Wednesday, December 24, 2008

பரிபாடலில் பாவை நோன்பும், ஆண்டாளின் பாவை நோன்பும்!

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்,
நீராடப் போதுவீர், போதுமினோ நேரிழையீர்,
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!//

மார்கழி மாதம் பீடு நிறைந்த மாதம் எனச் சொல்லுவதுண்டு. தேவர்களின் பிரம்ம முஹூர்த்தம் ஆன இந்த மாதத்தில் தான் ஆண்டாள் பாவை நோன்பு இருக்கின்றாள். இந்தப் பாவை நோன்பு என்பது சங்க காலத்திலேயே வழக்கில் இருந்திருக்கின்றதாய்த் தெரிய வருகின்றது. பரிபாடலில் கீழ்க்கண்டவாறு அம்பா ஆடல் என்ற பெயரில் பாவை நோன்பு விளங்கி வந்திருக்கின்றது தெளிவாகின்றது. ஆண்டாளும், தன் மனதுக்கிசைந்த மணாளனுக்காகப் பாவை நோன்பு இருக்கின்றாள். காத்யாயனி நோன்பு எனவும் அழைக்கப் பட்டது.

கனைக்கும் அதிகுரல் கார் வானம் நீங்க,
பனிப் படு பைதல் விதலைப் பருவத்து, 75

ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
மா இருந் திங்கள் மறு நிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,
புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!‘ என 80

அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,
பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்
ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின், 85

தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,
வையை! நினக்கு மடை வாய்த்தன்று.
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர், அவர்
தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ, 90

தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?
நீ உரைத்தி, வையை நதி!

இது மார்கழி மாதம் முழு நிலவு நாளன்று ஆதிரை நட்சத்திரம் கூடிய நாளில் ஆரம்பித்து, அடுத்த முழுநிலவு நாள் வரும் வரையிலும் ஒரு மாதம் நோன்பு இருந்ததாய்ப் பழைய நூல்களில் இருந்து தெரிய வருகின்றது. முதலில் மழை வளத்துக்காகவே இருக்கப் பட்ட இந்த நோன்பு பின்னர் தாங்கள் விரும்பிய மணவாளனை அடைவதற்காகவும் நோன்பு ஆரம்பித்துப் பெண்கள், முதியவர்களின் வழிகாட்டுதலின்படி இருக்க ஆரம்பித்தார்கள் என மு.ராகவையங்கார், பண்டிதமணி போன்றோர் கூறுகின்றார்கள். குறிப்பாகப் பாண்டிய நாட்டில் வையை நதி பெருக்கெடுத்து ஓடிய காலகட்டத்தில் வையைக் கரையில் நோன்பு நூற்கப் பட்டிருக்கின்றது. அதற்கான வழிமுறைகளையும் சொல்லுகின்றது பரிபாடல் பாடல்கள். அது ஆண்டாள் காலம் வரையிலும் சற்றே மாறுதல்களுடன் தொடர்ந்து வந்திருப்பதாயும் தெரியவருகின்றது.

இந்த நோன்பு பற்றி பாகவதத்திலும் குறிப்பிடப் பட்டிருக்கின்றதாயும் தெரிய வருகின்றது. கோகுலத்துப் பெண்கள் அனைவரும் இந்த மார்கழி மாதம் அதிகாலையில் எழுந்து, யமுனையில் நீராடி, ஆற்றங்கரை மணலில், காத்யாயனி என்னும் சக்தி தேவியின் உருவத்தைச் சமைத்து, சந்தனம், குங்குமம், மஞ்சள், வாசனைத் திரவியங்கள், மலர்கள் போன்றவற்றால் அலங்கரித்து, கண்ணன் புகழ் சொல்லும் பாடல்களைப் பாடிக் கொண்டு ஒருவருடன் ஒருவர் கை கோர்த்துக் கொண்டு ஆடிப் பாடி நீராட்டத்தோடு வழிபாடும் செய்தனர் என்று தெரிய வருகின்றது. இந்த நோன்பு அவர்கள் இருந்ததின் நோக்கமே, கண்ணனைத் தங்கள் மணாளனாய் அடையவேண்டும் என்பதே.சங்க காலத்தில் மழை வேண்டிச் செய்யப் பட்ட இந்த நோன்பைச் செய்ததும் மிகவும் சிறிய பெண்கள் என்று தெரிய வருகின்றது. சிறு பெண்கள் என்றால் ஒன்பது வயதுக்கும் கீழே உள்ள பெண்கள்.காலப் போக்கில் பக்தி நெறி பரவப் பரவ ஒன்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களும், திருமணத்தை எதிர்நோக்கி இருக்கும் பெண்களும் பாவை நோன்பை இருக்க ஆரம்பித்தனர். மார்கழி மாதம் மதி நிறைந்த நன்னாள் ஆன பெளர்ணமி அன்று ஆரம்பித்திருப்பதாலேயே ஆண்டாள் "மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்" என்று ஆரம்பித்திருக்கவேண்டும். கிட்டத் தட்ட பாகவதக் கதையையே இந்த முப்பது பாடல்களில் சொல்லி விடுகின்றாள் ஆண்டாள்.

