Monday, January 19, 2009

கூரத்தாழ்வாரை அறிவோம்...1000ஆம் ஆண்டு ஜெயந்தி சிறப்புப் பதிவு-1


ஆச்சார்ய ஹ்ருதயத்தில் கூரத்தாழ்வாரது 1000ஆவது ஜெயந்தி மஹோத்ஸவ சிறப்பு இடுகை இட வேண்டும் என்று அறிந்தவுடன் இந்த மஹானுபாவரைப் பற்றி நமக்கு ஏதும் தெரியாதே என்ன செய்வது, எப்படிச் செய்வது என்ற வருத்தம் ஏற்பட்டது. பதிவர் ஷைலஜாவிடம் விசாரித்ததில் அவர் தமது பங்களிப்பினை கண்ணன் பதிவில் இட இருப்பதாகச் சொன்னார். அடுத்ததாக நான் அணுகியது நண்பர் பரவஸ்து அவர்கள். அவரிடம் ஆச்சார்ய ஹ்ருதயத்தில் போடுவதற்காக என்று கேட்ட மாத்திரம், கோரிக்கையை ஏற்று எழுதி அனுப்பினார். தன்னுடைய கருத்துக்கள் ஏதும் கலவாது, தான் கேட்டறிந்ததை, படித்தறிந்ததை எழுதியதாகக் கூறினார். கூரத்தாழ்வவர் பற்றி அவர் எழுதி அனுப்பியிருக்கும் செய்திகளை 2 அல்லது மூன்று இடுகைகளாக போட நினைத்திருக்கிறேன். எனது வேண்டுகோளை ஏற்று, எழுதிய அவருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கீழே அவரது எழுத்துக்கள்.
----------------------------------------------------------------------------------------

ஸ்ரீமதே இராமானுஜாய நம:

லக்ஷ்மி நாத ஸமாரம்பாம் நாதயாமுன மத்யமாம்!
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்!!


அடியேன், என் சிறு மதிக்கு எட்டிய வரையில், இந்த ஆசார்ய ஹ்ருதயத்தில், கூரத்தாழ்வான், பிறந்த 999 ம் வருடம் அவரைப் பற்றி எழுதும் பெரும் பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது முன் பிறவியில் செய்த புண்ணியமே. ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின், அடிப்படையே குருபரம்பரை தான். ஆசார்ய ஸம்பந்தம் இல்லாமல், எந்த செயலுக்கும், நடை முறைக்கும், அர்த்தம் இல்லாமல் போய்விடும். ஒரு குருவிடம், அவரது சிஷ்யர், மாணாக்கர், அடியார்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு, கலியுகத்தின் மிகச் சிறந்த உதாரணம், கூரத்தாழ்வான்.


ஆங்கில ஆண்டு 2010 ம் வருடத்தில் வரக்கூடிய தை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில், கூரத்தாழ்வான், பிறந்த 1000 ம் வருடம் முடிவுறும். இதைப் படிக்கும் அன்பர்களில் எவரேனும் கூரத்தாழ்வான் பிறந்த ஊரான, கூரத்தில் நடக்க இருக்கும் 1000 வருட நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், அல்லது அவ்ர் கூறியபடி நடக்க முயன்றால், அதுவே இந்த பதிவுக்குக் கிடைக்கும் வெற்றி என எண்ணுகிறேன்.

திரு அவதார வைபவம்:

காஞ்சிக்கு வடமேற்கே சுமார் 5 மைல் தூரத்தில், அரக்கோணம் செல்லும் மார்க்கத்தில் உள்ள கூரம் என்னும், திருத்தலத்தில், கலி ஆண்டு 4111 சௌம்ய வருடம்,(கி.பி 1009) தை மாதம், அஸ்த நட்சத்திரத்தில் தேய்பிறை பஞ்சமி திதி, வியாழக்கிழமை அவதரித்தார். ஹாரீத கோத்ரம், வடமாள் குலத்தைச் சேர்ந்த அனந்தர்-பெருந்தேவி நாயகி தம்பதியற்கு நல் திருமகனாய், ரகு குல திலக இராமனின் அம்சமாகப் பிறந்தார். ஸ்ரீவத்ஸாங்கமிச்ரர் (திருமறுமார்பர்) என்று அழைக்கப்பட்ட கூரேசர், இராமானுஜரால், பின்னாளில் கூரத்தாழ்வான், என்று ஆஸ்ரயிக்கப்பட்டவர்.

திருமணம்:

இரவில் நகர சோதனைக்கு கூரேசர் செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் போது, ஒரு நாள் ,ஆண்டாள் என்னும் கன்னிகையின் இல்லம் தாண்டிச் செல்லும்போது, அவளின் பெற்றோர், தமது மகளின் ஜாதகம் சரி இல்லாததால் , திருமணம் நீண்ட காலம் தடை பட்டிருப்பதை, வருத்தத்துடன் புலம்பிக் கொண்டிருந்தனர். அப்பெண்ணின் ஜாதகப்படி அவள் திருமணம் ஆனால், அவளது கணவன் உயிர் துறப்பான் என்ற ஒரு நிலை.இல்லறப் பற்று இல்லாத போதும், அளவற்ற சீர்வரிசைகளை அனுப்பி ஆண்டாள் என்னும் அந்த கன்னிகையை, தாமே மணம் செய்து கொண்டார் கூரேசர். தம்பதியர் இருவரும், புராணம், இதிஹாஸம் மற்றும் ஸகல சாத்திரங்களையும் கற்றுத்தேர்ந்த ஆழ்ந்த வேத வித்துக்களாக விளங்கினர்.

இராமானுஜர் திருவரங்கம் செல்லப் புறப்பட்ட போது, கைங்கர்யம் செய்தல்:

அரங்கத்திலிருந்து வந்த பட்டர், இராமனுஜரைக் காணிக்கையாக, தர வேண்டும் என்று பேரருளாளனிடம் கேட்டுப் பெறுகிறார். அப்போது இராமானுஜர் கலங்கி நின்று வரதனை விட்டுப்பிரிய மனம் இல்லாமல் நிற்கிறார். அப்போது தமது மடத்திற்குக் கூட தகவல் சொல்லாமல், தமது திருவாராதனப் பெருமாளான தேவப் பெருமாளை மடத்திலிருந்து எழுந்தருளப் பண்ணி வரவும் பகவதாராதனத்திற்கு வேண்டிய பொருள்களை மடத்திலிருந்து கொண்டு வரவும் கூரத்தாழ்வார், முதலியாண்டான்,நடாதூர் ஆழ்வான் ஆகியோரை நியமிக்கிறார். அவர்களும் திருவாராதனப் பெருமாளை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வந்தார்கள்.

அப்போது ஆரம்பித்த தொண்டு உள்ளம், கூரேசரின் இறுதிக்காலம் வரை இராமானுஜரின் தொண்டே தமது பணி என்று வாழ்ந்து இருந்தது.இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய செய்தி என்னவெனில், நித்ய கர்ம- அனுஷ்டானங்களை எந்த சூழ்நிலையிலும் தவற விடக் கூடாது என்பது தான். (தினமும் செய்ய வேண்டிய சந்த்யா வந்தனம், திருவாராதனம் முதலிய கடமைகளைத் தவறவிடாமல் தினமும் எல்லாரும் செய்ய வேண்டும் என்பதை தானே வாழ்ந்து காட்டியிருக்கிறார். அதனால் ஆசார்ய, மற்றும் பகவத் ஸங்கல்பம் கொண்டுள்ள எல்லாரும், இந்த நியமங்களை, கடினம் என்று நினைத்து ஒதுக்காமல், உங்கள் நேரத்தை இதற்கும் சிறிது ஒதுக்கினால் உஙகள் ஆசார்யர்களின் ஹ்ருதயம் நிச்சயம் குளிரும்.

