Wednesday, July 23, 2008

நல்ல குருவும் நல்ல சிஷ்யனும் (2)

நல்ல குருவைப்பற்றித் ஓரளவு தெரிந்து கொண்டாகிவிட்டது இனி நல்ல சிஷ்யனை கவனிக்கலாம். எப்படிப்பட்ட சிஷ்யனை குரு நல்ல சிஷ்யன் என்றுகூறுவார்.குரு முக்கியமாக இந்த மூன்று குணங்களை எதிர்பார்ப்பார் ஒருவரை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளுமுன்பு.

உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் தன்மை

பொறுமையைக்கடை கடைபிடித்தல்

கற்றுக்கொள்ளும் லட்சியத்தின்மீது மட்டும் பற்று வைத்தல்


உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் தன்மை மற்றும் பொறுமை இரண்டையும் சேர்த்தே பார்க்கலாம்.

ஒரு மாணவன் ஒரு குருவை தேர்ந்தெடுத்து அவரிடம் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டு அவருடைய குருகுலத்துக்குச் சென்று அவரைப் பணிந்து தன்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினான். குரு மற்ற மாணக்கர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டே நாளை வா பார்க்கலாம் என்றார்.சிஷ்யன் போய்விட்டு மறுபடியும் மறு நாளைக்கு வந்து கேட்டான் . இந்தநாளும் குரு நாளைக்கு வா பார்க்கலாம் என்றார்.இது மாதிரி சிஷ்யன் 21 நாட்கள் வந்து வந்து விடாமுயற்சியோடு குருவை வணங்கி கேட்டுக்கொண்டிருந்தான்.குருவும் நாளைக்கு வா என்று கூறிக்கொண்டே நாட்களை கடத்திக்கொண்டுவந்தார்.

கடைசியாக குரு, சிஷ்யனின் பொறுமைக் கண்டு மனதிற்குள் மகிழ்ந்து அவனை சிஷ்யனாகச் சேர்த்துக்கொள்ள தீர்மானித்து அவனுடைய உணர்ச்சிக்களை கட்டுப்படுத்தும் தன்மையையும் சோதிக்க விரும்பினார்.சரி மாணவனே நாளையிலிருந்து நீ வகுப்புக்கு வா. ஆனால் வரும்போது காலை பூஜைக்கு அக்னி வளர்க்கவேண்டும் ஆகையால் நீ வரும்போது உன் இருகைகளிலும் அக்னி தனலைக் கொண்டு வந்து என் முன்னால் இருக்கும் ஹோமகுண்டத்தில் போடவேண்டும் என்றார். மாணவனும் மிகுந்த சந்தோஷத்துடன் சென்றான்.


மறுநாள் காலை சிஷ்யனை எதிர்பார்த்து குரு அக்னி குண்டத்தில் எதிரில் அமர்ந்திருந்தார்.மற்ற மாணாக்கர்களும் என்ன குரு இப்படி ஒரு செயலைச் செய்யச் சொல்லியிருக்கிறர் நம் குரு, அதை எப்படி இந்த புது சிஷ்யன் செய்யப் போகிறான் என்று பயத்துடன் இருந்தனர். அப்போது சரியான நேரத்தில் சிஷ்யன் இரு கைகளிலும் அனல் பறக்கும் நெருப்புத்துண்டங்களைக் கொண்டுவந்து குருவின் முன்னால் இருக்கும் குண்டத்தில் சமர்ப்பித்து குருவை வணங்கி நின்றான்.குரு அதைப்பார்த்ததும் சிஷ்யனை அழைத்து அன்புடன் தழுவிக்கொண்டு நீதான் உத்தம சிஷ்யன் என்றார்.21 நாட்கள் உன்னை அலைக்கழித்தும் பொறுமையைக் கடைபிடித்து எப்படியாவது கற்க வேண்டும் என்ற ஆசையினால் வந்து கொண்டிருந்தாய்.அதே மாதிரி உனக்கு உன்னுடைய உணர்ச்சிகளை சோதனை செய்யவைத்த சோதனையிலும் வெற்றி பெற்று விட்டாய்.எல்லோரும் நினத்துக்கொண்டிருந்தார்கள் நீ உன் இருகைகளிலும் நெருப்பை அப்படியே கொண்டுவந்து கொட்டி கைகளைச் சுட்டுக் கொள்ளப் போகிறாய் என்று.ஆனால் நீயோ உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் இருகைகளிலும் மணலை நிரப்பச்செய்து அதில் நெருப்புத்துண்டங்களை வைத்து கைகளை சுட்டுக்கொள்ளாமல் புத்திசாலிதனத்துடன் செய்து முடித்தாய்.இன்றுமுதல் உனக்கு பாடம் ஆரம்பிக்கிறேன் என்று கூறி அவனை சிஷ்யனாகச் சேர்த்துகொண்டார்

இதே மாதிரிதான் கர்ணனும் பரசுராமரிடம் வில்வித்தை கற்றுக்கொள்ளச் சென்றபோது அவரும் அவனை அலைக்கழித்து அவனது பொறுமையைச் சோதனை செய்துதான் சிஷ்யனாகச் சேர்த்துக்கொண்டார்.பின்பு அவர் கர்ணன் மடியில் தலைவைத்து தூங்கிக்கொண்டிருந்தபோது தேவர்களின் சூழ்ச்சியால் வண்டு வந்து கர்ணனின் தொடையை துளையிட்டு ரத்தபெருக்கையும், கடுமையான வலியையும் ஏற்படுத்திய போதும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவரின் தூக்கத்திற்கு இடையூறு ஏற்படாதவண்ணம் இருந்தான்.ஆகவே அவனும் இரண்டு சோதனைகளில் வெற்றிபெற்றாலும் உண்மைகூறவில்லை என்ற தவறைச் செய்து அதன் பலனை அனுபவித்தான்.



