கி.பி 1238ஆம் ஆண்டு, விளம்பி என்ற பெயருடைய வருடத்தில் 32 லக்ஷணங்களும் கூடிய ஒர் ஆண்-குழந்தை வேதவதி-மத்யகேஹ பட்டர் என்னும் தம்பதியினருக்குப் பிறந்தது. இக்குழந்தைக்கு வாசுதேவன் என்று பெயரிட்டு வளர்த்தனர். குழந்தை சிரிப்பும், விளையாட்டுமாய் வளர்ந்து வந்தான். ஒருநாள் மத்யகேஹ பட்டர் வாங்கியிருந்த கடனை திரும்பக் கேட்டு வந்தான் ஒருவன். அந்த சமயத்தில் மத்யகேஹ பட்டர் ஊரில் இல்லை. கடன்காரனோ கடனை திருப்பி கொடுத்தாலேயொழிய இங்கிருந்து போகமாட்டேன் என்று தொல்லை செய்கிறான். அப்போது 6 வயதே ஆன குழந்தை வாசுதேவன் வேகமாக சமயலறைக்குச் சென்று அங்கிருந்த சில புளியங்கொட்டைகளை தனது சிறுகையில் அள்ளிக் கொண்டுவந்து உனக்கு பணம்தானே வேண்டும் இதோ வாங்கிக் கொள் என்று கடன்காரன் கையில் அளிக்கிறான். புளியங்க்கொட்டைகள் எல்லாம் தங்க காசுகளாக மின்னியதாம். 7 வயதில் குழந்தைக்கு உபநயனம் செய்வித்து குருகுலத்திற்கு அனுப்பினர். குருகுலத்தில் பாடம் பயிலும் சமயத்தில் ஒரு நாள் ஓர் மலைப்பாம்பு வழியில் படுத்திருக்க, வாசுதேவன் தனது காலால் அழுந்தச் செய்தே அந்த பாம்பை கொன்றான்.
இவ்வாறாக ஒருசில அதிசயமான செய்கைகள செய்த வாசுதேவனது கைரேகைகளை பார்த்த ஒரு பெரியவர் திகைப்படைகிறார். பின்னர் அன்னை வேதவதியிடம் "அம்மா உங்கள் திருக்குமரன் ஓர் அவதார புருஷன். முன்பு வாயுகுமாரனாக ராமயண காலத்திலும், பாண்டவர்களில் பீமனாகவும் இருந்தவர் இவர். இப்பிறவியில் சிறந்த ஞானியாக பாரதம் முழுவதும் ஒளிவிசுவார்" என்றார். வாசுதேவனுக்கும் தனது 15ஆம் வயதிலேயே சன்யாசியாகும் எண்ணம் வந்தது. ஆனால் பெற்றோர் பாசம் அவரைக் கட்டுப்படுத்த, ஒருநாள் தன் பெற்றோரிடம், "நான் ஒரே மகனாக இருப்பதால் தானே என்னை சன்யாசம் கொள்ள தடுக்கிறீர்கள்?, உங்களுக்கு இன்னொரு மகன் பிறப்பான் அதன் பின் நான் சன்யாசம் ஏற்கிறேன் என்று கூறுகிறார். அது போலவே வேதவதி-மத்யகேஹ பட்டருக்கு இன்னொரு ஆண் மகவு பிறக்கிறது. அப்போது வாசுதேவன் வயது 16. காஷாயம் தரித்து, இல்லத்தை துறந்து உடுப்பி வந்து அச்சுதப்பிரக்ஞர் என்னும் மகானை குருவாக ஏற்கிறார். அனந்தேஸ்வரர் கோவிலில் சன்யாச தீக்ஷை அளித்து பூரணபிரக்ஞர், ஆனந்த தீர்த்தர் என்ற தீக்ஷா நாமம் பெறுகிறார்.
