முன்பே நாம் இங்கே பகவன் நாம போதேந்திரரைப் பற்றி பார்த்தோம். தற்போது திவாண்ணா தனது வலைப்பூவில் சதாசிவ பிரம்மேந்திரர் பற்றிச் சொல்லியிருக்கிறார். அதுவும் இந்த வலைப்பூவில் தொடராக வர இருக்கிறது. இன்று நாம் பார்க்க இருப்பது ஸ்ரீதர ஐயாவாள். சரி, ஸ்ரீதர ஐயாவாளைச் சொல்ல ஆரம்பிக்கும் இந்த இடுகையில் போதேந்திராளைப் பற்றியும், சதாசிவ பிரம்மத்தைப் பற்றியும் ஏன் ஆரம்பிக்கிறேன் என்று தோன்றும். இவர்கள் மூவரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பது தெரிந்திருக்கலாம். இவர்கள் மூவரும் தான் தென்னாட்டில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் நாம சங்கீர்த்தனத்தை பரப்பியவர்கள்.
இந்த மூவரையும் உற்று நோக்கினால் இன்னும் சில ஆச்சர்யமான விஷயங்களைப் பார்க்க முடியும். போதேந்திரர் சன்யாஸி, பிரம்மேந்திரர் அவதூதர், ஸ்ரீதரர் கிருஹஸ்தாச்ரமத்தில் இருந்தவர். போதேந்திரர் 'ராம நாம' மகிமையையும், ஸ்ரீதர ஐயாவாள் 'சிவ-நாம' மகிமையினையும், பிரம்மேந்திரர் 'ப்ரம்ஹைவ அஹம்' என்னும் அத்வைத நிலையுமாக கொண்ட வெவ்வேறான ஆச்ரமிகளானாலும், முடிவாக இவர்கள் உலகிற்கு பிரச்சாரம் செய்தது நாம சங்கீர்த்தனமே. ப்ரம்மேந்திரரும், போதேந்திரரும் தமது தவத்தால் அடைந்த யோக, போக சக்திகளை ஸ்ரீதர ஐயாவாள் எளிய பக்தி வழியில் அடைந்திருக்க்கிறார் என்றால் மிகையாகா. நாம சங்கீர்த்தனம் என்று கூறப்படும் பஜனை மார்க்கத்தின் இரண்டாம் குருநாதர் என்று இன்றும் ஸ்ரீதர ஐயாவாளை கூறுகின்றனர்.
தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த மத்யார்ஜுனம் என்று போற்றப்படும் திருவிடைமருதூர் என்னும் சிறப்பான க்ஷேத்திரத்திற்கு அருகில் இருக்கும் திருவிசைநல்லூர் என்னும் கிராமத்தில் தோன்றியவர் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள். இவர் ஆந்திரத்திலிருந்து வந்து குடியமர்ந்த காகர்ல என்னும் வம்சத்தைச் சார்ந்தவர். இவரது குலப் பெயரே ஸ்ரீதர என்பது. வெங்கடேசன் என்பது இவரது பெயர். ஆனால் பிற்காலத்தில் ஐயாவாள் என்றாலே அது இவரைத்தான் குறிப்பிடுவதாக ஆயிற்று. இவரது குடும்பம் சிவ ஆராதனை செய்து வேத விற்பனர்களாக திகழ்ந்தனர். குடும்பத்தின் மூலமாக இவரிடம் வளர்ந்த சிவபக்தியானது, சிவனை ஏகாக்ரமான சிந்தனையில் பூஜிக்கச் செய்து சிவ தரிசனத்திற்கு வழிசெய்ததாகக் கூறப்படுகிறது. திருவிடைமருதூர் மஹாலிங்க மூர்த்தியை நித்யம் தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டவர். அந்த மூர்த்தியே இவருக்கு பிரத்யக்ஷ தெய்வம்.
