Wednesday, September 24, 2008

யார் புத்திசாலி குருவா? சிஷ்யனா?

அசுரர்கள் குருவான சுக்ராசாரியாருக்கு சஞ்சிவினி மந்திரம் தெரிந்ததால் போரில் மாண்டுபோன அசுரர்களை உயிர்பெறச்செய்து தேவர்களுக்கு கஷ்ட்த்தை கொடுத்துவந்தார்.தேவர்கள் இந்திலிருந்து எப்படி மீள்வது என்று யோஜித்து தங்கள் குருவான பிருஹஸ்பதியை அணுகினார்கள்.அவரும் தன்க்கு அந்த மந்திரம் தெரியாது,ஆனால் தன் மகன் கசனை கேட்டுப் பார்க்கலாம் என்றார்.தேவர்களும் அதன்படியே கசனை அணுகி சுக்க்ராசாரியாரிடம் சென்று சஞ்ஜீவினி மந்திரத்தை கற்றுவரும்படி கேட்டுக்கொண்டார்கள்.கசன் அழகுள்ளவன் அதனால் சுக்ராசாரியாரின் மகளான தேவயானியால் விரும்பப்படுவான் சுக்ராசாரியாருக்கு மகள் பேரில் பாசம் அதிகம் அதனால் எப்படியாவது கசன் சஞ்ஜிவினி மந்திரத்தை கற்றுக் கொண்டுவிடுவான் என்பது தேவர்களின் எண்ணம்.
கசனும் தேவர்களின் வேண்டுகோளை ஏற்று சுக்ராசாரியாரிடம் சென்று "நான் பிரஹஸ்பதியின் குமாரன் பிரும்மச்சரிய விரதம் இருந்து உங்களிடம் கற்றுக்கொள்ள வந்திருக்கிறேன் என்னை சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள்"" என்றான். அவரும் அவனை உடனே சீடனாக ஏற்றூக்கொண்டார். அந்தகாலத்தில் ஒர் வழக்கம்,யாராவது ஒருவர் குருவை அணுகி தன்னைச் சீடனாக ஏற்றுக்கொள்ளச் சொன்னால் மறுக்காமல் ஏற்றுக்கொள்ளுவார்கள்.

கசனும் மிகவும் கவனத்துடன் குருவுக்கு பணிவிடைகள் செய்து குருவின் மகளான தேவயானியையும் நன்றாக சந்தோஷப்படுத்திவந்தாலும் விரதத்தை விடவில்லை.கொஞசகாலம் இப்படியே சென்றது. அரக்கர்களுக்கு ஏனோ ஒரு சந்தேகம் குசன் சஞ்ஜீவினி மந்திரத்தை எப்படியாவது குருவிடமிருந்து கற்றுக் கொண்டு போய் தேவர்களுக்கு கொடுத்து விடுவான் என்று. ஆகவே அவர்கள் வேலையை காட்ட ஆரம்பித்தார்கள்.குசன் காட்டுக்குள் சென்று குருவிற்கு பசுக்களை மேய்க்கச் சென்றபோது அவனைக் கொன்று அவன் உடலை நாய்களுக்கு உணவாக போட்டு விட்டார்கள்.மாடுகள் திரும்பிவந்தும் கசன் வராததால் தேவயானி கலக்கமடைந்து தந்தையிடம் கூறினாள்.குரு ஞானதிருஷ்டியால் நடந்தவற்றை அறிந்து சஞ்ஜிவினி மந்திரத்தை பிரயோகித்து குசனை உயிர்பெறச்செய்து விட்டார்.மறுபடியும் ஒருநாள் குசன் காட்டுக்குச் சென்றபோது அசுரர்கள் அவனைக் கொன்று சாம்பலைக் கடலில் கரைத்து விட்டார்கள். தேவயானியின் முயற்சியால் மறுபடியும் குரு அவனை சஞ்ஜீவினி மந்திரத்தின் உதவியால் உயிர்பெறச்செய்தார்.அசுரர்கள் கசனை விட்டபாடில்லை. மூன்றாவது தடவையாக அவனைக் கொன்று அவன் சாம்பலை மதுவில் கரைத்து சுக்ராச்சாரியாருக்கே கொடுக்க அதைக் அவரும் குடித்து விட்டார். கசன் அவர் வயிற்றில் ஐக்கியமானான். குசனின்மீது ஒருதலைக்காதல் கொண்ட தேவயானி தன் தந்தையிடம் மறுபடியும் முறையிட்டு குசனை உயிர்பித்துத்தர வேண்டினாள்
மீதியை அடுத்தபதிவில் பார்க்கலாமா ?

