Wednesday, August 27, 2008

வெள்ளைக் குதிரையாக வந்தது யார்??? வாதிராஜர் தொடர்ச்சி

ஸ்ரீவாதிராஜர் மடத்தின் அதிபதியாக ஆன சமயம். ஸ்ரீமடத்தை ஒட்டி, தனியார் ஒருவரின் நிலம் மிக மிகப் பெரிய பரந்த நிலம், இருந்தது. அதன் உரிமையாளர் நிலத்தில் கடலையை விதைத்திருந்தார். கடலையும் செழிப்பாய் வளர்ந்திருந்தது. பயிர்கள் இன்னும் சிறிது காலம் போனால் கடலையை எடுக்கலாம் என்ற நிலைமை. தினம்போல் அன்றும் நிலத்துச் சொந்தக் காரர் நிலத்தைப் பார்வையிட்டுச் செல்ல வந்திருந்தார். அப்போது அங்கே ஒரு பகுதியில் பயிர்கள் மிகவும் சிதிலம் அடைந்து காணப் பட்டது. கவலையுடன் வீடு திரும்பிய உரிமையாளர், மறுநாளும் சென்று பார்க்க, மீண்டும் அதே மாதிரியாக, இன்னும் சில பகுதிகள் சிதிலமடைந்து காணப் பட்டது. “ஆஹா, யாரோ வந்து திருடித் தின்கின்றனர், அல்லது எடுத்துச் செல்கின்றனர்.” என்று எண்ணிய நிலத்துக் காரர் அன்று இரவு எப்படியாவது உண்மையைக் கண்டு பிடிக்க வேண்டும் என்று எண்ணியவராய், இரவு நேரம் நிலத்திலேயே ஒரு பக்கம் மறைவாய்க் காத்திருந்து கண்காணிக்க ஆரம்பித்தார்.

சற்று நேரத்தில் ஸ்ரீமடத்தில் இருந்து கண்ணைக் கூச வைக்கும் வெண்மை நிறத்தோடு ஒரு குதிரை ஒன்று வந்தது. அது நேராக வயலை அடைந்தது. கடலைச் செடிகளைச் சேதப் படுத்தியது. தாங்க மாட்டாக் கோபத்தோடு நில உரிமையாளர் ஓடிப் போய் அந்தக் குதிரையை விரட்டினார்.
குதிரை அவரிடமிருந்து தப்பித்து ஸ்ரீ மடத்தினுள் புகுந்து கொண்டது. சரி, இங்கே தானே இருக்கப் போகின்றது, பார்த்துக் கொள்ளலாம் என்று வீடு திரும்பினார் நிலத்துக் காரர். மறுநாள் நேரே ஸ்ரீ வாதிராஜரிடம் சென்றார். நடந்தவற்றை அப்படியே விவரித்தார். இது என்ன நியாயமா? என்று நியாயமும் கேட்டார். ஆனால் வாதிராஜரோ மறுக்கின்றார். ஸ்ரீ மடத்திற்கு எனச் சொந்தமாய்க் குதிரையே கிடையாது என்றும், நிலத்துக்காரர் சொல்லுவது உண்மையாக இருக்குமா என்றும் சந்தேகப் படுகின்றார். நிலத்துக் காரரோ அடித்துச் சொல்கின்றார். தான் தன்னிரு கண்களால் நடந்தவற்றைப் பார்த்ததாய். எனினும் மீண்டும் அன்று இரவும் பார்க்கப் போவதாயும், அதன் பின்னர் மீண்டும் வாதிராஜரை மறுநாள் வந்து பார்ப்பதாயும் சொல்லிவிட்டுச் செல்கின்றார்.

