ஆச்சார்ய ஹ்ருதயத்தில் கூரத்தாழ்வாரது 1000ஆவது ஜெயந்தி மஹோத்ஸவ சிறப்பு இடுகை இட வேண்டும் என்று அறிந்தவுடன் இந்த மஹானுபாவரைப் பற்றி நமக்கு ஏதும் தெரியாதே என்ன செய்வது, எப்படிச் செய்வது என்ற வருத்தம் ஏற்பட்டது. பதிவர் ஷைலஜாவிடம் விசாரித்ததில் அவர் தமது பங்களிப்பினை கண்ணன் பதிவில் இட இருப்பதாகச் சொன்னார். அடுத்ததாக நான் அணுகியது நண்பர் பரவஸ்து அவர்கள். அவரிடம் ஆச்சார்ய ஹ்ருதயத்தில் போடுவதற்காக என்று கேட்ட மாத்திரம், கோரிக்கையை ஏற்று எழுதி அனுப்பினார். தன்னுடைய கருத்துக்கள் ஏதும் கலவாது, தான் கேட்டறிந்ததை, படித்தறிந்ததை எழுதியதாகக் கூறினார். கூரத்தாழ்வவர் பற்றி அவர் எழுதி அனுப்பியிருக்கும் செய்திகளை 2 அல்லது மூன்று இடுகைகளாக போட நினைத்திருக்கிறேன். எனது வேண்டுகோளை ஏற்று, எழுதிய அவருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கீழே அவரது எழுத்துக்கள்.
----------------------------------------------------------------------------------------
ஸ்ரீமதே இராமானுஜாய நம:
லக்ஷ்மி நாத ஸமாரம்பாம் நாதயாமுன மத்யமாம்!
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்!!
அடியேன், என் சிறு மதிக்கு எட்டிய வரையில், இந்த ஆசார்ய ஹ்ருதயத்தில், கூரத்தாழ்வான், பிறந்த 999 ம் வருடம் அவரைப் பற்றி எழுதும் பெரும் பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது முன் பிறவியில் செய்த புண்ணியமே. ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின், அடிப்படையே குருபரம்பரை தான். ஆசார்ய ஸம்பந்தம் இல்லாமல், எந்த செயலுக்கும், நடை முறைக்கும், அர்த்தம் இல்லாமல் போய்விடும். ஒரு குருவிடம், அவரது சிஷ்யர், மாணாக்கர், அடியார்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு, கலியுகத்தின் மிகச் சிறந்த உதாரணம், கூரத்தாழ்வான்.
ஆங்கில ஆண்டு 2010 ம் வருடத்தில் வரக்கூடிய தை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில், கூரத்தாழ்வான், பிறந்த 1000 ம் வருடம் முடிவுறும். இதைப் படிக்கும் அன்பர்களில் எவரேனும் கூரத்தாழ்வான் பிறந்த ஊரான, கூரத்தில் நடக்க இருக்கும் 1000 வருட நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், அல்லது அவ்ர் கூறியபடி நடக்க முயன்றால், அதுவே இந்த பதிவுக்குக் கிடைக்கும் வெற்றி என எண்ணுகிறேன்.
திரு அவதார வைபவம்:
காஞ்சிக்கு வடமேற்கே சுமார் 5 மைல் தூரத்தில், அரக்கோணம் செல்லும் மார்க்கத்தில் உள்ள கூரம் என்னும், திருத்தலத்தில், கலி ஆண்டு 4111 சௌம்ய வருடம்,(கி.பி 1009) தை மாதம், அஸ்த நட்சத்திரத்தில் தேய்பிறை பஞ்சமி திதி, வியாழக்கிழமை அவதரித்தார். ஹாரீத கோத்ரம், வடமாள் குலத்தைச் சேர்ந்த அனந்தர்-பெருந்தேவி நாயகி தம்பதியற்கு நல் திருமகனாய், ரகு குல திலக இராமனின் அம்சமாகப் பிறந்தார். ஸ்ரீவத்ஸாங்கமிச்ரர் (திருமறுமார்பர்) என்று அழைக்கப்பட்ட கூரேசர், இராமானுஜரால், பின்னாளில் கூரத்தாழ்வான், என்று ஆஸ்ரயிக்கப்பட்டவர்.