இந்தப் பாடலில் பெண்களை நீராட அழைக்கும்போதே கண்ணனின் வளர்ந்த கோகுலம் பற்றியும், நந்தன் பற்றியும், யசோதை பற்றியும் சொல்லி விடுகின்றாள். மிகவும் மென்மையான சுபாவம் படைத்த நந்தகோபன், கண்ணனுக்கு ஏதேனும் ஒன்று என்றால் கூர்வேல் கொடுந்தொழிலன் ஆகிவிடுகின்றானாம். கண்ணனின் கார்மேகம் போன்ற மேனி அழகையும், உதிக்கின்ற செங்கதிர் போன்ற அவன் முகத்தின் அழகையும் சொல்லிவிட்டு ஆண்டாள் அப்படிப் பட்ட கண்ணன் "நமக்கே பறை தருவான்" என்றது இந்த இடத்தில் கண்ணனையே சரணம் என அடைந்தவர்களுக்கு, ஆத்மஞானம் கிடைக்கும். அவர்கள் கண்ணனாகிய மெய்ப்பொருளின் தத்துவத்தைப் புரிந்து கொள்வார்கள் என்ற அர்த்தத்திலே இருக்கின்றது என நம்புகின்றேன். கீதையின் தத்துவ சாரம் இந்த "பறை தருவான்" என்ற வரியிலே இருக்கின்றது.

மேலும் முதல் பாடல் பக்தி யோகத்தையும், அடுத்த பாடலான "வையத்து வாழ்வீர்காள்" கர்ம யோகத்தையும், மூன்றாம் பாடலான "ஓங்கி உலகளந்த" ஞான யோகத்தையும் குறிப்பிடுவதாயும் சொல்லுவதுண்டு. ஆண்டாள் கண்ணனைக் காதலோடு வர்ணிப்பதோடல்லாமல், கண்ணனையே மணாளனாக வரித்துக் கொள்ளுவேன் என்றும் உரிமையுடன் சொல்கின்றாள். ஆண்டாள் வாழ்ந்த காலத்திலே பெண்களுக்குத் தங்கள் மணாளனைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் அளவுக்கு இத்தனை சுதந்திரம் இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ளும்போது ஆச்சரியமாகவே உள்ளது. அத்தோடு மட்டுமா? ஒவ்வொரு பாடலிலும் அந்தக் கால நடைமுறைகளையும் தெரிந்து கொள்ள முடிகின்றது. முதல் பாடல் மூலம் கண்ணனுக்கு பக்தி செய்யவேண்டிய அவசியத்தையும், அவ்வாறு பக்தி செய்தால் கிடைப்பதையும் சொல்கின்றாள். இரண்டாவது பாடலில் எவ்வாறு விரதமுறைகள் எனக் குறிப்பிடுகின்றாள். அடுத்த பாடல் தான் இன்றளவும் அனைவராலும் மிக விரும்பிப் பாடப் படும் பாடல்.

டிஸ்கி: மெளலி இந்த வாரம் எழுதும்படி அழைத்தார். அழைத்து 4 நாட்கள் ஆகியும் என்னால் தயார் செய்து கொள்ள முடியலை, ஆகவே மீள் பதிவு சில மாற்றங்களுடன் தலைப்பையும் மாற்றிப் போட்டிருக்கிறேன். அடுத்தவாரமும் நானே தொடர்ந்தால் இதன் தொடர்ச்சி வரும். இல்லைனா நேரம் இருக்கும்போது எண்ணங்கள் பதிவிலே வரும். இந்தப் பாவை நோன்பைப் பற்றிய மேலதிகத் தகவல்களை http://jayasreesaranathan.blogspot.com/ இவரின் பதிவில் காணலாம். லிங்க் கொடுத்தால் போகவே இல்லை. அரை மணியாய் முயன்று பார்த்தும் எரர் வருது. ஆகவே மன்னிக்கவும். படமே ஒத்துக்கலை. ரொம்பவே ஆசாரமான வலைப்பதிவு போல! எதுவுமே ஒத்துக்கமாட்டேன்னு ஒரே பிடிவாதம்! இல்லைனா நம்ப ராசியோ??? ஷெட்யூல் பண்ணினா தேதி வேறே இப்போத் தான் 24-ம் தேதி காலைனு சொல்லுது. யு.எஸ். நேரம் தான் எடுத்துக்குதோ?