இவர் ஆக்யா ஷஷ்டி, ஸ்ரீ கிருஷ்ண த்வாதசமஞ்சரி, ஸ்தோத்ர பத்ததி, கங்காஷ்டகம், சிவபக்த லக்ஷணம், தயாசதகம், சிவபக்தி கல்பலதிகா என்று பல பக்தி நூல்களை எழுதியிருக்கிறார். இவரது சிவபக்தி, சிவ நாமஜபம், கீர்த்தனம் போன்றவையே இவரைப் பெருமைப் படுத்தியதாக அவரே சொல்லியிருக்கிறார் என்கின்றனர். பக்திக்கு இலக்கணமான சகல உயிர்களிடத்தும் அன்பு கொள்ளுதலை அடிப்படையாகக் கொண்டு தனக்கென ஏதும் வைத்துக் கொள்ளாமல் எல்லாவற்றையும் சிவார்பணம் செய்து பிறருக்கு அளித்துவிடுவாராம். தனது ஏழ்மை நிலையிலும் ஸ்வதர்மத்துடன் கூடிய கிருஹஸ்த தர்மத்தை விடாது, சிவார்ப்பணம் செய்து பற்றற்றவராக விளங்கினார். இதனாலேயே பண்டிதர்களும், பாமரர்களும் இவர் மீது மிகுந்த பக்தி கொண்டனர்.
ஒருசமயம் இவர் தமது முன்னோருக்கு சிராத்தம் செய்ய ஏற்பாடு செய்கிறார். மிகுந்த ஆசாரத்துடன் அனைத்து ஏற்பாடுகளும், நடக்கிறது. அன்று காலையில் சிராத்த நேரத்திற்கு முன்னால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த புலையன் ஒருவன் இவர் இல்லத்து வாயிலுக்கு வந்து தான் மிகவும் பசியுடன் இருப்பதாகவும், உண்ண ஏதாகிலும் தருமாறு வேண்டுகிறான். அவனது தோற்றத்தைக் கண்டு இரங்கிய ஐயாவாள் மனமிரங்கி, இல்லத்தில் சிராத்தத்திற்காகச் செய்யப்பட்ட உணவை அளிக்கிறார். மேலும் சிராத்ததிற்கு ஏற்பாடு செய்த பொருட்கள் எல்லாவற்றையும் அவனுக்கு அளித்து விடுகிறார். சாதாரணமாக வேதவழியில் வரும் ஆச்சார குடும்பத்தில் சிராத்த தினத்தன்று எந்த தானமும் செய்யப்பட மாட்டாது. சாஸ்திரத்தில் சொல்லியபடி சிராத்தம் நடக்க வேண்டும் என்பதே இதன் காரணம். ஆனால் ஐயாவாள் தமது ஸ்வதர்மத்தை மீறி அன்ன தானம் செய்கிறார். ஆனாலும் சாஸ்திரத்தின்படி சிராத்தம் நடக்க வேண்டுமென உடனடியாக மீண்டும் சிராத்தத்திற்கான ஏற்பாடுகளைத் அடியிலிருந்து தொடங்குகிறார். ஆனால் அவருக்கு சிராத்தத்தை நடத்தி வைக்க யாரும் முன் வரவில்லை. மேலும் சிராத்தத்தன்று புலையனுக்கு உணவிட்டதற்காக கோபம் கொண்டு அவர் தமது தவறுக்கு கங்கையில் மூழ்கி பிராயச்சித்தம் செய்யக் கட்டளையிடுகின்றனர். ஐயாவாள் தமது கர்மா நிறைவடைவதற்காக கூர்ச்சங்களில் மூதாதையர்களை வரித்து சிராத்தத்தை நடத்தி முடிக்கிறார். ஆனால் அன்று மாலை மஹாலிங்கத்துக்கு பூஜை செய்ய நடை திறந்த அர்ச்சகர்கள், சன்னதியில் புலையன் வைத்திருக்கும் சில பொருட்களையும், புது வஸ்த்ரம், வெற்றிலை பாக்கு (ஐயாவாள் சிராத்தத்தில் அளித்தவை) போன்ற இருந்ததைக் கண்டு தெளிகின்றனர்.
