சங்கர்-இராமானுச ஜெயந்தி அதுவுமாய், ஆசார்ய ஹிருதயத்தில், ஆன்மீகப் பெரியவர்களான கீதாம்மா, திவா சார், இல்லை வேறு யாராவது பதிவிடுவார்கள் என்று காத்திருந்தேன்!
பெரியவர்கள் பிசி போல! அதான் முன்பு மெளலி அண்ணா எழுதிய சங்கரப் பதிவை, சங்கர ஜெயந்தி அன்று
மீள் பதிக்கிறேன்! இதோ!இவ்வமயம் திராச ஐயாவின் அண்ணன் மரு-மகனார் நேற்று இயற்கை எய்திய சேதி வந்தது!
சதுர்த்தி விரத நாள் அன்று, அவர் முருகப்பெருமான் திருவடி நிழலில் கலாப மயிலாய் கண் துஞ்ச அடியேன் பிரார்த்தனைகள்!
அவர் அண்ணன் மகளுக்கும், அந்த இளங் குழந்தைகளுக்கும் கண்ணன் காப்பும் அருளும் கிடைத்து அமைதி பெற அடியேன் வேண்டுதல்கள்!
நம்மில் பலரும் ஆதிசங்கரர் என்றாலே அவர் சைவ/வைதிக மதத்திற்கு மட்டுமே ஆச்சார்யார் என்று நினைக்கிறோம். ஆனால் ஆதிசங்கரருக்கு 'ஷண்மத ஸ்தாபனாச்சார்யர்' என்று ஒரு பட்டம் உண்டு. அதென்ன ஷண்மத ஸ்தாபனம்?. ஏன் அவருக்கு முன் மதங்கள் இல்லையா?. இருந்தது. அவர் காலத்தில் ஹிந்து மதப் பிரிவுகளில் ஏகப்பட்ட வேற்றுமைகள் மற்றும் வேதத்தின் அடிப்படை ப்ரமாணத்தை ஏற்காத பெளத்த/சமண சமயங்களால் மேலும் வேற்றுமைகள் பெருகியது. இந்த நிலையில் ஹிந்து மதம் நீர்த்துப் போகாது இருக்க வேண்டுமானால் இந்த வேற்றுமைகளினிடயே இருக்கும் பல ஒற்றுமைகளை நிலைநாட்டி அதன் மூலம் இந்துமத பிரிவுகளிடையே சண்டை-சச்சரவுகளை குறைக்க முயன்றார். அவர் காலத்தில், இந்து மதத்தில் மட்டும் 72 பிரிவுகள் இருந்தனவாம். இந்த 72 பிரிவுகளையும் ஆராய்ந்து, பலவற்றை இணைத்தும், சிலவற்றை தள்ளியும் முடிவாக "சைவம், வைஷ்ணவம், காணாபத்யம், கெளமாரம், செளரம், சாக்தம்' என்று வகைப்படுத்தினாராம். இவ்வாறு வகைப்படுத்தப்பட்டபின் இந்த 6 பிரிவுகளும் சொல்லும் பல பெயர்களும் பரப்பிரம்மத்தையே சாரும் என்கிறார். சரி, இதுக்கும் தொண்டரடிக்கும் என்ன தொடர்பு?, பார்க்கலாம்.
ஆதி சங்கரர் ஷண்மதங்களை ஸ்தாபித்தாலும், அவர் வைஷ்ணவத்தை உணர்ந்து, மஹா விஷ்ணுவை பல இடங்களில் பலவாறு கொண்டாடுகிறார். விஷ்ணு சஹஸ்ர நாமத்திற்கு பாஷ்யம் செய்திருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் அவரது பாஷ்ய க்ரந்தங்களில் எல்லாம் நாராயணனையே பரம்பொருளாக கொண்டாடுகிறார். நாரயணீயத்தில் ஆதி சங்கரர் பற்றிக் குறிப்பிடும் போது பட்டத்ரி இது பற்றி வியக்கிறார். ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட மடங்களில் இன்றும் 'நாராயண ஸ்மிருதி' என்றே கையொப்பமிடப்படுகிறது. ஆதி சங்கரர் சமாஸ்சரணம்/ உடம்பில் சூடு போட்டு முத்திரை (சங்கு-சக்கரம்) குத்திக் கொள்வதை எதிர்த்தார், ஆகையால் அவர் வைஷ்ணவ எதிரி என்பதாக கூறப்படுகிறது. அவர் காலத்தில் வைணவத்தில் மட்டுமல்ல, சைவத்திலும் போன்றவற்றிலும் உடலில் முத்திரை குத்தி கொள்ளும் முறை இருந்துள்ளது. சைவர்கள் ரிஷப, சூல முத்திரைகளை கொண்டு இருந்திருக்கிறார்கள். சங்கரர் இவை இரண்டையுமே கண்டித்திருக்கிறார். அவர் அதனை கண்டிக்க காரணமும் சொல்லியிருக்கிறார். அதாவது மனித உடலின் பல பாகங்களிலும் தேவர்களும், பித்ருக்களும் வாசம் செய்கின்றனர். இவ்வாறு சூடு வைத்துக் கொள்வது அவர்களுக்கு ப்ரிதியாகாது என்பதாகச் சொல்கிறார். அவரது இந்த கண்டிப்பு சைவ/வைஷ்ணவ மரபுகள் இரண்டிற்குமே தான்.
சங்கரரின் தாயார் ஆர்யாம்பாளின் இறுதிக்காலம் நெருங்கும் சமயத்தில், ஆதிசங்கரர் தான் முன்னர் வாக்கு கொடுத்ததுபடி தாயருகில் இருக்கிறார். தனது தாயின் வேண்டுகோளுக்கிணங்க, சிவனைத் துதித்து தனது தாயின் அந்திம காலம் சிரமமின்றி இருக்க வேண்டுகிறார். இவரது துதியினை கேட்டு ஈசன் சிவகணங்களை அனுப்பினாராம். அந்த சிவகணங்களின் உருவம் கண்டு அஞ்சிய ஆர்யாம்பாள், சங்கரரிடம், தனக்கு பயமாக இருக்கிறதென்றும் இந்த கணங்களுடன் தான் கைலாசம் போக மாட்டேன் என்றும் சொல்கிறார். உடனே ஆச்சார்யார் விஷ்ணுவைத் துதிக்கிறார். அந்த துதியில் நாராயணனை பாதாதி-கேசம் வர்ணிப்பதாக அமைத்து 15 பாடல்கள் பாடுகிறார். அந்த சமயத்தில் வைகுந்த வாசனின் தூதர்கள் வந்து ஆர்யாம்பாளின் ஜீவனை கூட்டிச் சென்றதாக சொல்லப்படுகிறது. இந்த 15 பாடல்கள் விஷ்ணு பாதாதி-கேச ஸ்துதி என்று கூறப்படுகிறது. இதன் முடிவில் "என்னாலே சொல்லப்பட்ட இந்த ஸ்துதியால் யார்-யார் மஹா விஷ்ணுவின் அழகை அனுபவிக்கிறார்களோ அப்படிப்பட்ட விஷ்ணு பக்தர்களின் நிர்மலமான திருவடிகளை எப்போதும் நான் நமஸ்காரம் செய்கிறேன்" என்ற் சொல்லி முடிக்கிறார். இப்போது சொல்லுங்க ஆதிசங்கரரும் அடியார்க்கு அடியார் தானே?