Wednesday, February 27, 2008

குருவிடம் சில கேள்விகள்....பகுதி-1


சமிபத்தில் நான் படித்தது இது. இந்த பதிவுக்கு ஏற்றது. எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியதும் கூட. இதில் உள்ள கேள்விகள் ஸ்ரீ அபினவ வித்யா தீர்த்தரிடம் கேட்கப்பட்டது, பதில்கள் அவர் அளித்தவையே!. இரண்டு பதிவுகளாக இடுகிறேன்.


கேள்வி : குருவின் லக்ஷணம் என்ன?
பதில் : குரு என்பவர் தத்வதை அறிந்த ஞானியாகவும், சிஷ்யனின் நன்மையை விரும்புபவராகவும் இருக்க வேண்டும்.


கே: இக்காலத்தில் பலர் மஹான்களைப் போல நடிக்கிறார்கள், இப்படியான உலகில் உண்மையான குருவை எப்படி தேர்ந்தெடுப்பது?
பதில் : குருவை இப்படித்தான் தேர்ந்து எடுக்க வேண்டும் என்று எங்கும் குறிப்புக்கள் நேரடியாக இல்லை. அனால் ஒருவன் மிகுந்த ஸ்ரத்தையுடன் குருவுக்காக காத்திருப்பானாக இருந்தால் ஈஸ்வரன் அவனுக்கு ஒரு சத்குருவை அடையச் செய்வான். நாம் யாரைக் குருவாக கருதுகிறோமோ அவர் ஞானியாகவும், நமது நன்மை மற்றும் உலக நன்மை விரும்புபவராகவும் இருக்கிறாரா என்று பார்த்துக் கொள்ளலாம். இதில், ஞானி என்று யாரையாவது தீர்மானம் செய்வதற்கு பகவத் கீதையில் கூறப்பட்ட ஞானியின் வர்ணனைகளை உபயோகப்படுத்தலாம். ஆனால் கிருஷ்ணன் இந்த உபயோகத்திற்க்காக சொல்லவில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

கேள்வி : குருவைப் பற்றி சிஷ்யனின் மனப்போக்கு எப்படி இருக்க வேண்டும்?
பதில் : குருவும், தன் ஆத்மாவும், ஈஸ்வரனும் வேறல்ல என்ற நிலையில் இருக்க வேண்டும். "ஈஸ்வரோ குருராத்மேதி'" என்பதாக குருவின் ஆக்ஞையே ப்ரதானமாக ஏற்று நடக்க வேண்டும். யார் எவ்விதம் சொன்னாலும் குருவின் உபதேசத்தையே முடிவாக கொள்ள வேண்டும்.

கேள்வி : ஞானம் அடையாத ஒருவர் மற்றொருவருக்கு ஆத்ம ஞானத்தை உபதேசம் செய்ய முடியுமா?.
பதில் : ஆத்மாவை அறியாதவன் அதைப் பற்றி உபதேசிப்பது எங்கனம்?, இதொன்றும் மனனம் செய்து ஒப்பிவிக்கும் விஷயமல்லவே?. அறியாதவன் குருவாக உபதேசித்தால், சிஷ்யன் எவ்வளவு ஆராய்ந்தாலும் ஆத்மாவை அறிய முடியாது. ஆத்மாவை அறிந்தவன் உபதேசித்தால், கேட்பவன் மோக்ஷத்தை அடைகிறான் என்று கடோபநிஷத்தில் கூறப்பட்டிருக்கிறது.

கேள்வி : ஆன்மீக ஈடுபாடுள்ளவன் தன் குருவைப் பற்றியோ, ஈஸ்வரனைப் பற்றியோ பிறர் நிந்திப்பதை காதால் கேட்பது தவறா?, அந்த சூழலில் சிஷ்யன் என்ன செய்ய வேண்டும்.
பதில் : ஆம்!, கேட்பதும் தவறே!. நிந்திப்பவனிடம் அவ்வாறு கூற வேண்டாம் என்று சொல்லலாம், கேட்காவிடில் அவ்விடத்தை விட்டு அகன்று விடலாம்.

