Wednesday, July 2, 2008

அப்பைய்ய தீட்சிதரும், கருப்பண்ண சாமியும்!

* சிறு வயதிலேயே, ஆதிசங்கரரைப் போல், சகல சாஸ்திரங்களையும் கரைத்துக் குடித்து, அபர சங்கராச்சாரியார் என்று பெயர் பெற்றவர் யார்?
* ஆதிசங்கரருக்குப் பின் அத்வைத நெறியைத் தூக்கி நிறுத்திய மகான் யார்?
* கோட்பாடுகள் பேதமின்றி, துவைதம், அத்வைதம், சுத்தாத்வைதம், விசிஷ்ட-அத்வைதம் என்று அத்தனைக்கும் விளக்கம் எழுதிய அறிஞர் யார்?
* சிவபிரான் மேல் ஆறாக் காதல் கொண்டாலும், வேதத்தில் சொல்லப்படும் பரத்துவம் நாராயணன் என்று சொன்ன மகாகுரு யார்?

அத்தனைக்கும் ஒரே பதில்! = அப்பைய்ய தீட்சிதர்!
தீட்சிதேந்திரன் என்று போற்றப்படுவது இவர் ஒருவரே!



எங்க வடார்க்காடு மாவட்டம், ஆரணி அருகே உள்ள அடையப்பாளையம் தான் தீட்சிதரின் திருஅவதாரத் தலம்! 1554 AD-இல் அவதாரம்!
திரிவிரிஞ்சிபுரம் மரகதவல்லி சமேத மார்க்கசகாய ஈஸ்வரர் அருளால், பாரத்வாஜ கோத்திரத்தில், ரங்கராஜத்வாரி என்பவருக்குப் பிள்ளையாய் அவதரித்தார் அப்பைய்யர். இயற்பெயர் விநாயக சுப்ரமணியம்!

இளவயதிலேயே பதினான்கு வித்தைகளையும் கற்று தேர்ந்த அப்பைய்யர், வேலூர் மன்னன் சின்ன பொம்முவின் வேண்டுகோளை ஏற்று அரசவைப் பண்டிதராக விளங்கினார்!
ஆனால் அங்கே இருந்த ஒரு திவானால் அவருக்கு இள வயதிலேயே பல சோதனைகள்!

தாதாச்சாரி என்ற அந்தத் திவான் வைணவப் பித்து தலைக்கேறியவன்!
பித்தா பிறை சூடியை அவன் மதப்பித்து மறைப்பித்து விடுமா என்ன?
ஆனால் மதம் என்னும் பேய் பிடித்தவரைப் பக்குவமாய்ச் சமயத்தில் சமைக்க, இறைவன் திருவருள் கனிய வேண்டும் அல்லவா?



அப்பைய்யர், காஞ்சி காமாட்சியம்மன் அருளால், மங்களாம்பிகை என்ற மங்கை நல்லாளை மணந்து கொண்டு, இல்லறத்தில் தர்மம் கண்டார்!
சங்கரர் துறவற தர்மம்! அவர் அடியொற்றிய அப்பைய்யர் இல்லற தர்மம்!

அப்பைய்யர் காஞ்சிபுரத்தில் செய்த சோம, வாஜபேய யக்ஞங்கள், அதில் தரப்பட்டதாகச் சொல்லப்படும் மிருகபலி குறித்து...சில சர்ச்சைகள் நிலவுகின்றன! அதனால் அவற்றைத் தற்காலிகமாகத் தள்ளி வைப்போம்!
மன்னன் சின்னபொம்மு அப்பைய்யரை வெகுவாக ஆதரித்து வந்தான். அப்பைய்யரின் பூரண ஞானமும் பக்தியும் கண்டு பொறாமை கொண்டார் தாதாச்சாரி!

வெறுமனே பொறாமை கூட காலியான பணப்பை போலத் தான்! அது பரவாயில்லை! ஆனால் பக்தியில் பொறாமை என்பது பொக்கிஷம் உள்ள பணப்பைத் திருட்டு அல்லவா? அதற்குத் தண்டனையும் அதிகம் தானே!
இதை அந்த வைணவன் உணர்ந்தானில்லை! தான் வணங்கும் பெருமாள் பிரசாதத்தையே கலப்படம் செய்யத் திட்டம் போட்டான்! பக்தியில் பொறாமை காண்பது பகவானையே மறக்கச் செய்து விடுகிறது, பாருங்கள்!

பெருமாள் தீர்த்தத்தில் நஞ்சைக் கலந்து, அப்பைய்யருக்கு அளிக்க ஏற்பாடு செய்தான்! குற்றமுள்ள நெஞ்சு...விஷ தீர்த்தம் கொடுக்கும் போது அர்ச்சகரின் கரங்கள் நடுங்கின. இதைத் தீட்சிதேந்திரர் கவனித்து விட்டார். நடந்ததை உணர்ந்து கொண்டார்.

ஆயினும், பெருமாள் பிரசாதத்தை அமைதியுடன் ஏற்றுக் கொண்டார். நஞ்சு உண்டு அருளிய நஞ்சுண்டேஸ்வரனைத் தியானித்தார் அப்பைய்யர்!
ஆலகால விஷத்தின் போது, பெருமாளும் பெருமானும் அருகருகே அல்லவா இருந்தார்கள்! அவர்கள் இருவரின் அருளும் ஒருசேரப் பெற்ற அப்பைய்யரை நஞ்சும் தீண்டுமோ?
அவர் நலமாக இருப்பதைக் கண்டு தாதாசாரியர் வெறுப்பு இன்னும் அதிகமாகத் தான் ஆகியது.


