Wednesday, December 31, 2008

குலபதி என்றால் என்ன அர்த்தம்?

குலபதி என்றால் என்ன அர்த்தம்னு கேஆரெஸ் கேட்டிருந்தார். அதுக்கு பதில் எழுதி நிறைய நாட்கள் ஆகியும் போடமுடியலை. இன்னிக்கு புது வருஷப் பதிவாகவும், அதே சமயம் ஆசார்ய ஹ்ருதயத்திலே வாரா வாரம் வியாழக் கிழமைப் பதிவுகள் தவறக் கூடாது என்பதாலும் இதிலே போடுகின்றேன்.

முன் காலத்தில் ஆசாரியர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குப் பெயர்ந்து கொண்டே பாடம் சொல்லிக் கொடுத்திருக்கின்றனர். படகுகளிலே தங்கள் சிஷ்யர்கள் கூட்டத்தோடு போய்ச் சொல்லிக் கொடுத்திருக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட நாட்டின் தலை நகரையோ, அல்லது முக்கிய நகரையோ அடைந்ததும் அங்கே தங்கி இருந்து கொண்டு அந்த நாட்டின் அனைத்துக் குடிமக்களுக்கும், தங்களால் இயன்ற கல்வி போதனை செய்திருக்கின்றனர். இம்மாதிரி ஒரு ஆசாரியரிடம் பத்தாயிரம், இருபதாயிரம் மாணாக்கர்களுக்கு மேல் பயின்றதுண்டு. இப்போ எல்லாம் இருக்கிற Residential System of Schools and Colleges ஏதோ அதிசயமா நினைக்கின்றோம். ஆனால் அந்தக் காலங்களில் அது தான் நடைமுறையில் இருந்து வந்திருக்கின்றது.

எந்த ஆசாரியரிடம் மாணாக்கர்கள் கற்றுக் கொள்கின்றனரோ அவர்களே தங்கள் மாணாக்கர்கள் எத்தனை பேர் இருந்தாலும், உணவும், உடையும் கொடுத்துத் தங்கள் மாணாக்கர்களை அறிவிலும், வீரத்திலும், விவேகத்திலும் சிறந்த குடிமக்களாய் ஆக்கி இருக்கின்றனர். இதற்கெல்லாம் அந்த நாட்டின் அரசர்களும் உறுதுணையாய் இருந்திருக்கின்றனர். பள்ளியின் பிரின்சிபால் என்பவர் எல்லா வகுப்புகளுக்கும் தினமும் நேரிடையாய்ப் பாடம் எடுக்க மாட்டார் அல்லவா? அதுபோல் இங்கேயும் முக்கிய ஆசாரியராய் இருப்பவர் பல வருஷங்கள் படித்துத் தேர்ந்த மாணாக்கர்களுக்கு மட்டுமே கடைசியில் குருகுல வாசம் முடியும் முன்னர் தன்னுடைய போதனையை நேரிடையாகத் தருவார். அது வரையில் அவரால் பயிற்றுவிக்கப் பட்ட சிஷ்யப் பரம்பரையினர் குருவாய் இருந்து பாடம் சொல்லித் தருவார். இம்மாதிரி சிஷ்யர்களுக்கு உணவும், உடையும் கொடுத்துக் கல்வியும் கொடுக்கும் ஆசாரியர்களே அக்காலத்தில் குலபதி என அழைக்கப் பட்டனர். வசிஷ்டர் ஒரு குலபதி என ரகுவம்சத்தில் சொல்லி இருப்பதாய்ச் சொல்கின்றார் நம் பரமாசாரியார். அதே போல் கண்வ ரிஷியையும் குலபதி என சாகுந்தலத்தில் சொல்லி இருக்கின்றார்களாம்.