இறைவனே தெரிய வைத்த பின்னரும், ஊரார் விருப்பப்படி கங்கையில் ஸ்நானம் செய்து பிராயச்சித்தம் செய்ய எண்ணி, கங்காஷ்டகம் என்று ஒரு ஸ்லோகம் இயற்றி கங்கையை வழிபட்டு தமது இல்லத்தில் இருக்கும் கிணற்றில் கங்கையைப் பிரவாகிக்க வேண்டுகிறார். அவரது வேண்டுகோளுக்கு செவி சாய்க்கும் விதமாக கங்கை அவர் வீட்டின்பின் இருக்கும் கிணற்றில் பொங்கிப் பெருகி அந்த சிறு கிராமம் முழுவதும் நீராக ஓடியதாம். அந்த நீரில் ஐயாவாளும், அவருக்கு கட்டளையிட்டவர்களும் ஸ்நானம் செய்து கொண்டனராம். இன்றும் கார்த்திகை மாச அமாவாசை தினத்தில் திருவிசைநல்லூரில் இருக்கும் ஐயாவாள் வீட்டுக் கிணற்றில் கங்கை வருவதாக நம்பிக்கை. அந்நாளில் வெளியூர்களிலிருந்து மக்கள் சென்று வழிபடுகின்றனர்.
அடுத்த வாரம் கிருஷ்ண த்வாதசமஞ்சரி, தயாசதகம் போன்ற நூல்கள் தோன்றக் காரணமான பகுதியையும், ஐயாவாள் இறைவனுடன் கலந்ததையும் பார்க்கலாம்
ஸ்ரீகண்டமிவ பாஸ்வந்தம் சிவநாம பராயணம்
ஸ்ரீதரம் வேங்கடேஸார்யம் ச்ரேயஸே குருமாச்ரயே
[ஸாக்ஷாத் பரமேஸ்வரன் போல பிரகாசிக்கிறவரும், எப்போழுதும் சிவநாம ஜபம் செய்வபவருமான ஸ்ரீதர வேங்கடேஸர் என்னும் குருவை ஆச்ரயிக்கிறேன். ]
19 comments:
ஸ்ரீதர ஐயாவாள் பற்றிய அருமையான பதிவுக்கு நன்றி மௌலி. இப்பேர்ப்பட்டவர்களைப் பற்றிப் படிக்கையில் இதைப் போன்ற பக்தி நமக்கு எப்போது வாய்க்குமோ என்ற ஏக்கம்தான் பிறக்கிறது. அவருடைய திருவடிகளை நானும் வணங்கிக் கொள்கிறேன்.
ஸ்ரீகண்டமிவ பாஸ்வந்தம் சிவநாம பராயணம்
ஸ்ரீதரம் வேங்கடேஸார்யம் ச்ரேயஸே குருமாச்ரயே
குருஜி ஹரிதாஸ் ஸ்வாமிகள் சிரீதரம் என்று தோடய மங்களத்தில் பாடும்போது அழுத்தம் கொடுத்து மூன்றுமுறை பாடுவார்.மஹான்களின் வரலாறுகளை படிப்பதில் ஒரு ஆனந்தம்தான்.நல்ல படைப்பு அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்
//பிரம்மேந்திரர் அவதூதர்//
அவதூதர் என்றால் என்ன? புதசெவி..
அம்பி டைபர் மாத்ர உனக்கே தெரியாதா? எதுக்கும் மௌளியே சொல்லட்டும்
எனக்கெல்லாம் ஹரிதாஸ்கிரி ஸ்வாமிகள் பாடும் தோடய மங்களத்தின் மூலமாகத் தான் ஐயாவாளின் திருப்பெயரே தெரியும். அந்த சுலோகத்தைப் பல முறை பாட முயன்று முதல் மூன்று பகுதிகளின் பொருளாழத்தில் ஈடுபட்டு கடைசி பகுதி - ச்ரேயஸே குரும் ஆச்ரயே - சில நேரங்களில் மறந்தோ சில நேரங்களில் சொல்ல முடியாமலோ போன நாட்களும் உண்டு. குழந்தைகளுக்குத் தாலாட்டு பாடும் போது இந்த சுலோகத்தைச் சொல்லுவேன். அப்போதும் அது நடக்கும். மகள் தட்டி எழுப்பிய பின் தான் அடுத்த சுலோகத்திற்குச் செல்ல இயலும். :-)
இந்த சிராத்த நிகழ்ச்சி பல பெரியவர்களின் வாழ்க்கையில் நடந்திருக்கிறது போலும். அந்திம கர்மாவிற்கு இருக்கும் முக்கியத்துவத்தையும் இது காட்டுகிறதோ என்று தோன்றுகிறது.