11 comments:

Kavinaya said...

வணக்கம் அம்மா :)

மெளலி (மதுரையம்பதி) said...

பதிவிட்டமைக்கு நன்றி கீதாம்மா. வேற யாரும் டிராப்ட்ல ஏதும் வைக்கவில்லை என்பதால் உங்களைக் கேட்டேன். அடுத்த வாரமும் தொடர ரெடி தொடருங்களேன்?.

மெளலி (மதுரையம்பதி) said...

சென்ற வருடம் நான் பாவை நோன்பு பற்றி எழுதிய இடுகையின் லின்க் இதோ:

http://maduraiyampathi.blogspot.com/2007/12/blog-post_12.html

மார்கழி நீராட்டு பற்றிய எனது சென்ற வருடப்பதிவு கீழே!

http://maduraiyampathi.blogspot.com/2007/12/blog-post_21.html

Geetha Sambasivam said...

நன்றி கவிநயா,

மெளலி, பார்க்கலாம், கொஞ்சம் கைவலி இருக்கு, தட்டச்ச முடியலை! :(((( தவிர இணையமும் கிறுக்குப்பண்ணுது! :P:P:P

குமரன் (Kumaran) said...

சுருக்கமா அழகா சொன்னீங்க கீதாம்மா.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பரிபாடலை பரி(குதிரை) வேகத்தில் ஆற்றொழுக்கா கொடுத்திருக்கீங்க! நன்றி கீதா மேடம்! :)

butterfly Surya said...

ரசிப்பு தன்மை உள்ளவர்களுக்கு உலகம் எப்போதும் சந்தோஷமே என்பார் என் குரு ஒஷோ...

வாழ்த்துக்கள்

திவாண்ணா said...

நல்ல பதிவு!

Anonymous said...

//பரிபாடலில் கீழ்க்கண்டவாறு அம்பா ஆடல் என்ற பெயரில் பாவை நோன்பு விளங்கி வந்திருக்கின்றது //
சமீபத்தில்ஒருஆய்வுக் கட்டுரையைப் படிக்க நேர்ந்தது.பரிபாடல்,3 வைணவத் தலங்களைக் குறித்துள்ளதாகவும்,அவை வேங்கடம்,அரங்கம்,மற்றும் திருமாலிஞ்சோலை எனவும் குறிப்பு உள்ளது.மேலும் சிலப்பதிகாரத்தில், திருமாலிருஞ்சோலை பற்றிய குறிப்பு உள்ளது.(இரணியம் குன்றம்)பரிபாடலில் குறித்துள்ள அம்பா ஆடல், மாலிருஞ்சோலை, மற்றும் நாச்சியார் திருமொழியில் அப்பெருமானுக்கு,ஆண்டாள் வாய்நேர்ந்து பராவி வைத்த அக்கார அடிசில் இவை தொடர்பில்லாத செய்திகள் என்றாலும்,சற்றே ஆய்வுக்குறியவை.

பதிவு நன்றாக உள்ளது.

குமரன் (Kumaran) said...

பரவஸ்து சுந்தர் அண்ணா,

உங்களுக்கு இந்த ஆய்வுகளைப் படிக்கும் ஈடுபாடு இருந்தால் எனது 'கூடல்' பதிவில் 'இலக்கியத்தில் இறை', 'இலக்கியம்', 'கண்ணன்' போன்ற வகைகளில் இருக்கும் இடுகைகளைப் பாருங்கள். உங்களுக்குப் பிடிக்கலாம்.

koodal1.blogspot.com

Unknown said...

நான் பயின்ற பள்ளியின் பெயர் காரணத்தை இன்றுதான் அறிந்தேன் குலபதி பாலையா பள்ளி புதுக்கோட்டை