இனி மூன்றாவது குணமான லட்சியத்தை மட்டும் அடைவது என்பதைப் பார்ப்போம். இந்த குணத்துக்கு நல்ல உதாரணமாக இருப்பது துரோணரும் அர்சுணனும்தான். வில்வித்தை கற்றுக்கொடுக்கும்போது ஒரு பெரிய மரத்திலுள்ள பலகிளைகளில் ஒருகிளையைக்காட்டி அதில் ஒரு இலையை மட்டும் காட்டி அம்பு எய்யச்சொன்னபோது பலபேர்கள் ஆச்சார்யன் சொன்ன இலையைத்தவிர பலவிஷயங்களை பார்த்துச் சொன்னபோது அர்ச்சுணன் ஒருவன் மட்டுமே தன் கண்களில் தெரிவது மரம் இல்லை, கிளைகளும் இல்லை. மற்ற இலைகளும் இல்லை ஆசார்யர் ஆன துரோணர் சொன்ன இலை மட்டும்தான் என்று சொல்லி லட்சியத்தை அடைவது மட்டும்தான் சிஷ்யனின் குறியாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியவன்.


நல்ல குருவைப் பற்றியும் நல்ல சிஷ்யனைப் பற்றியும் தெரிந்த நாம் இனி எப்படி இருக்கப் போகிறோம் என்பதையும் உறுதிபடுத்திக்கொள்ளவேண்டும்






41 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அருமையான குரு-சிஷ்யன் கட்டுரை திராச!
குரு லட்சணம், சிஷ்ய லட்சணம் இரண்டையும் அழகாக மூன்று கதைகள் மூலமாகச் சொல்லி விட்டீர்கள்!

//உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் இருகைகளிலும் மணலை நிரப்பச்செய்து அதில் நெருப்புத்துண்டங்களை//

:)))))))))))))

பரசுராமன்-கர்ணன் கதையில் குருவின் சோதனைகளில் வெற்றி பெற்றாலும் சத்திய சோதனையில் தோற்றதால், முழுதும் தோற்கும் படி ஆனது என்று சொன்னது இன்னும் சிறப்பு!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அடியேனுக்கு ஒரு கேள்வி!

//கற்றுக்கொள்ளும் லட்சியத்தின்மீது மட்டும் பற்று வைத்தல்
பொறுமையைக் கடை கடைபிடித்தல்//

இவை இரண்டும் ஓக்கே!

//உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் தன்மை//

இதைக் குருவிடம் சேர்ந்த பின், அவர் தியானம், யோகம் முதலானவற்றைச் சொல்லிக் கொடுத்தல்லவா சீடன் பெற முடியும்!

சேர்வதற்கு முன்பே சீடனிடம் எப்படி இதை எதிர்பார்க்கலாம்?

Kavinaya said...

அருமையான பதிவு. விவேகானந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பார்க்கப் போகையில் பல நாட்களுக்கு ஸ்ரீராமகிருஷ்ணர் அவரைக் கண்டுகொள்ளாமல் இருந்தாராம். அப்படியும் விடாமல் விவேகானந்தர் தொடர்ந்து அவரிடம் சென்றார் என்றும், அவரைச் சோதிக்கவே குருநாதர் அப்படி நடந்து கொண்டதாகவும் படித்திருக்கிறேன். தங்கள் பதிவைப் படித்ததும் அதுவே நினைவு வந்தது. மிக்க நன்றி!

மெளலி (மதுரையம்பதி) said...

மிக அருமை திராச. நான் எதையெல்லாமோ சொல்லி குழப்பிக் கொண்டு இருக்கும் போது இந்த 2 போஸ்ட்களில் தெளிவாச் சொல்லிட்டீங்க...நன்றிகள் பல.

மெளலி (மதுரையம்பதி) said...

////உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் தன்மை//

இதைக் குருவிடம் சேர்ந்த பின், அவர் தியானம், யோகம் முதலானவற்றைச் சொல்லிக் கொடுத்தல்லவா சீடன் பெற முடியும்!//

உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது என்பதை விட பணிவு/பவ்யம் என்பதாக கொண்டால் சரியா இருக்குமோ?

Geetha Sambasivam said...

மாணவன் கற்க வரும் முன்னர் பரிட்சை வைத்துத் தேர்ந்தெடுப்பது என்பது இக்காலத்திலும் இருக்கின்றபோது 13-ம் ஆழ்வாருக்கு அது தெரியாமல் போனது ஏன்னு புரியலை! உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் தன்மை என்பது அவன் நிதானத்துடனும், விவேகத்துடனும், அதே சமயம் விநயம், பணிவுடனும், குரு என்ன எதிர்பார்க்கின்றார் என்பதைப் புரிந்து கொள்கின்றானா என்பதையும் பரிட்சை செய்வது என்று சொல்லலாமோ?????

அப்புறம் திராச, சார், அர்ஜுனனுக்குத் தெரிஞ்சது இலையின் காம்பு மட்டும் தான் இல்லையா??? தவறாக இருந்தால் மன்னிக்கவும்! ரொம்பவே அருமையான உதாரணங்களுடன் குரு, சிஷ்ய பாவத்தை விவரித்திருக்கின்றீர்கள், நன்றி சார்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மாணவன் கற்க வரும் முன்னர் பரிட்சை வைத்துத் தேர்ந்தெடுப்பது என்பது இக்காலத்திலும் இருக்கின்ற போது//

அதுக்காகச் சொல்லலை கீதாம்மா!
ஆறாங் கிளாசுக்குப் பரீட்சை வைத்துத் தேர்ந்தெடுக்கலாம்!
ஆனால் எல்.கே.ஜி-க்கு எல்லாம் பரீட்சை கிடையாது....சும்மா நேர்முக Basic Questions தான் இல்லையா?

