இந்த நிலையில் மைசூரில் அரசவையில் சரியான வித்வான் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வந்தார்கள். சிவராமன் புகழை கேள்விப்பட்டு பரமசிவேந்திரரிடம் விழுந்து வணங்கி மைசூர் ஆஸ்தான வித்வானாக அனுப்பும் படி கேட்க அவரும் நாட்டு நலன் கருதி இசைந்தார். மைசூர் ராஜாவின் சந்தோஷத்துக்கு அளவில்லை! வருகிற எல்லா வித்வான்களும் இவராலேயே பரீட்சிக்கப்பட வேண்டும்; இவர் சொல்கிற சன்மானம்தான் தர வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. சிவராமனுக்கோ அத்தனை கலைகளும் அத்துப்படி. ஒரு ராகம்பாடினால் அது சுத்தமாக இல்லையென்றால் கண்டுபிடித்துவிடுவார். சாஸ்திரம் பற்றி கேட்கவே வேண்டாம். இவரிடம் பரிசு வாங்க வித்வான்கள் சிரமப்பட்டு போயினர்.
தஞ்சையிலிருந்து ஒரு வித்வான் -கோபாலகிருஷ்ண சாஸ்திரி என்பவர் - சிவராமனை வென்று ஆஸ்தான வித்வான் ஆக வேண்டும் என்ற கனவுடன் கிளம்பிப்போய் இவரை கண்டவுடன் விழுந்து வணங்கி "குருவே தங்களுக்கு சேவை செய்ய வந்து இருக்கிறேன்" என்றாராம்! சேவையில் சில காலம் போன பின் கோபாலக்ருஷ்ணன் பரம குருவை சந்திக்க வேண்டி கேட்க சிவராமனும் பரமசிவேந்திராளை சந்திக்கும் விதி முறை, வழி, இடமெல்லாம் சொல்லி அனுப்பி வைத்தார். அப்படியே பரம குருவை சந்தித்த கோபாலர் " சிவராமக்ருஷ்ணர் தங்கள் சிஷ்யர்களிலே மிக உயர்ந்தவர் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அவர் வரும் வித்வான்களை வாதத்தில் வென்று வெற்றி அடைவதிலேயே குறியாக இருக்கிறார். யாருக்கும் விரும்பிய பரிசு கிடைப்பதில்லை. இதனால் ராஜ்யத்துக்கு அவப்பெயர். மேலும் இவர் இதிலேயே கவனமாக இருப்பதால் தவம் செய்ய நேரம், இடம் இல்லை. இவர் வெளியேறி தவம் செய்தால் இவர் ராஜா முன் கைகட்டி நில்லாமல் இவரிடம் மகாராஜாக்கள் கைகட்டி காத்து நிற்பர்" என்ற ரீதியில் சொல்லவே, இதன் உண்மையை உணர்ந்து பரமசிவர் " நான் தரிசிக்க விரும்பியதாக கூறு" என்று சொல்லி அனுப்பிவிட்டார். இதை கேள்விப்பட்ட சிவராமன் மிக வருந்தினார். ஒரு குரு சிஷ்யனை தரிசிப்பதாவது! அப்படி சொன்னால் என்ன ஒரு வருத்தம் இருக்க வேண்டும் என்று உணர்ந்து வேலையை ராஜினாமா செய்து விட்டார்.
வந்து வணங்கிய சிவராமனை கண்ட பரமசிவேந்திரர் " ஊரார் வாயை அடக்கக் கற்ற நீ உன் வாயை அடக்க கற்கவில்லையே" என்று கூற அந்த கணத்திலிருந்து இனி பேசுவதில்லை என்று உறுதி கொண்டுவிட்டார். குருநாதரும் சன்னியாசம் கொடுத்து "இனி பிரியமான இடம் சென்று தவம் செய்" என்று சொல்லிவிட்டதாக கூறுகிறார்கள். (சன்னியாசம் இவர் கொடுத்தாரா என்பதில் அபிப்பிராய பேதம் இருக்கலாம்) தவம் செய்ய ஏகாந்த இடத்தை தேடி நெரூர் வந்து சேர்ந்தார் சதாசிவர். யோகம் பயின்று அனைத்து யோக சித்திகளும் கைவரப்பெற்று மேலும் தவம் செய்து ப்ரம்மமாகவே ஆகிவிட்டார்.
கொடுமுடிக்கு பக்கத்தில் அகத்தியம் பாறை என்ற ஒரிடத்தில் காவேரிக்கு நடுவே மையத்தில் ஒரு பெரும்பாறை உண்டு. பல சமயம் இந்த பாறை மீது அமர்ந்து சதாசிவர் தவம் செய்வார். சாதாரணமாக தவம் செய்பவரை பெரியவர்கள் தொந்திரவு செய்யமாட்டார்கள். ஆனால் சிறுவர்கள் செய்யக்கூடுமாகையால் இப்படி ஆற்றின் நடுவே அமர்வார். ஒரு நாள் ஆற்றுவெள்ளம் அதிகமாகி இந்த பாறையையும் சதாசிவரையும் புரட்டிப்போட்டுவிட்டது. நீர் வற்றிய பின் சதாசிவரை தேடி தேடி அலுத்தனர் மக்கள்.