Thursday, September 18, 2008

நீலகண்ட தீக்ஷதர்....

அப்பைய தீக்ஷிதர் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். அவரது தம்பியின் பேரன் நீலகண்ட தீக்ஷிதர். இவர் மதுரையில் நாயக்க அரசுகள் இருந்த காலத்தில் மந்திரியாக இருந்தவர். அப்பைய தீக்ஷதர் 72 வயது வரை வாழ்ந்தவர், அப்போது நீலகண்ட தீக்ஷிதரது வயது 8. அப்பைய தீக்ஷதருக்கு குழந்தை நீலகண்டன் மிது அலாதி ப்ரியம்.அப்போதெல்லாம் ஸம்ஸ்கிருதம் சிறுவயதிலிருந்தே கற்று தரப்பட்டு, அதிலேயே பேசுவது வழக்கமாயிருந்த காலம்.

தீக்ஷதர் தனது கடைசிக் காலத்தில் குழந்தையிடம் விளையாட்டாக "ஆபதி கிம்கரணீயம்" என்று கேட்டாரம். அதற்கு பதிலாக நீலகண்ட குழந்தை, "ஸ்மரணாயாம் சரண யுகளம் அம்பாயா" என்று சொன்னதாம். "ஆபதி கிம்கரணீயம்" என்றால் "ஆபத்து வந்தால் என்ன செய்ய வெண்டும் " என்று அர்த்தம். இதற்கு குழந்தை சொன்ன பதிலின் பொருள் என்னவென்றால், 'பரதேவதையின் பாதாரவிந்தத்தை நினைக்க வேண்டும்' என்பது. இத்துடன் நின்றதா இந்த சம்பாஷணை என்றால் இல்லை. அடுத்ததாக அப்பையர் "தத் ஸ்மரணம் கிம் குருதே" என்று கேட்கிறார், அதாவது 'அப்படி நினைத்தால் என்ன பலன்'. அதற்கு குழந்தை 'ப்ரும்மாதீன பி இங்கரீ குருதே' அதாவது பராம்பிகையின் பாதாரவிந்தத்தை ஸ்மரணித்தவனுக்கு ப்ரும்மாதி தேவர்கள் சேவகர்கள் ஆகிறார்கள்' என்று பொருள். இவ்வாறாக சிறு குழந்தைப் பருவத்திலேயே அம்பிகையருளால் வாக்விலாஸத்தைப் பெற்றவர் நீலகண்ட தீக்ஷதர்.

இவர் ஆனந்த ஸாகரஸ்தவம் என்று மீனாக்ஷியம்மன் மேல் ஒர் ஸ்லோகம் பண்ணியிருக்கார். அதிலே, "த்வத் பாதபக்தி ரஹிதோம் மம மாஸ்து வம்ச: த்வத் சேவயா விரஹிதம் மம மாஸ்து சாயு" என்று சொல்கிறார். இதன் பொருள்,அம்பிகே!, அடுத்ததாக எனக்கு எந்த பிறவி வேண்டுமானாலும் வரலாம், எங்கு வேண்டுமானாலும் பிறக்கலாம், அது என் கையில் இல்லை.ஆனால் ஒரேயொரு வேண்டுகோள் என்று சொல்லி, 'உன்பாதார விந்தத்தில் பக்தியில்லாத வம்சத்தில் எனக்கு அடுத்த பிறவி வேண்டாம்' என்கிறார். இவர் சாக்தர், ஆயினும் பராசக்தியை மட்டுமில்லாது எல்லா தெய்வங்ளையும் போற்றி ஸ்லோகங்கள் செய்திருக்கிறார். ஒரு இடத்தில் அம்பாளை தாயாராக விளித்து, உனக்கும் எனக்கும் தாய்-குழந்தை என்ற சம்பந்தம் இருக்கிறது. நான் என்ன தவறு செய்தாலும், அசட்டுத்தனமாக, அ-விவேகமாக உன்னை நினைக்காதிருந்தாலும் நீ என் காதைப் பிடித்து இழுத்து உன்பக்கதிருத்திக் கொள்ள வேண்டும் என்று உரிமையுடன் சொல்கிறார்.


