* சிறு வயதிலேயே, ஆதிசங்கரரைப் போல், சகல சாஸ்திரங்களையும் கரைத்துக் குடித்து,
அபர சங்கராச்சாரியார் என்று பெயர் பெற்றவர் யார்?
* ஆதிசங்கரருக்குப் பின் அத்வைத நெறியைத் தூக்கி நிறுத்திய மகான் யார்?
* கோட்பாடுகள் பேதமின்றி, துவைதம், அத்வைதம், சுத்தாத்வைதம், விசிஷ்ட-அத்வைதம் என்று அத்தனைக்கும் விளக்கம் எழுதிய அறிஞர் யார்?
* சிவபிரான் மேல் ஆறாக் காதல் கொண்டாலும், வேதத்தில் சொல்லப்படும் பரத்துவம் நாராயணன் என்று சொன்ன மகாகுரு யார்?
அத்தனைக்கும் ஒரே பதில்! = அப்பைய்ய தீட்சிதர்!தீட்சிதேந்திரன் என்று போற்றப்படுவது இவர் ஒருவரே!
எங்க வடார்க்காடு மாவட்டம், ஆரணி அருகே உள்ள அடையப்பாளையம் தான் தீட்சிதரின் திருஅவதாரத் தலம்! 1554 AD-இல் அவதாரம்!
திரிவிரிஞ்சிபுரம் மரகதவல்லி சமேத மார்க்கசகாய ஈஸ்வரர் அருளால், பாரத்வாஜ கோத்திரத்தில், ரங்கராஜத்வாரி என்பவருக்குப் பிள்ளையாய் அவதரித்தார் அப்பைய்யர். இயற்பெயர் விநாயக சுப்ரமணியம்!
இளவயதிலேயே பதினான்கு வித்தைகளையும் கற்று தேர்ந்த அப்பைய்யர், வேலூர் மன்னன் சின்ன பொம்முவின் வேண்டுகோளை ஏற்று அரசவைப் பண்டிதராக விளங்கினார்!
ஆனால் அங்கே இருந்த ஒரு திவானால் அவருக்கு இள வயதிலேயே பல சோதனைகள்!
தாதாச்சாரி என்ற அந்தத் திவான் வைணவப் பித்து தலைக்கேறியவன்!
பித்தா பிறை சூடியை அவன் மதப்பித்து மறைப்பித்து விடுமா என்ன?
ஆனால் மதம் என்னும் பேய் பிடித்தவரைப் பக்குவமாய்ச் சமயத்தில் சமைக்க, இறைவன் திருவருள் கனிய வேண்டும் அல்லவா?
அப்பைய்யர், காஞ்சி காமாட்சியம்மன் அருளால், மங்களாம்பிகை என்ற மங்கை நல்லாளை மணந்து கொண்டு, இல்லறத்தில் தர்மம் கண்டார்!
சங்கரர் துறவற தர்மம்! அவர் அடியொற்றிய அப்பைய்யர் இல்லற தர்மம்!
அப்பைய்யர் காஞ்சிபுரத்தில் செய்த சோம, வாஜபேய யக்ஞங்கள், அதில் தரப்பட்டதாகச் சொல்லப்படும் மிருகபலி குறித்து...சில சர்ச்சைகள் நிலவுகின்றன! அதனால் அவற்றைத் தற்காலிகமாகத் தள்ளி வைப்போம்!
மன்னன் சின்னபொம்மு அப்பைய்யரை வெகுவாக ஆதரித்து வந்தான். அப்பைய்யரின் பூரண ஞானமும் பக்தியும் கண்டு பொறாமை கொண்டார் தாதாச்சாரி!
வெறுமனே பொறாமை கூட காலியான பணப்பை போலத் தான்! அது பரவாயில்லை! ஆனால் பக்தியில் பொறாமை என்பது பொக்கிஷம் உள்ள பணப்பைத் திருட்டு அல்லவா? அதற்குத் தண்டனையும் அதிகம் தானே!
இதை அந்த வைணவன் உணர்ந்தானில்லை! தான் வணங்கும் பெருமாள் பிரசாதத்தையே கலப்படம் செய்யத் திட்டம் போட்டான்!