தனது 23ஆம் வயதில் கீதைக்கு பாஷ்யம் எழுதி, அதனை வேதவியாசரிடம் சமர்பணம் செய்வதற்காக பத்ரிநாத் சென்று, பின்னர் ப்ரம்ம சூத்திரத்துக்கும் பாஷ்யம் செய்திருக்கிறார். இவர் கன்னடம், சம்ஸ்கிருதம், தமிழ், இந்தி, உருது, தெலுங்கு, வங்காளி போன்ற மொழிகளில் நல்ல தேர்ச்சியுடன் இருந்திருக்கிறார். தசபிரகரணங்கள், உபநிஷத் விளக்கங்கள், ரிக்வேத விளக்கம், அனுவியாக்கியானம் என்று 37 நூல்களை எழுதியிருக்கிறார். இவர் கனவிலேயே உடுப்பி கிருஷ்ணன் விக்ரஹம் தான் இருக்கும் இடம் பற்றிக் கூறி, அதனை மீட்கச் செய்து உடுப்பியில் கோவில் கட்டி எழுந்தருளுகிறார். இன்றும் இவர் ஸ்தாபித்த அஷ்ட மடங்களைச் சார்ந்த சன்யாசிகளே இங்கு பூஜை செய்கின்றனர்.
இறைவனிடம் அழியாத அன்பு கொள்வதும், எல்லாரிடமும், எல்லா ஜீவராசிகளிடமும் அன்பு காட்டுவதும், தனக்குரிய கடமைகளை பணிவுடன் செய்வதும், பக்தி உள்ளத்துடன் வாழ்வதும், வாழ்கையை நல்ல பணிகள் செய்ய அர்பணிப்பதுமே வாழ்வின் தத்துவம் என்று மக்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார். 'மத்வர்' என்று, அதாவது 'யாராலும் வெல்ல முடியாதவர்' என்று அழைக்கத் தொடங்கினர் சிஷ்யர்கள். இவர் அளித்த ப்ரம்ம ஞான தத்துவமே த்வைதம் எனப்படுகிறது. இவரது கூற்றுப்படி பரமாத்மாவும்-ஜீவாத்மாவும் என்றும் ஐக்கியமாகாது. இவரது தத்துவங்களை பின்பற்றியவர்களை மாத்வர் என்று கூறும் வழக்கம் ஏற்பட்டது. இன்றும் மாத்வர்களுக்கு ஹரியும் வாயுவும் ப்ராதான்யம், ஏனென்றால் மாத்வர் ஹரிபக்தியில் சிறந்தவர், அதே சமயத்தில் அவரே வாயுகுமாரன் என்பதால்.
மாத்வர் மற்ற சன்யாசிகள் போல ப்ருந்தாவனப் பிரவேசம் செய்யவில்லை. 1317ஆம் வருஷம் மாக சுக்லபக்ஷ நவமியில் அனந்தேஸ்வரர் கோவிலில் தனது சிஷ்யர்களுக்கு பாடம் நடத்தும் போது திடீரென அவர் மீது புஷ்பங்களால் விருஷ்டி நடந்து அவரை மூடி ஒரு பூங்குன்று உருவாகிறது. இதை அவரிடம் பாடம் கற்ற மாணவர்கள், கோவிலுக்கு வந்தவர்கள் எல்லாம் பார்க்கிறார்கள். பிறகு புஷ்பங்களை விலக்கிப் பார்த்தால் மத்வரை காணவில்லை. இவர் இன்றும் பத்ரிகாஸ்ரமத்தில் வேதவியாசர் அருகில் அமர்ந்து பாடம் கேட்பதாக நம்பிக்கை. மத்வர் வாழ்ந்த வீடு, கல்வி கற்ற இடம், விளையாடிய இடம் நீராடிய குளம், மலைப்பாம்பு இறந்த இடம் எல்லாம் பாஜகம் என்ற கிராமத்தில் கர்னாடகத்தின் தென் பகுதியில் இருக்கிறது.