ஆசார்ய சம்பந்தம் வந்து விட்டால், குடும்பத்தை விட்டு விட வேண்டுமா?:

கூரத்தாழ்வார், ஆசார்ய சம்பந்தம் வந்த உடன், தம் இல்லாளைப் பிறிந்து வாழ்ந்தார். அதை அறிந்த இளையாழவார், உடனே கூரேசரை அழைத்து, அவருடைய மனையாளை திருவரங்கத்திற்கு அழைத்து வருமாறு பணித்தார். கூரேசரும் தமது மனையாள் ஆண்டாளை அழைத்து வருவதற்கு, கூரம் சென்றார். அங்கே அவர் முதலில் செய்த காரியம், தம்மிடம் மீதம் இருந்த செல்வங்களை அனைவருக்கும் வழங்கி விட்டு, தம் மனையாள் எனும் செல்வத்தை மட்டும் தம்முடன் இருத்தி, திருவரங்கம் திரும்புகிறார். வரும் வழியில் மதுராந்தகம் அருகே காட்டில் நடந்து வருகையில் “பயமாய்” இருக்கிறது என்று ஆண்டாள் தேவி உரைக்கவும் கூரேசர் “மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம்?” என வினவுகிறார். அதற்கு தேவி அவர்கள் “பொன் வட்டிலில் தினமும் அமுது செய்த தேவரீர் இனிமேல் அமுது செய்ய ஒரே ஒரு பொன் வட்டிலை மட்டும் மிகுத்தினேன்” என்றார். உடனே கூரேசர் அதனை வாங்கி வீசி எறிந்து விட்டு ”இனி பயமின்றி நட!” என்று கூறி அவரை அழைத்துக் கொண்டு உடையவர் இருக்கும் இடமான திருவரங்கம் வந்து சேர்ந்தார். அதனாலேயே கூரேசர் “பொன் வட்டில் தனையெறிந்த புகழுடையோன் வாழியே!” என்று புகழப்பட்டார்.(ஒரு குந்து மணியைக் கூட, தூக்கி எறிய நமக்கு மனப்பக்குவம் வராது.மாறாக, தெருவில் ஏதேனும் பொன் கிடைத்தால், நாம் அதை எடுத்துக் கொண்டு விடுவோம்.!!!)

இங்கு ஆண்டாள் எனும் தேவியும் குடும்ப வாழ்க்கையை விடவில்லை. இளையாழ்வாரும் கூரேசர் துறவியாக வேண்டும் என்று விரும்பவில்லை.ஆசார்யர்களின் மனப்போக்கை அறிந்தவர்கள் இதை நன்றாகப் புறிந்து கொண்டு குடும்ப வாழ்க்கையைக் கைவிடாமல், அதே நேரத்தில் ஆசார்யர்களுக்கும், ஆண்டவனுக்கும் நம்மால் முடிந்த கைங்கர்யம் செய்யலாமே.

கூரத்தின் சிறப்பும் அடையா நெடுங்கதவமும்:

அக்காலத்தில் கூரத்தின் சிறப்பே, கூரேசரின் இல்லத்தில் தினமும் நடைபெற்ற அன்னதானம் தான். தர்மம் தலை காக்கும் என்னும் நியமம் உண்மையாயின், அத்தகைய அன்னதானம் தான் கூரேசரின் வாழ்வையே திசை மாற்றும் கருவியாக விளங்கியது.அவரின் செல்வச் செழிப்புக்கு அளவே இல்லாமல் இருந்தது.(இக்ஷுவாகு குல திலக இராமனின் அம்ஸம் என்றால் சும்மாவா?). தோன்றிற் புகழொடு, தோன்றிய கூரேஸரின் திருமாளிகையில், காலை முதல், இரவு வரை, அங்கு வரும் அடியார்க்கு , இல்லை என்று சொல்லாமல் அன்னதானம் நடக்கும்.அதனால் அவரது இல்லத்தின் பிகப்பெரிய கதவு, அடையா நெடுங்கதவம் என்று அழைக்கப்பட்டது.கதவை அடைக்க வேண்டிய சூழ்நிலை வரவில்லை எனும்போது, ஏன் அப்படி ஒரு நெடுங்கதவம் வேண்டும்? பேரருளாளனின் அருள் கூரேசருக்குக் கிடைத்தது யாரால்?. அந்த நெடுங்கதவின் ஓசை தான் கூரேசரின் அருள்வாழ்வுக்கு வித்திட்டது. கோனேரி வாழும் குருகாய்- பிறப்பேனே என்று ஆழ்வார்கள் பாடியது போல, மரமாய்ப் பிறந்தாலும், ஓசை தரும் மணியாய் பிறந்தாலும் கூரேசரின் இல்லத்தின கதவாய் நாம் பிறந்திருக்கலாமே, என்ற ஆதங்கம் எல்லார் மனத்திலும் இருந்தது என்றால் மிகை ஆகாது. அத்தகைய பெருமை வாய்ந்த நெடுங்கதவம் தினமும் எப்போது அடைக்கப்படும்? காஞ்சிப் பேரருளாளனின் திருக்கோவிலில் இரவு திருவாராதனம் முடிந்து, திருக்காப்பு செய்யப்பட்ட பின்னரே, அடையா நெடுங்கதவம் அடைக்கப்படும். இவ்வாறாக கூரேசர் இல்லத்தில் எப்போதும் எல்லா திருமால் அடியார்களுக்கும் உணவு உபசரிப்பு கண்டிப்பாக உண்டு.

காஞ்சியில் ஒரு நாள் உற்சவத்தின் காரணமாக இரவில் திருவாராதனம் முடிவதற்குத் தாமதமானது. அதனால் பேரருளாளன், ஆலயத்திருக்கதவம் திருக்காப்பு பெறுவதற்குத் தாமதமானது. ஆனால் கதவின் திருக்காப்பு செய்யப்படும் முன்னரே, அதன் கிண்கிணிகளின் ஓசை பெருமாளுக்கும், தாயாருக்கும் கேட்டது. அப்போது, தனக்கு ஆலவட்டம் வீசிக்கொண்டிருந்த, தமது அந்தரங்கரான திருக்கச்சி நம்பிகளிடம் ”நம்பீ! எக்காரணத்தால், நமது திருவாராதனம் முடியும் முன்பே, கோயில் கதவம் திருக்காப்பு செய்யப்படுகிறது என பேரருளாளன் வினவ, அதற்கு நம்பி, "இது நம் கோயில் கதவத்தின் ஓசை அன்று. தொலைவில் உள்ள கூரேசரின் திருமாளிகையின் அடையா நெடுங்கதவத்தின் ஓசை" என்று பதிலிறுத்தார். அதைக்கேட்ட தேவப்பிரான் “கூரேசனின் ஐஸ்வர்யமோ நம்மை இங்ஙனம் மயக்கிற்று?” என வியந்தான். பேரருளாளனே தமது செல்வச் செழிப்பையும், தர்மத்தையும் வியந்தார் எனும் செய்தியை திருக்கச்சி நம்பிகள் மூலம் கூரேசர், அறிந்து, மனம் உருகி, கண்ணீர் உகுத்து, செய்வதறியாது, திகைத்தார். பின்னர் ஒரு திடமான முடிவு எடுத்து, தம்மிடம் இருந்த நிலையாச் செல்வங்களில் பெரும்பாலானவற்றை ஏழைகளிடம் தானம் செய்து விட்டு, திருக்கச்சி வந்து எதிராசரை சரணடைகிறார். எதிராசரும் அவருக்கு, பஞ்ச ஸம்ஸ்காரம் செய்வித்து, தமது சீடராக ஏற்றுக்கொண்டார். கூரேசனுக்கு, “கூரத்தாழ்வான்” என்ற திருநாமம் இட்டார்.பின்னாளில் இவர் இராமானுஜரின் “பவித்ரம்” என்று அழைக்கப்பட்ட பெருமை பெற்றார்.

தண்டும் பவித்ரமும்:

திருக்கோட்டியூர் நம்பியிடம் திருமந்திரப் பொருள் அறிய வேண்டி இராமானுஜர் முயற்சி செய்த போது, நம்பிகள் இளையாழ்வாரிடம் “மறு நாள் தண்டும், பவித்ரமுமாக, தனியே வரவும்” என நியமிக்கிறார். அவ்வாறே இளையாழ்வார் மறு நாள் செல்கிறார். ஆனால் தனியாக அல்ல. முதலியாண்டான் , மற்றும் கூரேசரை உடன் அழைத்துச் சென்று நம்பிகளை அடைகிறார். அப்போது நம்பிகள் கோபமாக இராமானுஜரை நோக்கி “உம்மை தனியாகத் தானே வரச்சொன்னேன், உம்மோடு இருவரை ஏன் அழைத்து வந்தீர்” என வினவ, அதற்கு, நமது முனி, முதலியாண்டானைக் காட்டி, இவர் தான் என் தண்டு என்றும், கூரேசரைக் காட்டி, இவர் தான் என் பவித்ரம் என்றும் தமது சீடர்களை பெருமையுடன் உகக்கிறார். இந்த பெருமை அடைய கூரேசரை விட வேறு ஒருவர்க்குத் தகுதி உண்டோ? இங்கு முக்கிய செய்தி, நல்ல குரு என்பவர் தமது தகுதி உடைய சீடர்களுக்கும், தம்மைப்போல நல்ல கதி அடைய வேண்டும் என்றே விரும்புவார்.

