Wednesday, October 29, 2008

நாம-சங்கீர்த்தனச் சக்ரவர்த்தி ஸ்ரீதர ஐயாவாள் - 2


ஐயாவாள் திருச்சிராப்பள்ளியில் வசித்த காலத்தில், தினம் மாத்ரு பூதேஸ்வரரை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மாலை தரிசனம் முடிந்தபின் தமது இல்லத்திலேயே ராமாயணம், பாகவதம், பாரதம், சிவபுராணம், என்று சிவ-வைஷ்ணவ பேதமில்லாது ப்ரவசனங்களைச் செய்துவந்தாராம். அப்போது திருச்சியை ஆண்ட நாயக்க வம்சத்து அரசர் வைஷ்ணவ மதத்தை சார்ந்தவராக இருந்தாலும், சமஸ்த ஜனங்களையும் அனுசரித்து ராஜ்யாதிபத்யம் செய்து வந்திருக்கிறார். அப்போது சிலர் அரசரிடம் நல்மதிப்பைப் பெறுவதற்காக மைசூர் சமஸ்தானத்தில் இருந்து வந்த ஐயாவாள் சைவ மதப்பிராசாரம் செய்வதாகவும் வைஷ்ணவத்தை இகழ்வதாகவும் சொல்கின்றனர். நிலையை அறிந்த அரசர் தமது உளவுப் பிரிவின் மூலம் ஐயாவாளைப் பற்றிய உண்மையை அறிகிறார். பின் தம்மிடம் தவறான செய்தியைச் சொன்னவர்களும் ஐயாவளை பற்றி அறியவும், தமது அரசுக்கு உட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் மஹானை எல்லோருக்கும் உணர்த்தவும் உறுதி கொள்கிறார். நேரடியாக ஏதும் சொல்வதோ அல்லது ஐயாவாளை சொல்லச் சொல்வதோ நல்லதல்ல என்று தீர்மானித்து, ஸ்ரீ கிருஷ்ண விக்ரஹத்தினை அலங்கரித்து வீதிவலம் வரச் செய்கிறார். ஐயாவாள் தமது பூஜையை முடித்து தியானத்தில் இருக்கையில் வீதியில் இறைவனது ஊர்வலம் வருகிறது. நாத-வாத்யங்களின் சப்தத்தால் தியானம் கலைந்த ஐயாவாள், வாசலுக்கு வந்து மலர்களும், நிவேதனமும் அளித்துப் பணிகிறார். ஸ்ரீ ஐயாவாள் ஏக பாவத்தில், சிவ-விஷ்ணு வித்யாசம் ஏதும் இல்லாது ஸ்தோத்திரம் செய்கிறார்.


அநித்யத்வம் ஜானன்னதி த்ருடமதர்ப் பஸ்ஸவினய:
ஸ்வகே தோஷே அபிக்ஞ: பரஜுஷிது மூடஸ்ஸகருண:
ஸதாம் தாஸ: சாந்த: ஸமமதிரஜஸ்வரம் தவ யதா
பஜேயம் பாதாப்ஜம் யதுவர தயேதா மம கதா



என்று ஸ்தோத்திரம் செய்கிறார். அதாவது உலகத்தின் அநித்ய நிலையை புரிந்தவனாகவும், கர்வமில்லாதவனாகவும், வினயமுடையவனாகவும், என்னுடைய தோஷங்களை அறிந்தவனாகவும், பிறர் தோஷங்களை அறியாதவனாகவும், எல்லா ஜீவராசிகளிடமும் இரக்கம் உடையவனாகவும், பாகவதர்களுக்கு தாசனாகவும், சாந்தனாகவும், உன் பாதகமலத்தை எப்போதும் பூஜிப்பவனாகவும் எப்போது நான் மாறுவேன் க்ருஷ்ணா என்று கேட்பதாகப் பாடுகிறார். இவ்வாறாக இந்த நேரத்தில் அவர் க்ருஷ்ணன் மீது செய்த ஸ்தோத்திரம் தான் "க்ருஷ்ண த்வாதச மஞ்சரி" என்று கூறப்படுகிறது. அங்கு இருந்த ஊரார் இவரது ஸ்தோத்திரங்களை கேட்டு, அவரது, வினயம், பக்தி போன்றவற்றைப் பார்த்து, அரசர் உட்பட, வைஷ்ணவத்தைப் பழிப்பதாகச் சொன்னவர்கள் உட்பட எல்லோரும் அவரது உன்னத பக்தியினை உணர்ந்து அவர் காலடியில் வீழ்ந்து வணங்கினராம்.