ஒரு அறிமுக மாணவனிடத்தில் புலனடக்கம், கட்டுப்படுத்தல் எல்லாம் எதிர்பார்க்க முடியாதே! குருவானவர் தான் அவனுக்கு அதைச் சொல்லிக் கொடுத்து அனுகிரஹிக்க வேண்டும்! அதனால் தான் திராச ஐயாவிடம் அந்த ஐயத்தைக் கேட்டேன்!

பரிட்சை வைத்துத் தேர்ந்தெடுப்பது லெளகீகக் கல்விக்குச் சரியா இருக்கும்! ஆனால் ஆன்மீகப் பயிற்சிக்குப் பரீட்சையை விட தீட்சையும் அனுக்ரஹமும் தான் தேவை!
சிஷ்ய லட்சணம் முக்கியம் அல்ல!
குரு லட்சணமே முக்கியம்!

பாங்கு அல்லன் ஆகிலும்
பயன் அல்லன் ஆகிலும்
திருத்திப் பணி கொள்வான் ஆசார்யன்!

குமரன் (Kumaran) said...

நல்ல எடுத்துக்காட்டுகளைச் சொன்னீர்கள் தி.ரா.ச. நன்றி.

ambi said...

அருமையான குரு-சிஷ்யன் கட்டுரை TRC sir!

குரு லட்சணம், சிஷ்ய லட்சணம் இரண்டையும் அழகாக மூன்று கதைகள் மூலமாகச் சொல்லி விட்டீர்கள்!

Raghav said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஆனால் எல்.கே.ஜி-க்கு எல்லாம் பரீட்சை கிடையாது....சும்மா நேர்முக Basic Questions தான் இல்லையா?

எல்.கே.ஜி என்பது குருகுலத்தில் கல்வி பயில அனுப்புதல். அதற்கு எந்த பரீட்சையும் கிடையாது. கண்ணனையோ, பாண்டவர்களையோ, ரகு வம்ச திருமகன்களையோ சேர்த்துக் கொள்ளும் போது என்ன தேர்வு வைத்தா சேர்த்தார்கள். அப்படி வைத்திருந்தால் உங்கள் இலக்குவனின் கோபத்திற்கு ஒரே நாளில் வீட்டிற்கு அனுப்பியிருப்பார்கள்.

இங்கே எல்.கே.ஜி, எஸ்.எஸ்.எல்.சி, எல்லாம் முடிந்த பிறகு குருவினடத்திலே மெய்ஞானம் பெற அணுகும் போது, இம்மாதிரி சோதனைகள் கட்டாயம் உண்டு. அவர்கள் அடுத்த குருவாக வரும் தகுதியை சோதிப்பது சரி தானே.

சித்திரமும் கை பழக்கம்
செந்தமிழும் நா பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்
நித்தம் நடையும் நடைப்பழக்கம்
நட்பும், "தயையும்" பிறர் தர வாரா..

ஆக சிஷ்யனிடத்திலே சில குணங்களை எதிர்பார்ப்பதில் தவறேது.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆக சிஷ்யனிடத்திலே சில குணங்களை எதிர்பார்ப்பதில் தவறேது//

சீடன் தேறிய பின் அவனைப் பரீட்சிப்பதும், நற்குணங்கள் படிந்துள்ளனவா என்று எதிர்பார்ப்பதிலும் தவறே இல்லை! பரீட்சித்து தான் ஆக வேண்டும்!

ஆனால் இங்கு சொன்னது சீடனாக எற்றுக் கொள்ளும் முன்பு! மீண்டும் பதிவை வாசியுங்கள்!
//இந்த மூன்று குணங்களை எதிர்பார்ப்பார் ஒருவரை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளுமுன்பு//

இதைத் தான் அடியேனின் குரு என்ற முறையில், திராச ஐயாவிடம், வினாவை வினயமுடன் வைத்தேன்!

Raghav said...

ரவி அண்ணா, உங்களுக்காக இன்னொரு முறை படிச்சாச்சு. நீங்க கடைசி வரியை சொல்றீங்க, நான் முதல் வரியை சொல்கிறேன். இந்த பதிவு "ஒரு நல்ல குருவானவர் ஒரு நல்ல சிஷ்யனை" எப்படி தேர்ந்தெடுப்பார் என்பதயே..

உதாரணத்திற்கு உங்களுக்கு அலுவலக உதவியாளர் வேலைக்கு இன்டர்வியூ செய்யும் போது அவனுக்கு என்று சில குணங்களை எதிர்பார்ப்பீர்கள் தானே.. பிறகே நாம் அவருக்கு ஒரு குறிப்பிட்ட விஷயத்தை தெளிவுற கற்றுக் கொடுக்க முடியும்.

இதை அடியேனின் குரு என்ற முறையிலே உங்கள் முன் வைக்கிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//உதாரணத்திற்கு உங்களுக்கு அலுவலக உதவியாளர் வேலைக்கு இன்டர்வியூ செய்யும் போது அவனுக்கு என்று சில குணங்களை எதிர்பார்ப்பீர்கள் தானே..//

ராகவ்
அது வேலைக்கு; கல்விக்கு அல்ல!
வேலை என்பது பரஸ்பர ஒப்பந்தம்.
கல்வி என்பது குருவருள்!

கல்விக்கும் சில குணங்களைக் குருவானவர் எதிர்பார்ப்பார்.
அதனால் தான்
***
//கற்றுக்கொள்ளும் லட்சியத்தின்மீது மட்டும் பற்று வைத்தல்
பொறுமையைக் கடை கடைபிடித்தல்//
இவை இரண்டும் ஓக்கே!
***
என்று அடியேனே சொல்லி விட்டேன்!