மன்னன் சின்னபொம்முவிடம் கோள் சொல்லி மனதைக் கலைத்தார் தாதாச்சாரி!
"உங்களை எப்போதும் இடது கரத்தால் தான் அப்பைய்யர் ஆசீர்வாதம் செய்கிறார்! இது நாட்டின் மன்னனையே அவமரியாதை செய்வது போல" என்று போட்டுக் கொடுத்தார்! மன்னனும் விசயம் அறியாமல், அய்யரிடம் சினந்து கொண்டான். அப்பைய்யர் அவன் திருப்திக்காகத் தன் வலக்கரத்தைச் சற்றே தூக்க, ஒரு சின்ன அசைவுக்கே, மன்னனின் துணிமணிகள் பற்றிக் கொண்டன!.

"மன்னா, அக்னி ஹோத்ரம் செய்து செய்து, அக்னி பகவான் அடியேன் கையில் ஆவாகனம் ஆகி விட்டான்! அதன் பொருட்டே வலக்கர ஆசீர்வாதம் நான் செய்வதில்லை! தவறாக எண்ணாதே" என்று சொல்லி அவனைத் திருத்தினார்!
அக்னி ஹோத்ரம் பரமம் பவித்திரமாகச் செய்வதன் பலனைக் கண்கூடாக உலகுக்குக் காட்டி அருளியவர் அப்பைய்யர்!

இதைக் கண்டும் மனம் மாறாத தாதாச்சாரி, இறுதியில் அப்பைய்யரைக் கொன்று விடுவதென்றே முடிவு கட்டி விட்டான்! கள்ளர்களை ஏவி விட்டு அவரை அழிக்க முனைந்தான்! ஆனால் அப்பைய்யர் கண் திறக்க கள்ளர் அனைவரும் சாம்பல் ஆயினர்! பின்னர் பரம கருணையால் அனைவரையும் உயிர்பித்துக் கொடுத்தார் அப்பைய்யர்! மாண்டவரே மீண்டதைக் கண்ட பின்னர் தான், தாதாச்சாரியும் இறுதியில் திருந்தினார். அப்பைய்யர் அவரைப் பட்சி தீர்த்தம் என்னும் ஊருக்குச் சென்று சிவபூசை செய்யச் சொல்லிக் கடைத்தேற்றினார்!


அப்பைய்யரும், சுவாமி தேசிகனும் நல்ல நண்பர்கள்! கருத்து மாறுபாடுகள் பற்றி அவர்களிடையே கடிதப் போர் எல்லாம் கூட நடக்கும்! :-)
சர்வ தந்த்ர ஸ்வதந்திரர் என்ற பட்டம் இருவருக்கும் உண்டு! சைவத்தில் அப்பைய்யர் சர்வ தந்த்ர ஸ்வதந்திரர்! வைணவத்தில் வேதாந்த தேசிகர் சர்வ தந்த்ர ஸ்வதந்திரர்! தேசிகரின் இன்னொரு பட்டமான "கவிதார்க்கிக சிம்மம்" என்பதை வழங்கியதே அப்பைய்யர் தான்! தேசிகரின் நாடகத்துக்கு அப்பைய்யர் ஒரு உரையும் எழுதியுள்ளார்.

அப்பைய்யர் சங்கரரைப் போலவே, பல தலங்களுக்கு திக்விஜயம் செய்தார்!
அவரின் மனைவியும், மாணவர்களும், அவரின் மூல சொரூபத்தைக் காட்டுமாறு ஒரு முறை வேண்டிக் கொண்டனர்; சித்தாசனத்தில் அமர்ந்து சமாதி நிலையானார் அண்ணல்!
அந்தச் சமயத்தில், உருத்திராக்கமும் திருநீறும் மேனியெங்கும் தரித்து, பல திவ்ய ஆயுதங்களுடன், சதாசிவ ருத்ர மூர்த்தியே அப்பைய்யரின் யோகத்தில் இருந்து கிளம்பி வெளிவந்ததைப் பலரும் தரிசித்து வியந்தார்கள்!

ஸ்ரீரங்கம் சென்று இறைவனின் புஜங்க சயனத்தைச் சேவிக்க எண்ணினார் அப்பைய்யர்!
ஆனால் அங்கிருந்த ஒரு வைணவக் கூட்டம் தீட்சிதரின் வருகையை விரும்பவில்லை! அவர்கள் எல்லாரும் ஒன்று கூடிக் கோயிலில் குழப்பத்தை ஏற்படுத்தவே, அர்ச்சகர்களும், மடத் தலைவர்களும் செய்வதறியாமல் திகைத்தார்கள்!

யாருக்கும் சங்கடம் கொடுக்க நினைக்காத அப்பைய்யர், சன்னிதிக்கு வெளியிலேயே நின்று கொண்டு அரங்க நகரப்பனைச் சேவித்து விடலாம் என்று நினைத்தார்! அரங்கனைச் சிவபெருமானாகத் தியானித்தார்.
கோயில் உள்ளிருந்த அரங்கன், அப்பைய்யரின் ஆத்ம பக்திக்கு இரங்கினான்! தன் மேல் சிவச் சின்னங்களைக் காட்டி அருளினான்!

