இவர்கள் வாதம் செய்ய முடிவு செய்தவுடன் அமரசிம்மன் ஒரு தடுப்பு (துணியால் ஆன திரை) இருவரையும் பிரிக்கும்படியாக செய்து ஆளுக்கு ஒரு பக்கத்தில் இருந்து வாதத்தை ஆரம்பித்தனர். அமரசிம்மன் தெளிவாக, அழகாக எல்லாவற்றையும் பற்றி பேசினான். என்னதான் சிறந்த புத்திசாலி என்றாலும், கேள்விகளுக்கு அழகாக தொடர்புடன் பதில் சொல்வது சங்கரருக்கு மிக ஆச்சர்யமாக இருந்தது, எப்படி இவ்வாறாக பதிலளிக்கிறான் அரசன் என்று சிறிது யோசித்தார். ஈஸ்வர அவதாரமல்லவா உடனே காரணம் தெரிந்தது. அவர் அமரசிம்மனிடம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தது ஸாக்ஷாத் சரஸ்வதி தேவியே அவன் குரலில் பதிலளித்திருக்கிறாள் என்று தெரிந்து கொண்டார்.
அமரசிம்மன் மிகவும் ஸ்ரத்தையுடன் பல நாட்கள் சரஸ்வதியை உபாஸித்திருக்கிறான். [ஜைன மதம் ஒரு கடவுள்/ கடவுள்கள் தத்துவத்தை எதிர்க்கிறது] இவ்வரசன் ஜைனமத்தவனாக இருந்தாலும் ஜைன மதம் பற்றி புத்தகங்கள் எழுத சரஸ்வதியின் அனுக்கிரஹம் பெற உபாசனை செய்திருக்கிறான். இப்படியாக, படிப்பது ராமாயணம், இடிப்பது அனுமார் கோவில்' என்பது போல ஜைன மததில் இருந்து கொண்டு, ஜைன மத நூல்கள் எழுத சரஸ்வதியை வணங்கியிருக்கிறான். இவ்வாறாக எழுதிய ஜைன க்ரந்தங்களில் நமது இந்துமதத்தையும் நிறைய கண்டனம் செய்திருக்கிறான்.
சரியோ-தவறோ ஒரு காரியத்தை முழு மூச்சாக எடுத்துச் செய்தால் அதன் பலனை இறைவன் நமக்கு தருவான் என்பதற்கு உதாரணமாக இவன் உபாசனைக்கும், சிரத்தைக்கும் உயர்வளித்து இவனுக்கு சரஸ்வதி அனுக்கிரகம் செய்திருக்கிறாள்.
இங்கே வாதப்போரில் திரைக்குப் பின்னே அவனருகில் ஸரஸ்வதி தேவியை கடத்தில் ஆவாஹனம் செய்துவிட்டு உட்கார்ந்திருக்கிறான். தனக்கு எவ்வளவு தெரிந்தாலும் அது ஆச்சார்யார் முன் உதவாது என்று அறிந்து அவரை எதிர்க்க சரஸ்வதியையே தஞ்சமடைந்திருக்கிறான். இவனது உபாசனைக்கு பலனளிக்க அவளும் கட்டுப்பட்டிருக்கிறாள். எனவே சரஸ்வதியின் அறிவுரைப்படியே கடத்தில் ஆவிர்பஹிக்கச் செய்துவிட்டு, சுற்றிலும் திரையெல்லாம் போட்டுக் கொண்டது. அவனுக்காக அவள் பதிலளித்திருக்கிறாள். ஆச்சார்யார் ஈஸ்வர ஸ்வரூபம், ஒரு விதத்தில் சரஸ்வதி மஹேஸ்வரனுக்கு சஹோதரி முறை. ஆகவே ஆச்சார்யார் மனதில் நடந்தது, நடப்பது ஆகியவை எளிதாக புரிந்தது.
ஆச்சார்யார் சரஸ்வதியிடம் 'உன்னை வழிபட்டுக் கொண்டே அத்தனை தெய்வங்களையும் ஆராதிக்கிற பழக்கத்தை எதிர்க்கும் இவனுக்கு அனுக்கிரகம் செய்யலாமா?' என்று மனதால் கோரிக்கை எழுப்புகிறார். அதிலும் இத்துணை நேரம் எனக்கு பதிலளித்து அவனுக்கு அனுக்கிரகித்திருக்கிறாயே , இது சரியா என்று நினைக்கையில் சரஸ்வதியும் அமரசிம்மன் உபாசனைக்கு ப்ரதிபலன் தந்தாயிற்று என்று உணர்ந்து உடனே கடத்திலிருந்து விலகி எதாஸ்தானம் சேர்கிறாள். அதன் பின் அமரசிம்மனால் ஆச்சார்யாருக்கு ஈடு கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக் கொள்கிறான்.
இவ்வாறாக தோல்வியை ஒப்புக்கொண்ட அமரசிம்மன் தான் எழுதிய க்ரந்தங்களை எல்லாம் தீக்கிரையாக்கத் துணிகிறான். தனது சித்தாந்தம் தோற்றபின் தனது சித்தாந்ததை நிலைநாட்ட எழுதிய நூல்கள் வீண் என்றே அவற்றை அழிக்கிறான். சரஸ்வதி கடாக்ஷத்தில் மிக அழகான ஜைன க்ரந்தங்கள் இவன் படைத்திருந்தானாம். எல்லாம் ஒவ்வொன்றாக தீயில் போட்டுவிடுகிறான். இதை அறிந்த ஆச்சார்யார் மிகுந்த வருத்தமடைந்து உடனடியாக அவனிடத்து வந்து அவனது செயலைத் தடுக்கிறார். அப்போது எல்லாம் போக அவன் கையில் இருந்தது கடைசியாக ஒரு நூல், அதுதான் 'அமர கோசம்'. ஆச்சார்யார் தடுத்திருக்கவில்லையெனில் இதுவும் நமக்கு கிடத்திருக்காது. இந்த நூலை அழியாமல் காத்து அதற்கு 'அமரத்துவம் அளித்துவிட்டார் ஆச்சார்யார்.
எந்த மதத்திலும் நேர்மை, சத்யம் உள்ளவர்கள் இருப்பார்கள். அமரசிம்மனும் தான் எழுதிய அகராதியில் இந்த நேர்மையினை கடைப்பிடித்திருக்கிறான். தனது கொள்கையை திணிக்காது, பிற மதங்களை சேர்ந்த வார்த்தைகளை விலக்காமல், எதிர்க்காமல். அவற்றுக்கு அந்தந்த மதத்தில் என்ன அர்த்தம், பெருமை சொல்லப்பட்டிருக்கிறதோ அதை அப்படியே கொடுத்திருக்கிறான்.
இந்த கதையானது சங்கர விஜயங்கள் எல்லாவற்றிலும் இருக்கிறது