பக்தியில் பொறாமை காண்பது பகவானையே மறக்கச் செய்து விடுகிறது, பாருங்கள்!பெருமாள் தீர்த்தத்தில் நஞ்சைக் கலந்து, அப்பைய்யருக்கு அளிக்க ஏற்பாடு செய்தான்! குற்றமுள்ள நெஞ்சு...விஷ தீர்த்தம் கொடுக்கும் போது அர்ச்சகரின் கரங்கள் நடுங்கின. இதைத் தீட்சிதேந்திரர் கவனித்து விட்டார். நடந்ததை உணர்ந்து கொண்டார்.
ஆயினும், பெருமாள் பிரசாதத்தை அமைதியுடன் ஏற்றுக் கொண்டார். நஞ்சு உண்டு அருளிய நஞ்சுண்டேஸ்வரனைத் தியானித்தார் அப்பைய்யர்!
ஆலகால விஷத்தின் போது, பெருமாளும் பெருமானும் அருகருகே அல்லவா இருந்தார்கள்! அவர்கள் இருவரின் அருளும் ஒருசேரப் பெற்ற அப்பைய்யரை நஞ்சும் தீண்டுமோ?
அவர் நலமாக இருப்பதைக் கண்டு தாதாசாரியர் வெறுப்பு இன்னும் அதிகமாகத் தான் ஆகியது.
மன்னன் சின்னபொம்முவிடம் கோள் சொல்லி மனதைக் கலைத்தார் தாதாச்சாரி!
"உங்களை எப்போதும் இடது கரத்தால் தான் அப்பைய்யர் ஆசீர்வாதம் செய்கிறார்! இது நாட்டின் மன்னனையே அவமரியாதை செய்வது போல" என்று போட்டுக் கொடுத்தார்! மன்னனும் விசயம் அறியாமல், அய்யரிடம் சினந்து கொண்டான். அப்பைய்யர் அவன் திருப்திக்காகத் தன் வலக்கரத்தைச் சற்றே தூக்க, ஒரு சின்ன அசைவுக்கே, மன்னனின் துணிமணிகள் பற்றிக் கொண்டன!.
"மன்னா, அக்னி ஹோத்ரம் செய்து செய்து, அக்னி பகவான் அடியேன் கையில் ஆவாகனம் ஆகி விட்டான்! அதன் பொருட்டே வலக்கர ஆசீர்வாதம் நான் செய்வதில்லை! தவறாக எண்ணாதே" என்று சொல்லி அவனைத் திருத்தினார்!
அக்னி ஹோத்ரம் பரமம் பவித்திரமாகச் செய்வதன் பலனைக் கண்கூடாக உலகுக்குக் காட்டி அருளியவர் அப்பைய்யர்!
இதைக் கண்டும் மனம் மாறாத தாதாச்சாரி, இறுதியில் அப்பைய்யரைக் கொன்று விடுவதென்றே முடிவு கட்டி விட்டான்! கள்ளர்களை ஏவி விட்டு அவரை அழிக்க முனைந்தான்! ஆனால் அப்பைய்யர் கண் திறக்க கள்ளர் அனைவரும் சாம்பல் ஆயினர்! பின்னர் பரம கருணையால் அனைவரையும் உயிர்பித்துக் கொடுத்தார் அப்பைய்யர்! மாண்டவரே மீண்டதைக் கண்ட பின்னர் தான், தாதாச்சாரியும் இறுதியில் திருந்தினார். அப்பைய்யர் அவரைப் பட்சி தீர்த்தம் என்னும் ஊருக்குச் சென்று சிவபூசை செய்யச் சொல்லிக் கடைத்தேற்றினார்!
அப்பைய்யரும், சுவாமி தேசிகனும் நல்ல நண்பர்கள்! கருத்து மாறுபாடுகள் பற்றி அவர்களிடையே கடிதப் போர் எல்லாம் கூட நடக்கும்! :-)
சர்வ தந்த்ர ஸ்வதந்திரர் என்ற பட்டம் இருவருக்கும் உண்டு! சைவத்தில் அப்பைய்யர் சர்வ தந்த்ர ஸ்வதந்திரர்! வைணவத்தில் வேதாந்த தேசிகர் சர்வ தந்த்ர ஸ்வதந்திரர்! தேசிகரின் இன்னொரு பட்டமான "கவிதார்க்கிக சிம்மம்" என்பதை வழங்கியதே அப்பைய்யர் தான்! தேசிகரின் நாடகத்துக்கு அப்பைய்யர் ஒரு உரையும் எழுதியுள்ளார்.
அப்பைய்யர் சங்கரரைப் போலவே, பல தலங்களுக்கு திக்விஜயம் செய்தார்!