அன்று இரவு. மீண்டும் நிலத்தின் உரிமையாளர் நிலத்தின் அருகே மறைந்திருந்து காவல் காக்க, மீண்டும் அதே வெள்ளைக் குதிரை மடத்தில் இருந்து வெளியே வந்து வழக்கம்போல் நிலத்திற்குள் நுழைந்து, பயிர்களைச் சேதப் படுத்தத் தொடங்கியது. கடலைச் செடிகள் மிதிபட்டன, தின்றது போக மற்றவை சேதம் ஆயின. பின்பு எப்படி வந்ததோ அது போலவே மடத்தினுள் நுழைந்து மறைந்தது. நிலத்துக் காரர் குதிரையைத் துரத்திக் கொண்டு வந்தவரால் அதைப் பிடிக்க முடியவில்லை. சாதாரணக் குதிரைக்கே வேகம் அதிகம். இது சாதாரணக் குதிரை அல்லவே. அசாதாரண வேகத்துடன் ஓடி மறைந்துவிட்டது. மறுநாள் காலையில் வாதிராஜரின் முன்னிலையில் வந்து நின்றார் உரிமையாளர். “ஸ்வாமி, இப்போது சர்வ நிச்சயமாய்த் தெரிந்துவிட்டது எனக்கு. என் இரு கண்களால் நன்றாய்க் கண்டு விட்டேன். வெள்ளைக் குதிரை ஸ்ரீமடத்தில் இருந்தே வெளியே வந்து என் நிலத்தினுள் புகுந்து கடலைச் செடிகளைத் தின்றுவிட்டு சேதமும் பண்ணிவிட்டு, ஓடி மறைந்துவிட்டது.” என்று சொல்கின்றார். வாதிராஜரோ திகைப்புடன் ஸ்ரீ மடத்தில் குதிரையே கிடையாது, ஆனால் இவர் இப்படிச் சொல்லுகின்றாரே என்றார்.


ஆனால் நிலத்துச் சொந்தக் காரரோ, தான் சொன்னதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். மேலும் ஏற்கெனவேயே நிறைய இழப்புகள் ஏற்பட்டு விட்டதாயும், குதிரையை அடக்காவிட்டால் மேலும் ஏற்படும் இழப்பைத் தன்னால் தாங்க முடியாது எனவும் சொல்லுகின்றார். வாதிராஜர் அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, இழப்பைத் தானே ஈடு செய்வதாயும், இழப்பின் மதிப்பைக் கணக்கிட்டுச் சொல்லுமாறும் கேட்டுக் கொள்ளுகின்றார். ஆனாலும் ஸ்ரீமடத்தில் குதிரையே கிடையாது என்பதை வலியுறுத்தவும் தவறவில்லை அவர். நிலக்காரர் ஒருமாதிரியாக நஷ்ட ஈடு கிடைக்குமே என்று ஆறுதலுடன் சென்றார். மீண்டும் நிலத்தை மதிப்பீடு செய்யச் சென்றவர் அதிர்ச்சி அடைந்தார். ஓடோடி வந்தார் வாதிராஜரிடம். “ஸ்வாமி, ஸ்வாமி, இது என்ன அதிசயம்?? ஒரே மாயாஜாலமாக அல்லவா இருக்கின்றது. எங்கெங்கே சேதங்கள் ஏற்பட்டனவோ அந்த இடத்தில் எல்லாம் தங்கக் கடலைகள். ஸ்வாமி, அந்தக் குதிரை சாதாரணமானதல்ல. தெய்வீகக் குதிரை. தாங்களே வந்து பாருங்கள் அந்த அதிசயத்தை!” என்று பரவசத்துடன் கூறுகின்றார்.

இப்போத் தான் கவனிச்சேன், இது 50-வது பதிவு என்று.

50-வது பதிவு

Wednesday, August 20, 2008

தங்கத் தாம்பாளத்தில் ஏந்தப் பட்ட குழந்தை!

எந்தவொரு காரியத்துக்குமே காரணங்கள் கட்டாயமாய் இருக்கும். ஆராயப் போனால் நம் அறிவுக்கு உகந்த முறையில் சரியான பதில் எல்லாவற்றுக்கும் கிடைப்பது இல்லை. பொதுவாகவே நம் பெரியோர்கள் அதனாலேயே நம்மை எதையும் அதிகம் ஆராயாதே எனச் சொல்லி வருகின்றார்கள் போலும். இறைவன் ஒருவனே அனைத்தையும் அறிந்தவன், காரணத்தை மட்டுமல்லாது, காரியத்தையும் அவனே அறிவான். மாத்வாசாரியாரின் மகத்தான வழியைப் பின்பற்றுபவர்களுக்கு அவர் ஸ்தாபித்த 8 மடங்கள் பற்றித் தெரிந்திருக்கும். அந்த எட்டு மடங்களின் தலைமை குருவாக இருப்பவரே மாறி, மாறி உடுப்பி ஸ்ரீகிருஷ்ணன் கோயிலின் வழிபாடுகளைச் செய்து வருகின்றனர் இன்றளவும். அதில் ஒன்றான ஸோதே மடத்தின் அதிபதியான வாகீச தீர்த்தர் ஒரு ஊருக்குச் சென்றிருந்த போது ஒரு தம்பதிகள் அவரை வந்து பார்த்துக் காலில் விழுந்து வணங்கி விண்ணப்பம் கோரி நின்றனர். தம்பதிகளுக்குத் திருமணம் ஆகிப் பல வருஷங்கள் ஆகியும் குழந்தைப் பேறு இல்லை. ஆகவே வாகீச தீர்த்தரிடம் தங்கள் வேண்டுகோளை முன் வைக்கின்றனர் இருவரும்.

