Wednesday, December 3, 2008

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் 5

யோனுத் பன்ன விகாரோ பாஹௌ மிலேச்சேன சின்ன பதிதேபி
அவிதித மமதாயாஸ்மை பிரணதிம் குர்ம ஸதாசிவேந்திராய

சதாசிவர் ஒரு முறை அகமுகமாக இருந்தபடியே நடந்து கொண்டு இருந்தார். எங்கே போகிறோம் என்ற உணர்வில்லாமல் ஒரு முஸ்லிம் அரசனின் அரண்மனைக்குள் நுழைந்தார். "யாராடா இவன்! அம்மணமாக இங்கே வருவது" என சினந்த மன்னன் பதில் வராததால் கோபம் கொண்டு கத்தியால் கைகளை வெட்டிவிட்டான். ஒரு கை கீழே விழ இன்னும் ஒன்று கொஞ்சம் ஒட்டிக்கொணடு இருந்தது. சதாசிவர் பாட்டுக்கு நடந்து போய்க்கொண்டு இருந்தார். மன்னனுக்கு ஆச்சரியம் மேலிட்டது. "இவர் யாரோ பெரிய மகான், தவறு செய்து விட்டோம்!' என்று உணர்ந்து கீழே கிடந்த கையை எடுத்துக்கொண்டு ஓடினான். சதாசிவரின் கால்களை கட்டிக்கொண்டு அழுதான். பகிர் முகப்பட்ட ப்ரம்மம் என்ன என்று கேட்டது. "பெரிய தவறு செய்தேன். மன்னிக்க வேண்டும்" என்றான் அரசன். "தவறு செய்தவனும் இல்லை; மன்னிக்கிறவனும் இல்லை போ!” என்றது ப்ரம்மம். "இல்லை! மன்னித்தால்தான் ஆயிற்று; இல்லாவிட்டால் வாளுக்கு இரையாவேன்" என்று கூற, "அப்படியா? என்ன தப்பு செய்தாய்?” என்றார். "உங்கள் கைகளை வெட்டிவிட்டேனே!” என்றழுதான் அரசன். "அப்படியா!” என்று கூறி வெட்டிய கையை வாங்கி பொருத்தியதும் அது சரியானது. "சரியாகிவிட்டது போ" என்று சொல்லி தன் வழியே நடந்தது ப்ரம்மம்.

இதைத்தான் சச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ம பாரதி ஸ்வாமிகள் ப்ரம்மேந்திரர் அனுக்கிரகம் கிடைத்த பின் மேற்கண்ட படி பாடினார். "கைகளை மிலேச்சன் வெட்டிவிட்ட பின்னும் விகாரம் உண்டாகாததால் என்னுடையது என்ற எண்ணமே இல்லை. அப்படிப்பட்ட ஸதாசிவேந்திராய சற்குருவை நமஸ்கரிக்கிறேன்.”

சுற்றியது போதும் என சங்கல்பித்தாரோ என்னவோ நெரூர் வந்து சேர்ந்தார். மனதால் மைசூர், புதுக்கோட்டை, தஞ்சை அரசர்களை நினைக்க அவர்களும் வந்து சேர்ந்தனர். "குகை அமையுங்கள். அதில் அமர்ந்த பின் சாமக்கிரியைகளால் மூடிவிடுங்கள்" என உணர்த்தினார். அழும் அரசர்களிடம் "மனதுதானே நினைக்கிறது? உடலை பார்த்து என்ன செய்யப்போகிறீர்கள்?” என்றார். "காவேரியில் கூடத்தான் புதைந்து கிடந்தேன். எப்படி வேண்டுமானாலும் இருப்பேன். கவலை வேண்டாம்" என்று உணர்த்த தேற்றிக்கொண்டனர்.

From nerur

குகை தயாராக அதில் அமர்ந்து யோகத்தில் ஆழ, முறைப்படி குகையை மூடினார்கள். ப்ரம்மம் சொன்னபடியே 9 ஆம் நாள் அங்கு வில்வ மரம் தோன்றியது. பன்னிரண்டாம் நாள் காசியிலிருந்து சிவலிங்கம் வந்து சேர்ந்தது. அதை பன்னிரண்டு அடி கிழக்கே ப்ரதிஷ்டை செய்து கோவில் கட்டினர்.