இதே போல திருவிசைநல்லூரில் வசிக்கையில் அங்கிருந்த பண்டிதர்களுக்கு ஐயாவாளிடம் பொறாமை உண்டாகியிருக்கிறது. ஒரு கோகுலாஷ்டமி தினத்தில் விழாவிற்க்கு ஐயாவாளையும் அழைத்திருக்கின்றனர். ஆழ்ந்த பக்தி இல்லாது வெறும் டாம்பீகமான விழாவாக தோன்றியதால் ஐயாவாள் அதில் பங்கேற்காது விட்டு விடுகிறார். வாசலில் க்ருஷ்ணன் ஊர்வலமாக வருகையில் ஐயாவாள் இறைவனை வணங்க வருகிறார். ஆனால் விழாவை நடத்தினவர்கள் கோபித்துக் கொண்டு, உமக்கோ க்ருஷ்ண பக்தி கிடையாது, இப்போது மட்டும் ஏன் வருகிறீர்கள் என்று மறுத்துப் பேசுகின்றனர். ஐயாவாள் அவர்களிடம் தனது க்ருஷ்ண பக்தியை நிருபிக்க வேண்டிய அவசியமில்லை என்று உள்ளே சென்றுவிடுகிறார். உடனே தன் கண்களையே க்ருஷ்ணனின் தோழியாக பாவித்து கோபிகா பாவத்தில் க்ருஷ்ணனனை நினைத்து, "என் ப்ரியசகியான த்ருஷ்டியே, நீலோத்பலம் போன்ற அழகிய காந்தியுடையவனும், சந்த்ர பிம்பத்தைவிட அழகான முகமுடையவனும், நந்தகோபன்-யசோதையின் ஆனந்தத்திற்கு காரணமான கருணாமூர்த்தியான க்ருஷ்ணனை அனுபவி என்று பாடுகின்றார். திடிரென ஊர்வலத்தில் இருந்தவர்கள், தமது விக்ரஹத்தின் பீடம் மட்டும் இருப்பதை காண்கின்றனர். அதே சமயத்தில் ஐயாவாள் பாடுவதும் காதில் விழ, அவர்கள் ஐயாவாள் இல்லத்திற்குள் சென்று பார்த்தால் அங்கு விக்ரஹம் இருக்க ஐயாவாள் தம்மை மறந்து டோலோத்ஸவ ஸேவை சார்த்துவதாக பாடிக்கொண்டிருப்பதை கண்டு பிரமிக்கின்றனர். அவரது பக்தியை உணர்ந்த பண்டிதர்கள், தமது ஊர்வலத்தை விட்டு அங்கேயே இரவு முழுவதும் நாமசங்கீர்த்தனம் செய்து ஐயாவாளிடம் மன்னிப்பும் கேட்டனர். இந்த நிகழ்வின் போது ஐயாவாள் பாடியதுதான் "டோலோ நவரத்ன மாலிகா" என்று சொல்லப்படுகிறது.


திருவிசநல்லூரில் இருந்த காலத்தில் தினம் திருவிடைமருதூர் மஹாலிங்கத்தை தவறாது தரிசனம் செய்தார். ஒருநாள் அதிக மழையின் காரணமாக அவர் காவிரியைக் கடந்து கோவிலுக்கு செல்ல இயலாது தவித்து தாம் ஏதோ சிவாபராதம் செய்திருப்பதாக கலங்குகிறார். அப்போது அவர் செய்த ஸ்தோத்திரம் தான் "ஆர்த்திஹர ஸ்தோத்திரம்" என்று சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் கோவில் அர்ச்சகர் தோற்றத்தில் ஈஸ்வரனே வந்து பிரசாதம் அளித்ததாக சொல்லப்படுகிறது. மறுநாள் கோவிலுக்குச் சென்று அந்த அர்ச்சகரிடம் பேசுகையில் அவர் வரவில்லை என்றும் வந்தது சர்வேஸ்வரனே என்று உணர்ந்து, ஈசனது தயை போற்றும் விதமாக செய்ததே "தயா சதகம்" என்னும் 100 ஸ்லோகங்கள்.