முனியே, நான்முகனே, முக்கண்-அப்பா என்று அரங்கனை முக்கண் அப்பனாகவும் கண்டார் நம்மாழ்வார்! அவர் சடாரியை வாங்கிக் கொள்பவர்கள், அவர் சொன்னதை மட்டும் தலையில் வாங்கிக் கொள்ளவில்லை போலும்!
சிவச் சின்னங்களைக் கண்ட பட்டர்கள், அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்து, தீட்சிதேந்திரரை கோவிலுக்குள் வருமாறு அழைத்தார்கள்.
ஆதிசேடன் மீது பள்ளி கொண்டிருக்கும் கருமா முகில் அரங்கனைக் கண் குளிரச் சேவித்து ஆனந்தமடைந்தார் அப்பைய்யர்!



துவைதம், அத்வைதம், சுத்தாத்வைதம், விசிஷ்ட-அத்வைதம் என்று அத்தனைக்கும் சதுர்மத சாரம் என்ற விளக்க நூல் எழுதினார் அப்பைய்யர்!
ஆதிசங்கரரின் அத்வைத விளக்கத்துக்குத் தனியாக மெருகேற்றினார்! சங்கரரின் பிரம்ம சூத்திர பாஷ்யத்துக்கு நுட்பமான விளக்கங்கள் கண்டார்! அத்வைதத்தைப் பல இடங்களில் நிலைநாட்டிச் சென்றார்! இவர் சங்கரரின் மறு அவதாரமோ என்று எண்ணும் படிக்கு, அவர் விளக்கங்கள் அமைந்தன!

தன்னுடைய எழுபத்து இரண்டாம் வயதில், தன் இறுதியை அறிந்து கொண்ட அப்பைய்யர், தில்லையம்பலம் சென்று நடராஜப் பெருமானைக் கண்ணாரக் கண்டு தரிசித்தார்!
வீட்டில் அவருக்கு இறுதியாகக் கர்ண மந்திரங்கள் ஜபிக்கும் போது, நடராஜப் பெருமான் ஆலயத்திலும் அவர் சந்நிதிக்குள் நுழைவதைப் பார்த்தார்கள் தீட்சிதர்கள்!

வீட்டில் அவர் சிவ சாயுஜ்ஜியமாக, சிவ சுலோகத்தின் முதல் இரண்டடியை வாய்விட்டுச் சொல்லும் போதே, சீவன் சிவகதி அடைந்தது! மீதி சுலோகத்தை நீலகண்ட தீட்சிதர் (அன்னாரின் தம்பி பேரன்) உடனிருந்து முடித்துக் கொடுத்தார்!

அங்கோ....பொன்னம்பலத்தில்,
அவருக்குத் தரிசனம் செய்து வைக்கலாம் என்று எண்ணிய தீட்சிதர்கள், கற்பூரம் போன்ற பொருட்களைச் சேகரித்துக் கொண்டிருக்கையில், அப்பைய்யர் தில்லை அமபலத்தின் பஞ்சாட்சரப் படிகளில் விறுவிறு என்று ஏறிவிட்டார்!
சந்நிதியுள் சென்று நடராஜப் பெருமானுடன் இரண்டறக் கலந்தார்!


அப்பைய்யர் பரம சைவர்! எனினும் வைணவத்தின் பேரில் ஒரு விதமான துவேஷமும் கொள்ளாதவர்! அவருடைய வரதராஜ ஸ்தவம் என்னும் நூலே இதற்குச் சாட்சி!
வேதங்களில் கூறப்படும் உத்தமப் பரம்பொருள் சிவனோ, விஷ்ணுவோ என்பது வாதமே அல்ல! ஆனால் ஈசனை ஏசிப் பேசும் சிலரின் அவச்சொற்களை மறுத்துப் பேசவே தான் பிரயாசைப் படுவதாகச் சொல்கிறார்!
கிம் த்வீ சத் வேஷகாட நலகலி தஹ்ருதாம் துர்மதீ னாம் துருக்தீ:
பங்க்தும் யத்னோ மமாயம் ந ஹிபவது விஷ்ணு வி த்வேஷ சங்கா!


சரி, தலைப்புக்கு இன்னும் வரலையே? இந்த அந்தணோத்தமருக்கும் கருப்பண்ண சாமிக்கும் என்ன சம்பந்தம்?
அப்பைய்யரின் நண்பர்...அவர் பெயர் சோளிங்கபுரம் தொட்டாச்சாரியார்! மிகவும் ஆழ்ந்த நரசிம்ம உபாசகர்!

ஒரு முறை இருவரும் மதுரை அழகர் கோயில் சந்நிதிக்குச் செல்லும் போது...அங்கே முதலில் பதினெட்டாம் படி கருப்பை வணங்கிச் சென்றனர்! கருப்பண்ண சாமியின் முன்பு பொய்யே உரைக்க முடியாது! வழக்கு விசாரணை வித்தகர் அல்லவா அந்தப் பதினெட்டாம் படிக் கருப்பு! நண்பரைச் சீண்டி விளையாட எண்ணினார் தொட்டாச்சாரியார்!

நண்பனின் கையைப் பிடித்து, கருப்பண்ணசாமியின் முன்பு வைத்து, "அப்பைய்யரே, எங்கே சொல்லுங்கள்! வேதங்களில் பரம், பரப்பிரும்மம் என்று பரத்துவமாக யாரைச் சொல்கிறது என்று சொல்லுங்கள் பார்ப்போம்?" என்று கேட்க...
புரிந்து கொண்ட அப்பைய்யர், சிரித்துக் கொண்டே...