வாகீச தீர்த்தர் ஒரு மகான். நடக்கப் போவதை அறிந்தவர். அவர் சொல்கின்றார்: "உங்களுக்குக் குழந்தை பிறக்கும். அதுவும் ஆண் குழந்தையாகவே பிறக்கும். ஆனால் அந்தக் குழந்தை பிறந்தவுடனேயே எங்கள் ஸ்ரீமடத்திற்குக் குழந்தையைத் தந்து விடவேண்டும், சம்மதமா?" என்று கேட்கின்றார். தம்பதிகள் தடுமாறினார்கள். குழந்தை நிச்சயம் பிறக்கும், அதுவும் ஆண் குழந்தையே பிறக்கும். ஆனால் பிறந்த குழந்தையை எவ்வாறு ஸ்ரீமடத்திற்குத் தருவது?? கொஞ்சம் கலங்கினர் இருவரும். பேசாமல் நின்றனர். மகான் யோசித்தார். இவர்கள் இவ்வாறெல்லாம் வழிக்கு வரமாட்டார்களே?? என்ன செய்வது??? வாகீச தீர்த்தர் சொல்கின்றார்:"சரி, நான் வேறொரு யோசனையைச் சொல்கின்றேன். பிறக்கும் குழந்தை வீட்டுக்குள்ளேயே பிறந்தால் அந்தக் குழந்தை உங்களுக்கு. ஆனால் அது வீட்டுக்கு வெளியே பிறந்தால் அந்தக் குழந்தை ஸ்ரீமடத்துக்கு. சம்மதமா?" என்று கேட்கின்றார்.

போன உயிர் திரும்பி வந்தாற்போல் இருக்கிறது இருவருக்கும். அப்பாடா, குழந்தையாவது வீட்டுக்கு வெளியே பிறப்பதாவது?? எப்படியும் வீட்டுக்கு உள்ளேயே குழந்தை பிறக்கும், நாமும் குழந்தையை மடத்துக்குக் கொடுக்கவேண்டியதில்லை, ஆகவே இதுக்கு சரினு சொல்லிடுவோம். இருவரும் ஒத்துக் கொண்டனர். வாகீச தீர்த்தர் அளித்த மந்திராட்சதையைப் பெற்றுக் கொண்டு இருவரும் திரும்பி வருகின்றனர். இவர்கள் பெயர் இருவிதமாய் வழங்குகின்றது. ஒரு சாரார் தேவரநாம பட்டர்-கெளரிபாய் என்றும் இன்னும் சிலர், ராமாசார்யர்-சரஸ்வதி என்றும் சொல்கின்றனர். நமக்கு முக்கியம் ஸ்ரீவாதிராஜரே. ஆகவே அதைக் கவனிப்போம்.

வாகீச தீர்த்தரின் வாக்குப் பலித்தது. கெளரிபாயின் வயிற்றில் திரு உதித்தது. பட்டருக்குக் கவலை அதிகம் ஆனது. மனைவியைக் கண்ணும் கருத்துமாய்க் கவனித்து வந்தார். வெளியே எங்கும், எதற்கும் மனைவியை அனுப்புவதில்லை. தானே வெளிவேலைகளையும் சேர்த்துக் கவனித்து வருகின்றார். வீட்டின் பின்பக்கம் ஆன தோட்டத்துக்கோ, மாட்டுத் தொழுவத்துக்கோ கூட மனைவியை அனுப்பாமல் அதையும் தானே கவனித்துக் கொண்டு மனைவியின் நடமாட்டத்தையே கட்டுப் படுத்திக் கொண்டு வந்தார். பிரசவம் என்பது எப்படியும் வீட்டின் உள்ளே தானே நடக்கும் என்ற நம்பிக்கையும் அவருக்கு இருந்தாலும், ஒருவேளை என்ற சந்தேகமே இவ்வாறெல்லாம் அவரை நடக்க வைத்தது.