இவ்வாறாக திருவிடைமருதூர் மஹாலிங்கத்தை அர்த்த ஜாம பூஜையில் தரிசிப்பதை வழக்கமாக கொண்ட ஐயாவாள், ஸம்சாரம் என்னும் விசாலமான நாடகமேடையில் எல்லா ரூபங்களும் தரித்து ஆடிப்பாடி களைத்து விட்டேன். சர்வக்ஞனும், தயாபரனுமான நீ போதும் என்று கூறி என்னை ஏற்றுக் கொள்வதுதான் உசிதம் என்று கூறி குமுறிக் குமுறி அழுகிறார். மற்றவர்களுக்கு ஐயாவாள் அழுவதன் காரணும் ஏதும் அறியவில்லை என்றாலும் அவரது பக்தியைக் கண்டு மெய்சிலிர்த்தனர். அப்போது ப்ரேம பக்தியில் உன்மத்தமான ஐயாவாள் தீடீரென கர்ப்பகிரஹத்தை நோக்கி சென்று மஹாலிங்கத்தை ஆலிங்கனம் செய்ய முற்பட்டு, அப்படியே ஜோதிவடிவில் பரமேஸ்வரனை அடைந்தார் என்று கூறப்படுகிறது.

ஸ்ரீகண்டமிவ பாஸ்வந்தம் சிவநாம பராயணம்
ஸ்ரீதரம் வேங்கடேஸார்யம் ச்ரேயஸே குருமாச்ரயே

[ஸாக்ஷாத் பரமேஸ்வரன் போல பிரகாசிக்கிறவரும், எப்போழுதும் சிவநாம ஜபம் செய்வபவருமான ஸ்ரீதர வேங்கடேஸர் என்னும் குருவை ஆச்ரயிக்கிறேன்]

கலியில் நாம ஸ்மரணைதான் சுலபம், அதனை விடாது செய்து, எல்லாம் வல்ல இறையினை உணர இந்த மஹான் அருளட்டும்.

Wednesday, October 22, 2008

நாம-சங்கீர்த்தனச் சக்ரவர்த்தி ஸ்ரீதர ஐயாவாள் - 1

முன்பே நாம் இங்கே பகவன் நாம போதேந்திரரைப் பற்றி பார்த்தோம். தற்போது திவாண்ணா தனது வலைப்பூவில் சதாசிவ பிரம்மேந்திரர் பற்றிச் சொல்லியிருக்கிறார். அதுவும் இந்த வலைப்பூவில் தொடராக வர இருக்கிறது. இன்று நாம் பார்க்க இருப்பது ஸ்ரீதர ஐயாவாள். சரி, ஸ்ரீதர ஐயாவாளைச் சொல்ல ஆரம்பிக்கும் இந்த இடுகையில் போதேந்திராளைப் பற்றியும், சதாசிவ பிரம்மத்தைப் பற்றியும் ஏன் ஆரம்பிக்கிறேன் என்று தோன்றும். இவர்கள் மூவரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பது தெரிந்திருக்கலாம். இவர்கள் மூவரும் தான் தென்னாட்டில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் நாம சங்கீர்த்தனத்தை பரப்பியவர்கள்.

இந்த மூவரையும் உற்று நோக்கினால் இன்னும் சில ஆச்சர்யமான விஷயங்களைப் பார்க்க முடியும். போதேந்திரர் சன்யாஸி, பிரம்மேந்திரர் அவதூதர், ஸ்ரீதரர் கிருஹஸ்தாச்ரமத்தில் இருந்தவர். போதேந்திரர் 'ராம நாம' மகிமையையும், ஸ்ரீதர ஐயாவாள் 'சிவ-நாம' மகிமையினையும், பிரம்மேந்திரர் 'ப்ரம்ஹைவ அஹம்' என்னும் அத்வைத நிலையுமாக கொண்ட வெவ்வேறான ஆச்ரமிகளானாலும், முடிவாக இவர்கள் உலகிற்கு பிரச்சாரம் செய்தது நாம சங்கீர்த்தனமே. ப்ரம்மேந்திரரும், போதேந்திரரும் தமது தவத்தால் அடைந்த யோக, போக சக்திகளை ஸ்ரீதர ஐயாவாள் எளிய பக்தி வழியில் அடைந்திருக்க்கிறார் என்றால் மிகையாகா. நாம சங்கீர்த்தனம் என்று கூறப்படும் பஜனை மார்க்கத்தின் இரண்டாம் குருநாதர் என்று இன்றும் ஸ்ரீதர ஐயாவாளை கூறுகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த மத்யார்ஜுனம் என்று போற்றப்படும் திருவிடைமருதூர் என்னும் சிறப்பான க்ஷேத்திரத்திற்கு அருகில் இருக்கும் திருவிசைநல்லூர் என்னும் கிராமத்தில் தோன்றியவர் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள். இவர் ஆந்திரத்திலிருந்து வந்து குடியமர்ந்த காகர்ல என்னும் வம்சத்தைச் சார்ந்தவர். இவரது குலப் பெயரே ஸ்ரீதர என்பது. வெங்கடேசன் என்பது இவரது பெயர். ஆனால் பிற்காலத்தில் ஐயாவாள் என்றாலே அது இவரைத்தான் குறிப்பிடுவதாக ஆயிற்று. இவரது குடும்பம் சிவ ஆராதனை செய்து வேத விற்பனர்களாக திகழ்ந்தனர். குடும்பத்தின் மூலமாக இவரிடம் வளர்ந்த சிவபக்தியானது, சிவனை ஏகாக்ரமான சிந்தனையில் பூஜிக்கச் செய்து சிவ தரிசனத்திற்கு வழிசெய்ததாகக் கூறப்படுகிறது. திருவிடைமருதூர் மஹாலிங்க மூர்த்தியை நித்யம் தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டவர். அந்த மூர்த்தியே இவருக்கு பிரத்யக்ஷ தெய்வம்.

