Wednesday, November 12, 2008

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் - 2

சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் சோமநாத யோகியார் - பார்வதி தம்பதியர். சோமநாத யோகி சிறு வயதில் இருந்து பிரம்மசர்யத்தை கடைபிடித்து குண்டலினி யோகம் பயின்று சித்திகள் வரப்பெற்றவர். இவரது தாய் தந்தையர் புத்திரனுக்கு வயதாகிக்கொண்டே போகிறதே என்று கவலைப்பட்டு திருமணம் செய்து வைக்க முயல யோகியார் லேசில் சம்மதிக்கவில்லை. அப்பா உனக்கு திருமணம் செய்து வைத்தால் எங்கள் கடமைகள் எல்லாம் நிறைவேற்றியவர்கள் ஆவோம். அதன் பின் பஞ்ச மகா யக்ஞங்கள் செய்து, வானபிரஸ்தம் அனுஷ்டித்து கடைதேறும் வழியை பார்க்க வேண்டும் என்று பலவாறு சொல்ல பின் யோகியாரும் இணங்கினார்.

திருமணத்திற்கு பிறகும் யோகியார் பிரம்மசரியத்தை கடைபிடித்துவர 15 வருடங்கள் சென்றன. சந்ததி குறித்து ஒரு சிந்தனையும் இல்லாது இருக்கிறார் என்று தெரிந்து கொண்ட பார்வதி அம்மை " சுவாமி திருமணம் நடந்து 15 வருடங்கள் ஆகின்றன. ஒரு சத்புத்திரனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வார்களே" என்று கேட்டார். யோகியார் "உன் வாயால் சத் புத்திரன் என்று வந்துவிட்டதா? சரி. அப்படி நடக்க வேண்டுமானால் கோடிக்கணக்கில் நாம ஜபம் செய்ய வேண்டும். உடம்பின் ஒவ்வொரு அணுவும் ராம நாமம் சொல்ல வேண்டும். அப்படி ஆனால்தான் உடலும் உள்ளமும் தூய்மையாக இருக்கும். அப்படி பட்ட நேரத்தில் கர்ப்பம் தரித்தால் அதில் ஒரு மகரிஷி வந்து புகுவார். அது நாட்டுக்கு நல்லது" என்று சொல்ல அம்மையும் இசைந்து மந்திர உபதேசம் பெற்று ஜபம் செய்து வரலானார்.

ஸ்தல யாத்திரை செய்து ராமேஸ்வரம் சென்றபோது கனவில் "உனக்கு சத் புத்திரன் உண்டவான்" என்று ராமநாதர் சொல்ல விழித்ததும் யோகியார் தானும் அதே கனவை கண்டதாக சொல்லி வீடு திரும்பினர். இறைவன் ஆணைப்படியே 10 ஆம் மாதம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. சிவராமகிருஷ்ணன் என பெயரிட்டனர். குழந்தை 3 வயதை எட்டும் முன்னேயே யோகியார் இமயத்துக்கு தவம் செய்ய போய்விட்டார்.

சிறு வயதிலேயே வேதம் படிக்க அனுப்பிவிட்டார்கள். அதி புத்திசாலியாகையால் மிக விரைவில் 4 வேதங்களும் கற்றுக்கொண்டுவிட்டார். அத்துடன் சாஸ்திரங்களும் கற்றார்.
இவரது திறமையை பார்த்த உள்ளூர் சாஸ்திர விற்பனர்கள் மேற்கொண்டு சாஸ்திரம் வாசிக்க திருவீசைநல்லூர் வேங்கடேச அய்யாவாளிடம் அனுப்பச்சொல்லி வேண்டினர். ஆனால் அன்னை
அதற்கு சம்மதிக்கவில்லை. கொஞ்சம் காலம் சென்ற பின் மீண்டும் கேட்க அன்னையோ அவருக்கு தக்க ஒரு மணப்பெண்ணை தேடி திருமணம் செய்து வைத்தார். பெண்ணுக்கு 5 வயதே ஆனபடியால் உரிய வயது வந்த பின் கொண்டு வந்து விடுவதாக ஏற்பாடு ஆகியது. எப்படியோ இப்போது திருவீசைநல்லூர் போக அனுமதி கிடைத்துவிட்டது என்று சிவராமன் உற்சாகமடைந்தார்.

சதாசிவருக்கு பாடம் சொன்ன அய்யாவாளுக்கு வியப்பு மேலிட்டது. சாதாரணமாக ஒருவர் பாடம் கற்று அதை அசை போட்டு புரிந்து கொள்வர். பாடம் கேட்டு மனனம் செய்யவே 7 வருஷம் ஆகும். அப்புறம் மீமாம்சை படித்தால்தான் பாஷ்யம் படித்து வேதத்துக்கு பொருளை ஒருவாறு உணரமுடியும். அதற்குப்பிறகு அனுபவம் பெறும் முறைகளையும் கற்க வேண்டும்.

ஆனால் சிவராம க்ருஷ்ணனுக்கோ பாடம் கேட்கும் போதே அனுபூதி கிடைக்கிறது! அனுபவத்தின் முதிர்ந்த நிலை அடைகிறான். இவனை இப்படியே விடக்கூடாது என்று ஸ்ரீமடாதிபதி பரமசிவேந்திரரிடம் (இவர் அதிஷ்டானம் திருவெண்காடு அருகில் உள்ளது) இவனை கொண்டு விட்டார். சில மாதங்களிலேயே அத்யாத்ம சாஸ்திரங்களை கற்று தேர்ந்தான் சிவராமன். ஏக சந்த க்ராஹி என்பார்கள்- ஒரு முறை கேட்டாலே நினைவில் இருத்திக்கொள்ள முடியும். அப்படி ஒரு சக்தி - இல்லை, - புரிவதும் நிகழ்வதால் அதுக்கும் மேலே- இருந்தது சிவராமனுக்கு. குருவே சிலாகித்த சிஷ்யனாக விளங்கினார்.

3 comments:

மெளலி (மதுரையம்பதி) said...
This comment has been removed by the author.
மெளலி (மதுரையம்பதி) said...

திருவெண்காடு எங்கே இருக்கிறது?.

திருக்கோவிலுரிலிருந்து விழுப்புரம்-உளூந்தூர்பேட்டை ஹைவே இணைக்கும் மடப்பட்டு ரோட்டில் ஏதோ ஒரு சிறு கிராமம் இது போன்ற பெயருடன் பார்த்த நினைவு (பெயர் நினைவில் இல்லை)...அது இது தானா?

திருவெண்ணை நல்லூர் என்றும் ஒரு ஊர் கேள்விப்பட்டிருக்கிறேன். அது எங்கே இருக்கு? :)

திவாண்ணா said...

திருவெண்காடு - ஸ்வேதாரண்யம் - சீர்காழிலேந்து பூம்புகார் ரோடுல போய் பூம்புகாருக்கு முன்னாலேயே திரும்பி போகணும்.......

அவசியம் போங்க. அங்கே உங்களுக்கு ரொம்ப பிடிச்சவரோட காலரி ஒண்ணு பிரமாதமா இருக்கு!

திருவெண்ணை நல்லூர் -இதுதான் நீங்க சொல்கிற இடம் பக்கத்திலே. ஒரு 3 கிமீ உள்ளே போகணும்.