என் ஐயம்
//உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் தன்மை//
இதைக் குருவிடம் சேர்ந்த பின், அவர் தியானம், யோகம் முதலானவற்றைச் சொல்லிக் கொடுத்தல்லவா சீடன் பெற முடியும் என்பது தான் அடியேன் வினவுவது!

//இந்த மூன்று குணங்களை எதிர்பார்ப்பார் ஒருவரை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளுமுன்பு//

மூன்றில் முதல் இரண்டு ஓக்கே!
மூன்றாவது குணம்...
சீடனாகச் சேரும் வேளையில், அது சீடனின் கையை மீறிய விடயம்!

அந்தக் குணம் இல்லாத சீடனின் கதி என்ன? அவனைக் குரு சேர்த்துக் கொள்ள மாட்டாரா?
அடியேன் கண்களுக்குச் சீடனின் ஏக்கமே தெரிகிறது! என்ன செய்ய!

Raghav said...

////உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் தன்மை//

ரவி அண்ணா, எனக்கென்னவோ உணர்ச்சிகளை கட்டுப்படுத்துதல் தான் முதலாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இல்லாவிடில் அந்த சீடனால் பிற்காலத்தில் நல்ல குருவாக இருக்க முடியுமா என்பது சந்தேகமே.

இங்கே உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியவனா என்பதை விட அவனால் கட்டுப்படுத்த முடியுமா என்று தான் பர்க்கிறார் என்று நினைக்கிறேன். இந்த நேரத்தில் எனக்கு வரும் சந்தேகம், துர்வாச மாமுனிவர் கோபக்காரர் என்று பெயர் பெற்றவர், ஆனாலும் அவரை உத்தமமானவர் என்கிறோமே ஏன்?

இன்னொரு சந்தேகம், மிகச் சிறந்த குருவாக விளங்கியவர்களுக்கு, சிறந்த சிஷ்யர்கள் அமையப் பெறாததின் காரணம் என்ன?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ரவி அண்ணா, எனக்கென்னவோ உணர்ச்சிகளை கட்டுப்படுத்துதல் தான் முதலாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது//

அதை யாரும் மறுக்கவில்லை!
ஆனால் அதைக் குருவிடம் எதிர்பார்க்க வேண்டும்; தேர்ந்த சீடனிடம் எதிர்பார்க்க வேண்டும்!
இன்னும் தேறாத சீடனிடம், அப்போது தான் முதன் முதலாகச் சேரும் சீடனிடம் எதிர்பார்த்தால், பாவம் அவனுக்குப் போக்கிடம் ஏது?

//இங்கே உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியவனா என்பதை விட அவனால் கட்டுப்படுத்த முடியுமா என்று தான் பர்க்கிறார் என்று நினைக்கிறேன்//

உங்கள் வழிக்கே வருகிறேன்!
முழுக்க கட்டுப்படுத்தியவனா என்று பார்க்கவில்லை!
அவனால் கட்டுப்படுத்த முடியுமா என்று மட்டும் தான் பார்க்கிறேன் என்றால்...

கட்டுப்படுத்த அவனுக்குத் தெரிந்த வழிகள் என்ன?
யோகம், தியானம், தவம்????
இதை எல்லாம் தெரிந்து கொள்ளத் தானே குருவிடமே வருகிறான்?

இதை எல்லாம் அவன் முன்பே தெரிந்து வந்திருந்தால், குருவிடம் கற்றதாக ஆகி விடாதே! அப்புறம் குருவால் தான் பாங்கு அல்லாத ஒருவன் பாங்கு ஆனான் என்று எப்படிச் சொல்ல முடியும்?

//துர்வாச மாமுனிவர் கோபக்காரர் என்று பெயர் பெற்றவர், ஆனாலும் அவரை உத்தமமானவர் என்கிறோமே ஏன்?//

ஏன்?
உணர்ச்சிகளை கட்டுப்படுத்துதல் தான் முதலாக இருக்க வேண்டும் என்று சொன்ன நீங்களே பதில் சொல்லுங்கள் பார்ப்போம்!
புதிதாய் வரும் சீடனிடமே இதை எதிர்பார்க்கிறீர்கள்! துர்வாச மகரிஷியிடம் இதைத் தாராளமாக எதிர்பார்க்கலாமே!

//இன்னொரு சந்தேகம், மிகச் சிறந்த குருவாக விளங்கியவர்களுக்கு, சிறந்த சிஷ்யர்கள் அமையப் பெறாததின் காரணம் என்ன?//

அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை!
சங்கரர் என்னும் ஜகத்குருவுக்கு அமைந்த ஒவ்வொரு சீடரும் ஒரு ரத்தினம்! சில நேரங்களில் சங்கரரையும் விஞ்சும் படிப்பறிவும் பெற்றவர்கள்!

ஆனால் ஆசார்யர் அனைவரைக் காட்டிலும் தனித்து நிற்பது, அவர் எல்லை இல்லாக் கருணையால் மட்டுமே!

தி. ரா. ச.(T.R.C.) said...

I am on audit tour till 27th. So I am watching guru-sihyan fight at the cost of me. I will reply as soon as reach chennai.Glad to note that Ambi is so busy nowadays he reads only reply to blog and copy paste it.

தி. ரா. ச.(T.R.C.) said...

@ravi Unarsi kaatupaatu enpathai cotol over emotinal inteligence and
pormai enpathai perseverance enru etuthukolla veentum

தி. ரா. ச.(T.R.C.) said...

Let PEACE prevail over Bangaluru.Let all soul be safe. Only guru can give strength to shed hatred and help others.

மெளலி (மதுரையம்பதி) said...

//I am on audit tour till 27th. So I am watching guru-sihyan fight at the cost of me.//

ஹிஹிஹி

Raghav said...

