கூரத்தாழ்வானின் 1000வது பிறந்தநாள் வைபவங்களை ஒட்டி,
ஆழ்வானின் வாழ்க்கை வரலாற்றைத் தொடர் இடுகைகளாக இட்டு வந்தார்கள்! நான்கு பகுதிகளாக வந்த தொடர் நிறைவுற்றது!
இந்த கைங்கர்யத்துக்கு, அண்ணாருக்கு நம் வாழ்த்தையும் வணக்கங்களையும், இவ்வமயத்தில் சொல்லிக் கொண்டு,
சுந்தர் அண்ணா எழுதி அருளிய இத்தொடரினை, இ-புத்தகமாக,
ஸ்ரீயப்பதியான எம்பெருமான் - பெருந்தேவித் தாயார் உடனுறை பேரருளாளன், காஞ்சி வரதனின் திருவடிகளில் சமர்பிக்கின்றோம்! இதோ புத்தகம்!
இது வரை கூரேசர் பற்றி வந்துள்ள பதிவுகள் இதோ:
1. ஷைலஜா அக்கா எழுதிய, கூரேசன் சீர் கேளீரோ!
2. KRS, கண் இழந்த கண்ணப்பர் - 1000வது பிறந்தநாள்
3. குமரன் எழுதும், கூரத்தாழ்வானின் குரு பரம்பரை - 1
குமரன் எழுதும், கூரத்தாழ்வானின் குரு பரம்பரை - 2
4. கைலாஷி ஐயா எழுதிய, கண் கொடுத்த கூரேசர்
5. பரவஸ்து சுந்தர் அண்ணா எழுதிய, கூரத்தாழ்வாரை அறிவோம்...1000ம் ஆண்டு ஜெயந்தி சிறப்புப் பதிவுகள் (1-4)
இன்னும் வைபவப் பதிவுகள் நன்முறையில் வளர்ந்து,
ஆசார்ய மணம் பரப்ப, ஆசார்யர்கள் கிருபையையே முன்னிடுகிறோம்!
ஸ்ரீவத்சசிஹ்ந மிஸ்ரேப்யோ, நம உக்திமதீமஹே!
யதுக்தய ஸ்த்ரயீகண்டே, யாந்தி மங்கள ஸூத்ரதாம்!!
(கூரத்தாழ்வாரின் தனியன்)
ஜகத்குரு-அணுக்க சீடர், சேர்த்தி சேவை!
திருவரங்கம், வட காவிரிக் கரையில் அன்று பலத்த வாக்குவாதம்!
பல வைணவர்கள், சில பொதுமக்கள், சில அறிஞர்கள், சில புலவர்கள் - போதாதா வாக்குவாதம் தோன்ற? :) இருப்பினும் அரணிக் கட்டையைக் கடைந்தால் தானே, வேள்விப் பொறி பறக்கும்! அதனால் தவறில்லை!
அத்வைதம், விசிஷ்டாத்வைதம், இன்னும் பல கருத்துக்கள் குறித்த சூடு பறக்கும் விவாதம்,
கடைசியில் ஒரு இடத்தில் வந்து நின்று விட்டது! - யார் ஜகத்குரு?
அவரவர் அவர்களுக்குப் பிடித்தமான பேர்களைச் சொல்கிறார்கள்! சரி வம்பே வேணாம்! ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா - கீதாசார்யன் - அவனே ஜகத்குரு என்று ஒரு முடிவுக்கு வர...
கூரத்தாழ்வார் அலறி அடித்துக் கொண்டு, காவிரியை நோக்கி ஓடுகிறார்! கைகளை உரக்கத் தூக்கி அலறுகிறார்!
என்னமோ ஏதோ-ன்னு சகலரும் பதற...கூரேசர் பெருங் குரலெடுத்து கத்துகிறார்! சுலோகமாய் வர்ஷிக்கிறார்!
சத்யம் சத்யம் புன:சத்யம்! யதிராஜோ ஜகத்குரு!
ச ஏவா சர்வ லோகானாம்! உத்தார்த்தன சம்ஸயா!!
"மக்களே, இந்தப் பேச்சும் தேவையோ? கீதாசார்யனா ஜகத்குரு? அத்தனை அத்தியாயம் சொல்லியும், சரணம் வ்ரஜ என்று சொல்லியும் பார்த்தனும் சரணம் அடைந்தானோ?