கேள்வி : எந்த வயதில் ஆன்மிக சாதானையை தொடங்க வேண்டும்?
பதில் : எவ்வளவு சிறிய வயதில் ஆரம்பிக்கிறோமோ அவ்வளவு நல்லது. ப்ரஹலாதனும், த்ருவனும் சிறுவர்களாகவே இறைதரிசனம் பெற்றவர்கள்
தாமே?.

கேள்வி : மோக்ஷத்தை விரும்புவனுக்கு குரு தேவையா?
பதில் : மிகவும் தேவை.

Thursday, February 21, 2008

குருவருள்தான் திருவருள்


(பிள்ளையாரின் மீதி கிளிக் செய்து அபிஷேகங்களைப் பாருங்கள்)
குருவிடம் கற்றுக்கொள்ள வேண்டியதையெல்லாம் கற்று அறிந்தான் ஒரு மாணவன். அவனுக்கு கொஞ்சம் பெருமை பிடிபடவில்லை. குரு இல்லாவிட்டாலும் தான் கற்றுக்கொண்டு இருக்கலாம் என்றஆணவம் தலை தூக்கியது.




குருவிடம் ஒரு நாள் மெதுவாக கேட்டான்" குருவே ஒருவனுக்கு குருவருள் வாழ்கையில் மிகவும் அவசியமா?, அது இல்லாமல் வாழ முடியாதா?" குரு சிறிது கண்ணை மூடி தியானம் செய்து மாணாக்கனின் செருக்கு நிலையை உணர்ந்தார்.தன் கையிலிருந்த உலோகத்திலான கமண்டலத்தை எதிரே இருந்த சிறிய குளத்தில் சீடனைப் போடச்சொன்னார். சீடன் அதை தண்ணீரில் போட்டதும் முழ்கியது.சீடன் சொன்னான் குருவே நீங்கள் சொன்னபடி செய்தேன் கமண்டலம் தண்ணீரில் முழ்கிவிட்டது என்றான். குரு உடனே தான் உட்கார்ந்திருந்த மரப்பலகையை எடுத்து சீடனிடம் கொடுத்து அதையும் தண்ணீரில் போடச் சொன்னார். சீடன் மரப்பலகையைப் போட்டதும் அது மிதந்தது முழ்கவில்லை.குரு சீடனிடம் முழுகிய கமண்டலத்தை எடுத்து அந்த மரப்பலகை மீது வைக்கச்சொன்னார் சீடன் வைத்ததும் பலகை மீது இருந்த கமண்டலமும் மிதந்தது.



குரு சொன்னார் சீடனே மனிதர்கள் சம்சார சாகரம் என்னும் பெருகடலில் முழுகாமால் இருக்க வேண்டுமானால் குருவருள் என்ற மரப்பலகை இருந்தால் முழுகாமல் கரை சேரலாம் என்றார். சீடனுக்கு குருவருளின் சிறப்பு புரிந்தது.




உலக ஆசையைத் துறந்த பட்டினத்து அடிகள் இதை வலியுறுத்தி
"குரு மார்க்கம் இல்லாக் குருடருடன் கூடிக்
கருமார்க்கத்துள்ளே கருத்தழிந்து கெட்டேனே" ---என்கிறார்


"ஆண்ட குருவின் அருளைப் மிகப் போற்றி
வேண்டும் கயிலாய வீட்டுவழி பாராமல்
பூண்டகுழல் மாதுநல்லார் பொய் மாய்கைக்கு உள்ளாகித்
தூண்டில் அகப்பட்டுத் துடி கொண்டை(மீன்) ஆனேனே
ஆக இந்த ஜன்மம் கடைத்தேற வேண்டுமனால் குருவின் திருவருள்
இல்லாமல் முடியாது