.....கூரத்தாழ்வாரைத் தொடர்வோம், குருவருளைப் பெறுவோம்

39 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

கட்டுரையாக எழுதிக் கொடுத்த பரவஸ்து அண்ணாவுக்கு நன்றியை இன்னொரு முறை சொல்லிக் கொள்கிறேன். பிற பகுதிகளையும் எழுதித் தந்தருளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம்!

பரவஸ்து அண்ணா, அருமையான தொகுப்பை, பணியை, பதிவை ஆரம்பிச்சிருக்கீங்க!
கூரேசன் வந்து, தங்களிடம் பதிவை வாங்கணும்-ன்னு இருக்கு போல!:)
கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கூரேசன் வந்து, தங்களிடம் பதிவை வாங்கணும்-ன்னு இருக்கு போல!:)//

அவசரம், அவசரமாகப் போட்ட பின்னூட்டம்!
கூரேசனே வந்து, தங்களிடம் முதல் பதிவை வாங்கணும்-ன்னு இருக்கு போல இருக்கு-ன்னு சொல்ல வந்தேன்!

வாழ்த்துக்கள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இதைப் படிக்கும் அன்பர்களில் எவரேனும் கூரத்தாழ்வான் பிறந்த ஊரான, கூரத்தில் நடக்க இருக்கும் 1000 வருட நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், அல்லது அவ்ர் கூறியபடி நடக்க முயன்றால், அதுவே இந்த பதிவுக்குக் கிடைக்கும் வெற்றி என எண்ணுகிறேன்//

அருமை!
சேஷத்வம் என்னும் கைங்கர்யம் பற்றிச் சொல்லிக் கொண்டே இருந்தால்,
மனம் பற்றும்! மனம் பற்றி, நாமும் சொன்ன வண்ணம் நடந்து, அடியார்கள் அனைவரும் அவ்வண்ணமே ஒழுகுவார்கள்!

இந்த ஆயிரமாவது ஆண்டில் சொல்லிக் கொண்டே இருப்போம்!
நாம் மன்னி வாழ, நெஞ்சமே, "சொல்லுவோம் அவன் நாமங்களே!"

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அப்பெண்ணின் ஜாதகப்படி அவள் திருமணம் ஆனால், அவளது கணவன் உயிர் துறப்பான் என்ற ஒரு நிலை//

ஆனால் கூரேசர் பெருவாழ்வு வாழ்ந்தார் பார்த்தீர்களா?
இராமானுசருக்கு 120 ஆண்டுகள் சொல்வார்கள்! கிட்டத்தட்ட அதே ஆயுள் பாவம் கூரேசருக்கு!

இதில் இருந்தே தெரிகிறது: ஜோதிட சாத்திரத்தை மதிக்கும் அதே வேளையில் சுயநலமாகச் சொல்லப்படும் சில ஜோதிடர்களின் சொல்லையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது!

ஜோதிட ஞானம், பரிகாரம் போன்ற கர்மாக்களைக் காட்டிலும், எம்பெருமான் உயர்ந்தவன்!

எம்பெருமான் திவ்ய சரணாரவிந்தத்தின் முன்னால் நாள் என் செய்யும்? வினை தான் என் செய்யும்? எனை நாடி வந்த கோள் என் செய்யும்? கொடுங் கூற்று என் செய்யும்?
ஆசறு நல்ல நல்ல! அவை நல்ல நல்ல! அடியார் அவர்க்கு மிகவே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய செய்தி என்னவெனில், நித்ய கர்ம- அனுஷ்டானங்களை எந்த சூழ்நிலையிலும் தவற விடக் கூடாது என்பது தான்//

அருமையாகச் சொன்னீர்கள்!
வெறுமனே, அரை மணி நேரம், விதியே-ன்னு நித்ய கர்ம- அனுஷ்டானங்களைச் செய்யாமல், "பாவம்" உணர்ந்து, திருவாராதனம் செய்ய வேண்டும்! அதான் இப்படி நியமனம் செய்து வைத்தார்.

பின்னாளில் நித்ய ஆராதனப் பொருட்களோடு, உடையவரின் செருப்பையும் (பாதுகையும்), ஒரே பெட்டியில் வைத்த போது, வெறுமனே கர்மானுஷ்டானம் செய்பவர்களாக இருந்தால் பொங்கி இருப்பார்கள்! இவர்கள் பாவம் உணர்ந்து கர்மானுஷ்டானம் செய்பவர்கள் ஆகையாலே, பாவனையை உணர முடிந்தது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஒரு பொன் வட்டிலை மட்டும் மிகுத்தினேன்” என்றார். உடனே கூரேசர் அதனை வாங்கி வீசி எறிந்து விட்டு ”இனி பயமின்றி நட!” என்று கூறி//

ஞான வைராக்கிய பூஷணம்-ன்னு சொல்றது எவ்ளோ சரி பாருங்க!
தேசிகரும், அவர் மனைவியும் கூட இப்படியே நடந்து கொள்வார்கள்!
உஞ்ச விருத்தியில் அரிசியோடு, தங்கமும் கலந்து யாரோ பிட்சையிட, அதை தேசிகரும் இப்படியே வீசுவார்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//முதலியாண்டானைக் காட்டி, இவர் தான் என் தண்டு என்றும், கூரேசரைக் காட்டி, இவர் தான் என் பவித்ரம் என்றும் தமது சீடர்களை பெருமையுடன் உகக்கிறார்//

தண்டு, பவித்திரம் - இவர்களுக்கும் உபதேசம் கிட்டியதா? எப்போது? அறிய ஆவலாய் உள்ளோம்! மேலும் தொடருங்கள்!

எப்போது அடுத்தடுத்த பதிவு-ன்னும் சொல்லி விடுங்கள் சுந்தர் அண்ணா! :)
இல்லையாயின் மெளலி அண்ணன் ஒவ்வொரு வியாழனும் அவரே கர்ச்சீப் போட்டுருவார்! :)))

Anonymous said...

\\தண்டு, பவித்திரம் - இவர்களுக்கும் உபதேசம் கிட்டியதா? எப்போது? அறிய ஆவலாய் உள்ளோம்! மேலும் தொடருங்கள்!

எப்போது அடுத்தடுத்த பதிவு-ன்னும் சொல்லி விடுங்கள் சுந்தர் அண்ணா! :)
இல்லையாயின் மெளலி அண்ணன் ஒவ்வொரு வியாழனும் அவரே கர்ச்சீப் போட்டுருவார்! :)))//

பவித்ரம் உடனே கிட்டும். தண்டு மெதுவாகக் கிட்டும். அதற்குக் காரணமும் உண்டு.பின்னர் வரும் பகுதிகளின் மூலம் அது விளங்கும் என்று நம்புகிறேன்.

பதிவின் அடுத்தடுத்த பகுதிகளை வெளியிடுபவர்,மௌலி அவர்கள் தான்.அவருடைய திருக்கரங்கள், அடுத்த , அடுத்த பகுதிகளை வெளியிடுவதற்காக, அடியேனும் காத்திருக்கிறேன்.

Anonymous said...

//ஜோதிட ஞானம், பரிகாரம் போன்ற கர்மாக்களைக் காட்டிலும், எம்பெருமான் உயர்ந்தவன்!//

ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்திலே, ஜோதிஷம், கோள்கள் ஆகியவற்றுக்கு மாற்றாக, நம்மாழ்வாரின் திருவடித் துகள்களை, சரணாகப் பற்றினால், கோள்களின் ஆதிக்கம் இருக்காது என்று கூறுவர்.

எம்பெருமானின் ஸ்ரீ சடாரியாக, நம்மாழ்வார் இருப்பதாக, ஐதீகம். கூரேசர்,அதை நடைமுறைப் படுத்தினார்.வாழ்வில் வெற்றி கண்டார்.

Kavinaya said...

அருமையான விரிவான பதிவிற்கு பரவஸ்து அவர்களுக்கும் மௌலிக்கும் நன்றிகள் பல.

குமரன் (Kumaran) said...

எதிர்பார்க்காத நேரத்தில் ஆசார்ய ஹ்ருதயத்தில் ஒரு ஆச்சரியம். 'பரவஸ்து' சுந்தர் அவர்கள் மிக சுந்தரமாகச் சொல்லிவரும் கூரத்தாழ்வான் திருச்சரிதம். மிக நன்றாக இருக்கிறது. நன்றி சுந்தர் & மௌலி.

குமரன் (Kumaran) said...

வைணவ பரிபாசை கொஞ்சம் மிகுதியோ என்று தோன்றுகிறது. ஆனால் அவரவர்க்கு எளிதாக எப்படி எழுத வருகிறதோ அப்படித் தானே எழுத இயலும்?! இப்படியே தொடர்ந்து எழுதுங்கள்.