//அம்பி டைபர் மாத்ர உனக்கே தெரியாதா? எதுக்கும் மௌளியே சொல்லட்டும்//
திராச சார், நீங்களே சொல்லுங்க...உங்களைப் போல பெரியவங்க முன்னாடி நான் என்னத்தை பெரிசா சொல்லப் போறேன். சந்திர சேகரர் முன் சந்த்ர மெளலி அதிகம் பேச மாட்டான்:)
வாங்க அம்பி. பெரியவங்க பலர் இருக்காங்க பதில் சொல்வாங்க...இல்லைன்னா கடைசில சொல்றேன் :)
வாங்க திராச ஐயா!
//குருஜி ஹரிதாஸ் ஸ்வாமிகள் சிரீதரம் என்று தோடய மங்களத்தில் பாடும்போது அழுத்தம் கொடுத்து மூன்றுமுறை பாடுவார்.//
ஆம், சில சிடிக்களில் கேட்டிருக்கிறேன்.
//மஹான்களின் வரலாறுகளை படிப்பதில் ஒரு ஆனந்தம்தான்.//
ஆமாம்.
//நல்ல படைப்பு அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்//
நன்றிகள் பல. சந்திர சேகரரே பாராட்டியதாகக் கொள்கிறேன் :)
வாங்க கவிக்கா.
நீங்க சொல்ற ஏக்கம் இருந்தாலே இறைவன் நம்மை நல்வழிப்படுத்திடுவான்னு பெரியவங்க சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன்.
வாங்க குமரன். ஆமாம், எனக்கும் இதை எழுதுகையில் இன்னும் சில மஹான்கள் பற்றி தோன்றியது. :)
@TRC sir & M'pathi, ஆககூடி ரெண்டு பேரும் இன்னும் சொல்லலை. :p
@மதுரை அண்ணா, புரோபலுல இருக்கறது நெரூர் வில்வ மரமா? :))
வாங்க அம்பி.
முற்றும் துறந்து, அதாவது தாம் உண்ண உணவும் உடுக்க உடை கூட தேடாது, பரபிரம்ம உணர்வு பெற்ற பெரியோர்களை அவதூதர்கள் என்பர். கொச்சையாச் சொன்னா நிர்வாணச் சாமியார்கள் போல. இதுக்கு மேல எனக்கும் தெரியாது. :
ப்ரொபைல்ல இருக்கறது அஸ்வத்த மரக் கிளை....:))
மெளலி அண்ணா
தீபாவளி அன்று கங்கா ஸ்நானத்துக்கு இந்தப் பதிவிற்கு வந்துவிடலாம்!
ஸ்ரீதர ஐயவாளின் கிணற்றடி கங்கைப் பிரவாகமும், அதைச் சொன்ன பிரபாவமும் கங்கா ஸ்நான பலனை அன்பர்கள் அனைவருக்கும் தரட்டும்!
நாம-சங்கீர்த்தனச் சக்ரவர்த்தி ஸ்ரீதர ஐயாவாள் திருவடிகளே சரணம்!
கிராமத்து வீட்டில் கரக் கரக் கரக் என்ற தவளைகளின் சத்தம் கூட ஹர ஹர ஹர என்றே விழுநதது ஐயவாளின் செவிகளில். அதை வர்ணித்து சுலோகமாகவும் எழுதினார்.
இது போன்ற மனநிலை கொண்ட ஒருவரை, தஞ்சை வைஷ்ணவ அந்தணர்கள் சில பேர் அரசனிடம் போட்டுக் கொடுத்தனர்.
இவர் கிருஷ்ண பக்தர் என்று சொல்லிக் கொள்வதெல்லாம் வெளி வேஷம்! எப்போதும் சிவனையே பாடுகிறார் என்று! :))
அரசனும் திடீரென்று மருதூர் மகாலிங்க சுவாமிக்கு கிருஷ்ண அலங்காரம் செய்து வீதியுலா வரச்செய்ய, ஐயாவாள் ஈசனைக் கண்ட மாத்திரத்தில், கண்களில் ஆனந்த பாஷ்பம் பெருகினார்; வாயில் இருந்து தானாக வந்தது கிருஷ்ண துவாதச மஞ்சரி.