இவர் ஆக்யா ஷஷ்டி, ஸ்ரீ கிருஷ்ண த்வாதசமஞ்சரி, ஸ்தோத்ர பத்ததி, கங்காஷ்டகம், சிவபக்த லக்ஷணம், தயாசதகம், சிவபக்தி கல்பலதிகா என்று பல பக்தி நூல்களை எழுதியிருக்கிறார். இவரது சிவபக்தி, சிவ நாமஜபம், கீர்த்தனம் போன்றவையே இவரைப் பெருமைப் படுத்தியதாக அவரே சொல்லியிருக்கிறார் என்கின்றனர். பக்திக்கு இலக்கணமான சகல உயிர்களிடத்தும் அன்பு கொள்ளுதலை அடிப்படையாகக் கொண்டு தனக்கென ஏதும் வைத்துக் கொள்ளாமல் எல்லாவற்றையும் சிவார்பணம் செய்து பிறருக்கு அளித்துவிடுவாராம். தனது ஏழ்மை நிலையிலும் ஸ்வதர்மத்துடன் கூடிய கிருஹஸ்த தர்மத்தை விடாது, சிவார்ப்பணம் செய்து பற்றற்றவராக விளங்கினார். இதனாலேயே பண்டிதர்களும், பாமரர்களும் இவர் மீது மிகுந்த பக்தி கொண்டனர்.

ஒருசமயம் இவர் தமது முன்னோருக்கு சிராத்தம் செய்ய ஏற்பாடு செய்கிறார். மிகுந்த ஆசாரத்துடன் அனைத்து ஏற்பாடுகளும், நடக்கிறது. அன்று காலையில் சிராத்த நேரத்திற்கு முன்னால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த புலையன் ஒருவன் இவர் இல்லத்து வாயிலுக்கு வந்து தான் மிகவும் பசியுடன் இருப்பதாகவும், உண்ண ஏதாகிலும் தருமாறு வேண்டுகிறான். அவனது தோற்றத்தைக் கண்டு இரங்கிய ஐயாவாள் மனமிரங்கி, இல்லத்தில் சிராத்தத்திற்காகச் செய்யப்பட்ட உணவை அளிக்கிறார். மேலும் சிராத்ததிற்கு ஏற்பாடு செய்த பொருட்கள் எல்லாவற்றையும் அவனுக்கு அளித்து விடுகிறார். சாதாரணமாக வேதவழியில் வரும் ஆச்சார குடும்பத்தில் சிராத்த தினத்தன்று எந்த தானமும் செய்யப்பட மாட்டாது. சாஸ்திரத்தில் சொல்லியபடி சிராத்தம் நடக்க வேண்டும் என்பதே இதன் காரணம். ஆனால் ஐயாவாள் தமது ஸ்வதர்மத்தை மீறி அன்ன தானம் செய்கிறார். ஆனாலும் சாஸ்திரத்தின்படி சிராத்தம் நடக்க வேண்டுமென உடனடியாக மீண்டும் சிராத்தத்திற்கான ஏற்பாடுகளைத் அடியிலிருந்து தொடங்குகிறார். ஆனால் அவருக்கு சிராத்தத்தை நடத்தி வைக்க யாரும் முன் வரவில்லை. மேலும் சிராத்தத்தன்று புலையனுக்கு உணவிட்டதற்காக கோபம் கொண்டு அவர் தமது தவறுக்கு கங்கையில் மூழ்கி பிராயச்சித்தம் செய்யக் கட்டளையிடுகின்றனர். ஐயாவாள் தமது கர்மா நிறைவடைவதற்காக கூர்ச்சங்களில் மூதாதையர்களை வரித்து சிராத்தத்தை நடத்தி முடிக்கிறார். ஆனால் அன்று மாலை மஹாலிங்கத்துக்கு பூஜை செய்ய நடை திறந்த அர்ச்சகர்கள், சன்னதியில் புலையன் வைத்திருக்கும் சில பொருட்களையும், புது வஸ்த்ரம், வெற்றிலை பாக்கு (ஐயாவாள் சிராத்தத்தில் அளித்தவை) போன்ற இருந்ததைக் கண்டு தெளிகின்றனர்.