இராமானுஜரால், பின்னாளில் கூரத்தாழ்வான், என்று ஆஸ்ரயிக்கப்பட்டவர் - என்ற சொற்றொடர் தவறான பொருளைத் தருவது போல் இருக்கிறது. எம்பெருமானாரிடம் ஆஸ்ரயித்தவர் கூரத்தாழ்வான் தானே? இங்கே கூரத்தாழ்வான் இராமானுஜரால் ஆஸ்ரயிக்கப்பட்டவர் என்ற சொற்றொடர் தவறான பொருள் தருகின்றது.

கூரேசர் இரவு நகர சோதனைக்குச் செல்வார் என்ற செய்தி புதிது.

கூரேசர் எப்படி எப்போது முதன்முதலாக எம்பெருமானாரைச் சந்தித்தார் என்று தெரியுமா? திருக்கச்சி வரதனிடமிருந்து உடையவரை திருவரங்கத்தரையர் பெற்ற போதே கூரேசருக்கு இராமானுஜரின் தொடர்பு கிட்டிவிட்டதா? ஆனால் செல்வத்தைத் துறந்து சென்றது திருவரங்கத்திற்கு என்பது போல் இருக்கிறதே?! அப்படியென்றால் இராமானுஜரின் தொடர்பு ஏற்பட்ட பின்னரும் கூரேசர் 'அம்பரமே, தண்ணீரே, சோறே' அறம் செய்து கொண்டிருந்தாரா?

அரங்கத்திலிருந்து வந்த பட்டர், இராமனுஜரைக் காணிக்கையாக, தர வேண்டும் என்று பேரருளாளனிடம் கேட்டுப் பெறுகிறார் - இந்த சொற்றொடரும் தவறான பொருளைத் தருகிறது. இராமானுஜரை அரங்கத்திலிருந்து வந்தவர் வெகுமதியாகத் தானே பெற்றுச் செல்கிறார். இராமானுஜரை வரதன் காணிக்கையாகத் தந்தான் என்றால் யாருக்குக் 'காணிக்கை' செலுத்தினான்? அவன் காணிக்கை செலுத்தும் அளவிற்கு அவனை விட உயர்ந்தவர் யார்?

காஞ்சிபுரத்தில் இருந்து கிளம்பும் போது இராமானுஜர் துறவி ஆகிவிட்டாரா இல்லையா? 'மடம்' என்று குறிக்கப்பட்டது துறவிகள் தங்கும் 'திருமடமா' அன்றி இல்லறத்தார் தங்கும் 'திருமாளிகையா'?

மொத்தத்தில் மிக அருமையாக வந்திருக்கிறது இந்தப் பகுதி. ஓரிரு குறைகளைச் சுட்டிக் காட்டியதற்கு மன்னிக்கவும். குறை காண வேண்டும் என்ற எண்ணம் இல்லை. சிறு குறைகளும் நீக்கப்பட வேண்டும் என்ற எண்ணம்.

Raghav said...

சிறப்பாக எழுதியுள்ளீர் சுந்தர் அண்ணா... உங்களை எழுத வைத்த மெளலி அண்ணாவிற்கும் நன்றி..

கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம்..

Anonymous said...

//இராமானுஜரால், பின்னாளில் கூரத்தாழ்வான், என்று ஆஸ்ரயிக்கப்பட்டவர் - என்ற சொற்றொடர் தவறான பொருளைத் தருவது போல் இருக்கிறது. எம்பெருமானாரிடம் ஆஸ்ரயித்தவர் கூரத்தாழ்வான் தானே? இங்கே கூரத்தாழ்வான் இராமானுஜரால் ஆஸ்ரயிக்கப்பட்டவர் என்ற சொற்றொடர் தவறான பொருள் தருகின்றது.//

பின்னாளில், இராமானுஜருக்கு பரமபதத்தில் இடம் உண்டா, இல்லையா எனும் கேள்வி எழுந்தபோது, அது கூரத்தாழ்வான் மூலமாக உறுதிபடுகிறது. ஆசார்யனின் கட்டளையை மீறிய எம்பாருமானார்க்கு, நரகம் கிட்டுமோ?எனும் எண்னம்.(திருக்கோட்டியூர் சம்பவம் நினைவிருக்கிறதா?)ஆனால், நம் கூரேசர், தமது மோட்சத்தைப் பெற்றபோது, அவரோடு தொடர்பு பெற்றோர்க்கும் மோட்சம் உண்டு என்று அரங்கன் அருளினான்.அதனால் எம்பருமானார் மிகுந்த மகிழ்ச்சி கொண்டார். அது பற்றிய பதிவும் பின்னால் வருகிறது. அப்போது இராமானுஜர் இவ்வாறு கூறியதாக சிலர் கூறுவர்.எனது சொல்லில் பிழை இருப்பின் மன்னித்து அருளவும்.//

//கூரேசர் இரவு நகர சோதனைக்குச் செல்வார் என்ற செய்தி புதிது.//

நகரத்தில் மிகவும் பெறிய மனிதர்.அரசனைப் போல் அங்கிருந்த குடிகளின் மீது மிகுந்த அக்கறை செலுத்தியதில் வந்த வெளிப்பாடே இது.//

//கூரேசர் எப்படி எப்போது முதன்முதலாக எம்பெருமானாரைச் சந்தித்தார் என்று தெரியுமா?

கதவ ஓசசை பற்றி நம்பிகள் கூறியதும் உடனே பொன் பொருள் தானம் செய்து, கச்சி விரைகிறார்.முன்பே யதிராஜரைப் பற்றி அறிந்திருந்ததால், விரவில் சீடரானார்.//

// திருக்கச்சி வரதனிடமிருந்து உடையவரை திருவரங்கத்தரையர் பெற்ற போதே கூரேசருக்கு இராமானுஜரின் தொடர்பு கிட்டிவிட்டதா?//

ஆம். அரையர் யதிராஜரைப் பெறும் முன்பே கூரேசர், முதலிகள் மற்றும் நடாதூர் ஆழ்வான் ஆகியோர் யதிராசருக்கு, அணுக்கச்சீடர்கள். யதிராசர் தமது 32 வது வயதில் துறவியானர். அடுத்த வருடம் தமது 33 ம்வயதில் அரங்கத்தில் வைணவ மடப் பொறுப்பை ஏற்கிறார்.//

ஆனால் செல்வத்தைத் துறந்து சென்றது திருவரங்கத்திற்கு என்பது போல் இருக்கிறதே?! அப்படியென்றால் இராமானுஜரின் தொடர்பு ஏற்பட்ட பின்னரும் கூரேசர் 'அம்பரமே, தண்ணீரே, சோறே' அறம் செய்து கொண்டிருந்தாரா?//

செல்வத்தைத் துறந்து, யதிராஜருடன் கச்சியில் தங்க ஆரம்பிக்கிறார். அதன் பின் அதே வருடம் அரையர், யதிராசரை பெறுகிறார். அப்போது யதிராஜருடன் கூரேசர் அரங்கம் செல்கிறார்.

//அரங்கத்திலிருந்து வந்த பட்டர், இராமனுஜரைக் காணிக்கையாக, தர வேண்டும் என்று பேரருளாளனிடம் கேட்டுப் பெறுகிறார் - இந்த சொற்றொடரும் தவறான பொருளைத் தருகிறது. இராமானுஜரை அரங்கத்திலிருந்து வந்தவர் வெகுமதியாகத் தானே பெற்றுச் செல்கிறார். இராமானுஜரை வரதன் காணிக்கையாகத் தந்தான் என்றால் யாருக்குக் 'காணிக்கை' செலுத்தினான்? அவன் காணிக்கை செலுத்தும் அளவிற்கு அவனை விட உயர்ந்தவர் யார்?//

தவறான சொல்லாடல்.வெகுமதி என்று எழுதி இருக்க வேண்டும், திருத்திக் கொள்கிறேன். மன்னிக்கவும்.
தாங்கள் , இத்தொடரை ஆழ்ந்து, இலயித்துப் படிப்பது, இதன் மூலம் தெரிகிறது.சுட்டுதலுக்கு நன்றி.