"வேதங்களில் கூறப்படும் உத்தமப் பரம்பொருள் சிவனோ, விஷ்ணுவோ என்பது ஒரு வாதமே அல்ல! சங்கர பாஷ்யமே,"நாராயண பரோவக்யாத் அண்டம் அவயக்த சம்பவம்" என்றல்லவா துவங்குகிறது! அப்படி இருக்க, ஆதிசங்கரரையா நான் மறுத்துச் சொல்வேன்?

* பரம்பொருளே, சிவனாகவும் விஷ்ணுவாகவும் இருக்கிறான்! அந்தப் பரம் பொருளுக்கு நாராயணன் என்னும் திருநாமம்!
* நாராயணன் என்பவன் சைவமும் அல்ல! வைணவமும் அல்ல!
* அந்த நாராயணனே பரப்பிரம்மம்!
* நாராயணஹ பரஹ என்பதே வேதப் ப்ரமாணம்!"
என்று பதினெட்டாம் படிக் கருப்பின் சன்னிதியில் கையறைந்து சத்திய வாக்கு செய்தார் அப்பைய்யர்!

சிவாய விஷ்ணு ரூபாய, சிவ ரூபாய விஷ்ணவே
சிவஸ்ச ஹிருதயம் விஷ்ணோ, விஷ்ணோஸ்ச ஹிருதயம் சிவ!
அபேதம் தர்சனம் ஞானம்!

மகான் அப்பைய்யர் திருவடிகளே சரணம்!

33 comments:

Kavinaya said...

//கற்பூரம் போன்ற பொருட்களைச் சேகரித்துக் கொண்டிருக்கையில், அப்பைய்யர் தில்லை அமபலத்தின் பஞ்சாட்சரப் படிகளில் விறுவிறு என்று ஏறிவிட்டார்!
சந்நிதியுள் சென்று நடராஜப் பெருமானுடன் இரண்டறக் கலந்தார்!//

ஆஹா, அப்பைய்ய தீட்சிதர் பற்றி அருமையாக அறியத் தந்தமைக்கு நன்றி, கண்ணா. மகான் அப்பைய்யரின் திருவடிகளில் அடியேனும் பணிந்து கொள்கிறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...
This comment has been removed by the author.
மெளலி (மதுரையம்பதி) said...

எப்பவும் போல மிக அருமையா எழுதியிருக்கீங்க.. சூப்பர்!!!...

நமது திரச அவர்கள் அப்பைய தீட்சிதர் குடும்பத்த்வர் என்று சொன்ன நினைவு.

எனது குரு பரம்பரையும் அவர் வழி வந்தவர்கள் என்பதில் பெருமை கொள்கிறேன்.

ambi said...

//இளவயதிலேயே பதினான்கு வித்தைகளையும் கற்று தேர்ந்த அப்பைய்யர்,//

புதசெவி..

அருமையான பதிவு, கோர்வையாக அப்பையரின் பயோகிராபி பார்ப்பது போல தொகுத்தமைக்கு நன்னி.

கடைசில வழக்கமான கேஆரெஸ் டச். :))

திவாண்ணா said...

அதென்ன அத்வைதம் சுத்த அத்வைதம்?
லைட் ப்ளீஸ்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//திவா said...
அதென்ன அத்வைதம் சுத்த அத்வைதம்?
லைட் ப்ளீஸ்!//

வாங்க திவா சார்!
நீங்களே ஒரு ஞான லைட்! சூரியன் சந்திரனிடம் லைட் கேட்கலாகுமோ?

சுத்தாத்வைதம் = Srikantha's school of thought!
சிவாத்வைதம் என்றும் சொல்லுவார்கள்! கிட்டத்தட்ட விசிஷ்டாத்வைதம் போலவே தான் இருக்கும்! ஆனால் பெருமாள் என்று வரும் இடங்களில் எல்லாம் சிவன் என்று வரும்! சிவ-விசிஷ்டாத்வைதம் என்றும் சொல்லுவார்கள்!

ஜீவாத்மா பரமாத்மாவில் ஐக்கியம் ஆனாலும், அது பரமாத்மாவின் ஒரு அங்கமே தவிர அதுவே முழுமையாக ஒன்றாகி விடாது என்பது இதன் கோட்பாடு! கர்நாடகத்தில் அதிகம் கடைபிடிக்கப்படும் ஒன்று!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@அம்பி
//இளவயதிலேயே பதினான்கு வித்தைகளையும் கற்று தேர்ந்த அப்பைய்யர்,//

புதசெவி..//

ஓ...இன்னிக்கி அடியேன் பதில் சொல்லும் இடத்தில் இருக்கேனா? மெளலி அண்ணா ஹெல்ப் ப்ளீஸ்!

14 வித்தைகள்=4+4+6
4 வேதங்கள் = ரிக்,யஜூர்,சாம,அதர்வண
4 உபவேதங்கள் =அர்த்த சாஸ்திரம், தனுர் வேதம், கந்தர்வ வேதம், ஆயுர் வேதம்
6 வேதாங்கம் = சிக்ஷ, கல்ப, வியாகரண, நிருக்த, சண்ட, ஜோதிஷம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அருமையான பதிவு, கோர்வையாக அப்பையரின் பயோகிராபி பார்ப்பது போல தொகுத்தமைக்கு நன்னி//

கிட்டத்தட்ட பயோகிராபி தான் அம்பி!