பல மாதங்கள் ஓடி முடிந்து வற்றி இருந்த ஆற்றில் கட்டிட வேலைக்காக மணல் எடுக்க வந்தனர் சிலர். ஓரிடத்தில் நல்ல மணல் கிடைக்கிறது என்று தோண்டவே ஆழமாக போன பின் மண்வெட்டியால் வெட்ட ரத்தம் வந்தது. பயந்து போனவர்கள் கிராம அதிகாரியை அழைத்துவர
அவர் இது சதாசிவ பிரம்மமாகத்தான் இருக்க வேன்டும் என ஊகித்து சுற்றிலும் மணலை எடுக்கச்செய்யவே சதாசிவர் உணர்வு பெற்று எழுந்து நடந்து போய்விட்டாராம்.
புதுக்கோட்டை அரசரது காடுகளை அடுத்த வயல்களில் சதாசிவர் போய் கொண்டு இருந்த போது வைக்கோல் போர் போட்டுக்கொண்டு இருந்தார்கள். இது வழி, இது வழி அல்ல என ஆராயும் நிலையில் இல்லாத சதாசிவர் பாட்டுக்கு நேரே போக, வைக்கோல் போர் இடையே மாட்டிக்கொண்டார். வேலையாட்கள் தெரியாமல் மேலும் மேலும் வைக்கோல் போட 10,000 போர்கள் போட்டுவிட்டனர். பிறகு பல மாதங்கள் கழித்து அது செலவழிந்து கீழே பார்க்க சதாசிவர் படுத்த நிலையிலேயே இருந்தார்.
இதை கண்டு அதிசயித்து மகாராஜாவிடம் போய் சொன்னார்கள். மகாராஜா விஜய ரகுநாத தொண்டைமான் சாதுக்களிடம் மரியாதையும் நம்பிக்கையும் உள்ளவர். ராஜ்ய பரிபாலனத்தில் நிகழும் கேடுகளை சாதுக்களால் தீர்க்க முடியும் என நம்பியவர். ஒரு பல்லக்கை கொண்டுவரச்சொல்லி குதிரை மீது ஏறி விரைந்து சென்று ப்ரம்மத்தை தரிசித்தார். சுற்றி வந்து வீழ்ந்து வணங்கி அரண்மனை வருமாறு வேண்டியும் ப்ரம்மம் ஏதும் சலனமில்லாமல் இருந்தார். மேலும் வற்புறுத்த திருவரங்குளம் காட்டுள் சென்றுவிட்டார். முயற்சியில் தளராத ராஜா இவரது அருகாமையில் ஒரு குடிசை அமைத்து சதாசிவருக்கு சேவை செய்து வரலானார். இடையிடையே அரண்மணை சென்று ராஜாங்க வேலைகளை கவனித்துவிட்டு மீண்டும் சேவைக்கு வந்துவிடுவார். இப்படி 8 வருடங்கள் ஓடின. ஒரு நாள் தனக்கு மந்திர தீக்ஷை தர வேண்டும் என மிகவும் வேண்ட சதாசிவர் மந்திரத்தை மணலில் எழுதிக்காண்பித்தார். ராஜாவும் அதை பாடம் செய்து கொண்டு அந்த மணலை அரண்மணைக்கு கொண்டுவந்து தங்கப்பேழையில் வைத்து பூஜை செய்யலானான். இந்த மணல் இன்னும் இருப்பதாக கூறப்படுகிறது. நவ ராத்திரிபோது அதை காட்சிக்கு வைப்பதாக சொல்கிறார்கள்.
சாஸ்திர சந்தேகங்களை ராஜா கேட்க, பதில் வராததை கண்டு இனி தொந்திரவு செய்யக்கூடாது என நிச்சயித்து எங்கு சென்றாலும் கடைசியில் சரீரத்தை உகுக்கும் காலத்தில் தங்களை தரிசிக்கும் பாக்கியத்தை தரும்படி கேட்டுக்கொண்டான். சதாசிவரும் இசைவை தெரிவித்து தகுந்த சாஸ்திர குருவையும் அடையாளம் காட்டி தன் போக்கில் போகலானார்.
Wednesday, November 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
படிச்சிக்கிட்டுதான் இருக்கேன். அப்புறம்?
உள்ளேனய்யா...
உள்ளேன் ஐயா!
ஆல் மார்க்ட் ப்ரெசன்ட்.
கவி அக்கா கலாய்கிறீங்களா?
இது ஏறத்தாழ அதே பதிவுகள்தான். :-)))
நெரூர் போகிறேன்.
உங்களுக்காக சில படங்கள் எடுக்க யோசனை.
மேல் கொண்டு தகவல் தெரியுமா என்று சிலரை கேட்டு இருக்கேன். பார்க்கலாம்.
அடியேனும் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன் திவா ஐயா.
வாங்க குமரன்! நிறையவே படிக்கிறீங்க! உங்களை மாதிரி ஸிஸ்டமாடிக்கா பதிவுகளை படிக்க என்னால் முடியலை. :-(
நானும் படிக்கிறேன். சிறுவர்களை தோளில் சுமந்து அமராவதி ஆற்றில் முழ்கி காசிக்கு சென்று விட்டு மற்படியும் கருருக்கு கொண்டுவநந்து விடுவாராமே. அதைப் பற்றியும் எழுதுங்கள்
திராச அண்ணா இது வரை இதை கேள்விப்படலை. :-)
Yes, SadhaSivaBrahmendraal's Manthropadesa Mann is still being kept in Pudukkottai at the Dakshinamoorthy Temple managed by the Raja's family.
Post a Comment