அவரின் மனைவியும், மாணவர்களும், அவரின் மூல சொரூபத்தைக் காட்டுமாறு ஒரு முறை வேண்டிக் கொண்டனர்; சித்தாசனத்தில் அமர்ந்து சமாதி நிலையானார் அண்ணல்!
அந்தச் சமயத்தில், உருத்திராக்கமும் திருநீறும் மேனியெங்கும் தரித்து, பல திவ்ய ஆயுதங்களுடன், சதாசிவ ருத்ர மூர்த்தியே அப்பைய்யரின் யோகத்தில் இருந்து கிளம்பி வெளிவந்ததைப் பலரும் தரிசித்து வியந்தார்கள்!
ஸ்ரீரங்கம் சென்று இறைவனின் புஜங்க சயனத்தைச் சேவிக்க எண்ணினார் அப்பைய்யர்!
ஆனால் அங்கிருந்த ஒரு வைணவக் கூட்டம் தீட்சிதரின் வருகையை விரும்பவில்லை! அவர்கள் எல்லாரும் ஒன்று கூடிக் கோயிலில் குழப்பத்தை ஏற்படுத்தவே, அர்ச்சகர்களும், மடத் தலைவர்களும் செய்வதறியாமல் திகைத்தார்கள்!
யாருக்கும் சங்கடம் கொடுக்க நினைக்காத அப்பைய்யர், சன்னிதிக்கு வெளியிலேயே நின்று கொண்டு அரங்க நகரப்பனைச் சேவித்து விடலாம் என்று நினைத்தார்! அரங்கனைச் சிவபெருமானாகத் தியானித்தார்.
கோயில் உள்ளிருந்த அரங்கன், அப்பைய்யரின் ஆத்ம பக்திக்கு இரங்கினான்! தன் மேல் சிவச் சின்னங்களைக் காட்டி அருளினான்!
முனியே, நான்முகனே, முக்கண்-அப்பா என்று அரங்கனை முக்கண் அப்பனாகவும் கண்டார் நம்மாழ்வார்!
அவர் சடாரியை வாங்கிக் கொள்பவர்கள், அவர் சொன்னதை மட்டும் தலையில் வாங்கிக் கொள்ளவில்லை போலும்! சிவச் சின்னங்களைக் கண்ட பட்டர்கள், அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்து, தீட்சிதேந்திரரை கோவிலுக்குள் வருமாறு அழைத்தார்கள்.
ஆதிசேடன் மீது பள்ளி கொண்டிருக்கும் கருமா முகில் அரங்கனைக் கண் குளிரச் சேவித்து ஆனந்தமடைந்தார் அப்பைய்யர்!
துவைதம், அத்வைதம், சுத்தாத்வைதம், விசிஷ்ட-அத்வைதம் என்று அத்தனைக்கும்
சதுர்மத சாரம் என்ற விளக்க நூல் எழுதினார் அப்பைய்யர்!
ஆதிசங்கரரின் அத்வைத விளக்கத்துக்குத் தனியாக மெருகேற்றினார்! சங்கரரின் பிரம்ம சூத்திர பாஷ்யத்துக்கு நுட்பமான விளக்கங்கள் கண்டார்! அத்வைதத்தைப் பல இடங்களில் நிலைநாட்டிச் சென்றார்!
இவர் சங்கரரின் மறு அவதாரமோ என்று எண்ணும் படிக்கு, அவர் விளக்கங்கள் அமைந்தன!
தன்னுடைய எழுபத்து இரண்டாம் வயதில், தன் இறுதியை அறிந்து கொண்ட அப்பைய்யர், தில்லையம்பலம் சென்று நடராஜப் பெருமானைக் கண்ணாரக் கண்டு தரிசித்தார்!
வீட்டில் அவருக்கு இறுதியாகக் கர்ண மந்திரங்கள் ஜபிக்கும் போது, நடராஜப் பெருமான் ஆலயத்திலும் அவர் சந்நிதிக்குள் நுழைவதைப் பார்த்தார்கள் தீட்சிதர்கள்!
வீட்டில் அவர் சிவ சாயுஜ்ஜியமாக, சிவ சுலோகத்தின் முதல் இரண்டடியை வாய்விட்டுச் சொல்லும் போதே, சீவன் சிவகதி அடைந்தது! மீதி சுலோகத்தை நீலகண்ட தீட்சிதர் (அன்னாரின் தம்பி பேரன்) உடனிருந்து முடித்துக் கொடுத்தார்!