//கடைசில வழக்கமான கேஆரெஸ் டச். :))//

நான் யாரையும் "டச்" பண்ணலீங்கன்னா! ஐ ஆம் ஒன் அப்பாவிச் சிறுவன்!

ambi said...

//4 உபவேதங்கள் = அர்த்த சாஸ்திரம், தனுர் வேதம், கந்தர்வ வேதம், ஆயுர் வேதம்
//

இது கொஞ்சம் புதுசா இருக்கே. கவுட்டில்யர் @ சாணக்யரின் அர்த்த சாஸ்திரம் கேள்விபட்ருக்கேன். இது என்ன?

கந்தர்வ வேதம் என்றால் சங்கீத கலையா?

சண்ட - டார்ச் ப்ளீஸ் :))

Geetha Sambasivam said...

//சுத்தாத்வைதம் = Srikantha's school of thought!
சிவாத்வைதம் என்றும் சொல்லுவார்கள்! கிட்டத்தட்ட விசிஷ்டாத்வைதம் போலவே தான் இருக்கும்! ஆனால் பெருமாள் என்று வரும் இடங்களில்//

அப்பைய தீட்சிதர்?? சுத்தாத்வைதம்?? வேறே படிச்ச நினைவு! எதுக்கும் பார்த்து நிச்சயம் செய்து கொண்டே சொல்றேன். வைணவ குரு பரம்பரையில் யாரோ ஒருத்தர் தான் சுத்தாத்வைதம் கடைப்பிடிச்சதாய்ச் சொல்வாங்க. ம்ம்ம்ம் என்னோட ஆச்சார்யனும், குருவும் பதிவிலே இது பத்தி எழுதினேனோ?? பார்க்கிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கவிநயா said...
ஆஹா, அப்பைய்ய தீட்சிதர் பற்றி அருமையாக அறியத் தந்தமைக்கு நன்றி, கண்ணா//

நன்றிக்கோவ்!
அண்ணலின் வாழ்க்கைச் சரிதத்தில் பல திருப்பங்கள், அற்புதங்கள். அத்தனையும் சுவாரசியம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Comment deleted
This post has been removed by the author.
//

why mouli anna?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மதுரையம்பதி said...
எப்பவும் போல மிக அருமையா எழுதியிருக்கீங்க.. சூப்பர்!!!...//

எப்பவும் போல=எனி உ.கு? :-)

//நமது திரச அவர்கள் அப்பைய தீட்சிதர் குடும்பத்த்வர் என்று சொன்ன நினைவு//

ஆகா!
அவர் வடார்க்காடு தெரியும்!
இதுவும் நம்ம திராச-வின் அருமை பெருமைகளில் ஒன்றா?
திராச ஐயா...எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்!

//எனது குரு பரம்பரையும் அவர் வழி வந்தவர்கள் என்பதில் பெருமை கொள்கிறேன்//

நீங்க யாருக்குண்ணா குரு?
அட, எனக்குத் தான்-ல!
அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தம்
வந்தே குரு பரம்பரா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@கீதாம்மா
//அப்பைய தீட்சிதர்?? சுத்தாத்வைதம்?? வேறே படிச்ச நினைவு!//

அதான் சிவாத்வைதம்-னும் சொல்லி இருக்கேனே!
எதுக்கும் பார்த்து நிச்சயம் செய்து கொண்டே சொல்லுங்க :-)

//வைணவ குரு பரம்பரையில் யாரோ ஒருத்தர் தான் சுத்தாத்வைதம் கடைப்பிடிச்சதாய்ச் சொல்வாங்க//

துவைதாத்வைதம்??
வல்லபாச்சார்யர்??

//ம்ம்ம்ம் என்னோட ஆச்சார்யனும், குருவும் பதிவிலே இது பத்தி எழுதினேனோ//

உங்களுக்கே ஜந்தேகம்ஸ்? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ambi said...
இது கொஞ்சம் புதுசா இருக்கே. கவுட்டில்யர் @ சாணக்யரின் அர்த்த சாஸ்திரம் கேள்விபட்ருக்கேன். இது என்ன?//

அது தாண்ணே இது! :-)


//கந்தர்வ வேதம் என்றால் சங்கீத கலையா?//

கந்தர்வ விவாகம் பண்ணிக்குவாங்களே? அதுவா???

//சண்ட - டார்ச் ப்ளீஸ் :))//

பகல் நேரத்துல எதுக்கு டார்ச், அம்பியண்ணே? :-)

குமரன் (Kumaran) said...

மகான் அப்பையா தீட்சிதரின் வரலாற்றை அருமையாகச் சொன்னீர்கள் இரவிசங்கர். படித்து மகிழ்ந்தேன். சுவாமி தேசிகனுக்கும் அப்பைய தீட்சிதருக்கும் இருந்த நட்பைப் பற்றியும் சொல்லுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். அவர்கள் வாழ்வில் நடந்த கடித வாதப்போரைப் பற்றியும் சொல்லுவீர்கள் என்று நினைத்தேன். ஆனால் அடியேனுக்குத் தெரியாமல் இருந்த பலவற்றைச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றிகள்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@குமரன்
//சுவாமி தேசிகனுக்கும் அப்பைய தீட்சிதருக்கும் இருந்த நட்பைப் பற்றியும் சொல்லுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்//

ஆமாம் குமரன்!
இருவரும் நல்ல நண்பர்கள்!
சர்வ தந்த்ர ஸ்வதந்திரர் என்ற பட்டம் இருவருக்கும் உண்டு!
சைவத்தில் அப்பைய்யர் சர்வ தந்த்ர ஸ்வதந்திரர்!
வைணவத்தில் வேதாந்த தேசிகர் சர்வ தந்த்ர ஸ்வதந்திரர்!