இறைவனே தெரிய வைத்த பின்னரும், ஊரார் விருப்பப்படி கங்கையில் ஸ்நானம் செய்து பிராயச்சித்தம் செய்ய எண்ணி, கங்காஷ்டகம் என்று ஒரு ஸ்லோகம் இயற்றி கங்கையை வழிபட்டு தமது இல்லத்தில் இருக்கும் கிணற்றில் கங்கையைப் பிரவாகிக்க வேண்டுகிறார். அவரது வேண்டுகோளுக்கு செவி சாய்க்கும் விதமாக கங்கை அவர் வீட்டின்பின் இருக்கும் கிணற்றில் பொங்கிப் பெருகி அந்த சிறு கிராமம் முழுவதும் நீராக ஓடியதாம். அந்த நீரில் ஐயாவாளும், அவருக்கு கட்டளையிட்டவர்களும் ஸ்நானம் செய்து கொண்டனராம். இன்றும் கார்த்திகை மாச அமாவாசை தினத்தில் திருவிசைநல்லூரில் இருக்கும் ஐயாவாள் வீட்டுக் கிணற்றில் கங்கை வருவதாக நம்பிக்கை. அந்நாளில் வெளியூர்களிலிருந்து மக்கள் சென்று வழிபடுகின்றனர்.


அடுத்த வாரம் கிருஷ்ண த்வாதசமஞ்சரி, தயாசதகம் போன்ற நூல்கள் தோன்றக் காரணமான பகுதியையும், ஐயாவாள் இறைவனுடன் கலந்ததையும் பார்க்கலாம்

ஸ்ரீகண்டமிவ பாஸ்வந்தம் சிவநாம பராயணம்
ஸ்ரீதரம் வேங்கடேஸார்யம் ச்ரேயஸே குருமாச்ரயே

[ஸாக்ஷாத் பரமேஸ்வரன் போல பிரகாசிக்கிறவரும், எப்போழுதும் சிவநாம ஜபம் செய்வபவருமான ஸ்ரீதர வேங்கடேஸர் என்னும் குருவை ஆச்ரயிக்கிறேன். ]

Thursday, October 16, 2008

ஸ்ரீ வித்யாரண்யர்


14ஆம் நூற்றாண்டில் ஆந்திர தேசத்தில் உதித்தவர் ஸ்ரீ வித்யாரண்யர். ஹரிஹரர் என்னும் அரசன் விஜயநகர சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க பக்க பலமாக இருந்து, அந்த ஸாம்ராஜ்யத்தின் ஆஸ்தான வித்வானாகவும் விளங்கியவர் இவர். இவரது பூர்வாசிரமப் பெயர் மாதவர் என்பதாகும். வித்யாரண்யர் என்ற பெயரில் இன்னும் சில யதிஸ்ரேஷ்டர்கள் இருந்துள்ளதால், இவரை ஸாயனர் என்று நூல்கள் குறிப்பிடுகின்றன. இவர் சார்வாக மதத்தில் ஆரம்பித்து படிப்படியாக அடுத்த உயரத்தில் வைத்து கடைசியாக அத்வைத மதத்தை அமைத்து ஸர்வதர்சனம் ஓர் நூல் எழுதிச் சிறப்பித்துள்ளார். இவர், ஸ்ரீகண்டர் என்னும் மஹானிடம் மந்த்ர சாஸ்திர்ங்களையும், விஷ்ணு பட்டோபாத்யாயர் என்பவரிடம் வேதங்களையும் கற்றவர். ஸ்ரீர் பாரதீ தீர்த்தர் என்னும் சன்யாசிக்கு பணிவிடை செய்து அவர் அனுக்கிரஹம் பெற்றவர். ஹரிஹரனுக்கும், அவனது மகனான புக்கனுக்கும் மந்திரியாக, குருவாக இருந்து தமது ஆத்மானுபவத்தாலும், மந்த்ர சக்தியாலும் விஜயநகர சாம்ராஜ்யத்தில் தர்ம பரிபாலனம் தழைக்கச் செய்தது மட்டுமல்லாது தென் தேசம் முழுவதிலும் பக்தி, தர்மம் போன்றவை செழிக்கச் செய்தவர்.


