Wednesday, November 26, 2008

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் -4

கரூரில் வசித்த சாஸ்திரிகள் சிலரும், கனபாடிகள் சிலரும் சதாசிவரை அணுகி "திருப்பதி ஸ்தல யாத்திரை செய்வது மிக சிரமமாக இருக்கிறது. இந்த தான் தோன்றி மலையில் உள்ள அப்பரை தரிசித்தால் வெங்கடாசலபதியை தரிசித்த புண்ணியமுண்டாக வேண்டும்" என வேண்டினர். சதாசிவரும் சந்தோஷமாக அங்கே சென்று பூஜை செய்து ஜன ஆகர்ஷண யந்திரம் ஒன்று எழுதி அங்கே பிரதிஷ்டை செய்தார்.

தஞ்சைக்கு அருகே புன்னை காடுகள் இருந்தன. தஞ்சை ராஜா ராமேஸ்வரம் ஸ்தல யாத்திரை செய்து திரும்பும் போது அந்த புன்னை காடுகள் அருகில் தங்கி இருந்த போது அவருடைய குழந்தைக்கு உஷ்ணம் அதிகமாகி கண்ணிலிருந்து ரத்தமே வந்தது. இது சரியாக வேண்டுமென சமயபுரம் மாரியம்மனுக்கு ராஜா பிரார்த்தனை செய்ய அன்றிரவு " நான் இங்கேயே இருக்க ஏன் சமயபுரத்துக்கு வருவதாக பிரார்த்திக்கிறாய்?” என்று அன்னை கேட்டாள். அட, இது தெரியாமல் போயிற்றே, என் ராஜ்ஜியத்திலேயே இருக்கிறாளா என்று நாலாபுறமும் ஆட்களை அனுப்பி தேடினான். தேடியவர்கள் இங்கே ஒரு புற்றுக்கு சிறுவர்கள் வேப்பிலை வைத்து மாரியம்மன் என்று விளையாட்டாக வழிபடுவது தவிர கோவில் எதுவும் இல்லை என சொன்னார்கள்.

மகாராஜா அந்த புன்னை காடுகளை சுற்றி வந்தார். அங்கே ஏதோ விசேஷம் இருப்பதாக தோன்றவே உள்ளே நுழைந்து தேடினார்கள். ஒரு இடத்தில் சதாசிவர் அமர்ந்து இருப்பதை பார்த்து மகிழ்ந்து வணங்கி எழுந்து " இங்கே மாரியம்மன் கோவில் இருப்பதாக கனவு கண்டேன். ஆனால் என்ன தேடியும் ஒரு புற்றை தவிர ஒன்றும் தென்படவில்லை. என்ன செய்வது என்று சொல்ல வேண்டும்" என்று வேண்ட, சதாசிவர் "அந்த புற்றேதான் மாரியம்மன்" என்று எழுதிக்காட்டினார். "இப்படி இருந்தால் ஜனங்கள் எப்படி பக்தியோடு வழிபட முடியும்? நீங்கள்தான் ஏதாவது செய்ய வேண்டும்" என்க சதாசிவரும் கோரோசனை, கஸ்தூரி, சாம்பிராணி, புனுகு, ஜவ்வாது, அகில் சந்தனம், குங்குமப்பூ, பச்சைகற்பூரம் ஆகியவற்றை வாங்கி வரச்செய்து அந்த புற்று மண்ணிலேயே பிசைந்து மாரியம்மனை செய்தார். ஜன ஆகர்ஷண யந்திரம் ஒன்றையும் எழுதி அம்மன் முன் வைத்து "இதற்கு பூஜை செய், குழந்தையின் கண் சரியாகும்" என்று தெரிவிக்க, அவ்வாறே செய்து பிரச்சினை தீர்ந்தது. தினசரி பூஜைக்கு ஏற்பாடு செய்யவே இன்றளவும் பூஜை நடக்கிறது. 5 வருடங்களுக்கு ஒரு முறை சாம்பிராணி தைல அபிஷேகம் மட்டும் செய்கிறார்கள். அம்மன் பக்தர்கள் பலர் கனவில் தோன்றி தனக்கு புடவை சாற்றுமாறு சொல்வாள். அவர்களும் அப்படியே செய்து அவர்களது வேண்டுதல் கைவர பெறுவர். அபிஷேகம் நடக்கும் காலத்தில் அவற்றை நீக்குவார்கள். வெகு நேரம் பிடிக்குமாம்.