மதுரையை நாயக்க அரசர்கள் ஆண்ட காலத்தில், மந்திரியாக பணியாற்றிய சமயத்தில் இவரது மேற்பார்வையில் கட்டப்பட்டதுதான் புதுமண்டபம். இங்குள்ள சிற்பங்கள் மிகுந்த வேலைப்பாட்டினை உடையவை. சாதாரணமாக நாயக்க அரசர்கள் தமது சிலைகளையிம் தமது துணைவியார் சிலைகளையும் தாம் நிவந்தமளித்து சிறப்புச் செய்யும் கோவில்களில் நிறுவது வழக்கம். அது போல புது மண்டபத்திற்கு சிற்பங்கள் செதுக்கும் சமயத்தில் வணங்கிய நிலையில் தமது துணைவியாருடன் கூடிய தமது சிலையினையும் வடிக்க உத்தரவிடுகிறார் அரசர். [இன்றும் இச்சிலைகளை அங்கே காணலாம்]. தலைமை சிற்பியே அரசர், மற்றும் ராணிகளது சிலையினை வடிக்கிறார். பட்டத்துராணி சிலை வடிக்கையில் அச்சிலையின் முழங்காலுக்கு மேலாக கல் பெயர்ந்துவிடுகிறது. மிகுந்த கவலையுற்ற சிற்பி வேறு சிலை மீண்டும் செய்ய கல் தேர்ந்தெடுக்க முயல்கிறார். மேற்பார்வை பார்க்க வந்த நீலகண்ட தீக்ஷதர், இதை அறிந்து சிலையினை பார்த்த பின், சிற்பியிடம் அரசிக்கு அங்கு மச்சம் இருப்பது உண்மைதான், எனவே அச்சிலை அவ்வாறே இருக்கட்டும் என்று கூறிச் சென்றுவிடுகிறார். அரசர் சிலையை பார்வையிட வருகையில் இச்செய்தி சொல்லப்பட்டு அரசியின் சிலையாக பின்னப்பட்ட அச்சிலையே இருக்கலாமா என்று கேட்க, அரசியின் அந்தரங்கம் எப்படி தெரிந்தது என அரசர் நீலகண்டர் மீது மிகுந்த கோபம் அடைகிறார். அரசியை தவரான கண்ணோட்டத்தில் பார்த்தமைக்காக அவருக்கு தண்டனை அளிக்க முடிவு செய்து சபா மண்டபத்திற்கு வரவழைக்கிறார்.

சேவகர்கள் நீலகண்டர் இல்லத்துக்கு வந்த சமயத்தில் அவர் நித்ய-பூஜையில் இருக்கிறார். அப்போது அரச சேவகர்கள் தமக்காக காத்திருப்பதை உணர்ந்து, தமது ஆத்ம சக்தியிலேயே அரசனது எண்ணத்தை அறிந்து, அவன் தரும் தண்டனைக்கு சமமாக தாமே தமது பூஜையில் இருக்கும் சுடரொளியால் தமது கண்களை அவித்துக் கொள்கிறார். பின்னர் அரச சேவகர்களுடன் அரசவை வருகிறார். யாரும் ஏதும் சொல்லும் முன்னரே தாமாக அரசனது மனதில் இருப்பதை அறிந்து, அவன் தரும் தண்டனையை தாமே அளித்துக் கொண்ட நீலகண்டரது செயலைக் கண்ட அரசன், அவரது திருஷ்டாந்தத்தையும், தமது தவறை நினைத்து வருந்துகிறான். அப்போது தீஷதர் அன்னை சன்னதிக்குச் சென்று பாடியதுதான் ஆனந்த ஸாகர ஸ்தவம். பாடி முடித்தபின் அன்னை மீனாக்ஷியருளால் தமது பார்வை கிடைக்கப் பெற்றார் தீக்ஷதர்.


வெளியில் அதிகம் தெரியாதவாறு இருப்பினும் இவரது சாக்த குரு பரம்பரை இன்னும் தொடர்கிறது. தமது அமைச்சுப்பதவியை துறந்து, இறுதிக் காலத்தில் திருநெல்வேலி அருகில் வாழ்ந்து இறைவனடி சேர்ந்தார் என்று சொல்கின்றனர்.

Thursday, September 11, 2008

ஸ்ரீஹயக்ரீவர் ஜெயந்தி இன்று! ஓணம், திருவோணம்!