//காஞ்சிபுரத்தில் இருந்து கிளம்பும் போது இராமானுஜர் துறவி ஆகிவிட்டாரா இல்லையா? 'மடம்' என்று குறிக்கப்பட்டது துறவிகள் தங்கும் 'திருமடமா' அன்றி இல்லறத்தார் தங்கும் 'திருமாளிகையா'?//

ஆம், கச்சியிலேயே, துறவியாகி விட்டார்.அவருக்குத் துறவளித்தது மனிதப்பிறவியல்ல. எல்லாம் வல்ல வரதனே. துறவு வழங்கிய அன்று, மிகுந்த வருத்தத்துடன் நமது முனி, ஆலயம் வருகிறார்.அப்போது கச்சி நம்பிகளின் வரவுக்குக் கூடக் காத்திராமல் வரதர், இராமானுஜரை “எதிராசரே” என்று முகமன் அழைக்கிறார். அதையே நியமமாகப்பெற்று, அங்குள்ள அநந்தசஸரசில் நீராடி,காவி அணிந்து, பேரருளாளனை அடைகிறார். அவருக்கு அர்ச்சக முகமாக துறவளித்து, ”இராமானுஜ முனி” எனப் பெயரளித்து, துறவியாக்கினார்.

பின்னர், அங்கு வந்த கச்சி நம்பிகளை வரதன் அழைத்து, இராமானுஜரைத் தக்க மடத்தில் இருத்துமாறு அறிவுறுத்துகிறார்.அதன்படி ஒரு தனி மடத்தில் நமது முனி, தங்குகிறார்.(தமது சொந்தத் திருமாளிகையில் அல்ல)

மெளலி (மதுரையம்பதி) said...

//ஆசார்ய ஹ்ருதயத்தில் ஒரு ஆச்சரியம். //

ஹிஹி...நினைவிருக்கிறதா குமரன், உங்களிடம் ஸ்ரீவைஷ்ணவ ஆச்சார்யார்கள் பற்றி எழுதுங்கள் என்று கூறியே இன்வைட் அனுப்பினேன்.... :)

மெளலி (மதுரையம்பதி) said...

நீங்களே வந்து பதில் அளித்தமைக்கு நன்றி பரவஸ்து அண்ணா.

Anonymous said...

//அருமையான விரிவான பதிவிற்கு பரவஸ்து அவர்களுக்கும் மௌலிக்கும் நன்றிகள் பல.//

நன்றி கவிநயா, மற்றும் ,(பரவஸ்து இராகவன்).எல்லா நன்றிகளும் இயக்குனர்களுக்கே.மௌலி என்னும் இயக்குனர் சொல்படி, அடியேன் சிறிது தொகுத்துள்ளேன். அம்புட்டுத்தேன்.

குமரன் (Kumaran) said...

நல்ல பதில்கள் சுந்தர் அண்ணா. (இரவி, மௌலி, இராகவன் எல்லோரும் அண்ணா என்று விளிக்கும் போது நான் மட்டும் அண்ணா என்று சொல்லாமல் அபராதப்பட விரும்பவில்லை. :-) )

ஆஸ்ரயம் என்பது அடிபணிதல் என்ற பொருளில் மட்டுமே பயன்படுத்தப்படுவது. கூரேசரது திருமுடி சம்பந்தத்தால் உடையவருக்கு பரமபதம் சித்தித்தது என்று சொல்லும் மரபு இருந்தாலும் அங்கே ஆஸ்ரயம் என்ற சொல்லைச் சொல்வது பொருந்தாது என்றே தோன்றுகிறது. திருவடி தொடர்பால் பரமபதம் சித்தித்திருந்தால் அப்படி சொல்வது பொருந்தும். திருமுடி சம்பந்தத்தால் பரமபதம் நிச்சயமாயிற்று என்று தெரிந்த நேரத்தில் உடையவர் கூரேசரை கூரத்தாழ்வான் என்று அழைத்தார் என்று சொல்லும் போது 'ஆஸ்ரயம்' என்ற சொல் இல்லாமல் சொன்னால் இன்னும் மிக நன்றாக இருக்கும் என்பது அடியேனின் கருத்து.

குமரன் (Kumaran) said...

செல்வத்தைத் துறந்து, யதிராஜருடன் கச்சியில் தங்க ஆரம்பிக்கிறார். அதன் பின் அதே வருடம் அரையர், யதிராசரை பெறுகிறார். அப்போது யதிராஜருடன் கூரேசர் அரங்கம் செல்கிறார்.

குமரன் (Kumaran) said...

//பின்னர், அங்கு வந்த கச்சி நம்பிகளை வரதன் அழைத்து, இராமானுஜரைத் தக்க மடத்தில் இருத்துமாறு அறிவுறுத்துகிறார்.அதன்படி ஒரு தனி மடத்தில் நமது முனி, தங்குகிறார்.(தமது சொந்தத் திருமாளிகையில் அல்ல)
//

தெளிவு படுத்தியதற்கு மிக்க நன்றி பரவஸ்து அண்ணா.

குமரன் (Kumaran) said...

நீங்கள் இராகவனை மட்டும் 'பரவஸ்து' என்று அழைத்ததைப் பார்த்தால் அது குடும்பப்பெயரைப் போல் தோன்றுகிறது. இராஜாஜிக்கு 'சக்கரவர்த்தி' என்ற குடும்பப்பெயர் இருந்ததைப் போன்ற குடும்பப்பெயரா இது?

S.Muruganandam said...

கூரத்தாழ்வாரின் ஆயிரம் ஆண்டு கொண்டாடத்திற்க்காக அவரது திருக்கதையை எழுதிக்கொடுத்த பரவஸ்து ஐயா அவர்களுக்கும் பதிவிடும் சுந்தர் ஐயா அவர்களுக்கும் ஆயிரம் நன்றிகள்.

கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம்

Anonymous said...

//நீங்கள் இராகவனை மட்டும் 'பரவஸ்து' என்று அழைத்ததைப் பார்த்தால் அது குடும்பப்பெயரைப் போல் தோன்றுகிறது. இராஜாஜிக்கு 'சக்கரவர்த்தி' என்ற குடும்பப்பெயர் இருந்ததைப் போன்ற குடும்பப்பெயரா இது?//

அது குடும்பப்பெயர் என்று கூற முடியாது.ஆனால் வழி வழியாக ஒரு பெரும் புண்ணிய சம்பந்தம் உண்டு. எங்களது ஆசார்யர் பெயர் வேங்கடேச மஹா குரு. ரகஸ்ய குருபரம்பரையில் ஸ்வாமி நிகமாந்த மஹா தேசிகன் வாயிலாகக் கணக்கிடும்போது, அந்த குரு பரம்பரையின் 11 வது குருவாக வந்தவர் ஸ்வாமி வேங்கடேச மஹா குரு,எங்களது குலபதி,(இங்கு குலபதி என்று ஒரு கட்டுரை வந்துள்ளது. அது போன்ற ஆசார்யர். அப்படிபட்ட ஆசார்யர்களை, கூடஸ்தர் என்றும் குறிப்பிடலாம்.

வேங்கடேச மஹா குரு என்னும் மஹான், முன்பு பெரியாழ்வார் செய்த பரதத்வ(பாண்டியனின் பொற்கிழி அறுத்தது)நிர்ணயத்திற்கு, ப்ரமாணம்/வ்யாக்யானம் செய்து, அதன் மூலம் பரவஸ்து என்னும் திருப்பெயர் பெற்றார்.பர என்றால்எல்லாவற்றிற்கும் மேலான(பரம்பொருள்நாரணன்).வஸ்து என்றால் ஒரு பொருள் அல்லது சாதனம்.மேலான பொருள்.

பெரியாழ்வாரின் பரதத்வ நிர்ணயத்தை ,நன்கு எடுத்தெழுதி, ப்ரமாணம் தந்ததால், அவர் பரவஸ்து என்று போற்றப்பட்டார்.

அவருடைய சிஷ்யர்கள், அவர்களின் வழிவந்தவர்க்ளும் பரவஸ்து என்றே அழைக்கப்படலாயினர்.எங்களைப் போன்றே, பரவஸ்து என்று அழைக்கப்படும் பல குடும்பங்கள் இன்னும் உள்ளன்.

இராஜாஜியின் பரம்பரை அனேகமாக நல்லான் சக்கரவர்த்தி பரம்பரையாக இருக்கும் என்று ஊகிக்கிறேன்.அந்தப் பரம்பரைக்கு, மிகுந்த ஏற்றம் உண்டு.
உடையவரின் சீடரான திருமலைச் சக்கரவர்த்தி எனும் வேதியர்,ஆற்றில் மிதந்து வந்த தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த ஒரு அனாதைப் பிணத்தைக் கரையேற்றி, ஈமக்கிரியை செய்தார்.ஏனெனில் அப்பிணத்திடம் திருமண் காப்பு சங்கு சக்கரம் இருந்தது. ஆனல் அவர் செய்கையைப்பொறாத மற்ற வேதியர் அவரை ஒதுக்கி வைத்தனர்.