//அவர்கள் வாழ்வில் நடந்த கடித வாதப்போரைப் பற்றியும் சொல்லுவீர்கள் என்று நினைத்தேன்//

உம்்...சொல்லலாம் என்று தான் நினைத்தேன்! வரிசையாக சத தூஷணி போன்ற மற்ற சிலவற்றையும் சொல்லலாம் தான்!

ஆனால் இங்கு சூழல் அப்படி இல்லை!
அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள்! கருத்தை கருத்தாக மட்டுமே கண்டார்கள்! இங்கு அப்படி இல்லை!

இது சிவன் பாட்டா, ராமன் பாட்டா என்பது போல, அப்பைய்யர் பதிவா இல்லை வைணவப் பதிவா, krsஇன் hidden agenda என்று பலவும் தேவை இல்லாமல் எழுப்பப்படும்!
மகான் அப்பைய்யர் பதிவில் கூடுமான வரை லட்சணம் காப்பதே என் ஆசை!

இருப்பினும் சர்வ தந்த்ர ஸ்வதந்திரர் பற்றி ஒரு வரி பதிவில் சேர்த்து விடுகிறேன்!
நீங்கள் விரும்பிப் படித்தது மெத்தவும் மகிழ்ச்சி!

குமரன் (Kumaran) said...

இந்த சூழல் மாறி நல்ல சூழல் வருவதும் நம் கையில் தான் இருக்கிறது இரவிசங்கர். விளையாட்டாய் சொல்லும் சில சொற்களும் அதற்குரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருப்பதில்லை. அது திரும்பி நம்மீது வந்து எதிர்வினையைக் காட்டியே தீரும்.

ஒரு சின்ன திருத்தம்: அப்பைய தீட்சிதரை சைவர் என்று சொல்வதை விட அத்வைதி என்று சொல்வது பொருத்தம். அப்பைய தீட்சிதரைப் போன்றவர்களும் கிருஷ்ணபிரேமியைப் போன்றவர்களும் ஒரே மரபைச் சேர்ந்தவர்களே. அவர்களை சைவ வைணவர்கள் என்று அவர்களது இஷ்ட தெய்வங்களைக் கொண்டு சொல்ல இயலாது. சரிதானே?! :-)

ஓகை said...

முற்றிலும் புதிய செய்திகள் பலவற்றை அறிந்துகொண்டேன். சிறந்த பதிவு. வழக்கம் போல!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@குமரன்
//இந்த சூழல் மாறி நல்ல சூழல் வருவதும் நம் கையில் தான் இருக்கிறது இரவிசங்கர்//

இப்படித் தான் அடியேனும் இருந்தேன்! விளையாட்டாய் கூட வார்த்தை சொல்லாமல்! சர்ச்சையில் சிக்காத பதிவர் என்றெல்லாம் சொன்னீங்களே! நினைவிருக்கா? :-)

ஆனால் என்ன நடந்தது? முத்திரைகள் எப்படி குத்தப்பட்டது! xxxxx போன்ற சுடுசொற்கள் எப்படி வீசப்பட்டன! அறீவர்கள்!

//விளையாட்டாய் சொல்லும் சில சொற்களும் அதற்குரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருப்பதில்லை. அது திரும்பி நம்மீது வந்து எதிர்வினையைக் காட்டியே தீரும்//

மிகவும் உண்மை! உணர்பவர் உணர வேண்டும்! நாம் மட்டுமே உணர்ந்து கொண்டிருந்தால் - நீ அவல் கொண்டு வா, நான் உமி கொண்டு வரேன், ரெண்டு பேரும் ஊதி ஊதித் திங்கலாம் கதை ஆகி விடும்!

ரெளத்திரம் பழகுதல் சில சமயம் தேவைப்படுகிறது!
அப்பைய்ய தீட்சிதரும் அவ்வண்ணமே சொல்கிறார்!
//ஏசிப் பேசும் சிலரின் அவச்சொற்களை மறுத்துப் பேசவே தான் பிரயாசைப் படுவதாகச் சொல்கிறார்//

அவ்வாறு ஒருவர் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப் பதுவே?

வீண் சீண்டல்களை நிறுத்தினாலே விவேகங்கள் உதித்து விடும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அவர்களை சைவ வைணவர்கள் என்று அவர்களது இஷ்ட தெய்வங்களைக் கொண்டு சொல்ல இயலாது. சரிதானே?! :-)//

மிகவும் சரி! :-)

//ஒரு சின்ன திருத்தம்: அப்பைய தீட்சிதரை சைவர் என்று சொல்வதை விட அத்வைதி என்று சொல்வது பொருத்தம்//

மாமுனிகளை விசிஷ்டாத்வைதி என்றல்லவா சொல்ல வேண்டும்? :-)

இது போன்ற வாசகங்கள் சொல்லும் இடத்தைப் பொறுத்தது குமரன்! இடம் பொருள் ஏவல்!
நானும் அப்பைய்யரை பல இடங்களில் அத்வைத மகான் என்று பதிவில் குறிப்பிடுகிறேன்! சிவத்தொண்டு வரும் கால கட்டங்களிலோ, சிவரூபம் காட்டும் இடத்திலோ, பரம சைவர் என்று குறிப்பிடுகிறேன்!
The epithets are mutually inclusive and interchangeable!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@அம்பி
//சண்ட - டார்ச் ப்ளீஸ் :))//

6 வேதாங்கம்
சிக்ஷ=சப்தம், எழுத்தின் ஒலி
கல்ப=சடங்குகள்
வியாகரண=இலக்கணம்
நிருக்த=வேர்ச் சொல்லாராய்ச்சி
சண்ட=சந்தக்கவி
ஜோதிஷம்=வானியல்

4 உபவேதங்கள்
அர்த்த சாஸ்திரம்=பொருள்/அரசமுறை
தனுர் வேதம்=போர் முறை
கந்தர்வ வேதம்=கலை, காதல்
ஆயுர் வேதம்=உடல்நலம், மருத்துவம்

Geetha Sambasivam said...

