Showing posts with label ஆதி சங்கரர். Show all posts
Showing posts with label ஆதி சங்கரர். Show all posts

Wednesday, April 16, 2008

ஆதிசங்கரரும் அடியார்க்கு அடியார்தான்...



நம்மில் பலரும் ஆதிசங்கரர் என்றாலே அவர் சைவ/வைதிக மதத்திற்கு மட்டுமே ஆச்சார்யார் என்று நினைக்கிறோம். ஆனால் ஆதிசங்கரருக்கு 'ஷண்மத ஸ்தாபனாச்சார்யர்' என்று ஒரு பட்டம் உண்டு. அதென்ன ஷண்மத ஸ்தாபனம்?. ஏன் அவருக்கு முன் மதங்கள் இல்லையா?. இருந்தது. அவர் காலத்தில் ஹிந்து மதப் பிரிவுகளில் ஏகப்பட்ட வேற்றுமைகள் மற்றும் வேதத்தின் அடிப்படை ப்ரமாணத்தை ஏற்காத பெளத்த/சமண சமயங்களால் மேலும் வேற்றுமைகள் பெருகியது. இந்த நிலையில் ஹிந்து மதம் நீர்த்துப் போகாது இருக்க வேண்டுமானால் இந்த வேற்றுமைகளினிடயே இருக்கும் பல ஒற்றுமைகளை நிலைநாட்டி அதன் மூலம் இந்துமத பிரிவுகளிடையே சண்டை-சச்சரவுகளை குறைக்க முயன்றார். அவர் காலத்தில், இந்து மதத்தில் மட்டும் 72 பிரிவுகள் இருந்தனவாம். இந்த 72 பிரிவுகளையும் ஆராய்ந்து, பலவற்றை இணைத்தும், சிலவற்றை தள்ளியும் முடிவாக "சைவம், வைஷ்ணவம், காணாபத்யம், கெளமாரம், செளரம், சாக்தம்' என்று வகைப்படுத்தினாராம். இவ்வாறு வகைப்படுத்தப்பட்டபின் இந்த 6 பிரிவுகளும் சொல்லும் பல பெயர்களும் பரப்பிரம்மத்தையே சாரும் என்கிறார். சரி, இதுக்கும் தொண்டரடிக்கும் என்ன தொடர்பு?, பார்க்கலாம்.



ஆதி சங்கரர் ஷண்மதங்களை ஸ்தாபித்தாலும், அவர் வைஷ்ணவத்தை உணர்ந்து, மஹா விஷ்ணுவை பல இடங்களில் பலவாறு கொண்டாடுகிறார். விஷ்ணு சஹஸ்ர நாமத்திற்கு பாஷ்யம் செய்திருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் அவரது பாஷ்ய க்ரந்தங்களில் எல்லாம் நாராயணனையே பரம்பொருளாக கொண்டாடுகிறார். நாரயணீயத்தில் ஆதி சங்கரர் பற்றிக் குறிப்பிடும் போது பட்டத்ரி இது பற்றி வியக்கிறார். ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட மடங்களில் இன்றும் 'நாராயண ஸ்மிருதி' என்றே கையொப்பமிடப்படுகிறது. ஆதி சங்கரர் சமாஸ்சரணம்/ உடம்பில் சூடு போட்டு முத்திரை (சங்கு-சக்கரம்) குத்திக் கொள்வதை எதிர்த்தார், ஆகையால் அவர் வைஷ்ணவ எதிரி என்பதாக கூறப்படுகிறது. அவர் காலத்தில் வைணவத்தில் மட்டுமல்ல, சைவத்திலும் போன்றவற்றிலும் உடலில் முத்திரை குத்தி கொள்ளும் முறை இருந்துள்ளது. சைவர்கள் ரிஷப, சூல முத்திரைகளை கொண்டு இருந்திருக்கிறார்கள். சங்கரர் இவை இரண்டையுமே கண்டித்திருக்கிறார். அவர் அதனை கண்டிக்க காரணமும் சொல்லியிருக்கிறார். அதாவது மனித உடலின் பல பாகங்களிலும் தேவர்களும், பித்ருக்களும் வாசம் செய்கின்றனர். இவ்வாறு சூடு வைத்துக் கொள்வது அவர்களுக்கு ப்ரிதியாகாது என்பதாகச் சொல்கிறார். அவரது இந்த கண்டிப்பு சைவ/வைஷ்ணவ மரபுகள் இரண்டிற்குமே தான்.



சங்கரரின் தாயார் ஆர்யாம்பாளின் இறுதிக்காலம் நெருங்கும் சமயத்தில், ஆதிசங்கரர் தான் முன்னர் வாக்கு கொடுத்ததுபடி தாயருகில் இருக்கிறார். தனது தாயின் வேண்டுகோளுக்கிணங்க, சிவனைத் துதித்து தனது தாயின் அந்திம காலம் சிரமமின்றி இருக்க வேண்டுகிறார். இவரது துதியினை கேட்டு ஈசன் சிவகணங்களை அனுப்பினாராம். அந்த சிவகணங்களின் உருவம் கண்டு அஞ்சிய ஆர்யாம்பாள், சங்கரரிடம், தனக்கு பயமாக இருக்கிறதென்றும் இந்த கணங்களுடன் தான் கைலாசம் போக மாட்டேன் என்றும் சொல்கிறார். உடனே ஆச்சார்யார் விஷ்ணுவைத் துதிக்கிறார். அந்த துதியில் நாராயணனை பாதாதி-கேசம் வர்ணிப்பதாக அமைத்து 15 பாடல்கள் பாடுகிறார். அந்த சமயத்தில் வைகுந்த வாசனின் தூதர்கள் வந்து ஆர்யாம்பாளின் ஜீவனை கூட்டிச் சென்றதாக சொல்லப்படுகிறது. இந்த 15 பாடல்கள் விஷ்ணு பாதாதி-கேச ஸ்துதி என்று கூறப்படுகிறது. இதன் முடிவில் "என்னாலே சொல்லப்பட்ட இந்த ஸ்துதியால் யார்-யார் மஹா விஷ்ணுவின் அழகை அனுபவிக்கிறார்களோ அப்படிப்பட்ட விஷ்ணு பக்தர்களின் நிர்மலமான திருவடிகளை எப்போதும் நான் நமஸ்காரம் செய்கிறேன்" என்ற் சொல்லி முடிக்கிறார். இப்போது சொல்லுங்க ஆதிசங்கரரும் அடியார்க்கு அடியார் தானே?