அங்கோ....பொன்னம்பலத்தில்,
அவருக்குத் தரிசனம் செய்து வைக்கலாம் என்று எண்ணிய தீட்சிதர்கள், கற்பூரம் போன்ற பொருட்களைச் சேகரித்துக் கொண்டிருக்கையில், அப்பைய்யர் தில்லை அமபலத்தின் பஞ்சாட்சரப் படிகளில் விறுவிறு என்று ஏறிவிட்டார்!
சந்நிதியுள் சென்று நடராஜப் பெருமானுடன் இரண்டறக் கலந்தார்!
அப்பைய்யர் பரம சைவர்! எனினும் வைணவத்தின் பேரில் ஒரு விதமான துவேஷமும் கொள்ளாதவர்! அவருடைய வரதராஜ ஸ்தவம் என்னும் நூலே இதற்குச் சாட்சி!
வேதங்களில் கூறப்படும் உத்தமப் பரம்பொருள் சிவனோ, விஷ்ணுவோ என்பது வாதமே அல்ல! ஆனால் ஈசனை ஏசிப் பேசும் சிலரின் அவச்சொற்களை மறுத்துப் பேசவே தான் பிரயாசைப் படுவதாகச் சொல்கிறார்!
கிம் த்வீ சத் வேஷகாட நலகலி தஹ்ருதாம் துர்மதீ னாம் துருக்தீ:
பங்க்தும் யத்னோ மமாயம் ந ஹிபவது விஷ்ணு வி த்வேஷ சங்கா!சரி, தலைப்புக்கு இன்னும் வரலையே?
இந்த அந்தணோத்தமருக்கும் கருப்பண்ண சாமிக்கும் என்ன சம்பந்தம்?
அப்பைய்யரின் நண்பர்...அவர் பெயர் சோளிங்கபுரம் தொட்டாச்சாரியார்! மிகவும் ஆழ்ந்த நரசிம்ம உபாசகர்!
ஒரு முறை இருவரும் மதுரை அழகர் கோயில் சந்நிதிக்குச் செல்லும் போது...அங்கே முதலில் பதினெட்டாம் படி கருப்பை வணங்கிச் சென்றனர்! கருப்பண்ண சாமியின் முன்பு பொய்யே உரைக்க முடியாது! வழக்கு விசாரணை வித்தகர் அல்லவா அந்தப் பதினெட்டாம் படிக் கருப்பு! நண்பரைச் சீண்டி விளையாட எண்ணினார் தொட்டாச்சாரியார்!
நண்பனின் கையைப் பிடித்து, கருப்பண்ணசாமியின் முன்பு வைத்து, "அப்பைய்யரே, எங்கே சொல்லுங்கள்! வேதங்களில் பரம், பரப்பிரும்மம் என்று பரத்துவமாக யாரைச் சொல்கிறது என்று சொல்லுங்கள் பார்ப்போம்?" என்று கேட்க...
புரிந்து கொண்ட அப்பைய்யர், சிரித்துக் கொண்டே...
"வேதங்களில் கூறப்படும் உத்தமப் பரம்பொருள் சிவனோ, விஷ்ணுவோ என்பது ஒரு வாதமே அல்ல! சங்கர பாஷ்யமே,"
நாராயண பரோவக்யாத் அண்டம் அவயக்த சம்பவம்" என்றல்லவா துவங்குகிறது! அப்படி இருக்க, ஆதிசங்கரரையா நான் மறுத்துச் சொல்வேன்?
* பரம்பொருளே, சிவனாகவும் விஷ்ணுவாகவும் இருக்கிறான்! அந்தப் பரம் பொருளுக்கு நாராயணன் என்னும் திருநாமம்!
* நாராயணன் என்பவன் சைவமும் அல்ல! வைணவமும் அல்ல!
* அந்த நாராயணனே பரப்பிரம்மம்!
* நாராயணஹ பரஹ என்பதே வேதப் ப்ரமாணம்!"
என்று பதினெட்டாம் படிக் கருப்பின் சன்னிதியில் கையறைந்து சத்திய வாக்கு செய்தார் அப்பைய்யர்!
சிவாய விஷ்ணு ரூபாய, சிவ ரூபாய விஷ்ணவே
சிவஸ்ச ஹிருதயம் விஷ்ணோ, விஷ்ணோஸ்ச ஹிருதயம் சிவ!
அபேதம் தர்சனம் ஞானம்! மகான் அப்பைய்யர் திருவடிகளே சரணம்!