திருமணம்:
இரவில் நகர சோதனைக்கு கூரேசர் செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் போது, ஒரு நாள் ,ஆண்டாள் என்னும் கன்னிகையின் இல்லம் தாண்டிச் செல்லும்போது, அவளின் பெற்றோர், தமது மகளின் ஜாதகம் சரி இல்லாததால் , திருமணம் நீண்ட காலம் தடை பட்டிருப்பதை, வருத்தத்துடன் புலம்பிக் கொண்டிருந்தனர். அப்பெண்ணின் ஜாதகப்படி அவள் திருமணம் ஆனால், அவளது கணவன் உயிர் துறப்பான் என்ற ஒரு நிலை.இல்லறப் பற்று இல்லாத போதும், அளவற்ற சீர்வரிசைகளை அனுப்பி ஆண்டாள் என்னும் அந்த கன்னிகையை, தாமே மணம் செய்து கொண்டார் கூரேசர். தம்பதியர் இருவரும், புராணம், இதிஹாஸம் மற்றும் ஸகல சாத்திரங்களையும் கற்றுத்தேர்ந்த ஆழ்ந்த வேத வித்துக்களாக விளங்கினர்.
இராமானுஜர் திருவரங்கம் செல்லப் புறப்பட்ட போது, கைங்கர்யம் செய்தல்:
அரங்கத்திலிருந்து வந்த பட்டர், இராமனுஜரைக் காணிக்கையாக, தர வேண்டும் என்று பேரருளாளனிடம் கேட்டுப் பெறுகிறார். அப்போது இராமானுஜர் கலங்கி நின்று வரதனை விட்டுப்பிரிய மனம் இல்லாமல் நிற்கிறார். அப்போது தமது மடத்திற்குக் கூட தகவல் சொல்லாமல், தமது திருவாராதனப் பெருமாளான தேவப் பெருமாளை மடத்திலிருந்து எழுந்தருளப் பண்ணி வரவும் பகவதாராதனத்திற்கு வேண்டிய பொருள்களை மடத்திலிருந்து கொண்டு வரவும் கூரத்தாழ்வார், முதலியாண்டான்,நடாதூர் ஆழ்வான் ஆகியோரை நியமிக்கிறார். அவர்களும் திருவாராதனப் பெருமாளை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வந்தார்கள்.
அப்போது ஆரம்பித்த தொண்டு உள்ளம், கூரேசரின் இறுதிக்காலம் வரை இராமானுஜரின் தொண்டே தமது பணி என்று வாழ்ந்து இருந்தது.இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய செய்தி என்னவெனில், நித்ய கர்ம- அனுஷ்டானங்களை எந்த சூழ்நிலையிலும் தவற விடக் கூடாது என்பது தான். (தினமும் செய்ய வேண்டிய சந்த்யா வந்தனம், திருவாராதனம் முதலிய கடமைகளைத் தவறவிடாமல் தினமும் எல்லாரும் செய்ய வேண்டும் என்பதை தானே வாழ்ந்து காட்டியிருக்கிறார். அதனால் ஆசார்ய, மற்றும் பகவத் ஸங்கல்பம் கொண்டுள்ள எல்லாரும், இந்த நியமங்களை, கடினம் என்று நினைத்து ஒதுக்காமல், உங்கள் நேரத்தை இதற்கும் சிறிது ஒதுக்கினால் உஙகள் ஆசார்யர்களின் ஹ்ருதயம் நிச்சயம் குளிரும்.