//துவைதாத்வைதம்??
வல்லபாச்சார்யர்??

//ம்ம்ம்ம் என்னோட ஆச்சார்யனும், குருவும் பதிவிலே இது பத்தி எழுதினேனோ//

உங்களுக்கே ஜந்தேகம்ஸ்? :-)//

just for verification only. ஆனால் இன்னும் பத்து நாளைக்காவது எந்தப் புத்தகமும் எடுக்க முடியாமல் மாட்டிட்டு இருக்கு!!! :))))) ராமாயணத்தை மட்டும் எழுத முடியும், மத்தபடி ஒன்லி மொக்கைஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!!!!!!!!!!!!!!!!!

மெளலி (மதுரையம்பதி) said...

////மதுரையம்பதி said...
எப்பவும் போல மிக அருமையா எழுதியிருக்கீங்க.. சூப்பர்!!!...//

எப்பவும் போல=எனி உ.கு? :-) //

அடப்பாவமே!, நான் என்னைக்குய்யா உ.கு/வெ.கு எல்லாம் வச்சு எழுதியிருக்கேன்?....எனக்கு அம்புட்டு சாமர்த்தியம் இருக்கா என்ன? :-)

//நமது திரச அவர்கள் அப்பைய தீட்சிதர் குடும்பத்த்வர் என்று சொன்ன நினைவு//

ஆகா!
அவர் வடார்க்காடு தெரியும்!
இதுவும் நம்ம திராச-வின் அருமை பெருமைகளில் ஒன்றா?
திராச ஐயா...எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்!//

அவர் மதுரையில் இருக்கார், மேடைக்கு வர நேரமாகும்...ஆனா வருவார் :-)

//எனது குரு பரம்பரையும் அவர் வழி வந்தவர்கள் என்பதில் பெருமை கொள்கிறேன்//

நீங்க யாருக்குண்ணா குரு?
அட, எனக்குத் தான்-ல!
அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தம்
வந்தே குரு பரம்பரா!//

ஹிஹி நான் யாருக்கும் குருவாகும் லெவலில் இல்லீங்கண்ணா....

மெளலி (மதுரையம்பதி) said...

////Comment deleted
This post has been removed by the author.
//

why mouli anna?//

நிறைய எழுத்து பிழைகள் இருந்தது...அதனால்தான் டெலிட் பண்ணினேன்...

தி. ரா. ச.(T.R.C.) said...

கேஆர்ஸ் கூப்பிட்டா மதுரை என்ன டிம்பக்டூல இருந்தாகூட வரவேண்டும்.அந்த மஹான் வழியில் வந்தவன் என்னும் பெருமையுடையவன். இப்போதும் தினமும் வெளியில் கிளம்பும்போதும் மற்றும் வெளியூருக்குச் செல்லும்போதும் அவருடைய ""மார்கபந்து -ஸ்த்திரத்தை.. சம்போ மகாதேவ தேவா சிவ சம்போ மஹாதேவ தேவஸே சம்போ.... பஜே மார்க பந்தும்"" சொல்லாமல் வெளியே கிளம்ப மாட்டார்கள் எல்லோரும் எங்கள் குடும்பத்தில். இது எங்கள் தாத்தாகாலத்து நடைமுறை.
அப்பைய்ய தீக்ஷதர் ஒருமுறை தனக்கு நினைவு இருக்கும் போதுதான் ஈஸ்வர சிந்தனை இருக்குமா இல்லை இல்லாவிட்டாலும் இருக்குமா என்ற சந்தேகம் வந்து அதை சோதனை செய்ய எண்ணி உன்மத்தங்காயை அரைத்து குடித்துவிட்டார். உடனே உன்மத்த நிலையயும் (ஸித்தபிரமை) அடைந்துவிட்டார். அப்போழுது அவர் இயற்றிய உன்மத்தஸோத்திரம் மிக அபாரமாக சிவனின் குணங்களை வெளிக்கொனர்ந்து எந்த நிலையிலும் சிவஸ்மரனைதான் என்று உணர்த்தினார்.மௌளி இப்போ திருப்தியா என்னை மாட்ட வைப்பதில் பங்களூர்ய்க்கு கொண்டாட்டம்தான்.நானே தங்கமணி புடுங்கள் தாங்காமல் மதுரை வந்தால் போட்டு கொடுத்தூட்டீங்களே.

jeevagv said...

மௌலி சார் சொன்னதுபோலவே, மற்ற ஆச்சார்யர்கள் ஒவ்வொருவராக வருகிறார்கள் போலும். அறியாத பல செய்திகளை அறிய எங்களுக்கோர் வாய்ப்பு. மிக்க நன்றி. இங்கே இருக்கும் ஒவ்வொரு இடுகையையும் படித்து நன்கு நினைவில் ஆழ்த்திக் கொள்ள வேண்டியவை.
மிக்க நன்றி ரவிசங்கர்.

