபீரன்பன் ஐயா
வடமொழியில், டோலா/டோலோ என்பது ஊஞ்சல்!

டோலோத்சவம் என்று அதான் பெயர்!
ஸ்ரீதர ஐயவாள் அதான் டோலோ நவரத்ன மாலிகா என்று அருளிச் செய்தார்.

கபீரன்பன் said...

// வடமொழியில், டோலா/டோலோ என்பது ஊஞ்சல்! //

நன்றி கே.ஆர்.எஸ்,
முறையாகச் சொன்னால் दोलिका, दोली என்பதுதான் ஊஞ்சலைக் குறிக்கும் வடமொழிச் சொல். தமிழில் ’தூளி’ என்று சொல்வதும் அது மறுவி வந்ததுதான். இந்த ‘द’னா எப்படி ‘ड’ணாவாச்சு ? அனேகமாக இது தெலுங்கு வழியாக வரும்போது ஏற்பட்டுள்ள திரிபு என்றே நினைக்கத் தோன்றுகிறது. அகராதிகள் தரும் விளக்கங்கள் கீழே.
___________________________
दोलिका dōlikā दोली dōlī : (page 839)

दोलायित दोलित a. Swung, shaken, oscillating &c.
दोलिका dōlikā दोली dōlīदोलिका दोली 1 A cradle.-2 A swing.
_____________________________

தொட்டில் toṭṭil : (page 2084)
Cradle, swinging cot for an infant; குழந்தைகளைப் படுக்கவைத்து ஆட்டற்குரிய மஞ்சம் அல்லது தூளி

Geetha Sambasivam said...

झूला = ஊஞ்சல்
डोला = மூடு பல்லக்கு
डोली सजा के लेना = மணப் பெண்ணைக் கல்யாணத்திற்கு அழைத்து வரப் பயன்படும், இன்றும் அநேகமாய்ப் பெரிய பணக்காரர்கள் வீடுகளில் இந்த வழக்கம் உண்டு.
डोलना= அசைத்து அசைத்து எடுத்துச் செல்லுதல் என்றும் சொல்லலாம். ஊஞ்சல் உற்சவத்தில் இறைவனை அதில் வைத்து அசைப்பதால் "டோலோத்சவம்" என்று வழங்கப் படுகிறது. கபீரன்பனும் சொல்லி இருக்கார். அதை அப்புறமே பார்த்தேன்.

Geetha Sambasivam said...

//கபீரன்பனும் சொல்லி இருக்கார். அதை அப்புறமே பார்த்தேன்.//

கேஆரெஸ்ஸுனு படிச்சுக்குங்க! :))))))