வாதிராஜர் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட பின்னர் தியானத்தில் அமர்ந்தார். அவர் கண்களுக்கு வெள்ளைக் குதிரையாக வந்து நிலத்தில் திருவிளையாடல் புரிந்தது ஸ்ரீ ஹயக்ரீவரே என்பது புரிந்தது. தியானம் கலைந்தது. நிலத்து உரிமையாளரோ அற்புதம் செய்த குதிரையை மீண்டும் காணவேண்டும் என ஆசைப் படுகின்றார். வாதிராஜருக்கு உண்மை நிலைமை புரிய, இனி அந்தக் குதிரை கண்ணில் காண முடியாது எனப் புரிய, நிலத்துக்காரரை எச்சரிக்கின்றார். விபரீத ஆசை வேண்டாம் என்றும், அந்தக் குதிரையை இனியும் பார்க்க முயன்றால் ஒருவேளை கண்பார்வையே போய்விடும் என்றும் சொல்லுகின்றார். நிலத்துக் காரரோ, பிடிவாதமாய்க் கண் போனாலும் பரவாயில்லை, என்று அன்று இரவு மீண்டும் நிலத்துக்குப் போய்க் குதிரையின் வரவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்க, குதிரையும் வந்தது. அதைப் பார்த்ததுமே அவர் கண்பார்வையும் போனது. ஆனாலும் நிலத்துக்காரர் கவலைப்படாமல் இறைவனின் அவதார சொரூபத்தைத் தரிசிக்க முடிந்ததை எண்ணி மன மகிழ்ந்து இருந்தார். ஆனால் ஸ்ரீ வாதிராஜர் அவ்வாறு இருக்க முடியாமல் ஸ்ரீ ஹயக்ரீவரை வேண்டிக் கொள்ள, நிலத்துச் சொந்தக் காரரின் கண்பார்வை திரும்புகின்றது.

தெய்வீகக் குதிரையின் காலடி பட்ட இந்த எனது நிலம், இனிமேல் ஸ்ரீ மடத்துக்கே சொந்தம் என்று நிலத்துச் சொந்தக் காரர் அந்த நிலத்தை ஸ்ரீமடத்துக்கே கொடுக்கின்றார். அன்று முதல் அந்த நிலத்தில் விளையும் கடலையை வேகவைத்து வெல்லம், தேங்காய் துருவல் சேர்த்து, ஸ்ரீஹயக்ரீவருக்கு நைவேத்தியம் செய்யும் வழக்கத்தை ஆரம்பித்து வைக்கின்றார் ஸ்ரீவாதிராஜர். இது ஹயக்ரீவ பண்டி என்று அழைக்கப் படுவதாய்த் தெரிகின்றது. (எங்கே பெண்களூருக் காரங்க, வந்து இது சரியா, தப்பானு சொல்லிட்டுப் போங்க, பார்க்கலாம்.)

அம்பி, உடனேயே கடலையை வேக வைக்கக் கிளம்பவேண்டாம், இன்னும் கொஞ்சம் இருக்கு இதிலே! அதுக்குள்ளே கடலை போட அவசரமா?????

ஸ்வாமிக்காகத் தயாரிக்கப் பட்ட நைவேத்தியத்தை ஒரு தட்டில் வைத்துத் தன் இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு தன் தலைக்கு மேல் வைத்துக் கொள்ளுவார் ஸ்ரீவாதிராஜர். அவருக்குப் பின்புறமாய் அந்த வெள்ளைக் குதிரை வடிவில் ஸ்ரீஹயக்ரீவர் வந்து , தனது முன்னங்கால்கள் இரண்டையும் வாதிராஜரின் தோள்களில் வைத்துக் கொண்டு, நைவேத்தியத்தை உண்ணுவார். ஸ்ரீவாதிராஜருக்கும் அதில் கொஞ்சம் மீதி வைப்பார். இறைவனின் உண்மையான பிரசாதம் ஆன அதை ஸ்ரீவாதிராஜரும் தினமும் உண்டு வந்தார். இது அன்றாடம் நடக்க ஆரம்பித்தது. எங்கே போனாலும் ஒரு சிலருக்கு ஒரு சில விஷயங்கள் பிடிக்காமல் போகுமல்லவா?? உலக நியதிக்கு ஏற்ப இப்போது ஸ்ரீமடத்திலும் சிலருக்கு வாதிராஜரின் அருகே வெள்ளைக் குதிரை வடிவில் ஸ்ரீஹயக்ரீவரே நேரில் வந்து உண்ணுவதை நம்ப முடியாததோடு அல்லாமல், அதனால் வாதிராஜரின் கீர்த்தி அதிகரிப்பதைக் கண்டு பொறாமையும் உண்டானது. ஆகவே வாதிராஜர் தினமும் நைவேத்தியக் கடலைப் பிரசாதத்தை உண்ணுவதைத் தெரிந்து கொண்ட அவர்கள் ,அந்த நைவேத்தியத்தில் விஷம் கலந்தால், வழக்கப் படி மீதியை உண்ணும்போது விஷம் கலந்த கடலையை உண்ணும் வாதிராஜர் இறந்து போய் விடுவார் என்று எண்ணிக் கொண்டு, ஒரு நாள் நைவேத்தியத்தில் விஷத்தைக் கலந்து வைக்கின்றார்கள்.