ஆனால் மற்ற வேதியர் செய்கையை அரங்கன்ஒப்பவில்லை.அர்ச்சகர் மூலம் ”நாட்டுக்குப்பொல்லானாயினும்
நமக்கு நல்லான்” என்று அறிவித்தார்.எனவே நல்லான் சக்கரவர்த்தி ஆனார்.அதன் பின் குக்கிராமம், காடு மலை எல்லாம் சென்று வைணவம் பரப்பினார். பின்னாளில் உடையர்,நீலகிரி மலைச் சாரலில் பாலமலை அடிவாரம் சென்ற போது, நல்லானின் சீடர்கள்(சேரி வாழ் வேடுவர்கள்,யதிராசரைக் காத்து(பெருமழை பெய்த இரவில்) உபசரித்து,உணவளித்துத் தங்க வைத்தனர்.இதில் பெருமகிழ்வடைந்த எம்பெருமானார் “நல்லான் எனும் காளமேகம் மழையாகப் பொழிந்ததோ” என்று அவரது வேடுவச் சீடர்களைப் பாராட்டினார்.

ஒருவேளை இராஜாஜி அந்த நல்லான் , சீடர்களின் பரம்பரையோ? அரிசன ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தி, அனைவருக்கும் இறையருள் எனும் காளமேகம் கிடைக்கப் பாடு பட்டாரோ?

தங்களில் எவருக்கேனும் பரம்பரைப் பெயர் இருந்தால் அதைப் புறம் தள்ள வேண்டாம்.ஒவ்வொரு பரம்பரைப் பெயருக்குப் பின்னும் ஒரு புனிதச் செயல் இருக்கும். இது ஆசார்யர்களிம் பெருமை பேசும் தளம் என்பதால், எனது தம்பி இராகவனை, இந்தத் தளத்தில் “பரவஸ்து இராகவன்” என்று உரிமையுடன் அழைத்தேன்.

Anonymous said...

//திருமுடி சம்பந்தத்தால் பரமபதம் நிச்சயமாயிற்று என்று தெரிந்த நேரத்தில் உடையவர் கூரேசரை கூரத்தாழ்வான் என்று அழைத்தார் என்று சொல்லும் போது 'ஆஸ்ரயம்' என்ற சொல் இல்லாமல் சொன்னால் இன்னும் மிக நன்றாக இருக்கும் என்பது அடியேனின் கருத்து.//

தங்கள் கருத்துக்கு நன்றி.விளக்கத்தை ஏற்கிறேன், த்வறுக்கு வருந்துகிறேன்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

"பரவஸ்து" சுந்தர் அண்ணா,
தங்களிடம் ஒரு ஐயம் கேட்க விழைகிறேன்! ஐயத்தில் தவறு இருந்தால் அடியேனை மன்னிக்கவும்!

//இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய செய்தி என்னவெனில், நித்ய கர்ம- அனுஷ்டானங்களை எந்த சூழ்நிலையிலும் தவற விடக் கூடாது என்பது தான். (தினமும் செய்ய வேண்டிய சந்த்யா வந்தனம்//

இது கூரத்தாழ்வார் சொன்ன கருத்தா? இல்லை தங்கள் கருத்தா? இல்லை வேறு நூல்களில் தாங்கள் கேட்டு/படித்து அறிந்ததா?

இன்னொரு ஐயமும் கூட:
நித்ய கர்ம- அனுஷ்டானங்களை "எந்த சூழ்நிலையிலும்" தவற விடக் கூடாது என்று சொல்கிறீர்கள்! சுவாமி புறப்பாடு ஆகும் சில மாலை வேளைகளில் சந்தி முதலானவற்றைச் செய்யாமல் சுவாமி புறப்பாடுகளில் அல்லவா கவனம் செலுத்துகிறார்கள்? அப்போது அந்தக் குறிப்பிட்ட காலத்தில் தவற விடுகிறார்களே! அது தவறாகுமா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அப்படிபட்ட ஆசார்யர்களை, கூடஸ்தர் என்றும் குறிப்பிடலாம்//

ஆகா! பிரபன்ன ஜன கூடஸ்தர் என்பதும் இதனால் தானோ?

//அந்த குரு பரம்பரையின் 11 வது குருவாக வந்தவர் ஸ்வாமி வேங்கடேச மஹா குரு,எங்களது குலபதி//

வேங்கடேச மகா குரு திருவடிகளே சரணம்!
அவர் வழியில், வந்து வழி வழி ஆட்செய்யும் பரவஸ்து வழித்தோன்றல்களுக்கும்...
அடியேன் அடிக்கீழ் வணக்கங்கள்! வாழ்த்துக்கள்!

//தங்களில் எவருக்கேனும் பரம்பரைப் பெயர் இருந்தால் அதைப் புறம் தள்ள வேண்டாம்.ஒவ்வொரு பரம்பரைப் பெயருக்குப் பின்னும் ஒரு புனிதச் செயல் இருக்கும்//

உண்மை! அந்தப் பெயரின் பின்னுள்ள காரண காரியங்களை, வரலாற்றுக் குறிப்புகளை, அவரவர் இல்லத்தில், இணையத்தில் பதிந்து வைக்க வேண்டும்! பிற்காலச் சந்ததியினருக்கு அதனால் குலப்பெருமை என்பதை விட, அதனால் கைங்கர்ய ஊக்கம் என்றே கொள்ளலாம்!

//பெரியாழ்வாரின் பரதத்வ நிர்ணயத்தை ,நன்கு எடுத்தெழுதி, ப்ரமாணம் தந்ததால், அவர் பரவஸ்து என்று போற்றப்பட்டார்//

இந்த நூல் இன்றும் உள்ளதா?

Anonymous said...

//இது கூரத்தாழ்வார் சொன்ன கருத்தா? இல்லை தங்கள் கருத்தா? இல்லை வேறு நூல்களில் தாங்கள் கேட்டு/படித்து அறிந்ததா?//

கே, ஆர், எஸ் அவர்களே,
இது மிகவும் புனிதமான கேள்வி என்றே கருதுகிறேன்.மஹாபாரதத்தில் பீஷ்மர், இராமாயணத்தில் ஜனக மஹா ராஜா,சுகப் ப்ரம்ம முனி,போதாயன முனி,நாரதர், பிற்காலத்தில் வேதாந்த தேசிகர் ஆகியோர் இதை மிகவும் வற்புறுத்திச் சொல்லியுள்ளனர்.
சந்தியாவந்தனத்தில் விடப்படும் அர்க்க்யம் மஹாவிஷ்ணுவை நோக்கி விடப்படுவது.நாரண: ஜல ரூபேண: என்று ஒரு சொல்லும் உண்டு, தவிரவும் உலக நன்மைக்காகவும், எல்லா ஜீவராசிகளுக்கும், சூரியனிடம் வேண்டும் பகுதியும் அதில் உள்ளது.(பச்யேம ஸரதஸ்ஸதம், ஜீவேம/நந்தாம/மோதாம/பரப்ரவாம/அஜீதாஸ்யாம/ ஸரதஸ்ஸதம் என்ற மந்திரங்களைச் சொல்லும்போது உலக நன்மையை வேண்டிச் சொல்லவேண்டும் என ரிஷிகள் வற்புறுத்தியுள்ளனர்.சந்தியாவந்தனம் செய்யும் போது காயத்ரி மந்திரம் உச்சரிக்கப்படுகிறது.அந்த மந்திரத்தின் பலன், என்னை விட, கண்டிப்பாக உங்களுக்கு அதிகம் தெரிந்து இருக்கும். :)


//இன்னொரு ஐயமும் கூட:
நித்ய கர்ம- அனுஷ்டானங்களை "எந்த சூழ்நிலையிலும்" தவற விடக் கூடாது என்று சொல்கிறீர்கள்! சுவாமி புறப்பாடு ஆகும் சில மாலை வேளைகளில் சந்தி முதலானவற்றைச் செய்யாமல் சுவாமி புறப்பாடுகளில் அல்லவா கவனம் செலுத்துகிறார்கள்? அப்போது அந்தக் குறிப்பிட்ட காலத்தில் தவற விடுகிறார்களே! அது தவறாகுமா?//

பொன்னான கேள்வி.ஜகத்குரு காஞ்சிப் பெரியவாள், சந்தியாவந்தனத்தின் முக்கியத்துவும் & மஹிமை பற்றி நன்கு விளக்கி இருக்கிறார்.