Wednesday, February 13, 2008

நம் குருநாதன்


சித்தி தருநாதன்

தென்கமலை வாழ்நாதன்

பத்தி தருநாதன் பரநாதன்

முத்திப்பெருநாதன்

ஞானப் பிரகாசன் உண்மைதருநாதன்

நம்குருநாதன்.
ஆன்மாவை பிறப்பிலிருந்து சித்தியடையச்செய்யும் சொக்கநாதன்
தெற்கே இருக்கக்கூடிய கமலாயத்தில்(திருவாரூர்) இருக்கும் தியாகராஜ நாதன்
பர உலகத்துக்கு அழைத்துச் செல்லும் பக்தியை பெற்று தரும் சிதம்பர நாதன்
நமக்கு வேண்டிய முக்தியை அளிக்கவல்ல அண்ணாமலை நாதன்
ஒளி பொருந்திய ஞானத்தையும் வாழ்க்கையின் உண்மைநிலையை உணர்த்திடும் ஆலமர்ந்த நாதன் நம் தக்ஷிணாமூர்த்தி குருநாதன்

ஸ்ரீ குரு குண ஸ்தவனம்...குரு ராகவேந்திரர்




ஸ்ரீ ராகவேந்திரரை எல்லோருக்கும் தெரியும். மந்திராலயத்திற்கு போகாத ஆன்மிக சீலர்கள் குறைவே. எல்லாம் சரி, மந்திராலயத்தில் குருராயரின் ஜீவ பிருந்தாவனத்திற்கு அருகில் இன்னொரு பிருந்தாவனம் இருக்கிறதே?, அது யாருடையது?. அவர் பெயர் என்ன?. அவரை மட்டும் எப்படி குருராஜர் தன் பக்கத்தில் இருத்திக் கொண்டார்?. இவற்றை எல்லாம் பார்க்கலாமா?.


மந்திராலயத்தில் ராகவேந்திர ஸ்வாமிகள் ஜீவ பிருந்தாவனத்திற்கு அருகில் (குரு ராஜருக்கு இடது புறம்) இருப்பது ஸ்ரீ வாதீந்திரர் என்னும் யதியின் பிருந்தாவனம். இவர் குருராஜனிலிருந்து 5வது தலைமுறையில் வந்த ஆச்சார்யரது பிருந்தாவனம். இந்த பிருந்தாவனம்தான் முதன் முதலில் குரு ராகவேந்திரருக்காக கட்டப்படது. ஆனால் குருராஜன், இதனை அப்படியே வைத்திருக்கச் சொல்லி தனக்காக வேறு ஒன்று எழுப்ப ஆணையிடுகிறார். அப்போது இந்த பிருந்தாவனத்தை என்ன செய்வது என்று திவான் வெங்கண்ணா கேட்ட பொழுது, அது பற்றி பின்னர் தெரிவிப்பதாக சொல்கிறார் குருராஜன்.


ஆயிற்று, குருராஜன் தன்னால் தேர்வு செய்த கற்பலகைகளை (கற் பலகைகள் அவராலேயே குறிப்பிடப்படுகிறது. அந்த கற்பாறைகளில் ஸ்ரீஇராமன் அமர்ந்து இருந்ததாக அவரே சொல்லியதாக கூறப்படுகிறது) கொண்டு கட்டப்பட பிருந்தாவனத்தில் அமர்ந்து விட்டார். இவ்வாறு பிருந்தாவன பிரவேசம் செய்யும் போது தான் இன்னும் 700 வருடங்கள் ஜீவ சரீரத்துடன் பிருந்தாவனத்துள் வாசம் புரியப் போவதாகவும், அதன் அறிகுறியாக 700 ம்ருத்திகா பிருந்தாவனங்கள் நாடெங்கிலும் தோன்றும் என்றும் அருளியுள்ளார். ஸ்ரீஸ்ரீ ராகவேந்திரர் உத்தரவுப்படி அவருக்குப் பின் ஸ்ரீ யோகீந்திரரும், பின் ஸுரிந்திரர், ஸுமதீந்திரர், உபேந்திரர் என்று குரு பரம்பரையில் நான்கு ஆச்சார்யர்கள், ஆனாலும் குருராஜனுடைய பிருந்தாவனத்தின் இடது பக்கத்தில் இருக்கும் அந்த பிருந்தாவனம் காலியாகவே இருக்கிறது.