ஆனால் தன் பக்தன் ஒருவன் அநியாயமாய் இறப்பதைக் கண்டு கொண்டு இறைவன் சும்மாவா இருப்பான்?? பக்தனை எப்பாடு பட்டாவது காக்க மாட்டானா?? ஆகவே விஷயத்தைப் புரிந்து கொண்ட குதிரை வடிவில் வந்த ஸ்ரீஹயக்ரீவர் அன்றைய பிரசாதத்தை முழுதும் உண்டுவிட்டு, மயங்கிக் கீழே விழுந்தார். ஏதோ நடந்திருக்கின்றது என்பதைப் பிரசாதம் மிச்சமில்லாதபோதே புரிந்து கொண்ட வாதிராஜர் குதிரை மயங்கிக் கீழே விழவும், இறைவனைத் தியானித்துக் கொண்டு, “வாதிராஜ குள்ளா” என்னும் ஒருவகைக் கத்தரிக்காயை வேகவைத்துக் குதிரைக்குக் கொடுக்க விஷம் நீங்கிய குதிரை துள்ளிக் குதித்தது. ஒவ்வொரு வருஷமும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் வரும் ஹயக்ரீவரின் ஜெயந்தி நாள் அன்று இந்த நைவேத்தியத்தை ஸ்ரீஹயக்ரீவருக்கு அனனவருமே செய்து வழிபடலாம். ஸ்ரீவாதிராஜர் அதன் பின்னர் பல்லாண்டுகள் வாழ்ந்திருந்து ஸ்ரீகிருஷ்ணனுக்கும், ஹயக்ரீவருக்கும் தொண்டுகள் பல புரிந்து, கி.பி. 1600-ம் ஆண்டு “ஸோதே” மடத்தில் பிருந்தாவனப் பிரவேசம் செய்தார்.

குரு பரம்பரை சுலோகங்கள்!

குரு பரம்பரை-ன்னா என்னா? எல்லாருக்கும் தெரிந்திருக்கும்!
ஆதி குரு முதல், இன்று வரை,
வாழையடி வாழையாக,
பரம்பரை பரம்பரையாக, வந்துள்ள ஆசார்ய பெருமக்கள்!

எந்தை தந்தை, தந்தை தம் மூத்தப்பன் என்று ஏழ்ப்படி கால் தொடங்கி...வந்து வழி வழி ஆட்கொண்டு அருளும் குரு பரம்பரை!
அந்த குரு பரம்பரை சுலோகங்களை இன்று தியானிப்போம்!


சதாசிவ சமாரம்பாம்
சங்கராசார்ய மத்யமாம்
அஸ்மத் "ஆசார்ய" பர்யந்தாம்
வந்தே "குரு பரம்பராம்"


சதா சிவ பெருமான் முதற்கொண்டு
ஆதி - சங்கராச்சார்யர் இடைக்கொண்டு
வழிவழி வந்த குருக்கள் இன்றளவும்
அத்தனை ஆசார்யர்களுக்கும் வணக்கங்கள்!


லக்ஷ்மிநாத சமாரம்பாம்
நாத யாமுன மத்யமாம்
அஸ்மத் "ஆசார்ய" பர்யந்தாம்
வந்தே "குரு பரம்பராம்"


திருமகள், திருமால் முதற்கொண்டு
நாதமுனிகள், ஆளவந்தார் இடைக்கொண்டு
வழிவழி வந்த குருக்கள் இன்றளவும்
அத்தனை ஆசார்யர்களுக்கும் வணக்கங்கள்!

