Wednesday, October 1, 2008

யார் புத்திசாலி? குருவா? சிஷ்யனா? (2)


சுக்ராச்சாரியார் நடந்தவற்றை ஞான திருஷ்டியில் உணர்ந்தார். தேவயானியிடம் கூறினார் மகளே கசன் இனி வரமாட்டான். அவன் இப்போது என் வயிற்றில் உள்ளான். அவன் உயிர் பெற வேண்டுமானால் நான் உயிர் துறக்க வேண்டும்.அவனை நீ மறந்துவிடு. ஆனால் தேவயானி கசனை என்னால் மறக்க முடியாது அதே சமயம் உங்கள் உயிர் போனாலும் நான் அதற்கு பிறகு உயிர் வாழமாட்டேன் என்றாள்.
சுக்கிராச்சாரியார் இப்பொழுது புரிந்து கொண்டார்."கசனே நீ வந்த காரியம் சித்தியாகும் காலம் வந்து விட்டது. தேவயானிக்காக நான் உன்னை உயிர்ப்பிக்க வேண்டும். அதே சமயம் நானும் உயிர்துறக்காமல் இருக்க வேண்டும். அதற்கு ஒரே வழி உனக்கு சஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுக் கொடுப்பதுதான்.என் வயிற்றிலிருக்கும் நீ அதைக் கற்றுக் கொண்டு என் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வந்து பிறகு அந்த மந்திரத்தை உபயோகித்து என்னை பிழைப்பித்து தேவயானியின் துக்கத்தை தீர்த்து விடு.இவ்வாறு சொல்லிவிட்டு குரு தன் சிஷ்யனுக்கு சஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுக் கொடுத்தார். கசன் கற்றுக் கொண்டு அவர் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்து பிறகு அதே சஞ்சீவினி மந்திரத்தை உபயோகித்து குருவை பிழைக்க வைத்தான்.
பின்னர் சிறிது காலம் இருந்து முழு கல்வியையும் கற்றுக் கொண்டு பிறகு குருவிடம் விடை பெற்றுக் கொண்டு தேவலோகம் செல்ல முற்பட்டான். அப்பொழுது தேவயானி தன்னை மணம் புரிந்து கொள்ளும்படி கேட்டாள். அதற்கு கசன் தேவயானி எனக்கு குருவான உன் தந்தை எனக்கு கல்வி கற்றுக் கொடுத்தார், மேலும் நான் அவர் வயிற்றைக் கிழித்துக் கொண்டு மறுபடியும் பிறந்ததால் அவர் எனக்கும் தந்தை போன்றவர், நீயும் எனக்கு சகோதரி போன்றவள். ஆதலால் உன்னை மணக்க முடியாது என்றான். இவ்வாறு கூறிவிட்டு கசன் தேவலோகம் சென்றான்.
இனி தலைப்புக்கு வரலாம். தான் எடுத்துக் கொண்ட விரதமான சஞ்சீவினி மந்திரத்தை கற்றுக் கொள்வதிலேயே குறியாக இருந்து, மாதுவின் இச்சைகளுக்கு ஆட்படாமல் வெற்றிகரமாக தன் காரியியத்தைச் சாதித்துக் கொண்ட சிஷ்யன் புத்திசாலியா? இல்லை மகள் மீது உள்ள அதீத பாசத்தினாலும், மதுவின் மயக்கத்தினால் தன்னையும் தான் கற்ற சஞ்சீவினி மந்திரத்தையும் இழந்த குரு புத்திசாலியா?. ஆச்சார்யன் என்பவர் ஒழுக்கத்தை போதிப்பவராக மட்டும் இருந்தால் போதாது, அவரும் ஒழுக்கத்தை கடைபிடிப்பவராகவும் இருக்க வேண்டும்

2 comments:

Kavinaya said...

//ஆச்சார்யன் என்பவர் ஒழுக்கத்தை போதிப்பவராக மட்டும் இருந்தால் போதாது, அவரும் ஒழுக்கத்தை கடைபிடிப்பவராகவும் இருக்க வேண்டும்//

நன்றாகச் சொன்னீர்கள். நன்றி ஐயா.

மெளலி (மதுரையம்பதி) said...

////ஆச்சார்யன் என்பவர் ஒழுக்கத்தை போதிப்பவராக மட்டும் இருந்தால் போதாது, அவரும் ஒழுக்கத்தை கடைபிடிப்பவராகவும் இருக்க வேண்டும்//

நன்றாகச் சொன்னீர்கள். நன்றி ஐயா.//

ரிப்பிட்டேஏஏஏஏஏஏஎ :)