நாட்கள் சென்றன. கெளரிபாய் நிறை கர்ப்பிணி. வீட்டுக்குத் திடீரென ஒரு விருந்தினர் வந்தார். வேறு வழியில்லை. கர்ப்பிணியான கெளரிபாயே எழுந்து அவரைக் கவனித்தார். சாப்பாடு சாப்பிடும் நேரமும் வர, இருவருக்கும் நிறை கர்ப்பிணியான கெளரிபாயே உணவும் பரிமாறினார். அப்போது வீட்டின் கொல்லைப்புறம் திறந்திருந்தது. அது வழியாக ஒரு மாடு உள்ளே நுழைந்தது. அவர்கள் மாடு இல்லை அது. கொல்லையில் தோட்டம் வேறே இருந்தது. மாடு என்ற சொல்லுக்கு செல்வம் என்ற ஒரு அர்த்தமும் உண்டல்லவா??? மாடு உள்ளே நுழைந்ததின் காரணமே, உலகுக்குச் செல்வத்தை இவர்களே வைத்துக் கொள்ளப் போகின்றார்களோ என்ற பயமாயும் இருக்கலாமோ???

இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபடியால் வேறு வழியில்லாமல் கெளரிபாய் வெளியே வர நேரிட்டது. வெளியே வந்து மாட்டை விரட்டினார். அதுவா, வேகமாய் ஓட மறுத்தது. நகர மறுத்துச் சண்டித்தனம் வேறே. மாட்டைச் சற்றுக் கோபத்துடனேயே வேகமாய் ஓடிப் போய் விரட்ட ஆரம்பிக்கின்றார் கெளரிபாய். திடீரென ஓட ஆரம்பித்த மாடு வேகமாய் ஓடி மறைய, மாட்டின் பின்னால் இயல்புக்கு மாறாக வேகமாய் ஓடிய கெளரிபாய்க்கு வீடு நோக்கித் திரும்பும் எண்ணம் வர வைத்தது, திடீரென ஏற்பட்ட பிரசவ வலி. வேதனையில் துடித்த அவர் வீடு நோக்கி அவசர, அவசரமாய்த் திரும்ப முயல, திரும்ப முடியாமல் அங்கேயே ஒரு மரத்தடியில் உட்கார்ந்துவிட்டார் நடக்கக் கூட முடியாமல்.

அப்போது பார்த்தால் வாசலில் ஸ்ரீமடத்தைச் சேர்ந்த இருவர் நிற்க, என்னவெனப் போய்ப் பார்க்கின்றார் பட்டர். ஒரு தங்கத் தாம்பாளத்தை அவர் கையில் கொடுத்துப் பிறக்கும் குழந்தை பூமியில் படுமுன்னே அதைத் தங்கத் தாம்பாளத்தில் ஏந்துமாறு வாகீச தீர்த்தர் சொன்னதாய்ச் சொல்லவே, கலங்கிய பட்டர் அப்போது தான் மாட்டைத் துரத்திய மனைவி வீட்டினுள் நுழையவில்லை எனப் புரிந்து வேகமாய் வெளியே ஓட, அப்போது ஒரு ஒளிமயமான ஆண்குழந்தை பிறக்க, செய்வதறியாது, தன் கையில் இருந்த தங்கத் தாம்பாளத்தில் அந்தக் குழந்தையை ஏந்தினார் பட்டர். வேறு வழி இல்லை. நிபந்தனையில் ஜெயிப்போம் என நினைத்தால் இறைவன் அருள் இவ்வாறு இருக்கின்றதே! குழந்தையை எடுத்துக் கொண்டு ஸ்ரீமடத்திற்குச் சென்று வாகீச தீர்த்தரிடம் குழந்தையை ஒப்படைக்கின்றார் பேச்சுப் படியே பட்டர். பட்டரைப் பார்த்த வாகீசர், உலகு உய்ய ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த உங்களுக்கு இன்னொரு குழந்தை பிறக்கும். அந்தக் குழந்தை உங்கள் குழந்தையாக இருப்பான் என்று ஆசீர்வதிக்கின்றார். மடத்துக்காக ஒப்படைக்கப் பட்ட குழந்தைக்கு ஸ்வாமியின் அபிஷேகப் பாலை ஊட்டி வளர்த்தார் வாகீச தீர்த்தர். கூடவே குழந்தைக்கு ஞானமும் ஊட்டப் பட்டது. அந்தக் குழந்தைதான் வாதிராஜர்.

அடுத்து வாதிராஜரின் வாழ்வில் ஹயக்ரீவரின் அற்புதங்களும், கடலை நைவேத்தியமும்.

