ஒரு பெரியவர் ஒருவர் துறவு நிலையை மேற்கொண்டு தம் விரதங்களையும், ஜப, தபங்களையும் விடாமல் காப்பாற்றி வந்தார். விதிமுறைகளை மீறாமல் கடுமையாக விரதங்களை அனுசரித்து வந்தார். விண்ணில் ஆதவன் உதயத்தின் பின்னர் நீர் கூட அருந்தாமல் கடுமையாக விரதம் அனுஷ்டித்து வந்தார். பார்த்தார் இறைவன். இத்தகையவருக்கு ஏதாவது கொடுக்கணுமேன்னு தோன்றியது இறைவனுக்கு. என்ன கொடுப்பது? அவரோ எதுவும் வேண்டாதவராய் இருந்தார். எதிலும் பற்றில்லை. பற்றில்லாதவர்க்கு என்ன கொடுப்பது? அவருடைய நெறியைப் போற்றினாலே போதும் அல்லவா? விண்ணில் தோன்றியது ஒரு விண்மீன் இறை அருளால். அந்த விண்மீன் பகலிலும் ஒளிவிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அதைக் கண்ட துறவி இறைவன் செய்த அற்புதங்களினால் மனம் மகிழ்ந்து தினமும் அந்த விண்மீனைப் பகலிலும் தரிசித்து வந்தார்.
ஒரு நாள் அந்தத் துறவி பக்கத்து மலை உச்சிக்குப் போக நினைத்தார். அடுத்த நாள் காலையிலேயே அங்கே செல்லக் கிளம்பினார். அப்போது துறவி இருந்த ஊரிலேயே இருந்த ஒரு சிறுமி, துறவியைப் பார்த்துக் கேட்கின்றாள்:"தாத்தா, எங்கே போறீங்க, நானும் வரேனே உங்களோடே?" என்று கேட்க, துறவியோ, தான் மலை உச்சிக்குப் போகப் போவதாயும், சிறுமியால் இயலாத ஒன்று என்றும் சொல்கின்றார். சிறுமி கேட்பதாய் இல்லை. அடம் பிடித்தாள். அழுதாள், புரண்டாள்,. வேறு வழியில்லாத துறவி அவளையும் உடன் அழைத்துச் செல்கின்றார். வேறு வழியில்லை எனக் கண்ட துறவி அவளையும் உடன் அழைத்துச் செல்கின்றார்.
இருவரும் மலைப்பாதையில் மேலே ஏற ஆரம்பிக்கின்றார்கள். கொஞ்ச தூரம் போகப் போக வெயில் அதிகமாகி, தண்ணீர் தாகம் எடுக்கின்றது. சிறுமி துறவியிடம் தண்ணீர் கேட்க துறவியும் சிறுமிக்குத் தண்ணீர் கொடுக்க, சிறுமியோ துறவியும் குடிச்சால் தானும் குடிப்பதாய் அடம் பிடிக்கின்றாள். ஆனால் கடும் விரதம் இருக்கும் துறவியோ சூரிய உதயம் ஆனதும் எதுவும் சாப்பிட மாட்டார். ஆகவே சிறுமியிடம் சொல்கின்றார். "நான் விரதம் இருக்கேன், குழந்தை! இப்போ எதுவும் சாப்பிட மாட்டேன்.நீ தண்ணீர் குடிச்சுக்கோ!" என்று சொல்கின்றார். ஆனால் சிறுமி கேட்காமல் மீண்டும் அழுது, புரண்டு, பிடிவாதம் பிடிக்கத் துறவி பலவகையிலும் அவளைச் சமாதானம் செய்து பார்த்தும் முடியவில்லை. விரதம் முக்கியமா? சிறுமியின் தாகம் தீர்க்கறது முக்கியமா? தர்மசங்கடமாய் இருந்தது துறவிக்கு. பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவராய்த் தாமும் நீர் அருந்தினார். அந்தப் பெண்ணும் பின்னர் தண்ணீர் குடித்துத் தாகம் தீர்த்துக் கொள்கின்றாள்.
பயணம் தொடர்ந்தது. துறவி தலை குனிந்தது. நிமிர்ந்து பார்க்கத் துணிவில்லை அவருக்கு. விரத பங்கம் செய்து நீர் அருந்திய தமக்கு இறைவன் என்ன கொடுப்பான்? ஒன்றும் கொடுக்க மாட்டான். ஆகாயத்தைப் பார்த்தால் என்ன இருக்கும்? ஒன்றும் இருக்கப் போவதில்லை. விரதமும் போச்சு, அத்தோடு விண்மீனும் போயிருக்கும். அவ்வளவு தான் என்ற முடிவுக்கு வந்தார். தலை குனிந்த வாறே நடந்து வந்தார் துறவி. உச்சிக்குப் போனார்கள் இருவரும். ஒரு மரத்தடியில் களைப்போடு அமர்ந்தார்கள். அப்போது அந்தக் குழந்தை துறவியிடம், "தாத்தா, இதோ பார்!" என்றது. துறவியும் நிமிர்ந்து பார்க்க விண்ணில் இப்போது இரு விண்மீன்கள் முன்னைவிடப் பளீரென ஒளி வீசப் பக்கத்தில் பார்க்கின்றார் துறவி, யாரையும் காணோம்.