ஐந்தாவதாக வருபவர் வாதீந்திரர். இவரே குருராஜன் உத்தரவின்படி குருராஜனுடைய மூல பிருந்தாவனத்திற்கு அருகிலிருக்கும் பிருந்தாவனத்தில் எழுந்தருளுகிறார். 79 ஆண்டுகளுக்கு முன்னால் பிருந்தாவன பிரவேசம் செய்த குருராஜன், வாதீந்திர தீர்த்தரின் சீடர் கனவில் வந்து தனதருகில் இருக்கும் பிருந்தாவனத்தை வாதீந்திரருக்கென உத்தரவிட்டாராம். இவ்வாறாக வாதீந்திரர் குருராஜன் அருகிலேயே அமர்ந்துள்ளார்.



இந்த வாதீந்திரர் குருராயரை வணங்கி எழுதிய நூலே குரு குண ஸ்தவனம். இந்த நூலில் வாதீந்திரர், குருராயரால் எழுதப்பட்ட நூல்களைப் பற்றியும், அவற்றின் சிறப்புக்களைப் பற்றியும் குறிப்பிடுகிறார். இந்த நூல் 38 பாடல்களைக் கொண்டது. இதனை இயற்றிய வாதீந்திரர், ராயரின் ஜீவ பிருந்தாவனத்தின் முன் படித்து, அவருக்கு சமர்பணம் செய்கிறார். அவ்வாறு செய்கையில், திடிரென அவர் கையில் இருக்கும் ஓலைச்சுவடியில் ஒரு புஷ்பம் விழுகிறது. நிமிர்ந்து பார்க்கையில் குருராஜனது பிருந்தாவனம் லேசாக கேட்டதை ஆமோதிப்பது போல ஆடியதாம். இதனை அங்கிருந்த எல்லோரும் பார்த்து அதிசயித்தனராம். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நூலில் இருந்து குரு பக்தி பற்றி சொல்லும் ஒரு ஸ்லோகத்தை இன்று பார்க்கலாம். குரு குண ஸ்தவனத்தின் 12ஆவது ஸ்லோக கருத்து கிழே.


குருவே! கர்ம, ஞான மார்க்கங்களை அறியும் விஷயத்தில் நான் திறமையில்லாதவனாக இருக்கிறேன். இந்த உடம்பு நிலையில்லாதது என்பதால், வித்வான்களால் கூறப்படும் மோக்ஷ உபாயத்தையும் (நிவ்ருத்தி கர்மா), பக்தி வகைகளில் ஒன்றான ஸ்ரவணத்தின் மூலம் அடையக் கூடிய கடவுளை நேரடியாக காணும் (அபரோக்ஷ ஞானம் எனப்படும்) வழியினையும் பெறக்கூடிய நிலையில் நான் இல்லை.



ஆனால் குருவே, தங்கள் அருளால், அனுக்ரஹத்தால், இடைவிடாத குருபக்தியால் அப்படிப்பட்ட சுகமான மோக்ஷத்தை யார் வேண்டுமானாலும் அடையக் கூடும். இவ்வாறு சிறப்பு மிகுந்த அருளினை நல்கி, தன்னை வணங்கியவர்களுக்கு நற்புத்தியைக் கொடுத்து, அவர்களின் அறிவினைத் தூண்டுகிற க்ரந்தங்களை தந்தருளிய ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளை என்னாளும் வேண்டுகிறேன்.

Monday, February 4, 2008

ஆச்சார்ய உபாசனை..

குருவைப் பணிந்து பணிவிடை செய்வது ஞானிகளின் லக்ஷணங்களில் ஒன்று. ஞானிகளின் குணங்களாக தற்பெருமையின்மை, பகட்டின்மை, அஹிம்சை, பொறுமை, நேர்மை, தூய்மை, ஊக்கம், அடக்கமுடைமை இவற்றுடன் ஆச்சார்ய சேவையும் கூறப்பட்டுள்ளது.

குருவைப் பணிந்து பணிவிடை செய்வது "சாரீரத்துவம்" என்று கூறப்படுகிறது. கிருஷ்ண பரமாத்மா கீதையில், 'தேவர், மறையவர், ஆச்சார்யர், அறிவாளிகள் இவர்களை வழிபடுதலை 'உடல்வழித் தவம்' என்கிறார். ஸ்ரீ வைஷ்ணவத்தில் சாரீரத்துவம் மிக அழகாக சொல்லப்பட்டிருக்கிறன்று கேள்விப்பட்டிருக்கிறேன்.