சந்தியாவந்தன காலம் தவறிப்போனால், அதற்கு, ப்ராயச்சித்த மந்திரமும் உள்ளது.(தூர்யார்க்கப் ப்ரதான மந்த்ரஸ்ய ஸாந்தி பீனி ரிஷி:) என்று துவங்கும் மந்திரம், கால தாமதத்தை மன்னித்து, எமது அர்க்க்யத்தை ஏற்க வேண்டும் எனும் மந்திரம்.சிலரால் உடல் நிலைசரி இல்லாத போது, மற்றும் கோயில் கைங்கரியத்தில் ஈடுபடும்போது, ஹிரண்ய ரூபமாக சந்தியாவந்தனம் செய்வதும் உள்ளது.கடமை முடிந்த பின், கிணற்று அடியில் சந்தியா வந்தனம் செய்யலாம். இதனால் தான் கோயில்களில் கிணறு கண்டிப்பாக இருக்கும், இல்லையாயின் அருகில் மடங்கள் போன்ற வசதிகளை , பெரியோர்கள் ஏற்படுத்தி வைத்தனர்.

திருமங்கை ஆழ்வார்,“அறுதொழில் அந்தணர் வணங்கும் தன்மையை” என்று குறிப்பிட்டது,“நித்ய கர்மானுஷ்டானங்களைத் தவறாமல் செய்து, தங்களின் அறுவகைக் கடமைகளை சரிவரச் செய்பவரையே கூறி இருக்கிறார்.

இராமாயணத்தில் வாலியும் , இராவணனும் தவறாமல் சந்தியாவந்தனம் செய்ததாக சில குறிப்புகளில் படித்துள்ளேன். இராவணன் தினமும் முக்கடல்களுக்கும் வான் வழியே சென்று சந்தியா வந்தனம் செய்ததாகவும்,முக்கடல் சங்கமிக்கும் பகுதிக்கு வந்து செய்ததாகவும் . பெறியவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன். அவ்வாறு ஒரு முறை இராவணன் பயணிக்கும் போது, அவனின் நிழல் மூலம் வாலி, இராவணனைப் பிடித்து தனது குழந்தைக்கு, விளையாட்டுக் காட்டியதாகவும் படித்துள்ளேன்.

தவிரவும் , சந்தியாவந்தன மந்திரங்கள் வேதத்தில் கூறப்பட்டுள்ள மந்திரங்களே. தனிப்பட்ட மந்திரம் அல்ல.திருவாய்மொழியை வேத ஸாகரம் என்றூ கூறுகிறோம். எனவே திருவாய்மொழி வேதத்தின் ஸாரத்தைக் கூறுவதால், அந்த வேதத்திலேயே சொல்லிய சந்தியா வந்தன மந்திராதிகளை, காலம் வழுவாமல்,சிரமேற்கொள்வது நல்லது தானே? (நான் ஒழுங்காக இல்லை என்பது வேறு விஷயம்.:))

//ஆகா! பிரபன்ன ஜன கூடஸ்தர் என்பதும் இதனால் தானோ?//

இருக்கலாம். எனக்கு உறுதியாகத் தெரியவில்லை.

//அந்த குரு பரம்பரையின் 11 வது குருவாக வந்தவர் ஸ்வாமி வேங்கடேச மஹா குரு,எங்களது குலபதி//

வேங்கடேச மகா குரு திருவடிகளே சரணம்!
அவர் வழியில், வந்து வழி வழி ஆட்செய்யும் பரவஸ்து வழித்தோன்றல்களுக்கும்...
அடியேன் அடிக்கீழ் வணக்கங்கள்! வாழ்த்துக்கள்!

எனது தந்தையார் வரை அந்த வணக்கங்களுக்குத் தகுதி உண்டு.எனக்கு சுத்தமாக இல்லை.!!!. எனது தந்தையார் வரை எமது முன்னோர்கள், தேசிகர் சன்னதிகளில், அர்ச்சக, ஆராதன, திருமடப்பள்ளி கைங்கர்யங்கள் செய்தனர்.என்னுடைய அப்பா என்னை மிகவும் வற்புறுத்தியும், நான் அர்ச்சக , ஆராதன கைங்கர்யங்கள் செய்யவில்லை. நூதன வாழ்க்கைஎன் போக்கை மாற்றி விட்டது. :)

//பெரியாழ்வாரின் பரதத்வ நிர்ணயத்தை ,நன்கு எடுத்தெழுதி, ப்ரமாணம் தந்ததால், அவர் பரவஸ்து என்று போற்றப்பட்டார்//
இந்த நூல் இன்றும் உள்ளதா?//

இந்த நூல் இல்லை.இது தவிர ஏழுமலையான் மீதும் ஒரு நூல் எழுதினார். அதுவும் கிடைக்கப் பெறவில்லை.
முன்னர் கூரத்தாழ்வான் எழுதிய ஒரு நித்ய க்ரந்தமும் கிடைக்கப் பெறவில்லை.அது பற்றிய செய்தி பின்னர் வரும் இடுகைகளில் வரும்.
வேதனையான வரலாற்றுச் செய்திகள்

Anonymous said...

//கூரத்தாழ்வாரின் ஆயிரம் ஆண்டு கொண்டாடத்திற்க்காக அவரது திருக்கதையை எழுதிக்கொடுத்த பரவஸ்து ஐயா அவர்களுக்கும் பதிவிடும் சுந்தர் ஐயா அவர்களுக்கும் ஆயிரம் நன்றிகள்.//

நன்றி கைலாஷி அவர்களே, இதைப் பதிவாக வெளியிட்ட மௌலி அவர்களுக்கு நன்றி.

குமரன் (Kumaran) said...

பரவஸ்து என்ற பெயரின் விளக்கத்தைச் சொன்னதற்கு மிக்க நன்றி சுந்தர் அண்ணா.

Venkatasubramanian said...

///தவிரவும் , சந்தியாவந்தன மந்திரங்கள் வேதத்தில் கூறப்பட்டுள்ள மந்திரங்களே. தனிப்பட்ட மந்திரம் அல்ல.திருவாய்மொழியை வேத ஸாகரம் என்றூ கூறுகிறோம். எனவே திருவாய்மொழி வேதத்தின் ஸாரத்தைக் கூறுவதால், அந்த வேதத்திலேயே சொல்லிய சந்தியா வந்தன மந்திராதிகளை, காலம் வழுவாமல்,சிரமேற்கொள்வது நல்லது தானே? (நான் ஒழுங்காக இல்லை என்பது வேறு விஷயம்.:))//
வணக்கம் எல்லோருக்கும் . இங்கே நடைபெறுகின்ற உரையாடல்கள் மேல் தரத்தில் உள்ளன . இங்கு வந்ததில் எனக்கும் மகிழ்ச்சி .

அர்க்யம் எனக்குத் தெரிந்த வரையில் ஒரு மதச் சார்பில்லாத கரியை ஆகும் .நாராயணனை நோக்கி விடுவது என்பது மிக மிக பிற்காலத்தில் ஏற்பட்ட ஒன்று . வேத காலத்தில் சைவ வைணவ பிரிவு இல்லை . வேதச் சிந்தனை மருவிய காலத்தில் பாரதத்தில் மாதங்கள் தோன்றின . இது அர்க்கியத்தின் பின்னணி . அர்க்கியம் புராண விளக்கத்தில் மந்தேகர் என்ற அசுரரை ஒழிக்கவே அர்க்யம் என்று உள்ளது .இவ்வசுரர் சூரியனை அழிக்கப் புறப்பட்டவர்கள் என்றும் உள்ளது .

இது குறித்து ஒரு பதிவு எழுதவும் தீர்மானித்துள்ளேன் . அர்க்த்யத்திற்கு விஞ்ஞானப் பக்கம் ஒன்று உள்ளது . விரைவில் என்னுடைய ஆங்கிலப் பதிவில் வெளியிடுகிறேன் .
சந்த்யா வந்தனத்தின் மற்ற கிரியைகளான ஆசமனம் , காயத்ரி ஜபம் , போன்றவற்றைப் பற்றி ஆங்கிலத்தில் ஒரு பதிவு வரிசை ஒரு வருட காலத்திற்கு முன்பு செய்திருந்தேன் . இதோ இணைப்புகள்

சந்த்யை நேரம்
சந்த்யா வந்தனம் ஒரு பார்வை

ஆசமனம்
காயத்ரி ஜபம்

Anonymous said...

நன்றி திரு வேங்கடசுப்ரமணியம் அவர்களே.
//அர்க்யம் எனக்குத் தெரிந்த வரையில் ஒரு மதச் சார்பில்லாத கரியை ஆகும் .நாராயணனை நோக்கி விடுவது என்பது மிக மிக பிற்காலத்தில் ஏற்பட்ட ஒன்று . வேத காலத்தில் சைவ வைணவ பிரிவு இல்லை .//

நல்ல விளக்கம். அடியேன் குறிப்பிட்டது, அர்க்க்யம் விடும் போது கேசவாய நம: என்று விஷ்ணுவின் 12 நாமாக்களைச் சொல்லி அர்க்க்யம் விடுவர் என்பதைத்தான். சைவ, வைணவப் பிரிவு பற்றி நான் அங்கு குறிப்பிடவில்லை.