Unknown said...

Nice article.Keep up the good work.This site is extermely good one those who are looking for spiritual apetite.

Anonymous said...

ஸ்ரீவரதராஜஸ்தவம் இயற்றியது கூரேசர் என்று படித்த நினைவு. :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//paanmai said...
ஸ்ரீவரதராஜஸ்தவம் இயற்றியது கூரேசர் என்று படித்த நினைவு. :)//

ஆமாங்க!
கூரேசர் வரதராஜஸ்தவம் இயற்றினார்! ஆனால் பின்னாளில் ஸ்வாமி தேசிகனும் ஒரு வரதராஜஸ்தவம் செய்தார்! அப்பைய்ய தீட்சிதரும் ஒரு வரதராஜஸ்தவம் செய்தார்!

மொத்தம் மூன்று வரதராஜஸ்தவங்கள்!

Humble Bhagavata Bandhu said...

//
கோயில் உள்ளிருந்த அரங்கன், அப்பைய்யரின் ஆத்ம பக்திக்கு இரங்கினான்! தன் மேல் சிவச் சின்னங்களைக் காட்டி அருளினான்!
சிவச் சின்னங்களைக் கண்ட பட்டர்கள், அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்து, தீட்சிதேந்திரரை கோவிலுக்குள் வருமாறு அழைத்தார்கள்.
ஆதிசேடன் மீது பள்ளி கொண்டிருக்கும் கருமா முகில் அரங்கனைக் கண் குளிரச் சேவித்து ஆனந்தமடைந்தார் அப்பைய்யர்!
//

மேற்கண்டவாறு நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கதை கட்டிக் கொள்ளுங்கள் அதில் பிரச்சனை இல்லை. அதற்காக நம்மாழ்வார் பாசுரங்களைப் பின்வருமாறு அபத்தமாக அர்த்தம் பண்ணுவதை தயவு செய்து நிறுத்துங்கள்:

//
முனியே, நான்முகனே, முக்கண்-அப்பா என்று அரங்கனை முக்கண் அப்பனாகவும் கண்டார் நம்மாழ்வார்! அவர் சடாரியை வாங்கிக் கொள்பவர்கள், அவர் சொன்னதை மட்டும் தலையில் வாங்கிக் கொள்ளவில்லை போலும்!
//

அப்படியானால் விஷ்ணு பரத்துவத்தையும் ருத்ராதி அந்ய தேவதைகள் ஜீவர்களே என்று பறைசாற்றிய இராமானுஜர், தேசிகர் முதலானோரும் தலையில் வாங்கிக்கொள்ளவில்லை போலும்! இது ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தையே ஈயடிப்பது போல நிராகரிக்கும் முயற்சி.

கல்கி கிருஷ்ணமூர்த்தி 'ஆழ்வார்க்கடியான்' என்ற பாத்திரத்தை உண்டாக்கி ஸ்ரீவைஷ்ணவத்தைக் கீழ்த்தரமாக ஏசி எழுதிய 'பொன்னியின் செல்வன்' என்னும் வைஷ்ணவ த்வேஷ புத்தகத்தைக் கண்டு மயங்கியதால் இப்படி எல்லாம் எழுதுகிறீர்கள் போலும்.

நம்மாழ்வார் "முனியே நான்முகனே முக்கண்ணப்பா" என்ற பாசுரத்தில் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை தயவு செய்து திருவாய்மொழி ஈட்டு உரைகளிலிருந்து படித்துத் தெரிந்துக் கொள்ளுங்கள். படித்தீர்களானால் நீங்கள் மேற்கண்டவாறு எழுதியது வெறும் பேத்தலே என்பது புலனாகும்.

நம்மாழ்வார் பாசுரங்களின் வியாக்கியானம் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கே சொந்தம் ஏனெனில் காலங்காலமாக அவர்களே ஆழ்வார்களின் அருளிச்செயல்களைப் பேணி வந்திருக்கிறார்கள். அவர்கள் பேணவில்லை என்றால் இப்படியெல்லாம் உங்களுக்கு எழுதவே வாய்ப்பு கிட்டியிருக்காது என்பதை நினைவிற் கொள்ளுங்கள்.

Anonymous said...

Dear Humble Bhagavata Bandhu,

Your post says to consider the interpretation commentary of vaishnava acharyas only.

Sri Ramanuja was a realized jnani and he went to Tirumala only by knees from Tirupati.

If you have the same devotion to Vishnu , then you can talk low and compare Shiva as Anya devata (anya to what? Anya to Vedas? Without Parameshwara does veda exist? ?

Current day sri vaishnavas has learnt only one thing -- just to throw blasphemy to Shiva. Instead of that it will be only good if you can concentrate on pure devotion to Lord Vishnu and avoid the internal battle between U and Y namam.

If ego arises, everything else arises. Having shown the aversion to Shiva, that is only recurring within Sri Vaishnavas loading the differences to Sri vedanta desika and Sri pillai lokacharya doctrines. Infact both never wanted to start another sub-sect .

By your theory, you condemn Ramakrishna Paramahamsa, Ramana Maharishi, Anandamayi ma, Namdev and Jnaneshwar, Jillelamudi Amma and many other great saints.

Anonymous said...

அருமை ஐயா