ஆசார்ய சம்பந்தம் வந்து விட்டால், குடும்பத்தை விட்டு விட வேண்டுமா?:
கூரத்தாழ்வார், ஆசார்ய சம்பந்தம் வந்த உடன், தம் இல்லாளைப் பிறிந்து வாழ்ந்தார். அதை அறிந்த இளையாழவார், உடனே கூரேசரை அழைத்து, அவருடைய மனையாளை திருவரங்கத்திற்கு அழைத்து வருமாறு பணித்தார். கூரேசரும் தமது மனையாள் ஆண்டாளை அழைத்து வருவதற்கு, கூரம் சென்றார். அங்கே அவர் முதலில் செய்த காரியம், தம்மிடம் மீதம் இருந்த செல்வங்களை அனைவருக்கும் வழங்கி விட்டு, தம் மனையாள் எனும் செல்வத்தை மட்டும் தம்முடன் இருத்தி, திருவரங்கம் திரும்புகிறார். வரும் வழியில் மதுராந்தகம் அருகே காட்டில் நடந்து வருகையில் “பயமாய்” இருக்கிறது என்று ஆண்டாள் தேவி உரைக்கவும் கூரேசர் “மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம்?” என வினவுகிறார். அதற்கு தேவி அவர்கள் “பொன் வட்டிலில் தினமும் அமுது செய்த தேவரீர் இனிமேல் அமுது செய்ய ஒரே ஒரு பொன் வட்டிலை மட்டும் மிகுத்தினேன்” என்றார். உடனே கூரேசர் அதனை வாங்கி வீசி எறிந்து விட்டு ”இனி பயமின்றி நட!” என்று கூறி அவரை அழைத்துக் கொண்டு உடையவர் இருக்கும் இடமான திருவரங்கம் வந்து சேர்ந்தார். அதனாலேயே கூரேசர் “பொன் வட்டில் தனையெறிந்த புகழுடையோன் வாழியே!” என்று புகழப்பட்டார்.(ஒரு குந்து மணியைக் கூட, தூக்கி எறிய நமக்கு மனப்பக்குவம் வராது.மாறாக, தெருவில் ஏதேனும் பொன் கிடைத்தால், நாம் அதை எடுத்துக் கொண்டு விடுவோம்.!!!)
இங்கு ஆண்டாள் எனும் தேவியும் குடும்ப வாழ்க்கையை விடவில்லை. இளையாழ்வாரும் கூரேசர் துறவியாக வேண்டும் என்று விரும்பவில்லை.ஆசார்யர்களின் மனப்போக்கை அறிந்தவர்கள் இதை நன்றாகப் புறிந்து கொண்டு குடும்ப வாழ்க்கையைக் கைவிடாமல், அதே நேரத்தில் ஆசார்யர்களுக்கும், ஆண்டவனுக்கும் நம்மால் முடிந்த கைங்கர்யம் செய்யலாமே.
கூரத்தின் சிறப்பும் அடையா நெடுங்கதவமும்:
அக்காலத்தில் கூரத்தின் சிறப்பே, கூரேசரின் இல்லத்தில் தினமும் நடைபெற்ற அன்னதானம் தான். தர்மம் தலை காக்கும் என்னும் நியமம் உண்மையாயின், அத்தகைய அன்னதானம் தான் கூரேசரின் வாழ்வையே திசை மாற்றும் கருவியாக விளங்கியது.அவரின் செல்வச் செழிப்புக்கு அளவே இல்லாமல் இருந்தது.(இக்ஷுவாகு குல திலக இராமனின் அம்ஸம் என்றால் சும்மாவா?). தோன்றிற் புகழொடு, தோன்றிய கூரேஸரின் திருமாளிகையில், காலை முதல், இரவு வரை, அங்கு வரும் அடியார்க்கு , இல்லை என்று சொல்லாமல் அன்னதானம் நடக்கும்.அதனால் அவரது இல்லத்தின் பிகப்பெரிய கதவு, அடையா நெடுங்கதவம் என்று அழைக்கப்பட்டது.கதவை அடைக்க வேண்டிய சூழ்நிலை வரவில்லை எனும்போது, ஏன் அப்படி ஒரு நெடுங்கதவம் வேண்டும்? பேரருளாளனின் அருள் கூரேசருக்குக் கிடைத்தது யாரால்?. அந்த நெடுங்கதவின் ஓசை தான் கூரேசரின் அருள்வாழ்வுக்கு வித்திட்டது. கோனேரி வாழும் குருகாய்- பிறப்பேனே என்று ஆழ்வார்கள் பாடியது போல, மரமாய்ப் பிறந்தாலும், ஓசை தரும் மணியாய் பிறந்தாலும் கூரேசரின் இல்லத்தின கதவாய் நாம் பிறந்திருக்கலாமே, என்ற ஆதங்கம் எல்லார் மனத்திலும் இருந்தது என்றால் மிகை ஆகாது. அத்தகைய பெருமை வாய்ந்த நெடுங்கதவம் தினமும் எப்போது அடைக்கப்படும்? காஞ்சிப் பேரருளாளனின் திருக்கோவிலில் இரவு திருவாராதனம் முடிந்து, திருக்காப்பு செய்யப்பட்ட பின்னரே, அடையா நெடுங்கதவம் அடைக்கப்படும். இவ்வாறாக கூரேசர் இல்லத்தில் எப்போதும் எல்லா திருமால் அடியார்களுக்கும் உணவு உபசரிப்பு கண்டிப்பாக உண்டு.