Posted by Picasa


சதாசிவரின் சித்தம் வெளிமுகமாகிய ஒரு சந்தர்பத்தில் தன்னுடன் இளமையில் பயின்ற போதேந்திராளையும் அய்யாவாளையும் நினைத்தாராம். அவரை காண எண்ணி கோவிந்தபுரம் அடைந்து, அதற்குள் சித்தம் அகமுகமாகிவிட அங்கிருந்த நாணல் புதர்களில் விழுந்து அப்படியே கிடந்தாராம். அய்யாவாள் வாரம் ஒரு முறை கோவிந்தபுரம் வருவார். அப்படி வரும்போது புதரில் கிடந்த சதாசிவரை பார்த்து அடையாளம் தெரியாமல் யாரோ ஒரு மகான் இப்படி இருக்கிறார். இவர் ஆசி கிடைத்தால் பாக்கியம் பெறுவோம் என்று நினைத்து சுற்றி வந்து வணங்கினார்; ஸ்தோத்திரம் செய்தார். அப்படியும் சதாசிவர் அகமுகமாகவே இருந்துவிட்டார்.

அய்யாவாள் தன் குருநாதராகிய போதேந்திராளிடம் இதை சொல்ல அவரும் உடனே அப்படிப்பட்ட மகானுபாவரை உடனே தரிசிப்போம் என்று புறப்பட்டார். சுற்றி இருந்த புதர்களையும் செடிகளையும் அப்புறப்படுத்தி சுத்தம் செய்து தீபம் ஏற்றி சாம்பிராணி புகையும் போட்டால் பகிர்முகப்படுவாரோ என்று அதையும் செய்தனர்.

சதாசிவர் அசையக்கூடவில்லை. போதேந்திராள் தன் யோக வலிமையால் ராம நாமத்தை அந்த உடலுக்குள் புகுத்தினாராம். ராம நாமம் கேட்டு விழித்துக்கொள்ளட்டும், பின்னால் மன்னிப்பு கேட்டுக்கொள்ளலாம் என்று நினைத்து, "பிபரே ராம ரஸம்" என பாடலானார். இதனால் சற்றே பகிர்முகமானார் சதாசிவர். அடுத்து " கேலதி மம ஹ்ருதயே" என பாட, சதாசிவர் சப்த பேதத்தை திருத்தினார். இது சதாசிவமே என நிச்சயித்து பலவாறு புகழ்ந்து போற்றினார்கள். அதற்குள் பிரம்மம் அகமுகமாகிவிட்டது. (முன் நினைத்த வேலை முடிந்ததல்லவா? இருவரையும் கண்டாகிவிட்டது.) என்ன செய்தும் அவரை பகிர்முகப்படுத்தி மடத்துக்குள் கொண்டு செல்ல முடியவில்லை எனக்கண்டு அப்படியே விட்டு விட்டனர். சதாசிவரும் பிறகு எங்கோ போய்விட்டார்.

சதாசிவர் நிகழ்த்திய அற்புதங்கள் பலவாக சொல்லப்படுகின்றன. அவரா நிகழ்த்தினார்? ப்ரம்மத்துக்கு சங்கல்பமேது? அந்த உடல் முன்னிலையில் பல அற்புதங்கள் நடந்தன. தாக்க வந்த மூடர்கள் செயலிழந்து போயினர். பலரை தன் பார்வையாலேயே பிணி தீர்த்தார். " தாத்தா, திருவிழா காண வேண்டும் " என்று கேட்ட குழந்தைகளை கண நேரத்தில் மதுரை அழைத்து சென்று காண்பித்து திருப்பியும் கூட்டி வந்தார்.

3 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

நன்றாகச் சொல்லி வருகிறீர்கள் திவாண்ணா....மிக்க நன்றி. :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பிபரே ராம ரசம் - பாட்டிற்குள் இப்படி ஒரு கதையா? நன்றி திவா சார்!

திவாண்ணா said...

நன்றி மௌலி, கேஆரெஸ்!