மெளலி அண்ணா, நலம் தானே. சும்மா சிரிச்சா எப்புடி, தம்பிக்கு கை கொடுக்க மாட்டீங்களா.. நான் இன்னும் கே.ஆர்.எஸ் கேள்விக்கு யோசிச்சுகிட்டு இருக்கேன்..

Raghav said...

ரவி அண்ணா, ராமானுஜர், தனது குருவைத் தேடி திருக்கோஷ்டியூருக்கு 43 தடவை சென்றுள்ளார். ஒவ்வொரு முறையும் திருக்கோஷ்டியூர் நம்பி அவர்களிடம் சென்று "நான்" இராமானுஜன் வந்துள்ளேன் என்பார். நம்பி அவர்கள் அடுத்த முறை வரச்சொல்வார். இவ்வாறு 43 முறை வந்து சென்ற பிறகு இராமானுஜர் யோசித்து, "அடியேன் இராமானுஜன் வந்துள்ளேன்" என்று சொன்ன பிறகே சிஷ்யனாக ஏற்றுக் கொள்வார். நம்பி அவர்கள் நினைத்திருந்தால் முதல் தடவையிலே அதை சொல்லி திருத்தியிருக்கலாம், ஆனால் செய்யவில்லை, ஏன் ???

ராஜரிஷி விஷ்வாமித்ரர் எந்த குருவிடம் புலனடக்கம் முதலானவைகளை கற்றுக் கொண்டார்?

பொதுவாக குரு தான் தன்னிடம் சேரப்போகும் சிஷ்யனுக்கு தேர்வு வைப்பார், ஆனால் விவேகானந்தர் ஒவ்வொருவரிடம் போய் "கடவுளை கண்டுள்ளீர்களா" எனும் கேள்வியை முன் வைக்கிறார். இராமகிருஷ்ண பரமஹம்சர் மட்டுமே அதற்கு பதில் அளித்து அவரை சீடனாக ஏற்றுக் கொள்கிறார்.

துரோணாசாரியரிடம் 105 மாணவர்கள் படித்தனர். அனைவருக்கும் பாகுபாடில்லாது ஒரே முறையிலேயே பாடம் கற்றுக் கொடுத்தார். ஆனாலும் அர்ச்சுனன் மட்டும் எப்படி சிறந்தபோர் வீரனாகிறான்.

இந்த எல்லா இடங்களிலிம் சிஷ்யனின் முயற்சியே தென்படுகிறது. குருவிடலிருந்து தான் உபதேசம் பெற வேண்டும். ஆனால் குணநலன்கள், புலனடக்கம் சிஷ்யனாக தெரிந்து கொள்ள வேண்டும்.

//ஆசார்யர் அனைவரைக் காட்டிலும் தனித்து நிற்பது, அவர் எல்லை இல்லாக் கருணையால் மட்டுமே!//

கருணை எனும் குணத்தினை பரமாச்சார்யர் எந்த குருவிடம் பாடம் பயின்றார்.

- சிஷ்யன் இராகவன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ராகவ் குருநாதா

//"நான்" இராமானுஜன் வந்துள்ளேன்//

அது இராமானுசர் அல்ல!
தாம் மந்திரார்த்தங்களை அறிந்து கொண்ட பின்னர், நம்பியிடம் முதலியாண்டானையும் அனுப்பிய போது, முதலியாண்டான் தான் "நான்" என்று சொன்னது! இராமானுசர் அல்லர்!

//நம்பி அவர்கள் நினைத்திருந்தால் முதல் தடவையிலே அதை சொல்லி திருத்தியிருக்கலாம், ஆனால் செய்யவில்லை, ஏன் ???//

நம்பி ஆண்டானை எதில் சோதித்தார் என்று நினைக்கிறீர்கள் ராகவரே?
1. ஆண்டான் புது மாணவர் அல்ல! ஏற்கனவே பயின்றவர்! மேல் படிப்புக்கு (விசேடப் படிப்புக்கு) நம்பியிடம் செல்கிறார்!
ஏற்கனவே இராமானுசரிடம் பயின்றவர், "தான்" என்னும் வித்யா கர்வம் விடாததால் அவருக்கு அந்தச் சோதனை!
That was not an entrance test to a new comer! That was a validation test of an already trained sishya!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ராஜரிஷி விஷ்வாமித்ரர் எந்த குருவிடம் புலனடக்கம் முதலானவைகளை கற்றுக் கொண்டார்?//

கேள்வியைத் திருப்புகிறேன்!
விஸ்வாமித்ரர் எந்த சீடர்களிடம் புலனடக்கம் எதிர்பார்த்தார்? சொல்ல முடியுமா குருசிரேஷ்டரே?

//விவேகானந்தர் ஒவ்வொருவரிடம் போய் "கடவுளை கண்டுள்ளீர்களா" எனும் கேள்வியை முன் வைக்கிறார். இராமகிருஷ்ண பரமஹம்சர் மட்டுமே அதற்கு பதில் அளித்து அவரை சீடனாக ஏற்றுக் கொள்கிறார்//

விவேகானந்தர் கேள்வி கேட்டது, திராச ஐயா சொன்ன கண்டிஷன் நம்பர் ஒன்று://கற்றுக்கொள்ளும் லட்சியத்தின்மீது மட்டும் பற்று வைத்தல்//

அதற்கு இராமகிருஷ்ணர், "புலன் அடக்கும் தன்மை, உன்னிடம் இருக்கா?" என்று கேட்டுத் தான் சீடர் ஆக்கிக் கொண்டாரா? தேவரீர் சொல்ல முடியுமா?