காஞ்சியில் ஒரு நாள் உற்சவத்தின் காரணமாக இரவில் திருவாராதனம் முடிவதற்குத் தாமதமானது. அதனால் பேரருளாளன், ஆலயத்திருக்கதவம் திருக்காப்பு பெறுவதற்குத் தாமதமானது. ஆனால் கதவின் திருக்காப்பு செய்யப்படும் முன்னரே, அதன் கிண்கிணிகளின் ஓசை பெருமாளுக்கும், தாயாருக்கும் கேட்டது. அப்போது, தனக்கு ஆலவட்டம் வீசிக்கொண்டிருந்த, தமது அந்தரங்கரான திருக்கச்சி நம்பிகளிடம் ”நம்பீ! எக்காரணத்தால், நமது திருவாராதனம் முடியும் முன்பே, கோயில் கதவம் திருக்காப்பு செய்யப்படுகிறது என பேரருளாளன் வினவ, அதற்கு நம்பி, "இது நம் கோயில் கதவத்தின் ஓசை அன்று. தொலைவில் உள்ள கூரேசரின் திருமாளிகையின் அடையா நெடுங்கதவத்தின் ஓசை" என்று பதிலிறுத்தார். அதைக்கேட்ட தேவப்பிரான் “கூரேசனின் ஐஸ்வர்யமோ நம்மை இங்ஙனம் மயக்கிற்று?” என வியந்தான். பேரருளாளனே தமது செல்வச் செழிப்பையும், தர்மத்தையும் வியந்தார் எனும் செய்தியை திருக்கச்சி நம்பிகள் மூலம் கூரேசர், அறிந்து, மனம் உருகி, கண்ணீர் உகுத்து, செய்வதறியாது, திகைத்தார். பின்னர் ஒரு திடமான முடிவு எடுத்து, தம்மிடம் இருந்த நிலையாச் செல்வங்களில் பெரும்பாலானவற்றை ஏழைகளிடம் தானம் செய்து விட்டு, திருக்கச்சி வந்து எதிராசரை சரணடைகிறார். எதிராசரும் அவருக்கு, பஞ்ச ஸம்ஸ்காரம் செய்வித்து, தமது சீடராக ஏற்றுக்கொண்டார். கூரேசனுக்கு, “கூரத்தாழ்வான்” என்ற திருநாமம் இட்டார்.பின்னாளில் இவர் இராமானுஜரின் “பவித்ரம்” என்று அழைக்கப்பட்ட பெருமை பெற்றார்.
தண்டும் பவித்ரமும்:
திருக்கோட்டியூர் நம்பியிடம் திருமந்திரப் பொருள் அறிய வேண்டி இராமானுஜர் முயற்சி செய்த போது, நம்பிகள் இளையாழ்வாரிடம் “மறு நாள் தண்டும், பவித்ரமுமாக, தனியே வரவும்” என நியமிக்கிறார். அவ்வாறே இளையாழ்வார் மறு நாள் செல்கிறார். ஆனால் தனியாக அல்ல. முதலியாண்டான் , மற்றும் கூரேசரை உடன் அழைத்துச் சென்று நம்பிகளை அடைகிறார். அப்போது நம்பிகள் கோபமாக இராமானுஜரை நோக்கி “உம்மை தனியாகத் தானே வரச்சொன்னேன், உம்மோடு இருவரை ஏன் அழைத்து வந்தீர்” என வினவ, அதற்கு, நமது முனி, முதலியாண்டானைக் காட்டி, இவர் தான் என் தண்டு என்றும், கூரேசரைக் காட்டி, இவர் தான் என் பவித்ரம் என்றும் தமது சீடர்களை பெருமையுடன் உகக்கிறார். இந்த பெருமை அடைய கூரேசரை விட வேறு ஒருவர்க்குத் தகுதி உண்டோ? இங்கு முக்கிய செய்தி, நல்ல குரு என்பவர் தமது தகுதி உடைய சீடர்களுக்கும், தம்மைப்போல நல்ல கதி அடைய வேண்டும் என்றே விரும்புவார்.
.....கூரத்தாழ்வாரைத் தொடர்வோம், குருவருளைப் பெறுவோம்