மனிதன் மன நிறைவுடன் வாழ வழிகாட்டுவது வேதங்கள். உலகில் உள்ள கலைகள் எல்லாம் வேதத்தில் அடக்கம். அப்படி சிறப்பான வேதத்தை காத்து நமக்களித்தவர் வேத வியாசர். தெய்வத்தை நம்பி தெய்வ பலத்தால் வாழ்க்கை கடைத்தேற வழி காண்பித்தவர் வியாசர். மஹா பாரதத்தை நமக்கு அளித்தவர்.
தக்ஷிணா மூர்த்தியை ஆதி குரு என்கிறோம். வியாசரோ விஷ்ணு அம்சம், இதுதான் "வியாசாய விஷ்ணு ரூபாய: வியாச ரூபாய விஷ்ணவே". இவரை இந்து மதத்தின் எல்லா பிரிவுகளும் ஆதி குருவாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இவர்தான் நமக்கு வேதங்களை பிரித்து தந்தவர். இவர் எழுதிய பிரம்ம சூத்திரத்திற்கு சங்கரர், ராமானுஜர், மாத்வர், ஆகியோர் மிக அழகாக பாஷ்யம் பண்ணி தங்களது மத கோட்பாடுகளை நிறுவிச் சென்றுள்ளனர்.
குரு என்று சொல்லும் போது நாம் தக்ஷிணா மூர்த்தியிலிருந்து ஆரம்பிப்பது கிடையாது. ஸ்ரீமன் நாராயணனை முதலாக கொண்டே எல்லா குரு பரம்பரையும் ஆரம்பிப்பதை காணலாம். அப்படி வருகையில் இரண்டாவதாக வருவதே வியாசர். இன்றும் இந்தியாவில் இருக்கும் எல்லா சன்யாசிகளும் தமது சாதுர் மாஸ்ய விரத சங்கல்பத்தில் வியாசரை முன்னிறுத்தி அவரிலிருந்து தமது குரு வரையில் இருப்பவர்களை பூஜிப்பத்தை பார்த்திருக்கலாம். இப்படியாக பெயர் பெற்ற குரு வியாசரை மனதில் நினைத்து இந்த பதிவினை தொடங்குகிறோம்.
பி.கு: இந்த வலைப்பூ எந்த ஒரு குறிப்பிட்ட ஆச்சார்ய பரம்பரையை மட்டும் சார்ந்ததாக இருக்காது. இந்துமததின் எல்லா குருமார்கள் பற்றியும், அவர்களது உபதேச கருத்துக்களையும் சொல்வதாக இந்த வலைப்பூவை கொண்டு செல்ல உத்தேசம். குருவருள் துணை செய்யட்டும்.