ஆதி சங்கரரும் "குரு சரணாம்புஜ நிர்பர பக்த" என்கிறார். அதாவது குருவைப் பற்றிக் கொள்' என்கிறார். மேலும் 'ஆச்சார்ய தேவோபவ' என்பதிலிருந்து, சங்கரரின் ஆச்சார்ய பக்தி தெரிகிறது. மேலும், எவன் ஒருவன் இறை வழிபாடும், குருவும் இல்லாது இருக்கிறானோ அவனுக்கு மனச் சாந்தி கிட்டாது என்கிறார்.


குருவை ஒரு மத்யஸ்தராகவும் கூறலாம். இறைவனைக் காணும் முன் அந்த திவ்ய தரிசனத்தின் முதல் பகுதியாக குருவைக் காண வேண்டும். பின்னர் அந்த குருவே ஈஸ்வர ரூபத்தை காண்பிப்பார். மனம் சாந்தி பெற குரு அனுக்கிரகம் அவசியம். புலனடக்கம், திருவருள், குருவருள் ஆகிய மூன்றும் இருந்தால் மனச் சாந்தி தானாக சித்திக்கும்.


சரி, சாந்தி, சாந்தி என்கிறேனே, யார்? / எது சாந்தி?. மனது சஞ்சலம் இல்லாமல் இருப்பதுதான் சாந்தி. சலனத்திற்கு எதிர்ப்பதமே சாந்தி. விஷ்ணு சஹஸ்ர நாமத்தில், "ஸந்யா ஸ்க்ருத சம: சாந்தோ, நிஷ்டா சாந்தி: பராயணம்" என்று வருகிறது. பகவானே சாந்த ஸ்வரூபி, அதனால் அவனுக்கு "சாந்தன்" என்ற பெயர் உண்டு. சாந்த நிலை என்பது இறைவனே!. அதனாலேயே பிரணவாகாரமாக ஓம்! சாந்தி என்று கூறப்படுகிறது. இந்த சாந்த நிலையினை நமக்கு உணர்த்த, அதனை நோக்கி வழிகாட்ட குரு அவசியம்.


ஆதி சங்கரர் தன் தாயிடம் சன்யாசத்திற்கு உத்தரவு வாங்கிய பின்னர் குருவினை தேடி செல்கையில், நர்மதா நதிக்கரையில் கோவிந்த பகவத்பாதரைச் சந்திக்கிறார். அப்போது கோவிந்த பகவத் பாதர், சங்கரரிடம், 'நீ யார்?' என்று குகையின் உள்ளிருந்தபடியே கேட்க, சங்கரர், நான் உடம்பல்ல, என்று ஆரம்பித்து 10 ஸ்லோகங்களில் அத்வைத சாரத்தைச் சொல்லி விடுகிறார். இந்த 10 ஸ்லோகங்களுக்கு நிர்வாண சதகம் என்று பெயர். அந்த 10 ஸ்லோகங்களை கேட்ட பின் கோவிந்த பாதரால் உள்ளே இருக்க முடியவில்லையாம். வெளியில் வந்து சங்கரரைப் பார்க்கிறார். உடனேயே அவருக்கு சங்கரரிடம் இருக்கும் உயர்ந்த சிஷ்ய குணங்கள் புலனாகிறதாம். பிறகே அவர் சங்கரருக்கு சன்யாசமும் அளித்து சிஷ்யராக ஏற்றாராம். சங்கரரே பரமேஸ்வர அவதாரம், ஆனால் அவரும் கூட குரு வேண்டுமென்று தேடினார் என்பதன் மூலம் குருவின் அவசியம் தெளிவாகிறது.


குருதான் பிரும்மா, விஷுணு, ஈச்வரன் மற்றும் அநாதியாய், பலவாய்,ஒன்றாய் பரம்பிரும்மாவகவும் இருக்கிறார், அந்த குருவை வணங்குவோம்.