குருப்யோ நமஹ!
நீங்களும் இரண்டு சுலோகங்களையும் உரக்கச் சொல்லுங்கள்!
இந்த சுலோகங்கள் திருமடங்களில் சொல்லப்படுகிறதா என்ற மேலதிக தகவல்களைப் பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்!

பிகு:
ஒவ்வொரு வியாழனும் பதிவைத் தவற விட வேண்டாம் என்று மெளலி அண்ணா ஒரு முறை பேசும் போது சொன்ன ஞாபகம்!
கீதாம்மா வாதிராஜர் தொடரைப் போடுகிறார்கள்; ஹயக்ரீவ ஜெயந்தியான நாளைக்கு அவர்கள் பதிவை நிறுத்தி வைத்துள்ளார்கள்! அதான் இந்த Filler Post!

Monday, September 1, 2008

கீதாசாரியனா??? ஜகதாசாரியனா??? யார் உண்மையான ஆசாரியன்?

இந்தப் புண்ணிய பூமி கர்ம பூமி, எனவும், ஞானபூமி எனவும் சொல்லப் படுகின்றது. இந்த பாரதத் திருநாட்டை நோக்கி ஞானகுருவான தட்சிணாமூர்த்தி ஸ்வரூபமாகத் திருக்கைலையில் ஈசன் அமர்ந்திருக்கும் கோலத்தில் கைலை தரிசனம் காணலாம். அதனாலேயே ஞானபூமி என்று சொன்னார்களோ என்னவோ? ஆனாலும் ஆதிகுரு தட்சிணாமூர்த்தி என்றாலும், அவர் உபதேசித்தது மெளனத்தின் மூலமே. மெளன குருவான அவர் பேசாத குருவாக இருப்பதால், நம்மிடம் பேசி உபதேசம் பண்ணிய ஒரே குரு, முக்கியமாய் அத்வைத வேதாந்திகளுக்கு ஸ்ரீமந்நாராயணனே ஆசார்யன் ஆவான். அவர்களின் கர்மாக்களின் மந்திரங்களின் முக்கிய இடைவெளியில், "கிருஷ்ண, கிருஷ்ண," என்றோ, "கோவிந்தா, கோவிந்தா" என்றோ அல்லது "நாராயணா, நாராயணா" என்றோ சொல்லி, செய்வதை அனைத்தையும் அவனுக்கே அர்ப்பணிப்பார்கள்.

இந்த ஸ்ரீமந்நாராயணனின் பிள்ளையான பிரம்மா, பிரம்மாவின் பிள்ளை வசிஷ்டர், வசிஷ்டரின் மகன் சக்தி, அவர் மகனும் விஷ்ணு புராணம் எழுதியவரும் ஆன பராசரர், பராசரரின் பிள்ளை வியாசர், வியாசரின் மகன், சுகர், சுகர் பிரம்மச்சாரி. பிறந்ததில் இருந்தே பரப்பிரம்மம். இவருக்குக் கிளி மூக்கும், முகமும் வந்த கதை அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த சுகர் திருமணம் செய்து கொள்ளாததால், இவருக்குச் சீடர் மட்டுமே உண்டு. அவர் தான் கெளடபாதர். கெளடபாதரோ, சந்யாஸி. ஆகவே இவருக்கும் சிஷ்ய பரம்பரையே வருகின்றது. இந்த சிஷ்ய பரம்பரையில் வந்தவரே கெளடபாதரின் சிஷ்யர் ஆன கோவிந்த பகவத்பாதர். கோவிந்த பகவத்பாதரின் சிஷ்யரே ஆதிசங்கரர். சங்கரருடைய நான்கு சிஷ்யர்கள் ஆன, பத்மபாதர், தோடகர், ஹஸ்தாமலகர், ஸுரேஸ்வரர் போன்றவர்கள் பற்றியும், அவர்கள் சார்ந்த மடங்கள் பற்றியும் ஓரளவு அறிவோம். இப்படிப் பார்த்தால் நம் ஆசாரியர் என்பவர் ஆதிகுருவான விஷ்ணுவின் சாட்சாத் அவதாரம் ஆன வியாசரே ஆவார். "முநீநா மப்யஹம் வ்யாஸ:" என்று கீதையில் கீதாசார்யனே சொல்லி இருக்கின்றான். மேலும் விஷ்ணு சஹஸ்ரநாமாவளியில் "வ்யாஸாய விஷ்ணு ரூபாய" "வ்யாஸ ரூபாய விஷ்ணவே" என்றும் வருகின்றது. இந்த வேத வியாஸர் அவதாரம் காரணத்துடனேயே ஏற்பட்டது. பராசர முனிவர், குறிப்பிட்ட நேரத்தில் மச்சகந்தியுடன் கூடியதன் விளைவாக ஒரு த்வீபத்தில் தோன்றியவர் வேத வியாஸர். தீவில் பிறந்ததால் அவருடைய பெயர் "த்வைபாயனர்" என்றும், கறுப்பாக இருந்தமையால், "கிருஷ்ணர்" என்றும், இரண்டையும் சேர்த்தே வேத வியாஸரை "கிருஷ்ண த்வைபாயனர்" என்றும் சொல்லுவதுண்டு. கலி தோன்றப் போகின்றது என்பதாலேயே, வேதங்களைக் காத்து அவற்றைத் தொகுத்து மக்களைச் சென்றடையவேண்டியே பகவான் எடுத்த ஒரு அவதாரமே, விஷ்ணுவின் அம்சமே வியாஸர் என்றும் சொல்லுவார்கள். இந்த வியாஸர் வேதங்களைத் தொகுத்தமையால், "வேத வியாஸர்" என்ற பெயர் பெற்றார். மும்மூர்த்திகளின் சொரூபமாயும் வேத வியாஸரைச் சொல்லுவதுண்டு. வியாஸரே "குரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு தேவோ மஹேஸ்வர:" என்றும் திரிமூர்த்திகளும் சேர்ந்தவர் என்றும் சொல்லுவது உண்டு.