இப்போது திருக்கடையூர் சென்றிருந்த போது, மத்யார்ஜூனம் என்கிற திருவிடைமருதூருக்கும், அருகில் திருவிசைநல்லூருக்கும் செல்லும் வாய்ப்பும் கிட்டியது!
கலியுகப் பகீரதச் சக்ரவர்த்தியான ஐயாவாளின் தரிசனமும் பயணக் குறிப்பும் தனியாக எழுதுகிறேன்.
@அம்பி
அண்ணன் சொன்னதுக்கு மேலதிகத் தகவலாய்....
தூத என்றால் துறந்த, விலக்கிய-ன்னு பொருள். அவ-தூத ன்னா அவங்களைத் துறந்தவர்.
அவங்க-ன்னா எவங்க-ன்னு கேக்காதீங்க :)
அவம்-னா, அவமானம்-னு வருதுல்ல? நெகடிவ் உணர்வுகளையும் கூடத் துறந்தவர்-ன்னு ஆகும்!
சாலையில் பித்துப் பிடித்தவன் போல் நாம சங்கீர்த்தனம் செய்து ஆடினால் ஊர் என்ன சொல்லுமோ என்ற மான-அவமானங்களைத் துறந்ததால் அவ-தூதர்.
பிரம்மாவதூதர்
சைவாவதூதர்
வீராவதூதர்
குலாவதூதர்
-ன்னு நாலு வகை!
நித்யானந்தர், சைதன்யர் போன்றவர்களை அவதூதர் என்றே சொல்றது வழக்கம்!
எல்லாம் சரி,
உங்க ப்ரொபைல்-ல கூட உங்க பின்னாலே ஏதோ ஒளிவிட்டம் தெரியுதே! என்ன விசேஷம்? :))
அம்பி ஏற்கனவே அண்ணாவும், கலைக்களஞ்சியம் கேஆர்ஸும் அவதூதர் என்பதற்கு விளக்கம் சொல்லி விட்டார்கள். இருந்தாலும் இந்த ஏழைசொல் அம்பலம் ஏறுகிறதா என்று பார்ப்போம்.
தண்டம்,கமண்டலம்,உக்கம் என்ற கயிறு,பரிசுத்தம் செய்ய தீர்த்தம் சிகை,பூணூல் என்ற எல்லா அடையாளப் பொருள்களையும் ஜலத்தில் துறந்துவிட்டு, பிறந்த மேனியாக முடிச்சு எதுவும் இல்லாமல்,தத் என்ற பரம் பிரும்மத்தில் பரி பூரணமாக சித்தத்தை வைத்து,பிராணனை உடலில் வைத்து இருக்கும் மட்டும் உணவை பிக்ஷைபாத்திரம்கூட வைத்துக் கொள்ளாமல் பிக்க்ஷை எடுத்து,நன்மை தீமைகளில் சம சித்த நோக்குடன் இருந்து பாழ்வீடு,மரத்தடி,மலைப்பொந்து,குகை,மலையருவி போன்ற இடங்களில் தனக்கென ஒரு தங்குமிடம் வைத்துக்கொள்ளாமல் வசித்துக்கொண்டும் , எந்தக் காரியத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாமல்,தன்னுடையது என்று எதுவில்லாமல் ஸன்யாசத்தினால்தேகம் தன்னைவிடுமுன் தான் அதை விட்டவனாய் உள்ளவன் எவனோ அவனே அவதூதன்.
இவர் ஆக்யா ஷஷ்டி, ஸ்ரீ கிருஷ்ண த்வாதசமஞ்சரி, ஸ்தோத்ர பத்ததி, கங்காஷ்டகம், சிவபக்த லக்ஷணம், தயாசதகம், சிவபக்தி கல்பலதிகா என்று பல பக்தி நூல்களை எழுதியிருக்கிறார்
’லோவா நவரத்னமாலிகா’ பாடியபோது வெளியே ஊர்வலத்தை விட்டு கிருஷ்ணர் இவர் வீட்டுக்குள் வந்து ஊஞ்சலில் அமர்ந்து கேட்டு அனுக்கிரகித்ததாக சொல்லப்படுவதுண்டு.
தொடரட்டும் தங்கள் ஆசார்ய சேவை.
நன்றி
வாங்க கே.ஆர்.எஸ், திரசகபீரன்பன். நீங்கள் எல்லோரும் செய்திகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
Post a Comment