தொடரும்

Wednesday, August 13, 2008

ஸ்ரீ வாதிராஜர்


அம்பி கேட்டிருந்த ஹயக்ரீவருக்குக் கடலை நைவேத்தியம் பத்தி எழுதணும்னு ரொம்ப நாட்களாய் முயன்றும் நேரமின்மையால் எழுத முடியவில்லை. இன்னிக்கு எப்படியாவது எழுதணும்னு ஆரம்பிச்சிருக்கேன், முடிக்க அந்த ஹயக்ரீவர் அருள் புரியவேண்டும்.
*************************************************************************************

முதலில் ஹயக்ரீவர் பற்றிய ஒரு சின்ன அறிமுகம். அநேகமாய் இரு பதிவுகளாய் வெளிவரும்னு நினைக்கிறேன். ஏற்கெனவே ராமாயணத்தைத் தோற்கடிக்கிறோம்னு ஒரு புகழ்ச்சி இருக்கு நம்ம பதிவுக்கு. ஆகவே கூடியவரையில் சுருக்கமாய்!

எப்போவுமே கல்விக்குத் தனிச் சிறப்பு. அந்தக் கல்விக்கு அதிபதியாய் நாம் அனைவரும் வணங்குவது சரஸ்வதி தேவியை! ஆனால் அந்த சரஸ்வதிக்கும் ஒரு குரு உண்டு என எத்தனை பேருக்குத் தெரியும்?? அவரே ஞானகுருவான ஹயக்ரீவர். அம்பிகையின் நாமங்களை உலகுக்கு அகத்தியர் வாயிலாக லலிதா சஹஸ்ரநாமம் ஆக வெளிப்படுத்தியவர் ஹயக்ரீவரே! ஞானமும், கல்வியும் நமக்கு இரு கண்கள். ஆனால் இன்றைய கல்வி வயிற்றுப் பாட்டுக்காக இருப்பதால் அதில் சந்தோஷம் இருந்தாலும் பேரானந்தம் என்பது இருக்க முடியாது. ஆனந்தம் வேறே, சந்தோஷம் வேறே இல்லையா??? சந்தோஷம் எப்போவும் தனித்து இருக்காது, தனித்து வராது. கூடவே துக்கமும் வரும். ஆனால் ஆனந்தம் அப்படி இல்லை. சந்தோஷம் அழியக் கூடியது. இன்றிருக்கும், நாளை இருக்காது. ஆனந்தம் அழிவில்லாதது. அந்த அழிவற்ற ஆனந்தத்தைத் தரக் கூடியது, ஞானம் ஒன்று மட்டுமே. அத்தகைய ஆனந்தத்தைப் பெற ஹயக்ரீவரைத் தியானிக்க வேண்டும்.

அறியாமை என்னும் இருளில் இருந்து ஞானம் ஆகிய ஒளியை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் ஞான ஆசாரியனாக ஹயக்ரீவர் அருள் புரிகின்றார். அலையாழி அறிதுயிலும் அந்த மாயவனின் ஒரு அவதாரம் ஆன ஹயக்ரீவர் தோன்றியது எப்படி? நான்கு வேதங்களின் துணை கொண்டு, அந்த வேதங்கள் பின் தொடர்ந்து வர, பிரம்மா தனது சிருஷ்டியை நடத்திக் கொண்டிருக்கும்போது, மது, கைடபர் என்னும் இரு அரக்கர்கள் தங்களைப் பிரம்மனைவிடவும் பெரியவர்களாய் நினைக்கவேண்டும் என்ற எண்ணத்தால், அந்த வேதங்களைக் குதிரை வடிவில் வந்து பிரம்மாவிடம் இருந்து பறித்துச் சென்றனர். ( தேவி மஹாத்மியத்தில் வரும் மது, கைடபர்கள் இவர்கள் இல்லை. ஆகவே அவர்கள் என நினைத்துக் கொள்ள வேண்டாம்.) வேதங்கள் இல்லாமல் சிருஷ்டியின் அர்த்தமே இல்லையே?? உலகை இருள் சூழ்ந்தது. பிரம்மா செய்வதறியாது திகைத்தார்.

மஹாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டார் பிரம்மா. மஹாவிஷ்ணு இவ்வுலகைக் காக்கவும், வேதங்களை மீட்டு வரவும், அசுரர்கள் எந்தக் குதிரை வடிவில் வந்தனரோ, அந்தக் குதிரை வடிவிலேயே தாமும் செல்லத் தீர்மானித்தார். குதிரை முகம், மனித உடல், ஆயிரம் கோடி சூரியர்களையும் மிஞ்சும் ஒளி. சாட்சாத் அந்த சூரிய, சந்திரர்களே இரு கண்கள், கங்கையும், சரஸ்வதியும் அந்தக் கண்களின் இமைகள். சங்கு, சக்ரதாரியாக இந்த திவ்ய சொரூபத்துடனேயே விஷ்ணு வேதங்களை மீட்டு எடுக்கக் கிளம்பினார்.