//இது அர்க்கியத்தின் பின்னணி . அர்க்கியம் புராண விளக்கத்தில் மந்தேகர் என்ற அசுரரை ஒழிக்கவே அர்க்யம் என்று உள்ளது .இவ்வசுரர் சூரியனை அழிக்கப் புறப்பட்டவர்கள் என்றும் உள்ளது .//

இதுவரை நான் அறியாத ஒரு நல்ல விளக்கம். தெளிவித்தமைக்கு நன்றி.

//இது குறித்து ஒரு பதிவு எழுதவும் தீர்மானித்துள்ளேன் . அர்க்த்யத்திற்கு விஞ்ஞானப் பக்கம் ஒன்று உள்ளது . விரைவில் என்னுடைய ஆங்கிலப் பதிவில் வெளியிடுகிறேன் .//
அப்படிப்பட்ட முயற்சிக்கு மிகவும் நன்றி. ஆனால் தமிழில் வெளியிட்டால் நன்றாக இருக்கும். ஆங்கிலத்தில் பதிவு இருந்தால், அதன் மீதான ஆர்வம் குறைகிறது.மற்றவர்கள் கருத்து ?? :)

// இதோ இணைப்புகள்
சந்த்யை நேரம்
சந்த்யா வந்தனம் ஒரு பார்வை//

இணைப்புகளின் பெயர் அல்லது தொடர் தவறு என்று நினைக்கிறேன். சரியான இணைப்பு கொடுத்து உதவவும்.

இந்தப் பதிவு/இடுகைத் தளத்தில் தாங்கள் செய்த கருத்துப்பதிவுக்கு மிக்க நன்றி.

Anonymous said...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்வாமி நிஹமாந்தமஹா தேசிகனின் திருநட்சத்திர வைபவத்தின் கொண்டாட்டம் பற்றிய தொகுப்பு.
புரட்டாசித் திருவோணம் அன்று நடைபெறும் நிகழ்ச்சிகள்.

அடியேனுடைய பெரியப்பா, கீர்த்தி மூர்த்தியாகிவிட்ட, திரு பரவஸ்து நாராயணாச்சாரியார், ஒரு கைப்பதிவு எழுதியிருந்தார்.அதை இராகவ் தட்டச்சு செய்ய,(கொடுத்தமைக்கு மிகவும் நன்றி) ஓசியில் வாங்கி நான் இங்கே இடுகையாக இட்டுவிட்டேன்.

http://nihamaanthamahaadesikan.blogspot.com/

மெளலி (மதுரையம்பதி) said...

பரவஸ்து அண்ணா,

அடுத்த பகுதியினை திங்கள் அன்று வெளியிடுகிறேன்.

நிகமாந்தக தேசிகர் பற்றின லின்க் கொடுத்தமைக்கு நன்றி. ராகவ் முன்னமே கொடுத்துப் படித்திருக்கிறேன்.

திவாண்ணா said...

பரவஸ்து அண்ணா, கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது. சில விஷயங்கள் குறித்து உரையாட வேண்டும். அஞ்சல் முகவரி மௌலி மூலமாக தெரிவித்தால் நல்லது.

Venkatasubramanian said...

திரு பரவஸ்து அவர்களே
//அடியேன் குறிப்பிட்டது, அர்க்க்யம் விடும் போது கேசவாய நம: என்று விஷ்ணுவின் 12 நாமாக்களைச் சொல்லி அர்க்க்யம் விடுவர் என்பதைத்தான்.//

தங்கள் பதிலுக்கு நன்றி. தாங்கள் கூறிய அர்க்யம் பிரயோகம் எனக்குப் புதிது. பொதுவாக காயத்ரியே அர்க்யத்துக்கு பிரயோகம் செய்ய உச்சரிப்போம். (சந்த்யா வில்). பெருமாள் பெயர் சொல்லி விடுவது எனக்குப் புதிது. இது ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயமா ?

///ஆனால் தமிழில் வெளியிட்டால் நன்றாக இருக்கும். ஆங்கிலத்தில் பதிவு இருந்தால், அதன் மீதான ஆர்வம் குறைகிறது.மற்றவர்கள் கருத்து ?? :)///

எனக்கும் இவ்விஷயங்களை ஆங்கிலத்தில் வெளியிட தயக்கம் தான். என்னிடம் கீதா பிரஸ் இன் ராமாயணம் ஆங்கிலத்தில் இருந்தும் (மூலமும் உறையும்) , லிப்கோ வின் தமிழ்ப் பதிப்பைத் தான் உபயோகிக்கிறேன் (இதில் மூலம் இல்லாவிடினும்). என்னுடைய தமிழ் பதிவு ஆன்மீகப் பழந் தமிழைப் பற்றியது . இதில் அந்தணர் விஷயமான அர்க்கியம் பற்றி எழுதுவது சரியாய் இராது.

//இணைப்புகளின் பெயர் அல்லது தொடர் தவறு என்று நினைக்கிறேன். சரியான இணைப்பு கொடுத்து உதவவும்.//

நான் கூறிய இணைப்புகள் இதோ.
Achamanam
http://sanatanavenkat.blogspot.com/2007/11/sandhyavandanam-achamanam.html
Sandhyavandanam- Time
http://sanatanavenkat.blogspot.com/2007/11/sandhyavandanam-time.html
Sandhya an overview
http://sanatanavenkat.blogspot.com/2007/11/sandhyavandanam-overview.html
Symbolism of Gayatri mantra
http://bharataagamas.blogspot.com/2008/02/symbolism-of-gayatri-mantra.html

Venkatasubramanian said...

பரவஸ்து விளக்கம் அற்புதம். எனக்கு மாத்வ , ஸ்மார்த்த சம்ப்ரதாயங்கள் ஓரளவு தெரிந்தது போல ஸ்ரீ வைஷ்ணவ பத்ததி தெரியாது. உங்கள் அனைவரோடும் இணைந்து இருக்கும் பொழுதில் விரைவில் தெரிந்து கொள்கிறேன்.

//அதன் பின் குக்கிராமம், காடு மலை எல்லாம் சென்று வைணவம் பரப்பினார். பின்னாளில் உடையர்,நீலகிரி மலைச் சாரலில் பாலமலை அடிவாரம் சென்ற போது, நல்லானின் சீடர்கள்(சேரி வாழ் வேடுவர்கள்,யதிராசரைக் காத்து(பெருமழை பெய்த இரவில்) உபசரித்து,உணவளித்துத் தங்க வைத்தனர்.இதில் பெருமகிழ்வடைந்த எம்பெருமானார் “நல்லான் எனும் காளமேகம் மழையாகப் பொழிந்ததோ” என்று அவரது வேடுவச் சீடர்களைப் பாராட்டினார்.//

இக் கூற்று மிக உண்மை. நான் சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பு நடத்தினேன். அதில் தமிழக சேரி மக்கள் பெரும்பாலும் வைணவர்கள் என்று தெரிய வந்தது. (பள்ளர், சக்கிலியர், பறையர், போன்றோர்). மேம் போக்காக அவர்கள் அம்மனை வணங்கி வந்தாலும், திருமணம் போன்ற சடங்குகளில், ஊர்த்துவ புண்டரம் அணிந்தே பங்கு கொள்கின்றனர். அவர்களுக்கென்று தனியாக பெருமாள் கோவிலும் உண்டு.

பெரும்பாலும் உருண்டைக் கல் விக்கிரகம் தான். வைணவ பெரியோரும் , செல்வந்தர்களும், தத்தம் பகுதியில் உள்ள சேரிகளில் செதுக்கப்பட்ட பெருமாளின் மூர்த்தியை செய்து கொடுத்தால் கோடி புண்ணியம் .ஆழ்வார் இயக்கம் தமிழகத்தின் ஆணிவேர் வரை சென்றிருக்கிறது. ஆனால் இன்று சேரி மக்கள் மதமாற்றம் எனும் கொடும் அரக்கனின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர்.

ஜீயர்களும், மற்றும் சகல மடாதிபதிகளும் உடனடியாக இந்த அப்பாவிகளை காப்பாற்ற பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். தேர்ந்தெடுத்த நபர்களுக்கு முத்திரா தாரணம் செய்விக்க வேண்டும். மந்திர தீக்ஷையும் அளிக்க வேண்டும்.

Anonymous said...

பின்னூட்டம் அளித்தும் மற்றும் படித்து ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி

Anonymous said...
This comment has been removed by the author.