போரில் வென்று, ராஜ்ஜியம் ஆண்டு, போகங்களில் இருந்தானே அன்றி, சரணாகதி செய்யவில்லையே! கீதையே நேரில் கேட்டவனுக்கே இந்தக் கதி!
ஆனால் நம் இராமானுசர், நம் அத்தனை பேரையும், கீதையை நேரில் கேட்காமலேயே உத்தாரணஞ் செய்யவில்லையா? இத்தனை பேர்கள் சரணாகதி செய்துள்ளோமே!
அரங்கனின் இரண்டு விபூதிகளான லீலா விபூதியும், நித்ய விபூதியும் அவரிடம் அல்லவோ கொடுத்து வைத்துள்ளான்! கண்ணனிடமா அவை இருக்கின்றன?
இதில் இருந்தே தெரியவில்லையா? யார் ஜகத்குரு என்று கேள்வியும் எழுவதா? அதைக் கேட்டு அடியேன் அழுவதா?
இராமானுஜ சம்பந்தத்தால் சம்சார ஜலத்தை ஸ்தம்பம் செய்தவன், காவேரி ஜலத்தை ஸ்தம்பம் செய்யேனோ?
சத்யம் சத்யம் புன:சத்யம்! யதிராஜோ ஜகத்குரு! யதிராஜோ ஜகத்குரு!"
அனைவரும் பாய்ந்து சென்று, கூரேசனை நீரில் மீட்டு, கரைக்கு எடுத்து வருகிறார்கள்! இவர் காவிரியில் நடக்கத் துணிந்த கதை அப்படியே பத்ம்பாதர் கதை போலவே இருக்கல்லவா?
கரையில் வந்தவுடன் அனைவரும் கூரேசனிடம் மன்னிப்பு கேட்க, "ஆசார்யரை ஒருநாளும் மறுதலிக்காமல், இராமானுஜ சம்பந்தம் உடையவர்கள் ஆவீர்" என்று கூரத்தாழ்வார் மொழிஞ்சருளினார்!
"* நம் இராமானுசருக்கு முன் வந்த ஆசார்யர்கள் அனைவரும் = அனுவிருத்தி பிரசன்னாச்சார்யர்கள்!
* நம் இராமானுசன் என்னும் ஆச்சார்யனோ = க்ருபா மாத்ர ப்ரசன்னாச்சார்யர்!
அதாவது, அடிப்படை ஞானம், அனுஷ்டானம், இதில் தேறியவர்களுக்கு மட்டுமே உபதேசம் காட்டி அருளியவர்கள், அனுவிருத்தி பிரசன்ன ஆச்சார்யர்கள்!
ஆனால் நம் உடையவர் அன்றோ, இந்த ஓராண்வழி என்னும் சங்கிலியை அறுத்து, ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் விதிச்சருளினார்கள்? = ஆசை வையும்! அது போதும்!
அதனால் அன்றோ, அடியோங்கள் உய்ந்தோம்! அதனால் அன்றோ, அரங்கன் உய்ந்தான்! "
இப்படிக் கூரேசன் கூற, கூட்டம் முழுதும், யதிராஜோ ஜகத்குரு! யதிராஜோ ஜகத்குரு! என்று கூவிக் குளிர்ந்தது!
ஓராண் வழியாய் உபதேசித்தார்! முன்னோர்
ஏரார் எதிராசர் இன் அருளால் - பாருலகில்
ஆசை உடையோர்க்கு எல்லாம், ஆரியர்காள், கூறும்! என்று
பேசி வரம்பு அறுத்தார் பின்!
இப்படியான ஆசார்ய அத்யந்த பக்தி கொண்டவர் கூரேசன்! ஆசார்யரை விட வயதில் மூத்தவாராய் இருப்பினும், ஆசார்யரை நொடிப்பொழுதும் சிந்தையில் கீழ் இறக்காத இந்தப் பேருள்ளத்தை என்ன என்பது?
கூரேசரை அணுக்க மாணவராய்ப் பெற்ற உடையவர் நற்பேறா?
இராமானுசரை அணுக்க ஆசார்யனாய்ப் பெற்ற கூரேசன் நற்பேறா??
கூரத்தாழ்வார்-இராமானுச முனிகள் திருவடிகளே சரணம்!