"முன்னிவ்வுலகேழும் இருள் மண்டியுண்ண
முனிவரோடு தானவர்கள் திகைப்ப வந்து
பன்னுகலை நூல் வேதப் பொருளை யெல்லாம்
பரிமுக மாயருளிய வெம்பரமன் காண்மின்" என்றும்,

"வசையில் நான்மறை கெடுத்த
அம்மலரயற்கருளி முன் பரிமுகமாய்
இசைகொள் வேத நூலென்றிலை
பயந்தவனே! எனக்கருள் புரியே" என்றும் முறையே எட்டாம் திருமொழியிலும், மூன்றாம் திருமொழியிலும் ஆழ்வார் அருளிச் செய்திருப்பது போலக் கிளம்பினார் ஹயக்ரீவர்.

அகம்பாவத்தின் வடிவான மது, கைடபர்களிடமிருந்து வேதங்களை மீட்டு வந்து பிரம்மதேவனிடம் ஒப்படைத்தார் ஹயக்ரீவர். அந்த ஞானானந்த சொரூபம்,ஸ்படிகமணி போன்ற திவ்ய மங்கள ரூபத்தின் அருள் பெற்ற மகான்கள் பலர் உண்டு. அவர்களில் ஸ்ரீபாதராஜர், ஸ்ரீவாதிராஜர் ஆகியோர் முக்கியமானவர்கள் என்றாலும், மாத்வாச்சாரியாரால் நிர்மாணிக்கப் பட்ட அஷ்ட மடங்களில் ஒன்றான ஸோதே மடத்தின் பீடாதிபதியாகவும், பிறக்கும்போதே தங்கத் தாம்பாளத்தில் ஏந்தப் பட்டவரும், பிறந்ததிலிருந்து ஸ்ரீமடத்தின் அபிஷேகப் பாலை உண்டு வளர்ந்தவரும், ஹயவதன என்னும் முத்திரையோடு பலப் பல கீர்த்தனைகளை ஹயக்ரீவர் பால் எழுதியவரும் ஆன ஸ்ரீவாதிராஜ தீர்த்தர் பற்றியே இங்கே நாம் காணப் போகின்றோம்.

Wednesday, August 6, 2008

ஜலஸ்தம்பம்! செய்ய முடியுமா உம்மால்???

இன்னிக்கி ஒரே ஒரு சின்னக் கதை மட்டுமே!

இராமகிருஷ்ண பரமஹம்சர் யோகத்தில் மூழ்கி இருந்தார்! இமயமலைத் துறவி ஒருவர் அவர் முன் வருகிறார்!"என்ன இராமகிருஷ்ணரே...உங்களைப் பற்றிப் பலதும் பெருசா சொல்றாங்க? அதைக் கேள்விப்பட்டு வந்தேன்! ஆனா முகத்தில் ஒரு தேஜஸே இல்லையே! போதாக்குறைக்கு மனைவியோடு வாழ்ந்துகிட்டு இருக்கீங்க!
காளி கோயில் பூஜாரி-ன்னாலே சகல ஞானங்களும் கைவந்து விடும் என்ற நினைப்பா? அதுக்கெல்லாம் ஞானம் கைகூடணும், யோகம் செய்யணும்! ஆத்ம விசாரம் செய்யணும்! இதெல்லாம் ஞானிகளால் மட்டுமே முடியும்! என்றைக்கு இருந்தாலும் பூஜாரி பூஜாரி தான்! ஞானி ஞானி தான்!"
(சிரிப்பு)

"என்ன சிரிக்கிறீர்? உம்ம பின்னாடி சின்னூண்டு சிஷ்யக் கூட்டம் தான் இருக்கு! அப்புறம், நீங்க என்ன ஒரு பெரிய ஆச்சார்யர்?"

(சிரிப்பு)
"நான் ஆச்சார்யன் அல்ல மகாஞானியே! வெறும் ஆச்சர்யன்!
இறைவன் உண்டாக்கிய பல ஆச்சர்யங்களில், அடியேனும் ஒரு ஆச்சர்யம்! அவ்வளவு தான்!"

"இப்படி வார்த்தை விளையாட்டு விளையாடினால், நான் மயங்கி விடுவேன் என்று நினைத்தீரா? வார்த்தை எவனும் விளையாடுவான்! சித்து விளையாடத் தெரியுமா உமக்கு?"

"தெரியாது ஐயா!"