இவர் பல நூல்கள் எழுதியிருக்கிறார். அவற்றில் ஒன்று பராசர-மாதவீயம் என்பது. அதில் இவர் தமது குரு என்று பலரையும் குறிப்பிட்டுள்ளார். இவர் ஜனகராஜனைப் போல பல ஆச்சார்ய புருஷர்களிடம் பயின்றவர். ஸ்ரீ வித்யா தீர்த்தர், ஸ்ரீ சங்கரானந்தர் போன்றவர்களையும் தமது க்ரந்தங்களில் குரு என்று போற்றி வணங்கியுள்ளார். இவர் தாம் எழுதிய க்ரந்தங்களில் தமது முத்திரையாக 'கஜாநாந' என்ற நமஸ்கார ஸ்லோகத்தை வைத்திருக்கிறார். இவரது நூல்கள் சாதாரணமாக, ஸ்ருதி, அதன் வியாக்கியானம், தொடர்புடைய ஸ்ம்ருதி வியாக்கியானம், பின்னர் தொடர்ந்து மீமாம்ஸையின்படியான வியாக்கியானம் என்று மூன்றுவழிகளிலும் சொல்லுகிறார். இந்த முறை ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாள் காட்டிய வழி.


ஸ்ரீ வித்யா தீர்த்தரிடம் சன்யாசம் ஏற்று ஸ்ரீ வித்யாரண்யர் என்று பெயருடன் விளங்கினார். இந்த வித்யா தீர்த்தரே, வித்யா சங்கரர் என்றும் அழைக்கப்படுபவர். இவரது அதிஷ்டானம் என்று கூறப்படுவதே சிருங்கேரியில் சாரதை கோவிலுக்கு அருகில் இருக்கும் கோவில். இந்த கோவிலை வித்யாரண்யரே தமது குருவுக்காக அமைத்தார் என்று கூறுகின்றனர். (அந்த கோவில் பற்றியும், ஸ்ரீ வித்யாசங்கரர் பற்றிம் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. அதனை பிறகு பார்க்கலாம்.) இவர் எழுதிய நூல்கள் பல. ஸ்ருதியில் கர்மகாண்டத்துக்கும், ஞானகாண்டத்துக்கும் முறையே வேத பாஷ்யம், அநூபூதி ப்ரகாசனம் என்று வியாக்கியானம் எழுதியிருக்கிறார். இந்த புஸ்தகங்கள் முன்பு சிருங்கேரி மடத்தின் மூலமாக பதிப்புக்கு வந்துள்ளது. இதே போல ஸ்ம்ருதிகளில், பராசரஸ்ம்ருதிக்கும், பகவத்கீதை, யோகவாசிஷ்டம் போன்றவற்றுக்கும் வியாக்கியானம் எழுதியுள்ளார்.

இவற்றைத் தவிர, "ஜைமினீய ந்யாயமாலா, வைய்ஸிக ந்யாயமாலா" என்று மீமாம்ஸையிலும் க்ரந்தங்கள் செய்துள்ளார். மேலும் 15 ப்ரகரண நூல்கள் எழுதியுள்ளார். இவரது இந்த 15 ப்ரகரணங்களே "பஞ்சதசீ" என்று கூறப்படுகிறது (மூக பஞ்சதசீ வேறு, இது வேறு). உபநிஷதங்களில் ப்ருஹதாரண்ய உபநிஷதத்துக்கு பாஷ்யமும், "விவரண ப்ரமேய ஸங்க்ரஹம்" என்று ப்ரம்ம ஸூத்திர பாஷ்யமும் எழுதியுள்ளார். ஜ்யோதிஷ சாஸ்த்திரத்திற்கு "காலமாதவம்" என்றும், ஸங்கீத சாஸ்த்ரத்திற்கு "ஸங்கீத ஸாரம்" என்றும். நூல்கள் எழுதியிருக்கிறார். இவருக்குப் பின் வந்த பெரிய நூலாசிரியர்கள் பலரும் இவரது க்ரந்தங்களை மேற்கோள் காட்டி எழுதியுள்ளனர். இவர் எழுதிய காவியமே "மாதவீய சங்கர விஜயம்", இது பகவத்பாதாளுடைய திவ்ய சரித்திரத்தைச் சொல்கிறது.