மானாமதுரையில் ஒரு சாஸ்திரிகளும், கராச்சியில் ஒரு முஸ்லிம் பக்தரும் முன்னரே உடலை உகுக்கும் காலத்தில் தமக்கு தெரியப்படுத்த வேண்டும் என பலமாக வேண்டிக்கொண்டு இருந்தனர். சாஸ்திரிகள் அப்படி நடக்காவிட்டால் ப்ராணத்தியாகம் செய்வதாகவே சத்தியம் செய்து இருந்தார். இதே சமயம் அந்த இரண்டு இடங்களிலும் கூட கற்பிக்கப்பட்ட உடல்கள் தோன்றி உகுக்கப்பட்டு குகையும் அமைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மானாமதுரையில் அவ்விடத்தில் வில்வ மரமும் தோன்றியதாக சொல்லப்படுகிறது.

சதாசிவர் சமாதி கொண்டு இப்போது சுமார் 220 ஆண்டுகள் ஆயின். சுமார் 120 வருடங்கள் முன் சச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ம பாரதி ஸ்வாமிகள் சிருங்கேரி மடாதிபதியாக இருந்தார். அவருக்கு தத்வ விசாரம் செய்து சித்தி ஏற்படுவதில் தடை இருந்தது. என்ன செய்வதென்று ஆலோசித்து நெரூர் சென்று ப்ரம்மேந்திராளை ஆராதித்தால் சித்தி ஏற்படும் என்று தெளிந்தார். நெரூர் நோக்கி பல்லக்கில் பயணித்து ரங்கநாதம் பேட்டை என்ற இடத்தை அடைந்தனர். அதற்கு மேலே பல்லக்கு போக முடியவில்லை. போகிகள் (பல்லக்கு தூக்குவோர்) யாரோ முன்னாலிருந்து தள்ளுவது போல் இருப்பதாக சொன்னார்கள். ஸ்வாமிகள் கீழே இறங்கி விழுந்து வணங்கி, ஒரு கை தூரம் முன் சென்று மீண்டும் விழுந்து வணங்குவதுமாக ஒன்றரை கல் நடந்து நெரூரில் ப்ரம்மேந்திரர் சந்நிதிக்கு வந்து சேர்ந்தார். தன் சந்தேகங்கள் தீராமல் எழுந்திருப்பதில்லை என்ற உறுதியுடன் காலை காவிரி சென்று கடன்களை முடிக்க மட்டும் வெளி வந்து, மற்றபடி சந்தியிலேயே அமர்ந்து, அன்ன ஆகாரமின்றி தீவிர தவம் மேற்கொண்டார்.

மதிலுக்கு வெளியே 300 பேர்கள் என்ன நடக்கப்போகிறது என்றறிய கூடிவிட்டனர். மூன்றாம் நாள் இரவு இரண்டு பேர் பேசிக்கொள்ளும் சத்தம் கேட்டது. காலை வெளி வரும் போது சதாசிவரை துதித்து நாற்பத்தைந்து பாடல்கள் எழுதிக்கொண்டு வந்தார் ஸ்வாமிகள். ப்ரம்மேந்திரர் ப்ரத்தயக்ஷம் ஆகி சந்தேகம் தீர்த்தது உறுதியாயிற்று. அதிலிருந்து யார் சிருங்கேரி மடத்து பட்டத்துக்கு வந்தாலும் நெரூர் வந்து அபிஷேக ஆராதனைகள் செய்து மூட்டையாக கொண்டு வந்த தனத்தை எண்ணிப்பாராமல் செலுத்திவிட்டு போவது வழக்கம்.

3 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

அந்த வில்வமரம் இத்தனை வருடங்கள் இருந்து தற்போது மீண்டும் தழைத்திருக்கிறது. உங்கள் குரு சொன்னது போல, எல்லாம் முன் செய்த தவப் பயனே!!!

மதுரை போயிட்டு வரும் வழியில் நெரூர் செல்ல இருக்கிறேன். கிருபையிருந்தால் கிடைக்கும்.

குமரன் (Kumaran) said...

இந்த நிகழ்வை ஒரு சாதாரண இஸ்லாமியர் செய்ததாகப் படித்திருக்கிறேன். சாதாரண இஸ்லாமியரோ முஸ்லீம் அரசரோ நிகழ்வு இதே மாதிரி நிகழ்ந்ததாகத் தான் படித்த நினைவு.

நன்றி ஐயா.

திவாண்ணா said...

நல்லது மௌலி அவசியம் போய்வாருங்கள்.

குமரன், முதலில் கேள்விப்பட்ட கதையும் சாதாரண முஸ்லிம் என்றுதான். பால்குமாரனும் கதையில் அப்படித்தான் எழுதி உள்ளார். செவி வழிக்கதைகளாக இருப்பதால் தெளிவு இல்லை. நிகழ்வு என்னவோ பாடலால் உறுதிப்படுத்தப்படுகிறது.