இவை எல்லாம் பெரிய அளவிலான வித்யாசாலைகள். நமது பல்கலைக் கழகங்கள் மாதிரி இருக்குமோனு நினைக்கிறேன். இது தவிர சிறிய அளவிலான குருகுலங்களும் இருந்து வந்திருக்கின்றது. "யோ அன்ன தானாதி போஷணாத் அத்யா பயதி" என்று ஆசார்ய லட்சணம் கூறுவதாயும் தெரிய வருகின்றது. இங்கே ஸ்ரீபாலகிருஷ்ண ஜோஷியையும், கே.எம். முன்ஷியையும் குலபதி என்றதற்குக் காரணமும் அவர்களால் நிறையப் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், வித்யாசாலைகள் ஏற்படுத்தப் பட்டதும், நல்ல முறையில் ஸ்ரீ ஜோஷி அவர்களால் தியாலஜிகல் பள்ளி ஆசிரியப் பதவி திறம்பட நிர்வகிக்கப் பட்டதாலும் கெளரவப் பட்டமாய்க் கொடுக்கப் பட்டது என்றும் தெரிய வருகின்றது. இது வே ஆசார்ய லட்சணம் என்று தெய்வத்தின் குரல் நாலாம் பாகத்தில் பரமாசாரியாரின் அருள் வாக்கில் இருந்து தெரிய வருகின்றது.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

11 comments:

Geetha Sambasivam said...

மெளலி, அவசரப் பதிவுக்கு மன்னிக்கவும். முடிந்தால் அப்புறமாய் எழுதறேன். புத்தாண்டு வாழ்த்துகள் அனைவருக்கும்.

மெளலி (மதுரையம்பதி) said...

கீதாம்மா மற்றும் இங்கு வரும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.


//அவசரப் பதிவுக்கு மன்னிக்கவும். முடிந்தால் அப்புறமாய் எழுதறேன்//

என்னதிது நீங்க போய் மன்னிப்பு அது-இதுன்னு சொல்லிக்கிட்டு?...

அவசரப் பதிவானாலும், உங்க ஸ்டைலில் இருந்து விலகிய சிறிய பதிவானாலும் சிறப்பான, (எனக்கு) புதிய செய்தியை அல்லவா தந்திருக்கீங்க?...மிக்க நன்றி.

குமரன் (Kumaran) said...

குலபதி என்றால் என்ன பொருள் என்று சொன்னதற்கு நன்றி கீதாம்மா. நான் திரு.முன்ஷி அவர்களின் பெயருக்கு முன் ஏன் குலபதி என்று சொல்கிறார்கள் என்று நினைத்ததுண்டு. நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் கீதாம்மா!
முன்பே கேட்ட விளக்கத்தை நினைவில் வைத்துச் சொன்னமைக்கு நன்றி!

சோழர்கள் குல குரு ஈசான சிவ பண்டிதரைச் சுற்றியும் பல நூறு தொண்டை நாட்டு அந்தணர்கள் இருப்பார்கள். அவர்களும் அவரைக் குலபதி என்று அழைப்பார்கள். உடையார் நாவலில் வரும். இப்போது இன்னும் நல்லாப் புரிகிறது! நன்றி!

குமரன் (Kumaran) said...

வைணவர்கள் நம்மாழ்வாரை குலமுதல்வன் என்று சொல்வதும் இந்த வகையில் தானா இரவிசங்கர்?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
வைணவர்கள் நம்மாழ்வாரை குலமுதல்வன் என்று சொல்வதும் இந்த வகையில் தானா இரவிசங்கர்?//

இல்லை-ன்னு நினைக்கிறேன் குமரன்!
மாறனைச் சுற்றிப் பல நூறு பேர் இருக்கவில்லை! அவர் அவிங்களுக்கு உடை, உணவு, வித்யா வசதிகள் எல்லாம் செய்யலை!
அவர் தனிக்கட்டை! பழுத்த ஞானக் குழந்தை! மதுரகவிகளே மிகவும் அனுசரித்துத் தான் வாங்க வேண்டி இருந்தது! ஒரு நாள் பாசுர மழை பொழிந்து, அதில் ஆறு மாதம் திளைத்து அசைவற்று இருப்பாரே!