அவித்யாரண்ய காந்தாரே ப்ரமதாம் ப்ராணிநாம் ஸதா
வித்யா மார்கோபதேஷ்டாரம் வித்யாரண்ய குரும் பஜே!

அவித்யை என்னும் காட்டில் வழிதெரியாமல் அலையும் எல்லோருக்கும் நல்ல மார்க்கத்தின் மூலம் எப்போதும் வழிகாட்டும் ஆச்சார்யார் ஸ்ரீ வித்யாரண்யரை சரணடைகிறேன்.

Wednesday, October 8, 2008

குருவைக் காட்டிலும் மேலானது குருவின் பாதுகைகள்



ஸ்ரீ ராமனுஜருக்கு அமைந்த சீடர்களில் வடுக நம்பி என்பவர் மிகவும் பிரசித்தி பெற்றவர். இவர்தான் அவருக்கு தளிகை செய்யும் பாக்கியம் பெற்றவர்.ஸ்ரீ ராமானுஜர் சில வேளைகளில் உணவு அருந்த மறந்தாலும் அவருக்கு நினைவூட்டி அவரை உணவு அருந்தச் செய்வது அவருடைய வேலை.குருவின் மீது அளவில்லாத பக்தி கொண்டவர் .தினமும் ஸ்ரீ ரங்கத்தில் ஸ்ரீ ராமனுஜர் இருக்கும்போது அவருடைய வீட்டின் வழியே ஸ்ரீ ரங்கநாதர் பவனி வருவார். உடையவர் எல்லா சிஷ்யர்களையும் போய் வண்ங்கச் சொல்லுவார். ஆனால் வடுக நம்பி போகமாட்டார். அவருக்கு எல்லாமே ஸ்ரீராமனுஜர்தான் பகவானை விட குருவையே கொண்டாடினார்.குரு பக்திக்கு உதாரணமாக்த் திகழ்ந்தவர்.


ஒரு முறை ஸ்ரீராமனுஜர் மைசூரிலிருந்து வேறு ஊருக்கு பயணம் புறப்பட்டார்.பயணத்திற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் வடுக நம்பிதான் கவனித்தார். எல்லா பொருட்களையும் மூட்டைகட்டிக் கொண்டு வண்டியில் ஏற்றியாகி விட்டது.ஸ்ரீ ராமனுஜர் வடுக நம்பியை கூப்பிட்டு பெருமாள் இருக்கும் பெட்டியை பத்திரமாக வைத்தாகி விட்டதா என்று கேட்டார். அப்படியே வைத்தாகி விட்டது என்று கூறினார்.கிளம்புபோது உடையவர் தன்னுடையா பாதரக்ஷைகள் எங்கே என்று கேட்டார்.

உடனே வடுக நம்பி ஆச்சாரியரே நான் அப்போதே அதை எடுத்து பத்திரமாக வைத்துவிட்டேன் என்றார். எங்கே வைத்திருக்கிறீர்கள் என்றால் அதை பெருமாள் வைக்கும் பெட்டியோடு வைத்து விட்டேன் என்றார்.உடையவர் அபசாரம் செய்து விட்டீர்களே என்னுடைய பாத ரக்ஷைகளைப்போய் பகவானுடன் சேர்த்து வைக்கலாமா?அபசாரம் அபசாரம் என்றார். அதற்கு வடுக நம்பியின் பதில்தான் அவருடை குருபக்தியை காண்பித்தது.ஆச்சார்யரே பெருமாளுக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டாமா உங்கள் பாதரக்ஷையுடன் சம்பந்தம் வருவதற்கு என்றார்.அப்பேற்பட்ட சஞ்சலமில்லாத குருபக்தி.குருவை விட, பகவானை விட அவரது பதுகைகளே சிறந்தது என்ற பக்தி.ஸ்ரீ மான் நிகாமாந்த மஹா தேசிகன் பாதுகா ஸ்ஹஸ்ரம் என்ற நூலில் பதுகைகளின் பெருமையை பேசுகிறார். இன்று ஸ்வாமி ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் அவதரித்த புராட்டாசி திரு நக்ஷ்த்ரமான திருவோணம். ஆச்சார்ய ஹிருதயம் அன்னாரின் ஆசிகளைக் கோருகிறது. பாதுகைகள் அயோத்தி ராஜ்யத்தையே 14 ஆண்டுகள் ஆண்டன.