//துரோணாசாரியரிடம் 105 மாணவர்கள் படித்தனர். அனைவருக்கும் பாகுபாடில்லாது ஒரே முறையிலேயே பாடம் கற்றுக் கொடுத்தார்//

இந்த 105 பேருக்கும் உணர்ச்சி கட்டுப்படுத்தும் டெஸ்ட் சேருவதற்கு முன் வைக்கப்பட்டதா என்பதை அறியத் தாருங்கள்!

//குருவிடலிருந்து தான் உபதேசம் பெற வேண்டும். ஆனால் குணநலன்கள், புலனடக்கம் சிஷ்யனாக தெரிந்து கொள்ள வேண்டும்.//

எந்தக் கொம்பனும் புலனடக்கத்தை "நானே" முயன்று அடைந்தேன் என்று சொல்லவும் முடியுமோ?

குருவின் உபதேசம் கேட்ட பின் சீடனுக்கு வரும் குண நலன்கள் இவை. அதை முயற்சியாலும் தொடர்ந்த சாதனைகளாலும் மேலும் வளர்த்துக் கொள்கிறான். அவ்வளவே!

ஆனால் மகாகுரு தாங்களோ, உபதேசம் செய்யும் முன்னரே, புலனை அடக்கி இருந்தால் உன்னைச் சேர்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிச் சீடனைத் திருப்பி அனுப்புகிறீர்கள்!

//கருணை எனும் குணத்தினை பரமாச்சார்யர் எந்த குருவிடம் பாடம் பயின்றார்//

தன்னையும், ஒரு பொருட்டாக மதித்துச் சீடராய் அழைக்கிறாரே என்று பரமாச்சார்யர் தன்னுடைய (மானசீக) குருவை எண்ணியதால் வந்த கருணை அது! குருவிடம் வந்து சேர்வதற்கு முன்பே அந்த குரு இறைபதம் அடைந்து விட்டார்.

கண்ணன் சாந்தீபனியிடம் பயின்றது, பரமாச்சார்யர் எல்லாம் அவதார புருஷர்கள்.
இங்கே பேசிக் கொண்டிருப்பது விளிம்பு நிலை மாந்தரைப் பற்றி!

மீண்டும் கேள்வியைத் திருப்புகிறேன்.
பரமாச்சார்யர், "உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் தன்மை" யை ஒரு சோதனையாக வைத்திருந்தால், நாம் எத்தனை பேர் தேறி இருப்போம்? இப்போது இருக்கும் அவர் சீடர்களில் எத்தனை பேர் தேறி இருப்பார்கள்?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//@ravi Unarsi kaatupaatu enpathai cotol over emotinal inteligence//

தான் அறிவைத் தேட வந்துள்ளோம் என்ற மமதை=control over emotinal inteligence

குருநாதரே வந்து விளக்கி விட்டார்.
அம்புடு தான்!
நன்றி குருவே திராச!

கோவை விஜய் said...

ஈசா யோகாவகுப்பில் கேட்ட ஒரு கதை.


அழகு ததும்பும் பசுமை நிறைந்த மலைஅடிவாரம்.

அமைதியன ஜென் துறவியின் பர்ணசாலை.

அடிவார தேசத்து மன்னன் பரிவாரங்களுடன் துறவியை தரிசித்து வணங்கி.

"குருவே நான் தியானம் கற்றுக் கொள்ள விரும்புகிறேன் " அருளாசி வழங்கவும்.'

துறவி" மன்னா உன் பரிவரங்களை போகச் சொல்லிவிட்டு நீ என் கூட ஒரு வாரம் தங்கவேண்டும்"

மன்னன் " என்ன ஒரு வாரமா" நாட்டு பரிபாலனை யார் பார்ப்பர்கள்"

அப்படியா " அப்போ ஒரு மாதம் தங்கு"

மன்னன் ' நான் ஒருவாரமே முடியாது என்கிறேன் நீங்க ஒருமாதம் என்கிறீர்களே"

அப்படியா '" ஒரு வருடம் இங்கு இருக்கணும்"


மன்னன் கோபத்தில் உச்சிக்கே சென்று " துறவியே உங்களுக்கு பயித்தியமா நான் ஒரு வாரமே முடியாது என்கிறேன் நீவிர் ஒரு வருடம் என்கிறிர்களே!.எதிரி நாட்டுக்காரன் படையெடுத்து வந்து விட்டால் என் ஆட்சியே போய்விடுமே"

அப்படினால் நீ இந்த ஜென்மம் முழுவதும் இங்கே தங்கினால் தான் உனக்கு ஞானம் கிடைக்கும் "


மன்னன் துறவியை வெட்ட வாளை ஓங்க

துறவி புன்னகை மாறமால் இந்த ஜென்மம் மட்டுமல்ல ஏழு ஜென்மமும் என் கூட இருந்தால் தான் உனக்கு ஞானம் கிடக்க ஒரு வாய்ப்பு இருக்கு."

மன்னம் வெகுண்டு படைகளுக்கு ஆணை இட்டு பர்ண சலையை நிர்மூலம் ஆக்கிவிட்டு சென்றுவிட

அதே புன்னகை மாற மலர்ந்த முகத்துடன் நம் துறவி பர்ணசாலை புணரமைப்பில் சீடர்களோடு தன் பணி தொடர்கிறார்

இக்கதையில் வரும் மன்னனுக்கு

1.பொறுமை இல்லை
2.உணர்ச்சி பிழம்பாய் மாறுகிறான்
3.லட்சியம் மில்லமல் தியானம் படிக்க வேண்டும் எனும் நினைப்புடன்( ஆட்சி அதிகார மமதையுடன்)


தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com

Geetha Sambasivam said...

குருவிடம் கற்கப் புலனடக்கம் தேவை என்பதை மிக மிக அழகாய் விளக்கிய விஜய்க்கு நன்றியும், வாழ்த்துகளும்.

@KRS, do not take everything literally, I observe you are taking the literal meaning only for one and all. It is my opinion only and just a suggestion for you.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மிக அழகான கதைக்கு நன்றி விஜய்!