"இவ்வளவு நாள் என்ன தான் பண்ணிக்கிட்டு இருந்தீர்? உம்மையும் ஏமாற்றிக் கொண்டு, உம்ம சீடர்களையும் ஏமாற்றிக் கொண்டு...என்ன தான் பெருசா சாதிச்சீர்?"

"எதுவும் சாதிக்கலை ஐயா! அம்பாளின் காளி பக்தியில் களித்திருந்தேன்! அவ்வளவு தான்!"

"இது ஒரு பூஜாரி வேலை! ஒரு ஆச்சார்யன் வேலை அல்ல!"

"ஓ....."
"எல்லாரும் சொல்வது போல், உம்மிடம் பல சித்திகள் இருக்கும் என்று நினைத்துத் தான் வந்தேன்! ஆனால் நீரே மாணவர்களிடம் இருந்து தான் தெரிந்து கொள்கிறீர் போலும்! நல்ல வேடிக்கை! நான் வருகிறேன்! இனியாவது திருந்துங்கள்! ஆத்ம ஞானத்தைத் தேடப் பாருங்கள்"

"ஞானியே! ஒரு நிமிடம்! என்னைப் பல கேள்விகள் கேட்டீர்கள்! இது தெரியுமா? அது தெரியுமா? என்றெல்லாம் கேட்டீர்கள்.....சரி, எனக்கு ஒரு உதவி செய்யுங்களேன்! நீங்கள் இத்தனை நாள் யோகத்தில் அடைந்த சாதனையை, அடியேனுக்குச் சொல்லிவிட்டுச் செல்லுங்களேன்! உங்களையே முன் மாதிரியாக வைத்து நானும் கடைத்தேறப் பார்க்கிறேன்!"

"ஹா ஹா ஹா...சரி கேளும்...
பல ஆண்டுகள் இமய மலைச் சாரலில் தவம் இருந்த தப்ஸ்வி நான்! பல சித்தர்களை, அவர்கள் உலாவும் குறிப்புகளை நேரடியாகப் பார்த்து இருக்கேன்! என் யோகத்தின் பயன் என்ன தெரியுமா? - ஜலஸ்தம்பம்!"


"அப்படின்னா என்ன ஞானியே?"

"ஆகா...இது கூடத் தெரியாதா?
பரமஹம்சர் என்று பட்டம் கொடுக்கப்பட்டிருக்கும் உமக்கு இது கூடத் தெரியாமல் போனது ஆச்சர்யம் தான்! நான் சொன்னது சித்த புருஷ லட்சணம்! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சித்தி! அணிமா, கரிமா, மகிமா, லகிமா என்று பல சித்திகள்! அதில், ஜலஸ்தம்பம் என்பது ஜலத்தின் மேலே நடப்பது!நான் நீர் மேலேயே நடப்பேன் இராமகிருஷ்ணரே! தெரியுமா உமக்கு? அதுக்கெல்லாம் சித்தி அருளப் பெற்று இருக்கணும்! தவம் ஐயா தவம்!"

(இராமகிருஷ்ணர் விழுந்து விழுந்து சிரிக்கிறார்...குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறார்...ஞானிக்குக் கோபம் பொத்துக்கிட்டு வருகிறது...)

"உமக்கே கேவலமாக இல்லை? இப்படிச் சிரிக்கிறீர்களே? நான் சபித்தால் என்ன ஆவீர் தெரியுமா?"

"அச்சோ! மன்னியுங்கள் மகா ஞானியே! நான் உங்களை இழிவுபடுத்த நினைக்கவில்லை! என்னையும் மீறி, என் காளி சிரித்து விட்டாள்...
கொஞ்சம் பொறுங்கள்...அவள் என்னை ஏதோ சொல்லச் சொல்கிறாள்...உங்களுக்குச் சொல்லச் சொல்கிறாள்...சொல்கிறேன்!
...
...
ஏன்பா...ஓடக்காரா...ஹூக்ளி ஆற்றைத் தாண்டிப் போகனும்! எவ்ளோ-ப்பா?"

"பத்து பைசா சாமீ! நீங்க பாக்க சாமீ மாதிரி இருக்கீங்க ரெண்டு பேரும்! பரவாயில்ல, சும்மாவே படகுல குந்திக்குங்க! காசு வேணாம்!"

"பார்த்தீங்களா ஞானியே! ஒரு பத்து பைசா கொடுத்தா, இவனே "ஜலஸ்தம்பம்" பண்ணிடுவானே! ஹா ஹா ஹா!"
(ஞானி திடுக்கிடுகிறார்...)