குரு பாதுகா ஸ்தோத்ரம் குரு பாதுகையின் பெருமையை விளக்கும். கேட்டுப் பாருங்கள்




-

Wednesday, October 1, 2008

யார் புத்திசாலி? குருவா? சிஷ்யனா? (2)


சுக்ராச்சாரியார் நடந்தவற்றை ஞான திருஷ்டியில் உணர்ந்தார். தேவயானியிடம் கூறினார் மகளே கசன் இனி வரமாட்டான். அவன் இப்போது என் வயிற்றில் உள்ளான். அவன் உயிர் பெற வேண்டுமானால் நான் உயிர் துறக்க வேண்டும்.அவனை நீ மறந்துவிடு. ஆனால் தேவயானி கசனை என்னால் மறக்க முடியாது அதே சமயம் உங்கள் உயிர் போனாலும் நான் அதற்கு பிறகு உயிர் வாழமாட்டேன் என்றாள்.
சுக்கிராச்சாரியார் இப்பொழுது புரிந்து கொண்டார்."கசனே நீ வந்த காரியம் சித்தியாகும் காலம் வந்து விட்டது. தேவயானிக்காக நான் உன்னை உயிர்ப்பிக்க வேண்டும். அதே சமயம் நானும் உயிர்துறக்காமல் இருக்க வேண்டும். அதற்கு ஒரே வழி உனக்கு சஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுக் கொடுப்பதுதான்.என் வயிற்றிலிருக்கும் நீ அதைக் கற்றுக் கொண்டு என் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வந்து பிறகு அந்த மந்திரத்தை உபயோகித்து என்னை பிழைப்பித்து தேவயானியின் துக்கத்தை தீர்த்து விடு.இவ்வாறு சொல்லிவிட்டு குரு தன் சிஷ்யனுக்கு சஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுக் கொடுத்தார். கசன் கற்றுக் கொண்டு அவர் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்து பிறகு அதே சஞ்சீவினி மந்திரத்தை உபயோகித்து குருவை பிழைக்க வைத்தான்.
பின்னர் சிறிது காலம் இருந்து முழு கல்வியையும் கற்றுக் கொண்டு பிறகு குருவிடம் விடை பெற்றுக் கொண்டு தேவலோகம் செல்ல முற்பட்டான். அப்பொழுது தேவயானி தன்னை மணம் புரிந்து கொள்ளும்படி கேட்டாள். அதற்கு கசன் தேவயானி எனக்கு குருவான உன் தந்தை எனக்கு கல்வி கற்றுக் கொடுத்தார், மேலும் நான் அவர் வயிற்றைக் கிழித்துக் கொண்டு மறுபடியும் பிறந்ததால் அவர் எனக்கும் தந்தை போன்றவர், நீயும் எனக்கு சகோதரி போன்றவள். ஆதலால் உன்னை மணக்க முடியாது என்றான். இவ்வாறு கூறிவிட்டு கசன் தேவலோகம் சென்றான்.
இனி தலைப்புக்கு வரலாம். தான் எடுத்துக் கொண்ட விரதமான சஞ்சீவினி மந்திரத்தை கற்றுக் கொள்வதிலேயே குறியாக இருந்து, மாதுவின் இச்சைகளுக்கு ஆட்படாமல் வெற்றிகரமாக தன் காரியியத்தைச் சாதித்துக் கொண்ட சிஷ்யன் புத்திசாலியா? இல்லை மகள் மீது உள்ள அதீத பாசத்தினாலும், மதுவின் மயக்கத்தினால் தன்னையும் தான் கற்ற சஞ்சீவினி மந்திரத்தையும் இழந்த குரு புத்திசாலியா?. ஆச்சார்யன் என்பவர் ஒழுக்கத்தை போதிப்பவராக மட்டும் இருந்தால் போதாது, அவரும் ஒழுக்கத்தை கடைபிடிப்பவராகவும் இருக்க வேண்டும்