அதுவரையிலும் கங்குகரை இல்லாமல் இருந்த வேதங்கள் நான்காய்ப் பிரிக்கப் பட்டது வியாஸராலேயே. தம் சிஷ்யர்களில் பைலரிடம் ரிக்வேதத்தையும், வைசம்பாயனரிடம் யஜுர்வேதத்தையும், ஜைமினியிடம் சாமவேதத்தையும், ஸுமந்துவிடம் அதர்வண வேதத்தையும் உபதேசித்து, இவை பரவ வழி வகுத்துக் கொடுத்தார். இதே வியாசர் தான் புராணங்களையும் பதினெட்டாய்த் தொகுத்து அவற்றையும், மஹாபாரதத்தையும் ஸூத முனிவருக்கு உபதேசித்து அவர் மூலம் இவை பரவ வழி வகுத்தார். இந்த ஸூத முனிவர் வழியாய் வந்தவையே நம் பதினெண் புராணங்கள். இந்த ஸுத முனிவர் பிறப்பால் பிராமணர் இல்லை, தேரோட்டி மகன் என்பதும் குறிப்பிடத் தகுந்தது. பிரம்மதத்துவத்தைச் சொல்லும் பிரம்ம ஸூத்திரத்தையும் வேத வியாஸர் ஏற்படுத்தி, சுகப்பிரம்ம ரிஷிக்கு அவற்றை உபதேசித்தார்.

இந்த பிரம்ம ஸூத்திரத்துக்குப் பாஷ்யம் எழுதியவர்களிலேயே நாம் இன்றைக்கும் பின்பற்றும் ஆசாரிய பரம்பரைக்கு வழி வகுத்த சங்கரர், (அத்வைதம்)ராமானுஜர்,(விசிஷ்டாத்வைதம்) மத்வர், (த்வைதம்), ஸ்ரீகண்டாசாரியார்(சைவ சித்தாந்தம்), வல்லபாசாரியார்(கிருஷ்ண பக்தி மார்க்கம்) போன்றவற்றைத் தம் தம் நோக்கில் எழுதி இருக்கின்றார்கள். ஆகவே மூலம் என்பது ஒன்றே. இதில் நமக்கு எதைப் பிடிக்கிறதோ, அல்லது குடும்ப வழி என்று சிலருக்கு வருகின்றதோ, அல்லது இஷ்டம் என்று சிலருக்குத் தோன்றுகின்றதோ அதை எடுத்துக் கொண்டு அதன்படி பயிற்சி செய்து வருகின்றோம். ஆனால் அனைத்துக்கும் மூல காரணம் வேத வியாஸரே.