//இக்கதையில் வரும் மன்னனுக்கு
3.லட்சியம் மில்லமல் தியானம் படிக்க வேண்டும் எனும் நினைப்புடன்(ஆட்சி அதிகார மமதையுடன்)//

= உண்மை!

இந்த அதிகார மமதையுடன் கல்வி பயில வருகிறான்! மமதை குருவையே கொல்லத் துணிகிறது!
அதனால் அவனைக் குரு நிராகரிக்கலாம்!

இங்கே மன்னனுக்குத் "தான்" என்கிற ஆணவம் தான் இருக்கு!

பயிலத் தொடுங்கும் முன்பே குருவிடம் தன் வசதிக்கு வளைந்து கொடுக்கச் சொல்லுவது ஆணவம்!

புலன்களான கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறிதல் - இவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் மனம் அலைபாய்வது வேறு!

அடியேன் சொல்ல வந்தது புலன் அடக்கம் இன்மையைக் காட்டி குரு நிராகரித்தல் ஆகாது என்பதே!
ஆணவம் வேறு!
புலன் அடக்கம் இன்மை வேறு!

புரிபவர்க்குப் புரியும்!

Raghav said...

என்னோட பின்னூட்டத்த காணோம்..

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//@KRS, do not take everything literally,//

Geethamma...
Any post gets enriched only by question & answers. Hope you agree!

//I observe you are taking the literal meaning only for one and all//

In all humbleness, I say that I dont take any literal meanings.
My intention is not to catch a few words and take people to task.

This is an important post on who qualifies for a shishya and hence this discussion. Also I havent side tracked on this discussion and whatever we discuss here are relevant to the post.

Discussion & Asking questions are good for the readers. If you feel that my discussion amounts to aruguing for arguing sake, I will stop here.
இனி அடியேன் கேள்விகள் கேட்க மாட்டேன்!
அருமை, நல்ல பதிவு என்பதுடன் நிறுத்திக் கொள்கிறேன்!

//It is my opinion only and just a suggestion for you//

உங்களுக்கு இல்லாத உரிமையா?
தாரளமாகச் சொல்லலாம்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இறுதியாக ஒன்றை மட்டும் சொல்லி விட்டு அடியேன் விலகிக் கொள்கிறேன்! இதுவும் ஈசா யோகத்துக் கதை தான்! :)

ஒரு மகா குரு, தனக்குப் பின், அடுத்த ஆசார்யனைத் தயார் செய்ய வேண்டுமே என்ற கவலையில், புதிய சீடர்களைச் சேர்த்து நல்வழி சொல்லவே நேரமில்லாமல் மறந்து போனாராம்!

பார்க்கும் சீடர்களை எல்லாம், புது மாணவர்களை எல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டு, அவர்களைப் பல சோதனைகள் செய்தாராம்.

புலனடக்கம், நற்குணங்கள், உத்தம சிஷ்ய லட்சணம் என்று பலரையும் ஆராய்ந்து, பல பேரை நிராகரித்து, வீட்டுக்கும் அனுப்பி விட்டார்!

கருணையே உருவான ஞானப் ப்ரசுன்னாம்பிகை அவர் கனவினில் தோன்றினாள்!

"உனக்கு ஏனப்பா வீண் கவலை?
உலகத்துக்கு ஆசார்யர்களை அனுப்புவது நான் தானே! ஆசார்ய பரம்பரையை நீயா உருவாக்குகிறாய்?

எனவே இந்தக் கவலையை விடு!
மாணவர்களை நீயும் விதிகள் காட்டித் தள்ளி விட்டால்,
அப்புறம் அவர்கள் எல்லாம் எப்படி பாதக மலம் அறுத்து, என் பாத கமலத்துக்கு வருவார்கள்?

குரு லட்சணம் தான் முக்கியமே அன்றி, சிஷ்ய லட்சணம் அல்ல!

தகரத்தைத் தங்கமாக்குவது தான் உன் வேலை! ஏற்கனவே இருக்கும் தங்கத்தை மெருகூட்டுவது யார் வேண்டுமானாலும் செய்வார்களே?

அடுத்த ஆசார்யனை உனக்கு நான் அனுப்புகிறேன்!
சீடர்களை, நல்ல அடியவர்களை உருவாக்கி, எனக்கு நீ அனுப்பு!"

அம்பாள் சிரித்து மறைந்து விட்டாள்!
அடியேனும் சிரித்து ஒதுங்கி விடுகிறேன்! :)

Raghav said...

கீதாம்மா, ரவி அண்ணா இருவரும் மன்னிக்கனும். குரு - சிஷ்யன் சண்டையில, குருக்களுக்குள்ள மனஸ்தாபம் வரும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. என்னுடைய கேள்விகள் காரணமாக எழுந்த பிரச்சனையான்னு தெரியவில்லை. அவ்வாறு இருந்தால் மன்னியுங்கள்.

தி. ரா. ச.(T.R.C.) said...

இது என்ன நியாயம்? பட்டா நிலத்துக்காரன் நான் பேசாமல் இருப்பதால்(பேசாதிருந்தும் பழகு)இது குருசேக்ஷ்திரமாகிவிட்டதே. நம்மவர்களே கருத்து கலக்கலா? கீதா உபதேசமும் ஆகிவிட்டது.எப்படியோ நல்ல விஷ்யங்களை எழுதும் ஒருவரை வெளியேற்றியதற்கு நானும் ஒரு காரணமோ. பேசாமல் பதிவுகளையே நிறுத்திவிட்டால் என்ன என்று தோன்றுகிறது.(ஆமாம் இவர் பிரமாதமாய் எழுதி கிழித்து விட்டார் இவர் எழுதுவதைவிட நிறுத்துவதே இவருக்கு நல்லது என்பவர்கள்தான் நிறைய பேர் என்பது எனக்கும் தெரியும்.