"இதுக்கு நீங்க...இத்தனை வருஷம் பிரயாசைப்பட்டு, யோகப்பட்டு, தவப்பட்டு, அணிமா, மகிமா, கரிமா, லகிமா-ன்னு பல மாக்களை எல்லாம் சாதனை பண்ணி...கடைசீல உங்க யோகத்தின் மதிப்பு வெறும் பத்து பைசா தானா?"

(ஞானிக்குத் தூக்கி வாரிப் போடுகிறது.....)

"உங்க ஜலஸ்தம்பத்தால் யாருக்கென்ன லாபம், சொல்ல முடியுமா? இத்தனை மக்களும் ஆற்றைக் கடக்க உம்ம "ஜலஸ்தம்பம்" உதவுமா?"

(மெளனம்)

"ஜலஸ்தம்பம்-ன்னு எங்கே பிரமாணம் ஆச்சு உங்களுக்கு? சொல்லுங்களேன்"

"சித்த நூல்களில் எல்லாம் உள்ளது இராமகிருஷ்ணரே! யோக ரகஸ்யங்களில் அதுவும் ஒன்னு! யோகத்தைக் கேவலமாக மட்டம் தட்டி விட்டீரே, உம்ம வார்த்தை விளையாட்டால்! ச்சே!"

"சித்த நூல்கள், யோக ரகஸ்யம் இதெல்லாம் அற்புதமானது ஞானியே! அடியேன் அதை மட்டம் தட்டவில்லை! நான் வார்த்தை விளையாடவும் இல்லை!
என் வார்த்தையின் உண்மை, உங்கள் மனத்தில் விளையாடி விட்டது! அதான் வார்த்தை+விளையாட்டு!"

(மெளனம்)

"ஜலஸ்தம்பம்-ன்னா என்ன? சித்த புருஷர்கள் ஆற்றின் ஜலத்தையா ஸ்தம்பம் செய்யச் சொன்னார்கள்?ஹா ஹா ஹா!
சம்சார ஜலம் = பிறவிக் கடல் = அதை உம்மால் ஸ்தம்பம் செய்ய முடியுமா?

சம்சார ஜலஸ்தம்பம்! செய்வீரா? சாதனை பண்ணி இருக்கீரா?
சம்சார ஜலஸ்தம்பம்! பகவத் சரணார விந்தம்! அதைச் சாதனை பண்ணி இருக்கீரா?
சம்சார ஜலஸ்தம்பம்! திருவடி ஓடம்! அதில் பயணித்து இருக்கீரா?"

(ஸ்தம்பம் செய்த ஞானி இப்போ ஸ்தம்பித்து நிற்கிறார்)

"இவ்வளவு நாட்கள் ஆன்மீக வாழ்க்கையை வீணடித்து விட்டேன் என்று என்னைச் சொன்னீர்களே, மஹாப்ரபு! ஆனால் ஜலஸ்தம்பம் என்றால் என்ன என்றே தெரியாமல், ஏதோ பைசா பெறாத ஒன்றை ஜலஸ்தம்பம் செய்யத் தெரிந்து கொண்டதாக நினைத்து இப்படி ஏமாந்து விட்டீர்களே? மகாஞானியே!"

(ஞானி, இராமகிருஷ்ணரின் காலடிகளில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்கிறார்! நாமும் வீழ்வோம்!)



புத்தகச் சுரைக்காய்களைக் கரைத்துக் குடித்து விட்டு,
பலதும் படித்துப் படித்து,
எதைப் பிடிக்கப் படிக்கிறோம் என்றே தெரியாமல், மேலும் படித்துப் படித்து,
சொந்தக் கருத்துகளையும், தன் கட்சியையும் நிலைநாட்ட மட்டுமே
தேடித் தேடிப் படித்து...
கண்டதே காட்சி, கொண்டதே கோலம்! கண்டதே கருத்து, கொண்டதே பதிவு! என்று இருக்கும் நாமும்.....
பரமஹம்சர் காலடியில் வீழ்வோம்! பரம ஹம்சம் பெறுவோம்!

மனம் என்னும் தோணி பற்றி, "மதி" என்னும் கோலை ஊன்றி,
சினம் என்னும் சரக்கை ஏற்றி, செறி கடல் ஓடும் போது,
மனன் என்னும் பாறை தாக்கி, மரியும் போது அறிய ஒண்ணாது,
"உனை" எண்ணும் உணர்வை நல்காய்! ஒற்றியூர் உடைய கோவே!

திருச்சிற்றம்பலம்!