அதனாலேயே குரு பூர்ணிமா என்று ஏற்பட்டு வேத வியாஸருக்கு என்று தனியாகப் பூஜை, வழிபாடுகள் செய்து வருகின்றோம். இன்னும் குடும்ப வாழ்வில் ஈடுபட்டவர்களும், திருமணம் ஆகாத பிரம்மசாரிகளும் ஒருபடி மேலே போய் ஆவணி அவிட்டத்தின்போது, பூணூல் போட்டுக் கொள்ளும் முன்னர், வேத வியாஸரைக் கும்பத்தில் ஆவாஹனம் செய்து வழிபட்டு, நைவேத்தியங்கள் செய்து, அந்தப் பிரசாதத்தை வீட்டில் உள்ள அனைவருக்கும் நினைவாய் எடுத்து வந்து கொடுத்து வியாஸரை நினைவு கூருகின்றார்கள். அதோடு அன்றைய தினம் தர்ப்பணம், ஹோமம், போன்றவையும் செய்து ஆராதிக்கின்றனர். இது முன்னர் அனைத்து வர்ணத்தினராலும் செய்யப் பட்டு வந்திருக்கின்றது, என்றாலும் இன்றும் ஒரு சில வேறு வர்ணத்தினரும் விடாமல் செய்து வருகின்றார்கள். ஆனால் சந்யாஸிகள் பூணூல் தரிப்பது இல்லை ஒரு சிலரைத் தவிர. ஆகவே அவர்கள் வியாஸரை நினைவு கூருவதற்காகவே சாதுர்மாஸ ஆரம்பத்தின்போது வியாஸ பூஜை செய்து வழிபடுகின்றார்கள்.


இந்த ஆவணி அவிட்டம் என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்று. ரிக், யஜுர் வேதக் காரர் அனைவருக்கும், ஆவணி மாத அவிட்ட நட்சத்திரத்தில் பெளர்ணமியும் கூடி இருக்கும்போது வந்தால், சாமவேதக் காரர்களுக்கு மட்டும், ஆவணி மாதம் அமாவாசை கழிந்து,(அநேகமாய் பாத்ரபத சுக்ல சதுர்த்தி அன்று) வரும் பிள்ளையார் சதுர்த்திக்கு முதல்நாள் அல்லது பிள்ளையார் சதுர்த்தி அன்று வரும். "வேதாநாம் ஸாமவேதோஸ்மி" என்று கீதையில் கீதாசாரியன் சொன்னது போல் சாமவேதம் மட்டும் தனித்து இருப்பது அதன் ராகங்களுக்காகவோ என்றும் தோன்றுகின்றது.ஆயிரம் சாகைகள் கொண்டதாய்ச் சொல்லப் படும் இவை இசைக்கும் முறையில், அந்த ராகமாகவே ஸ்ரீமந்நாராயணன் விளங்குகிறதாய் அவனே கீதையில் சொல்லுகின்றான். இதனால் மற்ற வேதங்கள் சிறப்பு இல்லை என்று அர்த்தம் இல்லை. இந்த சாமவேதம் மட்டுமே ராகத்தோடு பாடக்கூடியது. அந்த ராகமாகவே ஸ்ரீமந்நாராயணன் விளங்குகின்றான் என்றே அர்த்தம். எப்பொழுதுமே எல்லா கர்மாக்களையும் செய்து முடித்த பின்னரும் ஒவ்வொரு முறையும் செய்த அனைத்தையுமே ஸ்ரீமந்நாராயணனுக்கே சமர்ப்பிக்கின்றோம் இவ்வாறு சொல்லி.

//காயேந வாசா, மனஸேந்த்ரியைர்வா
புத்யாத்மநாவா ப்ரக்ருதேஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம்பரஸ்மை
நாராயாணாயேதி ஸமர்ப்பயாமி//


இந்தப் பதிவும் அப்படியே, ஸ்ரீமந்நாராயணனுக்கே சமர்ப்பணம். குரு பூர்ணிமாவுக்காக எழுதி எப்போவோ வச்சது. ஆனால் அப்போ வேறே போஸ்ட் போட்டுட்டேன், அதனாலும் இன்றைய நாளின் விசேஷத்தைக் கருதியும் இந்த போஸ்ட்.

சொந்த செலவில் மான்யம்:
யாருங்க அது, அங்கே நமக்கு நாமே மானியம் கொடுத்துக்கக் கூடாதுனு சொல்றது?? திராசவா?? ம்ஹூம், சான்ஸே இல்லை, அவர் இங்கே எல்லாம் வர மாட்டாரே! :P கே ஆரெஸ் பதிவுக்குத் தான் போய்ப் பின்னூட்டம் போடுவாராமே? அப்படியா??? :P:P:P