தி. ரா. ச.(T.R.C.) said...

எப்படியோ பலரை படிக்க வைத்து சிலரை கோதாவுக்குள் இறங்குமாறு பதிவு போடவைத்த என் குருவுக்கு வணக்கங்கள்

கேள்வி:-உங்களை ஜகத்குரு என்கிறார்களே நீங்கள் இந்த ஜகத்துக்கே குருவா

பதில்:-இல்லை நான் இந்த ஜகத்தையும் அதில் இருக்கும் ஜீவராசிகலயும் பொருள்களையும் குருவாக எண்ணூவதால் இருக்கலாம்

கேள்வி:- சரி அப்படியானால் இதோ இங்கே சிதறிக்கிடக்கும் தானியங்களை உண்ணும் குருவிகளும் உங்களுக்கு குருவா?

பதில்:- ஆமாம் அதில் சந்தேகமென்ன இந்த குருவிகளிடம் இருந்து தனக்கு கிடைக்கும் நல்ல விஷயங்களை தன்னைச் சார்ந்தோரிடம் பகிர்ந்து கொள்வதை கற்றுக் கொள்கிறேன். ஆதலால் இதுவும் எனக்கு குருவே
இந்தக் கேள்வி பதில் நடந்தது 1920இல் காசியில். கேள்விகேட்டவர்கள் காசி சர்வகலாசாலை தர்க்க சாஸ்த்திரத்தில் புலமை பெற்ற பண்டிதர்கள். பதில் அளித்தவர் பட்டத்துக்கு வந்து சில வருடங்களே ஆன ச்ரீ காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பட்டா நிலத்துக்காரன் நான் பேசாமல் இருப்பதால்//

அதான் நீங்க பேசி தெளிவு படுத்திட்டீங்களே திராச ஐயா!

//Unarsi kaatupaatu enpathai cotol over emotinal inteligence=அறிவைத் தேட வந்துள்ளோம் என்ற மமதை//
இதைத் தான் குரு சோதனை செய்கிறார் என்று சொல்லி புரிய வைத்து விட்டீர்களே! அஷ்டே!

//இது குருசேக்ஷ்திரமாகிவிட்டதே//

ஹிஹி
தர்ம க்ஷேத்ரே!
குரு க்ஷேத்ரே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இல்லை நான் இந்த ஜகத்தையும் அதில் இருக்கும் ஜீவராசிகலயும் பொருள்களையும் குருவாக எண்ணூவதால் இருக்கலாம்//

சூப்பரோ சூப்பர்!
பணியுமாம் என்றும் பெருமை!
சீடர்களைச் சோதிப்பவர் ஜகத்குரு அல்ல!
தன்னையே சோதித்து, ஆத்ம ஜோதி ஏற்றுபவரே ஜகத்குரு!

மிகவும் அருமையாகச் சொன்னீர்கள் திராச!
உப்பை, கொக்கை, கோழியைக் குருவாகக் கொண்டவர்கள் பற்றி தனிப்பதிவில் எழுதுகிறேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பேசாமல் பதிவுகளையே நிறுத்திவிட்டால் என்ன என்று தோன்றுகிறது//

இறைவனுக்கு அர்ச்சனையே நிறுத்திவிட்டால் என்ன என்று தோன்றுகிறது-அப்படின்னு சொல்ல முடியுமா!

அவர் தாற்காலிகமாகத் தான் நிறுத்தி இருக்காரு! சாதுர் மாஸ்ய விரதம் மாதிரி, ஏக மாச விரதம்! :)
வந்துடுவாரு! கவலைப்படாதீங்க ஐயா! வர வியாழன் அவர் பதிவு தானே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Raghav said...
குரு - சிஷ்யன் சண்டையில, குருக்களுக்குள்ள மனஸ்தாபம் வரும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை//

மனஸ்தாபமா?
ஏம்-பா ஒரு கருத்துக்கு எதிர் கருத்து வைத்தா உடனே மனஸ்தாபமா?

அதெல்லாம் ஒன்னுமில்ல ராகவ்! :)

திவாண்ணா said...

ரொம்பவே லேட்டா வந்திருக்கேன். அதனால ஏதாவது சொல்லப்போய் திருப்பி குரு க்ஷேத்திரம் ஆகிவிடக்கூடாதேன்னு...
"அருமையான பதிவு !" அப்படின்னு மட்டும் சொல்லிக்கிறேன். புலனடக்கம் ப்ரஹ்மசாரி லக்ஷணம்ன்னு சொல்ல நினைச்சேன்னாலும் சொல்லலை.
:-))

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க திவா. லேட்டா வந்தா என்ன. வந்ததே பெரிசு.ராமாயணத்தில் ஹனுமான் 4ஆவது காண்டத்தில்தான் லேட்டாத்தான் அறிமுகம். ஆனா அடுத்த காண்டத்திலேயே
ஹீரோவா சுந்தரகாண்டத்திலே வரலையா? எங்க அப்பா குதிருக்குள்ளே இல்லேன்னு சொன்னதுக்கு நன்றி.

Geetha Sambasivam said...

@திவாண்ணா, :P :P
@திராச, சார், ஹிஹிஹிஹி, டாங்கீஸ்!!!!!!!!! நான் ஜூட்!

திவாண்ணா said...

//@திவாண்ணா, :P :P
@திராச, சார், ஹிஹிஹிஹி, டாங்கீஸ்!!!!!!!!! நான் ஜூட்!//

அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா! சந்தோஷத்தை பாருங்க! புரியுது புரியுது! எப்படியோ ஒத்தரையாவது சந்தோஷமா இருக்க பண்ண முடிஞ்சது. சரிதான்!