குலமுதல்வன் <> குலபதி -ன்னு தான் நினைக்கிறேன்!
தொண்டர் குல முதன்மையான் விஷ்வக்சேனரின் அம்சம்!
குரு பரம்பரையில், முதல் மானிட குரு என்பதாலும், குல முதல்வன் என்று இருக்கலாம்!

கபீரன்பன் said...

//அவசரப் பதிவுக்கு மன்னிக்கவும் //

நீங்க வியாழக்கிழமை பதிவு போட்டு நான் ஞாயிற்றுக் கிழமை படிக்கிறேன்.
தாமதத்திற்கு மன்னிக்கவும்.
பரமாச்சாரியரை நினைவு படுத்திய, உபயோகமான தகவல்கள் கொண்ட பதிவுக்கு நன்றி.
புத்தாண்டு வாழ்த்துகள்

Kavinaya said...

//அவசரப் பதிவானாலும், உங்க ஸ்டைலில் இருந்து விலகிய சிறிய பதிவானாலும் சிறப்பான, (எனக்கு) புதிய செய்தியை அல்லவா தந்திருக்கீங்க?...மிக்க நன்றி.//

ரிப்பீட்டேய். நன்றி கீதாம்மா. அனைவருக்கும் (தாமதமான) புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.

Anonymous said...

//குமரன் (Kumaran) said...
வைணவர்கள் நம்மாழ்வாரை குலமுதல்வன் என்று சொல்வதும் இந்த வகையில் தானா இரவிசங்கர்?//

இல்லை-ன்னு நினைக்கிறேன் குமரன்!
குலமுதல்வன் <> குலபதி -ன்னு தான் நினைக்கிறேன்!
தொண்டர் குல முதன்மையான் விஷ்வக்சேனரின் அம்சம்!
குரு பரம்பரையில், முதல் மானிட குரு என்பதாலும், குல முதல்வன் என்று இருக்கலாம்!//

வைஷ்ணவ குருபரம்பரை பற்றி, ஒரு பாடலில் வேதாந்த தேசிகர், அருமையாக எழுதி இருக்கிறார்.
“என்னுயிர் தந்தளித்தவரைச் சரணம் புக்கு, யானடைவே அவர் குருக்கள் நிறை வணங்கி!
பின்னருளால் பெரும்பூதூர் வந்த வள்ளல், பெரிய நம்பி, ஆளவந்தார்,
மணக்கால் நம்பி!
நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக்கொண்டார், நாதமுனி, சடகோபன் சேனை நாதன்!
இன்னமுதத்திருமகளென்றிவரை முன்னிட்டு, எம்பெருமான் திருவடிகளடைகின்றேனே.”

தேனினும் இனிய ஒரு தமிழ்ப்பாடலில் யதிவரனார் முதல், எம்பெருமான் வரையான குருபரம்பரையை இரத்தினச் சுருக்கமாக எழுதியுள்ளார்.

குமார வரதர், தமது தந்தை தேசிகரைப் பாடும் போது,
“காவலனெங்கள் கிடாம்பிக் குலபதி அப்புள்ளார் தம், தேமலர் சேவடி சேர்ந்து பணிந்தவர் தம்மருளால், நாவலரும் தென் வட மொழி,நற்பொருள் பெற்ற நம்பி!
காவலர் தூப்புல் குலத்தரசே எம்மைக்காத்தருளே!

எனும் பாடலில் அப்புள்ளாரை தேசிகரின் குலபதி என்று குறிப்பிடுகிறார்.

R.DEVARAJAN said...

செல்வ வளம் நிரம்பியவர்களும் வித்யா தானம் செய்து வந்தனர்.
அத்தகையோரின் நிலங்களுக்கு வரிவிலக்கும் இருந்தது; இறையிலி என்பர்.
மன்னார்குடி ராஜு சாஸ்த்ரிகளும் நிறைய மாணவர்களுக்கு
வேத வித்யையை அளித்து வந்தார்.இவரையும் குலபதி என்றே கூறலாம்.
இவர் மஹான் அப்பைய தீக்ஷிதரின் வழித்தோன்றல் ஆவார்.

தேவ்

Garage Renovation Olathe said...

Very nice blog you have hhere