Monday, February 4, 2008

ஆச்சார்ய உபாசனை..

குருவைப் பணிந்து பணிவிடை செய்வது ஞானிகளின் லக்ஷணங்களில் ஒன்று. ஞானிகளின் குணங்களாக தற்பெருமையின்மை, பகட்டின்மை, அஹிம்சை, பொறுமை, நேர்மை, தூய்மை, ஊக்கம், அடக்கமுடைமை இவற்றுடன் ஆச்சார்ய சேவையும் கூறப்பட்டுள்ளது.

குருவைப் பணிந்து பணிவிடை செய்வது "சாரீரத்துவம்" என்று கூறப்படுகிறது. கிருஷ்ண பரமாத்மா கீதையில், 'தேவர், மறையவர், ஆச்சார்யர், அறிவாளிகள் இவர்களை வழிபடுதலை 'உடல்வழித் தவம்' என்கிறார். ஸ்ரீ வைஷ்ணவத்தில் சாரீரத்துவம் மிக அழகாக சொல்லப்பட்டிருக்கிறன்று கேள்விப்பட்டிருக்கிறேன்.


ஆதி சங்கரரும் "குரு சரணாம்புஜ நிர்பர பக்த" என்கிறார். அதாவது குருவைப் பற்றிக் கொள்' என்கிறார். மேலும் 'ஆச்சார்ய தேவோபவ' என்பதிலிருந்து, சங்கரரின் ஆச்சார்ய பக்தி தெரிகிறது. மேலும், எவன் ஒருவன் இறை வழிபாடும், குருவும் இல்லாது இருக்கிறானோ அவனுக்கு மனச் சாந்தி கிட்டாது என்கிறார்.


குருவை ஒரு மத்யஸ்தராகவும் கூறலாம். இறைவனைக் காணும் முன் அந்த திவ்ய தரிசனத்தின் முதல் பகுதியாக குருவைக் காண வேண்டும். பின்னர் அந்த குருவே ஈஸ்வர ரூபத்தை காண்பிப்பார். மனம் சாந்தி பெற குரு அனுக்கிரகம் அவசியம். புலனடக்கம், திருவருள், குருவருள் ஆகிய மூன்றும் இருந்தால் மனச் சாந்தி தானாக சித்திக்கும்.


சரி, சாந்தி, சாந்தி என்கிறேனே, யார்? / எது சாந்தி?. மனது சஞ்சலம் இல்லாமல் இருப்பதுதான் சாந்தி. சலனத்திற்கு எதிர்ப்பதமே சாந்தி. விஷ்ணு சஹஸ்ர நாமத்தில், "ஸந்யா ஸ்க்ருத சம: சாந்தோ, நிஷ்டா சாந்தி: பராயணம்" என்று வருகிறது. பகவானே சாந்த ஸ்வரூபி, அதனால் அவனுக்கு "சாந்தன்" என்ற பெயர் உண்டு. சாந்த நிலை என்பது இறைவனே!. அதனாலேயே பிரணவாகாரமாக ஓம்! சாந்தி என்று கூறப்படுகிறது. இந்த சாந்த நிலையினை நமக்கு உணர்த்த, அதனை நோக்கி வழிகாட்ட குரு அவசியம்.


ஆதி சங்கரர் தன் தாயிடம் சன்யாசத்திற்கு உத்தரவு வாங்கிய பின்னர் குருவினை தேடி செல்கையில், நர்மதா நதிக்கரையில் கோவிந்த பகவத்பாதரைச் சந்திக்கிறார். அப்போது கோவிந்த பகவத் பாதர், சங்கரரிடம், 'நீ யார்?' என்று குகையின் உள்ளிருந்தபடியே கேட்க, சங்கரர், நான் உடம்பல்ல, என்று ஆரம்பித்து 10 ஸ்லோகங்களில் அத்வைத சாரத்தைச் சொல்லி விடுகிறார். இந்த 10 ஸ்லோகங்களுக்கு நிர்வாண சதகம் என்று பெயர். அந்த 10 ஸ்லோகங்களை கேட்ட பின் கோவிந்த பாதரால் உள்ளே இருக்க முடியவில்லையாம். வெளியில் வந்து சங்கரரைப் பார்க்கிறார். உடனேயே அவருக்கு சங்கரரிடம் இருக்கும் உயர்ந்த சிஷ்ய குணங்கள் புலனாகிறதாம். பிறகே அவர் சங்கரருக்கு சன்யாசமும் அளித்து சிஷ்யராக ஏற்றாராம். சங்கரரே பரமேஸ்வர அவதாரம், ஆனால் அவரும் கூட குரு வேண்டுமென்று தேடினார் என்பதன் மூலம் குருவின் அவசியம் தெளிவாகிறது.


குருதான் பிரும்மா, விஷுணு, ஈச்வரன் மற்றும் அநாதியாய், பலவாய்,ஒன்றாய் பரம்பிரும்மாவகவும் இருக்கிறார், அந்த குருவை வணங்குவோம்.